Welcome

Featured

வணக்கம்.

வாழ்க்கையின் பரபரப்பு எல்லோரையுமே துரத்திக் கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்க, ஒன்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க, யாருக்குமே நேரமில்லை என்றாலும் சிலவற்றை நாம் ஐம் புலன்களால் அனுபவிக்கின்றபோது, அடடா! இதை எல்லோருமே ரசிக்கலாமே! என்று ஓர் ஆவல் உள் தூண்டலின் விளைவே. யான் பெற்ற இந்த இன்பத்தை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வழக்கம் போல் உள் உணர்வு தூண்ட, இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். படியுங்கள்! அனுபவியுங்கள்! சிந்தியுங்கள்! உங்களிலும் இன்பம் பெருகட்டும்!

என்றும் நட்புடன்,

விஜயா!

The posts in the Home page are based on the order of newer post. Please check the menu on the top of the screen for various topics.
The calendar on the right shows “dates highlighted” to indicate articles posted on those dates.
The recent posts on the right shows the most recent posts.
I have included pdf version of each article in the tab for the relevant topics for you to print .

Comments are always welcome.


If you dont see tamil content in the PDF files, Install bamini font.
click here to download the Font (bapc.ttf) 
Open Control Panel. 
Open Fonts Folder. 
Install New Font (by copying and paste the bamini.ttf into this folder)

காணாமற் போன தந்தை

கனடா நாட்டின் எல்லையோரப் பகுதி கிராமமொன்றில்  ரோஜர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அலாஸ்காவின் மிக அருகில் இருந்த  அந்த எழில் மிகுந்த கிராமத்தின் எல்லையோரக் காவல் படையில் ஹெலிகாப்டர் ஓட்டும் டிரைவராக ரோஜர் பணியாற்றினார். 

மனைவியை இழந்த நிலையில், தன் இரு மழலைச் செல்வங்களையும் தன் கண் போலப் போற்றி அவர் வளர்த்தார். எளிமையும் கடமை உணர்வும் மிகுந்த ரோஜரின் மூத்த மகன் ஜாக்கிற்கு இப்போது 15 வயது. அந்த வயதிற்கே உரிய படபடப்பும், முன்கோபமும், புரிந்து கொள்ளாத தன்மையும் அவனிடம் மிக அதிகமாக இருந்தன. அவனுக்கு நேர்மாறாக அமைதியும் புத்திசாலித்தனமும் கொண்ட பெண்ணாக அவனது தங்கை எமிலி திகழ்ந்தாள்.

தாயில்லாத அந்தக் குடும்பத்தை அவள் பொறுப்புடன் நிர்வகித்தாள். சிறிய பெண்ணாக இருந்தாலும் மிகத் திறமையாகத் தந்தைக்கு உறுதுணையாக எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டாள். தன் சகோதரனான ஜாக்கிடம் அன்பாகப் பேசி அவனைப் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்துவாள். 

இந்நிலையில்,அலாஸ்காவின் எல்லைக்கு அப்பால் சட்டத்திற்கு விரோதமான முறையில் போலார் பனிக்கரடிகளும்,  கலைமான்களும் மிக அதிகமாகக் கொல்லப்படுவதாக எல்லைக் காவல் படையினருக்குச் செய்தி வந்தது. அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் உடனடியாக ஈடுபடும்படி அரசாங்கத்திடமிருந்து கட்டளை வந்தது. அன்று முதல் அலாஸ்காவின் பனிபடர்ந்த மலைப்பகுதிகளிலும் இயற்கையழகு மிகுந்த பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் ரோஜரின்  மஞ்சள் நிற ஹெலிகாப்டர் வலம் வர ஆரம்பித்தது.

தந்தை செல்கின்ற  இடங்களையெல்லாம் வர்ணிக்கும் படி கேட்டு மகிழும் எமிலி அவர் சொல்லும் இடங்களையெல்லாம் அலாஸ்கா தேசப்படத்தில் சுட்டிக்காட்டிக்கொண்டு கண்டுபிடிப்பாள். அவர் ஹெலிகாப்டரில் பறந்து செல்லும் போதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வீட்டிற்குப் போன் செய்து கண்டிப்பாகத் தன்னிடம் பேச வேண்டுமென்றும், எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றும் அவள் சொல்லியனுப்புவாள். 

அதேபோல அவரும் கண்காணிப்புப் பணிக்காகச் செல்லும்போதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கொருமுறை தான் பறந்து செல்லும் இடத்தைப் பற்றிக் குறிப்பாகத் தன் மகளிடம் கூறுவார். தான் கண்டுகளிக்கும் இயற்கை அழகுகளை எல்லாம் வர்ணித்து மகளுக்கு மகிழ்வையளிப்பார். மகளால் பெருமையும் நிறைவும் கொண்டிருந்த ரோஜருக்கு  ஜாக் ஒரு சவாலாகவே விளங்கினான்.

தனக்கு இந்த கிராமமும், இங்குள்ள மக்களும் பிடிக்கவில்லையென்று அடிக்கடி ஜாக் தந்தையிடம் சண்டை பிடிப்பதோடு, அந்த ஊரிலிருக்கும் கடைகளுக்குச் சென்று அங்கு ஏதாவது வம்பு வளர்த்து சண்டை போட்டுத் தந்தைக்குத் தலைவலியைக் கொடுத்து வந்தான். ஒரு கடையில் இருந்த ஸ்டீபன் என்ற பழங்குடிப் பெரியவர் ஒருவர் மட்டும் இதெல்லாம் இளமைக் கோளாறு என்றும், போகப்போகப் பொறுப்பு தானாக வந்துவிடும் என்றும் ரோஜருக்கு ஆறுதல் கூறுவார்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

ஒரு நாள் ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக ஒரு கடையில் ரகளை செய்த பொறுப்பற்ற ஜாக்கைப் போலீசார் பிடித்துச் சென்று காவல்நிலையத்தில் அவனை அமரவைத்து வீட்டிற்குச் செய்தியனுப்பினர். பதறியடித்து ஓடிவந்த ரோஜர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு ஜாக்கை வீட்டிற்கு அழைத்து வந்தார். ஏன் இப்படி இருக்கிறாய்? என்று அவனிடம் பரிதாபமாகக் கேட்டார். தாயற்ற தங்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டுத் தன் இஷ்டத்திற்கு அவர் வெளியில் சுற்றுவதாகவும், அவருக்குப் பொறுப்பு என்பதே இல்லையென்றும் வேலை வேலையென்று பொய் சொல்லி அடிக்கடி எங்கெல்லாமோ செல்வதாகவும் கூறி ஜாக்பெரிதாகச் சண்டையிட்டான். அவனைக் கட்டுப்படுத்திய எமிலியையும் கோபித்தான். 

என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? என்று விரக்தியுற்று அவனிடம் கேட்ட தந்தையிடம், போங்க!  போய் நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து செத்துப் போங்க! என்று கத்திவிட்டு அறைக் கதவை அடித்துச் சாத்திவிட்டு போய்விட்டான். செய்வதறியாது கண்களை இறுக மூடி சுவரில் சாய்ந்தார் ரோஜர்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

போன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்துப் பேசிய ரோஜர் அடுத்த சில நிமிடங்களில் தான் அங்கு இருப்பதாகக் கூறி விட்டு போனை வைத்தார். திகைப்புடன் தன்னைப் பார்த்த எமிலியிடம் அலாஸ்கா மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரை அவசரமாக ஓட்டிச் செல்ல அழைப்பு வந்திருப்பதாகவும், தான் உடனே செல்ல வேண்டும் என்றும், ஒரு மணி நேரம் கழித்து போனில் பேசுவதாகவும் கூறிப் புறப்பட்டார். அறையின் உள்ளிருந்து “அப்படியே அலாஸ்காவிலேயே காணாமல் போயிடுங்க!” என்ற ஜாக்கின் கோபக் குரல் வெளிப்பட்டது.

ரோஜர் வெளியில் சென்ற சிறிது நேரத்தில் திடீரென்று மிகப்பெரிதாக இருட்டிக் கொண்டு வந்தது. அடுத்துப் பெரு மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. எங்கும் இடி இடித்து பயமுறுத்தியது. இடிந்து போனவளாய் எமிலி ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த ஜாக் இப்படிப் பேய் மழையாக பெய்கிறதே! என்று கவலையால் வெளிறிய முகத்துடன் கூறினான்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

போன் மணி ஒலித்ததும் பாய்ந்து சென்று எடுத்த எமிலி, “Dad! Are you ok? (தந்தையே எப்படி இருக்கிறீர்கள்)” என்று கத்தினாள்! அங்கு மலைப்பகுதிகளுக்கிடையே மழையில் சிக்கி அவதிப்பட்ட ரோஜர்,  “கவலைப்படாதே நான் நன்றாக இருக்கிறேன்” என்றார். அதன்பிறகு அவர் பேசுவது இங்கு சரியாகக் கேட்காமல் விட்டுவிட்டுக் கேட்கவே, பதறிய எமிலி, “அப்பா! திரும்பி வந்துவிடுங்கள் அப்பா!” என்று உரத்த குரலில் கேட்டாள். ஜாக் அவள் பக்கத்தில் வந்து நின்றான். பயத்தில் அவன் உடல் நடுங்கியது. வெளியில் பயங்கரமாக ஓர் இடி இடித்தது.

ஸில்வர் ஹை ஸ்கை என்ற மலைப் பகுதிக்கு அருகில் தான் பறந்து கொண்டிருப்பதாகவும், இந்த இடத்தில் ஹெலிகாப்டரைத் திருப்ப முடியாது என்றும், அதிக மழை காரணமாக வெளியில் எதுவும் தெரியவில்லை என்றும் ரோஜர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவரது ஹெலிகாப்டரின் ஒருபக்க இறக்கை மலையின் மீது இடித்துத் தீப்பற்றிக்கொண்டு விட,  அவர் பேசுவது நின்றுவிட்டது. இவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை. “டாட்! டாட்!” என்று எமிலியும் ஜாக்கும் மாறிமாறிக் கத்திக் கூப்பிட்டனர். ஆ! வென்ற ஒரு சப்தம் கேட்டதோடு வேறு எதுவுமே இல்லை.

