கங்கா ஒரு காவியம் – 16

என்ன தான் மகனையும் மருமகளையும் பேரக்குழந்தைகளையும் வற்புறுத்தி அனுப்பி வைத்து விட்டாலும் அவர்கள் சென்ற பிறகு கங்காவிற்கு வீடு வெறிச்சோடியது. ஒரு சோர்வும் வெறுமையும் அவளைச் சூழ்ந்தது. இயந்திரமாக எழுந்துத் தானே தனது வேலைகளைச் செய்து குளித்துத் துணி துவைத்துச் சமைத்துப் பொழுதைப் போக்கினாள். பக்கத்து வீட்டு சாந்தியும், எதிர் வீட்டு மங்கையும் தான் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டனர். மறுநாள் பாட்டியின் நலம் விசாரித்து ஏதாவது தேவையா என்று பார்த்துவிட்டுப் போக வந்த சீதாவின் மகன் ராஜாவிட்ம் மங்கை “என்னதான் பகலிலே நாங்க பாட்டியைக் கூட இருந்து பார்த்துக்கிட்டாலும், ராத்திரியில் அவங்க தனியாத்தான் இருக்காங்க. அது சரியாப் படலே. அதனால இன்னியிலேர்ந்து நீ ராத்திரி வந்து துணைக்குப் படுத்துக்கோ!” என்று கூறினாள்.

ராஜா பாட்டியிடம் ராஜாஜி நகருக்குப் புறப்பட்டு வரும்படி மிகவும் கேட்டுக்கொண்டான். ஆனால் கங்கா வர மறுக்கவே, அவன் அதன் பிறகு தன் வீட்டிற்குப் போகவில்லை. மாமாவும் அக்காவும் வரும் வரை தான் அங்கேயே இருக்கப் போவதாகச் சொல்லித் தங்கிவிட்டான். மறுநாள் புதுவைக்கு வந்த ஒரு நண்பர் குடும்பத்துடன் கிருஷ்ணா காரைக்காலிருந்து வந்துவிட்டாள். அங்கு தனக்கு போரடித்தது என்றும், இங்கே தான் விளையாட முடியுமென்றும் தான் பிடிவாதம் பிடித்து வந்து விட்டதாக அவள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூறினாள். யாருமில்லாத தனிமையை விரும்பாத கங்காவிற்கு மீண்டும் கலகலப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுவிட்டன. அவளுக்குச் சதா ஏதாவது பேச வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும், தன் பேரனுக்கும் பேத்திக்கும் தன் கையாலேயே அருமையாகச் சமைத்து அவர்களைச் சாப்பிடச் சொல்லி மகிழ்ந்தாள்.

அன்று சனிக்கிழமை. கங்கா கிருஷ்ணாவை இழுத்து வைத்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி அழகாக உடையணிவித்து விட்டாள். சமையல் செய்தாள். அதன் பின்பும் சும்மா இருக்காமல் வாழைக்காய், கத்தரிக்காய் எல்லாம் சீவி பஜ்ஜி பண்ணினாள். அன்று மாலை தன்னைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போக வந்தவர்களுக்கெல்லாம் பஜ்ஜியை சட்னியுடன் சேர்த்துத் தந்து உபசரித்தாள். தானும் மனம் கொண்ட மட்டும் அவற்றைச் சாப்பிட்டாள். அவளுக்கு எண்ணெய்ப் பண்டம் ஒத்துக்கொள்ளாது என்று தடுத்து நிறுத்த அருகில் சக்தி இல்லையே!.

இரவு பத்துமணி வரையில் தெருப் பெண்மணிகளுடன் ஆளோடியில் அமர்ந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி அரட்டை அடித்தாள். “நாழியாகிவிடடது, படுக்க வரவில்லையா?” என்று பலமுறை ராஜா அழைத்த பிறகு “என் பேரன் கூப்பிடறான். நான் படுத்துக்கப் போறேன்! எல்லோருக்கும் குட் நைட்!” என்று கூறி விடைபெற்று உள்ளே வந்தாள்.

ஸ்ரீராமைப் போலவே ராஜாவும் பாட்டிக்கு மிக அழகாகப் படுக்கை விரித்துப் பக்கத்தில் குட்டி மெத்தையில் கிருஷ்ணாவைப் படுக்க வைத்தான். வழக்கத்திற்கு மாறாகக் கங்கா தன் பேத்தியிடம் நீண்ட நேரம் ஏதேதோ அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தாள்.

