About vijayaamma

passionate writer

இப்படியும் ஒரு பெண்

நான் கனடாவிற்கு வருவதற்கு முன்பே என் மகள் கடிதத்தில் தன் வீட்டிற்கு வரும் குட்டிக் குருவிகளைப் பற்றியும், அழகான புறக்களைப் பற்றியும் ஏதாவது சில வரிகள் எழுதிக்கொண்டே இருப்பாள். ஆவை கூட்டமாகப் பறந்து வந்து அமர்வதைப் பற்றியும், கீச் கீச் என்று சப்தமிடுவதைக் கேட்டுத் தான் ரசிப்பதையும், அரிசி, பருப்பு போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருப்தைப்பற்றியும் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தாள். மற்றொரு கடிதத்தில் மருமகன் அதற்காக அட்டையிலேயே கூடு கட்டி வைத்திருப்தாகவும், ஏதாவது ஒரு பறவை அங்கு தன் குடும்பத்துடன் வந்து குடியேறாதா என்று தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் எழுதியிருந்தாள்.

பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விiளாயடினானாம்! அதுபோல உன் பெண் ஒரு குழந்தையை பெத்தெடுத்து அதைத் துாக்கி வெச்சுக் கொஞ்சி, அது விளையாடறெதெல்லாம் பத்தி உனக்கு எழுதி சந்தோஷப்படுத்தாம, இருக்கிற குருவி, புறாவையலெல்லாம் பத்தி இப்படி விழுந்து விழுந்து எழுதறாளே! ரொம்ப நன்னாருக்கு போ! ஏன்று என் மாமியார் தன் தோள் பட்டையில் இடித்துக்கொண்டு பேசினாலும், அவளது அடுத்த கடிதத்தை வந்ததும் நான் பிரிப்பதற்குள், என்ன, புறா வந்து கூண்டிலே குடியேறியதாமா….இல்லையா? என்று ஆவலுடன் கேட்பதில் ஒன்றும் குறைச்சலிருக்காது. அதோடு ‘அதுக்கு வெறும் அரிசி மட்டும் போடச் சொல்லாதே! நிறைய கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம் போன்ற தானியமெல்லாம் வாங்கி இறைக்சச் சொல்! ரொம்ப புண்ணியம்! அதுகள் வந்து அங்கு கூடு கட்டிக் குஞ்சு பொரித்தாலாவது அவளுக்கு ஒரு குழந்தைபிறக்கிறதா பார்க்லாம்!” என்று அவர் சொன்னதைக் கேட்டு, என் கணவர் ‘ஐயோ! புறாவும் குருவியும் கூடு கட்டி குஞசு பொரிக்கிறதுக்கும் நம்ம ஐஸ்வர்யா குழந்தை பெத்துக்கறதக்கும் என்ன சம்பந்தம்? வயசானலே எல்லார்க்கும் மூளை மழுங்கிப் போயிடறது!” என்று தலையில் அடித்துக் கொண்டார். உடனே அவர்களுக்குள் ஒரு சொற்போர் ஆரம்பித்து விட, என்ன செய்வதென்று தெரியாமல் நான் விழித்தேன்!

அவள் அடுத்ததாக அனுப்பியிருந்த கடிதத்தைப் பிரித்ததும் அதிலிருந்து ஒரு போட்டோ வந்து விழுந்தது. அதில் பஞ்சு போல வெண்மையாக கொட்டியிருந்த பனியில் பால்கனி ஓரத்தில் ஒரு சின்ன அட்டையிலான வீடு வைக்கப்பட்டு அதன் மீது சாய்ந்தாற்போல் ஒரு புறா ஒண்டிக்கொண்டு இருக்க, அதையே பார்ப்பதுபோல எதிரில் ஒரு புறா அமர்ந்திருந்த காட்சியை மருமகன் சாமர்த்தியமாக அழகான புகைப்படமாக எடுத்திருந்ததை அனுப்பியிருந்தாள். காலையிலிருந்தே இதைப் புகைப்படமெடுக்க தவமான தவம் இருந்ததாகவும், கொஞ்சம் போது எடுத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமென்றும், ஆனால் இரண்டும் ஏனோ முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததால், வந்தவரை சரியென்று இதை எடுத்து அனுப்பியதாகவும் விழுந்து விழுந்து ஒரு பக்கம் முழுவதும் சீறாப்புராணம் போல் புறா புராணம் பாடி விட்டு கடைசியாக ஒரு பாராவில் தான் இரண்டு மாதமாகக் குளிக்காம இருப்பதாகவும், டாக்டரிடம் பரிசோதித்து, கர்ப்பமாயிருப்பது நிச்சயமாகிவிட்டதென்று, இந்த நல்ல செய்தியை பாட்டியிடம் சொல்லும்படியும் ஐஸ்வர்யா எழுதியிருந்ததை படித்தேனோ இல்லையோ, என் மாமியாருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

