கங்கா ஒரு காவியம் – 17

இங்கு நடப்பது எதுவும் தெரியாமல், சனிக்கிழமை ஆயிற்றே, என்று ஸ்ரீராமும் சக்தியும் ஆதித்யாவுடன் திருநள்ளாற்றிற்குச் சென்று சனீஸ்வர பகவான் சன்னதியில் எள் விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து, தமது குடும்ப நன்மைக்காகவும், தங்கள் அருமைத்தாயின் உடல் நலத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தித்துத் திரும்பினர். வீட்டிற்கு வந்து மறுநாள் லஷ்மி பஸ்ஸில் புறப்படுவதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு இரவு பதினோரு மணி வரை தாத்தா குமரேசனின் நண்பரான ஜெயராம ஐயரிடம் தம் குடும்பத்தின் கதைகளையெல்லாம் பேசி மகிழ்ந்து விட்டுப் படுக்கச் சென்றனர்.
நல்ல துாக்கத்தில் சக்திக்குத் தன்னை யாரோ தொட்டு எழுப்புவது போலவும், அந்த உருவம் தன் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போலவும் தோன்றியது. சட்டென்று கண் விழித்து எழுந்து உட்கார்ந்தாள். அவள் உடல் சிலிர்த்தது.  அதே சமயம் வாயிற் கதவை யாரோ தட்டுகின்ற சத்தம் கேட்டது.  உடனே ஸ்ரீராமை எழுப்பிக் கதவைத் திறக்கச் செய்து பார்த்தால் வாயிலில் தந்திச் சேவகன் நின்றிருந்தான். தந்தியை வாங்கி படித்ததும் இருவருக்கும் தலையில்; இடி  விழுந்ததைப் போலாயிற்று. அழுதனா் கதறினர், துடித்தனா் துவண்டனர், பதறினர் , தன்னிலை மறந்து தன் உணர்வையும் தாம் மறந்து நடைப்பிணமாய் சொல்லிழந்து. செயலிழந்து, உற்ற நேரத்தில் உறு துணையாய் உடனிருக்காமல் இப்படி ஒதுங்கி வரும்படியாயிற்றே என்று அரற்றினர். சக்திக்குத் தன்னைத் தொட்டு எழுப்பியது யாரென்று புரிந்துவிட்டது. கிருஷ்ணா போனபோதே நானும் புறப்பட்டுப் போயிருக்கக்கூடாதா! என்று கதறினாள். செய்யத் தவறியதை நினைத்து வருந்தி, எப்படியோ, ஒரு காரை ஏற்பாடு செய்து இரவோடிரவாகப் புறப்பட்டு அதிகாலையுpல் அழுது கொண்டே வீட்டை அடைந்தனர். ஊருக்கு மெதுமெதுவாகப் பொழுது புலர்;ந்தது. ஆனால் இவர்களுக்கோ எல்லாமே இருண்டு போயிற்று.  எங்கும் அழுகுரல்! எங்கும் அவலம்! எங்கும் புலம்பல்!
“அம்மா!” என்றும் “பாட்டி!” என்றும், “இப்படிப் போயிட்டியே!” என்றும், “இனி எங்களுக்கு கதி யாரென்றும்”, அவலக் குரல்கள் எழுந்து ஒலித்தன. செய்தி கேட்டு உறவுகள் எல்லாம் வந்தன. சிலர் புரண்டு அழுதனர், சிலர் ஆடாமல் அசையாமல் அப்படியே அந்தப் புனிதவதியை உற்றுப் பார்த்து நின்றனர். நண்பர் கூட்டம் குவிந்தது. ஜிப்மர் மருத்துவ மனையின் நடமாடும் மருத்துவ வாகனம் வாசலில் நின்று மருத்துவக் குழு ஒன்று உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது, கங்கா தனது கண்களைத் தான்  இறந்த பிறகு தானமாக எடுக்கும்படி சொல்லி வைத்திருக்கிறாள் என்பது.
