மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 57

சாஸ்திர முறைகள் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால், தக்க பெரியவர்களான சான்றோர்களைச் சென்றடைந்து அவர்கள் கூறுகின்ற நல்லுரைகளின்படி செயல்பட முற்பட வேண்டும். சத் சங்கத்தை சார்ந்த விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

“உனக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ அதை நீ மற்றவருக்குச் செய்!” என்று அனேகமாக எல்லா மகான்களுமே சொல்லியிருக்கின்றனர். இந்த நெறியை மட்டும் நாம் நம் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடந்தால் மற்ற எல்லா தெய்வீகப் பண்புகளுமே இதனைப் பின்தொடர்ந்து நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். ஏனெனில் எதிரில் இருப்பவரை நாமாக நினைக்கின்றபோது அவர்களிடம் அவமதிப்பாக, அன்பின்றி, அசுரத்தனமாக நடந்துகொள்ள நம்மால் முடியாது.

மேலும் பார்த்தசாரதி அருளிய தெய்வீக நெறிகளை முறையாக நாம் பின்பற்றி வருகின்றபோது நம்மிடம் உள்ள இயலாமை, ஆற்றாமை போன்ற குறைபாடுகளுக்கும் அது ஒரு அன்பான சிகிச்சை முறையாக அமையும். மேலும் தெளிந்த அறிவும், பகுத்தறிகின்ற தன்மையும் கொண்டவர்களாக நாம் இருந்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் நான் செய்வது பிழை, நான் செல்கின்ற பாதை தவறான பாதை என்ற உண்மை புரிந்துவிடும். krisha_says

எனவே அசுர இயல்பு கொண்டு இதுவரை வாழ்ந்தவர்கள் கீதை சொன்ன உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புள்ளம் கொண்டவர்களாக மாற வேண்டும். பக்தி நெறியில் ஈடுபட வேண்டும். சாத்வீகமான சைவ உணவையே உண்ணப் பழக வேண்டும். சத் சங்கத்திற்குச் சென்று அதில் சேர்ந்து பயனடைய வேண்டும். ஆன்மீக நூல்களைப் படிப்பதையும், ஞானிகள், மகான்கள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் படித்து அறிவதையும், பகவத்கீதை, இதிகாசங்கள் ஆகியவற்றைப் படிக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டும். நல்ல மனிதர்களிடம் நட்புகொள்ள விருப்பம் ஏற்பட வேண்டும். அதோடுமட்டுமின்றி நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களைப் படிப்படியாகக் கைவிட வேண்டும்.

தெய்வ அருளும், பூர்வஜென்மப் புண்ணியப் பலனும் இருந்தால் அசுர குணங்கள் கொண்டவர்களாக வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அந்தத் தீய மனிதன் மனம் திருந்தி ஆண்டவனை வழிபட்டு, மேன்மையைப் பெற முயன்றால் அவனுக்கு நிச்சயம் நற்பலன் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் மன மாற்றத்தால் விரைவிலேயே அறநெறிச் செல்வர்களாக மாற முடியும். திருந்தி மேம்பட்ட அத்தகையவர்களிடம் நற்பண்புகளாகிய இறையருட்செல்வம் வளரும்.

பகவத்கீதையைப் படிப்பதற்கும், யாராவது உபதேசமாக சொல்வதைக் கேட்பதற்குமே இறையருள் இருந்தால் தான் முடியும் என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார். எல்லோராலும் இதனைத் தொடர்ந்து கேட்கவோ அல்லது வாசிக்கவோ முடியாது. எத்தனையோ தடைகள் வரும் என்பார் அவர். அப்படி எழுகின்ற தடைகளையெல்லாம் மீறி இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகின்ற பெருமக்கள் நிச்சயமாகத் தெய்வீக இயல்புகளைத் தம்மில் நிறைத்துக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்; அசுரத்தன்மையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இதை வாசிப்பதோடு நிறுத்தி விடாமல் நன்றாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே அடிக்கடி சுய பரிசோதனை நடத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். தமது அறியாமையை உணர்ந்துகொள்ள வேண்டும். குறை நிறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற நற்குணங்களை மேலும் வளர்த்து, வேண்டாத தீய குணங்களைப் படிப்படியாகப் போக்கிக்கொள்ளவும் வேண்டும். அதாவது இதுவரை இருந்த தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் மாறமாட்டேன்! நீ உன்னை எனக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு, என்னை அனுசரித்து நடந்துகொள்! என்று பிறரை வற்புறுத்தாமல், தமது தவறான போக்கை உணர்ந்து பிறர் விரும்பும்படி, பிறர் மதிக்கும்படி இனி நாம் நடந்துகொள்ள வேண்டும். பிறரைத் திருத்த முற்படாமல் அல்லது குறை கூறாமல் நாம் திருந்த முயல வேண்டும். இப்படியெல்லாம் தொடர்ந்து நம்மை நாமே கவனித்து வரவும், அருள்நெறியில் அனைத்தையும் செய்யப் பழகவும் ஆரம்பித்தால், நிச்சயம் கண்ணன் காட்டிய வழி நமக்கு மேன்மையைத் தரும். நிம்மதியைத் தரும். மதிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.

