மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 49

நீண்ட நெடுங்காலமாக ஒரு சந்தேகம், ஒரு சண்டை, ஒரு குழப்பம் சனாதன தர்மவாதிகளிடையே நிலவி வருகிறது. அது உண்மையில் யார் பிரம்மம்? என்பதே. எது பிரம்மம் என்பதல்ல வினா. யார் பிரம்மம்? என்பதுதான். அதாவது பிரம்மத்தைப் பல்வேறு உருவங்களாக்கி, அவற்றிற்குப் பெயர்களையும், குணங்களையும், அவற்றிற்கேற்ற கதைகளையும் உருவாக்கி வைத்ததால் வந்த வினை இது.

பாமரனுக்கு எந்தவொரு தெய்வத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு கல் அல்லது ஒரு மரம் அல்லது தான் தொழிலுக்குப் பயன்படுத்துகின்ற ஒரு கருவி போதும், அவன் தொட்டுக் கும்பிட்டுப் பக்தியோடு வாழ்வதற்கு. ஆனால் படித்துப் படித்து மண்டை வீங்கியவர்களுக்குத் தான் ஏகப்பட்ட குழப்பம்.
devi_trinity எல்லாவற்றிற்கும் மேலான பிரம்மம் ஆதிபராசக்தி என்றும், பரமேஸ்வரனான சிவனே பிரம்மம் என்றும், ஸ்ரீமந் நாராயணனே ஆதிமூலம் என்றும் இப்படி இன்னும் அடுக்கடுக்காகப் பல தெய்வங்களை இது தான் மூலம், அதுதான் மூல முதற் பொருள், எல்லாவற்றிற்கும் மேலான சக்தி இதுதான் என்று பலவிதமான வாதங்களும், பிடிவாதங்களும், ஏற்றிப் பேசுவது, குறைத்துப் பேசுவது என்றும் நடைமுறையில் இருப்பதை நாம் அறிவோம்.

எல்லாவற்றையும் விட சைவமும், வைணவமும் அடித்துக்கொள்வது தான் பெரிய கூத்து. இரு சாராருமே தங்கள் பிடியை விடுவதில்லை. ஆனால் புராணங்களும், கதைகளும் சிவனும், விஷ்ணுவும் ஒருவரையொருவர் வணங்குவதாகவும், போற்றுவதாகவும் கூறி ஹரியும் சிவனும் ஒன்று என்று தெளிவுபடக் கூறினாலும் கூட இவர்கள் ஏற்பதில்லை. இதற்கு என்ன காரணம்?

மனித இயல்புதான் இதற்குக் காரணம். மனித இயல்பு என்ன? மூன்று வகையான குணங்களுக்கிடையே மாட்டிக்கொண்டு அடிபடுவதுதான். இக்குண எழுச்சியும் தெளிவில்லா அறிவும் தான் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் திண்டாடுவதற்குக் காரணம் என்று சொல்லலாமா? எனவே தான் புலன்களால், மனதால், புத்தியால், அகங்காரத்தால், அனைத்தையும் கடந்ததான, நமக்குள்ளேயே இருப்பதான பிரம்மத்தை அறிய முடியாதெனக் கிருஷ்ணர் கூறினார்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளுமே பிரம்மத்தால் படைக்கப்பட்டவர்கள் தான். நியதியின் வரையறைகளுக்கு உட்பட்டவர்கள் தான். பிரம்மம் எனக் குறிக்கப்படுகின்ற மகா நுண்ணுணர்வு, பேராற்றல் ஆதியானது. அனைத்திற்கும் மூலமானது. நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே! போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே! என்றெல்லாம் தெரிந்தவர்கள், தமக்குத் தெரிந்ததைப் பல்வேறு விதமாக, மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். நம்மால் தான் அவர்கள் சொல்லி வைத்ததைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கின்ற அது, தன் சுய விருப்பத்தால் விரிந்தது. இந்த விளக்கத்தை அனுபவத்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் அநாதியாய் இருந்த அது, தான் மட்டுமே ஆக இருந்த அது, தன் விருப்பத்தால் விரிந்தது. பிரபஞ்சம் உருவெடுத்தது. கோள்கள், பஞ்சபூத சக்திகள், மும்மூர்த்திகள் என ஒரு மைக்ரோ செகண்டில் பிரம்மம் மலர்ந்தது, உலக மாயையாக. எல்லாம் நிலை பெற்றன, இயங்கின. ஆனால் இப்படி வெளிப்பட்டு, நிலைபெற்று, இயங்குகின்ற இவை எல்லாமே….அது தான்! பேராற்றலின் வெளிப்பாடே இவையெல்லாம்.

