அருள் புரிவாய் அருணாசலா!

மேலாம் உயர்நிலை தன்னில் நிலை பெற
வரம் தருவாய் ஸ்ரீ அருணாசலா!
என்னை அழைத்தனை! ஆசி அளித்தனை!
ஆண்டுகொள்வாய் நீ, அருணாசலா!
உன்னில் நிலைத்திட, உன்னில் கலந்திட,
உதவிடுவாய் நீ, அருணாசலா!
இருக்கும் இடத்தினில் இதனை இழுத்திட
விரும்பிடுவாய் நீ, அருணாசலா!
பேதை என் உள்ளத்தில் ஒளிவிளக்காய் நின்று
ஒளிர்ந்திடுவாய் நீ, அருணாசலா!
அபயம்! அபயம்! என உன்னை அழைக்கின்றேன்
அணைத்திடுவாய் நீ, அருணாசலா!
நீதான் இவ்வுரு! நீ தான் இவ்வுயிர் – என்னுள்
நீ தான் இருக்கின்றாய், அருணாசலா!
உன்னை நினைக்கையில் உள்ளம் இனிக்குதே
உருகித் தவிக்குதே, அருணாசலா!
என்ன இது மாயம்! சொல்லத் தெரியவில்லை
உண்மை நீ அறிவாயே, அருணாசலா!
ரமண மாமுனிவரையும், சேஷாத்ரி நாதரையும்
ரமிக்க வைத்தாய் உன்னில், அருணாசலா!
என்னையும் அந்நிலையில் ஏற்று அருளிடுவாய்
நானும் அவர்தானே, சொல்! அருணாசலா!
நானென்பது நீயே! நீ என்பது நானே!
நமக்கினி பேதமில்லை அருணாசலா!
இருப்பது நீ என்றால் எனக்கினி ஏது பயம்?
இருந்திடு சுகமாய் நீ, அருணாசலா!
தன்னிலை தன்னில் தான் இருந்திடவே
தயை புரிவாய் நீ அருணாசலா!
அருணாசலா! அருணாசலா!
ஆருயிராய் நின்றாடும் அருணாசலா!
அருணாசலா! அருணாசலா!
அகிலமாய் நின்றாளும் அருணாசலா!

Advertisements