மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -31

விபூதி யோகம் – அத்தியாயம் 10

விபூதி என்ற சொல்லுக்கு இறைவனுடைய மகிமை என்று பொருள். விபூதி என்றால் திருநீறு என்று தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். இறைவனுடைய வெளிப்பாடுகளை, ஒன்றேயான அவரின் பல்வேறு தோற்றச் சிறப்புக்களையே விபூதி என்ற சொல்லால் குறிக்கின்றனர். கோவிலில் அளிக்கப்படுகின்ற இறைப் பிரசாதமான விபூதியை இறை ஆற்றலின் வெளிப்பாடாக, அவரிடமிருந்து பெறப்படுகின்ற அருளாக நமது நெற்றியில் அதைப் பூசிக்கொள்கிறோம் என்றும் நாம் இனி இதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

“பல்வேறு தோற்றங்களைக் கொண்டதாக என் கண்களுக்கு இந்த உலகம் காட்சியளிக்கின்றபோது, கிருஷ்ணா! நீங்கள், இவை எல்லாமே நான் தான்! என்று சொல்கிறீர்களே. இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே!”-என்று அர்ச்சுனன் இன்னமும் தன் மனதிற்குப் புலப்படாத சந்தேகத்தைக் கண்ணன் முன் வைக்கிறான். இந்தக் கேள்விக்குப் பதிலாகத் தான் இந்த முழு அத்தியாயமும் அமைந்திருக்கின்றது. பார்க்கின்ற அனைத்துமே பிரம்ம சொரூபம் என்ற ஞானத்தை நாம் பழகுவதற்கு, நம் மனதில் இதைப் பதிய வைப்பதற்கு இந்த அத்தியாயம் அற்புத விளக்கமாக அமைந்திருக்கிறது.

“அர்ச்சுனா! நானே உலகம் முழுவதற்கும் மூல காரணம். இதை முழுவதுமாக தேவதைகளோ, மகரிஷிகளோ கூட அறிவதில்லை. காரணம், நான் எல்லா விதத்திலும் அந்தத் தேவதைகளுக்கும் மகரிஷிகளுக்கும் ஆதி முதல்வன். என்னிடமிருந்துதான் அகில உலகமும் செயற்படுகிறது. இதை ஒருவன் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இந்தப் பேருண்மையைத் திடமாக நம்பி, என்னிடம் பேரன்பும், பரம பக்தியும் கொண்டு என்னை ஆராதித்து வருபவர்கள் தான் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டவர்களான ஞானிகள். அவர்கள் என்னிடம் எப்போதும் ஈடுபட்டிருந்து என்னைப் போற்றிப் பக்தி செலுத்துவதால் அவர்களுக்கு நான் சமத்துவ உணர்வுள்ள புத்தியோகத்தை அளிக்கின்றேன். சம நோக்கு கைவரப்பெற்ற அவர்கள் என்னை அடைகின்றனர்.”

அதாவது கர்மாவால் இயங்குகின்ற வக்கிரபுத்தி நீங்கி, ஆத்மாவின் ஒளியில் செயல்படுகின்ற தெய்வீக புத்தியாக, அவன் அருளைப் பெறுவதே புத்தியோகம் எனப்படுவது. இந்த இடத்தில் கண்ணபெருமான் தான் சாதாரண மானிட உருவில் அர்ச்சுனனுக்கு முன்னால் நின்று வேத தத்துவத்தை எடுத்துரைப்பவராக அவன் கண்களுக்குத் தெரிந்தாலும், உண்மையில் அவர், தான் சர்வ வியாபியான பரமாத்மப் பரப்பிரம்மமே ஆகும் என்பதைத் தௌ;ளத் தெளிவாக எடுத்துக் கூறிவிடுகின்றார்.

கடந்த ஒன்பது அத்தியாயங்களாகச் சிறுகச் சிறுகத் தனது உண்மைத் தன்மையைச் சொல்லிக்கொண்டே வந்த கண்ணன் இப்போது வரையறைக்குட்பட்ட ஜீவனான அர்ச்சுனனிடம், “இங்கு உன் கண்களுக்கு முன்னால் தெரிகின்ற எல்லாமே நான் தான்! ஆதி காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்ற சகல ஜீவராசிகளும், படைப்புக்கள் அத்தனையும் என்னிலிருந்து பிறந்தவைகளே! நானே அவற்றின் உள் சக்தியாக இருந்து அனைத்தையும் இயக்குகின்றேன்!” என்று தன் இருப்பு நிலையை விளக்குகின்றார்.

அர்ச்சுனனுக்கு மனம் தெளிவடைகின்றது. இது வரை அவரைத் தன் நண்பனாக, உறவினராக, தேரோட்டியாகப் பார்த்துப் பிறகு குருவாகப் புரிந்துகொண்டு பணிந்த அர்ச்சுனன், இப்பொழுது அவரைத் தெய்வமாக உணர்ந்ததும் அப்படியே உருகிப் போகின்றான். இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணரின் உயர்வு, அவரது சத்தியத் தோற்றத்தின் பரிமாணம் அவனுக்குப் புலப்படுகின்றது.

ஏற்கனவே கண்ணனின் உள்ளங் கவர்ந்தவனாகத் திகழ்ந்த அர்ச்சுனன், இப்போது ஆதிமுதல்வனாகவே அவரை தரிசித்து, அடிபணிந்து, உருகிக் கரைந்து விட்ட நிலையில் அவரது பெருமைகளை உள்ளது உள்ளபடி உரைக்குமாறு அவரிடமே விண்ணப்பிக்கிறான். அப்பெருமைகளை அப்படி அவர் சொல்ல, அதைத் தான் கேட்பது தனக்குத் திகட்டாத அமுதமாக இருப்பதாக பக்தியுடன் உரைக்கின்றான்.

