Welcome

Featured

வணக்கம்.

வாழ்க்கையின் பரபரப்பு எல்லோரையுமே துரத்திக் கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்க, ஒன்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க, யாருக்குமே நேரமில்லை என்றாலும் சிலவற்றை நாம் ஐம் புலன்களால் அனுபவிக்கின்றபோது, அடடா! இதை எல்லோருமே ரசிக்கலாமே! என்று ஓர் ஆவல் உள் தூண்டலின் விளைவே. யான் பெற்ற இந்த இன்பத்தை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வழக்கம் போல் உள் உணர்வு தூண்ட, இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். படியுங்கள்! அனுபவியுங்கள்! சிந்தியுங்கள்! உங்களிலும் இன்பம் பெருகட்டும்!

என்றும் நட்புடன்,

விஜயா!

The posts in the Home page are based on the order of newer post. Please check the menu on the top of the screen for various topics.
The calendar on the right shows “dates highlighted” to indicate articles posted on those dates.
The recent posts on the right shows the most recent posts.
I have included pdf version of each article in the tab for the relevant topics for you to print .

Comments are always welcome.


If you dont see tamil content in the PDF files, Install bamini font.
click here to download the Font (bapc.ttf) 
Open Control Panel. 
Open Fonts Folder. 
Install New Font (by copying and paste the bamini.ttf into this folder)

அஹம் – 14

தன்னை அறிதலாகிய ஆத்ம சோதனையில் ஈடுபடும் ஆன்ம சாதகன் சரியான விசாரணை, அதாவது தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கி உண்மையை கண்டறிதல் இல்லாமல் ஞானோதயம் பெறுவது சாத்தியமில்லை.சென்ற கட்டுரையில் எப்படி சுய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விளக்கம் தரப்பட்டது. அதில் நான் யார்? இந்த உலகம் என்பது என்ன? படைப்பின் நோக்கம் என்ன? நான் அடைய வேண்டியது என்ன? பொன்ற உள்ளத்தில் எழுகின்ற வினாக்களுக்கு விடை காண்பதன் மூலமே ஞான விசாரணையை நடத்த முடியும் என்று ஸ்ரீசங்கரர் கூறியிருந்தார்.

தனது அடுத்த ஸ்லோகத்தில் ஸ்ரீசங்கரர், நான் யார்? என்ற விசாரணையைப் பற்றி விளக்குகிறார். பொதுவாக நாம் நம்மை இந்த உடலாகவே எண்ணியிருக்கிறோம். இந்த உடலுக்குரிய பெயரையே குறிப்பிடுகிறோம். ஆணாகவும், பெண்ணாகவும், இன்னாருக்கு இன்ன உறவு என்பதையுமே நான் என்பதாகச் சொல்லி வருகிறோம். நான் யார் தெரியுமா? என்று ஆணவத்தோடு ஒருவர் கேட்கின்றபோது அங்கு எழுவது எது? இந்தப் பிறவியில் கிடைத்த பொய்யான தகுதிகள் தான் அகங்காரமாகப் பின்னணியில் அங்கு நிற்கிறது.

இப்படி நான் என்று குறிப்பிடுகின்ற அந்த நபர் யார்? நான் என்பது உடலா? மனமா? புத்தியா? ஸ்தூல சரீரமா? சூட்சம சரீரமா? காரண சரீரமா? மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களா? பிராணனா? இப்படி வினாக்களைக் கேட்க வேண்டும். இப்படிப்பட்ட விசாரணையை ஒருவன் தானாகக் கேட்பதில்லை. ஏனெனில் இப்படி சிந்திக்க வேண்டும் என்பதே நமக்குத் தெரியாது. ஏனெனில் உலக வாழ்க்கையில் உடல், மனம், புத்தி எல்லாமே வெளி உலக இன்ப துன்பங்களோடு  சம்பந்தப்பட்ட நிலையில் வெளிமுகமாகச் செயல்படுகின்ற விதத்தில்தான் பழக்கப்பட்டிருக்கின்றன. மனதிற்கு அடி விழும்போது தானே மூலையில் முடங்கிக் தனிமைப்படுகிறோம்.! இல்லாவிடில் இதையெல்லாம் பற்றிச் சிந்திக்க வாய்ப்பு ஏது? அப்படியே மனமொடிந்த நிலை ஏற்பட்டாலும், பழக்கப்பட்ட கடவுளிடம் தான் மனம் ஓடி க் கடவுளே! எனக்கு ஏன் இப்படி? என்று கதறுகிறது.