அத்தியாயம் 17:

சிரத்தா த்ரய யோகம்

சிரத்தை என்ற சொல் தான் இங்கு சிரத்தா என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிரத்தை என்றால் நம்பிக்கையும், அக்கறையும் ஆகும். த்ரயம் என்ற சொல்லுக்கு மூன்று என்று பொருள். ‘சிரத்தாவான் லபதே ஞானம்” என்கிறது கீதை. அக்கறையும், நம்பிக்கையும் கொண்டவருக்குத்தான் ஞானம் ஏற்படும். அதாவது சாத்திரங்கள் சொல்கின்ற உண்மைகளின் மீதும், அவற்றை எடுத்து போதிக்கின்ற குருவின் மீதும் நம்பிக்கை கொண்டு, அவர் உபதேசிக்கின்ற, நம்மைத் திருத்தி உயர்த்தக்கூடிய ஞான நல்லுரைகளை நாம் ஏற்று, கேட்டதோடு விட்டுவிடாமல் அக்கறையுடன் அவற்றை நமதாக்கி நம் வாழ்க்கையைச் செம்மையுற வாழ வேண்டும்.

இந்த சிரத்தை என்பது தெய்வீகமானது, தெய்வீகமல்லாதது, அரக்கத்தனமானது என மூன்று வகைப்படும். அக்கறையுடனும், நம்பிக்கையுடனும் நாம் கற்கின்ற சாத்திர அறிவு உடல் உபாதைகளிலிருந்து, மன உணர்ச்சிகளின் பிடியிலிருந்து, புத்தியின் சிக்கல்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இது தர்மம், இது அதர்மம் என நமக்குக் கற்பிக்கப்படுகின்ற நெறிமுறைகளே சாத்திர தர்மம் ஆகும். இதைத்தான் நாம் நமது கலாச்சாரம் என்று போற்றிப் பாதுகாத்து வருகிறோம்.

இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் இந்த தர்மநெறிகள் மிக விரிவாகவும், தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் நாமோ அந்தக் கதைகளில் வருகின்ற முரணான கருத்துக்களில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வீண் விவாதம் புரிந்துகொண்டிருக்கின்றோமே தவிர அப்படிச் சொல்லப்பட்டுள்ள தர்மநெறிகளை மனதில் பதித்துக்கொண்டு அதன்படி நடக்க முயல்வதில்லை. இதைத்தான் ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழி சுட்டி நிற்கிறது போலும். ஆயிரம் புத்தகங்கள் படிப்பதால் பயனில்லை. உள்ளம் பண்பட வேண்டும். பக்குவப்பட்ட மனம்தான் தெய்வீகமாக மாறும். மலரும்..
(தொடரும்..)

Advertisements

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 47

மனிதனின் குண இயல்பின் அடிப்படையில் தான் அவனது தாரதம்யம் அமைகின்றது. ஒருவரது ஜாதி என்பது இந்தக் குணங்களின் அமைப்பினால் தான் உருவாக்கப்பட்டது. சத்வ குணம் மேல் நிலையிலும் அதற்கடுத்து ரஜோ குணமும் அதற்கும் கீழாகத் தாமச குணமும் அமையப் பெற்றவர்கள் அமைதியும், ஆழ்ந்த சிந்தனைத் திறனும், அறிவாற்றலும் கொண்டு செயல்படுபவர்கள் என்பதனால் இத்தகையவர் பிராமணர் என்றழைக்கப்பட்டனர்.