‘என்னமோ பிள்ளையாண்டன் தனக்குத்தான் தலையிருக்குன்னு பெரீசா அடிச்சின்டானே! பார்த்தியா! நான் சொன்னேனா இல்லையா? அந்தப் புறாக்களுக்கு அவா ரெண்டு பேருமா தாணியத்தை எறைச்ச புண்ணியம் தான் இப்போ நான் கொள்ளுபாட்டியாகப் போறேன்! என்னமோ பெரிசா படிச்சுட்டாப்போல இதெல்லாம் பொய்யாயிடுமா என்ன? அந்தக் காலத்திலே பெரியவா எதையும் சும்மா போற போக்கிலே சொல்லி வைக்கலே! எல்லாத்தையும் அர்த்தத்தோடத் தான் சொல்லியிருக்கா. விஞ்ஞானம் பெருத்துப் போனா அந்த நம்பிக்கையெல்லாம் மனுஷாளை விட்டுப் போயிடுத்து! நீ வேணாப் பாரு! ஆந்தப் புறாவும் அந்த கூட்டிலேயே குஞ்சு பொரிக்கும் பாரு!” என்று அவர் கூறியதும், என் கணவர், ‘அம்மா! உன்னை அடுத்த பிளேனில் ஏத்தி விடறேன், போய் புறாவுக்கும் உன் பேத்திக்குமா சேர்த்து பிரசவம் பார்த்துட்டு வா! பத்தியம் விடிச்சு போடு!” என்றார். சிரித்துக்கொண்டே! ஐயோ! தாத்தாவாகப் போறான்னா உடனே இருப்பு தாங்கல்லே! என்று பிள்ளையை பரிகாசம் செய்து விட்டு, ‘இந்தப் பாழாப் போற முட்டி வீக்கமும், முழங்கை வலியும் இல்லேன்னா சிடடாப் பறந்து போய்க் கனடாவில குதிச்சிட மாட்டேனா! ஆசையிருக்கு! ஆனா முடியல்லியே!”என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

ஓன்பதாம் மாதம் வரை அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உதவியாக, ஒத்தாசையாக இருந்து மசக்கை, மயக்கம் எல்லாம் சமாளித்துக்கொண்டு விட்டனர். ஓன்பது மாதம் முடிகின்ற சமயத்தில் நான் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும், அரசாங்கத்திற்கு செய்து விசாவைப் பெற்று கனடா வந்து சேர்ந்தேன். தாய்மைக் கோலத்தில் என் மகளைக் கண்டு எனக்கு பூரிப்பு தாங்கவில்லை. என்னைக் கண்டதும் அவளுக்கும் தலைகால் புரியாத சந்தோஷம்.

நான் வந்த பத்து நாட்களில் ஐஸ்வர்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை அதிக வேலையில்லாமல் எனக்கு 24 மணி நேரமும் போறவில்லை. ஆனால் இப்பொழுது கதை ஐஸ்வர்யாவின் குழந்தை வளர்ப்பு பற்றியதல்ல. அவள் சதா கடிதத்தில் எழுதிக் கொண்டிருந்த புறாவைப் பற்றியது. நான் கனடாவில் இருந்தவரை அந்தப் புறாக்களை வைத்து நாங்கள் அடித்த கூத்து இருக்கிறதே! அதைச் சொல்லாவிட்டால் என் தலையே வெடித்துவிடும்.

நான் கனடாவிற்கு வந்ததிலிருந்து சாதம் வடித்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு, அதில் ஒரு பிடி சாதத்தை எடுத்து வந்து, நம் ஊரிலெல்லாம் காக்காய்க்கு சாதம் போட்டுத் தான் சாப்பிடுவோம்! இங்கே காக்காயே காணோம். வெள்ளைக் காக்காதான் பறக்கிறது. அதுவும் வராது போலிருக்கு! புறாவுக்கு சாதம் போட்டா என்ன! அரிசி போடறதை விட, சாதம் போடறது எவ்வளவோ மேல்! என்று பால்கனியில் சாதத்தை வைப்பேன்! இரண்டொரு புறாக்கள் பயந்துகொண்டே வந்து அந்த சாதத்தை நிமிஷமாகக் காலி செய்துவிடும்.

நாளாக நாளாக சாதம் சாப்பிட வரும் புறாக்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. ஐஸ்வர்யாவும் மருமகனும் அவை வருவதையும், சாதத்தை சாப்பிடும் அழகையும் பார்த்துப் பார்த்துச் சிறு குழந்தைகள் போல் ரசிப்பதைப் பார்த்து எனக்கு வேடிக்கையாக இருக்கும். புறா சாப்பிடறதிலே என்ன அதிசயம் இருக்கு? என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்.

மருமகன் வேலை முடிந்து உள்ளே நுழையும்போதே, இன்னிக்கு எத்தனை புறா வந்தது? எத்தனை சிட்டுக் குருவி வந்தது? என்று கேட்டுக்கொண்டே வருவார். மகளும் அதை அக்கறையாக எண்ணி வைத்து அவரிடம் கூறி சந்தோஷப்படுவாள்.

சில சமயம் ஒரே புறா மட்டும் வந்து சத்தமே போடாமல் ஒரு பருக்கை கூட விடாமல் தான் மட்டும் தின்று விட்டுப் போய்விடும். காக்கயென்றால் கூடித் தின்னும்; இந்தப் புறாவைப் பாரேன்! எவ்வளவு சுயநலம்! என்று அங்களாய்ப்பாள். இந்தக் காலத்திலே காக்கா கூட கூட்டத்தைக் கத்தி கூப்பிடறதில்லே! தான் மட்டும் சாப்பிட்டாப் போறும்னு தின்னுட்டுப் போயிடறது. எல்லாம் கலிகாலம்! பறவைக்குக் கூட சுயநலம் வந்துடுத்து! என்று நான் சொல்வேன். அன்று மாலேயே பத்து புறா போல வந்து பால்கனியில் உட்கார்ந்து படபடவெனச் சிறகடித்து அமர்க்களப்படுத்தின. அம்மா! ஏதாவது போடும்மா! என்று ஐஸ்வர்யா சொல்ல, இதுகளுக்குப் போட்டு கட்டுபடியாகாது போ! என்று பார்த்தால் பால்கனி நிறைய சிட்டுக்குருவி! புறா!