பிரம்மம் தன்னை இப்படி அழியாததாகவும், அழியக்கூடியதாகவும் நாம, ரூபங்களைக் கொண்ட சிருஷ்டிகளாகவும் அமைத்துக்கொண்டு தன் பிரபஞ்ச விளையாட்டைத் தொடங்கியது. இங்கு எல்லாமே அதுதான். இயக்குவதும் அதுதான். பிறப்பதும் அதுதான். அழிவதும் அதுதான். இப்படி எல்லாமே அதுதான் என்கின்ற நிலையில், மூலமாகிய அது நானே! என்று சிவனும், விஷ்ணுவும், பிரம்மா இப்படியெல்லாம் சொல்வதாகத் தெரியவில்லை. ஆனால் மூன்று தேவியர், விநாயகர், முருகர் போன்ற தெய்வங்கள் எல்லாமும் சொல்வதாகப் புராணங்கள் பேசுகின்றன.

அவர்கள் எல்லாம் ஏன் அப்படிச் சொல்லிக்கொள்கின்றனர்? அந்தப் பிரம்மம் தான் சிவனாகவும், விஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும், துர்க்கையாகவும் இருப்பதால் அந்த உண்மையை உணர்ந்த நிலையில் அவை நான் பிரம்மம் என்று சொல்கின்றன. இப்படி இந்தப் பார்வையில் பார்க்கின்ற போதுதான் குருவின் வார்த்தை நமக்குப் புரியும்.

நீ தான் அது! என்கிறார் குரு. குற்றங்களும், குறைகளும் கொண்டவர்களாக நம்மைப்பற்றி நாம் அறிந்திருக்கின்ற நிலையில் நீ தான் அது என்று கூறி நான் கடவுள் என்று நம்மை உணரச் சொன்னால் நம் மனம் அதை ஏற்க மறுக்கின்றதே! யாராவது நான் கடவுள் என்று சொன்னால் அவர்களைப் பரிகாசம் செய்யத் தோன்றுகின்றதே!

அதற்குத்தான் இந்த விளக்கம். நான் கடவுள் என்றால் இந்த விஜயா என்பவள் கடவுள் அல்ல. எனக்குள் சதா சர்வ காலமும் நான்…நான்…நான் என்ற ஓர் உணர்வு ஒலித்துக்கொண்டு இருக்கிறதே, அந்த நான் என்ற உணர்வு தான் கடவுள். இந்த உடம்பிற்குள் அது இருக்கின்ற வரை நான் பேசுவேன், சாப்பிடுவேன், செயல்படுவேன்.

இருட்டின் தனிமையில் நான் உட்கார்ந்திருந்தாலும், நான் இருக்கிறேன் என்பதை அறிந்திருப்பேன். பக்கத்தில் இருந்தவர் இருக்கிறாரா, அல்லது எழுந்து போய்விட்டாரா என்பது இருட்டில் எனக்குத் தெரியாது. ஆனால் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். இந்த உணர்வு ஒரு பிணத்திற்கு இருக்காது. ஏனெனில் அங்கு அந்த நான் என்பது இல்லை.