“நீ சமர்த்தா இருக்கணும். நன்னாப் படிக்கணும். நம்மாத்திலே நிறைய படிச்சவா கிடையாது. நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும். உங்கம்மாவைப் போல கெட்டிக்காரியா, நல்லவளாப் பேர் வாங்கணும். அப்பா அம்மா என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. அப்படியே கேட்டு நடக்கணும். தம்பியை சமர்த்தாப் பார்த்துக்கணும்!” என்று அறிவுரை நீண்டுகொண்டே போயிற்று. கிருஷ்ணா பாட்டி சொன்னதற்கெல்லாம் ஊம்! ஊம்! என்று தன் கால்களைப் பாட்டியின் வயிற்றில் போட்டபடி ஊம் கொட்டிக் கொண்டிருந்தாள். “ஆமா! இப்போ எல்லாத்துக்கும் ஊம் போடு! நாளைக்கு அம்மா வந்தா அவ சொன்ன பேச்சு கேக்காம அடி வாங்கு. சாம்பல் மோட்டு நாய் கதை தான் உன் கதை! என்று பாட்டி கூறவே, கிருஷ்ணா, அந்தக் கதையைச் சொல்லியே ஆக வேண்டுமென்று அடம் பிடித்தாள்.

கங்காவும் சிரித்துக் கொண்டே, “ஒரு ஊர்ல ஒரு தெரு நாய் இருந்ததாம். அது தெருத் தெருவா சுத்தி ரோட்ல கிடக்கிற எச்சல் இலையில கிடக்கிறதையெல்லாம் பொறுக்கித் திங்குமாம். இப்படி நாள் பூரா அலைஞ்சு திரிஞ்சிட்டு, ராத்திரி ஒரு சாம்பல் மேட்டு மேல போய்ப் படுத்துக்குமாம். அப்போ, நாம ஏன் இப்படி எச்சல் இலையில கிடக்கிறதையும், குப்பையில கிடக்கிறதையும் பொறுக்கித் திங்கறோம்? நாளையிலேர்ந்து இப்படி கண்ட அசிங்கத்தையெல்லாம் சாப்பிடக் கூடாது. நல்ல சாப்பாடாக் கிடைச்சா சாப்பிடுவோம். அப்படி கிடைக்காமப் போனா பட்டினி கிடந்தாலும் பரவாயில்லே. ஆனா நாம மனசு மாறிடக் கூடாதுன்னு” யோசிக்குமாம். சரி! இனிமே அப்படித்தான் இருப்போம்னுட்டுத் துhங்குமாம்! ஆனா போது விடிஞ்சதுமே அது வாலைக் குழைச்சிண்டு பழைய புத்தியோட எச்ச இலைக்குத் தான் ஓடுமாம்!” என்று கங்கா சொல்லி முடித்ததும், கிருஷ்ணா, “போ பாட்டி! நான் ஒண்ணும் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்! சமர்த்தா இருப்பேன்! என்று ஓங்கிக் கத்தவே,”சரி, சரி நீ சமர்த்துத் தான்! இப்போ துhங்கு! என்று அவளை அணைத்து சமாதானப் படுத்தித் துhங்க வைத்தாள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ராஜாவும், கிருஷ்ணாவும் சட்டென்று துhங்கி விட்டனர். ஆனால் கங்காவிற்குத் துhக்கம் வரவில்லை. ஏதேதோ நினைவுகள் அவளைப் போட்டுப் புரட்டின. மாலையில் சாப்பிட்ட பஜ்ஜி அவளுக்கு இருந்த ரத்த அழுத்தத்தை ஏற்றி விட்டது. வயிற்றை ஏதோ சங்கடம் செய்தது. மெதுவாக எழுந்து பாத் ரூம் போய்வி;ட்டு வந்தாள். திரும்பி வரும் போது அவளுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. தலை சுற்றியது. நிலை தடுமாறிக் கதவில் நன்றாக இடித்துக் கொண்டு விட்டாள். கதவில் சத்தம் எழவே திடுக்கிட்டுக் கண் விழித்த ராஜா ஓடிப்போய்ப் பாட்டியைப் பிடித்துக் கொண்டான். “என்ன? என்ன?” என்று கேட்டான். கங்காவிற்கு ஒன்றுமே பேச முடியவில்லை. நெஞ்சை அடைப்பதுபோல் வலிக்க ஆரம்பிக்கவே, தனக்கு ஏதோ உடல் துன்பம் ஏற்பட்டுவிட்டது! சாதாரண நிலையில் தான் இல்லை! என்பதை அவள் உணர்ந்துகொண்டுவிட்டாள். ஐந்து நாட்களாகத்தான் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிடாததும் இன்று பஜ்ஜியை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டதும் நினைவுக்கு வந்தன.

