மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 48

ஆன்மீக சாதகர்கள் இந்நிலையை அடைவதற்குக் கண்ணன் தாமே ஒரு வழியையும் இங்கு எடுத்துரைக்கின்றார்.

“எந்த மனிதன் திடமான பக்தி ஈடுபாட்டுடன் என்னைப் போற்றுகின்றானோ, அவன் மூன்று குணங்களையும் கடந்து பிரம்மத்தை அடையும் தகுதியைப் பெறுகிறான்!” என்று பரம பக்தனான அர்ச்சுனனுக்குச் சொல்கின்றார், பரமதயாளனான கண்ணன். இதன் மூலம் நமக்கும் நம்மைத் தனதாக்கிக்கொள்ளும் கருணைப் பெருக்கினால் இவ்வாறு உரைக்கின்றார் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர்.

அன்பானவர்களே! கீதையின் பெருமை புரிகின்றதா? நாம் படும் துன்ப துயரங்களுக்கெல்லாம் என்ன காரணம் என்பது தெரிகின்றதா? இயற்கையும், மாயையும் சேர்ந்து உருவாகியுள்ள இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் நாமெல்லாம் விளையாட்டுப் பொம்மைகள். இந்த பொம்மைகள் தமது விருப்பத்தால் எதையும் செய்து விட முடியாது. எல்லாமே அவன் விருப்பம். எல்லாமே அவன் செயல். நமது எண்ணங்களுக்கு ஏற்ப, ஆசைகளுக்கு ஏற்ப, கர்மப்பதிவுகளுக்கு ஏற்றபடி நமக்கு இந்த வாழ்க்கைச் சூழ்நிலையை அமைத்துத் தந்து அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

இந்த விளையாடலை நாம் புரிந்துகொண்டு முக்குணங்களின் பிடியிலிருந்து ஞானத்தால் நம்மை நாமே விடுவித்துக்கொண்டு அவனது அருளையும், கருணையையும் வேண்டிக்கொண்டே வாழ்வது தான் இனி நாம் செய்ய வேண்டியது. ஏனெனில் சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களிலிருந்து நம்மால் தானாக விடுபட முடியாது. அதற்கும் அவன் அருள் தான் தேவை. எனவே அன்யதா சரணம் நாஸ்தி! என்று அவன் திருவடிகளிலேயே சரணடைவோம், வாருங்கள். நமக்குள்ளேயே ஒளிர்கின்ற அவன் நிச்சயம் திருவருள் புரிவான்.

(குணத்ரய விபாக யோகம் – நிறைவு)

புருஷோத்தம யோகம் – அத்தியாயம் 15

சென்ற அத்தியாயத்தின் முடிவில் ஸ்ரீ கிருஷ்ணர் “என்னிடம் திட பக்தி கொண்டு ஈடுபாட்டுடன் என்னை வணங்கிப் போற்றுகின்றவன் மூன்று குணங்களையும் கடந்து பிரம்மத்தை அடைகின்றான்!” என்று சொல்வதாக முடித்திருந்தேன். கிருஷ்ணர் அப்படிச் சொன்னதும் அர்ச்சுனனுக்கு ஒரு சந்தேகம் எழுகின்றது. அதனால் அவன், “பகவானே! உங்களை வழிபடும் பக்தன் எப்படிப் பிரம்மத்தை அடைய முடியும்?” என்று கேட்கிறான்.

இது தான் நம் பிரச்னையும். புரியும்! ஆனால் புரியாது! நாம் குழம்பியதைப் பார்க்கும் குருவிற்கும், தான் தெளிவாகச் சொல்ல வருவதில் குழப்பம் ஏற்படும். சில சமயம் மிக ஆழ்ந்த நுண்ணுணர்வோடு எமது குரு விளக்கிக்கொண்டு வரும்போது நாங்கள் ‘பே” என்று விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம். குரு அதை உடனே கண்டுபிடித்து, ‘விளங்கல்ல’ என்று அவரே சொல்லிவிட்டுத் திரும்பவும் விளக்குவார்.