அரைமணி நேரத்தில் அவர்கள் தங்கள் பணிகளைப் படபடவென்று முடித்துப் புறப்பட்டுச் சென்றனர்.  போகும் முன் ஒரு மருத்துவர், அவருக்குக் கங்காவை மருத்துவ மனையில் இருந்தபோதே நன்றாகத் தெரியும். “உங்க அம்மா ஓர் அற்புதப் பெண்மணி!” என்று ஸ்ரீராமின் தோள்களைத் தட்டிப் பாராட்டி விட்டுச் சென்றார்.
நீட்டி நிமிர்ந்து இதழ்க் கடையில் விரிந்த புன்னகையுடன் மிக அழகாக அந்தச் சிரித்த முகம் மேலும் தெளிவு பெற்றுத், துயில்வது போல் நிறைவாகப் படுத்திருந்தாள் கங்கா. கிடந்த சிலையருகே அமர்ந்த சிலையாகக் கங்காவின் அருமைப்பேத்தி, அன்பு மருமகள் சக்தி அமர்ந்திருந்தாள்.     கடைசி நேரத்தில் அம்மாவின் அருகிலிருக்காத பாவியாகி விட்டாயேடி! என்று அவள் மனம் அவளை இடித்துரைத்து ரத்தம் சொட்ட வைத்தது. ஸ்ரீராமோ உயிர்ப் பிணமாகப் போய் விட்டான்.  தாயின் கடைசி நிமிடங்களில் தன் மடியில் அவளை ஏந்த முடியாமற் போயிற்றே! என அவன் ஆறாய்க் கண்ணீர் பெருக்கினான்.  இருவரும் ராஜாவின் கரங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டனர். சாந்தி, அவளது கணவன், நர்ஸ் கலா ஆகியோரை விழுந்து கும்பிட்டு வணங்கினர். யார் யாரோ வந்தார்கள். மலர் மாலைகளும், மலர் வளையங்களும் குவிந்தன. அந்தச் சின்னஞ் சிறிய வீட்டில் கூட்டம் அலை மோதியது. வீதியெங்கும் பெருங்கூட்டம்.  ஆயிரம் கதைகள் அங்கு அவளைப் பற்றிப் புகழந்துரைக்கப்பட்டன. நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் முறைப்படி ஆரம்பித்தன. வரவேண்டிய உறவினரல்லாம் வந்து சேர்ந்தனர். ஆனால் கடைசி நேரம் வரை மூத்த மகன் ராமேஸ்வரனும் அவனது குடும்பமும் வந்து சேர முடியவில்லை. கிருஷ்ணன் மகர ஜோதி தரிசனத்திற்காகச் சபரிமலைக்குப் போயிருந்தான். சுந்தரம் எங்கிருக்கிறான் என்று யாருக்குமே தெரியவில்லை.
அன்று போகிப் பண்டிகை. இதற்கு மேலும் வருபவர்களுக்காகக் காத்திருக்க முடியாதென்ற  நிலையில் உற்றாரும் உறவினரும், நண்பர்களும், ஊராரும் கூடி அழக் கங்கா என்ற ஜீவ நதியின் இறுதிப் பயணம் புறப்பட்டது.  மக்கள் வேண்டும், மனிதர் வேண்டும், நீயும் வேண்டும், அவனும் வேண்டும் என்று எல்லோரையும் தன் அன்பாலும், சொல்லாலும், செயலாலும் அள்ளி அள்ளி அணைத்து நட்புப் பாராட்டிப் பழகிய அந்த அன்புத் தாய், எல்லோரும் நன்றாக இருங்கள்! நான் போகிறேன்! என்று புறப்பட்டுவிட்டாள். தன்னைப் பொறுத்தவரை, தன் மனதிற்கு விரோதமில்லாமல், வஞ்சனையின்றி, நெஞ்சுரத்துடன் வாழ்ந்து, அன்பிற்குரியவர்களிடம் வாழ வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லித்தந்து எத்தனையோ குடும்பங்களுக்குப் பல விதத்திலும் உதவி செய்து, தன் கதை முடிந்ததெனக் காலனுடன் சென்றுவிட்ட அந்த கங்கையைக் கை நீட்டி அழைத்துக் கதறி அழுது தெருவில் புரண்டனர் அவளது வாரிசுகளும் வழித் தோன்றல்களும். பேரன்களும் நண்பர்களும் பெரும் பாக்கியமெனப் பாட்டியை நீண்ட நெடுந்துாரத்திலிருந்த மயானத்திற்குச் சுமந்து சென்றனர்.funeral1