இருவரும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஜாக் வருத்தத்துடனும் பயத்துடனும் தலையைக் குனிந்தான். சட்டென்று எமிலி அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தன் தந்தை பணிபுரியும் இடத்திற்கு ஓடினாள். 

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

எல்லைக் காவல் படையினரும், எமிலியும் ஜாக்கும் கவலை தோய்ந்த முகத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்தனர். ரோஜர் என்னவானார் என்று கண்டுபிடிப்பதற்காக ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றிருந்தது. மழை நின்று விட்டது. டெலிபோன் உயிர்பெற்று ஒலித்தது. ஓரிடம் விடாமல் நன்றாகத் தேடி விட்டதாகவும், எந்தவித அடையாளமும் தெரியவில்லையென்றும ஹெலிகாப்டரிலிருந்து தகவல் வந்தது. 

‘சில்வர் ஹை ஸ்கை’ என்ற மலைப்பகுதிக்குப் போய் நன்றாக மீண்டும் ஒருமுறை தேடிப் பார்க்கும்படியும், தன் தந்தை அங்குதான் எங்காவது இருப்பார் என்றும் உடனே திரும்ப வேண்டாம் என்றும் எமிலி அலறினாள். என்ன செய்வதென்று தெரியாமல் சலிப்புடன் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை நன்றாகத் தேடிப்பாருங்கள்! என்று கட்டளையிட்டு விட்டுக் காத்திருந்தனர்.

ரோஜரின் ஹெலிகாப்டர் செயலிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதி உடைந்து விட்டது. அதன் உடைந்த பாகம் ஒன்றில் உடலில் ஏராளமான காயங்களுடன் ரோஜர் அரைகுறை நினைவுடன் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது ஹெலிகாப்டர் வரும் ஒலி கேட்கவே தன்னிடமிருந்த இடம் காட்டும் ஒளிச் சுடரை மிகவும் சிரமப்பட்டுத் தட்டுத்தடுமாறி ஏற்றி மேலே காற்றில் விட்டெறிந்தார். ஹெலிகாப்டர் மிகமிகப் பள்ளமான ஒரு மறைவான பகுதியில் விழுந்து கிடந்ததால் ஹெலிகாப்டரில் வந்த காவலரின் கண்களுக்கு அது தென்படவில்லை. அந்த இடத்தை மட்டும் விட்டு மற்ற இடங்களைத் துருவிப் பார்த்துவிட்டு யாரையும் அல்லது எதையும் காண முடியவில்லை! என்ற தகவலை அவர்கள் அனுப்பவே, இனிப் பயனில்லை! திரும்பி விடுங்கள்! என்று பதில் பணியிடத்திலிருந்து வந்தது. ஹெலிகாப்டர் திரும்பிச் சென்ற சில நொடிகளில் ரோஜர் வீசியெறிந்த ஒளிச் சுடர் வானில் தெரிந்தது.  துரதிஷ்டவசமாக அது அவர்கள் கண்களில் படவில்லை.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

எதுவும் செய்ய வகையில்லா நிலையில் தொங்கிப் போன தலையுடன், துவண்ட மனத்துடன் இருவரும் வீட்டிற்குத் திரும்பினர். இருவரும் எதுவுமே பேசவில்லை. இரவு கழிந்தது. பொழுது விடிந்ததும் ஏதோ ஒரு முடிவுக்கு வந்ததைப் போல ஜாக் துள்ளி எழுந்தான். ஏதேதோ பொருள்களைத் தேடி எடுத்து அவசர அவசரமாகப் பையில் போட்டு மூடினான். அவன் செயலில் அவசரமும் வேகமும் இருந்தது. தோளில் பையைத் தூக்கி மாட்டியபடி அவன் வீட்டை விட்டு வெளியேறினான். அவன் செய்வதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எமிலி அவன் என்ன செய்ய இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்துத் தானும் பரபரப்பாகத் தன்னைத் தயார் செய்து கொண்டு அவன் பின்னால் ஓடினாள்.

பலத்த வாக்குவாதங்களுக்குப் பிறகு ஒரு சிறிய நீண்ட பாளை போன்ற படகில் இருவரும் துடுப்புப் போட்டு ஓட்டிக்கொண்டு தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்கத் துணிவுடன் புறப்பட்டனர். முதலில் அடங்கிய ஓடை போல் சலசலத்து ஓடிய ஆற்று நீரில் படகைச் செலுத்துவது அவர்களுக்கு இனிய அனுபவமாக இருந்தது. ஆனால் போகப்போக ஆற்றுநீர் பெருவெள்ளமாகப் பெருகி, அடித்துப் பிடித்துக் கொண்டு பேராழத்துடனும் பெருவேகத்துடனும் ஆவேசமாகச் சென்றது. எமிலியின் ஊக்கத்தாலும் உற்சாகக் குரலாலும் ஜாக் செயல்பட்டாலும் அவன் முறையின்றி துடுப்புப் போட்டு விரைவில் சோர்ந்து போனான். எப்படியோ தட்டுத் தடுமாறி அந்த வேகப் பகுதியைக் கடந்து சம நீரோட்டத்திற்கு அவர்களது படகு வந்தது. உடனே ஜாக் பொறுப்பில்லாமல் தன் நிலை மறந்து படகின் மீது எழுந்து நின்று உற்சாகத்துடன் குதிக்கவே, படகு கவிழ்ந்துவிட்டது. மிக முயன்று கவிழ்ந்த படகை நிமிர்த்தி ஓட்டிக் கரையை அடைந்து அடர்ந்த காட்டினுள் நுழைந்து பயத்துடன் இறங்கி நடந்தனர் இருவரும்.

அங்கே ஓரிடத்தில் அடர்ந்த பகுதியில், ஒரு பெரிய கூடாரமும், அதனைச் சுற்றி ஆங்காங்கே மரங்களிலும், மர ஸ்டாண்டுகளிலும், பெரிய பெரிய மான் தோல்களும், நீண்ட பெரும் மான் கொம்புகளும் பலவித மிருகங்களின் தோல்களும் தொங்கவிடப்பட்டும் காட்சியளித்தன. மிகப்பெரிய வேட்டையின் விளைவாக அது இருந்தது. யாராவது இருக்கிறீர்களா? என்று பயத்துடன் சுற்றும் முற்றும் தயங்கியபடி தேடிய இருவரும் ஏதோ உறுமும் சத்தம் கேட்டு சட்டென்று நின்று கவனித்தனர். 

கூடாரத்தின் பக்கவாட்டில் ஒரு மரக் கூண்டிலிருந்து அந்த ஒலி வந்தது. உடனே ஆவலுடன் அதனருகே சென்றனர். அடுத்த கணம் அந்தக் கூண்டின் வட்டவடிவ சிறிய துவாரம் வழியே மிக அழகிய பனிக்கரடிக் குட்டி ஒன்றுஉறுமியபடி  தலையை வெளியே நீட்டி ஆட்டியது. இருவரும் போலார் கரடி! என்று கத்தியபடி பின்வாங்கினர். ஏதோ முறையிடுவது போலக் குட்டி இவர்களைப் பார்த்துக் குரல் கொடுத்தது. எமிலி மெதுவாக, “அப்பா சொல்லிக் கொண்டிருந்த விலங்கு வேட்டைக்காரர்கள் வேலைதான் இது! திருட்டுத்தனமாக விலங்குகளை வேட்டையாடி இங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள்! பாவம்! இந்தக் குட்டியையும் அதன் தாயை விட்டுப் பிரித்து இங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த குட்டியைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அது நம்மைப் பார்த்துத் திறந்துவிடு என்று கேட்பதைப் போலத் தோன்றுகிறது. கதவைத்திறந்து விட்டுவிடுவோமா ஜாக்?” என்று கேட்டாள்.

ஜாக் தலையை ஆட்டிவிட்டுக் கூண்டின் மேலே ஏறி அதன் கதவைத் திறந்துவிட்டான். கூண்டிலிருந்து துள்ளி வெளியே குதித்த கரடிக் குட்டியைப் பார்த்து பயந்துபோன இருவரும் அங்கிருந்து பதறியடித்துப் படகை நோக்கி ஓடி அதில் ஏறி அவசர அவசரமாகத் துடுப்பை வலித்தனர்

எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. காட்டின் ஒரு பகுதியில் குளிருக்காக நெருப்பை மூட்டி அதிலேயே உணவு தயாரித்து தங்கையிடம் ஜாக் நீட்டினான். முதன் முதலாகச் சமைத்திருக்கிறாய், என்று சொல்லிக்கொண்டே எடுத்துச் சுவைத்துப் பார்த்த எமிலி மிகப் பிரமாதம்! என்று  உற்சாகமாகப் பாராட்டினாள்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவர்கள் விடுதலை செய்த அந்தக் குட்டி உறுமிக் கொண்டே அவர்கள் முன் வந்து நின்றது. ஜாக் செய்திருந்த உணவை நக்கி நக்கி சாப்பிட்டது. பயந்து நடுங்கிய இருவரும் தங்கள் கையிலிருந்த பாத்திரத்தால் அதை அடிக்கப் போக அது அதனை வாயினால் கவ்விப் பலமாக இழுத்தது. அப்போது ஏதோ ஒலி கேட்கவே, அந்த குட்டி பாய்ந்து சென்று ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டது. எதுவும் புரியாமல் விழித்த ஜாக், எமிலி இருவரின் முன்னால் இரண்டு முரட்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். அவர்களைப் பார்த்தாலே அருவருப்பாக, அழுக்காக, குரூரமானவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் இருவரும் ஜாக்கையும் எமிலியையும் நெருங்கி வந்து அவர்களை எரித்து விடுவது போல் பார்த்து, “நீங்கள் இருவரும் யார்? இந்தக் காட்டில் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். “தொலைந்து போன எங்கள் அப்பாவைத் தேடி நாங்கள் வந்தோம்” – என்று நடுங்கிக்கொண்டே எமிலி கூறினாள். அதில் ஒருவன் பல்லைக் கடித்தபடி  “எங்கள் கூடாரத்திற்கு வந்தீர்களா? அங்கு ஒரு கரடிக் குட்டியை பார்த்தீர்களா?” என்று உறுமும் குரலில் கேட்டான்.

