நங்கையருக்கு நலம் சேர்க்கும் நவராத்திரி

எண்ணிப் பார்த்தால் ஓர் இந்துவின் வாழ்க்கை தான் மிகுந்த ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். சலிப்பின்றிச் செயல்படு என்னும் கீதைக் கருத்தின் அடிப்படையில் தான் ஓர் இந்துவின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. தெய்வ நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அவனது வாழ்க்கை நகருகின்றது. அவன் தனது தெய்வத்தை விரும்பிய வண்ணம் எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். கட்டுப்பாடுகளோ, சட்ட திட்டங்களோ அவனுக்கு இல்லை. பல்வேறு தெய்வ உருவங்கள் –  பல்வேறு வழிபாட்டு முறைகள் – பல்வேறு வகையான பிரசாதங்கள் – பல்வேறு வகையான பண்டிகைகள்.

அமாவாசை தொடங்கிப் பெளர்ணமி வரை, விநாயக சதுர்த்தி முதல் தைப் பொங்கல் வரை என ஒவ்வொரு மாதமுமே, உழைக்கின்ற நேரம் போக மீதி உள்ள நாட்கள் எல்லாம் விதவிதமான பண்டிகைகள். இதயத் துhய்மையோடு அனைத்தையும் விடாமல் செய்துகொண்டு, வாழ்க்கைப் பிரச்னைகளையும் ஓர் இந்து எதிர்கொள்கின்றபோது அவனிடம் சோர்வேது? சலிப்பேது? கவலைதான் ஏது? மரணத்தையும் ஒரு சடங்காக ஆக்கி, அவற்றை முறையாகச் செய்வதன் மூலம் துக்கத்திலிருந்து ஒருவனை விடுவித்து வாழ வைப்பதல்லவா இந்து மதத்தின் சிறப்பு!

இவ்வகையில் நவராத்திரி பூஜை என்பது மிகவும் பொருள் பொதிந்த, அற்புதத் தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு கலை விழா. சக்தியின் உயர்வை, பெண்மையின் பெருமைகளை, பெண்களின் ஆற்றலை வெளிப்படுத்துகின்ற ஒப்பற்ற ஒன்பது நாள் திருவிழா இது.

மேலோட்டமாகப் பார்த்தால் கொலு வைத்தல் என்பது, ஒன்பது இரவுகளில் செய்யப்படும் பெண்களுக்குரிய விரதம், பூஜை, வழிபாடு, தானங்களுடன் கூடிய கலை வெளிப்பாடு என்பது மட்டும் தான் புரியும். ஆனால் அதற்கும் மேலாக இப்பண்டிகையின் உள்ளே பொதிந்து கிடக்கும் உண்மைகள் எனக்குள் விரிந்தபோது, அவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இதனை எழுதுகின்றேன்.

இறையருளால் குருவைச் சென்றடையும் வரை, நவராத்திரி என்பது நவரசம் பொருந்திய ஒரு சிறந்த பண்டிகையாக மட்டுமே எனக்குத் தெரிந்தது. விதவிதமான பொம்மைகளைத் தத்தம் ரசனைக்கேற்பக் கூடத்தில் கொலுப்படிகள் என்ற அமைப்பில் முறைப்படி அமர்த்தி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டல் செய்து, நம்மைச் சேர்ந்தவர்கள் வீட்டில் உள்ள பெண்களையும், குழந்தைகளையும் அழைத்து, அவர்களை அம்பிகையாக நினைத்துச் சகல உபசாரங்களையும் செய்து, மாபெரும் கலையுணர்வோடு கூடிய தெய்வத் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது என்று தான் எல்லோரையும் போல் நானும் நினைத்திருந்தேன். ஆனால் குருவின் விளக்கம் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாளிலிருந்து ஒன்பது நாட்கள் செய்யப்படும் இந்த சக்தி வழிபாடு பெண்களுக்கே உரியது. மனித வாழ்வின் உட்பொருளை மௌனமாக உணர்த்துவது. பல நுாறு பிறவிகள் உண்டு என்பது இந்து மதக் கொள்கை. இதைப் புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப், பாம்பாகிக் கல்லாய், மனிதராய், பேயாய்க் கணங்களாய், முனிவராய்த், தேவராய்….என்று மாணிக்கவாசகார் பரிணாம வளர்ச்சியையே பாடி வைத்துள்ளார்.