‘ராஜா! டாக்டரை கூப்பிட்டுண்டு வரயா! எனக்கு என்னவோ பண்றது!” என்று கூறியபடி படுக்கையில் அமர்ந்தாள். அவளால் உட்கார முடியவில்லை. ராஜா ஓடிப்போய் சாந்தி மாமியையும், பக்கத்து வீட்டில் குடியிருந்த நர்ஸ் கலாவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தான். ஈசிசேரை எடுத்துப் போட்டான். மெதுவாக அதில் அமர்ந்த கங்கா சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் கணவனின் புகைப்படத்தைப் பார்த்தாள். “இன்னும் எத்தனை நாளுக்கு நான் இப்படியே அவஸ்தைப் பட்டுண்டு இருக்கணும்?” என்று அவள் கண்களால் அந்தப் படத்திடம் கேட்க, அவர் புகைப்படத்திலிருந்தபடியே புன்னகைத்தார். “அடி அசடே! என்னைத் தேடி வரும் காலம் நெருங்கிவிட்டதை நீ இன்னும் உணரவில்லையா?” என்று மௌனமாக அந்தப் புன்னகை உணர்த்தியது.

தாத்தாவின் படத்தையே அவள் பார்ப்பதைக் கண்ட ராஜாவிற்கு பயம் வந்துவிட்டது. அவன் சாந்தியிடம் சொல்லிவிட்டு, டாக்டரை அழைத்துவர சிட்டாகப் பறந்தான். அதற்குள் கங்காவிற்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சாந்தி தன் கணவனை எழுப்பி அழைத்து வந்தாள். இருப்புக் கொள்ளாமல் எழுந்து வந்து தன் படுக்கையில் உட்கார்ந்த கங்கா தன் பேத்தியை அங்கிருந்து நீக்கும்படி கைகளால் ஜாடை காட்டினாள். அதன்படி கிருஷ்ணாவைத் துhக்கிக் கொண்டு தங்கள் வீட்டில் படுக்க வைத்து விட்டு வந்தாள் சாந்தி. அதற்குள் நர்ஸ் கலா அவளுக்குப் பிரஷர் மாத்திரை கொடுத்துத் தைலம் தேய்த்துவிட்டுப் பதற்றமாகச் செயல்பட்டாள்.

ராஜா டாக்டருடன் வருவதற்குள் கங்காவிற்கு நெஞ்சுவலியும் படபடப்பும் வியர்வையும் அதிகமாகி விட்டது. கலா தனக்குத் தெரிந்த வைத்திய முதலுதவிகளைச் செய்து பார்த்தாள். இரவு பன்னிரெண்டு மணியாகிவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டிலிருந்த கங்காவின் அன்பிற்குரியவர்களெல்லாம் பாட்டிக்கு உடம்பு சரியி;ல்லை என்று தெரிந்து வந்து விட்டனர். ஒருவர் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சீதாவிற்குச் செய்தியைச் சொல்லி அழைத்து வரப் போய்விட்டார்.

கலாவிற்கு கங்காவின் பல்ஸ் குறைந்துகொண்டே போவது புலப்பட்டுவிட்டது. ஐயய்யோ! ஸ்ரீராமும் சக்தியும் ஊர்ல இல்லாத இந்த சமயத்திலே இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுவிட்டதே! என எல்லோரும் தவித்தனர். கங்கா “ஸ்ரீராமா! ஸ்ரீராமா!,” என்று நினைவிழந்து பிதற்ற ஆரம்பித்தாள். “சக்தி! சக்தி!” என்று அவள் வாய் குழறியது.

