மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 57

சாஸ்திர முறைகள் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால், தக்க பெரியவர்களான சான்றோர்களைச் சென்றடைந்து அவர்கள் கூறுகின்ற நல்லுரைகளின்படி செயல்பட முற்பட வேண்டும். சத் சங்கத்தை சார்ந்த விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

“உனக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ அதை நீ மற்றவருக்குச் செய்!” என்று அனேகமாக எல்லா மகான்களுமே சொல்லியிருக்கின்றனர். இந்த நெறியை மட்டும் நாம் நம் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடந்தால் மற்ற எல்லா தெய்வீகப் பண்புகளுமே இதனைப் பின்தொடர்ந்து நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். ஏனெனில் எதிரில் இருப்பவரை நாமாக நினைக்கின்றபோது அவர்களிடம் அவமதிப்பாக, அன்பின்றி, அசுரத்தனமாக நடந்துகொள்ள நம்மால் முடியாது.

மேலும் பார்த்தசாரதி அருளிய தெய்வீக நெறிகளை முறையாக நாம் பின்பற்றி வருகின்றபோது நம்மிடம் உள்ள இயலாமை, ஆற்றாமை போன்ற குறைபாடுகளுக்கும் அது ஒரு அன்பான சிகிச்சை முறையாக அமையும். மேலும் தெளிந்த அறிவும், பகுத்தறிகின்ற தன்மையும் கொண்டவர்களாக நாம் இருந்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் நான் செய்வது பிழை, நான் செல்கின்ற பாதை தவறான பாதை என்ற உண்மை புரிந்துவிடும். krisha_says

எனவே அசுர இயல்பு கொண்டு இதுவரை வாழ்ந்தவர்கள் கீதை சொன்ன உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புள்ளம் கொண்டவர்களாக மாற வேண்டும். பக்தி நெறியில் ஈடுபட வேண்டும். சாத்வீகமான சைவ உணவையே உண்ணப் பழக வேண்டும். சத் சங்கத்திற்குச் சென்று அதில் சேர்ந்து பயனடைய வேண்டும். ஆன்மீக நூல்களைப் படிப்பதையும், ஞானிகள், மகான்கள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் படித்து அறிவதையும், பகவத்கீதை, இதிகாசங்கள் ஆகியவற்றைப் படிக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டும். நல்ல மனிதர்களிடம் நட்புகொள்ள விருப்பம் ஏற்பட வேண்டும். அதோடுமட்டுமின்றி நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களைப் படிப்படியாகக் கைவிட வேண்டும்.

தெய்வ அருளும், பூர்வஜென்மப் புண்ணியப் பலனும் இருந்தால் அசுர குணங்கள் கொண்டவர்களாக வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அந்தத் தீய மனிதன் மனம் திருந்தி ஆண்டவனை வழிபட்டு, மேன்மையைப் பெற முயன்றால் அவனுக்கு நிச்சயம் நற்பலன் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் மன மாற்றத்தால் விரைவிலேயே அறநெறிச் செல்வர்களாக மாற முடியும். திருந்தி மேம்பட்ட அத்தகையவர்களிடம் நற்பண்புகளாகிய இறையருட்செல்வம் வளரும்.

பகவத்கீதையைப் படிப்பதற்கும், யாராவது உபதேசமாக சொல்வதைக் கேட்பதற்குமே இறையருள் இருந்தால் தான் முடியும் என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார். எல்லோராலும் இதனைத் தொடர்ந்து கேட்கவோ அல்லது வாசிக்கவோ முடியாது. எத்தனையோ தடைகள் வரும் என்பார் அவர். அப்படி எழுகின்ற தடைகளையெல்லாம் மீறி இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகின்ற பெருமக்கள் நிச்சயமாகத் தெய்வீக இயல்புகளைத் தம்மில் நிறைத்துக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்; அசுரத்தன்மையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இதை வாசிப்பதோடு நிறுத்தி விடாமல் நன்றாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே அடிக்கடி சுய பரிசோதனை நடத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். தமது அறியாமையை உணர்ந்துகொள்ள வேண்டும். குறை நிறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற நற்குணங்களை மேலும் வளர்த்து, வேண்டாத தீய குணங்களைப் படிப்படியாகப் போக்கிக்கொள்ளவும் வேண்டும். அதாவது இதுவரை இருந்த தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் மாறமாட்டேன்! நீ உன்னை எனக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு, என்னை அனுசரித்து நடந்துகொள்! என்று பிறரை வற்புறுத்தாமல், தமது தவறான போக்கை உணர்ந்து பிறர் விரும்பும்படி, பிறர் மதிக்கும்படி இனி நாம் நடந்துகொள்ள வேண்டும். பிறரைத் திருத்த முற்படாமல் அல்லது குறை கூறாமல் நாம் திருந்த முயல வேண்டும். இப்படியெல்லாம் தொடர்ந்து நம்மை நாமே கவனித்து வரவும், அருள்நெறியில் அனைத்தையும் செய்யப் பழகவும் ஆரம்பித்தால், நிச்சயம் கண்ணன் காட்டிய வழி நமக்கு மேன்மையைத் தரும். நிம்மதியைத் தரும். மதிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.

