மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 44


15. சமநிலை சித்தம்:

சாதகர் கடைப்பிடிக்க வேண்டிய அடுத்த தகுதியாக ஸ்ரீ கிருஷ்ணர் சமநிலை சித்தத்தைக் குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நமக்கு அனுகூலமாகவும் சில நிகழ்வுகள் எதிரிடையாகவும் முரண்பட்டு வருகின்றபோது, இரு நிலையிலும் சித்தத்தை சமநிலையில் வைத்திருக்கத் தெரிய வேண்டும். பிரசாத புத்தியுடன் ஏற்கத் தெரிய வேண்டும். நல்லது வந்தாலும், பொல்லாது வந்தாலும் எல்லாம் அவன் செயல் என்றே கவலையின்றி இருக்கப் பழக வேண்டும்.

உணர்ச்சிவசப்படுகின்றபோது பதட்டமும், நிலை குலைவும், சமநிலை தவறுதலும் மிகச் சாதாரணமாக ஏற்படும். ஆனால் தலை போகிற விஷயமானாலும் அல்லது நம்பவே முடியாத அதிசயம் என்றாலும் துள்ளிக் குதிக்காமல், அல்லது துவண்டு விழுந்து விடாமல், வருபவற்றை எதிர்த்து நிற்காமல் மனதையும், புத்தியையும் சமநிலையில் வைத்துக்கொண்டு, வருவதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

அப்படி வருபவற்றை எப்படிக் கையாள வேண்டுமோ அந்த விதத்தில் தர்ம நெறிப்படி தீர்க்கமாகக் கையாளத் தெரிய வேண்டும். விரும்பியவையும், விரும்பாதவையும் நமக்கு ஏற்படுகின்றபோது சம சித்தம் கொண்டு ஏற்றல் என்பது சாதாரணமாகச் செய்ய இயலாத உயர் பண்பு. இதற்கு மிகுந்த ஞானமும், மெய்யறிவு அனுபவமும், பொறுமையும், ஆடாத மன உறுதியும், பாதிப்படையாத தன்மையும் வர வேண்டும்.

விரும்புபவை வரும்போது மகிழ்ச்சியும், விரும்பாதவை வருகின்றபோது வெறுப்பும், துயரமும், சோர்வும் ஏற்படுவது தான் மனித இயல்பு. இந்த இயல்பை மாற்றி, எது வரினும் சரியே! என்று ஏற்றுக்கொள்ளப் பழகுவதே சம சித்தம். இந்த உலகில் நடப்பவை எல்லாம் இயற்கையின் படைப்பு நியதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொண்ட தெளிவான அறிவு தான் சமசித்தம். நம் விருப்பப்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் ஈஸ்வர சித்தப்படியே எல்லாம் நடக்கின்றன என்று ஏற்றுக்கொள்கின்ற தன்மையே சமசித்தம்.

16. யோகம்

யோகம் என்பது நமக்குள் உயிராக இருக்கின்ற பரம்பொருளுடன் நம்மை இணைத்துக்கொண்ட நிலையில், நம்மை அதுவாக உணர்ந்து வாழ்வது ஆகும். வெளி உலகத் தொடர்புகளை மனதளவில் துறந்தால் தான் ஆத்மாவோடு இணைய முடியும். வெளி உலகப் பற்றுகளை உள்ளத்தால் துறப்பது சந்நியாசம். ஆத்மாவோடு உள்ளத்தால் இணைந்துகொண்ட நிலையில் வெளி விவகாரங்களைப் பற்றில்லாமல் செய்தல் யோகம். நான் அல்லாதவற்றை விட்டு விலகி நானாகிய என்னுடன் இருத்தலே யோகம்.

இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர், “என்னிடம் சஞ்சலமில்லாத தூய பக்திகொண்டிருத்தல், அதே சமயம் உலகியல் வாழ்வில் பற்றற்று வாழ்தல் என்பதே யோகமாகும்” என்றுரைக்கின்றார். இதையே அவர் பக்தி யோகத்தில், எவர் என்னுடன் மிக்க ஈடுபாடு கொண்டு என்னையே போற்றிப் பணிந்து ஆராதித்து இருக்கிறார்களோ, என்னிலேயே லயித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அத்தகைய பக்தர்கள் எனக்குப் பிரியமானவர்கள்’ என்று கூறியிருக்கின்றார்.