அப்பொழுது அவளருகில் எந்த உறவுமில்லை. ஊரார் மட்டுமே இருந்தனர். உடனே சட்டென்று சாந்தியின் கணவன் அவளை நெருங்கி, அவள் தலையை வருடி, அம்மா! இதோ நான் தான் ஸ்ரீராம் வந்திருக்கேன்! நானும் சக்தியும் வந்துட்டோம்! கண்ணைத் திறந்து பாரும்மா! இந்தத் துhத்தத்தைக் குடி!” என்று தன் மனைவி சாந்தி கொண்டு வந்து தந்த கங்கை தீர்த்தத்தை அவள் வாயில் புகட்டிவிட்டார். ஒரு மிடறு உள்ளே போயிற்று. அவ்வளவுதான். கங்காவின் உயிர்ப் பறவை “ஸ்ரீராம் வந்திருக்கேன்!” என்ற வார்த்தையைக் கேட்டபடி ஒரு வாய் கங்கை நீருடன், உடற்கூட்டை விட்டு நொடியில் பறந்துவிட்டது. நர்ஸான கலாவிற்கு, எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரிந்தாலும், ஒரு பெண்ணாக அவள் தொடர்ந்து கங்கா பாட்டியின் நெஞ்சைப் பிடித்து அமுக்கியும் தொடர்ந்து மார்பில் தனது கைகளால் மஸாஜ் செய்தும், குத்தியும், வாயில் வாயை வைத்து ஊதியும் நின்றுவிட்ட இதயத்தை இயங்கச் செய்யப் படாத பாடு பட்டாள்.

ராஜாவுடன் வந்த மருத்துவர் கங்காவின் நாடியையும், இதயத்தையும் பரிசோதித்துப் பார்த்து கங்கா என்னும் காவியம் முற்றுப் பெற்று விட்டதை அறிவிக்கும் வரை எல்லோரும் அவள் மீண்டும் எழ வேண்டும் என்றே துடித்தனர்.
“நான் வருவதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டது” என்று அவர் ராஜாவிடம் கூறியதும் எல்லோரும் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றனர். அடுத்த நொடி ராஜா “ஐயோ! அம்மா! நான் மாமாவுக்கும் அக்காவுக்கும் என்ன பதில் சொல்வேன்?” என்று தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு அலறி அழ ஆரம்பித்தான். நிலமையின் கொடுமையை உணர்ந்து எல்லோரும் ஒருசேர அழ ஆரம்பித்தனர்.

“அம்மாவிற்கு ஒண்ணும் ஆகியிருக்காது! வெங்கட்ரமண ஸ்வாமி நம்மைக் கைவிட மாட்டார்! அம்மா சௌகரியமாக எழுந்து உக்கார்ந்திருப்பா! ராஜாதான் கூட இருக்கானே! டாக்டரை உடனே கூட்டிண்டு வந்திருப்பான். கலாவும் இருப்பாளே!” என்றெல்லாம் புலம்பிக்கொண்டும், மன்றாடிக்கொண்டும் ஸ்கூட்டரிலேயே செய்தி சொன்னவருடன் புறப்பட்டு வந்த சீதா, வீட்டு வாசலில் இறங்கியதும் அழுகைச் சத்தம் வெளிப்பட்டதைக் கவனித்துத் துவண்டு போன காலை நகர்த்த முடியாமல் திகைத்து நின்றாள். “அந்த அசடு ரெண்டும் இங்கே இல்லாத நேரத்தில இப்படி ஒரு கொடுமை நடந்துடுத்தே! அவா இருந்தா அம்மாவோட உயிரைப் பறிக்க முடியாதுன்னு தான் யமன் அவாளை இப்படி ஊருக்குத் துரத்தினானா?” என்று அவள் வாய் அலறியது.

Advertisements

கங்கா ஒரு காவியம் – 15

எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை – இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவிடும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.

எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் வரிகள்! வாழ்க்கையின் போக்கையும், அதன் புனிதத்தையும் மனிதன் புரிந்துகொண்டு விட்டால் இந்தப் போராட்டங்களும் பிரச்னைகளும் ஏற்படுமா? மாறாக அவனுக்குக் கிடைப்பது அமைதியும் ஆனந்தமும் அல்லவா? ஆனால் எத்தனை பேர் இதைப் புரிந்துகொண்டு வாழ்கின்றனர்! எடுத்துள்ள பிறவியைத் தன் குடும்ப நன்மைக்காகவும் சமுதாய நன்மைக்காகவும், பயன்படுத்துபவர் எத்தனை பேர்?எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் வரிகள்! வாழ்க்கையின் போக்கையும், அதன் புனிதத்தையும் மனிதன் புரிந்துகொண்டு விட்டால் இந்தப் போராட்டங்களும் பிரச்னைகளும் ஏற்படுமா? மாறாக அவனுக்குக் கிடைப்பது அமைதியும் ஆனந்தமும் அல்லவா? ஆனால் எத்தனை பேர் இதைப் புரிந்துகொண்டு வாழ்கின்றனர்! எடுத்துள்ள பிறவியைத் தன் குடும்ப நன்மைக்காகவும் சமுதாய நன்மைக்காகவும், பயன்படுத்துபவர் எத்தனை பேர்?
இறைவன் அன்பையும் கருணையையும் தியாகத்தையும் பொறுமையையும் ஒன்றாகக் குழைத்தெடுத்துத் தான் பெண்ணைப் படைத்தான். அப்படிப் பட்ட பெண்களின் வழி நடத்துதலில் செயல்படும் குடும்பங்கள் ஒற்றுமையையும் உயர்வையும் தான் கண்டிருக்கின்றன.  இது வரலாறு காட்டும் உண்மை. பள்ளிப் படிப்பே இல்லாத நிலையிலும், நம் நாட்டுப் பெண்கள் பண்பாட்டுக் கலாச்சார வாழ்க்கைக் கல்வியை வழி வழியாகத் தமது தாய் மூலம் கற்றுக்கொண்டு அந்தப் பாரம்பரியப் பெருமை கெடாத  வண்ணம் தமது குடும்பத்தை நடத்திச் சென்றிருக்கின்றனர். அவர்கள் தங்களின் சகல சுகங்களையும் குடும்ப நன்மைக்காகத் தியாகம் செய்து வாழ்ந்தனர். அவர்கள் எடுத்த முடிவுகள் தர்மத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இதனால் கட்டுக்கோப்பு குலையாமல் வாழ்க்கை சென்றது. ஆனால் கால மாற்றத்தால் இந்த அமைப்பு சீர் கெட்டுப் போய்விட்டது. பி;ள்ளைகள் சொல்பவர்களாகவும், பெற்றோர் அவர்களைக் கேட்டு நடப்பவர்களாகவும் ஆகி விட்ட சூழ்நிலை எப்பொழுது ஏற்பட்டதோ, அப்பொழுதே குடும்பப் பெண்களின் மனப்பான்மையிலும் மாற்றம் ஏற்படத்துவங்கி விட்டது. இன்றைய பெண்கள் தாங்கள் மிகக் கஷ்டப்படுவதாக மட்டும் தான் நினைத்து மாய்ந்து போகிறார்களே தவிர, தங்களின் கடமை என்ன? தாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. தனது குடும்ப உயர்விற்காகத் தன் சுய நலத்தை எந்தப் பெண் தியாகம் செய்து மனப்பூர;வமாகச் செயல்படுகிறாளோ, அவளது வாழ்க்கை மிக உயர்ந்த விதத்தில் போற்றத் தக்கதாகவே அமையும். அவளது அன்பும் தியாகமும் என்றாவது ஒரு நாள் குடும்பத்தினரால் நிச்சயம் உணரப்படும்.  கங்கா படிக்காதவள். மிக மிக ஏழ்மையான ஒரு குடும்பச் சூழ்நிலையிலிருந்து வாழ்க்கையைத் துவங்கியவள். கடின உழைப்பில் தான் கணவனுக்கு சளைத்தவளில்லை என்று அவள் நிரூபித்துப் பாடுபட்டாள். தன் கணவனின் சுகதுக்கங்கள் அனைத்திற்கும் ஈடுகொடுத்து நின்றாள்.  