ஜாக், “நாங்கள் எந்த இடத்திற்கும் வரவில்லை; எந்த கரடிக் குட்டியையும் நாங்கள் பார்க்கவில்லை” என்று கூறினான். ஜாக் அந்தக் கூடாரத்தில் இருந்து திரும்ப ஓடி வரும்போது அங்கு இருந்த சிகரெட் லைட்டரை எடுத்து வந்திருந்தான் அது அங்கே ஒரு கல்லின் மீது இருந்தது.

உயரமான ஆள் அதை எடுத்து, “அட இந்த சிகரெட் லைட்டர் என்னுடையது போலவே இருக்கிறதே.  இதனால்தான் அந்த நெருப்பைப் பற்ற வைத்தாயா? புகையைப் பார்த்துவிட்டுத் தான் நாங்கள் இங்கே வர முடிந்தது! என்று இகழ்ச்சியாகக் கூறிக்கொண்டே, கரடி கடித்து இழுத்ததால் வளைந்து கிடந்த பாத்திரத்தைக் கையில் எடுத்து இதை எப்படி வளைத்தீர்கள்?” என்றும் கேட்டான்.

பருமனான ஆள் மீண்டும், “கரடிக் குட்டியைப் பார்த்தீர்களா? குட்டி எங்கே?” என்று உறுமினான். கரடிக்குட்டி புதரில் இன்னும் நன்றாகப் பதுங்கிக் கொண்டது. நடுங்கிய இருவரையும் பார்த்து முதல் ஆள், “இவர்கள் நம் கூடாரத்திற்கு வரவே இல்லை; நம் சிகரெட் லைட்டரை இவர்கள் எடுக்கவே இல்லை. கரடிக்குட்டி இங்கு வரவே இல்லை!” என்று வெறுப்பேற்றுவதைப்போல் கூறிவிட்டு, “சரி, வா! நாம் போகலாம்” என்று பாத்திரத்தை வீசி எறிந்து விட்டுப் புறப்பட்டான். இருவரும் சென்றதும் கரடிக் குட்டி வெளியில் வந்து ஜாக்கின் காலை நக்கி முகத்தோடு தன் முகத்தைக் கொண்டு வைத்தது. பயந்துபோன இருவரும் அதனிடம் இருந்து விலகி ஓடிச்சென்று படகை எடுத்துக்கொண்டு பறந்தனர். அந்தப் பொல்லாத கரடிக்குட்டியோ அவர்களை விட்டு விட மனமின்றி கரையோரமாக அவர்களைக் கவனித்தபடியே துள்ளிக் குதித்து ஓடி வந்தது.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

மைக், ரோஜரின் அலுவலகத்தில், ரோஜரோடு பணிபுரியும் அவனது நண்பன். ஜாக், எமிலியைத் தேடி மைக் அவர்களின் வீட்டிற்கு வந்த போது வீடு திறந்து கிடப்பதையும், வீட்டுப் பொருள்கள் ஒழுங்கின்றி இறைந்து கிடப்பதையும் கண்டு திடுக்கிட்டான். இவர்கள் இருவரும் தம் தந்தையை தேடித் துணிச்சலாக, அந்த அபாயமான பகுதிக்குப் பயணம் சென்றிருக்கிறார்கள் என்பதை அவன் நொடியில் புரிந்துகொண்டு,அலுவலகத்திற்கு விரைந்து, தகவலைக் கூறி, உடனே ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் தேடப் புறப்பட்டான்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

கரடிக் குட்டியைத் தேடி அலைந்து கொண்டிருந்த அந்த இரண்டு திருடர்களின் கண்களில் ஜாக்கின் படகு தென்பட்டது. ஜாக்கும் எமிலியும் தங்கள் படகை அங்கே நிறுத்திவிட்டு மலை மீது ஏறிப் போயிருந்தனர். அந்தப் படகுக்கு அருகில் கரடிக் குட்டியின் காலடியும் தென்பட்டது. அதைப் பார்த்ததும், “அந்தத் திருட்டு பசங்களோடு தான் இந்த சனியன் பிடித்த குட்டியும் திரிகிறது” என்று கோபத்துடன் கத்தியவர்கள் ஆத்திரத்துடன் அந்தப் படகின் துடுப்புகளை எடுத்து ஒடித்துப் போட்டனர். படகை எடுத்துப் புதர் மறைவில் தூக்கிப் போட்டனர். அப்போது ஹெலிகாப்டர் வரும் ஒலி கேட்கவே, அவசர அவசரமாகத் தங்கள் கையிலிருந்த துப்பாக்கிகளை த் தங்கள் படகில் மறைத்து வைத்தனர். படகில் நிறைந்திருந்த இறந்த மான்களைக் கனத்த தார்பாலின் உறையால் இழுத்து மூடினர். எதுவும் நடவாதது போல்  ரிலாக்சாகப் பைனாகுலர் மூலம் இயற்கைக் காட்சியை ரசிப்பது போல் நின்றனர். 

இவர்கள் இருவரைப் பார்த்ததும் ஹெலிகாப்டர் கீழே இறங்கி நின்றது. அதிலிருந்து வெளிப்பட்ட ரோஜரின் நண்பன் இவர்களிடம் வந்து, “நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். ஷூட்டிங் நடத்துவதற்காக லொக்கேஷன் பார்க்க வந்திருப்பதாகக் கூறி அதற்குரிய அனுமதி கார்டை எடுத்து அவனிடம் வஞ்சகமாக சிரித்தபடி காட்டினான் உயரமான மனிதன்.

அதை வாங்கிப் பார்த்துவிட்டு, “ஓகே,! இங்கு இரண்டு சிறுவர்களை எங்காவது பார்த்தீர்களா?” என்று கேட்டு, ஜாக் – எமிலியின் புகைப்படத்தை எடுத்துக் காட்டினான், ரோஜரின் நண்பன். “இந்த மழையிலும் காட்டிலும் இவ்வளவு அழகான சிறுவர்களை எப்படிப் பார்க்க முடியும்? M.T.Vயிலும்  C.T.Vயிலும் தான் நான் இவர்களைப் போல பார்த்திருக்கிறேன்” என்று அந்த தடி ஆள் ஜோக் அடித்தான்.

அதைக் கேட்டுக் கவலையுடன் சுற்றும் முற்றும் பார்த்த  மைக்கிடம், தான் முறித்துப் போட்ட துடுப்பின் முனைப்பகுதியைக் காட்டி, இது இங்கு கிடந்தது; இதை வேண்டுமானால் பார்! ஒருவேளை ஏதாவது தகவல் கிடைக்கலாம்!” என்று அப்பாவி போல் கொடுத்தான்.

அதை வாங்கிக் கவலையுடன் பார்த்த மைக், அதில் ரோஜர் என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து முகம் மாறினான். அதைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, “இவர்களைப் பார்த்தால் உடனே போலீஸுக்குத் தகவல் தெரிவியுங்கள்” என்று கூறிவிட்டு ஹெலிகாப்டரில் ஏறிப் பறந்தான்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

ஹெலிகாப்டரில் மயங்கிக் கிடந்த ரோஜர் மெதுவாகக் கண் திறந்தார். தான் இருக்கும் அபாய நிலை அவருக்கு  நினைவுக்கு வந்தது. உடனே மிக மெதுவாக உடலை அசைத்து டெலிபோனில் பேட்டரியை இணைத்து வீட்டுடன் தொடர்புகொண்டு பேச முயற்சித்தார். ஆனால் எந்தவிதப் பயனும் இல்லை. தன் எதிரில் காட்சியளித்த தன் குடும்பப் போட்டோவைக் கையிலெடுத்து அதையே உற்று நோக்கினார். அவரது கண்கள் கலங்கின. கண்களைத் துடைத்துக்கொண்டு போட்டோவை மீண்டும் அதன் இடத்தில் வைக்க சற்றே முன்புறம் சாய்ந்தார். அடுத்த கணம்,  மயிரிழையளவே ஒரு பாறையிடுக்கில் மாட்டியிருந்த ஹெலிகாப்டர் அதிலிருந்து விடுபட்டுக் கீழே நோக்கி பாய்ந்தது. ஓ! வென்ற அலறலுடன் ரோஜர் கீழே விழுந்தார். ஒரு அகன்ற மரக்கிளையில் அவர் அமர்ந்திருந்த சீட்டும் ஹெலிகாப்டரின் மெயின் ராடும் மட்டும் சிக்கிக்கொள்ள மற்ற அனைத்துப் பாகங்களும் உதிரிகளாகக் கீழே உடைந்து சிதறின. சீட்டில் அமர்ந்திருந்தநிலையில் ரோஜர் நம்பிக்கையின்றி மீண்டும் மயக்கம் ஆனார்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

உயர்ந்த மலை மீது ஏறி ஏறிக் களைத்துப்போன ஜாக்கும், எமிலியும் ஒரு இடத்தில் பாழடைந்த ஒரு வீட்டைக் கண்டனர். தூசியும் ஒட்டடையுமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த அந்த வீட்டினுள் பயத்துடன் நுழைந்து யாராவது இருக்கிறார்களா என அங்கும் இங்கும் தேடி விட்டுக் களைப்பினால் அங்கேயே படுத்துத் தன்னை மறந்து நன்றாகத் தூங்கினர். அந்த வீட்டிற்கு வெளியே அந்தக் கரடி குட்டி காவல் நாய் போல் படுத்து இருப்பதை இருவருமே கவனிக்கவில்லை.