நம்மை அவனில் கரைத்துவிடுவதே உண்மையான பக்தி. இத்தகைய பக்தி என்னும் அபரிதமான அன்பினால் தான் நம்மால் அவனை அடைய முடியும். இந்த இடத்தில் உத்தமமான பக்தர்களின் கதைகளை நாம் சிந்திக்க வேண்டும்.

17. தனிமையை விரும்புதல்:

beingaloneசாதாரண வாழ்க்கையில் தனிமை வெறுக்கும். தனிமையில் விடப்படுபவர்கள் சும்மா இருக்க முடியாமல் ஏதாவது ஒன்றைச் செய்தால் பரவாயில்லையென்று தொலைக்காட்சியை நாடுதல், வானொலியைத் திருகுதல், யாருக்காவது போன் செய்து பேசுதல், அல்லது வீட்டைச் சுத்தப்படுத்த முற்படுதல், அல்லது ஏதாவது பழைய கதைகளை நினைத்து மனதைச் சோகமயமாக்குதல் என்று எதை எதையோ செய்து இருக்கின்ற நிம்மதியை இழக்கின்றார்கள். ஒன்றிலும் ஈடுபட முடியாமற் போனாலும் உடனே போய்ப் படுத்துத் தூங்கிவிடுவார்கள். போரடிக்கிறது. தூக்கம் வருகிறது என்று சோர்வுடன் புலம்பத் துவங்கிவிடுவார்கள்.

ஆனால் ஆன்மீக சாதகர்கள் தனிமையில் இனிமை காணப் பழக வேண்டும். தனிமையில் தான் நாம் நாமாக இருக்கிறோம். எந்தவிதப் பாத்திரமாகவும் நடிக்காத நிலையில், நான் பிரம்மம் என்கிற ஒரே சிந்தனையுடன், அந்த உணர்வில் தோய்ந்து அதில் கிடைக்கின்ற நிறைவை அனுபவிக்கத் தெரிய வேண்டும். இப்படி நம் புலன்களிலிருந்து விடுபட்டு, சமநிலையில், அமைதியாக ஆத்மாவுடன் இணைந்திருந்தால் அந்தத் தனிமை நிறைவைத் தரும். சமம் (மனச்சமநிலை) தமம் (புலனடக்கம்) போன்ற பயிற்சிகள் நம்மிடம் இல்லையெனில் தனிமையில் ஆத்ம சுகத்தை அனுபவிக்க முடியாது.

தனிமையில் இருக்கின்றபோது குடும்ப விஷயங்களைப் பற்றியோ, வருங்காலத் திட்டங்கள் பற்றியோ எதையாவது யோசித்துக்கொண்டு சும்மா இருப்பது என்பது பிழை. எதையுமே யோசிக்காமல் உடலையும், மனதையும், புத்தியையும் மௌனத்தால் துறந்து, தன்னிலே தான் கலந்து கரைந்து போகின்ற நிலையே தனித்து இருப்பதன் சிறப்பு. தன்னை மறந்து தன்னில் தோய்ந்து இருத்தல் என்று சொன்னால் புரியுமா?

18. ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை

அடுத்த அம்சமாக ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுவதும் தனிமையைப் பழகுகின்ற பயிற்சியின் தொடர்ச்சியே எனலாம். இது 18வது அம்சம். மக்கள் கூட்டத்தில் கலந்து உறவாடும் விருப்பமோ, ஆh;வமோ இல்லாதிருத்தல். அதாவது ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை. சாதகர் தன்னைப் பற்றி மதிப்பீடு செய்வதற்குத் தனிமை தேவை. தனியாய் இருப்பது கூட யோகம் தான். “இனிது இனிது ஏகாந்தம் இனிது!” என்றார் ஔவையார்.

நம்முடைய குறைபாடுகளைப் பற்றிச் சிந்தித்து, நம்மை நாமே திருத்திக்கொள்ளத் தனிமைதான் உதவுகின்றது. ஆன்ம நாட்டம் கொண்டவர்கள் கூட்டத்தில் இருந்தால் கூடத் தமது அமைதித் தன்மையால் ஆரவார ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி மௌனமாகத் தனித்து இருப்பார்கள். அவர்களிடம் தம்மை வெளிப்படுத்தும் ஆர்வம் எழாது. இப்படிப்பட்டவர்கள் ஆட்டம், பாட்டம். கொண்டாட்டம், கூட்டங்கள் போன்ற ஆரவாரம் மிகுந்த இடங்களுக்குப் போக விரும்ப மாட்டார்கள். கூச்சலும் சப்தமும் பரபரப்பும் இவர்களுக்குப் பிடிக்காது.

