இயற்கையின் சீற்றம் அழிவா? ஆக்கமா?

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் நாள் – உலக வரலாற்றில் திகிலையும், பரபரப்பையும், என்ன நடக்கப்போகிறது என்னும் பயம் கலந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விட்டிருந்த ஒரு முக்கியமான நாள். உலகம் முழுவதுமே ஒருவிதப் பதைப்புடன் அந்நாளை எதிர்நோக்கியதற்குத் தவிர்க்க முடியாத ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அடிப்படையாக வைத்து ஒருபுறம் ஏராளமான புனைக் கதைகள் விதவிதமாக வெளிப்பட்ட வண்ணம் இருந்தன.
mayan_calendar
அந்த டிசம்பர் 21ம் நாள் அன்று தான் மாயன் என்னும் பழங்குடி மக்களின் உலகப் புகழ்பெற்ற காலக்கணக்கு முடிவடைகிறது. அவர்கள் தமது காலக்கணக்கு விவரங்களில் குறிப்பிட்டிருந்த பல்வேறு முக்கிய உலக நிகழ்வுகள் ஒரு சிறிதும் பிசகாமல் நிகழ்ந்திருந்தமையால், மக்கள் மனதில் அந்த மாயன் காலண்டர் முற்றுப்பெற்ற நாளுடன் உலக இயக்கமும் முற்றுப்பெற்று விடும் என்ற, அடிப்படை ஆதாரம் ஏதுமில்லாத எண்ணம் அசைக்க முடியாதபடி ஏற்பட்டுவிட்டது. இதற்குத் தூபம் இடுவதைப்போலத் தகவல் தொடர்பு சாதனங்களும், ஊடகங்களும் பரபரப்புத் தகவல்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தன.

இதற்கிடையில் வானவெளியில் சூரிய மண்டலத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு ஏற்பட்டு, விஞ்ஞானிகளைக் கலங்க அடித்தது. 26,000 ஆண்டுகளுக்குப் பிறகு, 2012ம் ஆண்டு மே மாதம் சூரியனும், ஏழு விண்மீன்களும், பூமியும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்தன. அந்நிகழ்வு விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில், அது நாள் வரை சூரியனின் வெப்பக்கதிர்கள் பூமியின் சுற்றளவிற்கு வெளிப்புறமாகச் சென்று கொண்டிருந்தன. இப்போது அவை பூமியின் உள்வட்டத்திற்கு வந்துவிட்டன. இப்படி சூரியனிலிருந்து வெப்ப அலைகள் வெளிப்படுவதால், பூமியின் தட்ப வெட்ப நிலை மாறும். இதனால் இயற்கையின் இயல்பான இயக்கம் தடுமாறும். மேலும் சூரியனில் ஏற்படும் புயல் அலைகளால் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்றெல்லாம் அடுக்;கடுக்காகத் தகவல்கள் வெளிப்பட்டன.

அதற்கேற்றாற்போல் உலகின் பல நாடுகளில் வெள்ளப்பெருக்கு, பலவிதமான பெயர்களைக் கொண்ட புயல்கள், பூகம்பங்கள் என்று ஏதேதோ அழிவுகள் ஏற்படத் துவங்கின. பைபிளின் வாசகங்கள், மாயன் காலண்டரின் முடிவு, விஞ்ஞானிகளின் அறிக்கைகள், ஊடகங்களின் பரபரப்புத் தகவல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நம்பிக்கை இழந்த மனநிலையை மக்களிடையே பரவலாக ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

இப்படி உலகமே பல்வேறு சவால்களை எதிர்நோக்கிப் பலவிதமாகக் குழம்பிக்கொண்டிருந்த வேளையில், மாபெரும் அழிவு ஏற்பட்டால் அந்நிலையைச் சமாளிக்கவென்று மிகப் பாரிய பொருட் செலவில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஏதேதோ திட்டமிட்டுச் செயல்படுத்திக்கொண்டிருந்த சமயத்தில், எல்லாமே அவன் செயல், பிரபஞ்ச இயக்கமே அவன் விருப்பம் என்ற உறுதியுடன் வாழ்ந்து வரும் ஆன்மீகவாதிகள் மட்டும் இயற்கையின் சீற்றத்தை அமைதிப்படுத்த என்ன செய்யலாம் என்னும் சிந்தனையில் மூழ்கினர்.