அத்தியாயம் 17:

சிரத்தா த்ரய யோகம்

சிரத்தை என்ற சொல் தான் இங்கு சிரத்தா என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிரத்தை என்றால் நம்பிக்கையும், அக்கறையும் ஆகும். த்ரயம் என்ற சொல்லுக்கு மூன்று என்று பொருள். ‘சிரத்தாவான் லபதே ஞானம்” என்கிறது கீதை. அக்கறையும், நம்பிக்கையும் கொண்டவருக்குத்தான் ஞானம் ஏற்படும். அதாவது சாத்திரங்கள் சொல்கின்ற உண்மைகளின் மீதும், அவற்றை எடுத்து போதிக்கின்ற குருவின் மீதும் நம்பிக்கை கொண்டு, அவர் உபதேசிக்கின்ற, நம்மைத் திருத்தி உயர்த்தக்கூடிய ஞான நல்லுரைகளை நாம் ஏற்று, கேட்டதோடு விட்டுவிடாமல் அக்கறையுடன் அவற்றை நமதாக்கி நம் வாழ்க்கையைச் செம்மையுற வாழ வேண்டும்.

இந்த சிரத்தை என்பது தெய்வீகமானது, தெய்வீகமல்லாதது, அரக்கத்தனமானது என மூன்று வகைப்படும். அக்கறையுடனும், நம்பிக்கையுடனும் நாம் கற்கின்ற சாத்திர அறிவு உடல் உபாதைகளிலிருந்து, மன உணர்ச்சிகளின் பிடியிலிருந்து, புத்தியின் சிக்கல்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இது தர்மம், இது அதர்மம் என நமக்குக் கற்பிக்கப்படுகின்ற நெறிமுறைகளே சாத்திர தர்மம் ஆகும். இதைத்தான் நாம் நமது கலாச்சாரம் என்று போற்றிப் பாதுகாத்து வருகிறோம்.

இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் இந்த தர்மநெறிகள் மிக விரிவாகவும், தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் நாமோ அந்தக் கதைகளில் வருகின்ற முரணான கருத்துக்களில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வீண் விவாதம் புரிந்துகொண்டிருக்கின்றோமே தவிர அப்படிச் சொல்லப்பட்டுள்ள தர்மநெறிகளை மனதில் பதித்துக்கொண்டு அதன்படி நடக்க முயல்வதில்லை. இதைத்தான் ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழி சுட்டி நிற்கிறது போலும். ஆயிரம் புத்தகங்கள் படிப்பதால் பயனில்லை. உள்ளம் பண்பட வேண்டும். பக்குவப்பட்ட மனம்தான் தெய்வீகமாக மாறும். மலரும்..
(தொடரும்..)

Advertisements

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 55

பகவான் அர்ச்சுனனுக்கு உபதேசித்த அந்த 26 தெய்வீக சம்பத்தான நற்குண இயல்புகள் (சென்ற வார தொடர்ச்சி..)