“ஒரு விதவைப் பார்ப்பனப் பெண்மணியின் சாவிற்கு இவ்வளவு பெரிய அளவிலான பெருங்கூட்டம் பின்னால் சென்ற விந்தையை என் வாழ்நாளிலேயே நான் கண்டதில்லை, இன்று தான் என் கண்களால் நேரிடக் கண்டேன்” என்று ஒரு பெரியவர் பக்கத்தில் நின்றவரிடம் கூறி வியந்தார்.

line2
கங்கா என்ற காவியம் முடிந்து விட்டது.  இப் பாரதப் புண்ணிய பூமியில் எத்தனையோ பெண் நதிகள் இப்படித்தான் புனிதமாக வாழ்ந்து வளம் சேர்த்து மறைந்துகொண்டிருக்கின்றன.  இப்பெண்மணிகளின் வாழ்க்கை முறைகளால் வளம்பெற்ற குடும்பங்கள் எத்தனை எத்தனையோ! இப்படிப்பட்டவர்கள் தான் நம் பாரதத்தின் கலாச்சாரப் பெட்டகங்கள். இன்றைய பெண்கள் தங்கள் நிஜத் தன்மையை உணர்ந்து திருந்தி வாழ இவர்கள் தான் என்றுமே வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இதனைப் படிக்கும் யாரும் தங்கள் பரம்பரையில் வாழ்ந்தயாராவது ஒர் ஒப்பற்ற மங்கையர் திலகத்தை நிச்சயம் எண்ணிப் பாhப்பார்கள். அது தான் இந்த நெடுங்கதையின் வெற்றியாக இருக்கும்.            –

ஓம் சாந்தி –

line1

Advertisements

கங்கா ஒரு காவியம் – 16

என்ன தான் மகனையும் மருமகளையும் பேரக்குழந்தைகளையும் வற்புறுத்தி அனுப்பி வைத்து விட்டாலும் அவர்கள் சென்ற பிறகு கங்காவிற்கு வீடு வெறிச்சோடியது. ஒரு சோர்வும் வெறுமையும் அவளைச் சூழ்ந்தது. இயந்திரமாக எழுந்துத் தானே தனது வேலைகளைச் செய்து குளித்துத் துணி துவைத்துச் சமைத்துப் பொழுதைப் போக்கினாள். பக்கத்து வீட்டு சாந்தியும், எதிர் வீட்டு மங்கையும் தான் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டனர். மறுநாள் பாட்டியின் நலம் விசாரித்து ஏதாவது தேவையா என்று பார்த்துவிட்டுப் போக வந்த சீதாவின் மகன் ராஜாவிட்ம் மங்கை “என்னதான் பகலிலே நாங்க பாட்டியைக் கூட இருந்து பார்த்துக்கிட்டாலும், ராத்திரியில் அவங்க தனியாத்தான் இருக்காங்க. அது சரியாப் படலே. அதனால இன்னியிலேர்ந்து நீ ராத்திரி வந்து துணைக்குப் படுத்துக்கோ!” என்று கூறினாள்.

ராஜா பாட்டியிடம் ராஜாஜி நகருக்குப் புறப்பட்டு வரும்படி மிகவும் கேட்டுக்கொண்டான். ஆனால் கங்கா வர மறுக்கவே, அவன் அதன் பிறகு தன் வீட்டிற்குப் போகவில்லை. மாமாவும் அக்காவும் வரும் வரை தான் அங்கேயே இருக்கப் போவதாகச் சொல்லித் தங்கிவிட்டான். மறுநாள் புதுவைக்கு வந்த ஒரு நண்பர் குடும்பத்துடன் கிருஷ்ணா காரைக்காலிருந்து வந்துவிட்டாள். அங்கு தனக்கு போரடித்தது என்றும், இங்கே தான் விளையாட முடியுமென்றும் தான் பிடிவாதம் பிடித்து வந்து விட்டதாக அவள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூறினாள். யாருமில்லாத தனிமையை விரும்பாத கங்காவிற்கு மீண்டும் கலகலப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுவிட்டன. அவளுக்குச் சதா ஏதாவது பேச வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும், தன் பேரனுக்கும் பேத்திக்கும் தன் கையாலேயே அருமையாகச் சமைத்து அவர்களைச் சாப்பிடச் சொல்லி மகிழ்ந்தாள்.

அன்று சனிக்கிழமை. கங்கா கிருஷ்ணாவை இழுத்து வைத்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி அழகாக உடையணிவித்து விட்டாள். சமையல் செய்தாள். அதன் பின்பும் சும்மா இருக்காமல் வாழைக்காய், கத்தரிக்காய் எல்லாம் சீவி பஜ்ஜி பண்ணினாள். அன்று மாலை தன்னைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போக வந்தவர்களுக்கெல்லாம் பஜ்ஜியை சட்னியுடன் சேர்த்துத் தந்து உபசரித்தாள். தானும் மனம் கொண்ட மட்டும் அவற்றைச் சாப்பிட்டாள். அவளுக்கு எண்ணெய்ப் பண்டம் ஒத்துக்கொள்ளாது என்று தடுத்து நிறுத்த அருகில் சக்தி இல்லையே!.