எனக்குள் துடித்துக்கொண்டிருக்கிற அந்த நான் என்பது எது? இந்த உலகத்த்தில் உள்ள அத்தனை மனிதர்களின் உள்ளேயும் துடிப்பதும் அதுதான். மனிதர்கள் மட்டுமல்ல. சகல ஜீவராசிகளும், சடப் பொருள்களும் கூட அதுதான். இந்நிலையில் நாம் பார்க்கின்ற அனைத்துமே பிரம்ம ஸ்வரூபம். இதைத்தான் கண்ணன், மற்ற தெய்வங்கள், மகான்கள் என சத்தியத்தை உணர்ந்த எல்லோருமே சொல்கின்றாh;கள். இதைத்தான் குருவும், நீ தான் அது என்று சொல்லி உணர்த்துகின்றார். இதையே, அது நீயாக இருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படிச்சொன்னால் இன்னும் தெளிவாகப் புரியும்.

பிரம்மம் தன் விரிவில் ஒரு சொட்டாக, நானாக வெளிப்பட்டு, இந்த வாழ்க்கையைத் தன்னை மறைத்துக்கொண்ட நிலையில் வாழ்ந்து விளையாடுகின்றது. ஆனால் இந்த விளையாட்டில் மாயையைப் புகுத்தித் தன்னை மறக்கச்செய்து, பிறகு தேட வைத்துக் கண்டுபிடித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்கின்றது. அப்பாடா! இந்த விளையாட்டு மிக நீண்ட விளையாட்டு. யுகம் யுகங்களாகப் பலப் பல பிறவிகளாகப் பிரித்துப்போட்டுத் தான் ஒன்றே எல்லாமாக விளையாடுகின்ற விளையாட்டு. இந்தப் புதிர் புரிகின்றவரை விளையாட்டும் தொடர்கின்றது, பிறவிகளாக.

இதில் ஆணிவேராக, அணுவிற்கு அணுவாக நமக்குள்ளும், அப்பாலுக்கப்பாலாக எல்லாமாக விரிந்தும், அந்த விரிவைக் கடந்தும் நிற்கின்ற அந்த நுண்ணுணர்வு, கீதையில் கிருஷ்ணனாகத் தன்னை வெளிப்படுத்தி மிகத் தெளிவாகப் பருஷோத்தமன் என்று சொல்கின்றது.

Advertisements

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 25

நல்லொழுக்கமும் நற்பண்புகளுமே தர்ம வழியில் நடப்பதாகும். இப்படித் தர்மவழியில் நடப்பவருக்குத் தான் இந்த ஞானம் ஏற்படும். நல்லொழுக்கமும் நற்பண்புகளும் யாருக்கு இல்லையோ அவருக்கு ஞானம் ஏற்படாது. இவை இரண்டும் இருந்தபோதிலும் கூட ஞானம் ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம் என்பதும் உண்மை. “எவனொருவன் மனதை ஒருமுகப்படுத்தி ஆத்ம தியானத்தில் முழமையாக ஈடுபடுகிறானோ, அவனே எனக்கு விருப்பமானவன். அப்படி வருபவர்களிலும் என்னைத் தன் தியானப் பொருளாகக் கொள்பவர் சிலரே. அவரிலும் என்னையும் என் உண்மை நிலையையும் அறிந்துகொள்பவர்கள் மிகச் சிலரே!” என்று கிருஷ்ணர் உரைக்கிறார்.

ஒன்றைப்பற்றி அறிவது வேறு. அறிந்ததைப் புரிந்துகொள்ளுதல் என்பது வேறு. ஆகவே அறிவிற்கு அப்பால் அனுபவ நிலையில் யார் உணர்கிறார்களோ அவர்களுக்கே வேதாந்தம் போதிக்கப்பட வேண்டும். இறைவனைப்பற்றி சொல்லால் அறிய வைப்பதே ஞான உபதேசம் ஆகும். குரு சொல்கின்றபோதே இந்த ஆனந்த அனுபவத்தை உணர்பவருக்குப் பூரண அமைதி ஏற்பட்டுவிடும். வீட்டில் பிரச்சினை என்று எதுவும் இருக்காது. அப்படியே மலைபோல் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் அது சிறு துரும்பைப் போல் ஆகிவிடும். அது அவரை பாதிக்காது. மேலும் வந்ததைப் போலவே தானாக விலகிப்போய்விடும்.

பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், “இவற்றிற்குள்ளே, இவற்றிற்கப்பாலாய் நான் மூலமாய் இருக்கின்றேன். எனக்கு இரு வகை சொரூபங்கள் உள்ளன. உயிருள்ளதாயும், உயிரற்ற ஜடப்பொருளாகவும் இருப்பது நானே! இவ்விரு சொரூபங்களின் சேர்க்கையால் தான் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன” என்று. அதாவது இயற்கைத் தன்மையுடன் கூடியதாய் அமைந்துள்ள இந்த உடலும் பிரபஞ்சமும் ஜடப்பொருள்கள். இவற்றோடு சைதன்யம் சேருகின்றபோது அவை இயங்குகின்றன. சைதன்யம் இவற்றைக் கைவிடுகின்றபோது இயக்கம் நின்று சடப்பொருளாகிவிடுகிறது. கண் இருந்தாலும் பார்க்க முடியாது, கைகள் இருந்தாலும் அசைக்க முடியாது.

உலகம் இன்பமயமானது. நமக்கு ஏற்படுகின்ற உடல், மனக்குறைபாடுகளால் தான் இதனைத் துன்பமயமானதாக நினைக்கிறோம். நான் பரிபூரணமான பிரம்மம் என்ற அறிவைப் பெற்றுவிட்டால் அது ஞானம். இப்படிப் பெற்ற அறிவை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழப் பழகினால் அது விஞ்ஞானம். நான் பெற்ற அறிவும், எனது அனுபவமும், நான் அவனே என்ற உணர்விலேயே நிலைத்திருந்தால் அது யோகம். இது தான் ஞான விஞ்ஞான யோகத்தின் விளக்கம்.

இந்த ஞானத்தைப் பெறுவதற்கு ஒருவர் முதலில் சத்சங்கத்தை நாட வேண்டும். அதில் தொடர்ந்து தன்னைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அங்கு மூன்று வழிகளைப் பின்பற்றப் பழக வேண்டும். அவை
1.சிரவணம் (குரு சொல்பவற்றைக் கவனமாகக் கேட்டல்)
2 மனனம் (கேட்டதைத் திரும்பத் திரும்பச் சிந்தித்தல்)
3. நிதித்யாசனம் (சிந்தித்தவற்றைப் புரிந்துகொண்டு தனதாக்கித் தன்வயப்படுத்துதல்) என்பவையாகும்.
இவற்றில் சிரவணம் மிக முக்கியம். மற்றவை இதனைத் தொடர்ந்து வருபவை.

வேதாந்தத்தை சிரவணம் செய்வதற்கு சப்தப்பிரமாணம் தான் சாதனமாக அமைகிறது. இந்த சிரவணம் என்னும் சொல்லை இன்னும் விளக்கமாகப் பொருள்படுத்தினால் கேட்டல், சிந்தித்தல், தெளிவு பெறுதல், உணர்தல், அனுபவித்தல், ஐக்கியப்படுதல், பிரதிபலித்தல்; என்றெல்லாம் வரும். கேட்டலில் இவ்வளவும் அமைய வேண்டும்.

