மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 53

‘இந்த உலகில் அழிபவர், அழிவற்றவர் என இரு வகை புருஷர்கள் உள்ளனர். இவர்களுள் எல்லாப் பிராணிகளின் சரீரங்களும் அழியக்கூடியவை. ஆனால் அச்சரீரங்களுக்குள் உறைகின்ற, அவற்றை இயக்குகின்ற ஜீவாத்மா அழிவற்றது”. அழிவது உடல் மட்டுமே. ஆத்மா அழிவற்றது என்பதே இதன் பொருள்.

‘இந்த இரண்டு வகை புருஷர்களைத் தவிர உத்தம பருஷர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரமாத்மா. பரம்பொருள், அவர் தான் பாதாளம், பூமி, வானுலகம் எனப்படும்; மூவுலகங்களையும் மற்ற பிற உலகங்களையும் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றார். அவர் அழிவற்றவர். அவரே எல்லோருக்கும் தலைவர்”.

இந்த இடத்தில் அர்ச்சுனன், இவர்களில் நீங்கள் யார்? என்று கேட்கிறான். அதற்குக் கண்ணனின் பதில், ‘அர்ச்சுனா! அந்த உத்தமபுருஷன் நான் தான்! நான் அழிவு நிலையைக் கடந்தவன். அழியா நிலையில் இருக்கும் ஆத்மாவை விட மேலான உத்தம புருஷ நிலையில் நான் இருக்கிறேன். இந்நிலையில் எல்லாமாக இருந்துகொண்டே அதி உயர் நிலையிலும் இருக்கின்ற என்னை, இவ்வுலகம் பரமாத்மா என்று அழைக்கின்றது”.

நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய வியக்கத்தக்க அந்த உண்மை இங்கு நமக்காகத் திரும்பவும் விரித்துரைக்கப்படுகின்றது. சூட்சமமாகவும் சொல்லப்படுகிறது. அந்த உண்மையை நாம் மிகச் சரியாக, தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான், கூறியது கூறல் குற்றம் எனத் தெரிந்தாலும், மனதில் பதிய வேண்டிய ஒன்று என்பதால் மீண்டும் ஒரு முறை இதனை விளக்குகின்றேன்.

அதாவது, பரமாத்மா தான் தன் விருப்பத்தால் இந்தப் பிரபஞ்சமாக, உயிரினங்களாக, மனித குலமாகத் தானே பல்வேறு வேடம் தாங்கிக் கர்மப்பின்னலைப் போட்டுக்கொண்டு, பிறந்து, வாழ்ந்து, நடித்துக்கொண்டிருக்கிறது. அது தானே மாயையாகவும் இருந்து அந்த மனிதப்பிறவியை ஆட்டிப்படைக்கின்றது.

தன்னைத் தானே அது மனிதனின் உள்ளத்தில் ஒளித்துக்கொண்டு, மனதை வெளிப்புறமாகத் திருப்பிப் புலன்களின் வழியே செலுத்தி, அறியாமையுடன் மனிதனை அல்லாட வைக்கிறது. அடிபட்டு, மிதிபட்டு அந்த மனம் சிதைந்து, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று உண்மையாக அழத் துவங்குகின்ற போது ஏதாவது ஓரு வடிவில் அது தானே வந்து அழுபவனின் நிலைக்கு ஏற்றபடி அவனை வழி நடத்துகிறது.

ஜீவன் உண்மையிலேயே இந்த வாழ்க்கையால் மனம் வெறுத்துக் கடைத்தேற வேண்டும் என்று கதறினால் அப்படிப்பட்டவனின் உண்மைத் தன்மையை அது புரிந்துகொண்டு சத்தியத்தை அவனுக்கு உபதேசிக்க மனித உரு எடுத்துக் குருவாக வருகிறது. அப்படி அகில குருவாக அந்தப் பரமாத்மா கண்ணன் என்ற மனித உருவில் மனித குலத்திற்கே சரியான விதத்தில் சத்தியத்தை உணர்த்துவதற்காக வந்து பிறந்தார்.