நான் ஊரிலிருந்து முறுக்கு. அதிரசம், மிக்சர், அல்வா என்று நிறைய பட்சணங்கள் கொஞ்சம் அதிகமாகவே செய்து எடுத்து வந்திருந்தேன். வந்த கொஞ்ச நாள் வரை ஆசை ஆசையாகத் தின்றவர்களுக்குப் பிறகு அலுத்து விட்டது. ஐஸவர்யாவும் பிள்ளை பெற்றுவிடடாள். எனவே அவள் தின்ன முடியாது. அவர்களின் நண்பர்களுக்கும் வேண்டிய மட்டும் கொடுத்தாயிற்று. மருமகனிடம் பட்சணத் தட்டைக் கொண்டு வைத்தாலே அலற ஆரம்பித்துவிடுவார். பார்த்தேன். அவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புறாவிற்குப் போட ஆரம்பித்தேன்.

முறுக்கு அதிரசம் எல்லாம் தூள் தூளாக ஆக்கிப் பால்கனியில் தூவுவேன். உடனே ஏகப்பட்ட புறா பறந்து வந்து அவற்றைக் கொத்தி கொத்தித் தின்னும். ஆட! கனடா புறா முறுக்கு திங்கறதே! அதிரசம்னா அதுக்கு என்னன்னு தெரியுமா? துளி அல்வா இருந்தா அதையும் கொஞ்சம் போடுங்கோ! வாயில கொத்தின உடனே ஒட்டிக்கும்! வாயை திறக்க முடியாம அவஸ்த்தைப்படட்டும்! என்று இருவரும் கேலி பேசுவார்கள்.

ஒருமுறை, ஒரு புறா மிக்சரைத் தின்றுவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே பல முறை வட்டமடித்துச் சுற்றிக்கொண்டே இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, ‘போச்சுஇ அம்மா! நீ போட்ட காரல் அடிச்ச மிக்சரைத் தின்னுட்டு அதுக்கு தலையைக் கிறுகிறுன்னு சுத்தறது! இப்போ டமால்னு தயக்கம் அடிச்சு விழப் போறது! என்று கத்தினாள். அதற்கேற்றார்போல் அந்தப் புறா, ஊம்! ஊம்! என்று உறும ஆரம்பித்து விட்டது. மற்ற புறாக்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்தன.

‘இப்போ மீட்டிங் நடக்கிறது. இனிமே இந்த வீட்டிலே எதைப் போட்டாலும் யாரும் சாப்பிடக்கூடாது. நம் வயத்துக்கு ஒத்துக்கலேன்னு அந்தப் புறா தீர்மானம் போடறது. ஏல்லாப் புறாக்களும் தீhமானத்தை ஒரு மனதா ஒத்துண்டாச்சு! ஆ, எல்லாம் பறந்து போச்சு பாருங்கோ! என்று அவள் ரன்னிங் காமெண்ட்ரி அடிக்க ஒரே சிரிப்பு.

நானும் அவள் பரிகாரம் செய்வதற்கு ஏற்றாறபோல பாழாய்ப் போறதைப் பசு மாட்டிற்குப் போடுன்னு; சொல்வா! நான் பசு மாட்டுக்கு எங்கே போறது? புறாவுக்குத் தான் போடறேன்! என்றபடி மிஞ்சிப் போன சாதம், வீணாய்ப் போன குழம்பின் அடியில் தங்கியிருக்கும் பருப்பு, உப்பு அதிகமாப் போயிடுத்துன்னு யாருமே சாப்பிடாத உப்புமா என்று எதெல்லாம் இருக்கோ அதையெல்லாம் கொண்டு போய் போட்டு விடுவேன். இவர்கள் இருவரும் கேலி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

‘அந்தப் புறா என்ன சொல்றது தெரியுமா? உன் வாழ்நாளிலேயே இந்த மாதிரியெல்லாம் சாப்பிட்டிருக்கியா? எத்தனை தினுசு சாப்பாடு போடறாங்க பாருன்னு சொல்றது. உடனே அந்தப் புறா கோபமா, இனிமே என்னை இந்த வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்தீங்க, தெரியுத் சேதி! ரேண்டு நாளா ஜீரணமே ஆகாம வயித்தை வலிக்குது! நான் இனிமே இங்கே வரமாட்டேன்! என்று சொல்றது.
அதுக்குப் பக்கத்தில் இருக்கிற புறா எனக்கு இரண்டு நாளா வயிறே சரியில்ல. ஓரே வயிற்றுப் போக்கு! என்று சொல்லிக்கொண்டே எச்சமிடறது பாருங்கோ! என்று மாப்பிள்ளை சொல்லவும், உடனே கரேக்டாக ஒரு புறா எச்சமிடவே ஓவென்று சிரித்து விட்டோம்.