இரவு பத்துமணி வரையில் தெருப் பெண்மணிகளுடன் ஆளோடியில் அமர்ந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி அரட்டை அடித்தாள். “நாழியாகிவிடடது, படுக்க வரவில்லையா?” என்று பலமுறை ராஜா அழைத்த பிறகு “என் பேரன் கூப்பிடறான். நான் படுத்துக்கப் போறேன்! எல்லோருக்கும் குட் நைட்!” என்று கூறி விடைபெற்று உள்ளே வந்தாள்.

ஸ்ரீராமைப் போலவே ராஜாவும் பாட்டிக்கு மிக அழகாகப் படுக்கை விரித்துப் பக்கத்தில் குட்டி மெத்தையில் கிருஷ்ணாவைப் படுக்க வைத்தான். வழக்கத்திற்கு மாறாகக் கங்கா தன் பேத்தியிடம் நீண்ட நேரம் ஏதேதோ அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தாள்.

“நீ சமர்த்தா இருக்கணும். நன்னாப் படிக்கணும். நம்மாத்திலே நிறைய படிச்சவா கிடையாது. நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும். உங்கம்மாவைப் போல கெட்டிக்காரியா, நல்லவளாப் பேர் வாங்கணும். அப்பா அம்மா என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. அப்படியே கேட்டு நடக்கணும். தம்பியை சமர்த்தாப் பார்த்துக்கணும்!” என்று அறிவுரை நீண்டுகொண்டே போயிற்று. கிருஷ்ணா பாட்டி சொன்னதற்கெல்லாம் ஊம்! ஊம்! என்று தன் கால்களைப் பாட்டியின் வயிற்றில் போட்டபடி ஊம் கொட்டிக் கொண்டிருந்தாள். “ஆமா! இப்போ எல்லாத்துக்கும் ஊம் போடு! நாளைக்கு அம்மா வந்தா அவ சொன்ன பேச்சு கேக்காம அடி வாங்கு. சாம்பல் மோட்டு நாய் கதை தான் உன் கதை! என்று பாட்டி கூறவே, கிருஷ்ணா, அந்தக் கதையைச் சொல்லியே ஆக வேண்டுமென்று அடம் பிடித்தாள்.

கங்காவும் சிரித்துக் கொண்டே, “ஒரு ஊர்ல ஒரு தெரு நாய் இருந்ததாம். அது தெருத் தெருவா சுத்தி ரோட்ல கிடக்கிற எச்சல் இலையில கிடக்கிறதையெல்லாம் பொறுக்கித் திங்குமாம். இப்படி நாள் பூரா அலைஞ்சு திரிஞ்சிட்டு, ராத்திரி ஒரு சாம்பல் மேட்டு மேல போய்ப் படுத்துக்குமாம். அப்போ, நாம ஏன் இப்படி எச்சல் இலையில கிடக்கிறதையும், குப்பையில கிடக்கிறதையும் பொறுக்கித் திங்கறோம்? நாளையிலேர்ந்து இப்படி கண்ட அசிங்கத்தையெல்லாம் சாப்பிடக் கூடாது. நல்ல சாப்பாடாக் கிடைச்சா சாப்பிடுவோம். அப்படி கிடைக்காமப் போனா பட்டினி கிடந்தாலும் பரவாயில்லே. ஆனா நாம மனசு மாறிடக் கூடாதுன்னு” யோசிக்குமாம். சரி! இனிமே அப்படித்தான் இருப்போம்னுட்டுத் துhங்குமாம்! ஆனா போது விடிஞ்சதுமே அது வாலைக் குழைச்சிண்டு பழைய புத்தியோட எச்ச இலைக்குத் தான் ஓடுமாம்!” என்று கங்கா சொல்லி முடித்ததும், கிருஷ்ணா, “போ பாட்டி! நான் ஒண்ணும் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்! சமர்த்தா இருப்பேன்! என்று ஓங்கிக் கத்தவே,”சரி, சரி நீ சமர்த்துத் தான்! இப்போ துhங்கு! என்று அவளை அணைத்து சமாதானப் படுத்தித் துhங்க வைத்தாள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ராஜாவும், கிருஷ்ணாவும் சட்டென்று துhங்கி விட்டனர். ஆனால் கங்காவிற்குத் துhக்கம் வரவில்லை. ஏதேதோ நினைவுகள் அவளைப் போட்டுப் புரட்டின. மாலையில் சாப்பிட்ட பஜ்ஜி அவளுக்கு இருந்த ரத்த அழுத்தத்தை ஏற்றி விட்டது. வயிற்றை ஏதோ சங்கடம் செய்தது. மெதுவாக எழுந்து பாத் ரூம் போய்வி;ட்டு வந்தாள். திரும்பி வரும் போது அவளுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. தலை சுற்றியது. நிலை தடுமாறிக் கதவில் நன்றாக இடித்துக் கொண்டு விட்டாள். கதவில் சத்தம் எழவே திடுக்கிட்டுக் கண் விழித்த ராஜா ஓடிப்போய்ப் பாட்டியைப் பிடித்துக் கொண்டான். “என்ன? என்ன?” என்று கேட்டான். கங்காவிற்கு ஒன்றுமே பேச முடியவில்லை. நெஞ்சை அடைப்பதுபோல் வலிக்க ஆரம்பிக்கவே, தனக்கு ஏதோ உடல் துன்பம் ஏற்பட்டுவிட்டது! சாதாரண நிலையில் தான் இல்லை! என்பதை அவள் உணர்ந்துகொண்டுவிட்டாள். ஐந்து நாட்களாகத்தான் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிடாததும் இன்று பஜ்ஜியை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டதும் நினைவுக்கு வந்தன.