Navratri_Golu

இந்தத் தத்துவத்தை உள்ளடக்கியதுதான் கொலு வைத்தல் என்பது. தரையில் தொட்டிபோல் ஒரு நீர்நிலையை உருவாக்கி, அதனுள் மீன், வாத்து, தவளை போன்ற பொம்மைகளைப் போட்டு, அந்தத் தொட்டியைச் சுற்றி மண்ணைக்கொட்டி அதில் பல்வேறு தானியங்களை முளைக்கச் செய்வர். அதனை அடுத்து ஏழு அல்லது ஒன்பது படிகளை வடிவமைப்பர் கீழ்ப்படியில் காய்கறிகள், பழங்கள், செட்டியாரின் மளிகைக்கடை போன்றவை இருக்கும். அடுத்த படியில் நாய், பூனை, புலி, சிங்கம், கிளி, மயில் போன்ற பொம்மைகள் வைக்கப்படும். அதற்கு அடுத்த படியில் பாம்பாட்டி, குரங்காட்டி, மரமேறி, போலிஸ்காரர் என்ற வகையில் மனித பொம்மைகள், அதற்கும் மேலாகத் தேசத்தலைவர்கள், மகான்கள் போன்றவர்களை வைப்பார்கள் அதற்கடுத்த படியில் தெய்வ உருவங்கள் வைக்கப்படும். இவை தவிர துர்க்கை, அஷ்டலட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை மையப்படுத்தித் திருவிளக்கு, பூரண கும்பம், விநாயகர் ஆகியவற்றையும் வைத்துத் தினமும் விரதத்துடன் முறைப்படி பூஜை செய்வார்கள்.

இந்த கொலுப்படி அமைப்பு மனிதப்பிறவியின் பரிணாம வளர்ச்சியையே குறிப்பது என்ற உயரிய உட்பொருள் இப்பொழுது உங்களுக்கும் விளங்கியிருக்கும்.

நவராத்திரி பூஜை செய்யும் பெண்கள் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள். இதன் பொருள் வீரமும், செல்வமும், கல்வியும் எமக்களிப்பாய் என்று தான் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். இப்படித்தான் எல்லோரும் விளக்கமும் தருகின்றனர். நோய்நொடியின்றி உடல் நலத்துடன், பூரண சக்தியுடன் செயல்பட வேண்டும் என துர்க்கையையும், சகல செல்வங்களையும் அடைந்து நிறைவாக வாழ வேண்டும் என்று லட்சுமியையும், உலகிலுள்ள சகல கலைகளிலும் வல்லவராக வேண்டும் என சரஸ்வதியையும் வேண்டுகின்றோம்.

இந்த வழிபாட்டின் தத்துவம் மேலும் விரிகின்றபோது, துர்க்கையானவள் எம்முள் இருக்கின்ற தீய குணங்களாகிய அரக்கர்களை அறவே அழித்தொழித்து எம்மைத் துர்க்குணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். லட்சுமி தேவி, துர்க்குணங்கள் நீங்கப்பெற்ற நிலையிலிருக்கும் எங்களை நற்குணங்களாகிய செல்வத்தால் நிரப்ப வேண்டும். ரஜோ, தமோ குணங்கள் நீங்கி சத்வகுணத்துடன் நாங்கள் வாழ வேண்டும். சரஸ்வதி தேவியானவள், வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பதோடு நாங்கள் நின்றுவிடாமல், வாழ்வின் நோக்கத்தை அறியக்கூடிய ஞானத்தை அருள வேண்டும் என்பதாக விளங்குகின்றது.