ஆனால் அவளுக்குப் புத்திரர்களால் சுகமில்லை.  அளவில்லாமல் பிள்ளைகளைப் பெற்றெடுத்தும், அவர்களையெல்லாம் பிஞ்சாகவும், காயாகவும், மலராகவும் மண்ணிற்குத் தானம் கொடுக்கும் விதத்தில் அவளது கர்மா அமைந்திருந்தது. உயிரோடு இருந்து வளர்ந்த பிள்ளைகளும் அவளுக்குப் பயன்படவில்லை. அவரவர; போக்கிலும் குண இயல்புகளிலும் தான் அவர்கள் வாழ்ந்தார்கள். இதில் இரண்டு பேர் நல்ல நட்பும் நல்ல பண்புகளும் அமையாமல் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டுவிட்டதோடு குடும்ப கௌரவத்தையும் குலைத்தனர். குமரேசனின் பிள்ளைகளா இப்படி! என்று ஊரார் பேசுகின்ற அளவிற்கு அவர்களின் நிலை தாழ்ந்தது.  மூத்தவன் ராமேஸ்வரன் தன் மனைவியின் குணச் சிறப்பால் தனது குடும்பத்தை நல்ல விதமாகக் கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் அவன் மனைவியின் வீட்டாரோடு ஐக்கியமாகி விட்டானே தவிரத் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
கடைசி மகன் ஸ்ரீராம் தான் தன் தாய்க்கு மன நிறைவை அளித்துக் குடும்ப உறவினர் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணத்தைக் கொண்டிருந்தான். இதற்கு பின் பலமாக இருந்தவள் அவனது மனைவி சக்தி. அவள் தன் பாட்டியும் மாமியாருமான கங்காவின் கண்ணசைவில் செயல்படும் தன்மை பெற்றிருந்தாள். கங்காதான் அவளை வாழவைத்த தெய்வம் என்று அவளது வார்த்தைகளை வேத வாக்காகக் கொண்டு வாழ்ந்தாள். அடுத்து அவளது தாயான சீதாவும் அவளது குடும்பமும் எல்லாமே எங்களுக்குக் கங்கா பாட்டிதான் என்ற நிலையில் வாழ்ந்தனர். அப்பா பெண் என்று பெயரெடுத்த கங்காவின் இரண்டாவது பெண் கமலா தன் கணவனின் கெடுபிடிகளுக்குக் கடடுப்பட்டுப் பிறந்தகத்திற்கு வருவதே இல்லை. அப்படியே வந்தாலும் அவளுக்குக் குறைகள் தான் அதிகமிருந்தன. ஏனோ விதி அவளையும் தாயையும் ஒரு தொலைவிலேயே இருக்கும்படி நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்தது.
கங்காவின் மூன்றாவது பெண்ணான கல்யாணியோ இளம் வயதிலேயே தனது மூன்று குழந்தைகளையும் தன் கணவனையும் தன் தாயிடமே ஒப்படைத்து விட்டுக் கண்ணை மூடிவிட்டாள். அவளது குடும்பம் ஸ்ரீராம் சக்தியோடு சேர்ந்து கங்காவின் நிழலில் தான் வாழ்ந்து வந்தது. மாப்பிள்ளை வைத்தியநாதன் கங்காவைத் தன் தாயாகவே மதித்துப் போற்றி அக்குடும்பத்தில் ஓர் அங்கமாக, ஸ்ரீராம் சக்தி இருவருக்கும்  ஆசானாகக் கூடவே இருந்து உதவி செய்து ஒரு கர்ம யோகியாக வாழ்ந்தார்.
கங்காவின் வாழ்க்கையின் இறுதிச் சுற்று வந்துவிட்டபடியால் இப்படி ஒரு சுருக்கமாக அவளது குடும்ப நிலவரத்தைப் பார்க்க வேண்டி வந்தது. இப்போது கங்காவிற்கு உயிரும் உணர்வுமாய் இருந்தவர்களை விதி பிரித்துக் காரைக்காலில் கொண்டு போய் விட்டு; விட்டது. தர்மத்தின் ராஜனல்லவா கால தேவன்! அவன் கணந்தோறும் கணந்தோறும் போடுகின்ற தர்மக் கணக்கல்லவா நமது வாழ்க்கையின் வரவும், செலவும், கையிருப்பும்.