‘ராஜா! டாக்டரை கூப்பிட்டுண்டு வரயா! எனக்கு என்னவோ பண்றது!” என்று கூறியபடி படுக்கையில் அமர்ந்தாள். அவளால் உட்கார முடியவில்லை. ராஜா ஓடிப்போய் சாந்தி மாமியையும், பக்கத்து வீட்டில் குடியிருந்த நர்ஸ் கலாவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தான். ஈசிசேரை எடுத்துப் போட்டான். மெதுவாக அதில் அமர்ந்த கங்கா சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் கணவனின் புகைப்படத்தைப் பார்த்தாள். “இன்னும் எத்தனை நாளுக்கு நான் இப்படியே அவஸ்தைப் பட்டுண்டு இருக்கணும்?” என்று அவள் கண்களால் அந்தப் படத்திடம் கேட்க, அவர் புகைப்படத்திலிருந்தபடியே புன்னகைத்தார். “அடி அசடே! என்னைத் தேடி வரும் காலம் நெருங்கிவிட்டதை நீ இன்னும் உணரவில்லையா?” என்று மௌனமாக அந்தப் புன்னகை உணர்த்தியது.

தாத்தாவின் படத்தையே அவள் பார்ப்பதைக் கண்ட ராஜாவிற்கு பயம் வந்துவிட்டது. அவன் சாந்தியிடம் சொல்லிவிட்டு, டாக்டரை அழைத்துவர சிட்டாகப் பறந்தான். அதற்குள் கங்காவிற்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சாந்தி தன் கணவனை எழுப்பி அழைத்து வந்தாள். இருப்புக் கொள்ளாமல் எழுந்து வந்து தன் படுக்கையில் உட்கார்ந்த கங்கா தன் பேத்தியை அங்கிருந்து நீக்கும்படி கைகளால் ஜாடை காட்டினாள். அதன்படி கிருஷ்ணாவைத் துhக்கிக் கொண்டு தங்கள் வீட்டில் படுக்க வைத்து விட்டு வந்தாள் சாந்தி. அதற்குள் நர்ஸ் கலா அவளுக்குப் பிரஷர் மாத்திரை கொடுத்துத் தைலம் தேய்த்துவிட்டுப் பதற்றமாகச் செயல்பட்டாள்.

ராஜா டாக்டருடன் வருவதற்குள் கங்காவிற்கு நெஞ்சுவலியும் படபடப்பும் வியர்வையும் அதிகமாகி விட்டது. கலா தனக்குத் தெரிந்த வைத்திய முதலுதவிகளைச் செய்து பார்த்தாள். இரவு பன்னிரெண்டு மணியாகிவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டிலிருந்த கங்காவின் அன்பிற்குரியவர்களெல்லாம் பாட்டிக்கு உடம்பு சரியி;ல்லை என்று தெரிந்து வந்து விட்டனர். ஒருவர் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சீதாவிற்குச் செய்தியைச் சொல்லி அழைத்து வரப் போய்விட்டார்.