உத்தம புருஷனாகிய ஆதி பகவன் மனித குலத்தை உய்விக்கத் தானே கண்ணனாய்ப் பிறந்திருப்பதைத் தனது உத்தம பக்தனாகிய அர்ச்சுனனுக்கு இதை விட வேறு எப்படிப் புரிய வைக்க முடியும்? அர்ச்சுனன் ஒரு கருவியாய் நின்று நமக்காக இந்த உபதேசத்தைப் பெற அதனை வியாசர் பகவத்கீதை என்னும் அறிய செல்வமாய் நமக்கு அள்ளித் தந்திருக்கிறார். இதனை நன்றாக சிந்தித்துப் பார்த்து அந்தப் பரமாத்மாவின் பாத மலர் பணிந்து நன்றி தெரிவிக்க வேண்டிய தருணம் இது. அன்பர்களே! உணர்ச்சி வசப்பட்டு நான் இதனை எழுதவில்லை. உண்மையை உணர்ந்த பரவசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!

“மூன்று நிலைகளில் செயல்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாம் நானே! அவற்றிற்கும் மேலான அவ்யக்த நிலையில் நுண்ணுணர்வாய், எல்லாமாய் இருக்கின்றபடியால் தான் இந்த உலகத்த்தில் மக்களாலும், வேதங்களாலும் புருஷோத்தமன் என்னும் திருநாமத்தால் பிரபலமடைந்திருக்கின்றேன்”.
trimurthi

‘மதி மயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்துகொள்கிறான். அப்படிப்பட்டவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அவனுக்கு பெறுவதற்கு என்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை. என்னிடமே ஈடுபாடு கொண்டவனாய் அவன் என்னைப் போற்றிப் பரவசமடைகிறான்.’

இவ்வளவையும் தெளிவாக அர்ச்சுனனுக்குக் கூறி விளங்க வைத்த புருஷோத்தமனாகிய கண்ணன் கடைசியில், ‘அர்ச்சுனா! இதுவரை நான் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள். இதை அறிந்துகொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும், அடைய வேண்டியதை அடைந்தவனாகவும் ஆகிறான்!” என்று சொல்லி முடிக்கின்றார்.

அந்தப் புருஷோத்தமனின் பேரருளால் நாமும் இந்த தெய்வ ரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களாக ஆகிறோம். இதனைத் தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொரு அன்பர்களுமே இந்தப் பேற்றினைப் பெற்றவர்கள் ஆவார்கள். இந்த கீதை என்னும் பேரமுதத்தை மீண்டு;ம் மீண்டும் படித்துப் பார்த்து, நன்றாகப் புரிந்துகொண்டு கீதை காட்டும் பாதையிலேயே நாம் இனி நடக்கப் பழக வேண்டும். புலன்வழிப் பாதையை விட்டு நீங்கி ஞான ஒளிப்பாதையில் இனி நடக்க வேண்டும். இது தான் நாம் இனி செய்ய வேண்டிய செயல்.

என்ன? பற்றின்மை என்னும் வாளினால் சம்சாரமாகிய அஸ்வத்த மரத்தை வெட்டத் துவங்கிவிட்டீர்களா? நல்லது. இதற்குக் கண்ணன் அருள் எப்போதும் துணை செய்யும். (தொடரும்…)

Advertisements

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 50

நான் என்பது நீயும் தான். இந்த உண்மையைப் புரிந்துகொள்! என்னைச் சரணடைந்து விடு! செயல்படு! பலனை நான் பார்த்துக்கொள்கிறேன்! என்பதுதான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குக் கீதையாக விளக்கிக்கொண்டிருப்பது.

இந்த அடிப்படையில் தான் உண்மையை உணர்ந்துகொண்ட, ஆத்ம அனுபூதி பெற்ற பெரியவர்களும், மகான்களும் நான் அவன்! அவன் நான்! என்று கூறியிருக்கின்றனர். நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! திரும்பத் திரும்ப இதைப்பற்றியே ஆழமாக சிந்தித்தால் எல்லாமே அதுதான் என்ற உண்மை தெரியவரும்.