எப்படி ஒரு விஞ்ஞானி தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு சோதனைச் சாலையில் ஒரே சிந்தனையாகத் தன் ஆய்வுப் பொருளை உற்றுப் பார்த்து ஆராய்ந்து அதிலிருந்து வெளிப்படுகின்ற உண்மைகளைத் தெரிந்து கொள்கிறாரோ, அதுபோல ஆன்ம சாதகர்கள் தனிமையிலமர்ந்து தன்னையே அகமுகமாக உற்றுப் பார்த்து அகத்திலுள்ள மெய்ப் பொருளைத், தான் என்று அறிய வேண்டும்.

தனித்து இருப்பதன் நோக்கம் இது தான். தன்னையே தான் அறியத் தனிமை உதவ வேண்டும். இந்த ஏகாந்தத்திற்குப் புற அமைதி மிக அவசியம். கூட்டம் பிடிக்காது என்றோ அல்லது வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காகவோ ஏதோ ஓர் இடத்திற்குத் தனிமை நாடி ஓடிப்போவது தனிமையல்ல. அது தப்பியோடுதல். இருக்கும் இடத்திலேயே தனிமையை ஏற்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

ஆத்ம சாதகர்கள் தன்னிலிருந்து பிரச்னைகளை ஒதுக்கித் தன்னிலிருந்து தன்னை வேறாகப் பார்த்துத் தனது பிரச்னைகளுடன் தனக்குள்ள உறவை ஆராய வேண்டியது அவசியம். நாம் தனிமையிலிருக்கப் பயப்படக்கூடாது. தனிமை தான் என்னை நான் அடைய வைக்கும்.

19.ஆத்ம சாதனையில் எப்பொழுதும் நாட்டம் :

ஆத்ம சாதனையில் எப்பொழுதும் நாட்டம் என்பது தெய்வீகப் பண்பின் அடுத்த அம்சம். வெளி வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும், எந்த நிலை என்றாலும் நம் கவனமும், விருப்பமும் ஆத்மாவிலேயே தோய்ந்திருக்க வேண்டும். நடப்பவை எதனோடும் சம்பந்தப்படாத ஆத்மாவே நான் என்ற எண்ணத்தில் தோய்ந்த நிலையிலேயே நாம் வெளிப்படுகின்றபோது, அந்தப் புற வாழ்வில் ஏற்படுகின்ற இரட்டைகள் நம்மில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எதுவும் நடக்கலாம். ஆனால் அவற்றால் நிலை குலையாமல், இதுவும் கடந்து போகும் என்ற திட சித்தத்துடன் ஏற்கின்ற பக்குவம், ஆத்மாவில் நிலைத்திருத்தல் என்ற உயர் அம்சமாக நம்மில் ஏற்பட்டு வளர வேண்டும். நான் ஆத்மா என்ற இந்த ஒரே சிந்தனையை நம்முள் நிலை நிறுத்துகின்ற முயற்சிதான் தியானப் பயிற்சி. இதுதான் நிறைந்த அறிவு. பல சிந்தனைகளை எழவிடாமல் தடுத்து நீக்கி ஒரே எண்ணமாக அஹம் பிரம்மாஸ்மி என்ற எண்ணத்தைத் தொடர்ந்து நாம் தியானிக்கத் தியானிக்கத் தானாகவே இறையருளின் உதவியால் நம் மனம் செயலிழந்து போகின்ற நிலை ஏற்படும்.

இப்படிப் பரமாத்மாவின் நிலைப்பாட்டைத் தினமும் இடைவிடாமல் சிந்தித்துப் பதிய வைப்பதன் மூலம், எல்லா இடங்களிலும், எல்லா ஜீவராசிகளிடமும் பரமாத்மாவைப் பார்க்கவும், உணரவும் செய்கின்ற மேலான உயர் உணர்வு நிலை நம்மில் உருவாகும். உலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் பிரம்மத்தைக் காணுதல் என்னும் இந்த உயர் பண்பு தான் ஆன்மீக சாதனையின் நாட்டம் என்பது.

Advertisements