என்ன தான் மகனையும் மருமகளையும் பேரக்குழந்தைகளையும் வற்புறுத்தி அனுப்பி வைத்து விட்டாலும் அவர்கள் சென்ற பிறகு கங்காவிற்கு வீடு வெறிச்சோடியது. ஒரு சோர்வும் வெறுமையும் அவளைச் சூழ்ந்தது. இயந்திரமாக எழுந்துத் தானே தனது வேலைகளைச் செய்து குளித்துத் துணி துவைத்துச் சமைத்துப் பொழுதைப் போக்கினாள். பக்கத்து வீட்டு சாந்தியும், எதிர் வீட்டு மங்கையும் தான் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டனர். மறுநாள் பாட்டியின் நலம் விசாரித்து ஏதாவது தேவையா என்று பார்த்துவிட்டுப் போக வந்த சீதாவின் மகன் ராஜாவிட்ம் மங்கை “என்னதான் பகலிலே நாங்க பாட்டியைக் கூட இருந்து பார்த்துக்கிட்டாலும், ராத்திரியில் அவங்க தனியாத்தான் இருக்காங்க. அது சரியாப் படலே. அதனால இன்னியிலேர்ந்து நீ ராத்திரி வந்து துணைக்குப் படுத்துக்கோ!” என்று கூறினாள்.
ராஜா பாட்டியிடம் ராஜாஜி நகருக்குப் புறப்பட்டு வரும்படி மிகவும் கேட்டுக்கொண்டான். ஆனால் கங்கா வர மறுக்கவே, அவன் அதன் பிறகு தன் வீட்டிற்குப் போகவில்லை. மாமாவும் அக்காவும் வரும் வரை தான் அங்கேயே இருக்கப் போவதாகச் சொல்லித் தங்கிவிட்டான். மறுநாள் புதுவைக்கு வந்த ஒரு நண்பர் குடும்பத்துடன் கிருஷ்ணா காரைக்காலிருந்து வந்துவிட்டாள். அங்கு தனக்கு போரடித்தது என்றும், இங்கே தான் விளையாட முடியுமென்றும் தான் பிடிவாதம் பிடித்து வந்து விட்டதாக அவள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூறினாள். யாருமில்லாத தனிமையை விரும்பாத கங்காவிற்கு மீண்டும் கலகலப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுவிட்டன. அவளுக்குச் சதா ஏதாவது பேச வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும், தன் பேரனுக்கும் பேத்திக்கும் தன் கையாலேயே அருமையாகச் சமைத்து அவர்களைச் சாப்பிடச் சொல்லி மகிழ்ந்தாள்.
அன்று சனிக்கிழமை. கங்கா கிருஷ்ணாவை இழுத்து வைத்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி அழகாக உடையணிவித்து விட்டாள். சமையல் செய்தாள். அதன் பின்பும் சும்மா இருக்காமல் வாழைக்காய், கத்தரிக்காய் எல்லாம் சீவி பஜ்ஜி பண்ணினாள். அன்று மாலை தன்னைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போக வந்தவர்களுக்கெல்லாம் பஜ்ஜியை சட்னியுடன் சேர்த்துத் தந்து உபசரித்தாள். தானும் மனம் கொண்ட மட்டும் அவற்றைச் சாப்பிட்டாள். அவளுக்கு எண்ணெய்ப் பண்டம் ஒத்துக்கொள்ளாது என்று தடுத்து நிறுத்த அருகில் சக்தி இல்லையே!.
இரவு பத்துமணி வரையில் தெருப் பெண்மணிகளுடன் ஆளோடியில் அமர்ந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி அரட்டை அடித்தாள். “நாழியாகிவிடடது, படுக்க வரவில்லையா?” என்று பலமுறை ராஜா அழைத்த பிறகு “என் பேரன் கூப்பிடறான். நான் படுத்துக்கப் போறேன்! எல்லோருக்கும் குட் நைட்!” என்று கூறி விடைபெற்று உள்ளே வந்தாள்.