நாமும் நம்மைக் கடவுள்தான் என்று ஏற்றுக்கொள்வோம். குறை இருக்கிறதே! என்று நினைத்தால், அந்தக்குறை எனக்கல்ல. இந்தப் பெயருடன் கூடிய பிறவிக்குக் குறை இருக்கத்தான் செய்யும். விஜயா என்னும் பிறவி குறைகள் நிறைந்தவள். அவளின் உள்ளே இருந்து இயக்குகின்ற நான் பரிபூரணன்.

எனவே சுருக்கமாகச் சொல்வதானால் இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமாகக் காட்சியளிப்பது நுண்ணுணர்வாகிய அந்தப் பரப்பிரம்மம் தான். இது தான் புரிய வேண்டிய உண்மை. ஆனால் அவரவரின் கர்மப் பதிவுகளுக்கு ஏற்றபடி மூன்று குண வேறுபாடுகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம். எல்லோரும் அவரவரின் தன்மைக்கேற்றபடி மாறியிருக்கின்றனர்.

ஏனெனில் வேற்றுமை ஒரு சுவாரஸ்யம். வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் என்பதுதான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக் கொள்கை. மிக அற்புதமான ஒரு கொள்கை. இந்தியாவின் ஆன்மீக உயர்விற்கு ஏற்ற கொள்கை.

சரி! அன்பிற்குரியவர்களே! இந்த விளக்கத்தின் அடிப்படையில் இனி 15வது அத்தியாயமாகிய புருஷோத்தம யோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கின்றார் என்பதைப் பார்ப்போம்.

அர்ச்சுனன் கேட்கின்றான், “ஏ! பரந்தாமா! எல்லாவற்றிற்கும் ஆதாரம் நீங்கள் தான் என்றால் இந்த உலகத்திற்கு ஆதாரம் யார்?” இதைக்கேட்டதும் பரந்தாமன் புன்னகை புரிகிறார். அவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் புதிர்போல் ஆரம்பிக்கிறார்.

asvatthaஅவர் இங்கு உருவகமாக ஒன்றைப்பற்றிக் கூறுகின்றார். இந்த உருவகம் வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. கடோபநிஷதத்திலும் இந்த அஸ்வத்த மரத்தைப்பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கையை சம்சாரம் என்று சொல்வது வழக்கம். சம்சாரம், சாகரம், துக்கம்! என்று சொல்வார்கள். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக, அச்சாணியாக இருப்பவள் பெண். எனவே அவளுக்கும் சம்சாரம் என்று ஒரு பெயர் இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த சம்சாரம் என்று சொல்லப்புடுவது, உலகிலுள்ள அத்தனை மனிதர்களாலும் வாழப்படுகின்ற வாழ்க்கையே ஆகும். மனிதகுலம் வாழ்கின்ற இந்த வாழ்க்கைதான் இந்த உலகத்திற்கு ஆதாரம். வாழ்க்கை இல்லையேல் உலகமும் இல்லை.

இந்த சம்சார வாழ்க்கையானது ஒரு பெரிய ஆலமரம் என்று இங்கு உருவகப்படுத்தி விவரிக்கப்படுகின்றது. இதை நன்றாகப் புரிந்துகொண்டு மேலே படியுங்கள். இது நிறுத்தி நிதானமாகப் படிக்கவேணடிய பகுதியாகும்.

இந்த அஸ்வத்த மரத்தைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு விவரிக்கின்றார். “இந்த சம்சாரம் என்னும் அகில உலகமும் ஒரு பெரிய ஆலமரம் போன்றது. இந்த மரத்திற்கு ஆதாரம், புகலிடம், வேர் எல்லாமே நான் தான். அந்த மரத்தின் மேல் நோக்கி வளர்ந்திருப்பது மூலப் பகுதி. அதாவது வேர்ப் பகுதி மேலே இருக்கிறது. கீழ் நோக்கி இறங்கியிருப்பது கிளைப் பகுதி. இந்த மரம் தலைகீழாக இருக்கிறது. மேலும் இந்த மரம் நாளை பகல் வரும் வரை கூட நிலையற்றது. ஆதலால் இதை அசுவத்த மரம் என்கிறார்கள்.”