மறுநாள் காலை சோர்வும் களைப்பும் மிகக் கண்விழித்த இருவரும் மேப்பை எடுத்து ஆராய்ந்தனர். ‘ஸில்வர் ஹை ஸ்கை’ மலைக்கு எப்படிப் போவது? பாதி தூரத்தைத் தானே கடந்து இருக்கிறோம்? என்று கவலையுடன் யோசித்தனர். வீட்டின் மேற்கூரையைப் பார்த்த எமிலி “ஜாக்” என்று உற்சாகத்துடன் குரல் கொடுத்தாள் அங்கே ஒரு பழைய படகு காட்சியளித்தது. 

அந்தப் படகை இறக்கி, அதை நீரில் தள்ளி அதன் மீது ஏறிக்கொண்டு இருவரும் உற்சாகமாகப் புறப்பட்டனர். கரை வழியே கரடிக்குட்டி வந்து கொண்டிருப்பதைத் தற்செயலாகப் பார்த்த இருவரும் வியந்தனர். ஜாக் எமிலியிடம், “அது நம்மை விட மனமின்றி நம்முடனேயே வருகிறது. அது நம்மை ஒன்றும் செய்யாது!” என்று கூறி அதை நோக்கிக் கையை ஆட்டினான். கரடிக்குட்டி அவர்களை நோக்கிப் பெரிதாக உறுமி ஊளையிட்டது. அப்போதுதான் அவர்கள் தம்மை எதிர்நோக்கிப் பேரபாயம் காத்திருப்பதை கவனித்தனர். 

ஆம்! அந்த இடத்தில் வெறித்தனமாக வெள்ளம் சுழித்துக் கொண்டு பாய்ந்தோடியது. அவர்களால் சமாளிக்க முடியாத வேகம். அதுவுமின்றி 10 அடிகளுக்கு அப்பால் இந்தப் பெரு வெள்ளம் நீர்வீழ்ச்சியாக மாறி அதிக ஆழத்தில் விழுந்து கொண்டிருந்தது. இருவரும் கத்தினர்; கதறினர்; துடுப்பை எதிர்த் திசைக்கு மாற்றி போட்டனர்.  எதுவுமே நடக்கவில்லை. வெள்ளம் இவர்கள் படகை இழுத்துச் சென்றது. அலைகடல் துரும்பென  சிறுவர் இருவரும் தவித்தனர். அப்போது ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய மரக்கிளை சாய்ந்து விழுந்து கிடப்பதை இருவரும் கண்டனர். அதைப் பற்றிக் கொண்ட இருவரும் தட்டுத்தடுமாறி அதன் மீது ஏறினர். எமிலி தைரியமாக ஏறிவிட, ஜாக்கினால் எவ்வளவு முயன்றும் ஏற முடியவில்லை; தடுமாறினான்; அவனுள் பயம் பெரியதாக இருந்தது. அந்த பயத்தால் கைப்பிடியை நழுவவிட்டான். வெள்ளம் அவனை அடித்துச் சென்றது. எமிலி அலறித் துடித்தாள். மரக்கிளையைப்  பற்றிக் கொண்டு அழுது கொண்டே ஊர்ந்து சென்று கரையை அடைந்தாள். 

பெரு வெள்ளத்தில் சிக்கிய ஜாக் உருட்டிப் புரட்டி அடித்துச் செல்லப் பட்டான். பக்கத்தில் இருந்த பாறைகளைப் பிடித்தும் எதையும் பற்ற முடியாமல் வழுக்கியது. தவித்தபடி ஒவ்வொரு பாறையாகப் பிடிக்க முயன்றான். அப்போது கரையோரமாகப் பாறைப் பகுதியிலிருந்து ஒரு வலுவான கரம் அவனைப் பிடித்தது. அரைகுறை நினைவுடன் கண்திறந்து பார்த்த ஜாக்,  ஸ்டீபன்! என்று கத்தினான். அப்படியே மயங்கி அவர் கரங்களில் சாய்ந்தான். 

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

கிராமத்துக் கடையின் சொந்தக்காரரான ஸ்டீபன் என்ற கிழவர் எமிலிக்கும் ஜாக்கிற்கும் சூடாகக் காப்பி போட்டுத் தந்தார். மீன் , வேட்டையாடவும் எப்போதாவது இந்தப் பக்கம் அவர் வருவது வழக்கமாம். இன்று அவர் வந்ததால் ஜாக் தப்பிக்க முடிந்தது. எமிலி தான் அவரை அழைத்து வந்து ஜாக்கைக் காப்பாற்றினாள். ஸ்டீபன் இருவரையும் தன்னுடன் ஊருக்குத் திரும்பும்படி வற்புறுத்தினார். தந்தையைக் கண்டுபிடிக்காமல் இருவரும் ஊருக்குத் திரும்ப மாட்டோம் என்று பிடிவாதமாக க் கூறி மறுத்து விட்டனர். 

“ஜாக்! உன் தந்தையைக் கண்டுபிடித்து நீ ஒரு பொறுப்புள்ள மகன் தான் என்பதை நிரூபித்துக் காட்டு!” என்று அவனைத் தைரியப் படுத்தி, உற்சாகமூட்டித் தன் பையிலிருந்து ஒரு தாயத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, இந்த ரட்சை உனக்கு வலிமையைக் கொடுக்கும்! என்று புன்னகையுடன் கூறினார் அந்தப் பழங்குடிப் பெரியவர். இருவரும் புன்னகை செய்தனர்.

அப்போது அந்தப் பிடிவாத குணமுடைய கரடிக்குட்டி தயங்கித் தயங்கி அவர்களை நோக்கி வந்தது. அதைப் பார்த்ததும் ஜாக் மிக உற்சாகமாகக் கையை அசைத்துத் தன் அருகில் வரும்படி கூப்பிட்டான். அந்தக் குட்டி ஓடோடி வந்து ஜாக்கின் மீது விழுந்து புரண்டது. அவனை நக்கியது. அவன் போட்ட தின் பண்டங்களை ஆவலுடன் தின்றது. எமிலி ஸ்டீபனிடம் அந்தக் கரடி குட்டியைப் பற்றிக் கூறினாள். ஆர்வத்துடன் அந்தக் குட்டியைப் பார்த்த ஸ்டீபன் ஜாக்கிடம் அதை நம்பும் படியும் அது காட்டும் வழியில் செல்லும்படியும் அது நிச்சயம் தந்தை இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் என்றும் கூறி வழியனுப்பி வைத்தார். போலா! போலா! என்று கரடிக்குட்டியை அழைத்த ஜாக், அதன் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான். மூவரும் பனிபடர்ந்த பாதையில் தங்கள் பயணத்தை  தொடர்ந்தனர்.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

காட்டில் ஜாக்! எமிலி! என்று கூவிக்கூவி அழைத்தபடி அவர்களைத் தேடி அலைந்த மைக், தற்செயலாக அந்தத் திருடர்கள் கூடாரத்தை பார்த்துவிட நேரிட்டது. அங்கு குவிந்து கிடந்த மான்தோல்களையும், கலைமானின் நீண்ட பெரும் கொம்புகளையும், போலார் கரடித் தோல்களையும் கண்டு திகைத்துப் போனான். அவனுக்கு விஷயம் என்னவென்று புரிந்து போயிற்று. இவர்களைத் தேடுவதை விடுத்து அலுவலகத்தை நோக்கிப் பறந்தான் மைக்.

கடும் பனியில் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தனர் ஜாக்கும்,எமிலியும். அப்போது ஹெலிகாப்டர் பறந்து வரும் சத்தம் கேட்கவே அவர்கள் நின்றனர். அவர்களருகில் நின்ற கரடிக் குட்டி திடீரென மிரண்டது. பாய்ந்து ஓட முயன்றது. அதற்குள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய இரண்டு வஞ்சகர்களும் சற்றும் தாமதியாமல் துப்பாக்கியால் போலாவை நோக்கிச் சுட்டனர். போலாவின் மீது அம்பு போல ஏதோ வந்து தைத்ததும் அது அடுத்த கணம் தரையில் விழுந்து விட்டது. ஜாக்கும் எமிலியும் நோ! நோ! என்று கத்தியதைக் கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளாமல், மிக அலட்சியமாக அந்தக் குட்டியைத் தூக்கிச் சென்று ஹெலிகாப்டரில் போட்டுக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர். ஜாக், எமிலி கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தது. என்னிடமிருந்து தப்பிக்கப் பார்த்தாயா? உன்னை அப்படி தப்பிக்க விட நான் மடையனா? என்று ஏதேதோ உறுமிக் கொண்டிருந்தான் உயரமான திருடன். மற்றவன் ஹெலிகாப்டரை ஓட்டிக் கொண்டிருந்தான். மிக மெதுவாகக் கண்களைத் திறந்தது போலா. அடுத்த கணம் அது அந்த உயரமான ஆள் மீது பாய்ந்து அவன் கையைக் கடித்தது. ஹெலிகாப்டரை ஓட்டியவனின் கழுத்தைக் கெளவியது. ஹெலிகாப்டர் தாறுமாறாகப் பறந்து தரையில் இறங்கியது. இருவரும் மயக்க மருந்து  ஊசியை போலா மீது செலுத்த முயற்சித்தார்கள். போலா அச்சம் சிறிதுமின்றி அவர்களைப் பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த அமளியில் மயக்க மருந்து ஊசியை ஒருவர் மீது ஒருவர் குத்திக் கொண்டு இருவரும் தரையில் சரிந்தனர். போலா ஹெலிகாப்டரின் இயந்திரப் பகுதிகளைத் தாறுமாறாக உடைத்துப் போட்டுவிட்டுத் தன் ஓட்டத்தைத் துவங்கியது.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்               ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

ஜாக்கும் எமிலியும் இறுதியில் அந்த உயர்ந்த மலையைக் கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் அந்த மலையை நிமிர்ந்து நோக்கினர். மஞ்சள் வண்ண ஹெலிகாப்டரின் உடைந்த துண்டுகள் அங்காங்கே சிதறிக் கிடந்ததை இருவரும் கண்டனர். உயிரைக் கையில் பிடித்து அந்த மலை மீது இருவரும் கயிற்றை இடுப்பில் கட்டிப் பத்திரமாகக் கால்பதித்து ஏறினர். பல இடங்களில் சறுக்கியும் அயராமல் ஏறிச் சமமான ஒரு பகுதியை அடைந்தனர். டாட்! டாட்! என்று இருவரும் பலமாகக் குரல் கொடுத்தனர். சற்று நேரம் கழித்து எங்கிருந்தோ, ஜாக்! எமிலி என்று அவர்களின் தந்தையின் அமுதக் குரல் கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு குதித்துச் சிரித்தனர். அப்பா உயிரோடு இருக்கிறார்! என்று ஜாக் பலமாகக் கத்தினான். அவன் முகத்தில் தெளிவு பிறந்தது. பிறகு எங்கிருந்து குரல் வந்தது என்று தேடினர்.

