கங்கா ஒரு காவியம் -5

குழந்தைகள் வளர வளர அந்த வீட்டில் பிரச்னைகளும் வளர ஆரம்பித்தது. கடை நிர்வாகம், வீட்டு நிர்வாகம் என்று அல்லாடியதில் குழந்தைகளைச் சரியாகக் கண்காணித்து வளர்க்க முடியாமல் குமரேசனும் கங்காவும் தவித்தனர். எல்லாக் குழந்தைகள் ஒழுங்காக இருந்தும் சுந்தரம் மட்டும் தறுதலையாகவே ஆகி விட்டான். பள்ளியில் சென்று படிக்கப் பிடிவாதமாக மறுத்தான். ஊர்ப் பிள்ளைகளுடன் சேர்ந்து வெட்டியாகச் சுற்றினான். யார் கண்டித்தும் கட்டுப்படும் நிலையில் அவன் இல்லை. எவ்வளவோ தண்டனைகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர் அந்தக் கால வழக்கப்படி அவனது கால்களில் இரும்புக் குண்டு போட்டுக் கட்டி வகுப்பில் இருக்க வைப்பார். அவனோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து சங்கிலியை அவிழ்க்கச் செய்து ஓடிப் போய்விடுவான். வீட்டில் அடங்காமல் அட்டகாசம் செய்வான். தான் செய்த குற்றங்களை எல்லாம் உடன் பிறந்தவர்கள் தலையில் கட்டி விடுவான். விளையும் பயிர் முளையிலே! என்பதற்கேற்பக் கடைசி வரை அவன் பிரச்னைக்குரிய ஒருவனாகவே இருந்து விட்டான். கங்கா குமரேசனுக்கு அவனது முறையற்ற செயல்கள் அனைத்தும் பெரும் தலைவலியாக மாறி விட்டன.

அது ஒரு கார்த்திகை மாதம்! தீபாவளி அமர்க்களமெல்லாம் முடிந்து வீதிகள் கார்த்திகை தீப வரிசைகளை எதிர் பார்த்திருக்கும் நேரம.; கங்காவின் வீட்டிலோ சூழ்நிலை சரியில்லை. மூத்த பெண் சீதாவிற்கு ஊதுகணை யென்ற நோய் வந்து முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி ஒருவர் துணையுடன் தான் எல்லாம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாள். சுந்தரத்தை இரண்டு நாளாகக் காணவில்லை. எங்கே போனானோ என்ற கவலை ஒருபக்கம். ஐந்தாவதாகப் பிறந்து வளர்ந்து வந்த பெண் காயத்ரி. மிக அழகான புத்திசாலியான சிறுமி. அவளென்றால் எல்லோருக்குமே கொள்ளைப் பிரியம். வெடுக் வெடுக்கென்று அருமையாகப் பேசுவாள். யாராயிருந்தாலும் அவளிடம் இரண்டு வார்த்தையாவது பேசாமல் போகமாட்டார்கள். அப்படிப்பட்ட சுட்டிப் பெண் நான்கு நாட்கள் ஜூரம் வந்து கண்ணைத் திறக்காமல் தரையில் பறித்துப்போட்ட முல்லைக் கொடி போலக் கிடக்கிறாள்.

கங்காவின் மனம் அழுதது. ‘கைலாசநாதா! ஏனப்பா எங்களை இப்படி சோதிக்கறே! நாங்க என்ன பண்ணுவோம்!’ என்று அரற்றிக் கொண்டே வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

அன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள். எல்லோர் வீட்டிலும் தூசி படிந்து கிடந்த குத்துவிளக்குகள்இ பரண் மீது கிடந்த அகல் விளக்குகள் எல்லாம் வெளிப்பட்டு முற்றத்தில் நீரில் மூழ்கிக் கிடந்தன. அவற்றைத் துலக்கி எடுத்து மணைப் பலகைகளில் கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்த அகல் விளக்குகளை அவற்றில் அடுக்கி, பறித்து வந்த பூக்களைத் தொடுத்து, பூஜைக்குரிய பொருள்களைச் சேகரித்து எல்லோர் வீட்டிலும் முருகனை மனதாரத் துதித்தபடி தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்த நேரம்.

அன்று காலை எழுந்ததிலிருந்தே கங்காவிற்கு உடம்பு சரியில்லை. கோனார் வராததால் அவளே பால் கறக்க வேண்டியதாயிற்று. அந்த மாடுகள் இரண்டும் கோனாரில்லாவிட்டால் கங்காவின் கைகளுக்கு மட்டுமே மடி திறக்கும். வேறு யாராவது கிட்டே நெருங்கினால் முட்டித் தள்ளத் தலையை சாய்க்கும். எப்படியோ தட்டுத் தடுமாறி மாட்டுத் தொழுவ வேலையை முடித்தவள், குளித்து, ஸ்வாமி கும்பிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தாள், அதற்குள் ஒரு அத்தை பாட்டி குமட்டி அடுப்பில் கரியைப் போட்டுக் காபி டிகாஷ்ன் இறக்க வென்னீரைப் போட்டுவிட்டு வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். உள்ளே வந்ததும் கங்காவிற்கு இடுப்பும் கால்களும் இற்றுப் போய்விடும் போல் வலித்தன. இரவு முழுவதும் அந்த வலி அவளைப் படுத்திக்கொண்டே இருந்தது. வலி தாங்க முடியாமல் துடித்த கங்கா, “பாட்டி! ஒரு வாய்க் காப்பி கலந்து தாங்கோ! எனக்கு என்னவோ பண்றது. என்று சொல்லிவிட்டு, “ஸ்ரீ ராமா! ஸ்ரீ கிருஷ்ணா! இந்தக் கார்த்திகை பண்டிகை நல்ல படியா முடியணுமப்பா! தெம்பைக் கொடு!” என்று பகவானை வேண்டினாள். ஆனால் அவளுக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இடுப்பிலும் வயிற்றிலும் சொல்ல முடியாத வலி அலையலையாகப் பரவ ஆரம்பித்ததும் அவளுக்கு தன் வயிற்றிலிருக்கும் ஆறு மாதக் கருவிற்கு ஏதோ ஆகி விட்டதென்று புரிந்து போயிற்று.

இருண்ட மேகம் சூரியனை மறைத்துப் பூமியை இருட்டாக்கி விடுவதைப்போல அவள் மனதை ஒரு மாபெரும் இருட்டு விழுங்கியது. வேலை செய்ய வந்த பாட்டியைக் கூவியழைத்தபடி கீழே மயங்கிச் சாய்ந்தாள். “ஐயய்யோ! கங்கா கீழே விழுந்துட்டாளே!” என்று அந்தப் பாட்டி போட்ட சத்தத்தில் எல்லோரும் ஓடி வந்தனர். அனுபவம் நிறைந்த அந்தப பாட்டி கங்காவின் நிலமையைப் புரிந்துகொண்டு, “புருஷா எல்லாம் குழந்தேளை அழைச்சுண்டு சித்த அந்தண்டை போங்கோ! மருத்துவச்சிக்கு ஆள் அனுப்புங்கோ! மீனாட்சி, சுந்தரி! வாங்கோ! கங்காவைத் தூக்கி இரும்புப் பெட்டி ரூமுக்குக் கொண்டு போங்கோ” என்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு செயல் பட ஆரம்பித்தாள். என்ன ஏது என்று புரியாத இரண்டுங்கெட்டான் குழந்தைகள் ஆண்களின் அரவணைப்பில் அங்கிருந்து வெளியேறினர். கங்காவை உறவுப் பெண்கள் சூழ்ந்து உதவிகள் செய்தனர்.