ஒருநாள் நான் பாலகனிப் பக்கமாகச் சென்றதும் அங்கு உலாவிக் கொண்டிருந்த புறக்காளெல்லாம் சட்டென்று பறந்து சென்றன. “அம்மா அந்தப் பக்கம் போனாலே இ;னனிக்கு என்னத்தப் போடுவாளோ, புண்ணியவதி என்று அரண்டு ஓடிப் போச்சுப்பா புறாவெல்லாம் அம்மாவைப் பார்த்தாலே பயம் வந்துடுத்து அதுஅதுகளுக்கு!”என்று கணவரிடம் சொல்லி என்னை வெறுப் பேற்றினாள் ஐஸ்வர்யா.

ஒரு மாலைப் பொழுது மழை பெய்து ஓய்ந்திருந்தது. ஐஸ்வர்யாவும் மாப்பிள்ளையும் குளிருக்கு ஏற்றாற்போல பகோடாவும், காபியும் டிபனாகச் சாப்பிட்டுகொண்டே பால்களிக்குப் பக்கதிலிருந்த கட்டிலில் அமர்ந்து, அங்குக் குளிருக்கு ஒண்டிக்கொண்டிருந்த புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். எங்களுக்கு தொலைக்காட்சியைவிடப் புறாவை வேடிக்கை பார்ப்பது தான் சிறந்த பொழுது போக்கு.

திடீரென்று ஐஸ்வர்யா, “புறவைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி! என்று உரத்த குரலில் கூறினாள். உடனே என் மருமகன் வெங்கட், என்ன ஆராய்ச்சி?” என ஆவலுடன் கேட்டார். நான் பகோடா செய்து கொண்டே இவர்களின் பேச்சை கூர்ந்து கவனித்தேன்.

ஐஸ்வர்யா, “இந்தப் புறக்களெல்லாம் சைவப் புறாக்களா! அதுவும் போன ஜென்மத்தில் இந்தியாவைச் சேர்ந்தவை, இப்போது கனடாவில் பிறந்திருக்கின்றன. பழைய வாசனையால் நம் வீட்டுத் தீனிக்கு இப்படி லோ…லோ..ன்னு அலைகின்றன. புறாக்கௌல்லாம் தமக்கென்று ஏரியாவைப் பரித்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி தான் அவை போய் இறை எடுக்கும். வேறே ஏரியாவிலேருந்து தப்பித் தவறி இவங்க வீட்டிலே ஏதோ நிறைய கிடைக்குது போலிருக்குன்னு நம் பாசையோட வேறு புறா இங்க வந்திடுச்சுன்னா, இதெல்லாம் உங்க வயித்துக்கு ஒத்துக்காது. ஓடிப்போங்கன்னு அதுங்க தலையிலே கொத்திக் கொத்தியே விரட்டி விட்டுடும், இங்க இருக்கிற புறாக்கள்.! அடுத்து, ஒரு ஏரியாவிலே இருக்கிற புறாக்கள் மட்டும் ரொம்ப நின்ன இடத்திலேயே சுத்தி சுத்தி ரவுண்டு அடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அதுக்கு என்ன காரணம்னு கண்டு பிடிக்க ஒரு பெரிய ஆராய்ச்சி வேற சொல்லப்பட்டிருக்குன்னு நேற்று டி.வியிலே நியுஸ்ல சொன்னார். அது வேற ஒன்னுமில்லே! ஒரு இந்தியன் லேடி வந்து போடற சாப்பிட்டிலே அதுக்குப் போதை தலைக்கேறி அப்படி தள்ளாடுது!ன்னு நான் பதில் எழுதிப் போட்டிருக்கேன்! யார் கண்டா? அது பற்றின விபரம் தேவைன்னு அம்மாவைத் தேடிண்டு யாராவது வந்தாலும் வருவா!” என்று மூச்சு விடாமல் சொல்லி முடிக்க, நான் அவளை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு போக, அவள் தன் கணவன் முதுகின் பின் ஓடிப்போய் ஒளிய சிரிப்பும் ஓட்டமும் தொடர்ந்தது.

இப்போது எல்லாம் குழந்தை அரவிந்தனைக் கவனிப்பதும், அந்தப் புறாக்களைப் பயம் போக்கிப் பழக வைக்கவும் நேரம் சரியாக இருக்கிறது. ஆரவிந்தன் தவழத் துவங்கி விட்டான். புறாக்களும் என் கையில் வைத்திருக்கும் உணவைப் பயப்படாமல் எடுத்துச் சாப்பிடும் அளவிற்குப் பயமும் படபடப்பும் போய்த் தெளிந்துவிட்டன. பால்கனி வலைக்கதவைத் திறந்து வைத்தால் உள்ளேயெ பறந்து வந்து நடை பழகும் அளவிற்கு ஆகிவிட்டது. பழைய வீடு மாடலில் அவை தங்காததால் தொட்டில் போல கட்டித் தொங்கவிட்டிருக்கும் அட்டைப் பெட்டியில் இரவில் குட்டிப் புறாக்கள் பட்டுப்போல் படுத்ர்h; துhங்கின. நுhன் எதைப் போட்டாலும் அதைத் தின்றுவிட்டுப் போய்விடும் எல்லாம். நாங்கள் இன்னதென்று தெரியாமல் வாங்கி நன்றாக இல்லாத தின்பண்டங்கள் எல்லாம் புறாவிற்குத் தான் போய்ச சேரும். புறாவுக்குன்னு தினுசா தினுசாப் பலகாரம் போடற குடும்பம் இதுவாகத்தான் இருக்கும்னு வெங்கடேஷ் புலம்பும் அளவிற்குச் சிலசமயம் போய்விடும்.

