மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 54

தெய்வ – அசுர சம்பத் விபாக யோகம்

இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதனே உயர்ந்த படைப்பு. இந்த மனிதனும் தனது பூர்வ ஜன்ம கர்மப் பலனால் கிடைத்த உடல், சூழ்நிலை ஆகியவற்றை வைத்துக்கொண்டுதான் வாழ வேண்டும். இந்த உடம்பும், உறவுகளும் நாம் கேட்டுப் பெற்றவையல்ல. நமக்கு அமையும் சூழ்நிலையும் நம் விருப்பத்திற்கேற்ப அமைவதில்லை. நமது முந்தைய பிறவிகளின் கர்மப்பலனே இன்றைய வாழ்க்கை. நமது இன்றைய செயல்பாட்டின் பிரதிபலிப்புதான் நாளைய வாழ்க்கை. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டாலே மனதில் பாதி நிம்மதி ஏற்பட்டு விடும்.

இப்படிப்பட்ட இந்த உண்மைகளை அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பைப் பூர்வஜென்ம முயற்சிகளின் தொடர்ச்சியாக ஒரு சிலரே இந்தப் பிறவியில் பெறுகின்றனர். அப்படிப்பட்டவர்களால் தான் இப்படிப்பட்ட உயர்ந்த நூல்களைப் படிக்கும் ஆர்வமும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு உபதேசத்தின் மூலம் ஞானம் பெறவும், தன்னைப்பற்றித் தானே ஆராய்ந்து, குறை நிறைகளை அறிந்துகொண்டு, குறைகளைப் பயிற்சியாலும், முயற்சியாலும் நீக்கி, நிறைகளை மேலும் வளர்த்துப் பூரணப்பட முடியும்.

சிந்தனை தான் மனிதனின் தன்மைகளை உயர்த்துகின்றது. சிந்தித்துப் பார்ப்பதன் மூலமே ஒருவன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும். மேம்படுத்திக்கொள்ள முடியும். மகான்கள், பெரியோர்கள், சமுதாயம் ஆகியவை கற்றுக்கொடுத்த நற்பண்புகளை ஆராயாமல் நம்முடையவையாக ஏற்று நம்மை நாம் மாற்றிக்கொண்டுவிட முடியாது. சிந்திக்கப் பழக வேண்டும். ஏனெனில், அப்படிப் பிறரால் சொல்லித்தரப்பட்ட அறநெறிகளை நம் வசதிக்கேற்பப் பயன்படுத்திக் கொள்கிறோமே தவிர அவற்றை நம் இயல்பாக நாம் மாற்றித் தன்வயப்படுத்திக்கொள்வதில்லை. பிறரால் சொல்லப்பட்டவை பெரும்பாலும் வசதியான நேரத்தில் கைவிடப்படும். ஆகவே நாமே சிந்தித்துச் சுயமாகவும், சரியாகவும் புரிந்துகொண்டால் தான் அவற்றை நமது குணமாக ஆக்கிக்கொள்ள முடியும்.

இந்தத் தன்மை ஆன்மீக சாதகர்களாகிய நமக்கு மிக அவசியம். ஏனென்றால் இந்த அத்தியாயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தெய்வீகக் குணங்களாக சில அம்சங்கள் கண்ணபிரானால் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு நம்மிடம் இருந்தால் களையப்படவேண்டிய தீய குணங்களைப் பற்றியும் பகவான், அவை அசுர குணங்கள் என்று கூறி அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் எடுத்துரைத்து எச்சரிக்கவும் செய்கின்றார்.

இந்த இடத்தில் இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து ஆழ்ந்த கவனத்துடன் வாசித்துக்கொண்டு வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். ஏற்கனவே சேத்ர-சேத்ரக்ஞ விபாக யோகம் என்னும் 13வது அத்தியாயத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய நன்னெறிகளாக 20 அம்சங்களைப் பரந்தாமன் உபதேசித்திருக்கின்றாரே, இப்போது மீண்டும் அதையே திரும்பச் சொல்கின்றாரா? என்று ஒரு குழப்பம் ஏற்படும். அழியக்கூடிய இந்த உடலை அறியாமையால் நான் என்று நினைத்து நாம் வாழ்கின்றவரை இந்த உடலின் உள்ளே இருந்து இதனை இயக்கிக்கொண்டிருக்கின்ற சேத்ரக்ஞனை வெளிப்படுத்த முடியாது. எனவே உடலை நான் என்று சொல்லாமல் இது என்று நம்மிலிருந்து வேறான ஒன்றாக இதனை உணர்ந்து பிரித்துச் சொல்லக்கூடிய தன்மையைப் பெறுவதற்குத் தான் 20 சாதனங்களைக் கண்ணன் அங்கு எடுத்துரைத்தார்.

மாறுதல்களுடன் கூடிய இந்த சரீரம் தன்னிலும் வேறுபட்டது என்பது நன்கு வெளிப்படையாகப் புலப்படுவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் தான் அங்கு கண்ணனால் சொல்லப்பட்டன. இங்கு அவர் சொல்லி விளக்குவது மனிதர்களின் குண இயல்புகளின் அடிப்படையில் சிலர் தெய்வீக இயல்புகளைக் கொண்டவர்களாகவும், வேறு சிலர் அசுர குணங்களைப் பிறவியிலிருந்தே கொண்டிருப்பவர்களாகவும் இருக்கின்ற படைப்பின் விசித்திரத்தைப் பற்றித்தான்.