கங்கா ஒரு காவியம் – 14

காலம் காரியவாதியாகக் கன வேகமாகச் சுழன்று கொண்டே இருந்தது. இப்போது கங்கா மேலும் முதுமையடைந்துவிட்ட நிலை. தனது முதிய வயதிலும் கங்கா சுறுசுறுப்பும், கலகலப்பான பேச்சும், ஓடிச்சென்று உதவும் குணம் கொண்டவளாகவும் திகழ்ந்தாள். அலுப்பு சலிப்பில்லாமல் தன் வேலைகளையெல்லாம் அவள் தானே செய்துகொண்டாள். கரும்பைச் சுற்றி மொய்க்கும் எறும்புகளின் கூட்டம் போல் தெருவினரும், அக்கம் பக்கத்தவரும், அவளைச் சுற்றி எப்பொழுதும் இருந்தனர். பாட்டி..பாட்டி என்று அனைவரும் பாசத்துடன் பழகினர். அந்தக் குடும்ப நிர;வாகம் அவள் கண்காணிப்பில் தான் நடந்தது. ஸ்ரீராமும் சக்தியும் அவளின் விருப்பப்படியே அனைத்தையும் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோயம்புத்துhரில் வாழ்ந்து வந்த சீதாவின் குடும்பமும் பாண்டிச்சேரிக்கு வந்து விட்டது. வாழ்நாள் முழுவதும் தன் தாயின் நிழலிலேயே தன் குடும்பத்தைக் கொண்டு சென்ற சீதா, தாயின் முதுமைக் காலத்தில் அவளருகிலேயே தன் மகன்கள், மருமகள்களுடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டும், தேவையான உதவிகளைச் செய்து கொண்டும் இருந்தாள். கல்யாணியின் குடும்பம் விழுப்புரத்தில் வசித்தது. சீதாவின் பிள்ளைகள் தங்கள் கங்கா பாட்டியின் மீது உயிராக இருந்தனர். எந்த ஒரு காரியத்தைச் செய்யத் துவங்கும் முன்பும் வந்து பாட்டியின் நல் ஆசிகளைப் பெற்றுக்கொண்டு செல்வார்கள். எல்லோருக்கும் வழிகாட்டியாய், நிர்வாகியாய், குல தெய்வமாய்க் கங்கா இருந்தாள்.

ஒரு நாள்…….ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கங்கா, சக்தியைக் கூப்பிட்டாள். “நாம திரும்பவும் காரைக்காலுக்கு, நம்ம ஆத்துக்கே போயிடலாம்னு எனக்குத் தோணறது. எத்தனை நாளைக்கு வாடகை வீட்டிலேயே இருக்கிறது?, நமக்குன்னு சொந்த வீடு கடலாட்டமா இருக்கறச்சே, அங்கேயே வேலையை மாத்திண்டு போலாமே! எனக்கு என்னமோ கைலாசநாதர், சுந்தராம்பா, நித்தியக் கல்யாணப் பெருமாள் சன்னதிகளைத் தரிசிச்சிண்டு கொஞ்ச காலமாவது, நம்மாத்திலே போய் நம்ம குழந்தைகளோட நிம்மதியா வாழணும் போல இருக்கு!” என்றாள். சக்தியும், “மன நி;ம்மதியில்லாம நீங்க அந்த ஆத்தை விட்டு வந்தேளம்மா! கொஞ்ச காலமாவது நீங்க நிறைவா அங்கே இருந்தா எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்! மதிப்பிழந்து போன அந்தத் தெருவிலே திரும்பவும் நாம நம்ம குடும்பத்தோட போய் வாழ்ந்தாத்தான் அந்த மதிப்பு நமக்குத் திரும்பக் கிடைக்கும்!” என்று பதில் சொன்னாள்.
ஸ்ரீராம் அலுவலகம் விட்டு மாலை வீடு திரும்பியதும் கங்கா அவனிடம் தன் ஆசையையும், தனது திட்டத்தையும் கூறினாள். “இதோ பாருப்பா! வர பொங்கல் லீவிலே காரைக்கால் வீட்டைப் பழுது பார்த்து சரி பண்ணிப் புதுசாப் பெயிண்ட் அடிக்கணும். கொல்லையிலே பாம்பே கக்கூஸ் கட்டி ஒரு பாத் ரூம் கட்டணும். பழைய காலம் மாதிரியெல்லாம் இப்பத்தைய குழந்தைகள் பழகாதுகள். அவா சௌகரியத்துக்கு எல்லாம் மாத்திக் கட்டணும்! நீயும் சக்தியும் புறப்பட்டுப்போய் எல்லா வேலையையும் கிட்ட நின்னு பார்த்து முடிச்சுட்டு வாங்கோ! அதுக்கு நடுவில ஆபீஸில சொல்லி வேலையைக் காரைக்காலுக்கு மாத்திணுடுங்கோ!” என்று அவள் சர்வ திட்டமாகக் கூறினாள்.