குரு, சொற்களைத் துல்லியமாகப் பதம் பதமாகப் பிரித்து ஞான விளக்கம் செய்ய வேண்டும். வேதாந்த உண்மைகளை உண்மையாக உணர்ந்தவரும், குரு பரம்பரை வழி பயிற்சி பெற்றவருமான குருவாக அவர் இருக்க வேண்டும். பிரம்மத்தில் தோய்ந்த நிலையில் அவர் திகழ வேண்டும். அதோடு வேதாந்தம் இந்த ஆன்மீக அறிவை எனக்கு உணர்த்தும் என்ற நம்பிக்கையும், சிரத்தையும் நமக்கு இருக்க வேண்டும். இது ஆத்மசாதகர்களுக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதி.

அன்பர்களே! நமக்கு நடைமுறை வாழ்க்கையில் தெரிய வராத பல விஷயங்களைப்பற்றி இப்பொழுது நாம் ஆராயத் தொடங்கியிருக்கின்றோம். சிரமப்பட்டால்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். இனி வர இருக்கும் பகுதியைச் சற்றுத் தீவிர கவனத்துடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் வாசிக்க வேண்டியது அவசியம். இதைத்தான் சிரத்தை என்று ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் மேலெழுந்தவாரியாகப் படித்துக்கொண்டு போனால் தலையைச் சுற்றும். கண்களையும் சுழற்றும். ஆர்வத்துடன் முனைந்து படிக்க முற்பட்டால் மிகத் துல்லியமாக விளங்கும். ஏனெனில் இவற்றையெல்லாம்பற்றி வெறும் சொற்களால் மட்டுமே விளக்க முடியும்.

குருவால் விளக்கப்படுகின்ற வேதாந்தக் கருத்துக்களைத் தம்மில் கொண்டிருப்பவை வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வேதங்கள் நான்கு என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த வேதங்கள் இரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
1. கர்ம காண்டம். இதில் ஒரு பகுதி உபாசன காண்டமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
2. ஞான காண்டம். முதல் காண்டமாகிய கர்ம காண்டத்தில் யாகங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், தேவையானவற்றை உரிய தேவதையிடம் வேண்டிப் பெறக்கூடிய மந்திரங்கள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இவை நடைமுறை வாழ்க்கைக்கு உரியவை. இதனை பூர்வபாகம் என்றும் சொல்லுவார்கள். நாம் செய்ய வேண்டியவை, அடைய வேண்டிய உலகங்கள், மழை பொழிய, புத்திரப்பேற்றிணை அடைய உரிய சாதன சாத்தியங்கள் போன்றவையெல்லாம் இப்பகுதியில் வருகின்றன.

இரண்டாவது பகுதியான ஞானகாண்டம் உத்திரபாகம் என்று அழைக்கப்படுகின்றது. ஞானத்தைப் பெறக்கூடிய வழிவகைகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற உபநிஷதங்கள் இப்பகுதியல் அமைந்துள்ளன. இதைத்தான் வேதாந்தம் என்று கூறுகின்றனர். மிக உயர்வைப் பெற்றதான இந்த வேதாந்தத்தை அறிவதன் மூலம் தான் நமக்கு ஞானம் ஏற்படும்.

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷிகளால் உணர்ந்து உரைக்கப்பட்டவையான இதில் ஜகத் என்பது நமக்குள் இருக்கின்ற எண்ண உலகம், உணர்ச்சி உலகம், மன உலகம் ஆகியவையும், வெளி உலகமும் சேர்ந்தது ஆகும். ஜகத் என்றால் உலகம் என்று மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நமக்குள்ளேயும், வெளியேயுமாக விரிந்திருக்கின்ற ஜகத் பற்றி இப்போது தான் தெரிய வருகின்றது இல்லையா?

