மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 51

“இப்பிறவிக்குத் தரப்பட்டிருக்கின்ற ஐந்து புலன்கள், அந்த மரக்கிளைகளின் சிறு பிரிவுகளில் உள்ள தளிர்கள். ஜீவன் இந்த ஐந்து புலன்களின் வழியாகச் சென்று அவற்றால் அனுபவங்களைப் பெறுவதே இந்தத் தளிர்கள் வெளிப்படுவதற்குக் காரணம்”.

”இந்த மகா விருட்சத்தின் அடிப்படையான மூலாதாரம் மனித உலகம். ஏனெனில் இந்த மனித உலகத்தில் செய்யப்படும் செயல்களின் பலன் தான் மற்ற உலகங்களில் அனுபவிக்கப்படுகின்றது.”
cosmictree-2
ஒன்றும் புரியவில்லையே என்று குழம்ப வேண்டாம். இதைப் படிக்கின்ற நாம் இதைப்பற்றி இப்படிப் புரிந்துகொள்வோம். ஞானத்தால் தான் இதைப்பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற வாழ்க்கை உண்மையானது அல்ல. நாமும் உண்மையல்ல. ஒன்றேயான பிரம்மம் ஆத்மாவாக உடல் எடுத்து நம் ஒவ்வொருவராகவும் வெளிப்பட்டு வாழ்வதாக விளையாடிக்கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டில் அது பயன் படுத்துகின்ற சாமான்கள் ஐந்து புலன்களும், மனமும், புத்தியும்.

நம்மைச் சிக்கல்களில் மாட்டி விடுபவை இவைதானே. இவற்றோடு சேர்ந்த அடுத்த இரண்டு அம்சங்கள் அகங்காரமும், மமகாரமும். அதாவது இந்த உடல் மீது நாம் கொண்ட பற்றும், நம்மைச் சோந்தவையாகக் கருதுகின்ற பொருள்களையும், உறவுகளையும் நம்முடையவை என்று நினைக்கின்ற பற்றும். இவை அனைத்திற்கும் பின்னால் நாம் பிறக்கும்போதே கொண்டு வருகின்ற கர்மப்பலன்கள்.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு வலை இப்படி இந்த வாழ்க்கையாகப் பின்னப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் பிறக்கின்ற நாம் கொண்டு வந்த கர்மப்பலன்களின் பின்னணியில் வாழத் தொடங்குகிறோம். முதலில் புலன்கள் வேலை செய்யத் தொடங்குகின்றன. பிறகு மனம், அதன் பிறகு புத்தி என்று வாழ்க்கை விரிகிறது. கர்மப்பலன்களுக்குத் தக்கபடி முக்குணங்கள் கலந்த நிலையில் மனமும் புத்தியும் மற்றவையும் மாறி மாறிச் செய்லபடுகின்றன. இன்பங்களையும, துன்பங்களையும் அனுபவிக்கத் தொடங்கி விடுகின்றோம். இந்த வாழ்க்கை என்னவென்று இப்போது புரிகின்றதா?

“இந்த சம்சாரம் என்னும் மாய மரத்தின் உண்மை போன்றதும், அழகானதும், சுகமானதுமான சொரூபம் மக்களுக்குத் தெரிகி;ன்றது. ஆனால் இப்படி உண்மைபோலத் தெரிகின்ற இது உண்மையாகவே உள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் பதில் கிடைக்காது. இதற்கு ஆதியோ, அந்தமோ இல்லை.”

“இப்படிப்பட்ட பொய்யான வாழ்க்கையின் ஆணிவேர் மிக வலுவானது. கர்மாவும், நிறைவேறாத ஆசைகளுமே இந்த வாழ்க்கை மரம் வெட்ட வெட்ட மீண்டும் பிறவிகளாகத் துளிர்ப்பதற்குக் காரணமான ஆணிவேர்கள்.”