அந்த விதத்தில் கனடாவில் இயங்கி வருகின்ற யோக வேதாந்த நிறுவனத்தினர், அதன் நிறுவனரும், நிர்வாகியுமான ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் அந்த 21.12.2012 அன்று ஒன்றுகூடி தொடர் கூட்டுத் தியானத்துடன் கூடிய ஒரு ஞானவேள்வியை நிகழ்த்தினர். அமைதியும் நம்பிக்கையும் கொண்டவர்களாய், நடக்க வேண்டியவை நடந்தே தீரும், நடக்காது என்று இருப்பவை எப்படியும் நடக்காமல் போகும் என்னும் ஞானச்செறிவுடன் அந்த நாளில் செயல்பட்டனர். சாதகர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுகூடி அன்று முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி, அச்சம் மீpகுந்த அந்த நாளை உலக சுபிட்சத்திற்காக, இயற்கையின் சீற்றம் தணிவதற்காகப் பிரார்த்தனையும் தியானமும் செய்து சுற்றுச்சூழலில் அமைதி அலைகளைப் பரவச் செய்தனர்.

21.12.2012 அன்று காலை அனைவரும் கனடா யோக வேதாந்த நிறுவனத்தில் ஒன்றுகூடியதும் ஒளி ஏற்றப்பட்டது. குரு வணக்கம் செய்தபின் குரு தமது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், ‘ இயற்கையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் எவையென்றாலும் ஆன்மீகவாதிகள் அவற்றை ஏற்கத் தயார். சக்தி ஓட்டத்தில் ஏற்படுகின்ற மாற்றம் இது. பிறந்தவர்கள் யாரென்றாலும் இறக்கத்தான் வேண்டும். காலமும், இடமும் தான் வித்தியாசப்படுமே தவிர, படைப்புகள் அனைத்திற்கும் இறப்பு நிச்சயம்.ஆனால் உடல் செத்தாலும் உண்மை சாகாது. அந்த உண்மையுடன் நான் இருந்தால் எனக்குச் சாவு இல்லை.

அழிய வேண்டியவை அழியத்தான் வேண்டும். அதே சமயம் அந்த அழிவினால் பூமியின் தரமும், தன்மையும் உயரும். மக்களின் மனோநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற காலகட்டம் இது. போட்டியும், சண்டையும், கீழ்மைக் குணங்களுமாக இதுவரை வாழ்ந்த நிலை மாறி இன்று மற்றவரை மதித்து நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இயற்கை ஏற்படுத்தும் அழிவு வரவேற்கத் தக்கதே. இவ்வேளையில் தன்னை அறிதலாகிய ஆன்மீகப் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்ற உங்களது ஆத்மசக்தியும், இந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றிச் சூழ்ந்து எல்லாமாய் இருக்கின்ற பரமாத்ம சக்தியும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் அந்த சக்தியோடு சேர்ந்து நாமும் உயர முடியும்.

இப்பொழுது நிகழ இருப்பதாகச் சொல்லப்படுகின்ற அழிவு இந்த உலகத்திற்குத் தேவையான ஒன்று. ஏனெனில் உலகம் எல்லா விதத்திலும் சீரழிந்து போயிருக்கிறது. ஏற்கத் தகாத நிகழ்வுகள் எல்லாம் கலாச்சார சீரழிவுகளாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கேவலமான அமைப்பு அடியோடு அழிந்து, உயர்ந்த தரமுள்ள, நல்லுணர்வில் பல படிகள் உயர்ந்து நிற்கின்ற சமுதாயமும், பூமியுமாகப் புதியவை உருவாக வேண்டும். மனித மனமும், பூமியின் தன்மையும் தரம் வாய்ந்தவையாக அமைய வேண்டும். அதற்கு இந்த அழிவு அவசியம் என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும்.

ஒன்று அழிந்தால் தான் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும். அழிவு என்பது மாற்றி அமைத்தல் தானே தவிர வேறில்லை. இதயம் சார்ந்த அன்பும், கருணையும் தன்னில் கொண்ட நிலைக்குப் பூமியையும், சூரியனையும் உயர்த்துவதற்கு எனக்குள்ளே இருப்பவன் விரும்புகின்றான். அதற்கான வேலைகளை இயற்கை துவங்கியிருக்கிறது. இந்த அழிவை நானும் ஏறக்த்தான் வேண்டும். ஏனெனில் அழிவு இந்த உடலுக்கே தவிர எனக்கல்ல. கீழானவற்றை அழிக்கின்ற நீ விரும்பினால் என்னையும் அழிப்பாய். பிறகு உயர்வினை அளிப்பாய். பூமியையும் என்னையும் பரிணாமத்தில் முன்னேறச் செய்வாய். அளி! அல்லது அழி! எது என்றாலும் ஏற்கத் தயார்! என்ற உறுதி நம்மில் ஏற்பட வேண்டும்.

earthபூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் 700 கோடி மக்கள் அமைதி பெற, இயற்கையின் எழுச்சி அடங்க, 3000 பேர் தியானம் செய்தால் போதுமானது. அமெரிக்காவில் பல்வேறு ஆன்மீக நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இன்று பல்வேறு இடங்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் தியானம் செய்கின்றனர். ஏராளமான கோவில்களில் விசேட பிரார்த்தனைகளும், பூசைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கு நாமும் இந்த இடத்தில் ஒன்று சேர்ந்து அணிலின் சிறு முயற்சியாக நமது பங்கைச் செலுத்திக்கொண்டிருக்கின்றோம்.

ஆத்மாவுடன் இணைந்து செய்யப்படும் தியானம் மிகச் சிறந்தது. உயர்சக்தி ஆத்மாவுடன் இணைந்து அது இயற்கைச் சக்தியில் தன்னைப் பிணைத்துக்கொண்டு செய்யப்படுகின்ற தியானம் இது. இதன் சக்தி வலிமை வாய்ந்தது. தியானத்தால் நம்மை நாம் உயர்த்த, நம்மைப் பிரம்மம் நங்கூரம் இட்டதுபோல் பிடித்து இழுக்க, அது நாம் அமர்ந்திருக்கும் பூமியையும்; சேர்த்து இழுக்கும். இந்நிலையில் நுண்ணுயிரிகள் கூட நம்முடன் சேர்ந்து இழுக்கப்படும். இதுதான் இந்தத் தியானத்தின் சிறப்பு.

இப்படி அனைவரும் ஒன்றுகூடி செய்கின்ற தியானத்தில் நேர்மறை அலைகள் தான் எழுப்பப்பட வேண்டும். ஒன்றிணைந்த இந்த முயற்சியில் யாராவது எண்ணங்களைக் கொண்டு வந்து எதிர்மறையாக எதையாவது நினைத்து விட்டால் ஒன்றுபட்ட அலைகள் குழம்பி வீடும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த மாற்றம் ஆன்மீகவாதிகளைப் பொறுத்தவரை வரம். வெளி உலகத்தில் உண்மை புரியாமல் தடுமாறுகின்றவர்களுக்கும் அவர்களை எப்போதும் குழப்புகின்ற மீடியாக்களுக்கும் சாபம். உலகம் அழியப் போகிறது என்பது தேவையற்ற பயம். இது குறுக்குச் சிந்தனை. அழிவது என்றால் என்ன? மாற்றம் ஏற்படுகின்றது என்பதுதானே! இந்நிகழ்வின் மூலம் பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றது. அவ்வளவுதான். இப்படி சரியான கோணத்தில் பார்க்கப் பழக வேண்டும். எதிர்மறைப் போக்கு ஏற்படக்கூடாது.

அன்றாட வாழ்க்கையில் கூட சின்னச் சின்ன விஷயங்களானாலும் எதிர்மறையாகச் செயல்படக் கூடாது. நமது மரபு, எதையும் பாசிட்டிவ்வாக, நல்லது என்றே நினைத்து அணுக வேண்டும் என்று சொல்லித் தந்திருக்கிறது. நேர்மையாக நடக்கப் பழகினால் வாழ்க்கை நல்லவிதமாக அமையும். நமது சக்தியை நல்ல விதத்தில் செயல்;பட நாம் பழக்க வேண்டும்.

மாபெரும் மனித முயற்சியாக இன்று செய்யப்படுகின்ற இந்தத் தியான அலைகளின் வீச்சு மூன்று நாட்களுக்கு எங்கும் பரவி நிற்கும் என்று சொல்கின்றனர். இது இயற்கையின் சீற்றத்தைப் பெருமளவில் அமைதிப்படுத்தும் என்றும் சொல்லப்படுகின்றது. இன்று முதல் பூமியின் தரம் இதய அளவிற்கு உயர்த்தப்படுகிறது.