கலாவிற்கு கங்காவின் பல்ஸ் குறைந்துகொண்டே போவது புலப்பட்டுவிட்டது. ஐயய்யோ! ஸ்ரீராமும் சக்தியும் ஊர்ல இல்லாத இந்த சமயத்திலே இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுவிட்டதே! என எல்லோரும் தவித்தனர். கங்கா “ஸ்ரீராமா! ஸ்ரீராமா!,” என்று நினைவிழந்து பிதற்ற ஆரம்பித்தாள். “சக்தி! சக்தி!” என்று அவள் வாய் குழறியது.

அப்பொழுது அவளருகில் எந்த உறவுமில்லை. ஊரார் மட்டுமே இருந்தனர். உடனே சட்டென்று சாந்தியின் கணவன் அவளை நெருங்கி, அவள் தலையை வருடி, அம்மா! இதோ நான் தான் ஸ்ரீராம் வந்திருக்கேன்! நானும் சக்தியும் வந்துட்டோம்! கண்ணைத் திறந்து பாரும்மா! இந்தத் துhத்தத்தைக் குடி!” என்று தன் மனைவி சாந்தி கொண்டு வந்து தந்த கங்கை தீர்த்தத்தை அவள் வாயில் புகட்டிவிட்டார். ஒரு மிடறு உள்ளே போயிற்று. அவ்வளவுதான். கங்காவின் உயிர்ப் பறவை “ஸ்ரீராம் வந்திருக்கேன்!” என்ற வார்த்தையைக் கேட்டபடி ஒரு வாய் கங்கை நீருடன், உடற்கூட்டை விட்டு நொடியில் பறந்துவிட்டது. நர்ஸான கலாவிற்கு, எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரிந்தாலும், ஒரு பெண்ணாக அவள் தொடர்ந்து கங்கா பாட்டியின் நெஞ்சைப் பிடித்து அமுக்கியும் தொடர்ந்து மார்பில் தனது கைகளால் மஸாஜ் செய்தும், குத்தியும், வாயில் வாயை வைத்து ஊதியும் நின்றுவிட்ட இதயத்தை இயங்கச் செய்யப் படாத பாடு பட்டாள்.

ராஜாவுடன் வந்த மருத்துவர் கங்காவின் நாடியையும், இதயத்தையும் பரிசோதித்துப் பார்த்து கங்கா என்னும் காவியம் முற்றுப் பெற்று விட்டதை அறிவிக்கும் வரை எல்லோரும் அவள் மீண்டும் எழ வேண்டும் என்றே துடித்தனர்.
“நான் வருவதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டது” என்று அவர் ராஜாவிடம் கூறியதும் எல்லோரும் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றனர். அடுத்த நொடி ராஜா “ஐயோ! அம்மா! நான் மாமாவுக்கும் அக்காவுக்கும் என்ன பதில் சொல்வேன்?” என்று தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு அலறி அழ ஆரம்பித்தான். நிலமையின் கொடுமையை உணர்ந்து எல்லோரும் ஒருசேர அழ ஆரம்பித்தனர்.

“அம்மாவிற்கு ஒண்ணும் ஆகியிருக்காது! வெங்கட்ரமண ஸ்வாமி நம்மைக் கைவிட மாட்டார்! அம்மா சௌகரியமாக எழுந்து உக்கார்ந்திருப்பா! ராஜாதான் கூட இருக்கானே! டாக்டரை உடனே கூட்டிண்டு வந்திருப்பான். கலாவும் இருப்பாளே!” என்றெல்லாம் புலம்பிக்கொண்டும், மன்றாடிக்கொண்டும் ஸ்கூட்டரிலேயே செய்தி சொன்னவருடன் புறப்பட்டு வந்த சீதா, வீட்டு வாசலில் இறங்கியதும் அழுகைச் சத்தம் வெளிப்பட்டதைக் கவனித்துத் துவண்டு போன காலை நகர்த்த முடியாமல் திகைத்து நின்றாள். “அந்த அசடு ரெண்டும் இங்கே இல்லாத நேரத்தில இப்படி ஒரு கொடுமை நடந்துடுத்தே! அவா இருந்தா அம்மாவோட உயிரைப் பறிக்க முடியாதுன்னு தான் யமன் அவாளை இப்படி ஊருக்குத் துரத்தினானா?” என்று அவள் வாய் அலறியது.