நமது சாதி, சமயம், குலம், கோத்திரம், நாடு என்கின்ற இனத்தன்மையும், பந்த பாசங்களும், தீவிர விருப்பமும் இந்த வாழ்க்கை மரத்தின் கிளைகள். பற்றில்லாமை என்னும் வாளின் துணைகொண்டு இம்மரத்தை வெட்டித்தள்ளிப் பரம்பொருளின் பரம பத நிலையை அடைய, இதைப் புரிந்துகொண்டவர்கள் இனி முயல வேண்டும். புரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். என்றாவது ஒரு நாள் இதன் பொருள் விளங்கும்.

பந்த பாசங்களும், ஆசைகளும், குண பேதங்களும் போகவில்லையே! என்னால் இவற்றிலிருந்து விடுபட முடியவில்லையே! என்று நினைத்தால் அந்தப் பரமாத்மனைத்தான் நாம் சரணடைய வேண்டும். சரணாகதி என்பது அதி உயர் முயற்சி. என்னால் முடியவில்லை! நீ தான் காப்பாற்ற வேண்டும்! என்று ஒருவன் எப்பொழுது முழுமையாகப் பிரம்மத்திடம் சரணடைகின்றானோ அப்பொழுது பிரம்மம் கட்டாயம் துணைக்கு வரும். காக்கும்.

இப்படிப் பூரண சரணாகதி அடைந்து விட்டால் பிறகு நல்லதோ, கெட்டதோ நடக்க வேண்டியவை நடக்கும். ஆனால் அவற்றால் நாம் பாதிப்படைய மாட்டோம். பொறுமையும், வருபவற்றைச் சரியாக ஏற்கின்ற துணிவும், வலிமையும் தானே ஏற்படும். கர்மப்பலன்களை எதிர்க்காமல் பொறுமையாக ஏற்றுக்கொள்வதால் இருக்கிற கர்மா கழியும். எதிராகச் செயல்படாமல் இருப்பதால் மேலும் கர்மா ஏற்படாது. வாழ்வில் கஷ்டங்கள் வரும் தான். அவற்றைத் தாங்க வேண்டும்.

இந்த நிலையில் வாழ்க்கை செல்ல, இறுதியில் நான் அவனே என்ற புரிந்துணர்வில் அவனோடு சேர்ந்து, வாழ்க்கையை ஒதுக்கி தள்ள முடியும். அவனை அடைந்த பிறகு மனிதன் மீண்டும் உலகியல் வாழ்விற்கு வருவதில்லை. ஏனெனில் அவன் தான் ஆதி மூலம். அவனிலிருந்து தான் இந்தப் படைப்புக்கள் பரவியிருக்கின்றன. வெளிப்பட்டதான இவை அதிலேயெ சென்று ஒடுங்கிவிடும் என்ற உண்மை இப்போது அவனுக்கு விளங்கிவிட்டது.

”இவ்வாறு பரமாத்மாவை சரணடைவதால் மனிதர்கள் தன்மானம், மோக மயக்கங்களிலிருந்து விடுபடுகின்றார்கள். பற்று அற்றுவிடுவதால் அவர்களிடம் கர்வம், மமதை முதலிய குற்றங்கள் இருப்பதில்லை. எப்பொழுதும் பகவானிடத்திலேயே நிலைத்திருக்கிறார்கள். ஆசா பாசம், சுக துக்கம், என்ற சிக்கல்களிலிருந்து விடுபட்டு இறை சிந்தனையிலேயே ஒன்றிவிடுகிறார்கள்;” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

‘இப்படித் தன் உடலோடு கூடிய நிலையை உயிரோடு இருக்கின்றபோதே மனதால் விட்டு விலகி, ஆத்மாவுடன் யோகத்தால் இணைந்தவர்கள் அழியாத அமரத்துவ நிலையை அடைகின்றார்கள்”.

இந்த நிலையை அடையும் வழியாகத்தான் சனாதன தர்மம் பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலைகளாக இந்த வாழ்க்கையை வகுத்துத் தந்திருக்கிறது. இளம் பருவத்தில் குருவை அடைந்து தன்னைப்பற்றியும், இந்த வாழ்க்கை பற்றியும், தான் வாழ வேண்டிய முறையையும், தர்ம நியாய அடிப்படையில் அமைந்த, வேத உண்மைகளைத் துணையாகக்கொண்டு பெறுகின்ற கல்வி மூலம் அறிந்துகொள்கின்ற நிலை பிரம்மச்சரியம்.