கடைசியில் நான் இந்தியாவிற்குத் திரும்பும் நாளும் நெருங்கியது. அரவிந்தனை அவர்களே தனியாக நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்கு அவர்களைப் பழக்கிவிட்டு நான் புறப்பட்டேன். குழந்தை ‘பாத்தி..பாத்தி! ஏன்று சொல்லி என் கண்களைக் கலங்க வைத்தான். அப்போதும் என் மகள், ‘பாவம்! இந்தப் புறாவெல்லாம்! நைட்டி போட்டுண்டு ஒரு குண்டம்மா இங்கே பார்த்து பார்த்து வீணாப் போன சாமானெல்லாம் கொட்டி கொட்டி வேளா வேளைக்கு உபசரித்தாளே! திடீர்னு அவளை காணுமே என்று தேடித்தேடி ஏங்கிப் போயிடுமே! என்று புறாக்களின் ஏக்கத்தைப் பற்றியே பெரிதாகப் பேசியது எனக்கு எல்லையற்ற வியப்பை அளித்தது.  “தன் மகன் ஏங்கிப்போவானே, அவனை விட்டுட்டு போகிறாயே!” என்று சொல்லி வருந்தாமல், “உன் பின்னாலேயெ பிளேனைத் துரத்திண்டு பறந்து வந்து இந்தியாவில் நம் வீட்டு வாசலில் எல்லாம் வந்து நிக்கப் போறது!”என்று புறாவைப் பற்றியே பேசிய என் மகளை இப்படியும் ஒரு பெண்ணா? இவளிடம் என்ன சொல்வது? என்று எண்ணித் திகைத்துப் போய் நின்றேன். யார் கண்டது? ஊருக்குப் போனதும் கொள்ளுப் பேரன் நன்னாயிருக்கானா! என்று கேட்பதற்குப் பதிலாக என் மாமியார் புறாவெல்லாம் வந்து போயிண்டிருக்கா? என்று கேட்டாலும் கேட்கலாம்.

Advertisements

மார்ச் 03 – ஈழத்து வேதாந்தியின் பிறந்த நாள்


அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நம் வாழ்வில் நிகழ்கின்ற அனைத்தும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக நிகழ்ந்தாலும், பிறப்பு என்பது எல்லோருக்குமே நிச்சயமான ஒரு நிகழ்வு. ஏதாவது ஒரு விதத்தில் வாழ்வது அடுத்த நிச்சய நிகழ்வு. அதுபோல, ஆம்! மரணம் என்பதும் எல்லோருக்குமே நிச்சயம்! நிச்சயம்! நிச்சயம்! இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலும் இதை உணர்ந்துதான் ஒவ்வொருவரும் வாழ்கிறோம்! மரணத்தை வென்றவர்கள் என்று யாருமே இல்லை என்றே சொல்லலாம். மண்ணாளும் மன்னரும் மரணத்தை வெல்ல முடியாமல் மண்ணாகிப் போனது வரலாறு. மாண்டுபோனாலும் மக்கள் மனதிலே வாழ்பவர்களே மாமனிதர்கள் என்று போற்றப்படுகிறார்கள்.

அது சரி! பிறந்தநாள் என்று தலைப்பிட்டுவிட்டு, பிறகு ஏன் மரணத்தைப் பற்றிய சிந்தனை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. சென்ற ஆண்டு (2017) தமது பிறந்த நாளில், எமது குருவாகிய, நயினாதீவில் பிறந்தவரும், துறவியாகி ஆன்மீக நெறியினை அநேக ஜீவன்களுக்கு உபதேசித்து உயர்த்தியவருமான சுவாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி எம்முடன் இருந்தார். இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் இருக்கிறது. அவர் எம்மிடையே இன்று இதயத்தில் நிறைந்த நிலையில் மட்டுமே.

சென்ற 2017ஆம் ஆண்டு இந்த மார்ச் 3ஆந் தேதியை ஒட்டி நடந்த ஆன்மீகப் பயிலரங்கத்தில் குருவின் 72ஆவது பிறந்த நாள், மிக எளிமையாக எந்தவித ஆரவாரமுமின்றி, புத்தக வெளியீடு இல்லாமல், மாணவர்களாகிய சில ஆன்மீக சாதகர்களின் முன்னிலையில் சிறு நிகழ்வாக நடந்தேறியது. அன்று அவர் சிரித்த முகத்துடன் எங்களிடையே இருந்தார். வேடிக்கையும், வெடிச் சிரிப்புமாக உரையாடுகின்ற அவர், தத்துவார்த்தமாக சிலவற்றை எடுத்துரைத்தார். “கடந்த பல ஆண்டுகளாக எனது பிறந்த நாளை ஒட்டிப் புத்தக வெளியீட்டு நிகழ்வு சிறந்த முறையில் நடந்து, அதன் மூலம் எனது பழைய மாணவர்களையும் ஆன்மீகத் தேடல் கொண்டவர்களையும் சந்திக்க முடிந்தது. சென்ற 2016ஆம் ஆண்டுடன் அந்தத் தூண்டல் என்னிலிருந்து நீங்கியது. கடைசியாக வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பு “முக்தி அல்லது வாழ்வின் நிறைவு”. இது தற்செயலாக என்று சொன்னாலும் பிரம்மத்தின் விருப்பமாக அது அமைந்து விட்டது. இந்த ஆண்டு புத்தக வெளியீடு இல்லை. இனி இருக்குமோ? தெரியாது!” என்று கூறிச் சிரித்தார்.