கங்கா ஒரு காவியம் – 15

எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை – இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவிடும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்.

எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் வரிகள்! வாழ்க்கையின் போக்கையும், அதன் புனிதத்தையும் மனிதன் புரிந்துகொண்டு விட்டால் இந்தப் போராட்டங்களும் பிரச்னைகளும் ஏற்படுமா? மாறாக அவனுக்குக் கிடைப்பது அமைதியும் ஆனந்தமும் அல்லவா? ஆனால் எத்தனை பேர் இதைப் புரிந்துகொண்டு வாழ்கின்றனர்! எடுத்துள்ள பிறவியைத் தன் குடும்ப நன்மைக்காகவும் சமுதாய நன்மைக்காகவும், பயன்படுத்துபவர் எத்தனை பேர்?எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் வரிகள்! வாழ்க்கையின் போக்கையும், அதன் புனிதத்தையும் மனிதன் புரிந்துகொண்டு விட்டால் இந்தப் போராட்டங்களும் பிரச்னைகளும் ஏற்படுமா? மாறாக அவனுக்குக் கிடைப்பது அமைதியும் ஆனந்தமும் அல்லவா? ஆனால் எத்தனை பேர் இதைப் புரிந்துகொண்டு வாழ்கின்றனர்! எடுத்துள்ள பிறவியைத் தன் குடும்ப நன்மைக்காகவும் சமுதாய நன்மைக்காகவும், பயன்படுத்துபவர் எத்தனை பேர்?
இறைவன் அன்பையும் கருணையையும் தியாகத்தையும் பொறுமையையும் ஒன்றாகக் குழைத்தெடுத்துத் தான் பெண்ணைப் படைத்தான். அப்படிப் பட்ட பெண்களின் வழி நடத்துதலில் செயல்படும் குடும்பங்கள் ஒற்றுமையையும் உயர்வையும் தான் கண்டிருக்கின்றன.  இது வரலாறு காட்டும் உண்மை. பள்ளிப் படிப்பே இல்லாத நிலையிலும், நம் நாட்டுப் பெண்கள் பண்பாட்டுக் கலாச்சார வாழ்க்கைக் கல்வியை வழி வழியாகத் தமது தாய் மூலம் கற்றுக்கொண்டு அந்தப் பாரம்பரியப் பெருமை கெடாத  வண்ணம் தமது குடும்பத்தை நடத்திச் சென்றிருக்கின்றனர். அவர்கள் தங்களின் சகல சுகங்களையும் குடும்ப நன்மைக்காகத் தியாகம் செய்து வாழ்ந்தனர். அவர்கள் எடுத்த முடிவுகள் தர்மத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இதனால் கட்டுக்கோப்பு குலையாமல் வாழ்க்கை சென்றது. ஆனால் கால மாற்றத்தால் இந்த அமைப்பு சீர் கெட்டுப் போய்விட்டது. பி;ள்ளைகள் சொல்பவர்களாகவும், பெற்றோர் அவர்களைக் கேட்டு நடப்பவர்களாகவும் ஆகி விட்ட சூழ்நிலை எப்பொழுது ஏற்பட்டதோ, அப்பொழுதே குடும்பப் பெண்களின் மனப்பான்மையிலும் மாற்றம் ஏற்படத்துவங்கி விட்டது. இன்றைய பெண்கள் தாங்கள் மிகக் கஷ்டப்படுவதாக மட்டும் தான் நினைத்து மாய்ந்து போகிறார்களே தவிர, தங்களின் கடமை என்ன? தாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. தனது குடும்ப உயர்விற்காகத் தன் சுய நலத்தை எந்தப் பெண் தியாகம் செய்து மனப்பூர;வமாகச் செயல்படுகிறாளோ, அவளது வாழ்க்கை மிக உயர்ந்த விதத்தில் போற்றத் தக்கதாகவே அமையும். அவளது அன்பும் தியாகமும் என்றாவது ஒரு நாள் குடும்பத்தினரால் நிச்சயம் உணரப்படும்.  கங்கா படிக்காதவள். மிக மிக ஏழ்மையான ஒரு குடும்பச் சூழ்நிலையிலிருந்து வாழ்க்கையைத் துவங்கியவள். கடின உழைப்பில் தான் கணவனுக்கு சளைத்தவளில்லை என்று அவள் நிரூபித்துப் பாடுபட்டாள். தன் கணவனின் சுகதுக்கங்கள் அனைத்திற்கும் ஈடுகொடுத்து நின்றாள்.  