அப்படிப்பட்ட தருணங்களில் தான் யாராவது ஒருவர் வந்து அகமுகமாக நம் மனதைத் திருப்பி வைக்கக்கூடிய ஏதாவது ஒரு சொல்லைத் தற்செயலாகச் சொல்வார். உண்மையிலேயே மனம் உருகிக் கதறி அழுபவர்களுக்கு  இறைக் கருணை ஏதாவது ஒரு விதத்தில் உண்மையை உணர்த்தக் கூடிய ஒரு வழியைத் திறக்கும்.

முன்னரே பல பிறவிகளில் தன் விசாரணையை ஒரு ஜீவன் தொடங்கியிருந்தால், அந்தப் பூர்வ ஜென்மப் புண்ணியத்தால் இந்த பிறவியிலும் உள்ளம் புற வாழ்க்கையில் ஏமாந்து போய் விடாமல் ஏதாவது ஒரு வகையில் இறைவனோடு இணைந்து இருக்கும். இதைத்தான் பரிணாம வளர்ச்சி என்பது. கர்மாவால் வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் அக முகமாக இறைவனிடம் கதறிக் கதறி வழி பட்டுத் தொடர்பு கொண்டிருப்பார்கள்.ஆன்ம விசாரம் என்பது ஒரு பிறவியில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. பிறவி தோறும் அறுபடாமல் தொடரும் தன்மைகொண்டது. இதைத்தான் திருவள்ளுவர் 
“ஒருமையுள் ஒருவன் தான் பெற்ற கல்வி –
எழுமையும் ஏமாப்பு உடைத்து”
என்று சொல்லி இருக்கிறார். இதையே கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரும் “என்னை அடைய ஒரு பிறவியில் ஜீவன் மேற்கொள்கின்ற முயற்சி ஏதாவது காரணத்தால் தடைப்பட்டு போனாலும் அழியாது!” என்று அர்ஜுனனிடம் சொன்னார்.

இந்த விசாரணையை முறைப்படி துவங்குவதற்கு ஒரு குருவின் உதவி அவசியம் தேவை. தானே தன்னில் தோன்றிய படி ஒருவன் ஆத்மா பற்றிய தேடலில் இறங்கினால் சரியான தெளிவு ஏற்படாது. மாறாகக் குழப்பமே மிஞ்சும். ஞான விசாரணையில் ஈடுபட்டு ஆத்ம அனுபூதி பெற்றவரின் துணை நமது தேடலை எளிதாக்கும். ஏனெனில் அப்படிப்பட்டவர் ஏற்கனவே அந்த ஒளிப் பாதையில் பயணித்த குருவிடம் சாத்திரங்களின் துணை கொண்டு இந்த வித்தையைப் பெற்றவராய் இருப்பார். அது குரு பரம்பரை!, அங்கு பிரம்மத் தொடர்பு உள்ளவர்களால் மட்டுமே சரியான பாதையைக் குழப்பமில்லாமல் போதிக்க முடியும்.

ஆத்ம விசாரணையில் ஈடுபடுவது என்பது சாதாரண விஷயமல்ல. சத்திய சோதனை செய்து செய்துதான் ஆத்மா, இவன் தன்னை வெளிப்படுத்தத் தகுந்தவனா? தகுதியுடையவனா? என்பதைப் பரிசோதித்துப் பார்த்த பின்னரே தேர்ந்தெடுக்கும். வாழ்க்கையில் அளவுக்கு மீறிய துன்பங்களும், இழப்புக்களும், அவமானங்களும் ஏற்படும்போதெல்லாம், நம் முன்னோர் பகவான் உன்னைச் சோதிக்கிறார். தனக்குப் பிடித்தவர்களைத்  தான் ஆண்டவன் அதிகமாக சோதிப்பார்! எனப் புராணக் கதைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி அமைதிப்படுத்துவது நடைமுறையில் கவனித்திருக்கலாம்.

ஒரு வணிகன் விலையுயர்ந்த நவரத்தினக் கற்களை உரசி உரசிப்பார்த்து நன்றாகப் பரிசோதித்து அவற்றின் தரம் பார்த்துத் தேர்ந்தெடுப்பது போலவே இறைவன் ஒரு ஜீவனைப் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுவிக்க,  இவன் தகுதியுடையவன் தானா? என்பதைப் பலவகைகளிலும் சோதிக்கிறான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தகுதியுடையவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ளவேண்டும். நான் மாற மாட்டேன்! பிடி பந்தயம்! என்ற போக்கில் இருந்தால் விடுதலை இல்லை. செக்குமாடு கதைதான். புனரபி மரணம்; புனரபி ஜனனம்.!