அன்றிருந்த சூழ்நிலையும், வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டிய நிர்பந்தமும், அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமும், வந்து சேர்ந்த விடுமுறையும், அவர்களை அங்கிருந்து கிளப்பின. அம்மா தனியாக இருப்பாளே என்ற கவலையில் அவளை ராஜாஜி நகரில், சீதா ஆத்தில் போய் விட்டு விடுவதாகவும், தாங்கள் போகிப் பண்டிகைக்கு அங்கு வந்து விடுவதாகவும் இருவரும் கூறினர். ஆனால் கங்காவோ தனக்கு அங்கு செல்ல விருப்பமில்லையென்றும், இங்கேயே தான் இருக்கப் போவதாகவும் பொங்கலை இங்கேயே கொண்டாடலாம் என்றும் கூறிப் போக மறுத்து விட்டாள். “என்னைச் சுற்றி நிறைய மனுஷா இருக்கா! எனக்கென்ன பயம்! ஒண்ணும் ஆகாது! நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்கோ!” என்றும் தைரியம் கூறினாள்.

அதன்படி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீராமும் சக்தியும் உரிய ஏற்பாடுகளுடன் காரைக்குப் புறப்பட்டனர். புறப்படும்பொழுது நால்வரும் கங்காவை நமஸ்கரித்து ஆசி பெற்றனர் கங்கா வழக்கம்போல் ஒவ்வொருவருக்கும் ஓர் அறிவுரை கூறி நெற்றியில் விபூதி இட்டு வாழ்த்தினாள். பிறகு ஸ்வாமி அலமாரியில் தட்டில் வைத்திருந்த பணக்கட்டை எடுத்து ஸ்ரீராமிடம் கொடுத்து, “ஜாக்கிரதை! பொறுப்பா நடந்துக்கோ, உன்னை நம்பித்தான் நானும் இவளும் இருக்கோம்! அதை நீ மறந்துடாதே!” என்று உணர்ச்சியுடன் கூறினாள்.

நால்வரும் பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். கங்கா வாசலில் நின்றுகொண்டு முகங்கொள்ளாச் சிரிப்புடன் வலது கரத்தை உயர்த்தி அசைத்துக் காட்டி விடை கொடுத்தாள். ரிக்ஷாவில் குழந்தைகளுடன் ஏறி அமர்ந்து புறப்பட்ட பின்பும் நால்வரும் அம்மாவை நோக்கி டா..டா..காட்டியவாறே சென்றனர். தெரு திரும்பி ரிக்ஷா செல்லும்போது, ஏனோ சட்டென்று அவர்கள் மனதில் ஒரு சஞ்சலமும் சங்கடமும் ஏற்பட்டது. ஸ்ரீராம் சக்தியிடம் “என்னவோ போல இருக்கு இல்லே?” என்றான். சக்தியும் “எனக்கும் ஏதோ சங்கடமாய்த்தான் இருக்கு! திரும்பிப் போயிடலாமா? இன்னொரு நாளைக்கு ஊருக்குப் போகலாமே!” என்றாள். “வேண்டாம்! புறப்பட்டாச்சு! திரும்பிப் போனா நன்னா இருக்காது! அங்கேயும் வேலைக்குக் கொத்தனாரையெல்லாம் முரளி ஏற்பாடு செய்திருப்பான். நாம போகாட்டா சரிப்படாது., போயிட்டே வந்துடுவோம்!” என்று ஸ்ரீராம் சொன்னான்.

“பாட்டி நம்ம கூட வர்லியா?” என்று கிருஷ்ணா கேட்டாள். “இல்லடி கண்ணு! நாம இப்பப்போய் நம்ம தாத்தா பாட்டி ஆத்தை நன்னா ரிப்பேர் பண்ணிப் புதுசா ஆக்கிட்டு வந்திடுவோம். அப்புறம் பெரிய லீவுக்கு நாம எல்லாரும் பாட்டியைக் கூட்டிண்டு அந்தாத்துக்கே போயிடுவோம்.!” என்று சக்தி அவளுக்குப் பதில் கூறினாள். பயணம் தொடா்ந்தது.