“ஈஸவரா! பகவானே!” என்ற கங்காவின் அலறலுடன் அவள் மணி வயிற்றில் வாய்த்திருந்த அணிவிளக்கு வெறும் சதைப் பிண்டமாகிக் குறைப் பிரசவமாக வெளியாகிவிட்டது. தன்னிலை மறந்து கிடந்த கங்காவிடம் காலதேவன் தன் கருணையைக் காட்டினான் இல்லை. தர்மத்தின் தலைவனாக, அவரவர் கர்மப் பலன்களுக்கேற்பத் தன் விருப்பு வெறுப்பற்ற செயல்களைத் தொய்வின்றிச் செய்துகொண்டே இருக்கும் அந்தத் தர்ம மகாராஜன் தன் கடமையே கண்ணாக, யாருடைய இன்ப துன்பங்களுக்கும் நான் பொறுப்பல்ல் என் கடன் உயிர் கவர்ந்து பூ பாரத்தைக் குறைப்பதே! என்பதைப்போல ஒரு குறை உயிரோடு மட்டும் செல்வதற்கு மனமின்றிக் கூடத்தின் ஒரு பக்கம் ஜூரத்தால் வாடித் துவண்டு கிடந்த காயத்ரியையும் வெறும் சரீரமாக ஆக்கிவிட்டு அவளின் உள்ளிருந்த உயிர் ஜோதிச் சுடரைக் கையிலெடுத்துக் கொண்டு, “காயத்ரி! வா என்னுடன்! உனது கர்மா இனி வேறு இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் தொடர வேண்டும்!” என்று முணுமுணுத்துப் புறப்பட்டுவிட்டான், யாரும் அறியாத வண்ணம்.

அம்மா இப்படித் திடீர்னு மயக்கமாகி விழுந்துட்டாளே! இப்ப நாம என்னடி பண்றது? பசங்களையெல்லாம் பள்ளிக்கூடம் கிளப்ப வேண்டாமா என்று கட்டிலில் படுத்துக் கிடந்த சீதாவிடம் கேட்டுக்கொண்டே, தற்செயலாகக் காயத்ரியைத் திரும்பிப் பார்த்த பர்வத அத்தை ஏதோ சந்தேகப்பட்டாற்போல அவளை அருகில் சென்று பார்த்தாள். உடனே உடல் முழுவதும் நடுங்கப் பதறும் குரலில், “சீதே! இங்கே பாருடி! காயத்ரியைப் பாருடி! யாராவது ஓடி வாங்கோ! காயத்ரி! காயத்ரி! என்று அலறினாள். அவள் போட்ட சத்தத்தில் அதிர்ந்து போய் அரை நொடியில் அனைவரும் அங்கிருந்தனர். சீதாவோ எழுந்தும், நடந்து போக முடியாமல் இருந்த இடத்தில் அழ ஆரம்பித்தாள்.

அம்மா மயக்கமாகிக் கீழே விழுந்து விட்டாள் என்று ராமேஸ்வரன் அரக்க பரக்க ஓடி வந்து சொன்னதைக் கேட்டுக் கடையை அவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் காற்றெனக் கடுகி வீட்டையடைந்து ரேழியில் கால் செருப்பைக் கழற்றிக்கொண்டிருந்த குமரேசன் அந்தக் கூக்குலைக் கேட்டு, நெஞ்சை ஏதோ பனிப்பந்து கனமாக வந்து அடைப்பதைப் போன்ற உணர்வு தாக்கக் கண்களுக்கெதிரே பூச்சி பறக்க, உடல் தள்ளாட, தட்டுத் தடுமாறித் திண்ணையில் சரிந்துவிட்டான்.

வீட்டுப் பொம்மனாட்டிகள் மூலமாகக் குமரேசன் ஆத்தில் நிலவரம் சரியில்லையென்று கேள்விப்பட்டு, தான் என்ன செய்வது என்ற யோசனையோடு தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ராமஸ்வாமி ஐயர், “வேளை கெட்ட வேளையில் குமரேசன் ஆத்துக்குப் பரபரப்பாக போறானே! என்னன்னு தெரியலியே! எதுக்கும் போய்ப் பார்ப்போம்!” என்று தெருவில் இறங்கி வந்தவர், குமரேசனின் நிலை குலைந்த தோற்றத்தைக் கண்டுப் பதறிப் பாய்ந்தோடி வந்துப் படியேறி, “என்னப்பா! குமரேசா!” என்று நின்றாரோ இல்லையோ, குமரேசனின் கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடும் பறந்து போய் விட, “மாமா! நான் யாருக்கு என்ன துரோகம் செஞ்சேன்! என்னை ஏன் பகவான் இப்படி சோதிக்கணும்? என் பொண்ணு!”..என்று
அதற்கு மேல் பேச முடியாமல் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான். அவனை ஆசுவாசப்படுத்தி, “இன்னும் நீ ஆத்து உள்ளேயே போகலியே! அதுக்குள்ளே என்னன்னு கண்டே! வா! உள்ளே போய்ப் பார்க்கலாம்!” என்று சொல்லி அவனைத் தூக்கி நிறுத்தி உள்ளே இழுத்துச் சென்றார் அந்தப் பெரியவர்.

அப்பாவின் தலையைக் கண்டனரோ இல்லையோ அங்கிருந்த குழந்தைகள் எல்லோரும் அப்பா…ஆ..ஆ! என்று பெருங்குரலில் அழ ஆரம்பித்து விட்டனர். பச்சைக் கிளியாய், செல்லப் பெண்ணாய், கன்றுக் குட்டியாய்த் துள்ளித் திரிந்த, எல்லோரிடமும் அன்பாக விளையாடி மகிழ்வித்த அருமைச் சகோதரி இனி நமக்குப் பயன்பட மாட்டாள்! என்ற உண்மை புரிந்து அனைவரும் அந்த இழப்பைத் தாங்க இயலாமற் கதற, பெண்மணிகள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தியபடி சத்தமில்லாமல் குலுங்கி அழக் குமரேசன் துண்டால் மறைத்துத் தன் அழுகையை அடக்கித் தன் அருமைத் துணைவி, பொறுமையின் சிகரமான கங்கா இதை எப்படித் தாங்கினாள், அவள் எங்கே? என்ற எண்ணத்துடன் அடுக்களைப் பக்கம் போனான். அங்கே ஏக அமர்க்களம்.