என் விபூதிகளைப்பற்றி அறிந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? என்று வினவிய கிருஷ்ணரிடம், அர்ச்சுனன், “எப்போதும் பலவகை சிந்தனைகளில் மூழ்கித் தவிக்கும் நான், தானாகவே தங்களை எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? உங்களது பெருமைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகாவது அவற்றைத் திரும்பத் திரும்ப நினைத்து அனுபவிக்க முடியும் அல்லவா! ஆகவே சொல்லுங்கள்!” என்று கேட்டுக்கொள்கிறான்.

தேவர்களாலும், மனுக்களாலும், மகரிஷிகளாலுமே பூரணமாக உணர முடியாததாகிய பரப்பிரம்மத்தின் தன்மையும் சிறப்பும், அந்தப் பரப்பிரம்மான ஸ்ரீ கிருஷ்ணராலேயே எடுத்துரைக்கப்படுகின்றது. அதுவே விபூதி யோகமாயிற்று.

“அப்படியானால் சரி, அர்ச்சுனா! என்னுடைய மகிமையை, எனது சக்தியை, என் வியாபகத் தன்மையைக் கேள்!” என்று ஸ்ரீ கிருஷ்ணர் துவங்குகிறார். இதனை அறிவதன் மூலம் நாமும் சொல்வதற்கரியானாகிய, அந்த அந்தர்யாமியைப்பற்றி கிருஷ்ணன் வாய்ச் சொல்லாலேயே சப்தப் பிரமாணமாக அறிகின்ற பெரும் பேற்றினைப் பெறுகின்றோம்.

“சிறந்த பக்தனே! எல்லாப்; பிராணிகளின் முதலிலும், நடுவிலும், முடிவிலும் நான் தான் இருக்கிறேன். அவற்றின் ஆத்மரூபமாகவும் இருக்கிறேன். அதிதி தேவியின் புத்திரர்களில் வாமனனாகவும், ஒளி படைத்த பொருள்களுள் அதி பிரகாசமுடைய கதிரவனாகவும், மருத்துக்களில் தேஜஸாகவும், நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரனாகவும் நான் விளங்குகிறேன்”.

“வேதங்களில் நான் சாம வேதம். தேவதைகளுள் நான் இந்திரன். புலன்களில் நான் மனம். பிராணிகளின் பிராண சக்தி நானே. ருத்திரர்களில் நான் சங்கரனாகவும், யட்ச, ராட்சசர்களில் குபேரனாகவும், வசுக்களில் அக்னியாகவும், மாமலைகளுக்குள் மேரு பர்வதமாகவும், புரோகிதர்களில் பிரகஸ்பதியாகவும் நான் திகழ்கின்றேன்”.

தேவ சேனாதிபதிகளில் நான் முருகன், நீர்நிலைகளில் சமுத்திரம். மகரிஷிகளில் பிருகு. ஓங்காரப் பிரணவம், ஜப யக்ஞம், இமயமலை, அரசமரம், தேவ ரிஷிகளில் நாரதர், நதிகளில் கங்கை நதி என்று இவ்வாறு மேலும் மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகத்தில்; எவையெல்லாம் சிறந்தவையாகவும், உன்னதமாகவும், ஒளி பொருந்தியவையாகவும், அதிசயிக்கத் தக்கவையாகவும் உள்ளனவோ அவை எல்லாம் தன் அம்சமே! என்றும், பெருமை மிகுந்த எல்லாமே, தான் வெளிப்படுகின்ற விதம் என்றும் மிக விரிவாக ஒவ்வொரு சிறப்பையும் எடுத்துரைக்கின்றார். இந்த அத்தியாயத்தின் 20வது ஸ்லோகம் முதல் 39வது ஸ்லோகம் வரை அந்தப் பரமாத்மாவின் வைபவங்களான திவ்யத் தன்மைகளே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ கிருஷ்ணரால் விரும்பப்படுகின்ற அதிதீரனான, புலனடக்கத்தில் சிறந்தவனான அர்ச்சுனனுக்காக அவர் விவரித்துக் கூறியது போதாமல் மேலும் மேலும் அவர் தம் மகிமைகளைச் சொல்ல வேண்டும். அதைத் தான் இடைவிடாமல் இன்னும் அதிகமாகக் கேட்க வேண்டும் என அர்ச்சுனன் விரும்புகிறான். தன் பக்தனுக்காக, அப்படியே ஆகட்டும்! எனக் கிருஷ்ணரும் பொறுமையாக மேலும் விவரித்தார்.

பாண்டவர்களில் தனஞ்சயன் என்றழைக்கப்படும் தனக்கு முன்னால் இருக்கின்ற அர்ச்சுனனே நான் தான்! என்று அவர் கூறுகின்றார். மற்றொரு உட்பொருளும் இதில் இருக்கிறது. கீதையைக் கேட்பவனும் அதைச் சொல்பவனும் நானே! என்கிறார். யோசித்துப் பாருங்கள். பார்ப்பது உலகமென்றாலும் எல்லாம் அந்த ஒன்றேயல்லவா! இதைத்தான் “காட்சிப்பிழை தானோ?” என்று பாரதி பாடியிருக்கிறார்.

அப்படிப்பட்ட தனஞ்சயனே அவரிடம் அவரது பெருமைகளைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்கிறான் என்றால் மனச்சஞ்சலமும், மன அழுக்கும் நிறைந்திருக்கும் நமது நிலை என்ன? கண்ணன் புகழைக் காதாரக் கேட்டுக் கேட்டுப் பழகினால் தான் இந்த ஜென்மம் கடைத்தேற முடியும்.

Advertisements