எனவே ஆன்ம சாதகன் முழு விழிப்புணர்வுடன் தன்னைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். இயற்கையின் பிடியிலிருந்து விடுபட்டு மனம் அகமுகமாகத் திரும்ப வேண்டும். இதற்கு எளிதான ஒரு வழியாகத்தான் “நான் யார்” என்னும் சுய விசாரணை மூலம் தன்னை அறியவும் அடையவும் சங்கரர் இந்த வழியைக் காட்டுகிறார்.

உடல் நானல்ல ! என்பதை அவர் இங்கு விளக்குகிறார். நான் உடல் அல்ல. ‘என் உடல்’! என்றுதான் இதைச் சொல்கிறோமே தவிர, நான் உடல்! என்று சொல்வதில்லை. ஏனெனில் இந்த எனது உடல் அழியக்கூடியது. ஐம்பூதச் சேர்க்கையால் ஆனது. இந்த உடல் கால்சியம், கார்பன், பாஸ்பரஸ், போன்ற ரசாயன பொருள்களால் உருவாக்கப்பட்ட ஒரு கலவை. கலப்படமான எதுவுமே அழியவே செய்யும்.

அழியக்கூடிய பொருள் நானல்ல. மாறக்கூடிய பொருள் நானல்ல. இந்த உடல் மாறிக்கொண்டே இருக்கிறது. இது பிறந்து வளர்ந்து உயர்ந்து பிறகு முதுமை அடைந்து தளர்ந்து கடைசியில் மரணிக்கிறது. நோயினால் பாதிப்பு அடைகிறது. சுற்றுச்சூழல் உடலைப் பாதிக்கின்றது. எனவே பல வித மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கும் எனது இந்த உடல் நான் அல்ல! என்று ஸ்ரீசங்கரர் சுய விசாரணையில் 4 வினாக்களில் முதல் வினாவிற்கு விடை அளிக்கிறார்.

பஞ்சபூதங்களின் கூட்டமான இந்த சரீரம் நானல்ல. அதுபோல் எனது இந்தப் பஞ்சேந்திரியங்களும் நானல்ல. (பஞ்சேந்திரியம் = ஐம்புலன்கள்) இவைகளுக்கெல்லாம் மாறுபட்ட ஒருவனே நான்! “- என்று இவ்விதம் ஆலோசிப்பது தான் விசாரம் என்பது. 

அஹம் – 13

ஆத்ம அனுபூதி என்பது எனக்குள் வாய்க்கின்ற நேரடி அனுபவம். அது, நான் அறிந்து வைத்துள்ள அனைத்திலிருந்தும் வேறானது. அதாவது என் உடலால், புலன்களால், மனதால், புத்தியால் இந்த வாழ்க்கையில் பெற்ற எந்த அனுபவமும் ஆத்ம அனுபூதி இல்லை. அவையெல்லாமே புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள். கர்மாவாலும், மாயையாலும் அறியாமையாலும் கிடைத்த பல்வேறு பிறவி சார்ந்த அனுபவங்கள். இந்த உடல் இருக்கின்ற வரையே அவை இருக்கும். மேலும் அவற்றில் பல மறந்தும் போய் விடும். வளரும் தன்மைக்கு ஏற்ப அந்த அனுபவங்கள் மாறும்.

நான் பெறும் அனுபவமே அடுத்தவனுக்கும் கிடைக்காது. ஒவ்வொரு படைப்புமே தனித்துவமானது. அதுதான் படைப்பின் சிறப்பு அம்சம். மற்றவர்கள் அவரவர் அறிந்ததை, அவரவர் உணர்ந்ததை, அனுபவித்ததை எல்லாம் பலவிதமாக சொல்லிச் சென்றிருக்கின்றனர்.ஒரு பொருளின் தன்மையை பிறர் சொல்லி நம்மால் அறியமுடியாது. நாமே உணர்ந்து அறியவேண்டும். லட்டு இனிப்பாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் அதன் சுவை நமக்குத் தெரியாது.நம் வாயில் ஒரு லட்டை எடுத்து போட்டால்தான் இனிப்பு என்ற சொல்லின் பொருள் புரியும்.இது வெளி வாழ்க்கையில் உள்ள உணர்தலின் வேறுபாட்டை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டது.