எனவே தெய்வீக நிலைக்கு ஆன்ம சாதகர்கள் உயர வேண்டுமென்றால் அல்லது தம்மைத் தாமே திருத்திக்கொள்ள விரும்புகின்ற நிலையில் இருப்பவர்கள் இங்கு பார்த்தசாரதியால் சொல்லப்படுகின்ற நற்குணங்கள் அத்தனையையும் அறிந்து, சிந்தித்து அவற்றைத் தம்முடையவையாய்; ஏற்க வேண்டும். அவற்றைத் தம்மில் பிரதிபலிக்கச் செய்தல் வேண்டும். சாத்வீகத் தன்மையுடன் செயல்படுபவர்கள் தெய்வீகப் பாதையில் முன்னேறிச் செல்கின்றனர். ரஜஸ், தமஸ், குணங்களில் செயலாற்றுபவர்களுக்கு இப்படி முன்னேறிச் செல்ல வாய்ப்புக்கள் இல்லை. இந்த ஜட உலகிலேயே மனிதர்களாகவோ அல்லது மிருகங்கள் போன்ற தாழ்ந்த பிறவிகளாகவோ தான் அவர்கள் மீண்டும் பிறக்க வேண்டி இருக்கும். இந்த விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதன் மூலம் நம்மை நாமே உற்றுக் கவனித்துக் கூடாத அசுர குணங்களைத் திருத்திக்கொள்ள முடியும் அல்லவா!

இனி, பகவான் அர்ச்சுனனுக்கு உபதேசித்த அந்த 26 தெய்வீக சம்பத்தான நற்குண இயல்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.

1 அஞ்சாமை: திடமான நம்பிக்கையுடன் என்னிடமே ஈடுபட்டு, அச்சமின்றி வாழ்தல்.
அதாவது, வாழ்க்கையில் எது நடந்தாலும் அஞ்சாமல் அதை ஏற்று இறை நம்பிக்கையுடன் வாழ்தல்.
2 உள்ளத்தூய்மை: உள் மனதில் என்னை அடைய வேண்டும் என்ற திடமான, தீவிர விருப்பம் கொண்டிருத்தல்.
அதாவது, இந்த விருப்பம் கொண்டவர்களால் தீய எண்ணங்களையோ, தீய விருப்பங்களையோ மனதில் கொள்ள முடியாது. தெய்வ பக்தியில் ஈடுபட்டு எண்ணங்களின்றி உள்ளம் தூய்மை பெற்றுத் திகழும்.
3 ஞானயோகத்தில் உறுதி: என்னைத் தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு, எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
அதாவது, பதட்டமில்லாமல் செயல்படுகின்ற தன்மை நம்மில் ஏற்பட்டால் தான் ஆன்மீகத்தை நன்கு புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஞானம் பெறுவதற்கு சமநிலை அவசியம்.
4 ஈகை: சாத்வீகமான தானம் செய்தல் சிறந்தது.
தர்மம் செய்வதில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் சாத்வீக தர்மமே சிறந்தது என்று கண்ணன் கூறுகின்றார். உண்மையான ஆன்மீக விழிப்புணர்விற்காக அதன் வளர்ச்சிக்காக செலவு செய்தல்.
5 தன்னடக்கம்: ஐம்புலன்களையும் சுயக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
வெளிப்புறமாக அறியாமையுடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஐம்புலன்களையும் தத்தம் இடத்தில் நிலை நிறுத்துதல்.
6 வேள்வி: தன் குலக்கடமைகளை முறையாகச் செய்து வருதல்.
அவரவர் தாம் பிறந்த குலத்திற்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை ஏற்று அவற்றைத் தவறவிடாமல் கடைப்பிடித்தல்.
7 சாஸ்திரங்களில் நம்பிக்கை: சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட நீதிகளைத் தம் வாழ்க்கை நெறிகளாக மேற்கொள்ளுதல்.
8 தவம்: தன் கடமைகளைச் செய்கின்றபோது வரும் இன்னல், இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ளுதல்.
அதாவது, தவம் என்றவுடன் தனிமையான ஓரிடத்தில் கண்ணை மூடி அமர்ந்திருத்தல் என்றுதான் நாம் நினைப்போம். காட்டிற்குச் சென்று தவத்தை மேற்கொள்ளுவதும் தவம் என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உண்மையான தவம் எது என்பதைக் கண்ணன் இங்குக் கூறியுள்ளார்.
9 எளிமை: உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும், செயல்களாலும் சரியாக, எளிமையாக வாழ்தல்
10 கொல்லாமை: உடல், உள்ளம், வாக்கால் எந்தப் பிராணிக்கும் சிறிதளவேனும் துன்பம் தராதிருத்தல். அதாவது, உண்மையான அகிம்சை என்பது எவருடைய நல் வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் எந்த விதத்த்pலும் தொல்லை கொடுக்காமல் இருப்பது.

Advertisements