பர்வதத்து அத்தை வந்து, “குமரேசா! உனக்கு இப்போ போறாத காலமோடா! கங்காவுக்குக் கர்ப்பம் கலைஞ்சு கண்ணைத் திறக்காம கிடக்கா. இரும்புப் பெட்டி ரூமிலே அவளைப் படுக்க வெச்சிருக்கு. காயத்ரி போனது கூட அவளுக்குத் தெரியாது. எதோ எங்களுக்குத் தெரிஞ்ச தெய்வத்தையெல்லாம் நாங்க வேண்டிண்டிருக்கோம், வேற வழி தெரியலேடாப்பா! மருத்துவச்சி வந்திருக்கா! ஹூம்! மனசைத் தேத்திக்கோ! குத்து விளக்காட்டமாகக் குழந்தை ஓடியாடி வீட்டை நெறைச்சா! இப்படி இத்தனை சுருக்காப் போறதுக்குத்தான் அத்தனை ஆட்டம், பாட்டம்னு நாம கண்டமா, என்ன? பகவான் பேர்ல பாரத்தைப் போட்டுவிட்டு ஆக வேண்டியதைப் பாரு. கங்கா கட்டையாட்டமாக் கெடக்கா! பொண்ணு போன சேதி இப்போ அவளுக்குத் தெரிஞ்சா அவ உசிரு உடம்புல தங்காதுன்னுட்டுத் தான் பகவான் அவளை இப்படிக் கட்டையாப் போட்டுட்டான் போல இருக்கு!” என்று அழுதுகொண்டே திக்கித் திணறிப் பேசி அவனுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி உலக நடப்புகளுக்குக் குமரேசனை உசுப்பித் திருப்பி விட்டாள், அந்த உற்றுழி உதவும் உண்மை உள்ளம் கொண்ட உறவினள். துடைக்கத் துடைக்க வழியும் கண்களைக் கசக்கிய படி கங்காவை ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுக் கூடத்திற்கு வந்தான் குமரேசன். அன்று அந்தத் தெருவில் யார் வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. எல்லோர் வீட்டிலும் துக்கம். எல்லோர் வாயிலும் கங்காவின் துயர நிலை பற்றிய பேச்சு. எல்லோர் வயிற்றிலும் காயத்ரியைப் பறி கொடுத்த சங்கடம்.

line2

இந்த இடத்தில் அந்தக் காலத்தியக் கட்டுக் கோப்பான வாழ்க்கையமைப்புப் பற்றியும் சற்றுப் பேசித்தான் ஆக வேண்டும். அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் சாவு என்றால்; அந்தத் தெருவினர் அனைவரும் அந்த வீட்டில் இருப்பார்கள். அந்த வீட்டினரின் துயரத்தை அனைவரின் துக்கமாகப் பகிர்ந்து கொள்வார்கள். கூட இருந்து எல்லாவற்றிலும் பங்கெடுத்து வீட்டிற்கு வந்த பின்பும் சென்றவரின் குணங்களைப் பற்றிப் பேசிப் பேசிக் கண்ணீர் சிந்துவர். இறந்தவர் வீட்டில் அடுப்பெரியக்கூடாது என்று ஒரு சாஸ்திரத்தை வைத்துப் போட்டி போட்டுக்கொண்டு யாராவது ஒரு வீட்டில் சமையல் செய்து வைத்துப் பறி கொடுத்து வயிறெரிந்த நிலையிலிருக்கும் சாவு வீட்டினரை அன்பாய் வற்புறுத்தி அவர்களின் துக்க நிலையிலிருந்து அவர்களைக் கொஞ்சமேனும் மீட்டு எடுத்துச் சாப்பிட வைத்து ஆக வேண்டிய காரியங்களைக் கூடவே இருந்து கவனிப்பார்கள். அவர்களின் செயல்களில் உண்மையான துயரமும், மெய்யான ஆதூரமும் நிறைவான உதவும் பண்பும் நிறைந்திருக்கும்.
ஆனால் இன்றைய நிலை! இறந்தவர் வீட்டாரே உணவுக்கு ஓட்டலில் சொல்லி, இடு காட்டில் இட்டபின் அவர்களே வந்தவர்களை உணவுண்ணச் சொல்லி உபசரித்து அனுப்பிப் பிறகு அழுது கொண்டு கிடக்க வேண்டும். ஒரே தெருவில் இருப்பவர்கள் ஒரு முறைக்காகவென்று வந்து சற்று நின்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு விட்டு உடனே தங்கள் வீட்டிற்குச் சென்று தலை முழுகி அவசர அவசரமாக மெட்டி ஒலியும், செல்வியும் பார்க்கத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தஞ்சம் புகுந்து விடும் காலமாகி விட்டது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அடுத்த வீட்டில் வசிப்பவர் யார்? அவருக்கு என்ன வேலை? எத்தனை பேர் அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது கூட அனாவசியம் என்ற அளவிற்கு இன்றைய மனப் பான்மை குறுகிவிட்டதே! ஹூம்!.. வாருங்கள், நாம் குமரேசன் வீட்டிற்கு மீண்டும் போவோம்! அலம்பி விடப்பட்ட அந்த வீட்டின் வாயிற் படிகளில் கால்களை வைக்கவே கூசுகின்றது. அவ்வீட்டுத் தலைவியின் துயரத்தை எந்த அளவில் சந்தித்து நம் மனம் துவண்டு போகுமோ என்ற துயரம்கலந்த அச்சம் தான் இதற்குக் காரணமோ?

குழந்தைகளும் பெரியவர்களும் ஸ்நானம் செய்து உடை மாற்றிக் கொண்டு துயரம் கப்பிய முகத்துடன் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றனர். எல்லோர் மனதிலும் ஒரே கவலை. எப்படியாவது கங்கா கண் விழித்து எழுந்து விட வேண்டும். இத்தனை வைத்தியத்திற்குப் பிறகும் இப்படிச் சுய நினைவின்றிக் கிடக்கிறாளே! அவளில்லாமல் இந்தக் குடும்ப வண்டி நகருமோ? அளவுக்கு மீறிய பாரம் தாங்காமல் சரிந்து விடுமே! பாழாய்ப்போற யமன் குறை உயிர் போதாது, சின்னஞ் சிறு பெண் போதாது என்று அந்த சௌபாக்யவதியையும் மனம் குளிர அழைத்துப்போய் இங்கு இருப்பவர் நெஞ்சில் தீயைப் பற்ற வைத்து விடுவானோ? என்றெல்லாம் எண்ணி அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளெல்லாம் போய் விட்ட காயத்ரிக்காக அழுவதா? கண் திறக்காமல் கிடக்கின்ற அம்மாவிற்காக அழுவதா? என்று புரியாமல் கலங்கி நின்றனர். அந்த இரவு அனைவருக்கும் மிகக் கொடிய ஓர் இரவாகக் கழிந்தது. காயத்ரியின் உயிர் பிரிந்த இடத்தில் ஏற்றி வைத்த குத்து விளக்கு மௌன தீபமாய், சோகச் சாட்சியாய் அனைவரின் சோகத்திலும் பங்கு கொள்வது போல ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது.

மறு நாள் காலை…. சுந்தராம்பாள் கோவில் மணி டங்…டங்;கென்று சப்தித்து, கங்காவின் உடலில் உயிர் சேர்க்கும் பணியை மௌனமாய்த் தன் மணியொலி அலைகளால் செய்து கொண்டிருந்தது. தன் சன்னதியில் வாழ்ந்து வரும் கங்கா தன் பெயருக்கேற்ப சகலரின் பாவங்களையும் தன் புன்னகையால் மன்னித்துச், சொற்களால் அரவணைத்துத் தானும் பட வேண்டிய க‘;டங்களையெல்லாம் பட்டுத் தெளியவேண்டியதிருக்க இன்றே காலதேவன் தப்புக் கணக்கு போடப் பார்க்கிறானே என்று அந்த கங்காதரன் வந்து அருள் பாலிக்கக் கங்கையின் உடலில் அசைவு ஏற்பட்டது. அதற்காகவே காத்திருந்த பெண்மணிகளின் சோக மயமான முகத்தில் மகிழ்ச்சி, மின்னல் கீற்றாக மின்னி மறைந்தது. சூடான பானத்தைக் கரைத்து உள்ளுக்குப் புகட்டிய பின்அப்படியும் இப்படியுமாக உடலை அசைத்தாள் கங்கா. வயிற்றில் சிலீரிட்ட உணர்வு, கால்களை அசைக்கவே முடியாத வலி. வயிற்றிலிருந்த கரு கை நழுவி விட்டது என்பது புரிந்து அவளது மூடிய கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. மண்ணுக்கு இரையாவதற்கென்றே பெற்றுத் தரவேண்டிய பாவியா நான்? என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.

manvettyமெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்து எழ முயன்றாள். இரண்டு பெண்மணிகள் அவளுக்கு உதவினர். மெல்ல எழுந்து அவர்களின் தோளைப் பிடித்தபடி கொல்லைப்புறம் சென்ற கங்காவின் கண்களில் கிணற்றடியில் நன்றாக அலம்பி சாத்தி வைக்கப் பட்டிருந்த மண் வெட்டி தென் பட்டது. இந்த மண் வெட்டியைக் கண்டாலே இடி இறங்கியது போலப் பயப்படுவாள் கங்கா. அதற்குக் காரணமும் இருந்தது. ஆறு மாதத்திலும், ஒரு வயதிலும், இரண்டு வயதிலுமாகக் குழந்தைகள் அடுத்தடுத்து இறக்கும்போதெல்லாம், ‘குழிவெட்ட’ இந்த மண்வெட்டியை எடுத்து முன்னால் வைத்து விடுவார் சாஸ்திரி. குழந்தையைப் பார்த்து அழுவதை விட, இந்த மண்வெட்டியைப் பார்த்து தான் பேயைக் கண்டு நடுங்கி அலறும் குழந்தை போல நடுங்கிப் பதறுவாள் கங்கா. “அய்யோ! என் குழந்தையைப் புதைக்கப் புறப்பட்டுட்டியா?” என்று கதறுவாள். அப்படிப்பட்ட கொடிய கருவியான அந்த மண்வெட்டியை அங்கு பார்த்ததும் அவளை அறியாமல் உடலில் ஒரு நடுக்கம் பரவியது.

“இது ஏன் இங்கு கிடக்கு?” என்று பலவீனமாகக் கேட்டபடி பின்புறம் போய் வந்தாள். அருகிலிருந்த இரண்டு பெண்மணிகளும் பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனரே யன்றி எதுவும் பேசவில்லை. மெதுவாக உள்ளே நடந்து வந்தாள் கங்கா. அங்கு சூழ்நிலையில் ஏதோ மாற்றமிருப்பதாக அவளுக்குப் பட்டது. ஏன் இவ்வளவு பேர் வந்திருக்கா? ஏன் ஏனோ தானோன்னு படுத்துத் தூங்கறா? ஏன் இங்கே விளக்கு எரியறது? அது காயத்ரி ஜூரமாப் படுத்துண்டு இருந்த இடமாச்சே! காயத்ரி எங்கே?

அவளைப் பிடித்து அழைத்து வந்தவர்களைப் பார்த்து, “காயத்ரி எங்கே?” என்றாள். அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்படவில்லை. ஆனால் கண்களிலிருந்து மளுக்கென்று கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தது. கங்காவிற்குத் தலை சுழல்வது போல ஓர் உணர்வு. கிணற்றடியில் மண் வெட்டி! இங்கேயோ குத்து விளக்கு! மகளைப் பற்றித் கேட்டதும் மளமள வென்று இவர்கள் கண்ணீர் பெருக்குகின்றனரே! நுண்ணறிவிற் சிறந்த கங்காவின் மனதிpல் திடீரென்று பெரிய மின்னல். தலையில் பெரிய இடி இடித்தது. “காயத்ரி எங்கேடி?” அவள் குரல் உயர்ந்தது. அதற்குள் உள்ளேயிருந்து ஓடி வந்த பர்வதத்து அத்தையும் அலமேலுப் பாட்டியும் கங்காவைப் பிடித்துக் கொண்டு, “நேத்திக்குப் பூரா நீ கெடந்த கெடை என்ன? இன்னிக்குப் போது விடியறதுக்குள்ளே எழுந்துண்டுட்டியா? ரெண்டு நாளைக்கு நீ நடக்கப்படாது. வா! வந்து படுத்துக்கோ! என்று அவசரத்துடன் அவளை இழுத்தனர்.

“எனக்கென்ன கேடு இப்போ! எல்லாத்தையும் மலை மலையா முழுங்கிட்டு நான் நன்னாத்தானே இருக்கேன்! எனக்கு ஒரு காலமும் வந்துடாது. குழந்தை காயத்ரி எங்கே? நீங்க அதை;ச் சொல்லுங்கா! என் வயத்தைச் சங்கடம் பண்றது! நீங்க நெஜத்தை சொல்லுங்கோ! என்றாள்.

அதற்கு மேலும் அவர்களால் உண்மையை மறைக்க முடியவில்லை. “கங்கா! மனசைத் தேத்திக்கோ! ஒன் ஒடம்பு இருக்கற நிலமையில நீ ரொம்ப அலட்டிக்கப்படாது!” என்று ஒருவரும், “உன்னை பகவான் ஏன் தான் இப்படிச் சோதிக்கிறானோடி அம்மா!” என்று ஒருவரும், நடுங்கும் குரலில் இடுக்கோடு இடுக்காக “காயத்ரி நேத்திக்கு நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு பகவான் கிட்ட போய்ச் சேர்ந்துட்டாடி!” என்று ஒரு பெண்மணியும் அழுதுகொண்டே கூற, “ஐயய்யோ! நான் என்ன பண்ணுவேன்! காயத்ரி நீயும் என் தலையில மண்ணை அள்ளிப் போட்டுட்டியா?” என்றலறிய கங்கா அப்படியே வெட்டுண்ட மரம் போல் சாய்ந்தாள். அவள் உடல் துவண்டது. சுற்றியிருந்தோர் தாங்கிப் பிடித்தனர். ஆங்காங்கே களைப்பில் படுத்துக் கிடந்த எல்லோரும் பதறி எழுந்தனர். அந்த அதிகாலையில் அவ்வீடு அவலக்குரலொலியால் நிரம்பியது.

பெற்ற குழந்தை பறி போனது கூடத் தெரியாமல் கிடந்த அவள் பிறவியை எண்ணி; வருந்துவதா? அவள் நிலை இனி என்ன ஆகுமோ என எண்ணிக் கலங்குவதா? இம்மட்டோ அவள் துயரம்! என்று மேலே எழுதப் பேனாவே நடுங்குகிறது. அது முதல் ஒவ்வோர் ஆண்டும் காயத்ரி மறைந்த கார்த்திகைத் திருநாளன்று ஒரு புதுப் பாவாடை, சட்டை தைத்து, நைவேத்தியம் செய்து யாராவது ஏழைப் பெண் குழந்தைக்கு அவளைக் காயத்ரி என்று நினைத்து, அதைக் கொடுப்பது கங்காவின் வழக்கமாயிற்று.