“நீங்கள் முக்தியடைந்துவிட்டீர்களா? ஜீவன் முக்தர்களாகிவிட்டீர்களா? வாழ்வில் நிறைவு நிலையை அடைந்துவிட்டீர்களா? இனியும் உங்களுக்குத் தேவை என்றிருக்கிறதா? தேடல் இருக்கிறதா? உபதேசம் என்ற பெயரில், நான் யார்? எனது என்பதன் பொருள் என்ன? இந்த வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன? இந்த உலகம் என்பது யாது? நமது சனாதன தர்மத்தின் சிறப்புகள் யாவை? போன்ற ஏராளமான உண்மைகளை எனது குருநாதரின் ஆசிகளாலும், இறையருளாலும், வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் துணைகொண்டு, இயன்றவரை உங்களிடம் விளக்கிக்கூறிவிட்டேன். இனியும் கூற என்ன இருக்கிறது?”
“மெய்யறிவு என்ற பயிரைப் பதியன்போட்டு உங்கள் உள்ளத்தில் ஊன்றிவிட்டேன். இனி அதனைப் பேணிப் பாதுகாத்துப் பயனடைய வேண்;டியது உங்கள் பொறுப்பு! பிரம்மம் என்னிடம் ஒப்படைத்த ‘ஒளிப் பணியாளர்’ என்ற பணியை என்னால் இயன்றவரை செய்தாயிற்று. உங்களில் ஞான விளக்கை ஏற்றிவிட்டேன். இனி அந்த ஒளியை நீங்கள் ஏந்தி, ஒளிப் பணி செய்ய வேண்டியது உங்கள் வேலை! இனி என்ன செய்வது? வகுப்பை நிற்பாட்டலாமா?” என்று கேட்டார்.
குருவின் வார்த்தைகளின் உட்பொருள் விளங்காததால், நாங்கள் திகைத்தோம். சம்சாரமென்னும் சகதியில் சறுக்கி விழாமல் இருக்க இன்னமும் குருவின் அரவணைப்பும், நேரடிக் கண்காணிப்பும் எங்களுக்குத் தேவை என்று புலம்பினோம். குரு சிரித்தார்.

“ஒரு காடு தீப்பிடிக்க ஒரு பொறி போதுமே! நான் இவ்வளவு ஆண்டுகளாக அடிமேல் அடி போட்டும், ஒன்றும் நிமிர்கிற வழியாய்க் காணோமே! எனக்கு அலுத்துப் போயிற்று. பேசாமல் ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு ரிஷிகேஷிலே போய்க் கங்கைக்கரையிலே உட்கார்ந்து விடலாமா என்றிருக்கிறது. அங்கேயெல்லாம் துறவிகளுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. பக்தியுடன் வணங்கி, சப்பாத்தி, சப்ஜி கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டு, கங்கைக் கரையிலே சிவனே! என்று இருக்கலாம்” என்றும் சொன்னார்.

இன்று அவற்றை நினைத்துப் பார்க்கிறேன். பிரம்மத் தொடர்புகொண்ட உண்மைத் துறவியான அவரது வாக்கு பலித்துவிட்டது. அதுவரை இல்லாத ஒரு நிகழ்வாக மஹா சிவராத்திரியை சென்ற ஆண்டு மிக அற்புதமான விளக்கங்களுடன் சிவ வழிபாடாக எங்களுடன் சேர்ந்து, இரவு ஒரு மணிவரை கூட இருந்து செய்து சிவானுபவம் பெறச் செய்தார்.

குருபூர்ணிமாவை மிக அழகாக நிகழ்த்தினார். வியாச பூசை செய்து, குரு பரம்பரையை வணங்கி, நன்றி கூறச் செய்தார். “சிஷ்யர்களாகிய உங்களால் நானும், குரு பரம்பரை வழியில் வந்த என்னால் நீங்களும் உய்வடைய இறையருள் துணை நின்றது!” என அனைவரையும் வாழ்த்தினார்; அதோடு சரி.

இந்தப் பிறந்த நாளுக்கு குரு எம்மிடையே இல்லை. அவருடைய வாழ்க்கைப் பயணம் அவரது விருப்பப்படி, ரிஷிகேசத் திருத்தலத்தில், கங்கைக் கரையிலேயே, தெய்வீகக் கோலாகலமாக சென்ற ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாளன்று நிறைவுபெற்றது. “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்” என்ற ஒரு திருக்குறள் தான் நினைவிற்கு வருகிறது.