இதற்கும் மேலாக ஆழ்ந்து பார்க்கின்றபோது, சம்பிரதாய வழிபாட்டு முறைகளிலிருந்து நீங்கிக் குருவை அடைந்து, ஞான உபதேசம் பெற்று ஆன்ம விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டுத் தியானத்தில் ஆழ்கின்ற நிலையில், இந்த வழிபாட்டிற்கு மற்றொரு புதிய விளக்கம் கிடைத்தது.

Durga

துர்க்கை ஓர் அரக்கனின் தலையை அறுத்து ரத்தம் சொட்டச்சொட்ட ஒரு கையில் வாளையும், மறு கையில் அரக்கனின் தலையையும் பிடித்திருப்பதன் உட்பொருள், தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் பிறப்புத்தொடரிலிருந்து நான் விடுபட வேண்டும்.  கர்ம வினைகளாகிய பந்தங்களிலிருந்து அறவே விடுபடச் செய்வாய்! என்பதே ஆகும். இனி ஒரு பிறவி வேண்டாம் என்பது இந்து மதத்தின் உயரிய கோட்பாடு.

சரி! மனித குணங்களிலிருந்து என்னை விடுபடச் செய்யும்படி, அதன் மூலம் பந்த விடுதலை அளிக்கும்படி அன்னை துர்க்கையிடம் வேண்டியாயிற்று. அடுத்துத் தெய்வ நிலையை நான் அடைவதற்கு அன்னை மகாலட்சுமி தான் அருள வேண்டும். சுயநலம் நீங்கிச் சமுதாயத்தையே நேசிக்கின்ற மனநிலைதான் தெய்வீகம். அந்நிலை யடைந்தவர்களைத் தான் மகான்களாக மக்கள் போற்றுகின்றனர். அந்த தெய்வீகச் சம்பத்தை அளிப்பவளே லட்சுமியாக காட்சி தருகிறாள்.

அதற்கடுத்து சரஸ்வதி. துர்க்குணங்களும், மனிதக் குறைபாடுகளும் நீங்கித் தெய்வீகத் தன்மையை அடைந்தபின், இந்தப் பிறவி சமுதாயத்திற்குப் பயன் பட வேண்டும். தெய்வீகத் தன்மை என்பது அஷ்டமாசித்திகளை அடைகின்ற நிலை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு இருந்த இடத்திலேயே ஐம்புலன்களும் உலகளவில் விரிந்திருக்கும். தனக்குள்ளே இருக்கின்ற தன்னைத் தானாக உணர்கின்ற இந்நிலையில் பிறர் சொல்வதும், நினைப்பதும் கூடத் தெரியவரும். தொலைநோக்குப் பார்வை ஏற்படும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும். நினைப்பவை நிறைவேறும். இப்படிப்பட்ட சக்திகளைத் தான் அஷ்டமாசித்திகள் என்பர்.

இந்நிலையடைந்தவர்களிடமும் ஒரு குறை இருக்கும். அது ஈகோ எனப்படும் அகங்காரம். இது இழையளவாவது அவர்களிடம் ஒட்டியிருந்தால், அது அறியாமையால் ஏற்படுவது. இந்த அறியாமையும் நீங்கிவிட வேண்டும். நான் என்பது இறைசக்தியே! என்னும் ஞானம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அன்னை சரஸ்வதியை வேண்டிப் பணிவது.

ஞானம் என்பது பூரணம். முழுமையாக நிறைந்துவிடுதலே ஞானம். இதைத்தான் “பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தால் மிஞ்சுவதும் பூரணமே!” என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. இந்தப் பூரண ஞானத்தை அருளுபவள் சரஸ்வதி.

தேகாபிமானம் என்னும் அறியாமை நீங்கி ஞானம் பெற்று, அஷ்டமாசித்திகளைப் பெற்றும் அவற்றை உள்ளடக்கி, உலகளவில் விரிந்தவராகி, அன்பு, கருணை, சாந்தம், மௌனம் ஆகியவற்றைத் தம் இயல்புகளாக்கிக் கொள்பவரே உண்மையான உயர்வு பெற்றவர்கள்.
அவர்களிடம் சலனங்கள் இல்லை. பூரண நிறைவுத்தன்மை மட்டுமே இருக்கும்.

