கங்கா ஒரு காவியம் – 14

காலம் காரியவாதியாகக் கன வேகமாகச் சுழன்று கொண்டே இருந்தது. இப்போது கங்கா மேலும் முதுமையடைந்துவிட்ட நிலை. தனது முதிய வயதிலும் கங்கா சுறுசுறுப்பும், கலகலப்பான பேச்சும், ஓடிச்சென்று உதவும் குணம் கொண்டவளாகவும் திகழ்ந்தாள். அலுப்பு சலிப்பில்லாமல் தன் வேலைகளையெல்லாம் அவள் தானே செய்துகொண்டாள். கரும்பைச் சுற்றி மொய்க்கும் எறும்புகளின் கூட்டம் போல் தெருவினரும், அக்கம் பக்கத்தவரும், அவளைச் சுற்றி எப்பொழுதும் இருந்தனர். பாட்டி..பாட்டி என்று அனைவரும் பாசத்துடன் பழகினர். அந்தக் குடும்ப நிர;வாகம் அவள் கண்காணிப்பில் தான் நடந்தது. ஸ்ரீராமும் சக்தியும் அவளின் விருப்பப்படியே அனைத்தையும் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோயம்புத்துhரில் வாழ்ந்து வந்த சீதாவின் குடும்பமும் பாண்டிச்சேரிக்கு வந்து விட்டது. வாழ்நாள் முழுவதும் தன் தாயின் நிழலிலேயே தன் குடும்பத்தைக் கொண்டு சென்ற சீதா, தாயின் முதுமைக் காலத்தில் அவளருகிலேயே தன் மகன்கள், மருமகள்களுடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டும், தேவையான உதவிகளைச் செய்து கொண்டும் இருந்தாள். கல்யாணியின் குடும்பம் விழுப்புரத்தில் வசித்தது. சீதாவின் பிள்ளைகள் தங்கள் கங்கா பாட்டியின் மீது உயிராக இருந்தனர். எந்த ஒரு காரியத்தைச் செய்யத் துவங்கும் முன்பும் வந்து பாட்டியின் நல் ஆசிகளைப் பெற்றுக்கொண்டு செல்வார்கள். எல்லோருக்கும் வழிகாட்டியாய், நிர்வாகியாய், குல தெய்வமாய்க் கங்கா இருந்தாள்.

ஒரு நாள்…….ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கங்கா, சக்தியைக் கூப்பிட்டாள். “நாம திரும்பவும் காரைக்காலுக்கு, நம்ம ஆத்துக்கே போயிடலாம்னு எனக்குத் தோணறது. எத்தனை நாளைக்கு வாடகை வீட்டிலேயே இருக்கிறது?, நமக்குன்னு சொந்த வீடு கடலாட்டமா இருக்கறச்சே, அங்கேயே வேலையை மாத்திண்டு போலாமே! எனக்கு என்னமோ கைலாசநாதர், சுந்தராம்பா, நித்தியக் கல்யாணப் பெருமாள் சன்னதிகளைத் தரிசிச்சிண்டு கொஞ்ச காலமாவது, நம்மாத்திலே போய் நம்ம குழந்தைகளோட நிம்மதியா வாழணும் போல இருக்கு!” என்றாள். சக்தியும், “மன நி;ம்மதியில்லாம நீங்க அந்த ஆத்தை விட்டு வந்தேளம்மா! கொஞ்ச காலமாவது நீங்க நிறைவா அங்கே இருந்தா எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்! மதிப்பிழந்து போன அந்தத் தெருவிலே திரும்பவும் நாம நம்ம குடும்பத்தோட போய் வாழ்ந்தாத்தான் அந்த மதிப்பு நமக்குத் திரும்பக் கிடைக்கும்!” என்று பதில் சொன்னாள்.
ஸ்ரீராம் அலுவலகம் விட்டு மாலை வீடு திரும்பியதும் கங்கா அவனிடம் தன் ஆசையையும், தனது திட்டத்தையும் கூறினாள். “இதோ பாருப்பா! வர பொங்கல் லீவிலே காரைக்கால் வீட்டைப் பழுது பார்த்து சரி பண்ணிப் புதுசாப் பெயிண்ட் அடிக்கணும். கொல்லையிலே பாம்பே கக்கூஸ் கட்டி ஒரு பாத் ரூம் கட்டணும். பழைய காலம் மாதிரியெல்லாம் இப்பத்தைய குழந்தைகள் பழகாதுகள். அவா சௌகரியத்துக்கு எல்லாம் மாத்திக் கட்டணும்! நீயும் சக்தியும் புறப்பட்டுப்போய் எல்லா வேலையையும் கிட்ட நின்னு பார்த்து முடிச்சுட்டு வாங்கோ! அதுக்கு நடுவில ஆபீஸில சொல்லி வேலையைக் காரைக்காலுக்கு மாத்திணுடுங்கோ!” என்று அவள் சர்வ திட்டமாகக் கூறினாள்.