இப்போது புரிகிறதா, நான் ஏன் மரணத்தைப் பற்றிச் சிந்தித்தேன் என்று? ஈழத் திருநாட்டிலே எத்தனையோ மகான்கள், சித்த புருஷர்கள், யோகிகள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களில், நயினாதீவு மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க அற்புத ஞான யோகியாகிய ஈழத்து வேதாந்தியும் ஒருவராகிவிட்டார். இவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான ஒளிச் சித்தர். இன்றைய காலகட்டத்திற்கேற்ப, நவீன விஞ்ஞானத் தொழில்நுட்பங்களுடன், அறிவியல் பாணியில் மெய்ஞ்ஞானத்தைத் தெளிவுபட விளக்கியவர். அச்சமில்லாதவர்; உலகப் பார்வையின் ஊடுருவலைத் துச்சமெனத் தூக்கி எறிந்தவர். அறியாமையில் உழன்ற ஜீவன்களுக்கு ஆத்மாவை உணர்த்தியவர். “நீ என்பது அவனே” என்ற தத்வமஸி மகா வாக்கியத்திற்குப் பொருள் உரைத்தவர். அவரை அறிந்த ஆன்மீகப் பெருமக்கள் அனைவருடனும் அடியேன் இன்று இந்த நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிரேன்

கங்கா ஒரு காவியம் – 17

இங்கு நடப்பது எதுவும் தெரியாமல், சனிக்கிழமை ஆயிற்றே, என்று ஸ்ரீராமும் சக்தியும் ஆதித்யாவுடன் திருநள்ளாற்றிற்குச் சென்று சனீஸ்வர பகவான் சன்னதியில் எள் விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து, தமது குடும்ப நன்மைக்காகவும், தங்கள் அருமைத்தாயின் உடல் நலத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தித்துத் திரும்பினர். வீட்டிற்கு வந்து மறுநாள் லஷ்மி பஸ்ஸில் புறப்படுவதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு இரவு பதினோரு மணி வரை தாத்தா குமரேசனின் நண்பரான ஜெயராம ஐயரிடம் தம் குடும்பத்தின் கதைகளையெல்லாம் பேசி மகிழ்ந்து விட்டுப் படுக்கச் சென்றனர்.
நல்ல துாக்கத்தில் சக்திக்குத் தன்னை யாரோ தொட்டு எழுப்புவது போலவும், அந்த உருவம் தன் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போலவும் தோன்றியது. சட்டென்று கண் விழித்து எழுந்து உட்கார்ந்தாள். அவள் உடல் சிலிர்த்தது.  அதே சமயம் வாயிற் கதவை யாரோ தட்டுகின்ற சத்தம் கேட்டது.  உடனே ஸ்ரீராமை எழுப்பிக் கதவைத் திறக்கச் செய்து பார்த்தால் வாயிலில் தந்திச் சேவகன் நின்றிருந்தான். தந்தியை வாங்கி படித்ததும் இருவருக்கும் தலையில்; இடி  விழுந்ததைப் போலாயிற்று. அழுதனா் கதறினர், துடித்தனா் துவண்டனர், பதறினர் , தன்னிலை மறந்து தன் உணர்வையும் தாம் மறந்து நடைப்பிணமாய் சொல்லிழந்து. செயலிழந்து, உற்ற நேரத்தில் உறு துணையாய் உடனிருக்காமல் இப்படி ஒதுங்கி வரும்படியாயிற்றே என்று அரற்றினர். சக்திக்குத் தன்னைத் தொட்டு எழுப்பியது யாரென்று புரிந்துவிட்டது. கிருஷ்ணா போனபோதே நானும் புறப்பட்டுப் போயிருக்கக்கூடாதா! என்று கதறினாள். செய்யத் தவறியதை நினைத்து வருந்தி, எப்படியோ, ஒரு காரை ஏற்பாடு செய்து இரவோடிரவாகப் புறப்பட்டு அதிகாலையுpல் அழுது கொண்டே வீட்டை அடைந்தனர். ஊருக்கு மெதுமெதுவாகப் பொழுது புலர்;ந்தது. ஆனால் இவர்களுக்கோ எல்லாமே இருண்டு போயிற்று.  எங்கும் அழுகுரல்! எங்கும் அவலம்! எங்கும் புலம்பல்!
“அம்மா!” என்றும் “பாட்டி!” என்றும், “இப்படிப் போயிட்டியே!” என்றும், “இனி எங்களுக்கு கதி யாரென்றும்”, அவலக் குரல்கள் எழுந்து ஒலித்தன. செய்தி கேட்டு உறவுகள் எல்லாம் வந்தன. சிலர் புரண்டு அழுதனர், சிலர் ஆடாமல் அசையாமல் அப்படியே அந்தப் புனிதவதியை உற்றுப் பார்த்து நின்றனர். நண்பர் கூட்டம் குவிந்தது. ஜிப்மர் மருத்துவ மனையின் நடமாடும் மருத்துவ வாகனம் வாசலில் நின்று மருத்துவக் குழு ஒன்று உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது, கங்கா தனது கண்களைத் தான்  இறந்த பிறகு தானமாக எடுக்கும்படி சொல்லி வைத்திருக்கிறாள் என்பது.
அரைமணி நேரத்தில் அவர்கள் தங்கள் பணிகளைப் படபடவென்று முடித்துப் புறப்பட்டுச் சென்றனர்.  போகும் முன் ஒரு மருத்துவர், அவருக்குக் கங்காவை மருத்துவ மனையில் இருந்தபோதே நன்றாகத் தெரியும். “உங்க அம்மா ஓர் அற்புதப் பெண்மணி!” என்று ஸ்ரீராமின் தோள்களைத் தட்டிப் பாராட்டி விட்டுச் சென்றார்.
நீட்டி நிமிர்ந்து இதழ்க் கடையில் விரிந்த புன்னகையுடன் மிக அழகாக அந்தச் சிரித்த முகம் மேலும் தெளிவு பெற்றுத், துயில்வது போல் நிறைவாகப் படுத்திருந்தாள் கங்கா. கிடந்த சிலையருகே அமர்ந்த சிலையாகக் கங்காவின் அருமைப்பேத்தி, அன்பு மருமகள் சக்தி அமர்ந்திருந்தாள்.     கடைசி நேரத்தில் அம்மாவின் அருகிலிருக்காத பாவியாகி விட்டாயேடி! என்று அவள் மனம் அவளை இடித்துரைத்து ரத்தம் சொட்ட வைத்தது. ஸ்ரீராமோ உயிர்ப் பிணமாகப் போய் விட்டான்.  தாயின் கடைசி நிமிடங்களில் தன் மடியில் அவளை ஏந்த முடியாமற் போயிற்றே! என அவன் ஆறாய்க் கண்ணீர் பெருக்கினான்.  இருவரும் ராஜாவின் கரங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டனர். சாந்தி, அவளது கணவன், நர்ஸ் கலா ஆகியோரை விழுந்து கும்பிட்டு வணங்கினர். யார் யாரோ வந்தார்கள். மலர் மாலைகளும், மலர் வளையங்களும் குவிந்தன. அந்தச் சின்னஞ் சிறிய வீட்டில் கூட்டம் அலை மோதியது. வீதியெங்கும் பெருங்கூட்டம்.  ஆயிரம் கதைகள் அங்கு அவளைப் பற்றிப் புகழந்துரைக்கப்பட்டன. நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் முறைப்படி ஆரம்பித்தன. வரவேண்டிய உறவினரல்லாம் வந்து சேர்ந்தனர். ஆனால் கடைசி நேரம் வரை மூத்த மகன் ராமேஸ்வரனும் அவனது குடும்பமும் வந்து சேர முடியவில்லை. கிருஷ்ணன் மகர ஜோதி தரிசனத்திற்காகச் சபரிமலைக்குப் போயிருந்தான். சுந்தரம் எங்கிருக்கிறான் என்று யாருக்குமே தெரியவில்லை.
அன்று போகிப் பண்டிகை. இதற்கு மேலும் வருபவர்களுக்காகக் காத்திருக்க முடியாதென்ற  நிலையில் உற்றாரும் உறவினரும், நண்பர்களும், ஊராரும் கூடி அழக் கங்கா என்ற ஜீவ நதியின் இறுதிப் பயணம் புறப்பட்டது.  மக்கள் வேண்டும், மனிதர் வேண்டும், நீயும் வேண்டும், அவனும் வேண்டும் என்று எல்லோரையும் தன் அன்பாலும், சொல்லாலும், செயலாலும் அள்ளி அள்ளி அணைத்து நட்புப் பாராட்டிப் பழகிய அந்த அன்புத் தாய், எல்லோரும் நன்றாக இருங்கள்! நான் போகிறேன்! என்று புறப்பட்டுவிட்டாள். தன்னைப் பொறுத்தவரை, தன் மனதிற்கு விரோதமில்லாமல், வஞ்சனையின்றி, நெஞ்சுரத்துடன் வாழ்ந்து, அன்பிற்குரியவர்களிடம் வாழ வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லித்தந்து எத்தனையோ குடும்பங்களுக்குப் பல விதத்திலும் உதவி செய்து, தன் கதை முடிந்ததெனக் காலனுடன் சென்றுவிட்ட அந்த கங்கையைக் கை நீட்டி அழைத்துக் கதறி அழுது தெருவில் புரண்டனர் அவளது வாரிசுகளும் வழித் தோன்றல்களும். பேரன்களும் நண்பர்களும் பெரும் பாக்கியமெனப் பாட்டியை நீண்ட நெடுந்துாரத்திலிருந்த மயானத்திற்குச் சுமந்து சென்றனர்.funeral1