இப்படி இதய அளவிற்கு எழும்பினால் அன்பும் கருணையும் பூமியில் அதிகரிக்கும். இதன் தொடர்பாக அடுத்த ஆண்டு (2013) மார்ச்சு மாதம் முதல் ஒரு பொற்காலம் உருவாகும். இம்மாற்றத்தினால் மனித மனதில் இருந்து வந்த வன்முறை உணர்வு, வக்கிரப்போக்கு, வெறுப்பு போன்றவை நீங்கி, அன்பும் அரவணைப்புமான மனப்போக்கு ஏற்படும். எனவே இனி எல்லாம் மாறும். எல்லா நாடுகளிலும் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். அப்படியென்றால் இது அழிவா? ஆக்கமா? சிந்தித்துப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் தான் பிரம்மத்தின் கருணை புரியும்’.

இந்த அளவில் குருவின் முதல் உரை முடிவடைந்து உடனே கூட்டுத் தியானம் துவங்கியது. தியானம் துவங்கும் முன் குரு, காயத்ரி மந்திரத்தின் பொருளை விளக்கிக்கூறிக் காயத்ரி மந்திரத்தைச் சொல்ல, சாதகர்கள் அனைவரும் அதனைத் திருப்பிச் சொன்னார்கள். பிறகு உலகிற்கு ஒளியை வழங்கி பூமியை உயிர்ப்பித்து உயிர்களை வாழ வைக்கும் உன்னத சூரியனைத் தந்தையாகவும், உயிர்களை எல்லாம் தாங்கிப் பிடித்து, சூரியனின் கருணையால் மனித வாழ்க்கைக்கு சகல விதத்திலும் உறுதுணையாக இருக்கும் பூமியைத் தாயாகவும் நினைத்து மனப்பூர்வமாக வணங்கி நன்றி தெரிவிக்கும்படியும், எங்கும் பரவியிருக்கின்ற சூரிய ஒளியாகிய தெய்வீக ஒளிச்சக்தி நம்முள் உச்சந்தலை வழியாக இறங்கி, நம் உடலினுள்ளே சூட்சுமமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு சக்கரமாகப் பாய்ந்து அவற்றை ஒளிபெறச் செய்து, கீழே மூலாதார சக்கரத்தை அடைந்து அதிலிருந்து அந்த ஒளி பூமிக்குள் நுழைந்து தரை, மண், கற்கள், நீர், பாறைகள், பெட்ரோல் அனைத்தையும் கடந்து பூமியின் மைய அக்னிக்குழம்பைத் தொட்டு மீண்டும் அதே விதத்தில் அந்த ஒளி மேலேறி ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து அண்டத்தில் கலக்கட்டும். இதனால் சகல உயிர்களும் நன்மை அடையட்டும்! என்று பிரார்த்தனை செய்துவிட்டு, தியானத்தில் மூழ்கும்படி வழி நடத்தினார். அடுத்த நிமிடம் அந்த அறை அப்படியே நிசப்தத்தில் ஆழ, இருள் சூழ்ந்த மௌனத்தில் ஒன்றுபட்ட உள்ளுணர்வு கலக்க, தியான அலைகள் எழும்பிப் பரவத் தொடங்கின.

அரை மணி நேரம் கடந்த அந்த அற்புதக் கூட்டுதியானம் அளித்த பரவசத்தில் அனைவரும் மூழ்கியிருக்க குருவின் குரல் ஓம் என்னும் பிரணவ ஒலியால் தட்டி எழுப்பியது. தியானம் ஆரம்பித்த முறையிலேயே மீண்டும் பிரார்த்தனை ஒருமுகமாகச் செய்யப்பட்டது. குழு தியான – ஞான வேள்வியின் முதல் சுற்று இவ்வாறு முடிவடைந்ததும் மிதமான காலை உணவு தேநீருடன் வழங்கப்பட்டது. அதன்பின் இரண்டாவது சுற்று ஆரம்பமாயிற்று.

இரண்டாவது சுற்று: இதில் ஒளியின் உயர்வு பற்றி ஆழமாக விளக்கப்பட்டது. குருவால் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில், ‘சூரிய ஒளிதான் நம் வாழ்க்கைக்கு ஆதாரம். பிரம்மம் தான் சூரிய ஒளியாய்ப் பூமியையும், பூமியில் வாழ்கின்ற அனைத்துப் படைப்புக்களையும் வாழ வைக்கின்றது. எனவே தான் சூரியனையும் ஒளியையும் உலகமே வழிபடுகின்றது. ஒளி வழிபாடு எல்லாச் சமயங்களிலும் ஏற்கப்பட்டிருக்கின்றது. ஒளியைப் பற்றி எல்லோருமே பாடியும் எழுதியும் வைத்திருகின்றனர். வள்ளலார் ஒளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒளியாய் வாழுங்கள் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்.