அன்றிருந்த சூழ்நிலையும், வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டிய நிர்பந்தமும், அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமும், வந்து சேர்ந்த விடுமுறையும், அவர்களை அங்கிருந்து கிளப்பின. அம்மா தனியாக இருப்பாளே என்ற கவலையில் அவளை ராஜாஜி நகரில், சீதா ஆத்தில் போய் விட்டு விடுவதாகவும், தாங்கள் போகிப் பண்டிகைக்கு அங்கு வந்து விடுவதாகவும் இருவரும் கூறினர். ஆனால் கங்காவோ தனக்கு அங்கு செல்ல விருப்பமில்லையென்றும், இங்கேயே தான் இருக்கப் போவதாகவும் பொங்கலை இங்கேயே கொண்டாடலாம் என்றும் கூறிப் போக மறுத்து விட்டாள். “என்னைச் சுற்றி நிறைய மனுஷா இருக்கா! எனக்கென்ன பயம்! ஒண்ணும் ஆகாது! நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்கோ!” என்றும் தைரியம் கூறினாள்.

அதன்படி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீராமும் சக்தியும் உரிய ஏற்பாடுகளுடன் காரைக்குப் புறப்பட்டனர். புறப்படும்பொழுது நால்வரும் கங்காவை நமஸ்கரித்து ஆசி பெற்றனர் கங்கா வழக்கம்போல் ஒவ்வொருவருக்கும் ஓர் அறிவுரை கூறி நெற்றியில் விபூதி இட்டு வாழ்த்தினாள். பிறகு ஸ்வாமி அலமாரியில் தட்டில் வைத்திருந்த பணக்கட்டை எடுத்து ஸ்ரீராமிடம் கொடுத்து, “ஜாக்கிரதை! பொறுப்பா நடந்துக்கோ, உன்னை நம்பித்தான் நானும் இவளும் இருக்கோம்! அதை நீ மறந்துடாதே!” என்று உணர்ச்சியுடன் கூறினாள்.

நால்வரும் பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். கங்கா வாசலில் நின்றுகொண்டு முகங்கொள்ளாச் சிரிப்புடன் வலது கரத்தை உயர்த்தி அசைத்துக் காட்டி விடை கொடுத்தாள். ரிக்ஷாவில் குழந்தைகளுடன் ஏறி அமர்ந்து புறப்பட்ட பின்பும் நால்வரும் அம்மாவை நோக்கி டா..டா..காட்டியவாறே சென்றனர். தெரு திரும்பி ரிக்ஷா செல்லும்போது, ஏனோ சட்டென்று அவர்கள் மனதில் ஒரு சஞ்சலமும் சங்கடமும் ஏற்பட்டது. ஸ்ரீராம் சக்தியிடம் “என்னவோ போல இருக்கு இல்லே?” என்றான். சக்தியும் “எனக்கும் ஏதோ சங்கடமாய்த்தான் இருக்கு! திரும்பிப் போயிடலாமா? இன்னொரு நாளைக்கு ஊருக்குப் போகலாமே!” என்றாள். “வேண்டாம்! புறப்பட்டாச்சு! திரும்பிப் போனா நன்னா இருக்காது! அங்கேயும் வேலைக்குக் கொத்தனாரையெல்லாம் முரளி ஏற்பாடு செய்திருப்பான். நாம போகாட்டா சரிப்படாது., போயிட்டே வந்துடுவோம்!” என்று ஸ்ரீராம் சொன்னான்.

“பாட்டி நம்ம கூட வர்லியா?” என்று கிருஷ்ணா கேட்டாள். “இல்லடி கண்ணு! நாம இப்பப்போய் நம்ம தாத்தா பாட்டி ஆத்தை நன்னா ரிப்பேர் பண்ணிப் புதுசா ஆக்கிட்டு வந்திடுவோம். அப்புறம் பெரிய லீவுக்கு நாம எல்லாரும் பாட்டியைக் கூட்டிண்டு அந்தாத்துக்கே போயிடுவோம்.!” என்று சக்தி அவளுக்குப் பதில் கூறினாள். பயணம் தொடா்ந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s