ஸ்ரீராமைப் போலவே ராஜாவும் பாட்டிக்கு மிக அழகாகப் படுக்கை விரித்துப் பக்கத்தில் குட்டி மெத்தையில் கிருஷ்ணாவைப் படுக்க வைத்தான். வழக்கத்திற்கு மாறாகக் கங்கா தன் பேத்தியிடம் நீண்ட நேரம் ஏதேதோ அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தாள்.
“நீ சமர்த்தா இருக்கணும். நன்னாப் படிக்கணும். நம்மாத்திலே நிறைய படிச்சவா கிடையாது. நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும். உங்கம்மாவைப் போல கெட்டிக்காரியா, நல்லவளாப் பேர் வாங்கணும். அப்பா அம்மா என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. அப்படியே கேட்டு நடக்கணும். தம்பியை சமர்த்தாப் பார்த்துக்கணும்!” என்று அறிவுரை நீண்டுகொண்டே போயிற்று. கிருஷ்ணா பாட்டி சொன்னதற்கெல்லாம் ஊம்! ஊம்! என்று தன் கால்களைப் பாட்டியின் வயிற்றில் போட்டபடி ஊம் கொட்டிக் கொண்டிருந்தாள். “ஆமா! இப்போ எல்லாத்துக்கும் ஊம் போடு! நாளைக்கு அம்மா வந்தா அவ சொன்ன பேச்சு கேக்காம அடி வாங்கு. சாம்பல் மோட்டு நாய் கதை தான் உன் கதை! என்று பாட்டி கூறவே, கிருஷ்ணா, அந்தக் கதையைச் சொல்லியே ஆக வேண்டுமென்று அடம் பிடித்தாள்.
கங்காவும் சிரித்துக் கொண்டே, “ஒரு ஊர்ல ஒரு தெரு நாய் இருந்ததாம். அது தெருத் தெருவா சுத்தி ரோட்ல கிடக்கிற எச்சல் இலையில கிடக்கிறதையெல்லாம் பொறுக்கித் திங்குமாம். இப்படி நாள் பூரா அலைஞ்சு திரிஞ்சிட்டு, ராத்திரி ஒரு சாம்பல் மேட்டு மேல போய்ப் படுத்துக்குமாம். அப்போ, நாம ஏன் இப்படி எச்சல் இலையில கிடக்கிறதையும், குப்பையில கிடக்கிறதையும் பொறுக்கித் திங்கறோம்? நாளையிலேர்ந்து இப்படி கண்ட அசிங்கத்தையெல்லாம் சாப்பிடக் கூடாது. நல்ல சாப்பாடாக் கிடைச்சா சாப்பிடுவோம். அப்படி கிடைக்காமப் போனா பட்டினி கிடந்தாலும் பரவாயில்லே. ஆனா நாம மனசு மாறிடக் கூடாதுன்னு” யோசிக்குமாம். சரி! இனிமே அப்படித்தான் இருப்போம்னுட்டுத் துhங்குமாம்! ஆனா போது விடிஞ்சதுமே அது வாலைக் குழைச்சிண்டு பழைய புத்தியோட எச்ச இலைக்குத் தான் ஓடுமாம்!” என்று கங்கா சொல்லி முடித்ததும், கிருஷ்ணா, “போ பாட்டி! நான் ஒண்ணும் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்! சமர்த்தா இருப்பேன்! என்று ஓங்கிக் கத்தவே,”சரி, சரி நீ சமர்த்துத் தான்! இப்போ துhங்கு! என்று அவளை அணைத்து சமாதானப் படுத்தித் துhங்க வைத்தாள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ராஜாவும், கிருஷ்ணாவும் சட்டென்று துhங்கி விட்டனர். ஆனால் கங்காவிற்குத் துhக்கம் வரவில்லை. ஏதேதோ நினைவுகள் அவளைப் போட்டுப் புரட்டின. மாலையில் சாப்பிட்ட பஜ்ஜி அவளுக்கு இருந்த ரத்த அழுத்தத்தை ஏற்றி விட்டது. வயிற்றை ஏதோ சங்கடம் செய்தது. மெதுவாக எழுந்து பாத் ரூம் போய்வி;ட்டு வந்தாள். திரும்பி வரும் போது அவளுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. தலை சுற்றியது. நிலை தடுமாறிக் கதவில் நன்றாக இடித்துக் கொண்டு விட்டாள். கதவில் சத்தம் எழவே திடுக்கிட்டுக் கண் விழித்த ராஜா ஓடிப்போய்ப் பாட்டியைப் பிடித்துக் கொண்டான். “என்ன? என்ன?” என்று கேட்டான். கங்காவிற்கு ஒன்றுமே பேச முடியவில்லை. நெஞ்சை அடைப்பதுபோல் வலிக்க ஆரம்பிக்கவே, தனக்கு ஏதோ உடல் துன்பம் ஏற்பட்டுவிட்டது! சாதாரண நிலையில் தான் இல்லை! என்பதை அவள் உணர்ந்துகொண்டுவிட்டாள். ஐந்து நாட்களாகத்தான் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிடாததும் இன்று பஜ்ஜியை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டதும் நினைவுக்கு வந்தன.