ஒளியைத் தியானித்து அதை உடல் முழுவதிலும் பரவ விட்டு, ஒளி உடம்பாய் நம்மை மாற்றி, அதை உணர்வாய் வெளிப்படுத்திப் பிரபஞ்ச வெளியில் பரவியிருக்கின்ற ஒளியில் இந்த ஒளியுடலை ஒப்படைத்து, அந்த ஒளியை இழுத்து மீண்டும் நம் உள்ளொளியில் இணைப்பதன் மூலம் நம்மை நாம் தெய்வீகமாக ஆக்கிவிட முடியும். இதற்கு இறையருளும், குரு அருளும் துணை நிற்க வேண்டும். நிலைக் கண்ணாடி இல்லாமல் நம்மை நம்மால் பார்த்துக்கொள்ள முடியாது. ஒரு கண்ணாடி இருந்தால் நம் முன்பக்கத்தை மட்டுமே பார்க்கலாம். பின்னாலும் ஒரு கண்ணாடி இருந்தால் முன், பின்னாக நம்மை முழுமையாகப் பார்க்க முடியும் அல்லவா? அப்படி இறையருளும், குரு அருளும் நமக்கு ஏற்பட்டால் தான் நம்மை நாம் முழுமையாக அறிய முடியும்.

ஞானத்தால் ஏற்படுகின்ற இந்த ஆன்ம இணைப்புத் தான் சாதகர்களின் தியானமாக இருக்க வேண்டும். அதற்குரிய பயிற்சிதான் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆன்மாவை அசைக்கவும், இழுக்கவும், அதனோடு தொடர்பு கொள்ளவுமே இங்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கின்றேன். இதெல்லாம் சாத்தியமா? சமயத்திற்குப் புறம்பானதாக இருக்கின்றதே என்று வெளி உலகம் நம்பாத நிலையில் பலவிதமாக விமர்சிக்கலாம். ஆனால் எண்ணங்களையும், நான் அல்லாதவைகளையும் ஒதுக்கிச் செய்யப்படுகின்ற உண்மையான தியானத்தால் எல்லாம் முடியும்.

ஒளியாய் மாறினால் தான் தெய்வீக ஒளி வட்டத்திற்குள் நம்மால் நுழைய முடியும். ஒளி நம் உயிராய் இருக்கிறது. அது தான் நம்மை வாழ வைக்கிறது.’ என்று ஒளி பற்றிய பல்வேறு புதிய விளக்கங்களுடன் குரு சாதகர்களின் உள்ளத்தில் ஞான ஒளியைப் பிரகாசப்படுத்தினார்.

2வது தியானம்: அந்த உரையைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டுத் தியானம் அரை மணி நேரம் நிகழ்ந்தது. முதல் முறை செய்தது போலவே ஒளியை மையப்படுத்தி வழிபட்டு, நன்றிகூறி தியானம் மீண்டும் துவங்கப்பட்டு, அதே முறையில் நிறைவுற்றது. தியானம் நிறைவுற்றதும் எளிமையான சிறந்த மதிய உணவு வழங்கப்பட்டது.

3வது உரை: உணவு இடைவேளைக்குப் பிறகு சித்தர்கள் நமக்கு அமைத்துத் தந்த வாழ்க்கை முறையின் சிறப்புகள் பற்றி ஆராயப்பட்டது. ‘உணவே மருந்து’ என்று தமிழர்களின் உணவு முறைகள் அமைந்ததற்கு சித்தர்களின் மூலிகை அடிப்படையான உணவுத் தயாரிப்பு முறைகள் தான் காரணம் என்றும் அவர்களது வழிகாட்டலின்படி தான் நமது முன்னோர் நமது உணவு வகைகளைச் சமைத்து வழி வழியாக நமக்குப் பழக்கி வைத்துள்ளனர் என்றும், எல்லா விதத்திலும் நமது வாழ்க்கை முறை மாறிவிட்டதைப்போல் இன்றைய மேற்குலக நாகரீகப் போக்கின்படி உணவு வேறாகவும் மருந்து வேறாகவும் ஆகிவிட்டதென்றும் குரு கூறினார். மேலும் நமது பழக்க வழக்கங்கள், சாப்பாட்டு வகைகள், உட்கொள்ளும் முறைகள் என்று எல்லாமே ஆரோக்கியமான சீரிய வாழ்க்கைக்கு உதவிக் கொண்டிருந்தன. சித்தர்களின் ஞானம் தமிழரின் வாழ்க்கை முறையை மிகச் சிறந்த முறையில் வகுத்துத் தந்திருக்கிறது. இதை நாம் புரிந்துகொண்டு அதன்படி வாழ முற்பட்டால் உடல் நலத்திற்கு ஒரு குறையும் ஏற்படாது. இயற்கை உணவையே பாவிக்க வேண்டும்.சாத்வீக உணவு சாதனைக்கு வழி வகுக்கும் என்பது ஆன்மீகத்தின் முக்கியமான கொள்கை. உடல் நலத்துடன் இருந்தால் தான் சாதனை முயற்சிகளில் அயர்ச்சியுறாமல் ஈடுபட முடியும்.

மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகளுக்கு நாம் நம்மை உட்படுத்திக் கொண்டாலும், உட்கொள்கின்ற மருந்து வகைகள் இயற்கை வைத்தியமாக இருத்தல் நலம் என்றெல்லாம் ஏராளமான நடைமுறை வாழ்க்கைக்குரிய உணவுத் தகவல்களையும், சிகிச்சை முறைகளையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வு ஒரு கலந்துரையாடல் போல, சாதகர்களின் உடல் நல சம்பந்தமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு குருவின் அறிவுரைகளைப் பெற்றுக் கொள்கின்ற விதத்தில் நடைபெற்றது.

3வது தியானம்: இந்த கலகலப்பான கலந்துரையாடலுக்குப் பின் மீண்டும் ஒரு ஆழ்ந்த தியானம் மேற்கொள்ளப்பட்டது. வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வெளிப்புறச் சிந்தனை ஏதுமின்றி நிச்சலனமான ஒரு நிலையில் அமைந்த அந்தத் தியானம் வருகை தந்த அனைவரையும் ஒன்றுபடுத்தி, ஆத்ம ஒருங்கிணைவை ஏற்படுத்தி சாந்தியலைகளைப் பரவச் செய்தது.

4வது உரை: இதனையடுத்து மீண்டும் ஒரு ஞான உபதேசம் நடைபெற்றது. இதில் வாழ்க்கையில் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அது இவ்வாறு இருந்தது. ‘நீங்கள் உங்களது தொடர்ந்த தியான முயற்சியால் பிரபஞ்ச வெளியில் ஒரு சன்னலைத் திறந்து விட்டீர்கள். இனி உங்களது பயணம் அதனை நோக்கியதாகவே அமையட்டும். இனியும் உலக விவகாரங்களில் சிக்கித் தடுமாற வேண்டாம். உங்களது செயல்பாடுகள் எல்லாம் அன்பு, கருணை ஆகியவற்றின் அடிப்படையில் அமையட்டும். பணம், காசு போன்றவற்றை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டாம்.

உங்களை யாரும் ஏமாற்றினாலும், எமாற்றுகிறார்கள் என்பது தெரிந்தாலும் ஏமாறுங்கள். சாமர்த்தியமாக நடந்துகொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். அந்த ஆத்மா தன்னை அறியாமல் இப்படி என்னிடம் நடந்துகொள்கிறது. நான் வேறு, அவர் வேறு அல்ல என்ற எண்ணம் எப்போதும் இருக்கட்டும். உங்களுக்குள் ஏற்பட்டுவிட்ட ஆன்மீகக் கட்டமைப்பு சிதறாமல் இருக்க வெளி வாழ்க்கையில் ஏமாந்தாலும் பரவாயில்லை. எதிர்த்து நின்று விளையாட வேண்டாம்.

அப்படியே பிறரிடம் ஏமாந்ததாகத் தெரிந்தாலும் உங்களது நிம்மதி அதனால் கெடாது. எப்போதும் மனம் நிம்மதியாய் இருக்க வேண்டும். நமக்கு ஆத்மா தான் முக்கியம். உடல் அல்ல. ஆத்மாவை அணுக அமைதி மிகத் தேவை. உறவுகளைக் கையாளுகின்ற விதத்திலும இதையே கடைப்பிடிக்க வேண்டும். எல்லாப் பிரச்னைகளுமே இந்த அணுகுமுறையால் தீரும். கர்மா இல்லாமற் போவதோடு கர்மா மேலும் அதிகரிக்காது. அமைதி அகலாத ஒரு பூரணத்தன்மை உங்களில் உருவாகும். இவையே குருவின் உரையினது சாராம்சம்.