ஒரு பெண்ணை மணந்து, இல்லற தர்மத்தை ஏற்று, நல்ல புத்திரர்களைப் பெற்று, சமுதாயத்திற்கும், சந்நியாசிகளுக்கும் சேவை செய்து, கற்ற நெறிப்படி தர்மமாக வாழ்கின்ற நிலை கிரஹஸ்தாஸ்ரமம்.

தான் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்து, குல தர்மப்படி வாழ்ந்து, முதுமையை அடைகின்ற நிலையில் குடும்பக் கடமைகளையும், பொறுப்புக்களையும் இளையவர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு, உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இல்லறத்தில் இருந்தபடியே அனைத்தையும் செய்துகொண்டு பற்றின்றி பரம்பொருளை எண்ணி, பக்தி செய்து, தியானித்து ஞான மார்க்கத்திற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் வானப்பிரஸ்தம்.

Advertisements

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 50

நான் என்பது நீயும் தான். இந்த உண்மையைப் புரிந்துகொள்! என்னைச் சரணடைந்து விடு! செயல்படு! பலனை நான் பார்த்துக்கொள்கிறேன்! என்பதுதான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குக் கீதையாக விளக்கிக்கொண்டிருப்பது.

இந்த அடிப்படையில் தான் உண்மையை உணர்ந்துகொண்ட, ஆத்ம அனுபூதி பெற்ற பெரியவர்களும், மகான்களும் நான் அவன்! அவன் நான்! என்று கூறியிருக்கின்றனர். நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! திரும்பத் திரும்ப இதைப்பற்றியே ஆழமாக சிந்தித்தால் எல்லாமே அதுதான் என்ற உண்மை தெரியவரும்.

நாமும் நம்மைக் கடவுள்தான் என்று ஏற்றுக்கொள்வோம். குறை இருக்கிறதே! என்று நினைத்தால், அந்தக்குறை எனக்கல்ல. இந்தப் பெயருடன் கூடிய பிறவிக்குக் குறை இருக்கத்தான் செய்யும். விஜயா என்னும் பிறவி குறைகள் நிறைந்தவள். அவளின் உள்ளே இருந்து இயக்குகின்ற நான் பரிபூரணன்.

எனவே சுருக்கமாகச் சொல்வதானால் இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமாகக் காட்சியளிப்பது நுண்ணுணர்வாகிய அந்தப் பரப்பிரம்மம் தான். இது தான் புரிய வேண்டிய உண்மை. ஆனால் அவரவரின் கர்மப் பதிவுகளுக்கு ஏற்றபடி மூன்று குண வேறுபாடுகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம். எல்லோரும் அவரவரின் தன்மைக்கேற்றபடி மாறியிருக்கின்றனர்.

ஏனெனில் வேற்றுமை ஒரு சுவாரஸ்யம். வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் என்பதுதான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக் கொள்கை. மிக அற்புதமான ஒரு கொள்கை. இந்தியாவின் ஆன்மீக உயர்விற்கு ஏற்ற கொள்கை.

சரி! அன்பிற்குரியவர்களே! இந்த விளக்கத்தின் அடிப்படையில் இனி 15வது அத்தியாயமாகிய புருஷோத்தம யோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கின்றார் என்பதைப் பார்ப்போம்.

அர்ச்சுனன் கேட்கின்றான், “ஏ! பரந்தாமா! எல்லாவற்றிற்கும் ஆதாரம் நீங்கள் தான் என்றால் இந்த உலகத்திற்கு ஆதாரம் யார்?” இதைக்கேட்டதும் பரந்தாமன் புன்னகை புரிகிறார். அவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் புதிர்போல் ஆரம்பிக்கிறார்.