 

கங்கா ஒரு காவியம் -4

இப்போது குமரேசன் என்ற ஆலமரத்தின் கீழ் தங்கி இளைப்பாறும் ஆவினங்களாக வந்துத் தம் துயர் நீங்கிச் சென்றவர்கள் அனேகம். குமரேசன் பலரைப் போல் வாழ்க்கையென்ற பாதையில் முன்னேற ஆரம்பித்ததும், தன்னை நம்பியவர்களை மறந்து தருக்கு நடை போடவில்லை. மாறாகக் கதிர் முற்ற முற்றத் தலை சாய்க்கும் நெற்கதிரைப் போலத் தன் பெருமை அதிகரிக்க அதிகரிக்க மேலும் அடக்கம் நிறைந்தவனாக அன்பு அதிகரித்தவனாக, அருள் பொருந்தியவனாகத் தர்மவானாகத் திகழ்ந்தான். கங்கா அவனுக்கு அனைத்திலும் துணையாய் நின்றாள். அவர்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் கங்கா தான் அரசி. அவள் சொல்லே வேத வாக்கு. அவள் தீர்ப்பே முடிவான ஒன்று. இருபத்தொரு வயது இளமையிலேயே கங்கா ஒரு மா பெரும் நிறுவனத்தைப் போன்ற அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கச் சரியான தேர்ச்சி பெற்றுவிட்டாள். திண்ணையிலேயே படுத்துப் பொழுது போகாமல் குழந்தைகளை ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கும் மாமனார், தம் நிழலில் தங்கித் தங்களையே குறை கூறி வாழும் உறவினர்க் கூட்டம், வேறு கதியில்லாமல் இக்குடும்பமே சரணாகதியென்று வந்து தங்கி உழைத்து உதவும் ஏழை உறவினர்களின் குடும்பங்கள், அந்தத் தெருவிலுள்ள இளம் பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சரணாலயமாகத் திகழ்ந்தது. கங்காவின் புதிய பெரிய வீடு.

அந்தக் காலத்தில் மக்கள் பண்டிகைகளைக் கொண்டாடிக் களித்த விதமே தனி. தொலைக் காட்சியை மையமாகக் கொண்டு நடைபெறும் இன்றைய பண்டிகைகளின் காகிதத் தோரணங்களை மட்டுமே கண்டுவரும் நமக்கு அன்றைய கோலாகலங்களைச் சொன்னால் கூடப் புரியுமா என்று தெரியவில்லை. அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பண்டிகையும் ஒரு திருவிழா போலவே நடைபெறும். தீபாவளி வருகிறதென்றால் பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே அண்டா அண்டாவாகப் பட்சணங்கள் நிரம்ப ஆரம்பித்துவிடும். தெருப் பெண்கள் அனைவரும் கங்கா மாமி ஆத்தில் ஒன்று கூடிக் கை முறுக்கு சுற்றவும், தேன் குழல் பிழியவும், சோமாசிக்கும், ரவா உருண்டைக்கும், பொருள் விளங்கா உருண்டைக்கும், அதிரஸத்திற்கும் உடைக்கவும் இடிக்கவும் சலிக்கவும் என்று அமர்க்களப்படும். அத்தனை பேருக்கும் கங்கா தான் தலைவி. பம்பரமாகச் சுழன்று அவரவர் காரியங்களிலும் தலையிட்டு மேற் பார்வை செய்து தேவையான கட்டளைகளை இட்டுக்கொண்டு, சுற்றிச் சுற்றி வரும் குழந்தைகளை விரட்டிவிட்டுப் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளின் தொல்லை தாங்காமல், “அப்படியே ஒரு நைவேத்தியம் பண்ணி அதுங் கையிலே திணிச்சுத் தொலை, இல்லாட்டாப் படுத்தி எடுத்துவிடும்” என்று சொல்லுவாள்.

அதே போல ஈஸ்வரார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்று ஒரு நைவேத்தியத்தை நீர் சுற்றிப் பிரார்த்தித்துச் செய்து முடித்து, “டேய்! இங்கேயே தின்னுட்டுப் போ! வேற யார்கிட்டேயும் போய்க் காட்டினியோ தோலை உரிச்சுடுவேன்!” என்று ஒரு மாமி மிரட்டிக் கொடுப்பார். கண்ணைக் கொட்டிக் கொட்டி அதைக் கையில் வாங்கும் குழந்தையோ வாயில் போட்டதை அப்படியே வைத்துக்கோண்டு கன காரியமாகத் தான் மட்டும் பட்சணம் வாங்கிச் சாப்பிட்ட பிரதாபத்தை ரகசியமாகப்பிரகடனப் படுத்த, அடுத்த நிமிடம் அங்கே பட்டாளமே பறந்து வந்துவிடும்.. ஆளாளுக்கு அவர்களைத் துரத்தியடிக்க அவர்கள் பதுங்கிப் பதுங்கி மீண்டும் எட்டிப் பார்க்க…என்று வருடா வருடம் நடைபெறும் இந்தச் சுவை குன்றா நாடகம், மிகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்து குறைந்து இப்போது கால மாற்றத்தால் இல்லாமலேயே போய்விட்டது. ஊம்! மேலே போவோம்.

அங்கு பட்சணம் செய்ய உதவும் அத்தனை பேருக்கும் அங்கேயே சாப்பாடு, காப்பி என எல்லா உபசரணைகளும் உண்டு. மேலும் பத்துப் பதினைந்து பெண்மணிகள் சேர்ந்த அந்த இடத்தில் ஊரிலுள்ள குடும்பக் கதைகள் எல்லாம் பேசி அலசப்படும். அப்படி அந்தரங்கமான பிரச்னைகள் அளக்கப் படும்போது இரண்டும் கெட்டான் வயதில் இருந்து கொண்டு காதைத் தீட்டிக் கதை கேட்கக் காத்திருக்கும் சின்னஞ் சிறுசுகளை, “நீங்களெல்லாம் குழந்தைகளை அழைச்சுண்டு சுந்தராம்பா கோவில்ல போய் விளையாடிண்டு இருங்கோ! யாராவது வந்து கேட்டா எல்லாப் பட்சணத்தையும் நீங்க தான் செஞ்சேள்ன்னு சொல்லிடறோம். இங்கேயே சுத்திச் சுத்திக் கதை கேக்காதேள் – போங்கோ! ஒரு குரல் கொடுத்தா ஓடி வந்துடணும் என்ன?”…என்று கூறி விரட்டி விட்டு விடுவார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் 4 கூடை, 5 கூடை என்று பட்டாசு வகைகள் ஒரு புறம் வந்து இறங்கும். துணி வகைகளை ஜவுளிக் கடைக்காரர் வீட்டில் உள்ளவர்களுக்கு, உறவினர்களுக்கு, கடை வேலைக்காரர்களுக்கு, வீட்டு வேலைக்காரிகளுக்கு, பரியாரிக்கு, தோட்டிக்கு என்று வகை வகையாக, ரக வாரியாக அடுக்கிக் கொண்டு வந்து பிரித்துக் காட்டி வீட்டு எஜமானியின் சம்மதத்தைப் பெற்ற பின்பு வீட்டுக் கூடத்தின் சுவரோரமுள்ள இரண்டு பெஞ்சுகளில் அடுக்கி வைத்துவிட்டுப் போவார்கள்.