“ஒரு விதவைப் பார்ப்பனப் பெண்மணியின் சாவிற்கு இவ்வளவு பெரிய அளவிலான பெருங்கூட்டம் பின்னால் சென்ற விந்தையை என் வாழ்நாளிலேயே நான் கண்டதில்லை, இன்று தான் என் கண்களால் நேரிடக் கண்டேன்” என்று ஒரு பெரியவர் பக்கத்தில் நின்றவரிடம் கூறி வியந்தார்.

line2
கங்கா என்ற காவியம் முடிந்து விட்டது.  இப் பாரதப் புண்ணிய பூமியில் எத்தனையோ பெண் நதிகள் இப்படித்தான் புனிதமாக வாழ்ந்து வளம் சேர்த்து மறைந்துகொண்டிருக்கின்றன.  இப்பெண்மணிகளின் வாழ்க்கை முறைகளால் வளம்பெற்ற குடும்பங்கள் எத்தனை எத்தனையோ! இப்படிப்பட்டவர்கள் தான் நம் பாரதத்தின் கலாச்சாரப் பெட்டகங்கள். இன்றைய பெண்கள் தங்கள் நிஜத் தன்மையை உணர்ந்து திருந்தி வாழ இவர்கள் தான் என்றுமே வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இதனைப் படிக்கும் யாரும் தங்கள் பரம்பரையில் வாழ்ந்தயாராவது ஒர் ஒப்பற்ற மங்கையர் திலகத்தை நிச்சயம் எண்ணிப் பாhப்பார்கள். அது தான் இந்த நெடுங்கதையின் வெற்றியாக இருக்கும்.            –

ஓம் சாந்தி –

line1