கண்களால் நாம் காண்பது மட்டும் உலகம் அல்ல. நமக்குள்ளேயே இருக்கின்ற மேற்குறித்தவையும் உலகங்களே. ஜீவனாகிய நம்மைப் பற்றியும் ஜகத் எனப்படுகின்ற நாம் காணும் உலகத்தையும் ஈசன் என்று குறிப்பிடுகின்ற உண்மை இருப்பைப் பற்றியும் மேலும் எனக்கும் உலகத்திற்கும், எனக்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ஆராய்ந்து தகுந்த சொற்களால் எடுத்துரைப்பதே வேதாந்தத்தின் நோக்கமாகும். இந்த மூன்றும் ஒன்றே என்ற ஆராய்ச்சியில் தான் குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஞானவேள்வியில் பங்குபெற்று ஞான ஆராய்ச்சி செய்கின்ற மாணவனுக்கு ஜிக்ஞாசு என்று பெயர்.

இந்த நான்கு வேதங்களும் சூத்திர ரூபமாக நான்கு மகா வாக்கியங்களைக் கூறி அவற்றின் பொருளை நுணக்கமாக விவரிக்கின்றன. இவற்றில் ‘தத்வமஸி’ என்பது ஒரு மகா வாக்கியம். அதுவே நீ! என்பது இதன் பொருள். பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் என்ற பதத்தை விளக்குகின்றன. த்வம் என்ற சொல்லுக்கு நீ என்பது பொருள். ஏழாவது அத்தியாயம் முதல் 12வது அத்தியாயம் வரை ‘தத்’ என்ற பதம் விளக்கப்படுகின்றது. தத் என்ற சொல்லிற்கு அது என்று பொருள். அடுத்து வருகின்ற 6 அத்தியாயங்கள் ‘அஸி’ என்ற பதத்தை விவரிக்கின்றன. அஸி என்ற சொல்லிற்கு இருக்கிறது என்பது பொருள். நீ அதுவாக இருக்கிறாய் அல்லது அது நீயாக இருக்கிறது என்னும் உண்மையே தத்வமஸி என்னும் வாக்கியம் நமக்கு உணர்த்துவது. இதன் விளக்கமே இந்த பகவத்கீதை.

இந்த உண்மையை அர்ச்சுனனுக்கு உணர்த்துவதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் நண்பன் என்ற நிலையிலிருந்து குருவாக மாறித் தன்னைப் பரம்பொருளாக அடையாளம் காட்டுகிறார். “நான் உன்னை அறிவேன். நீ என்னை அறியமாட்டாய்!” என்று அவர் அர்ச்சுனனிடம் கூறுவதோடு, “நான் உன்னில் இருக்கிறேன். நீ என்னில் இல்லை!” என்றும் கூறுகின்றார்.

நீ என்னில் இல்லை என்ற தொடர் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். இதைப் புரிந்துகொள்வதற்கு முதலில், நான் யார்? என்ற உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். நான் ஆத்மா. இந்த உடலோடு கூடிய ஜீவன் நானல்ல என்றால், பரப்பிரம்மத்தின் ஒரு துளியே ஆத்மா. எல்லா உயிர்களிலும் இருப்பது ஒரே ஆத்மா. அது அவனே! என்று இந்த உண்மை விரியும். இப்போது, நீ என்னில் இல்லை என்ற சொற்றொடரின் பொருளை சிந்தித்துப் பாருங்கள். இங்கு இருப்பது எல்லாமே (கிருஷ்ணராகிய) நான் என்றால் பிறகு நான் என்று எதைப் பிரித்துச் சொல்ல முடியம்? இங்கு நானாகிய தனித்துவம் இல்லை. இருப்பது அவர் மட்டுமே.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணர், “நான் தான் எல்லா உலகிற்கும் மூல காரணம். ஏனெனில் உலகம் என்னிலிருந்து தான் பிறக்கிறது. பிறகு என்னில் அடங்கிவிடுகிறது. என்னைத் தவிர வேறு எதுவும் துளிக்கூட இந்த உலகிற்குக் காரணமில்லை. நுhலில் மணிகளைப்போல் இவ்வையகம் எல்லாம் என்னில் கோர்க்கப்ட்டுள்ளன. என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை.” என்றெல்லாம் தம் இருப்பை எடுத்துரைக்கின்றார்.