கங்காவிற்கு வாங்க வேண்டிய புடவையை மட்டும் குமரேசன் தானே நேரில் ஜவுளிக்கடைக்குப் போய் செலக்ட் செய்தால் தான் அவருக்குத் திருப்தி. அவர் தேர்ந்தெடுத்த பத்துப் புடவைகளை ஓர் ஆள் தலையிலேற்றி வீட்டிற்கு அனுப்புp வைக்கச் சுற்றிச் சூழ்ந்த பெண்மணிகளுக்கும் தனது குழந்தைகளுக்கும் நடுவில் இருப்பவற்றில் தனக்குப் பிடித்தமான ஒன்று அல்லது இரண்டு பட்டுப் புடவைகளை கங்கா தேர்ந்தெடுப்பாள். அதன் பிறகு தெருப்பெண்மணிகள் படையெடுப்புத் தான். “அய்யோ! அப்போவெல்லாம் அந்த வீடு ஜே…ஜேன்னு ஒரே கூட்டமா, வரவாளும் போறவாளுமா எத்தனை கலகலன்னு இருக்கும் தெரியுமா?” கங்காவின் வயதான கண்களின்; மணிகள் சுடர்விட அக்காட்சியை அவள் விவரிக்கும்போது…! கேட்பவர்களுக்கும் அக்காட்சி கண் முன் விரியும்;.

“தீபாவளிக்கு முத நாள் ராத்திரி யார் தூங்குவா? குழந்தைகள் எல்லாம் எப்படா பொழுது விடியும்னு பாம்பு தலை தூக்கற மாதிரி தூக்கித் தூக்கிப் பார்த்துண்டே இருப்பா. வீடு பூரா அலம்பிக் கோலம் போட்டு, புதுத் துணிமணிகளையும், பட்சண வகைகளையும் பாந்தமா அடுக்கி, தீபாவளி மருந்தை ஒரு இலுப்ப சட்டி நெறைய மணக்க மணக்கக் கிளறி ஒரு பக்கமா வெச்சு, எண்ணெய் காய்ச்சி சீயக்கா அரைச்சு என்று வரிசையாச் செஞ்சுண்டே வரதுக்குள்ளே இடுப்பு ஒடிஞ்சுடும். வீட்டிலேயே அன்னிக்கு படுத்திருக்கும் வேலைக்காரி ராத்திரி ரெண்டு மணிக்கே எழுந்து கொல்லையிலே அடுப்பை மூட்டி வெந்நீர் போட ஆரம்பிச்சா போறும்…ரெண்டு மாடும் கத்த ஆரம்பிச்சுடும். கன்னுக்குட்டியை அவுத்து விட்டுப் பாலைக் கறந்து சுவாமி அலமாரிலே வெச்சுட்டுத் திரும்பிப் பார்த்தா எல்லா வாண்டும் கொட்டக் கொட்ட முழிச்சிண்டு நிக்கும் புதுச் சட்டைக்கும் பட்சணத்துக்கும்!! அந்தக் காலத்துல எல்லாம் வரு‘த்துக்கு ரெண்டு தரம் தான் துணி மணி வாங்குவா. எல்லாருக்கும் ஒரே மாதிரியாத் தான் எடுப்பா. இந்தக் காலம் மாதிரி நினைச்ச போதெல்லாம் துணியிலக் கொண்டு போய்க் காசைக் கொட்டுவாளா என்ன?” என்று கங்கா பேசிக் கொண்டே போவாள்.

“மணையில கோலம் போட்டு அதுல, ஒவ்வொருத்தரையா உக்கார வெச்சு அலுக்காம சலிக்காமக் கௌரி கல்யாணம் பாடித் தலையிலே ஒரு கை எண்ணெயை வைச்சுக் குளிக்க வெரட்டுவேன். அவாவா ஸ்நானம் பண்ணிட்டு வந்ததும் எல்லாத்தையும் வெச்சு பகவானுக்கு நைவேத்தியம் பண்ணி கிருஷ்ணா! கிருஷ்ணான்னு கற்பூரம் காட்டி புது டிரஸ்ஸை அப்பா கையால எடுத்துக் கொடுத்துக் கட்டிக்கச் சொல்லி ஸ்வீட்டை வாயில ஊட்டி விட்டு, வரிசையா எல்லாரும் நமஸ்காரம் பண்ணி நாங்க ரெண்டு பேரும் அவாளை ஆசீர்வாதம் பண்ணுவோம். நான் மருந்துப் பாத்திரத்தைக் கையில எடுத்தா எல்லாம் சிட்டாப் பறந்துடும்” என்று கூறிக் குலுங்க குலுங்கச் சிரிப்பாள்.

குமரேசன் எழுந்ததுமே நேராக வாசலில் போய் முதலில் ஒரு புஸ் வாணத்தைத் தன் கையால் ஏற்றிப் பொங்கிப் பூரித்து வர்ணக் கோலமாகக் கொட்டும் ஒளியைப் பார்த்து ரசிப்பார். கங்கா வீட்டு வெடிச் சத்தம் கேட்டுத் தான் எல்லோர் வீட்டு வாயிற் கதவுகளும் திறக்கும். அன்று மதியம் வரைக்கும் எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து நமஸ்கரித்து ஆசிகளையும் பட்சணங்களையும் தீபாவளி மருந்து ஒரு உருண்டையும் வாங்கிச் செல்வார்கள். அன்று கடைக்கு லீவு. எல்லாப் பணியாளர்களுக்கும் அந்த வீட்டில் தான் சாப்பாடு. இட்லி பலகாரம், காப்பி எல்லாம். சற்றே நினைத்துப் பாருங்கள்! ஐந்து பந்திக்குச் சாப்பாடு, பலகாரம், காப்பி! எத்தனை வேலைகள் நடக்கும்! அத்தனைக்கும் எவ்வளவு உழைப்பும் கவனமும் தேவைப்படும்! இது தான் அந்தக் கால இந்தியக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கை முறை. ஓவ்வொரு சம்சாரி வீட்டிலும் இந்தக் கதை தான்! கூட்டுக் குடும்பம் தான்! ஒன்று சேர்ந்த வாழ்க்கை தான்! இவற்றை எல்லாம் நினைத்துத் தான் பார்க்க வேண்டும்.

இதே விதத்தில் தான் நவராத்திரி அமர்க்களம் ஒரு விதமாகவும் பொங்கல் கோலாகலம் வேறு ஒரு விதத்திலும் அந்த வீட்டில் ஓஹோ வென்று நடக்கும். அதிலும் குமரேச அய்யர் ஆத்துல நடக்கும் நவராத்திரி கொலு பற்றி 50 -60 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏன் இப்பொழுதும் கூடக் காரைக்காலில் பழைய தலை முறையினர் பழைய ஞாபகத்தில் பேசிப் புகழ் மொழி கூறுவதை நீங்களும் அங்குப் போனால் கேட்கலாம்.

ஊர் மெச்ச எல்லாம் கோலாகலமாக நடந்தாலும் இவ்வளவு கொண்டாட்டங்களுக்கும் இடையில் அந்த வீட்டில் இருந்த உறவினர் கூட்டங்களால் ஏதாவது பிரச்னைகள் எழுந்த வண்ணமிருக்கும். குமரேசனின் தம்பி குடும்பமும் அவர்களது குழந்தைகளும் கங்காவின் அக்கா பாருக்குட்டியின் மகனும் மருமகளும் அவர்களது குழந்தைகளும், அத்தைகள் இரண்டு பேர், அத்தை பாட்டிகள் என்று ஏராளமான அங்கத்தினாpடையே கங்காவின் இல்லறப் படகு எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் வலிமையான ஓர் ஆணின் தோள்களில் ஏராளமான குடும்பச் சுமைகள் ஏற்றப்பட்டு அவனை அழுத்திக் கொண்டிருக்கும். hய்க்கின்ற மனைவி அவனது அதிர்ஷ்டத்திற்கேற்பக் கெட்டிக்காரியாக மணம் குணம் அறிந்து நடப்பவளாக இருந்தால் அந்தக் குடும்பம் எப்படியோ எல்லாவற்றையும் சமாளிக்கும். அந்த ரீதியில் கங்கா நடந்து கொண்டதால் அக்குடும்பத்தில் எழும் பூசல்கள் உடனுக்குடன் பைசலாக்கப்பட்டு விடும். படிப்பறிவு அறவே இல்லாவிட்டாலும் கேள்வி ஞானமும் பெரிய குடும்பத்தின் சீரிய வளர்ப்பும் அவளைக் கொண்டு செலுத்தின. எது எப்படியென்றாலும் தங்கள் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லையே, எல்லாம் கங்காவின் கையை எதிர்பார்த்தே செய்ய வேண்டியிருக்கே! என்ற குறுகுறுப்பு அந்த உறவுகளில் சிலருக்குள் இருக்கத்தான் செய்தது.