11 வாய்மை: கண்டதையும், கேட்டதையும், அறிந்ததையும் உள்ளபடி அப்படியே இனிய சொற்களால் சொல்வது
12 சினவாமை: எவரிடமும், எதனிடமும் குரோதம் கொள்ளாதிருத்தல்.
அதாவது, எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்
13 துறவு: உலகியல் ஆசைகளை, விருப்பு வெறுப்புகளைத் துறப்பது.(உள்ளத்தால்)
14 அமைதி: உள்ளத்தில் விருப்பு, வெறுப்புக்களால் ஏற்படும் சஞ்சலங்களை இல்லாமற் செய்வது.
அதாவது, மனம் எந்தவித சலனமும் இன்றி ஆழ்கடல் போல் அமைதியாய் இருத்தல்.
15 கோள் பேசாதிருத்தல்: பிறர் இல்லாத சமயத்திலோ அல்லது ஒருவர் சென்ற பின்போ புறம் பேசக்கூடாது. அவர்களின் குற்றம் குறைகளை அவர்களுக்குத் தெரியாமல் பிறரிடம் கூறி இழிவு படுத்தக் கூடாது.
16 ஜீவ தயை: எல்லா உயிரினங்களிடமும் கருணை கொள்ளல். இரக்கம், பரிவு கொண்டு பழகுதல். இதற்கு எல்லாமே அவன் தான் என்ற உணர்வு நம்மில் ஏற்பட வேண்டும்.
17 அவாவின்மை: உலகியல் பொருள்களில் பேராசை கொள்ளாமல் இருத்தல். போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற பழமொழியே இதற்கு ஏற்ற பொருள் தருகின்றது.
18 மென்மை: எந்நேரமும் கனிந்த, மென்மையான இதயத்தைக் கொண்டிருத்தல்.
அதாவது, சொல்லும் செயலும் மென்மையாக அமைதல் சிறப்பு.
19 நாணுடைமை: செய்யத்தகாததைச் செய்வதில் வெட்கப்படுதல்.
பெரியவர்களால் இவற்றைச் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட கீழான செயல்களில் ஈடுபடத் தயங்கி வெட்கப்பட்டு ஒதுங்குதல் நல்ல குணமாகும்.
20 சலியாமை: சபல சித்தம், அவசரப்படுதல் இரண்டினாலும் சஞ்சலப்படாமல் இருத்தல்
21 ஒளி: உடல், வாக்கு இரண்டிலும் பொலிவும், செல்வாக்கும் கொண்டிருத்தல். இதனை தேஜஸ் என்று சொல்வார்கள்.
22 பொறையுடைமை: வலிமை. தண்டனை அளிக்கும் அதிகாரமும், திறமையும் இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
அதாவது, ஒருவன் உன் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு என்ற இயேசு நாதரின் பொன்மொழி இதற்குப் பொருத்தமானது.
23 மன உறுதி: எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும், பொறுமையும் கொண்டிருத்தல்.
மன உறுதிதான் உடல் நலத்தையும் காக்கும். குறிக்கோளை அடைய வைக்கும்.
24 தூய்மை: உடலையும் உள்ளத்தையும் துhயதாக வைத்திருத்தல்.
சுற்றுப்புறத்தையும் தன் இல்லத்தையும் மிக சுத்தமாகப் பராமரித்தல். எண்ணம், சொல், செயலும் கூடத் தூய்மையாக இருத்தல் அவசியம். தூய்மை உள்ள இடத்தில் செல்வம் சேரும் என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.
25 துரோகமின்மை: பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
பிறர் பிழை பொறுத்தல் என்றும் இதைக் கூறலாம். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்னும் குறள் இதற்குப் பொருத்தமானது.
26 தன்மான இழப்பு: மதிப்பை எதிர்பார்க்காமல் இருப்பது.
அதாவது, உயர்வு மனப்பான்மையும், செருக்கும் கொள்ளாதிருத்தல். அகங்காரத்தை அறவே ஒழித்துக்கட்ட இதுவே சிறந்த வழி.

இவை யாவும் தெய்வீக சம்பத்து பெற்ற மனிதரின் இலட்சணங்கள். இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்தத் தகுதி படைத்தவன் என்கிறார் கண்ணபிரான்.

இத்தகைய தெய்வீகக் குண இயல்புகளைப் பற்றி அர்ச்சுனனுக்கு உபதேசித்ததோடு மட்டுமின்றி அசுரசம்பத்து எனப்படும் கீழ்மைக் குண இயல்புகள் பற்றியும் அவர் மிகத் தெளிவாகக் கூறி விவரிக்கின்றார். இப்படிப்பட்டவர்களை அவர் அசுரர் என்று குறிப்பிடுகின்றார்.