அவர்களுக்குக் கீழே அதல பாதாளத்தில் ஒரு மரக்கிளையில் ஹெலிகாப்டரின் உடைந்த தண்டில் ஒட்டிக்கொண்டு தந்தை சமாளித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். எமிலி., தான் பள்ளத்தில் இறங்கித் தந்தையைக் காப்பாற்றுவதாகவும், ஜாக் அவசரமும் பதற்றமும்  உள்ளவனாதலால், அவன் போகக் கூடாது என்றும் கூறினாள். 

ஜாக், எமிலியிடம் தான் பொறுப்புள்ளவனாக மாறிவிட்டதாகவும் பொறுமையாகச் செயல்படுவதாகவும்., தந்தையைத் தான் காப்பாற்றினால் தான் தன் மனதிற்கு நிம்மதி ஏற்படும் என்றும் கூறவே எமிலி சம்மதித்தாள்.

எமிலி ஒரு பாறையில் கயிற்றைச் சுற்றி அதைத்தான் வலிமையாகப் பிடித்துக்கொண்டாள். ஒரு முனையை ஜாக் இடுப்பில் கட்டிக் கொண்டு தக்க உபகரணங்களுடன் மெதுமெதுவாகப் பாறையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினான். மிகுந்த முயற்சியுடன் தந்தையை அடைந்தான். கயிற்றின் இன்னொரு பகுதியை அவரிடம் கொடுத்து அவரது இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொன்னான். அப்போது ஏற்பட்ட அசைவில் ஹெலிகாப்டர் பயங்கரமாக ஆடவே ஜாக்கிற்குப் பதற்றம் ஏற்பட்டுத் தந்தையைப் பிடிக்கப் போக, ஹெலிகாப்டர் சுத்தமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஜாக்கும் ரோஜரும் இப்போது பிடிமானம் ஏதுமின்றி அந்தரத்தில், கயிற்றில்  தொங்கினர்.

அடுத்த நொடி,எமிலியின் கைப்பிடியில் இருந்து கயிறு நழுவி சரசரவென்று கீழே சென்றது. இருவர் உடலின் கனத்தை அவள் ஒருத்தியால் தாங்க முடியவில்லை. தன் பலம் முழுவதையும் பயன்படுத்திக் கயிற்றைப் பிடித்து மேலே இழுத்தாள். அவளால் இயலவில்லை. திடீரென்று கயிற்றை மேலே இழுப்பது சுலபமாயிற்று; யாரோ அவளுடன் சேர்ந்து கயிற்றை இழுப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தாள். அங்கு போலா வாயில்  கவ்விப் பிடித்து மேலே இழுத்துக் கொண்டிருந்தது. 

போலா! என்று கத்திய எமிலி புதிய பலத்துடன் கயிற்றை இழுத்தாள். இருவருமாக இழுத்து இழுத்து ஜாக்கும் ரோஜரும்  மெது மெதுவாக மேலே எழும்பி ப் பாறையைப் பற்றி ஏறி வந்து விழுந்தனர். சில நொடிகள் கழிந்த பின்,மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கண்ணீர் சிந்தி முத்தமிட்டுச் சிரித்துத் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர். போலா மூவரையும் சுற்றிச் சுற்றி வந்தது. 

வானத்தில் ஹெலிகாப்டர் வரும் ஒலி கேட்டது. ஜாக் உடனே தன்னிடம் இருந்த இடம் காட்டும் ஒளிச் சுடரை ஏற்றி வானில் வீசினான். அது ஒளியைக்கக்கிக் கொண்டு வெடித்ததை ஹெலிகாப்டரில் இருந்த மைக் கவனித்து விட்டான். தங்களை நோக்கி வந்த ஹெலிகாப்டரை நோக்கி மூவரும் கைகளை ஆட்டினர்.

மைக் போனில், கடைசியில் அந்தச் சிறுவர்கள் தங்கள் தந்தையை உயிருடன் மீட்டு விட்டனர்! என்ற செய்தியை அறிவித்ததும், எல்லைப்புற காவல் துறை அலுவலகத்தில் கவலையுடன் காத்திருந்த  ரோஜரின் நண்பர்கள் ஹேய்! என்று கத்திக் கூச்சலிட்டுக் குதித்தனர். அங்கு ஒரு அறையில் அந்த இரண்டு திருடர்களும் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்ததும், “ஐ அம் சாரி டாட்” என்று கனத்த குரலில் கூறிய ஜாக்கை ரோஜர் இழுத்து அணைத்துக் கொண்டு முத்தமிட்டார். போலாவிற்குத் தின்பண்டத்தை ஊட்டியபடியே இக்காட்சியைக் கண்டு ரசித்தாள் எமிலி.

 இறைவன் நடத்தும் விளையாட்டு!

“வாழ்க்கை என்பது விளையாடுகின்ற ஆசையே! கிலுகிலுப்பை, சக்கர வண்டி, பொம்மை விளையாட்டு இவைதான் குழந்தைப் பருவ விளையாட்டுக்கள். இந்த விளையாட்டு முடிந்ததும் சம வயதுள்ள தோழர்களோடு கும்மாளங்கள் ஆரம்பிக்கின்றன. இந்த விளையாட்டுக்கள் யாவும் முடிவடைந்த பின் – புளித்துப்போன பின் – காதல் விளையாட்டுக்கள் தோன்றுகின்றன. அடுத்து திருமணமென்னும் விளையாட்டு.

மணமான பின்னரோ, குழந்தையை விளையாட வைக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் வாழ்க்கையின் ஒரு சுற்று முடிந்து விடுகிறது. அந்தக் குழந்தையின் உருவில் மற்றொரு சுற்று ஆரம்பிக்கிறது. வாழ்க்கை என்னும் காற்றாடியை மேலும் மேலும் பறக்க விட்டுக் கொண்டு காலம் விளையாடுகிறது. பெண்ணின் தலையில் எழுதி இருப்பது என்ன? சிறுவயதில் பொம்மை விளையாட்டு; பிறகு காதல்; திருமணம். அதற்கு அப்புறம்….? அடுப்பங்கறையும், குழந்தையும் தானே?”

…….

கதையின் இந்தப் பகுதியைப்  படித்ததும் பெருமூச்சுவிட்டுத் தலை நிமிர்ந்தாள் –  ரேவதி. ” இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் தான் எத்தனை உண்மை? அதிலும் என் வாழ்வில் இவை எப்படிப் பலித்துவிட்டன? இதை எழுதியவர் பெண்ணின் வாழ்வை விளையாட்டாகச் சித்தரித்தாலும், ஒவ்வொரு விளையாட்டின் பின்னாலும் மறைந்து வரும் விம்மல்கள் வேதனைகள்! இவை ஏன் இந்தக் கதாசிரியர்களுக்குத் தெரிவதில்லை! உள்ளுக்குள் ஆராய்ந்து பார்த்தால் பெண்ணின் வாழ்க்கை கண்ணீரை அடிப்படையாகக் கொண்டுதான் எழும்புகிறது. ஆனால் பெண்ணோ, கண்ணீரை உள்ளடக்கிப் பொறுமை என்னும் துரும்பின் துணை கொண்டு வாழ்வெனும் கடலைத்  தாண்ட எதிர் நீச்சலடிக்கிறாள். 

தனது ஒவ்வொரு வேதனையயும், சிறுசிறு துன்பங்களையும் அவள்சிரித்தபடியே ஏற்றுக் கொள்கிறாள். அவள் சிரிக்க, சிரிக்க அவளது துன்பங்களும் அதிகரித்து அதிகரித்துச் செல்கின்றன. இதற்கு என் வாழ்வே சிறந்த எடுத்துக்காட்டாயிற்றே.ரேவதியின் சிந்தனை தொடர்ந்தது.

பிறந்தேன் – ஆறு பெண்களைப் பெற்று நொந்த  உள்ளங்களில்., மேலும் ஒரு கூரிய ஈட்டியை ச்செருக ; ஏழாவதாகப்  பிறந்ததில் அழுதாலும் பிறகு சிரிப்பைச் சிந்தி, கை கால்களை அசைத்து என் முதல் விளையாட்டைத் துவங்கினேன். நான் விளையாடிய அந்நேரம், என் பெற்றோர் கண்ணீர் சிந்தினர். அவர்களின் வேதனைப் பெருமூச்சு.;  பெண்ணாக – அதிலும் ஏழாவது பெண்ணாகப் பிறந்த என்னைப் பார்த்துப் பட்ட வயிற்றெரிச்சல்!…..

பிறந்த வீட்டில் என்ன சுகத்தை அனுபவித்தேன் நான்? பெற்றவை எல்லாம் வசவுகள்.; வசவுகள்; அவ்வளவே.! சனியன், தரித்திரம், பீடை..! இவையே எனக்குக்  கிடைத்த வாழ்த்துக்கள்.