ரஜோ குணம் மேலேயும், சத்வ குணம் இரண்டாவதாகவும், தமோ குணம் மூன்றாவதாகவும் இருந்தால், அவர்கள் சுறுசுறுப்பாக, லட்சியப் பிடிப்போடு சாதிக்க முயன்று, சமுதாய முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைப்பார்கள். இந்த குணம் சத்திரியர்களுக்குரியது.

முதலில் ரஜோ குணம், அடுத்ததாகத் தமோ குணம், அதனை அடுத்து சத்வ குணம் என்ற ரீதியில் அமைந்தவர்கள் தமக்காகத் தம் சுய முன்னேற்றத்திற்காகக் கருத்துடன் உழைப்பவராக, எதற்கும் கணக்குப் பார்ப்பவராக இருப்பார்கள். அவர்கள் வைசியர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

தமோ குணம் அதிகமாயும், ரஜோ குணம் அடுத்ததாயும், சத்வ குணம் கடைசியாயும் அமைந்த இயல்பினர் சூத்திரர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்கு மேலாக வேறு எதையும் கவனிக்க மாட்டார்கள். எது நடந்தாலும் என்ன என்று பார்க்க மாட்டார்கள். பிறர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றும் இவர்கள், சாப்பிடுவதும் துhங்குவதுமே போதும் என்ற உணர்விலேயே இருந்து கொள்வார்கள். இவர்களிடம் மந்த புத்தியும் சொல்வதைச் செய்யக்கூடிய தன்மையும் மட்டும் தான் இருக்கும். சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறமை இருக்காது.

இந்த நான்கு பிரிவுகளும் குணத்தால் அமைக்கப்பட்டவையே அன்றி அடிப்படையில் பேதமில்லை. யார் எந்தக் குலத்தில் பிறந்தவராயிருப்பினும் அவரது குணத்தை உற்றுப் பார்த்து அவர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடியும்.

சாத்வீகக் குணம் ஓங்கி நின்றால் மனம் அலை பாயாது. அமைதியில் ஆழ்ந்திருக்கும். ரஜோ குணம் அதிகரித்தால் படபடப்பும் வேகமும் மன ஓட்டமும் அதிகரிக்கும். தமோ குணம் அதிகரித்தால் சோர்வு ஏற்பட்டு மந்த நிலையில் துhங்;கித் துhங்கி வழிவர். எந்த குணம் ஓங்கி இருக்கிறதோ அதற்கேற்ப அவரது செயல் அமையும்.

ஆன்மீக சாதகர்களுக்கு சாத்வீகக் குணம் தான் ஓங்கியிருக்க வேண்டும். ஏனெனில் சாத்வீகக் குணம் மன அமைதியில் தான் பூரணமாக அமைந்திருக்கும். மனத் துhய்மையுடன் இருப்பவர்களுக்குத் தான் மன அமைதி ஏற்படும். இந்நிலையில் இருந்தால் தான் ஆன்மா ஒளிர்வதை உணர முடியும். அலைவதும் அலைக்கழிப்பதும் இந்த மனம் தான். சூட்சுமமாக செயல்படும் இந்த மனம் சாத்வீகத்தில் ஆழ்ந்திருந்தால் நம்முள் அமைதியும் ஆனந்தமும் நிலைத்திருக்கும்.

நம் மன ஓட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துச் சரிசெய்யத் தெரிந்தால்தான் நம் விருப்பப்படி அதை இயக்க முடியும். இது தெரியாவிட்டால் மனம் நம்மை எங்கோ இழுத்துக்கொண்டு போய்விடும். ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட விடாது. மாயை இதற்குத் துணை செய்யும். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சாத்வீகக் குண நிலையில் இருந்தால் தான் தகுந்த பதில் கிடைக்கும். ஞானம் வளர வளரத்தான் இந்நிலை ஏற்படும். மூன்று குணங்களிலும் சாத்வீகக் குணம் தான் சிறந்தது. சத்தியத்திற்குரிய குணம் இது. தெய்வாம்சம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவது இந்த குணமுடையவர்களைத்தான். நற்குண இயல்புகள் எல்லாமே சத்துவ குணத்தில் தான் அடங்கியுள்ளன.