இந்த நிலையில் வெளிப்படுவதுதான் தெய்வீகம். மனித நிலையில் வெட்டவெட்டத் துளிர்ப்பது ஆசைகளும், எண்ணங்களும். இவற்றைத்தான் துர்க்கை கையில் வாளுடன் நின்று வெட்டி எறிகின்றாள். அவளது இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டியிருப்பதால் தான் வேகமும், உக்கிரமும் கொண்டவளாய் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றாள்.

நல்ல குணங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. அடிக்கடி மாறக்கூடியவை. சூழ்நிலைக்கேற்ப அமைபவை. இதைத்தான் நின்ற நிலையில் ஒரு காலை முன்வைத்துக் காட்சியளிக்கும் லட்சுமி புலப்படுத்துகின்றாள். லட்சுமி ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை என்பதன் பொருள் இதுதான். வைராக்கியத்துடன் தர்ம வழியில் நிற்பவர்களிடம் பண்புச் செல்வம் நிலைத்திருக்கும்.

துர்க்கையும் லட்சுமியும் பல அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் சரஸ்வதிதேவிக்கு அவதாரங்கள் இல்லை. ஞானம் பெற்றுவிட்டால் பிறகு எவ்வித மாற்றமும் நிகழாது. சரஸ்வதி ஞானமே வடிவானவள். நிலைபெற்று மாறாத தன்மை கொண்டவள். சூரியன் வந்துவிட்டால் பிறகு இருட்டிற்கு வேலையில்லை. ஒளி வந்தபின் இருள் எப்படி இருக்க முடியும்?  ஞானமே வடிவாகிய சரஸ்வதி இதை உணர்த்தவே அமர்ந்தகோலத்தில், துாய வெண்மையில் அனைத்து அலங்காரங்களையும் பெற்றவளாய், ஜெபமாலையையும், வேதங்களையும் கையிலேந்தியவளாய் அருட் புன்னகையுடன் ஆனந்தமயமாகக் கலைகளுடன் கூடியவளாய் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள்.

இத்தகைய ஆழ்ந்த தத்துவங்களை உள்ளடக்கிய, மூன்று சக்திகளை முறையாக ஒன்பது நாட்கள் வழிபடுவதன் மூலம் பெண்கள் தம் குடும்பத்திற்கே நலம் சேர்க்கின்றனர். தெய்வீக நிலையில் உள்ள பெண்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால், அக்குடும்பம் எத்தகைய உயர்வு நிலையில் சிறந்து விளங்கும்! எனவே தான் நம் முன்னோர் பெண்ணைக் குடும்பத்தின் ஒளி விளக்கு என்று உயர்வாகச் சொல்லி வைத்தனர். இந்த நிலையைப் பெண்கள் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை சிறப்பாக இந்த நவராத்திரி என்னும் பண்டிகை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நாமோ காரணம் தெரியாதவர்களாய், இந்து மதத்தின் காரியங்களை மட்டும் பரிகசித்துக் கொண்டிருப்பவர்களாய், உள்தோய்ந்து வழிபடாமல், அது வேண்டும், இது வேண்டும் என்று புலம்பியபடி நம் பிரார்த்தனையை வெறும் சடங்காகச் செய்கின்றோம். நம் மதத்தின் பெருமை புரியாததால்தான் மத மாற்றம் பெருமளவில் நம்மவரைக் கொள்ளை கொண்டுபோகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். சிந்தியுங்கள்!

இவ்வாறு குடும்பத்திலிருந்தபடி சமுதாயத்தை நோக்கி விரியும் பண்டிகையாக, சமுதாயத்தை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்யும் கலைவிழாவாக இந்த நங்கையருக்கு நலம் சேர்க்கும் நவராத்திரி அமைந்து, நமது பண்பாட்டின் பெருமைகளை உலகிற்குப் பறை சாற்றுகின்றது.

Print

Advertisements