ஆத்ம விசாரணையில் நம் நிலையில் இருந்து நாம் உணர்வதே உண்மையான நேரடி ஆத்ம அனுபவமாக இருக்கும். சொல்லப்போனால் ஓர் இருட்டான அறையில் நான்  இருட்டில் அமர்ந்து இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் வேறு யாராவது அங்கு அமர்ந்திருக்கிறார்களா?அல்லது முன்பு என்னுடன் அமர்ந்திருந்தவர் இருட்டில் எழுந்து போய் விட்டாரா?என்பதை ஒலி எழும்பாவிட்டால் என்னால் அறிய முடியாது.

நான் இருக்கிறேன்! என்ற இந்த உணர்வு எனக்குள் இருந்து என்னை எனக்கு உணர்த்துவது. நான் இருக்கிறேன் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதும் இருக்குமா? நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரிகிறதே! அந்த நான் யார்? இதைப் பற்றி சாதாரணமாக நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? நொடிக்கு நூறு முறை நான், நான், நான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அந்த நான் என்பதை எப்படி அறிவது? இந்த முறையில் ஆத்மாவைப் பற்றி அறியும் வழியை சொல்லித் தந்தவர் ரமண மகரிஷி ஆவார். ரமணர் விசாரணை செய்யச்சொன்னது இப்படித்தான். யார்? என்ற ஒரு கேள்வியை சதா கேட்பதன்  மூலமே ஒருவன் தன் இருப்பை, தனது உண்மை நிலையை அறிய முடியும் ; அடையவும் முடியும் என்று பகவான் ஸ்ரீ ரமணர் மிக எளிய வழியைக் கற்றுத் தந்தார்.

விசாரணை செய்யாமல் ஞானத்தையும்,விடுதலையையும் பெறமுடியாது. மனதைக் கட்டுப்படுத்தி, அக முகமாகத் திருப்பி,ஆத்மாவாகிய உயிர்ச் சக்தியுடன் தன்னை இணைக்க வேண்டும். அதோடு ஆத்மசிந்தனையும் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். நான் யார்? என்னில் இருந்து இந்தப் புலன்களை இயக்குவது எது? படைப்பு என்பது என்ன? மரணம் ஏன் வருகிறது? உலகம் எப்படி வந்தது? உயிரினங்கள் எப்படி உண்டாயின? இப்படி அவரவர் இயல்புக்கு ஏற்றபடி உண்டாகும் வினாக்களுக்கு அவரவரே உள்ளார்ந்த சிந்தனை வாயிலாக விடைகளைக் கண்டறிய வேண்டும். இந்த அறிவுதான் ஞானம் எனப்படும் மெய்யறிவு.மற்ற உலகம் சார்ந்த எந்த அறிவு மே உண்மையான அறிவல்ல. இந்த வாழ்க்கையை வாழ்வதற்காகப் பெறப்பட்ட அறிவு மட்டுமே.அந்த அறிவால் ஒருவன் தன்னைப் பற்றி அறிந்து கொண்டுவிட முடியாது.

இதிலிருந்து ஓர் ஆன்மீக சாதகன் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,இதுவரை நான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை என்பது வேறு. அது உண்மையான என்னை, அறியாத நிலையில், நான் வாழ்ந்த வாழ்க்கை. அது சம்சாரம் என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்ற இந்தப் பிறவிக்குரிய கர்மாவுடன் பிணைந்த வாழ்க்கை. இப்போது எனது முன் பிறவிகளின் புண்ணியத்தால் என்னை ப்பற்றி நானே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எனது பெயருடன் கூடிய இந்த உடல் தான் நான் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இது நானல்ல; எனக்குத் தரப்பட்டது! என்பது தொடக்கமான மிகப்பல நுட்பமான விஷயங்களை நான் இந்த விசாரணையில் ஈடுபட்டதன் வாயிலாகத் தான் அறிய முடியும் என்பதைத்தான்.