முதலில் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தாலும் சீதாவிற்கும் ராமேஸ்வரனுக்கும் பிறகு இரண்டு வருடங்களுக்கொரு முறை கங்காவிற்குப் பிரசவம் என்பது வாடிக்கையாயிற்று. கங்கா பெற்றதும் கொஞ்சமல்ல் வாரி விட்டு வாடி நின்றதும் கொஞ்சமில்லை.

“இந்தப் பாழும் வயிற்றில் 18 குழந்தைகளைச் சுமந்தேன். அதில ரெண்டு ரெட்டை! எல்லாத்தையும் பெத்துப் பெத்து எமனுக்குத் தாரை வார்த்தேன். ஒரு ரெட்டை ஒண்ணாகவே போய்ச் சேர்ந்தது. கடைசியாப் பிறந்த ரெட்டையில் ஒண்ணு தான் என் கடைசிப் பிள்ளை” என்று கங்கா புலம்பிக் கூறும்போது அதைக் கேட்பவர் மனதில் திகைப்பும், பதினெட்டு குழந்தைகளா! என்ற வியப்பும் ஆலயம் போல் எதிரில் நிற்கும் கங்காவைக் கண்டு மதிப்பும் எழுந்து கை கூப்பச் சொல்லும்.

கங்கா ஒரு காவியம் -3

எதையுமே உணராத  கருணையற்ற  காலச் சக்கரம்  இரு முறை  சுழன்றது. பலரது அறிவுரைகளை  ஏற்றுக் குமரேசனும் கங்காவும் இராமேஸ்வரம் சென்றனர். தேவி பட்டினம், நவ பாஷாண தீர்த்தத்தில் நாக சாந்தி செய்தனர்.  இராமேஸ்வரத்தில்  இருந்த எல்லாப் புண்ணியத் தீர்த்தக் கிணறுகளிலும் மந்திர உச்சாடனங்களுடன் நீராடிக் கடைசியில் அக்னி தீர்த்தமான கடலிலும் சாஸ்திரிகள் சொற்படி 108 தடவை கைகளைப் பற்றியபடி ஒன்றாக ஸ்நானம் செய்து, தம் குலம் விளங்கக் குழந்தைப் பேற்றினை, தங்கித்   தழைத்துவாழும் படியான  மழலைச் செல்வத்தை நல்கும்படி வேண்டினர்.  பல்வேறு தானங்களை முகம் கோணாமல் வாரி வாரி வழங்கி  வானுயர்ந்த கோவிலிலே தானுயர்ந்து நின்ற இராமநாதரைக் கண்டு கண்ணீர் மல்கித் தம் குறையைக் கூறி முறையிட்டனர்.  தேவர்கள் குறை தீர்த்த தீஞ்சுடராம் கந்தனின் தந்தை இவர்களுக்கும் அருள் பாலித்தான்.

line2

“குவா! குவா!” என்று மண்ணில் நாம் பெண்ணாய் வந்து பிறந்து விட்டோமே! எண்ணிலாத் துன்பங்கள் தொடருமே இப்பிறவியில்!’ என எண்ணியது போல் முதல் குரல் கொடுத்து அழுதது அக் குழந்தை. “பொண்ணு பொறந்திருக்குங்க ஐயா!” மருத்துவச்சியின் அறிவிப்பைக் கேட்டுப் பொண்ணா! ரொம்ப சந்தோ‘ம்! என்றான் குமரேசன். கங்காவின் முகத்தைச்சுருங்கச் செய்த சொல்லே குமரேசனுக்குத் தேனாக இனித்தது.
அன்றைக்கு ஓட்டலில் சாப்பிட்டவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கப்பட்டது. குழந்தைக்கு சீதா லஷ்மி என்ற பெயரிட்டுக் கண் போல் காத்து வளர்த்தனர்.  இரண்டு ஆண்டுகளுக்குள் அடுத்துப் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. தாங்கள் ராமேஸ்வரம் சென்று வந்த நினைவின் நன்றியாகக் தம் கருத்தில் சதா குடி கொண்டிருக்கும் இறைவனின் திரு நாமத்தை அந்தக் குழந்தைக்குச் சூட்டினர். சீதாலஷ்மியும் ராமேஸ்வரனும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.

அக்கால வாழ்வில் தான் எத்தனை எளிய எழில்முறை விரவிக்கிடக்கிறது! பக்தி வயலாம் இப் பாரத மண்ணின் மக்கள் சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும் இறைவனோடு இணைந்து வாழ்ந்தனர். அவர்களின் வாழக்கையின் ஒவ்வொரு சின்னச் செயல் கூட இறையுணர்வோடு கூடியதாக அமைந்திருந்தது.  சதா சர்வ காலமும் இறைவனை நினைக்கத் தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தம் இஷ்ட தெய்வங்களின் பெயர்களைச் சூட்டி உளமாற அழைத்து மகிழ்ந்தனர். அதனால் மண்ணை விட்டு மறையும் தருவாயிலும் மகேஸ்வரன் நினைவு வரா விட்டாலும் ராமா! என்றும் கிருஷ்ணா! என்றும் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை அழைத்து அதன் மூலம் உய்வடைந்தனர். ஆனால் இன்றோ, வாயில் நுழையாத, பொருளேதும் புரியாத ஏதேதோ பெயர்களை வைத்துக் கூப்பிடுகின்றனர். காரணத்தை மறந்த காரியமாக இது நடைபெறுகின்றது.
line2
காலச் சக்கரம் மேலும் பல முறை சுற்றிச் சுழன்றது. இப்போது குமரேசனின் குடும்ப அளவு பெருகியிருந்தது. பணம் சேர்ந்தது போலவே உறவினர் கூட்டமும் சேர்ந்தது.  ஆரம்பத்தில் ஓட்டலின் பின் புறத்தையே தன் வீடாகக் கொண்டு வாழ்ந்த குமரேசன் இப்போது ஒரு பழைய வீட்டைப் பாதி விலைக்கு வாங்கி அங்குக் குடியேறினான்.  கடையில் கங்கா செய்த வேலைகளைப் பல ஆட்கள் செய்தனர்  பம்பரம் போல் சுழன்று பணியாற்றிய கங்கா இப்போது சாட்டையாக இருந்துப் பிறரை வேலை வாங்கினாள்.  அதில் ஓர் அன்பும், அந்நியோன்யமும். அரவணைப்பும், தாராள மனப் பான்மையும் ஊடும் பாவுமாக இணைந்து பிறரைக் கட்டின.  இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்யத் துhண்டின. அவள் காட்டிய சுறுசுறுப்பும் விரைவும் அவர்களையும் பற்றிக்கொண்டன.  வியாபாரம் பெருகியது.  அவர்கள் நிலை உயர்ந்தது.
line2
ஓம்!  ஓம்! எனக் கோவில் மணி முழங்கிற்று. அதன் ஒலி மாலைத் தென்றலின் உதவியுடன் நான்கு புறங்களிலும் தவழ்ந்து சென்று ஊர் மக்களை, “இறைவனை வழிபட வாருங்கள்!” என அழைத்துத் திரும்பியது. மடந்தையரும் மங்கையரும் கரங்களில் எண்ணெய்க் கிண்ணம், அர்ச்சனைத் தட்டு, மலர்க் கூடை போன்றவற்றை ஏந்தி இறைவனிடம் தங்கள் மனக் குறைகளைக் கூறத் தம் குழந்தைகளுடன் கோவிலை நோக்கிச் சென்றனர். மேலும் அன்றைய ஸ்பெ‘ல் சந்தனக் காப்பு அலங்காரத்தில் வண்டார்குழலி அம்மையைத் தரிசிக்கவும், திருமேனியழகருக்குச் சாத்தப்படும் அன்னப்பாவாடையின் அழகை ரசிக்கவும், விசேஷமாகத் தருவிக்கப்பட்ட நாதஸ்வரக் கச்சேரியைக் கேட்டு மகிழவும், அந்த ஊர் மட்டுமின்றி அக்கம் பக்கத்து ஊர் மக்களும் வண்டி கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர்.