அடுத்த நிகழ்வாக ஒரு தியானம் அழகாக அமைந்தது. இந்தத் தியானம் துவங்கும்போது குரு முதலில் ஓம்..ஓம்..ஓம் என்று மூன்று முறை பிரணவத்தை உச்சரித்தார். அனைவரும் அதைத் திருப்பிச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து கூட்டுத்தியானத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் வரிசையாக மூன்று முறை ஓம் என்னும் திருமந்திரத்தைக் கூற, மற்ற அனைவரும் அதனைத் திருப்பிக் கூறினார்கள். இப்படி அனைவரும் சொல்லி முடித்ததும் குரு மீண்டும் ஓம் என்று மும்முறை கூற அனைவரும் எதிரொலித்தனர்.

அந்த அறை முழுவதும் ஆத்ம நாதமாய் ஓம் என்னும் மந்திர ஒலி சூழ்ந்திருக்க, அந்த நாத அலைகளில் ஒளி பொருந்திய உணர்வு அலைகள் கலந்த விதத்தில் அந்தத் தியானம் அற்புதமாக அமைந்தது. பூரண மனநிறைவுடன் தியானம் நிறைவுற்றது.

பின்னர் குருவின் ஐந்தாவது உரை அனைத்திற்கும் நன்றி செலுத்தப் பழக வேண்டும் என்னும் அறிவுரையாக அமைந்தது. ‘நாம் நமது தியானத்தில் தினமும் நமக்கு ஒளியைத் தருகின்ற சூரியனுக்கும், நம்மைத் தாங்கி நிற்கின்ற பூமிக்கும் நன்றி செலுத்த வேண்டும். பூமியையும், சூரியனையும் வாஞ்சையுடனும், நட்புடனும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் சூரியன் நமக்குக் கருணையுடன் ஒளியை வழங்குகின்றது. நாம் சாப்பிடுகின்ற உணவு எல்லாம் பூமி நமக்குத் தருவது தான். இனி வரும் நாட்களில் உங்களது சக்தியைச் சூரியனிடமும், பூமியிடமும் இணைத்துக்கொள்ளப் பழகுங்கள்.

மேலும் நம்முள் எழுகின்ற நன்றி என்னும் உணர்வைப் பிரபஞ்ச வெளியில் செலுத்த வேண்டும். அண்ட வெளியில் நமக்குப் பூமி என்னும் வீட்டைத் தயார்ப்படுத்தித் தந்திருக்கின்ற பரம் பொருளுக்கு நாம் தினமும் நன்றி செலுத்த வேண்டும். வெளி விவகாரங்களை விட்டு விலகி இறை சிந்தனையிலேயே நாம் உணர்வுடன் இணைந்திருக்க வேண்டும். நம் வாழ்வில் நிகழ்ந்த நல்ல அனுபவங்களுக்காகவும், திருப்பங்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இயற்கை அன்னை நமக்குச் செய்யும் உதவிகளுக்காக நாம் நமது நன்றியைச் செலுத்துவோம்.

இந்த விண்வெளியில் எனது வீட்டை எனக்கு அமைத்துத் தந்த கயா (Gaia) என்று மாயன் குடிமக்கள் குறிப்பிடுகின்ற பூமித்தாய்க்கு நன்றி. ஏனெனில் இன்று நமது கூட்டுத்தியானம் மாயன் காலண்டரின் முடிவால் தூண்டப்பட்ட ஒன்று. இந்தத் தூண்டலால் ஏற்பட்ட ஆராய்ச்சியால் தான் ஓர் உண்மை நமக்குப் புலப்பட்டது.gaia

வானவெளியில் ஏதோ ஒரு காரணத்திற்காகப் பல கோள்கள் சூரியனையும் பூமியையும் சந்தித்திருக்கின்றன. அது நம்மால் புரிந்துகொள்ள முடியாத பிரம்ம விருப்பம். அவ்வளவுதான்! அதுமட்டுமின்றி நமது இந்து மதத்தில் 60 ஆண்டுகள் முடிந்ததும் மீண்டும் முதலிலிருந்து அந்த ஆண்டுகளின் பெயர்கள் துவங்கித் தொடர்ந்துகொண்டே போகும். இதை ஒரு சுழற்சி முறையாக நாம் தெரிந்து வைத்துக் கடைப்பிடித்து வருகின்றோம். அதுபோலவே இந்த மாயன் காலண்டரும் இந்த வருடத்துடன் முடிந்து மீண்டும் முதலிலிருந்து துவங்குவதாக அவர்கள் கணித்து வைத்திருக்கக்கூடும். யார் கண்டது? உண்மையைச் சொல்வார் இல்லை. இருந்த போதிலும் அழிவு ஏற்பட்டாலும் ஆக்கத்திற்கே அது என்ற தெளிவு நமக்கு ஏற்பட்டு விட்டது. இப்படிப்பட்ட இந்தப் பிரபஞ்ச நிகழ்வை அறியச் செய்ததற்காகப் பிரம்மத்திற்கு நன்றி செலுத்துவோம். எதிர்கால ஆன்மீக வளர்ச்சிக்காக இயற்கையின் இந்த நிகழ்வு அளிக்க இருக்கின்ற மிக அதிக அளவிலான சாத்தியக்கூறுகளுக்கு நன்றி தெரிவிப்போம்.