asvatthaஅவர் இங்கு உருவகமாக ஒன்றைப்பற்றிக் கூறுகின்றார். இந்த உருவகம் வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. கடோபநிஷதத்திலும் இந்த அஸ்வத்த மரத்தைப்பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கையை சம்சாரம் என்று சொல்வது வழக்கம். சம்சாரம், சாகரம், துக்கம்! என்று சொல்வார்கள். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக, அச்சாணியாக இருப்பவள் பெண். எனவே அவளுக்கும் சம்சாரம் என்று ஒரு பெயர் இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த சம்சாரம் என்று சொல்லப்புடுவது, உலகிலுள்ள அத்தனை மனிதர்களாலும் வாழப்படுகின்ற வாழ்க்கையே ஆகும். மனிதகுலம் வாழ்கின்ற இந்த வாழ்க்கைதான் இந்த உலகத்திற்கு ஆதாரம். வாழ்க்கை இல்லையேல் உலகமும் இல்லை.

இந்த சம்சார வாழ்க்கையானது ஒரு பெரிய ஆலமரம் என்று இங்கு உருவகப்படுத்தி விவரிக்கப்படுகின்றது. இதை நன்றாகப் புரிந்துகொண்டு மேலே படியுங்கள். இது நிறுத்தி நிதானமாகப் படிக்கவேணடிய பகுதியாகும்.

இந்த அஸ்வத்த மரத்தைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு விவரிக்கின்றார். “இந்த சம்சாரம் என்னும் அகில உலகமும் ஒரு பெரிய ஆலமரம் போன்றது. இந்த மரத்திற்கு ஆதாரம், புகலிடம், வேர் எல்லாமே நான் தான். அந்த மரத்தின் மேல் நோக்கி வளர்ந்திருப்பது மூலப் பகுதி. அதாவது வேர்ப் பகுதி மேலே இருக்கிறது. கீழ் நோக்கி இறங்கியிருப்பது கிளைப் பகுதி. இந்த மரம் தலைகீழாக இருக்கிறது. மேலும் இந்த மரம் நாளை பகல் வரும் வரை கூட நிலையற்றது. ஆதலால் இதை அசுவத்த மரம் என்கிறார்கள்.”

“இதற்குத் தொடக்கம், முடிவு இரண்டும் அறியப்படாததாலும், நதி எல்லாக் காலத்திலும் ஓடிக்கொண்டே இருப்பதைப் போல் நிரந்தரமாக இது எப்போதும் இருப்பதாலும் இதனைக் குலைவு இல்லாதது என்கிறார்கள்.”

”இல்லாதது போன்ற இந்த வாழ்க்கை இருப்பதாகவும், அது நிலைத்திருப்பதாகவும் தோன்றுகிறது. பிறவி விருப்பத்துடன் செய்கின்ற செயல்கள் எல்லாம் இந்த மாபெரும் மரத்தின் இலைகள் ஆகின்றன. இப்படியான இந்த மரத்தை அதாவது இந்த வாழ்க்கையை யார் உள்ளது உள்ளபடி உணர்ந்து விடுகிறார்களோ அவர்கள் ஞானிகள். வேதங்கள் சொல்கின்ற உண்மைகளை அவர்கள் அறிந்தவர்களாகிவிடுகின்றனர்.”

அதாவது நிலையற்றதான, பொய்யான இந்த வாழ்க்கையைப் பெரிதாக நினைத்து இதில் நிகழ்கின்ற நிகழ்வுகளைப் பெரிதுப்படுத்திப் புலம்பிக்கொண்ட வருந்தாமல் உங்களை மாற்றிக்கொண்டு உண்மையைப் புரிந்தவர்களாக ஆனந்த நிலையில் இருக்கப் பழகுங்கள் என்கிறார் அவர்.

இனி இந்த அஸ்வத்த மரத்தைப்பற்றிக் கிருஷ்ணர் மேலும் விவரிக்கின்றார். “ இந்த சம்சார விருட்சத்தின் கிளைகள் சத்துவம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் மூலமாக வளர்ந்து கீழே, நடுவில், மேலே உள்ள உலகங்களில் பரவியிருக்கின்றன.”

இந்த மூன்று குணங்களின் தன்மைகள் அவற்றின் விளைவுகள் பற்றியெல்லாம் 14ம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருந்தது அல்லவா? அந்த மூன்று குணங்களின் அடிப்படையில் தான் இந்தப் பிறவி வாய்க்கின்றது.