மனிதப் படைப்பின் அடிப்படைக் குண இயல்புகளை இப்படி விவரித்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் இந்த மூன்று குணங்களும் எப்படி ஆத்மாவை மீண்டும் மீண்டும் பிறவித் தளையில் சிக்க வைக்கின்றன என்பதை விவரிக்கின்றார்.

“சத்வகுணம் நிர்மலமானது. எங்கும் பிரகாசிப்பது. இது சுகம், ஞானம் இரண்டிலுமுள்ள ஈடுபாட்டினால் ஆத்மாவை இதயத்தில் கட்டுப்பட வைக்கிறது. ரஜோ குணம் ஆசையையும், பற்றுதலையும் ஏற்படுத்துவது. இந்த குணம் தீவிர விருப்பத்தின் வடிவம். நிறைவேறாத ஆசைகளுடன் மரணிக்கின்ற ஜீவன் அந்த ஆசைகளை மீண்டும் நிறைவேற்றிக்கொள்ளப் பிறவி எடுக்க ரஜோ குணம் காரணமாகிவிடுகின்றது. தமோ குணம் அஞ்ஞானத்திலிருந்து ஏற்படுகின்றது. நான் யார் என்ற உண்மையை ஜீவன் அறியும் வரை தமோ குணம் இருக்கும். நான் இந்தப் பிறவியல்ல என்பதை ஜீவன் முழுவதுமாக அறிந்து தெளிகின்றவரை பிறவிகள் தொடரும். எல்லாப் பிராணிகளையும் இந்தத் தமோ குணம் மதி மயங்க வைக்கிறது. அறியாமை, பேதமை, சோம்பல், துhக்கம் மூலமாக ஆத்மாவை இந்த உடலில் அது கட்டுப்படுத்தி வைக்கிறது!”

“இந்த மூன்று குணங்களும் மனிதனை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கின்றன. சத்வ குணம் சுகபோகத்தில் ஈடுபடுத்தித் தன் அதிகாரத்தைக் காட்டுகிறது. ரஜோ குணம் செயல்களில் ஈடுபடுத்தித் தன் உரிமையை மனிதரிடம் நிலை நாட்டுகிறது. தமோ குணமோ ஞானத்தை மறைத்துத் தவறிழைக்கும் பேதமையில் ஈடுபடுத்தி மனிதனை ஆட்கொண்டு விடுகிறது. கீழ் நிலைக்குத் தள்ளி விடுகின்றது!”

“ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் அழுத்திவிட்டு சத்வ குணம் வளர்கின்றது. சத்வ குணத்தையும், தமோ குணத்தையும் அழுத்திவிட்டு ரஜோ குணம் வளர்கிறது. இதே போல் சத்வ குணத்தையும், ரஜோ குணத்தையும் அழுத்திவிட்டுத் தமோ குணம் மேலே எழும்புகிறது.”

“எப்போது இந்த மனித சரீரத்தில் ஐம்புலன்களிலும், உள்ளத்திலும் தூய்மையும், பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்வகுணம் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.”

“எப்போது மனிதரின் உள் மனதில் பண ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுகபோகங்களுக்காகவும், சொத்துக்கள் சேர்க்கவும், புதுப் புதுக் காரியங்களைத் தொடங்குகின்ற மனப்போக்கு ஏற்படுகின்றதோ, எப்போது மனதில் தீவிர ஆசையும், மன அமைதியின்மையும் அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை துhக்குவதை உணர்ந்துகொள்ள வேண்டும்.”

“எப்போது புலன்களிலும், உள்ளத்திலும் உணர்வுத் துhய்மை இல்லாதிருக்கிறதோ, எந்தக் காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும், செய்யக்கூடாத காரியங்களைச் செய்வதும் அதிகரிக்கின்றதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம், நம்மில் தமோ குணம் மேலோங்கியுள்ளதென்று.”

“சத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது மனிதன் இறந்துவிட்டான் என்றால், அவன் புண்ணியாத்மாக்கள் மட்டுமே அடையத் தகுந்த நிர்மலமான உத்தம உலகங்களுக்குச் செல்கிறான். ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் அவன் மனித குலத்தில் மறுபிறவி பெறுகிறான். தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் இறந்தால், பிராணிகளாக, மிருகம், பறவை போன்ற பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கின்றான்.”