பிரம்மம் என்னும் விஷயத்தைப் புரிந்துகொள்ள முற்படும்போது அதாவது நம்மைப் பற்றி நாம் சரியாகப் புரிந்துகொள்ள முயல்கின்றபோது இந்த நிலை கட்டாயம் ஏற்படத்தான் செய்யும். ஏனெனில் அது புலன்களாலும், மனதாலும் ஏன் புத்தியாலும் கூடப் புரிந்துகொள்ள முடியாத நுட்பமான ஒன்று. மேற்குறித்த இவற்றின் துணை கொண்டு அதை அறிய முடியாது. குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு விடக்கூடிய மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும்.

பிரம்மத்தை அறிய சப்தப்பிரமாணம், அதாவது வார்த்தைகளால் எடுத்துச் சொல்லி விளங்க வைத்தல் ஒன்றுதானே வழி! ஆகவே சொல்வதை உணர்வாக ஏற்றுக்கொண்டால், நமக்குள் இருக்கின்ற அது, தானே அதை ஏற்றுப் புரிய வைக்கும். ஆத்ம வித்தையைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டம் தான். அறிவையும், மனதையும் பயன்படுத்தாமல் மிக எளிமையாக, வெற்றுப் பாத்திரமாக இருந்து ஏற்றால் சுலபம்.

krishnasays-greyசரி! இங்கே மாயை வயப்பட்ட அர்ச்சுனனுக்கு மீண்டும் என்ன தோன்றுகிறது என்றால், வசுதேவருக்கும், தேவகிக்கும் மகனாய்ப் பிறந்த இந்தக் கிருஷ்ணனைக் கும்பிட்டால் பிரம்மம் என்கின்ற வேறொன்றை எப்படி அடைய முடியும்? என்பதுதான். அதைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர், “அப்பா அர்ச்சுனா! பிரம்மமும் நான் தான். அழிவற்ற, அமுதமான நிலைகளுக்கும், சனாதன தர்மத்திற்கும், ஒப்பற்ற பரமானந்த சுகத்திற்கும் புகலிடமும் நான் தான்!” என்று ஒரே போடாகப் போடுகிறார்.

இங்கு எல்லாமாக இருப்பதும், எவையெல்லாம் தெய்வ அனுபவத்தைத் தருகின்ற நிலையில் அமைந்திருக்கின்றனவோ அத்தகைய அமுத நிலைகளுக்கும், நாம் தர்மநெறியோடு வாழ வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்டுள்ள சனாதன தர்மத்திற்கும், மிகுந்த பக்திப் பெருக்கால் மகான்கள் அனுபவிக்கின்ற பரமானந்த சுக அனுபவங்களுக்கும் பின்னால் நிலைக்களனாக இருப்பதும், ஒன்றேயான ஒரு பொருள் அல்லது ஒரு பூரணம். அது நானே! என்கிறார் அவர். அப்படிப்பட்ட அந்தப் பூரணமான ஒன்றை அவர் புருஷோத்தமன் என்று குறிப்பிடுகின்றார். அந்தப் புருஷோத்தமனாகிய பரப்பிரம்மமே கிருஷ்ணனாக அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது நாமாகப் பிறந்திருப்பதும் அதுவே தான். ஆனால் அர்ச்சுனனைப் போலவே நாமும் இதனை அறியவில்லை. ஆகவே கீதை நமக்கும் தான் என்பது புரிகிறதா?

அந்த அற்புதமான புருஷோத்தம தத்துவத்தைப் பற்றித்தான் இப்போது நாம் ஒரு சொட்டு அளவிலாவது தெரிந்துகொள்ள முற்படுகின்றோம். இதைப்பற்றி கீதை சொல்லப்போவதைப் புரிந்துகொள்ளும் முன் இப்போது நாம் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை செய்வோம். அதில் தெளிவோம். பிறகு இந்தப் புருஷோத்தம யோகத்தில் சென்று இணைந்தால் மிக சுலபமாக, சுகமாக அது இருக்கும்.

Leave a comment