“இதற்குத் தொடக்கம், முடிவு இரண்டும் அறியப்படாததாலும், நதி எல்லாக் காலத்திலும் ஓடிக்கொண்டே இருப்பதைப் போல் நிரந்தரமாக இது எப்போதும் இருப்பதாலும் இதனைக் குலைவு இல்லாதது என்கிறார்கள்.”

”இல்லாதது போன்ற இந்த வாழ்க்கை இருப்பதாகவும், அது நிலைத்திருப்பதாகவும் தோன்றுகிறது. பிறவி விருப்பத்துடன் செய்கின்ற செயல்கள் எல்லாம் இந்த மாபெரும் மரத்தின் இலைகள் ஆகின்றன. இப்படியான இந்த மரத்தை அதாவது இந்த வாழ்க்கையை யார் உள்ளது உள்ளபடி உணர்ந்து விடுகிறார்களோ அவர்கள் ஞானிகள். வேதங்கள் சொல்கின்ற உண்மைகளை அவர்கள் அறிந்தவர்களாகிவிடுகின்றனர்.”

அதாவது நிலையற்றதான, பொய்யான இந்த வாழ்க்கையைப் பெரிதாக நினைத்து இதில் நிகழ்கின்ற நிகழ்வுகளைப் பெரிதுப்படுத்திப் புலம்பிக்கொண்ட வருந்தாமல் உங்களை மாற்றிக்கொண்டு உண்மையைப் புரிந்தவர்களாக ஆனந்த நிலையில் இருக்கப் பழகுங்கள் என்கிறார் அவர்.

இனி இந்த அஸ்வத்த மரத்தைப்பற்றிக் கிருஷ்ணர் மேலும் விவரிக்கின்றார். “ இந்த சம்சார விருட்சத்தின் கிளைகள் சத்துவம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் மூலமாக வளர்ந்து கீழே, நடுவில், மேலே உள்ள உலகங்களில் பரவியிருக்கின்றன.”

இந்த மூன்று குணங்களின் தன்மைகள் அவற்றின் விளைவுகள் பற்றியெல்லாம் 14ம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருந்தது அல்லவா? அந்த மூன்று குணங்களின் அடிப்படையில் தான் இந்தப் பிறவி வாய்க்கின்றது.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 46

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற பரிபூரணப் பேரானந்தமாகிய பரப்பிரம்மம், இயற்கையோடு சேர்ந்து பஞ்சபூத சேர்க்கையுடைய இந்த உடலை அடைகின்றது. இயற்கையான ஷேத்திரம் அழியக்கூடியது. அது நானல்ல. அதனுள்ளே இருக்கின்ற ‘புருஷன்’ என்று கீதையில் சொல்லப்படுகின்ற ஷேத்திரக்ஞனே நான்.

அது வேறு, இது வேறு என இரண்டையும் தனித்தனியாக அறிய வேண்டியது, ஆத்ம சாதகனுக்கு மிக அவசியம். இதுதான் ஞானம்.

இந்த உண்மையை இப்படி நன்றாகப் புரிந்துகொண்ட ஞானியருக்கு மறு பிறப்பில்லை. மீண்டும் உடலெடுத்து அதற்குரிய கர்மப்பலன்களை அனுபவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. இப்போது, இதிலிருந்து நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், ஆத்மா வேறு, இந்த உடலோடுகூடிய வாழ்க்கை வேறு. இப்பிறப்பில் நிகழ்பவையெல்லாம் கர்மத் தொடர்பால் வந்தவை. இவற்றை நான் எனதாக ஏற்று அறியாமையுடன் செயல்படாமல், நான் ஆத்மா என்ற உணர்வில் நின்று செயல்பட்டால், பிறகு மறு பிறப்பு இருக்காது. மேலும் கர்மாவை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்வதால், இருக்கின்ற கர்மாவும், நாம் பெற்றுள்ள ஞானத்தால் அழிந்துவிடும். இதைத்தான் நாம் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இது கீதையால் நாம் அறிய வேண்டிய மிகமிக அரிதான ஓர் உண்மை.