“குணங்களின் தன்மைகளுக்கும் போக்கிற்கும் ஏற்பத்தான் செயல்கள் நிகழ்கின்றன. அந்தச் செயல்களின் தன்மைக்கு ஏற்றபடி அவற்றின் பலன்களும் அமைகின்றன. செய்பவனின் குணமே செயலின் காரணமாக அமைகிறது. இதை அறிபவன் தன் செயல், குணம் இவற்றிலிருந்து விடுபட்டு, அவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு, தன்னை உணர்ந்தவனாய், பிரும்ம ஸ்வரூபத்தையே அடைகிறான்”.

“அப்படித் தன்னைப் பிரம்மமாக உணர்பவன் விவேகி. உடலை உருவாக்கும் மூன்று குணங்களையும் கடந்து, அப்படிப்பட்டவன் பிறப்பு, இறப்பு, மூப்பு சார்ந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு அமரத்துவ நிலையை அனுபவிக்கிறான்.”

“இவ்வாறு முக்குணங்களையும் கடந்த மா மனிதர் இந்த மூன்று குணங்களும் தன்னிலிருந்து ஆக்க பூர்வமாக, ஒளிமயமாக வெளிப்படும்போதும், எந்தச் செயலிலாவது தன்னை ஈடுபடுத்தும்போதும், அறியாமையால் செய்யப்படும் சில செயல்களாகச் சிலவற்றைச் செய்து விடுகின்ற போதும், அவற்றால் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை. இப்படி ஆயிற்றே! என்று மகிழ்வதோ, வருந்துவதோ, வெறுப்பதோ இல்லை.”

“இக்குணங்கள் மூன்றும் வெளிப்படா நிலையில் இருக்கின்றபோது, இவை தன்னில் வெளிப்பட வேண்டுமென ஆசைப்படுவதுமில்லை. அப்படிப்பட்டவர் இக்குணங்களிடம் விருப்பு, வெறுப்பு அற்றவராக இருப்பார். இக்குணங்களால் தான் பாதிக்கப்படாமலும் இருப்பார். மேலும் மூன்று குணங்களும் தம்மிலிருந்து தம்மை வெளிப்படுத்திக் கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருப்பதையும் அவர் உணர்கிறார்.”

“மேலும் அந்த விவேகி நான் என்பது அவனே! என்பதை அறிந்தவராய், தன் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார். தாமாக எதையும் செய்யவில்லை. என்பதையும், தன்னால் எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதையும் உணர்ந்து, செய்பவன் அவனே என்று அமைதியாக வாழ்கிறார்.”

“அப்படிப்பட்ட மா மனிதரின் நடவடிக்கைகள் சமத்துவ நிலை கொண்டவையாய் இருக்கும். திட சித்தம் கொண்ட அம்மனிதர் தமது தன்னில் தான் தோய்ந்து, சமநிலைப் போக்கில் சுகத்திலும், துக்கத்திலும், மண்கட்டியிலும், தங்கக்கட்டியிலும், உடல், பொறிகள் சார்ந்த விருப்பு வெறுப்புகளிலும், புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், மதிப்பு, அவமதிப்புகளிலும், பகைவர், நண்பர்களிடமும் சமநிலை பிறழாமல் நிரந்தர அமைதியில் நிலைத்திருப்பார். அவர் ஆவல், ஆர்வம், ஈடுபாடு கொண்டு எந்தப் புதிய காரியத்தையும் தொடங்குவது இல்லை. இதனாலேயே இவர் குணங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.”

இதுவரை எழுதிக்கொண்டு வந்தவை எல்லாமே கீதா வாக்கியங்கள். இவற்றை மாற்றி உரைக்க முடியாது. தன் படைப்பின் மீது பிரம்மம் கொண்ட கருணையினால் மறைந்து கொண்டு வந்த வேத உண்மைகளைத் தானே தன் வாயினால் தனது அவதார வடிவமான கண்ணனின் உருவில் அர்ச்சுனனுக்கு என்று சொல்லி நமக்கெல்லாம் வழங்கிய கொடை இது. இதனைத் திரும்பத் திரும்பப் படித்துத்தான் நம்மைத் திருத்திக்கொள்ள முடியுமே தவிர, ஒரு முறை மட்டும் படித்தால் போதாது. உடனே அவை மறந்து போய்விடும். இதை மனதில் வைத்துக்கொண்டு மேலே தொடருங்கள்.

(தொடரும்…)