எப்படியோ பரந்த இடிபாடுகளுக்கிடையே வளர்ந்து மணம் பரப்பும் மல்லிகைச் செடி போல் அறுவருக்குமிடையே நானும் வளர்ந்தேன். நான் வளர வளர, என் சகோதரிகளில் இருவர் பூமிக்கடியில் ஆழ்துயிலில் ஆழ்ந்தனர். அத்துடன் தந்தையின் தொழிலும் பயனற்றுப் போக, மன நோய்க்கு ஆளானார் அருமைத் தந்தை. தாயோ எதையும் தாங்கும் இதயத்துடன் அனைத்தையும் பொறுத்துச் சென்றாள். வறுமை வாட்டியது. என் விளையாட்டுக்களும் தொடர்ந்தன. 

சிறு பருவ விளையாட்டுக்கள் பட்டினியின் வாட்டத்தில் மறைய, தாவணிப் பருவத்தில் சிற்றில் கட்டி விளையாடும் தருணம் வந்தது. புதுப்புது எண்ணங்கள் – ஏக்கங்கள் வளரும் பருவம் அல்லவா? இதற்குப் பட்டினியும், வசவுகளும் தடைக்கற்களாக அமையவில்லை. உலகின் ஒவ்வொரு செய்கையுமே வியப்பால் விழிகளை விரியச் செய்தன. ஒவ்வொரு பார்வையுமே ஒரு கதையாக விரியும் பருவம். உலகம் என்னை உற்றுப் பார்க்க, நான் அதையே வியப்புடன் பார்த்து நின்றேன். அப்படிப் பார்ப்பதிலும் எத்தனை கட்டு திட்டங்கள்!

“குதிர் மாதிரி வளர்ந்தாயிற்று; இன்னும் வாசலில் என்னடி வேடிக்கை! உள்ளே போ! வாசலில் வந்து நின்னு கண்ணைக் காட்டிக்கிட்டு நிக்காதே. நீ பொண்ணா பொறந்ததே போதும். வீண் பேச்சு வேற வேண்டாம். என்னிக்கு ஒருத்தன் கையிலே கொடுப்பேனோ? என்னிக்கு என் சுமை குறையுமோ.?… கடவுளே!”

பெற்ற வயிற்றின் புலம்பல்கள் இவை. தலை குனிந்து உள்ளே சென்று விடுவேன். என் இளம் பருவத் தோழி புத்தகங்கள்தான். வெளி உலகைப் பார்க்கவியலாக் கட்டுப்பாட்டில் புத்தகம் என்ற தோழி எனக்கு உற்ற துணையாய் விளங்கினாள். 

கடைசியில், என் அம்மாவின் சுமை இறங்கும் நாளும் வந்தது. என் வாழ்க்கை விளையாட்டின் ஒரு சுற்று முடிந்தது. மறுபகுதி விளையாட்டுகளுக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் இந்த விளையாட்டு என் மனதிற்குப் பிடிக்காததாய் மட்டும் அமையவில்லை; ஆரம்பித்த விரைவிலேயே முடிந்தும் போயிற்று. 

ஆம்!.. தனக்கு நோய் இருக்கிறது என்ற உண்மையை மறைத்து என்னை ஏற்றுக்கொள்ள வந்தார் ஒருவர்.. என் மனம் அவரை ஏற்க மறுத்தாலும் அறிவோ, இந்த ஒன்றிலாவது உன் தாயின் துயரத்தைக் குறைக்க வழி செய்! என்று கட்டளையிட்டது.

விழி நீரை மறைத்து,  அவர்களுக்காக என் தலையைக் குனிந்து கொடுத்து மூன்று முடிச்சுகளைப் பெற்றுக் கொண்டேன். உலகில் விரும்பியவர்களுக்கு விரும்பியவை கிடைத்துவிட்டால் வாழ்வுப்போராட்டம் என்ற சொல்லே அகராதியில் இடம் பெற்றிருக்காதே.

என்னைப் பிரியும் நிலையில் அன்னை ஏக்கப்பெருமூச்சு விடவில்லை. இந்த அதிர்ஷ்டக் கட்டையையும் ஒருவன் தலையில் கட்டியாயிற்று என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் வழியனுப்பினாள். பத்து ஜீவன்களாக ஒரே கூட்டில் அடைபட்ட பறவை போல வாழ்ந்த நான், அந்த ஒன்பது பேரையும் உதறி, யாரோ ஒருவனாக வந்தவரிடம் என்னையே ஒப்படைத்து, ஒன்றாக வேற்றிடம் காண என் இல்லத்தை விட்டு வெளியேறினேன். அம்மா தனக்கு ஏழாவதாக ஒரு பெண் – ரேவதி- பிறந்தாள் என்பதையே மறந்து விட்டதாகத் தோன்றியது எனக்கு.

காலம் சுழன்றது; மழைக்காலம்! நான் அழுவதைப் போலத்தான் நீ இனி தாரைதாரையாகக் கண்ணீர் சிந்த வேண்டும் என்று ஆரவாரமிட்டுக் கூறுவதுபோல வானம் பொழிகின்ற வேளை.

இப்படிப்பட்ட ஒரு நாளில்தான் கணவனுக்குள் மறைந்திருந்த நோயின் ரகசியம் மிகக்கடுமையாக வெளிப்பட்டது.  அவர் முகத்தில் நோயின் வெப்பம்  செம்மையாகப் பரவியது. துடித்தேன் – துவண்டேன்; யாருடைய உதவியும் இன்றி நானே பேயாக அலைந்தேன்; அவரை மருத்துவமனையில் சேர்த்துக் கண்ணிமைக்காமல் கவனித்தேன். என்ன பயன்! அவருள் மறைந்திருந்த நோய் அவரை  ஐக்கியப்படுத்திக் கொண்டது. இறுதி வரை அவருக்குத் துணையாக நான் நின்றேன். என்னுடன் துணை நிற்க மனமின்றி அவர் பிரியா விடை பெற்றுச் சென்று விட்டார். என் இதயம் துடித்த துடிப்பு! என் மனத்தினிடை எழுந்த வேதனை.!

அது நெருப்பின் இடையே சிக்கிய பஞ்சாக என் நெஞ்சையே தீய்த்தது. அத்தனை நெருப்பையும் என் கண்ணீரைக் கொட்டி அணைத்தேன்.  . 

“ஒருவழியாத் தொல்லை விட்டது என்று நினைச்சு தான் இவளைக் கல்யாணம் செஞ்சு கொடுத்தேன்.இவ இப்படி என் தலையிலே கல்லைப் போடுறாப் போல என் வீட்டுக்கே வந்து காலம்பூரா கழுத்தறுப்பான்னு நான் நினைக்கல”!

உலகம் எல்லாம் புகழும் தாய்மனம் தான் இப்படி இந்த நேரத்தில் இன்று பேசுகின்றது. என் தாயா பேசுகின்றாள்? இல்லை. அவளது வறுமை இப்படிப் பேச வைக்கிறது.கணவரின் புகைப்படத்தை விழி நீருடன் நோக்கினேன். இனி அவருக்கு என் நிலைமை தெரியுமா? போகட்டும் – அவரை அழைத்து, என்னை இருக்க வைத்த ‘அவனுக்கு’த் தெரியாதா என்னை எப்படி வாழ வைக்க வேண்டும் என்பது?.

ஒரு திங்கள் ஓடிவிட்டது. என் அன்னை என்னை அழைத்துச் செல்லவும் முடியாமல், தனியே விட்டுச் செல்லவும் இயலாமல் தவித்தபடி என்னுடனேயே இருந்தாள். அங்கு என் சகோதரிகளின் நிலைமை?

அம்மாவிடம் என் எண்ணத்தைக் கூறிவிட்டேன். “அம்மா! நீங்க இன்னும் எத்தனை நாள் தான் இங்கிருக்க முடியும்? என் தலைவிதி இப்படின்னு நிர்ணயித்து இருக்கிற போது நீங்களும் என்னோட கஷ்டப்பட முடியுமா? நான் உங்களோட வரதா இல்ல. நீங்க ஊருக்கு போங்க அம்மா. நான் இங்கேயே இருக்கிறேன். நான் இன்னும் வாழனும்னு ஆண்டவன் நினைச்சா, அவனே அதற்கான வழியைக் காட்டுவான். நீங்க கவலையில்லாமப் புறப்படுங்கள். நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன்” என்று கூறி, தயங்கிய தாயை ரயிலேற்றினேன்.

உலகமே எனக்கு இப்போது வேறாகித் தெரிந்தது. இவ்வளவு பெரிய உலகத்தில் எனக்கென்று யார் தான் இருக்கிறார்கள்?  எனக்கென அவர் தன் நினைவாக ஒரு சின்னஞ்சிறு உயிரையாவது அடையாளமாக்கிச் செல்லக்கூடாதா? அதுவுமில்லை. குழந்தையின் மலர் முகத்தில் உலகத் துயர் எதுவுமே தெரியாதாமே. அதை அனுபவிக்க எனக்கு ஏது வாய்ப்பு? நான்தான் அதிர்ஷ்டக் கட்டையாயிற்றே.

அவரை அழகாக ‘அனுப்பி வைத்ததிலும்’   அம்மாவிடம் கொடுத்து அனுப்பியதிலும் என் கையிருப்பு மிகக் குறைந்துவிட்டது. ஆயினும் என்ன? மூன்று வேளைகளில் ஒரு வேளை மட்டுமே உணவு என்ற ஒன்றை விழுங்கிவிட்டு, இதோ – இந்த முற்றத்துத் தூணில் சாய்ந்து ஆண்டவன் எனக்கு என்ன வழி காட்டப் போகிறான் என்று வெறித்துக் கொண்டே இருக்கிறேன்.!.

என் கையில் இருந்த புத்தகம் நழுவித் தரையில் விழுந்தது. நானும் என் சிந்தனையிலிருந்து விடுபட்டு எழுந்தேன். ‘கடவுள் என்பது நீ தானா! உன் கடமை என்பது இதுதானா?’ என என் மனம் அலறியது. என்னை எந்தக் காரணத்திற்காக இந்தப் பாவ உலகில் பிறக்க வைத்து எனக்காக வறுமையையும், துயரத்தையும் துணையாக அனுப்பி வைத்தான்? அதில் அந்த இறைவன் கொள்ளும் மகிழ்ச்சி என்ன? 