இப்படிப்பட்ட ஆழமான முயற்சியில் ஈடுபடுவது என்பது சாதாரண ஒரு விஷயமில்லை அல்லவா? அதனால்தான் ஸ்ரீசங்கரர் இந்த அபரோட்ச அனுபூதி நூலின் துவக்கத்திலேயே ஓர் ஆன்மீக சாதகனுக்கு இருக்கவேண்டிய மிக அடிப்படையான நான்கு தகுதிகளை மிக விளக்கமாக எடுத்துரைக்கின்றார் போலும். ஆனால் இந்த மெய்யறிவைப் பெறாமல் இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து நம்மால் விடுபட முடியாது என்பதும் உண்மை.ஒரு ஜீவன் எப்படியாவது தன்னை அறியத்தான் வேண்டும் என்பது பிரம்ம விருப்பம்.அதற்காக அது மீண்டும் மீண்டும் பிறக்க வைத்துக் கஷ்டப்பட வைத்து, எப்படியாவது விடுபட வேண்டும் என்னும் தாக்கத்தை ஏற்படுத்தித் தன்னை நோக்கித் திருப்பி விட்டுவிடும். எனவே விடாமுயற்சியுடனும் ஆர்வத்துடனும், இப்படியே பிறந்து பிறந்து சாவதைவிட எப்படியாவது மனிதன் என்ற நிலையிலிருந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பது இந்த பிறவியின் லட்சியமாக நமக்கு இருக்கட்டும். நமது முயற்சிக்கு உறுதுணையாக இருப்பது ஆத்ம விசாரமே.

“நான் யார்? இது (இந்த உலகம்) எப்படி ஏற்பட்டது? இதை உண்டு பண்ணியவராக யார் இருக்கிறார்? இது எதைக்கொண்டு செய்யப்பட்டிருக்கிறது?” -இவ்விதம் ஆலோசிப்பது தான் விசாரம் என்பது.

அஹம் – 12

பூசை, வழிபாடுகள், யாகங்கள், ஜெபம், தபம், யோகாசனப் பயிற்சிகள், பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள், தியானம் போன்ற பல்வேறு சாதனா முறைகள் எல்லாம் ஆன்ம சாதகர்களுக்கு அவரவரின் பரிணாம வளர்ச்சிக்கும், தன்மைக்கும் ஏற்ற விதத்தில் முன்னேறுவதற்கு உரிய வழிகளே தவிர அவையே லட்சியமாகி விடாது. இப்படிப்பட்ட பயிற்சி முறைகளிலேயே மூழ்கி அதிலேயே நின்றுவிடாமல் தன்னில் தான் அக முகமாக மூழ்கித் தான் அதுவாய் ஆக முயற்சி செய்ய வேண்டும்.

மனம் என்னும் கருவி தன்னைத்தான் அடைவதற்காகத் தான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் அதைப் பிழையாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது முதலில் தெரிய வேண்டும். மனதைப் புலன்களில்இருந்து நீக்கி, எண்ணங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுவித்து வெறுமையாக்கி அங்கு அடைத்திருந்த அறியாமை என்னும் இருளை நீக்கி விட்டால், அந்த வெற்றிடத்தில் உயிராற்றல் என்னும் ஒளி பரவும்.

மனம் பளிங்கு போன்றது. அதுவே வெற்றிடமாகி விட்டதால், அங்கு ஆத்ம ஒளி பரவி நிறைகின்ற சாத்தியம் ஏற்படுகின்றது. அந்த ஒளியில் அன்பு கலக்கின்ற போது, நான் என்று நினைத்திருந்த அகங்காரம் அறவே விலகி இல்லாமற் போய், நான் அவன் இன்னும் ஆத்ம சாட்சாத்காரம் அங்கு ஏற்படும்.

ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாததால்,நேற்றைய நினைவுகளையும் நாளைய கனவுகளையும் சுமந்து கொண்டு அவற்றைப் பற்றியே அசை போட்டுக்கொண்டு இந்த ஆத்ம இன்பத்தை அனுபவித்தலை இழக்கின்றோம். நான் இந்த உடல்!என்னும் அறியாமையால் மனம் பற்றிய தெளிந்த அறிவோ, நமது உயிர் ஆற்றல் பற்றிய உண்மையோ நமக்குத் தெரிவதில்லை. இந்த ஒளியை உணர்வதற்குரிய பாதையைத்தான் குரு ஓர் ஆன்மசாதகனுக்குக் காட்டித் தருகின்றார்.பெரிய மகான்களும் ஞானிகளும் நாம் இந்த நிலையை அடைவதற்கு வழிகாட்டிகளாக இருந்து உதவுவார்கள். ஆனால் நமது சொந்த முயற்சியால், நாம்தான் ஆத்ம அனுபூதி அடைய வேண்டும். உண்மையான நான் என்பது யார்? என்ற ஞானத்தை அடைதலே ‘தன்னை அறிதல்’ எனப்படும் ஆத்ம வித்தையாகும். இதற்கு ஆத்ம விசாரத்தை தவிர வேறு வழியில்லை என்கிறார், ஸ்ரீ சங்கரர்.