ஆனால் அவளுக்குப் புத்திரர்களால் சுகமில்லை.  அளவில்லாமல் பிள்ளைகளைப் பெற்றெடுத்தும், அவர்களையெல்லாம் பிஞ்சாகவும், காயாகவும், மலராகவும் மண்ணிற்குத் தானம் கொடுக்கும் விதத்தில் அவளது கர்மா அமைந்திருந்தது. உயிரோடு இருந்து வளர்ந்த பிள்ளைகளும் அவளுக்குப் பயன்படவில்லை. அவரவர; போக்கிலும் குண இயல்புகளிலும் தான் அவர்கள் வாழ்ந்தார்கள். இதில் இரண்டு பேர் நல்ல நட்பும் நல்ல பண்புகளும் அமையாமல் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டுவிட்டதோடு குடும்ப கௌரவத்தையும் குலைத்தனர். குமரேசனின் பிள்ளைகளா இப்படி! என்று ஊரார் பேசுகின்ற அளவிற்கு அவர்களின் நிலை தாழ்ந்தது.  மூத்தவன் ராமேஸ்வரன் தன் மனைவியின் குணச் சிறப்பால் தனது குடும்பத்தை நல்ல விதமாகக் கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் அவன் மனைவியின் வீட்டாரோடு ஐக்கியமாகி விட்டானே தவிரத் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
கடைசி மகன் ஸ்ரீராம் தான் தன் தாய்க்கு மன நிறைவை அளித்துக் குடும்ப உறவினர் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணத்தைக் கொண்டிருந்தான். இதற்கு பின் பலமாக இருந்தவள் அவனது மனைவி சக்தி. அவள் தன் பாட்டியும் மாமியாருமான கங்காவின் கண்ணசைவில் செயல்படும் தன்மை பெற்றிருந்தாள். கங்காதான் அவளை வாழவைத்த தெய்வம் என்று அவளது வார்த்தைகளை வேத வாக்காகக் கொண்டு வாழ்ந்தாள். அடுத்து அவளது தாயான சீதாவும் அவளது குடும்பமும் எல்லாமே எங்களுக்குக் கங்கா பாட்டிதான் என்ற நிலையில் வாழ்ந்தனர். அப்பா பெண் என்று பெயரெடுத்த கங்காவின் இரண்டாவது பெண் கமலா தன் கணவனின் கெடுபிடிகளுக்குக் கடடுப்பட்டுப் பிறந்தகத்திற்கு வருவதே இல்லை. அப்படியே வந்தாலும் அவளுக்குக் குறைகள் தான் அதிகமிருந்தன. ஏனோ விதி அவளையும் தாயையும் ஒரு தொலைவிலேயே இருக்கும்படி நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்தது.
கங்காவின் மூன்றாவது பெண்ணான கல்யாணியோ இளம் வயதிலேயே தனது மூன்று குழந்தைகளையும் தன் கணவனையும் தன் தாயிடமே ஒப்படைத்து விட்டுக் கண்ணை மூடிவிட்டாள். அவளது குடும்பம் ஸ்ரீராம் சக்தியோடு சேர்ந்து கங்காவின் நிழலில் தான் வாழ்ந்து வந்தது. மாப்பிள்ளை வைத்தியநாதன் கங்காவைத் தன் தாயாகவே மதித்துப் போற்றி அக்குடும்பத்தில் ஓர் அங்கமாக, ஸ்ரீராம் சக்தி இருவருக்கும்  ஆசானாகக் கூடவே இருந்து உதவி செய்து ஒரு கர்ம யோகியாக வாழ்ந்தார்.
கங்காவின் வாழ்க்கையின் இறுதிச் சுற்று வந்துவிட்டபடியால் இப்படி ஒரு சுருக்கமாக அவளது குடும்ப நிலவரத்தைப் பார்க்க வேண்டி வந்தது. இப்போது கங்காவிற்கு உயிரும் உணர்வுமாய் இருந்தவர்களை விதி பிரித்துக் காரைக்காலில் கொண்டு போய் விட்டு; விட்டது. தர்மத்தின் ராஜனல்லவா கால தேவன்! அவன் கணந்தோறும் கணந்தோறும் போடுகின்ற தர்மக் கணக்கல்லவா நமது வாழ்க்கையின் வரவும், செலவும், கையிருப்பும்.