வீதியிலே இறங்கவே முடிவதில்லை. இளமையின் அழகைக் கொண்டு, ஒரு பெண்  துணையின்றித் தனியாக வாழ்ந்தால், குடும்பப் பெரியவர்கள் கூடக் கூச்சமின்றி நிமிர்ந்து பார்க்கின்ற காலம் இது. அத்தனை ஆண்களின் பார்வையிலும் காட்சிப்பொருளாக நான் மாறி விட்டிருக்கின்ற நிலை யாருக்குமே ஏற்படாது.புத்தகத்தை மேசைமீதுவைத்துவிட்டு வீட்டுவேலைகளைக்கவனிக்கத்துவங்கினேன்.

ஆண்டவன் காரணத்தோடுதான் எல்லாவற்றையும் இயக்குகிறான் என்று கூறுவது எவ்வளவு உண்மை? ஒருநாள்…தற்செயலாக வீட்டிற்குவெளியில் வந்தேன்.அப்போது எதிர் வீட்டிலிருந்து ஒரு  ஆண் குழந்தை தளர் நடையிட்டுக் கொண்டுபடிகளில் இறங்கி, நடுவீதியில் தன் கையை விட்டு நழுவியோடிக் கொண்டிருக்கின்ற பந்தைப் பிடிக்க முயன்று தடுமாறியபடி வருகிறது.  அதே நேரம், அடுத்த சந்திலிருந்து ஒரு பிளஷர் அதிவேகமாகத் திரும்பி வருகிறது; குழந்தை அதைக் கவனிக்கவில்லை;   . 

ஒருநொடியில் வருகின்றஆபத்தை உணர்ந்து என்இதயம் படபடத்தது. உடல் துடித்து, நரம்புகள் முறுக்கேறி நடுங்கின. ஐயோ! பச்சைக்குருத்து! ஆண்டவா! என்ன சோதனையப்பா.! வீதியிலோ ஒரு ஈ காக்காய் இல்லை. சிந்திக்க நேரமில்லை. 

அடுத்தநொடி,வீதியில் பாய்ந்து., குஞ்சைக் காக்கும் கோழியைப் போலக் குழந்தையைத்தூக்கி வீசி எறிந்தேன். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட, என்னைக்காப்பாற்றிக் கொள்ள  இயலவில்லை; என்ன நடந்ததென்றே தெரியாதநிலையில்நினைவிழந்தேன்.. விழிப்பு, பலத்த காயத்துடன்-மருத்துவமனையில் தான்! – ….

இப்பொழுது நான் காப்பாற்றிய குழந்தையின் வீட்டில் அக்குழந்தைக் கண்ணனின் மழலை மொழியைக் கேட்டபடி வாழ்கிறேன்-  நான். ஆம்! எதிர் வீட்டிற்கு வந்த விருந்தினரின் மதலையாம் அது. தாயற்ற அம்மதலைக்குத் தாயாக நான் அமைய, என்செயல் காரணமாகிவிட்டது.

அக்குழந்தையின் தந்தை பெரும் செல்வந்தர். அறிவிற் சிறந்தவர். இக் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குப் பின் அவர் துணைவி மறைந்து விட்டாளாம். தன் துயரை மாற்றிக் கொள்ளத் தன்நண்பன் வீட்டுக்கு அவர் வந்த சமயத்தில் தான் குழந்தையும் பறிபோக இருந்தது. ஆனால், நான் குறுக்கிட்டு அதைத் தடுத்து விட்டேன். ஒரு மாத காலம் மருத்துவமனையில்  என்னைச் சேர்த்துக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்ட அவர், தன் குழந்தையைக் காப்பாற்றிய எனக்குப் பரிசாகத் தன் வாழ்வையே என்னிடம் ஒப்படைத்து விட்டார். 

என்னை மதிக்காத இவ்வுலகத்தை நானும் மதிக்கவில்லை. தயங்கித் தயங்கித் தன் கருத்தைத் தெரிவித்தவரிடம் என் முழுக் கதையையும் கூறினேன். அதன்பின் மேலும் பிடிவாதமாக என்னை மணக்கக் கோரினார். நானும் ஒப்புக்கொண்டேன். எங்கள் இருவரின் வாழ்வுமே நம்பிக்கையற்றதாக இருந்தது; அவர் மனைவியை இழந்தார்; நான் துணைவனை இழந்தேன். எதற்கு இந்த வாழ்க்கை என்று மனம் நொந்த வேளையில், எங்கோ பிறந்து வாழ்ந்த எங்கள் இருவரையும், ‘கண்ணன்’ என்ற மதலையின் பாசம் மங்களக் கயிறாக மாறி புதிய வாழ்க்கையில் பிணைத்தது. மூவரின் வாழ்வும் இப்போது இன்பமயமாகக் கழிகிறது. 

ஆண்டவனை நிந்தித்தேனே! எத்தனை அறிவிலி நான்! என் வாழ்வின் போக்கையே மாற்றி விளையாடி விட்டானே!வாழ்வில் எந்தவிதப் பிடிப்புமின்றி,என்னசெய்யப்போகிறேன் என்றகேள்வியுடன் திகைத்துநின்ற இந்த அபலைக்கு ,யாம்இருக்க பயம் ஏன்? என்றுஒரு திருப்பத்தை ஏற்படுத்தி,என்குடும்பத்தினரே வியக்கும் அளவிற்கு மாற்றியமைத்த இறைவா!உன் திருவிளையாடல் யாரறிவார்!  கண்களைமூடி மானசீகமாக நன்றிகூறி வணங்கினேன். 

கண்ணிலே கண்டதென்ன?

அவசர அவசரமாகப் புகைவண்டி நிலையத்தில் நுழைந்தேன். நான் ஏற வேண்டிய வண்டி வர கணக்குப்படி ஒரு சில நிமிடங்களே இருந்தன. ஆனால் அங்குள்ளவரிடம் வண்டி வரும் நேரம் பற்றி விசாரிக்கையில், இந்திய வழக்கப்படி 80 நிமிடங்கள் லேட்டாக வருமென அறிந்து ஒரு பெஞ்ச் சில் சாய்ந்தேன்.

குடந்தையின் சிறப்பு அம்சமான வெற்றிலையும், கதம்பமும் சுறுசுறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. எல்லாவிதமான சப்தங்களும் வந்து காதைத்  துளைக்க, எதையும் உள்ளே செலுத்தாமல் யோகியைப் போல, டக் டக்கென இடம்பெயரும் ஸ்டேஷன் கடிகாரம் முள்ளையே பார்த்தவாறு படுத்து இருந்தேன். 

எப்படியோ அந்த எண்பது நிமிடங்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளியாயிற்று. வண்டி வருவதற்காக நடைபெறும் முன் உபசாரங்கள் எல்லாம் குறைவற நிறைவேற்றப்பட்டன. ஸ்டேஷனில் உள்ள அனைவரும் ஒரு பரபரப்புடன் அந்த ரயில் தேவனை வரவேற்க வழிபார்த்து நின்றோம். மாப்பிள்ளையை எதிர்பார்க்கும் கல்யாணக் கூடம் போல பிளாட்பாரம் திமிலோகப்பட்டது.

மேலும் ஐந்து நிமிட தாமதத்தை ஏற்படுத்தி கொண்டு பெருமூச்சு விட்டபடி அரக்கப் பறக்க ஓடி வந்து நின்றது ரயில். ஸ்டேஷனே ஒரு புது பரபரப்பில் ஆழ்ந்தது. நல்ல இடம் வேண்டிப் பெட்டி பெட்டியாக ஆராய்ந்து இறுதியில் ஏதோ ஒரு பெட்டியில் இடம் பிடித்து ஏறி அமர்ந்தேன். வசதியான இடத்தில் பையை வைத்துவிட்டு, நானும் நன்றாக சாய்ந்துகொண்டு பெட்டியை லேசாக நோட்டமிட்டேன். 

பெட்டியில் நல்ல கூட்டம் இருந்தது.ஆனாலும் நிற்கும் படியான நிலை யாருக்கும் நேரவில்லை. எனக்கு எதிரில் ஒரு வயதான பெரியவரும், அவரது பேரனும் அமர்ந்திருந்தனர். அந்தச் சிறுவன் சன்னலோரத்தில் உட்கார விரும்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனுக்கு அடுத்தாற் போல் ஒரு அம்மா மடியில் குழந்தையோடு அமர்ந்திருந்தாள். அவளது தாய் அந்தப் பெண்ணுக்கு காப்பி ஆற்றிக்கொண்டிருந்தாள்.. ஓரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி அமர்ந்திருந்தாள். எனது சீட்டில் இரண்டு கிராம வாசிகளும், ஒரு இளம் தம்பதிகளும் அமர்ந்திருந்தனர். வரும் வழிப்புற ஓரத்தில் ஒரு தடித்த ஆசாமி போவோர் வருவோருக்கு இடைஞ்சலாக அமர்ந்திருந்தார்.

என் விழிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்த பின் மேலே நோக்கின. எனக்கு எதிர்புறத்தில் இருந்த மேல்  ‘பர்த்’தில் ஓர் இளைஞன் ஒருக்களித்துப் படுத்திருந்தான். அவன் படுத்திருப்பதைப் பார்த்தால் எந்த நிமிடத்திலும் விழுந்து விடுவான் போலத் தோன்றியது. எனக்குச் சிறிது அச்சமாகக் கூட இருந்தது. பெட்டிக்குள் நோட்டம் விடுவதை விடுத்து வெளியே நோக்கினேன்.

விடை பெறுபவர்களும், விடை கொடுப்பவர்களும், வியாபாரம் செய்வதுமாகப் பலதரப்பட்ட உணர்ச்சிக்களமாக பிளாட்பாரம் விளங்கியது. ரயில்வே சிப்பந்திகளும், போர்ட்டர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

“எப்பொழுது இந்த வண்டி கிளம்பி ஊர் போய்ச் சேரும்? என்னை எதிர்பார்த்து சுட்டிப்பயல் வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பான். அவனுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போக வேண்டும். இல்லையென்றால் வீட்டில் ரகளை தான்.” என் எண்ணம் வீட்டை நோக்கி ஓடிற்று.