திருவேட்டைக்குடி என்ற திவ்ய நாமம் பெற்ற அந்த ஊரில் நடைபெறும் நான்கு நாளைய மாசி மகப் பெருவிழா அந்த வட்டாரத்தில் வெகு பிரசித்தம்.  அர்ச்சுனன் சிவ பெருமானை அறியாமல் எதிர்த்துச் சண்டையிட்டுப் பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற இடம் இத் திருவேட்டைக்குடி.. திரு உரு பெற்று வந்து வேட்டையாடி விளையாடிப் பக்தனின் குறை தீர்த்து வரம் நல்கியதால் இவ்வூரின் பெயரே திருவேட்டைக்குடியாயிற்று.

அங்கு மாசி மகப் பெரு விழா நான்கு நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று தான் விடையாற்றி உற்சவம். அதனைத் தனது உபயமாக ஏற்று, மிக விமரிசையாக நடத்தித் தனது நன்னிலைக்குக் காரணமான திருமேனியழகருக்கு ஆண்டு தோறும் நன்றி செலுத்தி மகிழ்ந்தார் குமரேசன்.

thavilஅந்த மாலை நேரத்திலே அக்கோயில் திமிலோகப்பட்டது. கோயிலின் உள்ளே அம்மன் திருச் சன்னதிக்கு எதிரில் ஸ்பெஷ்லாகத் தருவிக்கப்பட்ட திருமலைராயன் பட்டினம் சகோதரர் நாதத்தை இனிமையாகப் பொழிந்து கொண்டிருந்தனர். தவில்காரருக்கு சன்மானம் அதிகமோ என்னவோ தெரியவில்லை, தவிலை வெளுத்துக் கட்டினார். அவர் அருகில் அரை நிர்வாணச் சிறுவர்கள் நின்று தம் காதுகளை ஒற்றை விரலால் அழுத்திக் கொண்டு அவரது குடுமி அவிழும் அழகையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தது  வினோதமான காட்சியாகத் திகழ்ந்தது.  வந்திருந்த மக்களில் பெரும்பாலோர் கண்களைமூடி மெய் மறந்து இசையில் இசைந்திருந்தனர்.

பிரகாரத்தின் மற்றொரு பக்கத்தில் ஒரு சிறுவர் குழாம் ராஜா விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களின் தர்பார் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோயில் வாயிலுக்கு அருகில் உள்ள இலவ மரங்களுக்கு அடியில் வில் வண்டிகளும், கட்டை வண்டிகளும் கிடந்தன. வைக்கோலை மேய்ந்தபடி காற்றில் கலந்து வந்த நாதஸ்வர இசையை ரசிப்பதுபோல விழிகளை மூடிக் கழுத்தை அவ்வப்போது ஆட்டி ரசித்த மாடுகளின் மணியோசை இடையிடையே மனோகர த்வனியை எழுப்பின. அப்பொழுது தான் வந்து நின்ற ஒரு வில் வண்டியிலிருந்து இரண்டு பேர் பூக்கூடைகளையும் சரஞ் சரமான மாலைகளையும் இரண்டு பெரிய நிலை மாலைகளையும் மெது மெதுவாக இறக்கிப் பூவைப் பூப்போல் தூக்கிக் கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அந்தப் பகுதியே மலர்களால் மணத்தது. கோவிலின் மற்றொரு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த பாயின் மேல் அமர்ந்து நிறைய பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடுவே நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே தண்மதி போல மகாலட்சுமி போன்ற தேஜஸுடன் வீற்றிருந்தாள் கங்கா. குமரேசனின் உழைப்பும் உயர்வும் அவளது காதுகளிலும் மூக்கிலும் வைரங்களாக ஜொலித்தன. அனைத்து நகைகளிலும் அரியதோர் அணியாக உதட்டில் உலவும் புன்னகையுடன் அன்பான சொற்;களால் அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தாள் அவள். அப்போது அங்கு ஓடி வந்த சிறுமியிடம், “சீதா! அர்ச்சனை ஆரம்பிக்கப் போறான்னு அப்பாகிட்டே போய்ச் சொல்லி கூட்டிண்டு வா!” என்றாள்.

ஊர்ப் பிரமுகர்களுக்கு இடையே அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்த குமரேசன் மகளின் குரல் கேட்டு எழுந்தார். அவர் எழுந்ததும் உடன் அனைவரும் எழுந்தனர். “நான் பிறந்து வளர்ந்து வாழ்க்கையைக் கற்றதே இந்தக் கோவிலில் தான். இத்தெய்வங்களைத் துhய்மைப் படுத்த இந்தக் கைகள் எத்தனை குடம் தண்ணீரைத் துhக்கியிருக்கு தெரியுமா? பகவானுக்குப் படைக்க மடைப்பள்ளியிலிருந்து எத்தனை வகை உணவுகள் தயாரித்திருப்பேன். என் உடம்பில் உள்ள சத்து இந்தக் கோயில் தந்தது தான்! எதோ இந்தத்  திருமேனிஅழகர் அருளால் தான் இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்” என உணர்ச்சியுடன் அவர் கூறியதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள்  மனம் உருகினர்.  ஆனால் குமரேசனின் மனமோ, எனது இந்த முன்னேற்றத்தி;ற்கு இறையருள் மட்டுமா காரணம்? எத்தனை துன்பம் வந்தாலும் அயராது ஏற்று ஈடுகொடுக்கும் கங்காவிற்கும் அல்லவோ இப்பெருமை! என்று பெருமிதத்துடன் எண்ணியது.

அன்று அக் கோயிலில் நடைபெற்ற பூஜையின் சிறப்பையும் அலங்கார அற்புதத்தையும், அள்ளி வைத்த பிரஸாதங்களின் அருஞ் சுவையையும், நீண்ட பிரகாரத்தின் இரண்டு வரிசைகளிலும் அமர்ந்து வயிறார உண்ட மக்களின் மன நிலையையும் அடுத்த வருஷ உத்சவம் வரையிலும் அந்த வட்டார மக்கள் வாயார சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.