‘ராஜா! டாக்டரை கூப்பிட்டுண்டு வரயா! எனக்கு என்னவோ பண்றது!” என்று கூறியபடி படுக்கையில் அமர்ந்தாள். அவளால் உட்கார முடியவில்லை. ராஜா ஓடிப்போய் சாந்தி மாமியையும், பக்கத்து வீட்டில் குடியிருந்த நர்ஸ் கலாவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்தான். ஈசிசேரை எடுத்துப் போட்டான். மெதுவாக அதில் அமர்ந்த கங்கா சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் கணவனின் புகைப்படத்தைப் பார்த்தாள். “இன்னும் எத்தனை நாளுக்கு நான் இப்படியே அவஸ்தைப் பட்டுண்டு இருக்கணும்?” என்று அவள் கண்களால் அந்தப் படத்திடம் கேட்க, அவர் புகைப்படத்திலிருந்தபடியே புன்னகைத்தார். “அடி அசடே! என்னைத் தேடி வரும் காலம் நெருங்கிவிட்டதை நீ இன்னும் உணரவில்லையா?” என்று மௌனமாக அந்தப் புன்னகை உணர்த்தியது.
தாத்தாவின் படத்தையே அவள் பார்ப்பதைக் கண்ட ராஜாவிற்கு பயம் வந்துவிட்டது. அவன் சாந்தியிடம் சொல்லிவிட்டு, டாக்டரை அழைத்துவர சிட்டாகப் பறந்தான். அதற்குள் கங்காவிற்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. சாந்தி தன் கணவனை எழுப்பி அழைத்து வந்தாள். இருப்புக் கொள்ளாமல் எழுந்து வந்து தன் படுக்கையில் உட்கார்ந்த கங்கா தன் பேத்தியை அங்கிருந்து நீக்கும்படி கைகளால் ஜாடை காட்டினாள். அதன்படி கிருஷ்ணாவைத் துhக்கிக் கொண்டு தங்கள் வீட்டில் படுக்க வைத்து விட்டு வந்தாள் சாந்தி. அதற்குள் நர்ஸ் கலா அவளுக்குப் பிரஷர் மாத்திரை கொடுத்துத் தைலம் தேய்த்துவிட்டுப் பதற்றமாகச் செயல்பட்டாள்.
ராஜா டாக்டருடன் வருவதற்குள் கங்காவிற்கு நெஞ்சுவலியும் படபடப்பும் வியர்வையும் அதிகமாகி விட்டது. கலா தனக்குத் தெரிந்த வைத்திய முதலுதவிகளைச் செய்து பார்த்தாள். இரவு பன்னிரெண்டு மணியாகிவிட்டது. அக்கம் பக்கத்து வீட்டிலிருந்த கங்காவின் அன்பிற்குரியவர்களெல்லாம் பாட்டிக்கு உடம்பு சரியி;ல்லை என்று தெரிந்து வந்து விட்டனர். ஒருவர் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சீதாவிற்குச் செய்தியைச் சொல்லி அழைத்து வரப் போய்விட்டார்.
