மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 53

‘இந்த உலகில் அழிபவர், அழிவற்றவர் என இரு வகை புருஷர்கள் உள்ளனர். இவர்களுள் எல்லாப் பிராணிகளின் சரீரங்களும் அழியக்கூடியவை. ஆனால் அச்சரீரங்களுக்குள் உறைகின்ற, அவற்றை இயக்குகின்ற ஜீவாத்மா அழிவற்றது”. அழிவது உடல் மட்டுமே. ஆத்மா அழிவற்றது என்பதே இதன் பொருள்.

‘இந்த இரண்டு வகை புருஷர்களைத் தவிர உத்தம பருஷர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரமாத்மா. பரம்பொருள், அவர் தான் பாதாளம், பூமி, வானுலகம் எனப்படும்; மூவுலகங்களையும் மற்ற பிற உலகங்களையும் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றார். அவர் அழிவற்றவர். அவரே எல்லோருக்கும் தலைவர்”.

இந்த இடத்தில் அர்ச்சுனன், இவர்களில் நீங்கள் யார்? என்று கேட்கிறான். அதற்குக் கண்ணனின் பதில், ‘அர்ச்சுனா! அந்த உத்தமபுருஷன் நான் தான்! நான் அழிவு நிலையைக் கடந்தவன். அழியா நிலையில் இருக்கும் ஆத்மாவை விட மேலான உத்தம புருஷ நிலையில் நான் இருக்கிறேன். இந்நிலையில் எல்லாமாக இருந்துகொண்டே அதி உயர் நிலையிலும் இருக்கின்ற என்னை, இவ்வுலகம் பரமாத்மா என்று அழைக்கின்றது”.

நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய வியக்கத்தக்க அந்த உண்மை இங்கு நமக்காகத் திரும்பவும் விரித்துரைக்கப்படுகின்றது. சூட்சமமாகவும் சொல்லப்படுகிறது. அந்த உண்மையை நாம் மிகச் சரியாக, தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான், கூறியது கூறல் குற்றம் எனத் தெரிந்தாலும், மனதில் பதிய வேண்டிய ஒன்று என்பதால் மீண்டும் ஒரு முறை இதனை விளக்குகின்றேன்.

அதாவது, பரமாத்மா தான் தன் விருப்பத்தால் இந்தப் பிரபஞ்சமாக, உயிரினங்களாக, மனித குலமாகத் தானே பல்வேறு வேடம் தாங்கிக் கர்மப்பின்னலைப் போட்டுக்கொண்டு, பிறந்து, வாழ்ந்து, நடித்துக்கொண்டிருக்கிறது. அது தானே மாயையாகவும் இருந்து அந்த மனிதப்பிறவியை ஆட்டிப்படைக்கின்றது.

தன்னைத் தானே அது மனிதனின் உள்ளத்தில் ஒளித்துக்கொண்டு, மனதை வெளிப்புறமாகத் திருப்பிப் புலன்களின் வழியே செலுத்தி, அறியாமையுடன் மனிதனை அல்லாட வைக்கிறது. அடிபட்டு, மிதிபட்டு அந்த மனம் சிதைந்து, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று உண்மையாக அழத் துவங்குகின்ற போது ஏதாவது ஓரு வடிவில் அது தானே வந்து அழுபவனின் நிலைக்கு ஏற்றபடி அவனை வழி நடத்துகிறது.

ஜீவன் உண்மையிலேயே இந்த வாழ்க்கையால் மனம் வெறுத்துக் கடைத்தேற வேண்டும் என்று கதறினால் அப்படிப்பட்டவனின் உண்மைத் தன்மையை அது புரிந்துகொண்டு சத்தியத்தை அவனுக்கு உபதேசிக்க மனித உரு எடுத்துக் குருவாக வருகிறது. அப்படி அகில குருவாக அந்தப் பரமாத்மா கண்ணன் என்ற மனித உருவில் மனித குலத்திற்கே சரியான விதத்தில் சத்தியத்தை உணர்த்துவதற்காக வந்து பிறந்தார்.

உத்தம புருஷனாகிய ஆதி பகவன் மனித குலத்தை உய்விக்கத் தானே கண்ணனாய்ப் பிறந்திருப்பதைத் தனது உத்தம பக்தனாகிய அர்ச்சுனனுக்கு இதை விட வேறு எப்படிப் புரிய வைக்க முடியும்? அர்ச்சுனன் ஒரு கருவியாய் நின்று நமக்காக இந்த உபதேசத்தைப் பெற அதனை வியாசர் பகவத்கீதை என்னும் அறிய செல்வமாய் நமக்கு அள்ளித் தந்திருக்கிறார். இதனை நன்றாக சிந்தித்துப் பார்த்து அந்தப் பரமாத்மாவின் பாத மலர் பணிந்து நன்றி தெரிவிக்க வேண்டிய தருணம் இது. அன்பர்களே! உணர்ச்சி வசப்பட்டு நான் இதனை எழுதவில்லை. உண்மையை உணர்ந்த பரவசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!

“மூன்று நிலைகளில் செயல்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாம் நானே! அவற்றிற்கும் மேலான அவ்யக்த நிலையில் நுண்ணுணர்வாய், எல்லாமாய் இருக்கின்றபடியால் தான் இந்த உலகத்த்தில் மக்களாலும், வேதங்களாலும் புருஷோத்தமன் என்னும் திருநாமத்தால் பிரபலமடைந்திருக்கின்றேன்”.
trimurthi

‘மதி மயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்துகொள்கிறான். அப்படிப்பட்டவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அவனுக்கு பெறுவதற்கு என்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை. என்னிடமே ஈடுபாடு கொண்டவனாய் அவன் என்னைப் போற்றிப் பரவசமடைகிறான்.’

இவ்வளவையும் தெளிவாக அர்ச்சுனனுக்குக் கூறி விளங்க வைத்த புருஷோத்தமனாகிய கண்ணன் கடைசியில், ‘அர்ச்சுனா! இதுவரை நான் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள். இதை அறிந்துகொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும், அடைய வேண்டியதை அடைந்தவனாகவும் ஆகிறான்!” என்று சொல்லி முடிக்கின்றார்.

அந்தப் புருஷோத்தமனின் பேரருளால் நாமும் இந்த தெய்வ ரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களாக ஆகிறோம். இதனைத் தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொரு அன்பர்களுமே இந்தப் பேற்றினைப் பெற்றவர்கள் ஆவார்கள். இந்த கீதை என்னும் பேரமுதத்தை மீண்டு;ம் மீண்டும் படித்துப் பார்த்து, நன்றாகப் புரிந்துகொண்டு கீதை காட்டும் பாதையிலேயே நாம் இனி நடக்கப் பழக வேண்டும். புலன்வழிப் பாதையை விட்டு நீங்கி ஞான ஒளிப்பாதையில் இனி நடக்க வேண்டும். இது தான் நாம் இனி செய்ய வேண்டிய செயல்.

என்ன? பற்றின்மை என்னும் வாளினால் சம்சாரமாகிய அஸ்வத்த மரத்தை வெட்டத் துவங்கிவிட்டீர்களா? நல்லது. இதற்குக் கண்ணன் அருள் எப்போதும் துணை செய்யும். (தொடரும்…)

Advertisements