ஒருவழியாக ரயிலும் கும்பகோணத்திடம் விடைபெற்று அந்தப் பரபரப்பிற்கோர்  இடைவெளி கொடுத்துத் தன் பயணத்தை அலுப்புடன் தொடங்கிவிட்டது. சில சுகவாசிகள் வண்டி விரைய ஆரம்பித்ததுமே நித்திரா தேவியுடன் உறவாட ஆரம்பித்துவிட்டனர். பயணம் சாரமற்றதாக எனக்குப்பட்டது.

பலவிதக் குருட்டு யோசனைகளுடன் அமர்ந்திருந்த நான் தற்செயலாக மேலே பார்த்தேன். வேறு எவற்றைப் பார்ப்பது? வண்டியினுள் தானே சுற்றிச் சுற்றிப் பார்க்க வேண்டும்.!

பொருளற்ற பார்வையாக மேலே பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டாற் போல இருந்தது. மேல் பலகையின் ஓரத்தில் படுத்திருந்த வாலிபனுக்கு  அருகிலேயே இரண்டு மெலிந்த வெண்ணிறப் பாதங்கள் நீட்டிக்கொண்டிருந்தன. அவனது மேற்புறத்தில் பச்சை நிற புடவையில் சிறிது பாகம் அலைத்துக் கொண்டிருந்தது.

என்ன அநியாயம்! ஒருவர் படுக்கக்கூடிய ஒரு பர்த்தில் இரண்டு பேர்…! அதிலும் ஒரு பெண்ணும் ஆணுமாகப் படுத்திருக்கிறார்களே? இவர்கள் மனித இனம் தானா? ஆண்-பெண் உறவைப் புனிதமாகக் கருதிக் – கணவன்-மனைவி பொதுவாகச் சேர்ந்து அமர்வதே சரியல்ல என்ற எண்ணத்தில் ஊறி வளர்ந்த நாடு,இது! இன்று  இத்தகு இழிநிலைக்கு –  கூட்டத்தைப் பற்றிக் கூடக் கவலையுறாது ஒன்றாக அணைத்துப் படுக்கும் அளவிற்கு நாகரீகப் பின்னேற்றமடைந்து விட்டதா?

என் மனம் அலை பாய்ந்ததைப்போல விழிகளும் அலைபாய்ந்தன. பிறரும் வாய் திறவா மௌனிகளாய் விழித்துப் பார்த்தபடி இருந்தனர். புகை வண்டியோ எப்படியோ போங்கள்,  எனக்கென வந்தது ..என்பதைப் போல  தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. நான் மீண்டும் மேலே பார்த்தேன்.

சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பெரியவர் என்னைப் பார்த்து, “ஐயா எங்கே போறாப்பலே?” என்றார். காது செய்தியைக் கேட்டாலும் கண்கள் அசையவில்லை. “ஈரோட்டுக்கு போறேனய்யா!”. பேச்சைத் தொடர எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவரோ விடுவதாயில்லை. “நான் அதற்கு அடுத்த ஸ்டேஷனிலே  எறங்கணும்”  – என்றவர்,  என்னைப் பார்த்து மேலேயும் பார்த்தார். பார்த்துவிட்டு, “காலம் ரொம்ப மாறிப் போச்சு சார்! உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு! மரியாதை மட்டெல்லாம் மாறிப்போச்சு.  என் காலத்திலே நான் பெண்டாட்டியோட ஒரே பெட்டியிலே கூடப் போனதில்லை. யாராவது பார்த்தா என்ன பேசுவார்களோ என்கிற பயம்!, ஊருக்குப் பயப்பட்ட காலம் அது; இப்போ…? என்ன சொல்றது போங்க!” மழையைப் போல கிடுகிடுவென்று பேசி முடித்தார்.

நீங்களும் நானும் நினைச்சா போதுமா? நாகரீகம் படுத்துற பாடய்யா இது. நாம பேசிக்கறதிலே என்ன பிரயோஜனம்? அவங்கவங்களுக்கும் அது தெரிஞ்சா தேவலை.. ஹூம்..!”

நான் பேச்சை அத்துடன் முடிக்க எண்ணி, சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். 

ரயிலின் குபு குபு ஓசை இனிய இசையாக, அதன் அசைவு நல்லதோர் தாலாட்டாக அமைய அப்படியே எத்தனை நேரம் உறங்கினேனோ தெரியாது; இனிமையாகப் பாடித் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்த தாய் திடீரெனத் தன் பாடலையும் ஆட்டத்தையும் நிறுத்தினால் சில குழந்தைகள் விழித்து அழுவதைப் போல நான் திடுக்கிட்டு விழித்தேன்.

சூழ்நிலை பிடிபட ஒரு சில வினாடிகள் ஆயின. ரயில் திருச்சி ஜங்ஷனில் நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. வண்டியினுள்  நிலவியிருந்த மந்த நிலையைப் பிளாட்பாரத்தின் பரபரப்பு மாற்றிக் கொண்டிருந்தது. நிலவைக் கண்டு பொங்கும் கடலைப் போல ரயிலைக் கண்டு அலைமோதிக் கொண்டிருந்தது ரயில் நிலையம்.

என் கண்கள் மேல் பர்த்தை நோக்கி உயர்ந்தன. இன்னமும் அசையாமல் அதே நிலையில் இருவரும் படுத்திருந்தனர். வெறுப்புடன் விழிகளை வெளியே திருப்பினேன். ஒரு கௌரவமான, வயதான மனிதர் ஒவ்வொரு பெட்டியாக யாரையோ தேடும்பாவனையில் அலைந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில் சோகமும் கவலையும் கலந்து தெரிந்தன. அவர் மெதுவாக எங்கள் பெட்டிக்கருகில் வந்து தலையை நீட்டி மேல் பர்த்தை நோட்டமிட்டார். அவர் கூடவே வந்து கொண்டிருந்த ஒரு வாலிபனும் குனிந்து பார்த்து, ‘அதோ.. மாமா! மல்லிகாவும் சந்திரனும்…!’ என்று கூவினான். 

குழந்தையைத் தேடும் தாய்போல அவரது விழிகள் அலைந்து நிலைத்தன. அவர் முகத்தில் சங்கடமும் வேதனையும் விரவிக் கிடந்தன. ஏன் இந்த வேதனை! மகனும் மருமகளும் துயிலும் நிலை கண்டா? என் பார்வை திரும்பவில்லை.

அந்த வாலிபன் மேலே ஏறி வந்து அவனை இலேசாகத் தட்டினான். “சந்திரா! எழுந்திருப்பா!” சந்திரன் திடுக்கிட்டு விழித்தான். ஆனால் எழுவதற்கு முன் பக்கத்தில் படுத்திருந்தவளை உலுக்கினான். “அட என்ன கரிசனம்!” என் மனம் பொருமியது. 

அந்த வாலிபனும் அந்தப் பெண்ணும் தோள்களை அணைத்தவாறு ஒன்றாக ஒரே சமயத்தில் கீழே இறங்கினர். இறங்கினவுடன் அந்தப் பெண் ஓர் நீண்ட சால்வையை எடுத்து இருவருக்குமாகப் போர்த்தினாள்.

ஆ! இதென்ன? வெறுப்பால் சுருங்கிய என் விழிகள் வியந்து விரிந்தன. உண்மை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது. ஒரு கண நேரம் தான். அதற்குள் உண்மை என்ற தேவதை எனக்குச் சவுக்கடி கொடுத்துச் சென்றாள். 

அவர்களது மேல் சால்வை விலகியதும் என் கண்கள் கண்ட காட்சி! அந்தப் பெண்ணின் தோள் பகுதியும்,அந்த வாலிபனின் தோள் பகுதியும் ஒரே சதைத் தொடர்பாக அமைந்திருந்தன. அழகிய தங்கச்சிலைபோல் இருக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு குறையா? சற்றுமுன் வெறுத்து சினந்த என் மனமே இப்பொழுது புலம்பத் துவங்கியது. உலகத்துச் சோகமெல்லாம் அந்த ரோஜா முகத்தில் தேங்கிக் கிடக்கிறது. 

ஆம்! அதிசயத்தக்க இரட்டைப் பிறவிகள் அவர்கள்!.தங்கள் பிறப்பின் அவலம்தான் அவர்கள் விழிகளில் தெரிந்ததோ! 

சீன நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற இரட்டையர்களைப் பற்றி என் மனம் நினைத்தது. அவர்களாவது இருவருமே ஆண்கள். ஆனால் இவர்கள்? இயற்கையின் குரூர விளையாட்டு என் மனதைப் பிசைந்தது. உண்மை தெரியாமல் நான் எண்ணிய எண்ணங்கள்! 

ச்சே! எனக்கே என்னைப் பற்றி நினைக்க வெட்கமாக இருந்தது. அந்தப் பெண்ணின் நிலையை எண்ணிய என் விழிகளில் நீர்; மேல் துண்டினால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.

அவர்கள் இருவரும் வந்தவரின் உதவியுடன் யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் பொறுமையாக இறங்கிச்சென்றனர்.விசித்திரமான படைப்புக்கள்!. அவர்களைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யும் உலகம்! இறைவா!… என் மனம் மானசீகமாக இறைவனை வணங்கியது. 

அதேநேரம்,ஒரு ரயில் பிச்சைக்காரன் எங்கள் பெட்டியில் ஏறி, “உண்மை எது; பொய் எதுன்னு ஒண்ணும் புரியலை!.. நம்ம கண்ண  நம்மால நம்ப முடியல!..”என்று பாடியபடி காசுக்காகக் கை நீட்டினான்.

உணர்ச்சி மிக்க மனித வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ரயிலின் பயணம் தொடர்ந்தது.

 (1966- ம் ஆண்டு எழுதப்பட்ட கதை)