அசுரர்கள் என்றால் நாம் உடனே பருத்த உடலும், பரட்டைத் தலைமுடியும், கொம்புகளும், கோரைப் பற்களும், பெரிய மீசையும், முட்டைக் கண்களும், கொடூரமான தோற்றமும் கொண்டவர்களாகப் புராணங்களில் விவரித்தபடி, திரைப்படங்களில் பார்த்தபடி கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அது உண்மையல்ல. மென்மையான, இனிமையான முகத்துடனேயே, நாகரீக நடை, உடை, பாவனைகளுடனேயே பொய்யும், களவும், சுயநலமும், துரோக எண்ணமும், கொடிய நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபடுபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

வெளியில் பார்த்தால் அசுரர் என்று தெரியாது. ஆனால் உள்ளத்தில் வஞ்சகம். வெளியில் நடிப்பு. அசுரர்களிடம் அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டுமே இருக்காது. அவர்களைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க இயலாது. அவர்களிடம் முறையான நடத்தையோ, உண்மைத் தன்மையோ இருக்காது. சமுதாயத்தில் மதிப்பும்இ மரியாதையுமாகத் தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் கூட, மிக நெருங்கிப் பழகினால் மட்டமானவர்களாக இருப்பார்கள். வெளியில் தெரியாது. உடலைத் தனதென்று நினைத்து, அதைப் பேணி அந்த உடல் இன்பத்திற்காகவே வாழ்ந்தும், வாழ விரும்பியும், இந்த உடலே நான் என்றும் கருதுபவர்கள் அசுரர்கள்.

எனக்கு மரணமில்லை. நான் எப்போதும் வாழ்ந்து, மகிழ்ந்து, சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். தான் வாழ்ந்தால் போதும், பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று சுயநலத்துடன் அறநெறி தவறி வாழ்வார்கள். இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும் தான் அசுர சம்பத்து. அதாவது தீய செல்வம் எனப்படும்.

தீய குணங்கள் பின்வருமாறு:

1 டம்பம்: ஆடம்பரம், வீண் பெருமை ஆகியவை இங்கு டம்பம் என்று குறிப்பிடப்படுகின்றது. வெளிப் பகட்டுடன் செயற்கைப் பெருமையைக் காட்டிக்கொள்ளுதல். நான், நான் என்று தன்னைத் தூக்கி நிறுத்த, முன்னிலைப்படுத்த விரும்புதல்..

2 இறுமாப்பு: அகந்தை, கர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நடந்துகொள்ளுதல். தமது கல்வி, செல்வம், பதவி ஆகியவற்றால் இப்படிப்பட்டவர்கள் கர்வமும் பெருமையும் கொள்கின்றனர். இறுமாப்பு உடையவர்கள் பிறரைத் துச்சமாக நடத்துவார்கள். அவமதிப்பார்கள்.

3 கர்வம்: வீண் அபிமானம்: தான் சொல்வதும், செய்வதும் தான் சரி என்ற மனப்போக்கு. பெருமைக்காகப் பேசுவது, தேவையற்ற ஆடம்பரப் பொருள்களை வாங்கி அதைப்பற்றிப் பெருமையடித்துக்கொள்வது போன்ற செயல்கள் கர்வத்தினாலேயே வெளிப்படுகின்றன. நன்மை கருதி செயல்படாமல் வீண் கர்வத்தினால் இப்படிப்பட்டவர்கள் செயல்படுவார்கள்.

4 கோபம்: கோபம் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடு. தனக்கு எதிராக யாரும் செயல்படும்போது, அல்லது கருத்து வேறுபாடு ஏற்படும்போது உண்டாகின்ற உணர்ச்சியே கோபம். சினத்தினால் வன் சொற்களும், கடுமையான அல்லது கொடூரமான நடிவடிக்கைகளும், வெறுப்பும், பகையும் ஏற்பட்டுவிடும். கோபம் உடல் நலத்திற்குக் கேடு.

5 கொடூரம்: மனம், வாக்கு, செயல்களில் கடுமையும், கொடுமையும் கொண்டிருத்தல். இக்குணத்தால் தீமை தான் விளையும். வன்முறை வளரும். தண்டனை கொடுக்கின்ற எண்ணமும், பகை வளர்க்கும் பண்பும் வாய்க்கும்.

6 அஞ்ஞானம்: அறியாமை என்னும் இந்தப் பண்புதான் அசுர குணங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம். நல்லது, பொல்லாதது, உண்மை, பொய், கடமை, கடமையல்லாதது, செய்யத்தக்கது, செய்யதகாதது போன்றவற்றை அறியாமல் எதைச்செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற அறிவின்றித் தம் சுய விருப்பத்தின்படி, மனம் போன போக்கில் அவர்கள் எதையும் சொல்வார்கள், செய்வார்கள், சிந்திப்பார்கள்.இப்படிப்பட்டவர்கள் தன்னிடம் பக்தி செய்யத் தகுதியற்றவர்கள் என்கிறார் கீதாச்சார்யன்.