மிகச் சுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் வெறும் கருவி. நடப்பவையெல்லாம் அவன் விருப்பப்படி நடக்கின்றன! என்று திரும்பத்திரும்ப நாம் நினைத்துக்கொண்டே இருந்தால் சரி. பெரியவர்கள் அடிக்கடி சொல்கின்ற வார்த்தை என்ன? நம் கையில் என்ன இருக்கிறது? நடப்பதெல்லாம் நாராயணன் செயல்! என்று தானே. கீதையின் உட்பொருளே இந்த எளிய வாக்கியத்திற்குள் அடங்கியிருக்கிறது பாருங்கள்.

உடலாகிய இயற்கையுடன் புருஷனாகிய ஆத்மா கலக்காமல் தனித்து இருக்கப் பழகுவதற்குக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு அந்த இயற்கையையே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றார். “ஆகாயம் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருந்தாலும் அது மிக சூட்சுமமாகவும் இருக்கிறது அல்லவா! அது எந்தப் பொருளிலும், பிராணியிடத்திலும் ஒட்டுவதில்லை. அதைப்போலவே மூல புருஷன் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் எந்த உடலிலும் சிறிதும் ஒட்டிக்கொண்டிருப்பதில்லை.”

“உடலினுள் உறைந்தாலும் ஆத்மாவாகிய புருஷன் ஏன் செயல்படாமல், ஒட்டாமல் வெறும் சாட்சியாக மட்டும் இருந்து கொள்கிறான் கிருஷ்ணா?” என்று அர்ச்சுனன் கிருஷ்ணனை இடைமறித்துக் கேட்கிறான்.

அதற்குக் கிருஷ்ணர், அந்தச் சூரியனைக்கொண்டு மீண்டும் விளக்குகின்றார். “அர்ச்சுனா! சூரியன் எல்லா உலகங்களுக்கும் ஒளியை வழங்குகின்றான். ஆனால் அவனது ஒளியினால் பொருள்கள் விளங்குகின்றனவே தவிர, அந்த ஞானஒளியைத் தாம் பெற்றுத் தாமே சுயமாக ஒளிவீசச் செய்யும் தன்மையை அப்பொருள்களுக்குச் சூரியன் தந்துவிடுவதில்லை”.krisha_says

அதாவது சூரியன் இருக்கும் வரை பொருள்கள் தெரியும். சூரியனின் ஒளி மறைந்துவிட்டால் பொருள்கள் தெரியாது. சூரியன் ஒளி மட்டுமே. அப்படி ஒளிர்கின்ற சூரியன் ஒளியைப் படைப்பவனோ, உருவாகும்படி செய்பவனோ அல்லன். அதாவது அந்த சூரியனுக்கும் ஒளியாக இருந்து பிரகாசிப்பதும் பிரம்மமே.

ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்திரமாகிய படைப்பிற்கும், ஷேத்ரக்ஞனாகிய ஆத்மனுக்கும் உள்ள வேற்றுமையைப் பிரித்து உணர்கின்ற ஞானிகள் இயற்கையின் பிடியிலிருந்து விடுபட்டுப் பரம் பொருளை அடைகின்றனர். அவர்கள் தமது வாழ்க்கையில் எது நடந்தாலும் அவற்றோடு சம்பந்தப்படாமல் வெறும் சாட்சியாக மட்டும் இருந்து வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றனர். தம்மை அவர்கள் பரமாத்மாவுடன் இணைத்துக்கொண்டு, உடல் சம்பந்தத்திலிருந்து விலகி நின்று வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்கள் நிலைத்திருப்தால் அவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே பாதிப்பைத் தருவதில்லை. எனவே ஞானப்பயிற்சி மூலம் பரிணாம முன்னேற்றம் அடைய விரும்புகின்ற யாரும் இனி இந்தப் பொய்யான வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் உண்மையென்று நினைத்து மனமுடைந்து போகாமல், வருத்தப்படாமல், நடப்பவையெல்லாம் நன்மைக்கே எனத் திடமாய் உணர்ந்துகொண்டு, நான் பிரம்மம்! இவையெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்! வருவதை ஏற்போம்! என்று திடமாய் இருந்து, பொறுமையாய் ஏற்று வெறும் சாட்சியாய் இருக்க முயற்சித்தல் நன்று.