கலாவிற்கு கங்காவின் பல்ஸ் குறைந்துகொண்டே போவது புலப்பட்டுவிட்டது. ஐயய்யோ! ஸ்ரீராமும் சக்தியும் ஊர்ல இல்லாத இந்த சமயத்திலே இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுவிட்டதே! என எல்லோரும் தவித்தனர். கங்கா “ஸ்ரீராமா! ஸ்ரீராமா!,” என்று நினைவிழந்து பிதற்ற ஆரம்பித்தாள். “சக்தி! சக்தி!” என்று அவள் வாய் குழறியது.
அப்பொழுது அவளருகில் எந்த உறவுமில்லை. ஊரார் மட்டுமே இருந்தனர். உடனே சட்டென்று சாந்தியின் கணவன் அவளை நெருங்கி, அவள் தலையை வருடி, அம்மா! இதோ நான் தான் ஸ்ரீராம் வந்திருக்கேன்! நானும் சக்தியும் வந்துட்டோம்! கண்ணைத் திறந்து பாரும்மா! இந்தத் துhத்தத்தைக் குடி!” என்று தன் மனைவி சாந்தி கொண்டு வந்து தந்த கங்கை தீர்த்தத்தை அவள் வாயில் புகட்டிவிட்டார். ஒரு மிடறு உள்ளே போயிற்று. அவ்வளவுதான். கங்காவின் உயிர்ப் பறவை “ஸ்ரீராம் வந்திருக்கேன்!” என்ற வார்த்தையைக் கேட்டபடி ஒரு வாய் கங்கை நீருடன், உடற்கூட்டை விட்டு நொடியில் பறந்துவிட்டது. நர்ஸான கலாவிற்கு, எல்லாம் முடிந்துவிட்டது என்பது தெரிந்தாலும், ஒரு பெண்ணாக அவள் தொடர்ந்து கங்கா பாட்டியின் நெஞ்சைப் பிடித்து அமுக்கியும் தொடர்ந்து மார்பில் தனது கைகளால் மஸாஜ் செய்தும், குத்தியும், வாயில் வாயை வைத்து ஊதியும் நின்றுவிட்ட இதயத்தை இயங்கச் செய்யப் படாத பாடு பட்டாள்.
ராஜாவுடன் வந்த மருத்துவர் கங்காவின் நாடியையும், இதயத்தையும் பரிசோதித்துப் பார்த்து கங்கா என்னும் காவியம் முற்றுப் பெற்று விட்டதை அறிவிக்கும் வரை எல்லோரும் அவள் மீண்டும் எழ வேண்டும் என்றே துடித்தனர்.
“நான் வருவதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டது” என்று அவர் ராஜாவிடம் கூறியதும் எல்லோரும் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றனர். அடுத்த நொடி ராஜா “ஐயோ! அம்மா! நான் மாமாவுக்கும் அக்காவுக்கும் என்ன பதில் சொல்வேன்?” என்று தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு அலறி அழ ஆரம்பித்தான். நிலமையின் கொடுமையை உணர்ந்து எல்லோரும் ஒருசேர அழ ஆரம்பித்தனர்.
“அம்மாவிற்கு ஒண்ணும் ஆகியிருக்காது! வெங்கட்ரமண ஸ்வாமி நம்மைக் கைவிட மாட்டார்! அம்மா சௌகரியமாக எழுந்து உக்கார்ந்திருப்பா! ராஜாதான் கூட இருக்கானே! டாக்டரை உடனே கூட்டிண்டு வந்திருப்பான். கலாவும் இருப்பாளே!” என்றெல்லாம் புலம்பிக்கொண்டும், மன்றாடிக்கொண்டும் ஸ்கூட்டரிலேயே செய்தி சொன்னவருடன் புறப்பட்டு வந்த சீதா, வீட்டு வாசலில் இறங்கியதும் அழுகைச் சத்தம் வெளிப்பட்டதைக் கவனித்துத் துவண்டு போன காலை நகர்த்த முடியாமல் திகைத்து நின்றாள். “அந்த அசடு ரெண்டும் இங்கே இல்லாத நேரத்தில இப்படி ஒரு கொடுமை நடந்துடுத்தே! அவா இருந்தா அம்மாவோட உயிரைப் பறிக்க முடியாதுன்னு தான் யமன் அவாளை இப்படி ஊருக்குத் துரத்தினானா?” என்று அவள் வாய் அலறியது.