மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -34

தமது அகமுக நாட்டத்தால், தம் உள்ளுணர்வால், தமக்குள் ஒளிந்திருக்கும் அந்த மாபெரும் சக்தியின் அணுக்கூற்றினைக் கண்ட நம் முன்னோர்களான தவ சிரேஷ்டர்கள், அந்த அணுசக்தியின் துணைகொண்டே இந்த மாபெரும் ரகசியத்தை அறிந்து கொண்டனர். எனவே தான் இதனை அறிவதை ஸ்ரீ கிருஷ்ணர் ‘ராஜகுஹ்யா ராஜ வித்யா’ என்று குறிப்பிட்டார்.

இப்படிப் பிரம்மத்தால் உணர்த்தப்பட்ட ராஜகுஹ்யாவை அவர்கள் வேதங்களாக உரைத்தனர். தெய்வாம்சம் பொருந்திய அவர்கள் சிஷ்யர்களுக்கு அதைப் போதித்து அவர்களில் இந்த வித்தையை பதித்தனர். நீ தான் அது! என உரைத்தனர். இதுவும் பிரம்ம வெளிப்பாட்டின் விருப்பமே. தனது மகிமையை, தான் இப்படி வெளிப்பட்டு ஜெகஜ்ஜாலம் புரிவதைத் தன் படைப்பிற்குத் தானே புலப்படுத்தி, அதை உணர வைத்து மகிழ்கின்றது அந்த மாபெரும் சக்தி.

இப்படித் தானே எல்லாமாக வெளிப்பட்ட பிரம்மம் ஒரு திருவிளையாடல் புரிந்தது. அது தன்னை அந்தப் படைப்புக்களின் உள்ளே ஒளித்துக்கொண்டு, அறியாமை, மாயை போன்றவற்றை உலவ விட்டுப் புலனின்பங்களில் நாட்டத்தை ஏற்படுத்தி, மனதின் கவனத்தை வெளியில் அனுப்பிவிட்டு, அவற்றின் பிடியிலிருந்துகொண்டே தன்னைத் தேடவும் வைத்தது. அப்படித் தேடுவதற்குத் துன்பங்கள், தோல்விகள், கஷ்டங்கள், துர்க்குண பாதிப்புகள் ஆகியவற்றைக் கருவிகளாகக் கையாண்டது.

மாயையின் தன்மையைப் புரிந்து கொண்டவர்கள் தன்னைத் தேடத் தொடங்குகின்றபோது, துன்பத்தால் துவண்டு சரணாகதி செய்கின்றபோது, அது குருவின் உருவில் தானே தன்னை வெளிப்படுத்தித் தாங்கிக்கொள்கின்றது. வழி காட்டுகின்றது. உபதேசிக்கின்றது.. பிரம்மம் சொல்லிப் பிரம்மமே கேட்கின்ற நிலை இது. புரிகிறதா?

இது இப்படி இருக்க, இங்கு இந்த குருஷேத்திர யுத்தகளத்தில் இந்த நிலையில் குழம்பித் தவித்த அர்ச்சுனன் நீயே குரு! நீயே கதி! என்னைக் காப்பாற்று! என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்து விட்டான். பகவானும் குருவாக நின்று பிரம்ம தத்துவத்தை உபதேசித்தருளினார். அதோடு மட்டுமின்றித் தமது திவ்யத் திருஉருவைப் பிரபஞ்ச அளவிற்கு விரித்து, ஒளிவு மறைவின்றித் தனது பிரியனான அர்ச்சுனனுக்குக் காட்சியாகவே காட்டித் தந்தார்.

ஒரு மனிதன் தன் சாதாரணக் கண்களால் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட தூரத்திற்குத் தான் பார்க்க முடியும். விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு விஞ்ஞானிகள் அதி நுண்ணிய தொலைநோக்குக் கருவிகளின் துணை கொண்டு தான் தம் கண்களால் பார்க்கின்றனர். மிக நுண்ணியதான ஒன்றையும் ஒரு உருப்பெருக்கிக் கருவி மூலம் பார்க்க முடியும்;. ஆனால் மனிதன் பிரம்மமே ஆனாலும் அவன் வரையறைகளுக்கு உட்பட்டவன். மனித நிலையில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியாது. எனவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குக் கால தேவனாக, பிரபஞ்ச புருஷனாக, விஸ்வரூபனாக விரிந்து நிற்கும் தன்னைப் பார்க்க ஞான திருஷ்டியாகிய திவ்ய திருஷ்டியை அளித்துப் பார்க்கச் சொன்னார்.

இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், இங்கு போர்க்களத்தில் பிறர் காண்பதற்கரிய தரிசனத்தைக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குக் காட்டியபோது அங்கே அஸ்தினாபுரத்தில் கண்களற்ற திருதராட்டிரனுக்குத் தொலைநோக்குப் பார்வையால் போர்க்களக் காட்சிகளைப் பார்த்து விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்த தேர்ப்பாகனாகிய சஞ்சயனும் அதனைத் தரிசித்தான் என்பது தான்.

பிரம்மத்திற்கு அர்ச்சுனனும் ஒன்று தான், சஞ்சயனும் ஒன்று தான். பரம பக்தனான, தர்ம சாத்திர அறிவுபெற்ற, உத்தமனான சஞ்சயனுக்கு ஞான திருஷ்டி வியாசரின் அருளால் கிடைத்திருந்தது. அந்த ஞானதிருஷ்டி பிரபஞ்சத் திரு உருவக்காட்சியையும் பார்க்கத்தானே செய்யும். சஞ்சயன் அதற்குத் தகுதி பெற்றவன் ஆகின்றான். இந்த உடல் என்னும் உறை யாராகவும் இருக்கலாம். அது எந்த நிலையிலும் இருக்கலாம். உள்ளுறையும் உயிர்ப்பொருள் ஒன்றே. அது வெளிப்படும் அளவிற்கு அந்த உறையின் தகுதி மேம்படுகிறது அல்லது தாழ்கின்றது என்பதே இதன் உட்பொருள்.

ஓர் அணுவைப் பிளந்தால் அதன் சக்தியால் 80 முறை இந்த உலகத்தைச் சுற்றி வரலாம். அவ்வளவு ஆற்றல் மிக மிக நுண்ணியதான ஓர் அணுவில் இருக்கின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள். அணுவிற்குள் அணுவாய் இருப்பது அந்தப் பிரம்மம். அணோரணியான்!.மஹதோ மஹீயான்! என்று கீதை பிரம்மத்தைக் குறிப்பிடுகின்றது.

அண்டமும் அணுவும் ஒன்று. அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பதைக் குறியீடாக வைத்துத்தான் கோவில்களில் தெய்வப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்கின்றபோது அண்டமெல்லாம் பரவியிருக்கின்ற அந்தப் பிரம்ம சக்தியை மந்திர ஒலிகளால் வசீகரித்துக் கும்பத்தில் இறக்கி நூலைக்கட்டி அதன் தொடர்பால், அதன் வழியே மூலக் கிரகத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்ற தெய்வச் சிலைக்கு அண்ட சக்தியை இறக்குகின்றனர். மேலும் சிலை பதிக்கப்படுகின்ற பீடத்திலே சக்தி பொருந்திய மந்திரத் தகடுகளையும், பல்வேறு தெய்வீக சக்திகளைத் தம்முள் கொண்டுள்ள விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்களையும் ஆகர்ஷண சக்தியாக, அடித்தளமாக ஆகம முறைப்படி வைத்து, பூஜித்து வெறும் சிலையைத் தெய்வீக ஆற்றல் மிக்கதாகச் செய்திருக்கின்றனர் நம் பெரியோர்.

இப்படி சகல தெய்வங்களாகத் திகழ்வதும் நானே! என்பதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது விஸ்வரூபத்தால் நிதரிசனமாக அர்ச்சுனனுக்கு எடுத்துரைத்தார். எனக்குள்ளே என்னைப் பார்ப்பது தான் விசுவரூப தரிசனம். இந்தத் தரிசனத்தால் நாம் உணர வேண்டியது, இவ்வளவு பரந்து விரிந்த பரம்பொருளின் விகசிப்பில் நானும் ஓர் அங்கம். பிரம்ம விளையாட்டில் எனக்கும் அணுவளவு பங்கு இருக்கிறது என்பதைத்தான், இந்த எண்ணம் எனக்குள் ஊறிவிட்டால் பிறகு நான் யாரையும் வெறுக்கவோ, மறுக்கவோ, கோபிக்கவோ இயலாது. ஏனெனில் நான் அவன்.

பிரம்மமே உயிராகி
உயிரே உடலாகி
உடலே உருவமாகி
உறவுகளே வாழ்க்கையாகி
வாழ்க்கையே அனுபவங்களாகி
அனுபவங்களே ஞானமாகி
ஞானமே யோகமுற்று
உடல் பிரிந்து மீண்டும்
பிரம்மமாகின்றது.

பரம்பொருளின் அங்கமே ஒவ்வோர் உடலும் என்றான பின் நாம் அகங்காரப்பட என்ன இருக்கிறது? அகங்காரம் இனி எவ்வாறு ஏற்படும்? இங்கிருப்பதும் அவன்தான் என அறிந்த பின்னர் அகங்காரம் நீங்கும்! அன்பு பெருகும்.

சரி வாருங்கள்! இனி அர்ச்சுனனின் பார்வையில் நாமும் அந்த அற்புதக் காட்சியைக் காண முயல்வோம்!

Advertisements