ஆனால் இந்த விஷயம் பெரும்பாலும் யாருக்குமே புரிவதில்லை. அதற்கு என்ன காரணம்?ஓர் உயிர் பிறப்பு எடுக்கின்ற போதே இந்த உண்மை மறைக்கப்பட்டு விடுகின்ற படைப்பின் விசித்திரம் தான் இதற்குக் காரணம். இதை விளக்க முடியாது .பிரபஞ்ச இயக்கத்தை எப்படி புரிந்துகொள்ள முடியாதோ அதுபோல் படைப்பின் ரகசியத்தையும் சாதாரணமாக விளங்கிக்கொள்ளமுடியாது .ஞானியர் பிரம்ம விளையாட்டு என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஞானம் பெற்றால் தெளிவு கிடைத்துவிடும். அதுவரை?

மாயை, கர்மா, நிறைவேறாத ஆசைகள், அறியாமை போன்ற பலவித மறைப்புக்களுடன் கூடிய இன்ப துன்ப வாழ்க்கையை ஒரு ஜீவன் அனுபவித்துதான் வாழ்ந்தாக வேண்டும். பரிணாம வளர்ச்சி என்னும் மாய ஏணிப்படிகளில் முயன்று ஏறவேண்டும்.என்னுடைய இந்த வாழ்க்கைக்கு நானே தான் காரணம் என்பது புரியவே பல பிறவிகள் எடுத்தாக வேண்டுமாம். உபநிஷதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் இந்த உண்மையைப் புரிய வைக்கத்தான் கதைகளாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. நன்னூல்களும், நீதி நெறிகளும் முறையாக வாழக் கற்பிக்கின்றன.

எவனொருவன் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? நான் நல்லவனாகத் தர்ம நெறிப்படி அன்பும் அறமுமாக வாழ்ந்தும் என் வாழ்க்கை எனக்குத் துன்பமாகவே இருக்கிறதே? அது ஏன்? என்று நின்று நிதானித்துச் சிந்திக்கிறானோ, அல்லது சிந்திக்கத் தெரியாமல் கடவுள் எனப்படும் இறை சக்தியிடம் கதறி அழுது முறையிடுகிறானோ, உய்ய வழி தெரியவில்லை என்று உண்மையாக சரணாகதி அடைகிறானோ அப்போது பிரம்மம் அவனுக்குரிய ஆன்மீகப் பாதையை அவனுக்கு அறிமுகப் படுத்தும்.

இவையெல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்துவிடாது. நான் கதறுவதில் உண்மை இருக்கவேண்டும். அந்த உண்மைத் தன்மையை இறையாற்றல் உணர்ந்தால் வழிகாட்டும்.இந்த வாழ்க்கையின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பதை நான் அறிய ஒரு வழியில் போகச் செய்யும். அதை ஏற்று அவ்வழியில் செல்வதும், செல்லாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.

ஒருவன் திடீரென்று இதில் ஈடுபடவோ, விடுபடவோ இயலாது. முதலில் இதற்கு பிரம்மத்தின் அருள் தேவை. அது ஒரு நல்ல குருவின் வடிவத்தில் வந்து ஒரு ஜீவனுக்கு உதவிசெய்யும். அவர் வேதங்களாகிய உபநிஷதங்களின் துணைகொண்டு, செவிவழியாக இந்த ஆத்ம வித்தை என்னும் ஞான வேள்வியை உபதேசம் என்னும் மந்திரச் சொற்களால் நடத்துவார். தகுதிவாய்ந்த ஜீவனுக்கு  இதன் வழிச்செய்யும் முயற்சிகளால் முக்தி கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.

எவ்விதம் வெளிச்சம் இல்லாமல் போனால், பொருள்கள் பிரகாசிப்பதில்லையோ, அவ்விதமே ஆத்ம விசாரத்தைத் தவிர வேறு சாதனைகளால் ஞானம் உண்டாகாது.