14.குணத்ரய விபாக யோகம்:

சில சமயம் சிலர் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து, இவன் என்ன இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறான்? குணம் கெட்டு நடக்கின்றானே? என்று பலரும் நொந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போது இவன் குணம் சரியில்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம்! என்று அவர்களை ஒதுக்கிவிட்டுத் தாம் விலகிப் போகின்ற சம்பவமும் எத்தனையோ பேருக்கு நடந்திருக்கும். இந்தக் குணம் என்பது என்ன? அது ஏன் அடிக்கடி மாறுகின்றது? அப்படி மாறி மாறி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? போன்ற விபரங்களை நாம் அறிந்து கொள்வதற்கு இந்தக் குணத்ரய விபாக யோகம் என்னும் 14வது அத்தியாயம் கண்ணனால் கீதையாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு நாம் பிறரைப் பற்றியும், நம் குண மாறுபாடுகள் பற்றியும் சிந்தித்துப் பார்த்துச் சரியாக நடந்துகொள்ள முடியும்.

த்ரய என்றால் மூன்று என்று பொருள். விபாகம் என்றால் பிரிவுகள் என்று பொருள். மனிதப் படைப்பில் அமைந்துள்ள மூன்று விதமான குணங்களை ஆராய்ந்து பார்க்கின்ற அத்தியாயம் இது. இந்த மூன்று குணங்களின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு விட்டால், ஒருவன் இந்தப் பிறவிப் பெருங்கடலை மகிழ்ச்சியாகத் தாண்டிவிட முடியும். மனித மனதின் தன்மை, அதன் போக்கு, செயல்பாடு போன்றவற்றை முழுவதுமாக அலசிப் பார்க்கின்றது இவ்வத்தியாயம்.

எத்தகைய மனிதர் என்றாலும் அவர் முக்குணங்களின் அடுக்குகளாய் அமைந்தவராகவே இருப்பார். அந்த முக்குணங்கள், சாத்வீகம், ரஜோ குணம், தமோ குணம் என்பவை ஆகும். ஒவ்வொருவரின் இயல்பில் ஒவ்வொரு குணத்தின் தன்மை மேலோங்கி நிற்கும். தமக்குரிய அடிப்படைக் குண இயல்பை ஒட்டிய நிலையில் அமைகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இந்தக் குணங்கள் மாறி மாறி அமையும். இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரவர் கா;மப் பதிவுகளுக்கு ஏற்ப அமைந்து இக்குணங்ளைத் துhண்டிச் செயல்பட வைக்கும்.

சத்வ குணம் மனிதனுக்கு ஞானஒளியையும், நன் மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜோ குணம் அவா, பற்று முதலிய குணங்களை அளித்துக் கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. தமஸ் எனும் தாமச குணம் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது. இம்மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று அதிகமாக இருக்கும். அவற்றிற்கேற்ப மனிதன் செயல்படுவான். பிறக்கும் பொழுதே கர்மப்பதிவுகளின் அடிப்படையில் ஒருவனுக்கு இந்த மூன்று குண இயல்புகள் அமைந்திருக்கும்.

சோம்பேறித்தனத்தை அளிக்கும் தமோ குணத்தை அகற்றி, அதன்பின் படபடக்கும் ரஜோ குணத்தை இல்லாமற் செய்து, பிறகு அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துகின்ற சத்வ குணத்தை வளர்க்க வேண்டும்.

ஒன்றுமே செய்யாமல் சோம்பலாய்ப்படுத்துக் கிடப்பதை விட, ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடத் தொடங்கினால், அந்தப் பழக்கமே இழுத்துக்கொண்டு போய்ப் பிறருக்கு ஏதாவது செய்வோமே என்று உதவியாகச் செயல்பட வைக்கும். தமோ குணத்தை ரஜோ குணமாக்கி, ரஜோ குணத்தை சாத்வீகமாக அமைதிப்படுத்தி உயரும் முயற்சி இது.