இன்று நாம் மேற்கொண்ட ஞானவேள்வியுடன் கூடிய இந்த கூட்டுத்தியானம் எம்மை ஆன்ம இணைப்பு என்னும் உயர் நிலைக்குக் கொண்டு செல்லட்டும். நானும் அதுவும் ஒன்றென்ற உணர்வு எம்முள் பூரணமாக நிலை பெறட்டும். இன்று இங்கு தியானம் செய்தவர்களின் தியான அலைகள் பூமியை விட்டுப் பீரிட்டுக்கொண்டு மேலே எழும்பியிருக்கின்றன. அழிவைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. அழிவைப் பற்றிய பயமோ கவலையோ நமக்கில்லை. ஆக்கத்திற்குரிய உயர் உணர்வு அலைகளை எழுப்பி இது அழிவல்ல, ஆக்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற வழி என்ற உண்மையைப் புரிந்து இறையுணர்வோடு ஒன்றியிருந்தோம்.

நல்லவையாக எது செய்யப்பட்டாலும் அது மூன்று மடங்காகத் திருப்பி அளிக்கப்படும் என்று வேதம் உரைக்கின்றது. ஒரு நெல் விதைத்தால் அது ஒரு மூட்டை நெல்லாக விளைகின்றது. எனவே பிரபஞ்ச சக்தி பூமிக்கு நன்மை புரியட்டும். நாம் செய்த இந்தத் தியான முயற்சி வெளி உலகிற்கு சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தாலும் எம்மைப் பொறுத்த வரை ஒரு நிறைவான செயலில் ஈடுபட்டு பூமித்தாய்க்குத் தியான அலைகளைப் பரவ விட்டு அமைதியை அளித்திருக்கின்றோம். பிரம்மத்தின் அருங் கருணை நம்மை வளைத்துப் பிடித்ததால் இது நிகழ்ந்தது.’ இவ்வாறு அமைந்த குரு, ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களின் உரை மிக அற்புதமான ஒரு நன்றியுணர்வினை அங்கு ஏற்படுத்தியது.

இந்த இனிய ஆன்மீகத் திருவிழாவின் நிறைவு நிகழ்வாக நடைபெற்ற கலந்துரையாடலில் பலவித ஆன்மீகப் பயிற்சி அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப் பட்டன. சாதகர்களின் சந்தேகங்களுக்குக் குரு விளக்கம் தந்தார். தமது 40 வருட தியான அனுபவங்களையும் விவரித்தார். அன்று தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தியானங்களில் தாம் அடைந்த உணர்வுகளைப் பலரும் மகிழ்வுடன் குருவிடம் விவரித்தனர். பிறகு எல்லோரும் குருவை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்றனர். மிக அருமையான சுவையுடன் கூடிய சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டது. பூரண ஞானத் தெளிவுடனும், தியான நிறைவுடனும் விருந்தோம்பலுக்கு நன்றி கூறி அனைவரும் விடை பெற்றனர். வெளியே மர்மமான இருட்செறிவுடன் வானம் புரிபடாத புதிராய்ப் பூமியைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. – வாழ்க வையகம்!

முக்கிய குறிப்பு:

ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்கள், வரும் 20.1.2013 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் காலை 10:30 முதல் மதியம் 1.00 மணி வரை ‘பிரம்மசூத்திரம்’ என்னும் அற்புதமான நூலிற்குத் தமிழில் ஞான விளக்கம் அளிக்க உள்ளார். கிடைத்தற்கரிய இந்த அரிய வாய்ப்பினை ஆன்மீக சாதகர்கள், குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலை பேசி இலக்கம் 416-282-0743 or 647.760.7075
நடைபெறும் இடம்: 42,Calverly Trail, ( Morning side/ Ellesmere) Scarborough

Advertisements