எது வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்! என்னும் – அகமாற்றம் தேவை – 11

ஆன்மீகப் பயிற்சி பெறுவதற்கு முன், குருவின் உபதேசத்தால் இந்தப் பிறவியின் உண்மைத் தன்மையை அறிந்து தெளிவதற்கு முன், விஜயாவும் ஒரு சாதாரணப் பெண்ணாக, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு, அவற்றை எதிர்கொள்ளத் தெரியாமல் திக்கித் திணறி, அவஸ்தைப்படுகின்ற நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருருந்தாள். எப்படி நடந்துகொள்வது என்று பரியாத சூழ்நிலைகளில், எனக்கு ஏன் இப்படியெல்லாம் வருகிறது? என்று மனம் கலங்குகின்ற சந்தர்ப்பங்களில், சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் சம்பவங்கள் நிகழ்ந்து ஆட்டிப்படைக்கின்ற நேரங்களில், அறியாமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த அவள், தன்னையும் அறியாத ஒரு விதத்தில் தன் உள்ளத்திடம்தான் தஞ்சம் புகுவாள். அவள் உள்ளம் அந்த நேரங்களில் தனக்குள் இப்படிப் பிரார்த்தனை செய்யும்.

“இறைவா! என்னால் மாற்ற முடிந்தவற்றை மாற்றக்கூடிய வலிமையை எனக்குக் கொடு. என்னால் மாற்ற இயலாதவற்றை அப்படியே ஏற்கின்ற மனப்பக்குவத்தை எனக்குத் தா,” என்று இடையறாது செய்த இநதப் பிரார்த்தனைதான் அவளது கர்மாவை கழிக்க உதவியது என்பதை விட, அவள் நிலை குலையாமல் பொறுமையாகவும், அமைதியாகவும், செயல்பட இந்தப் பிரார்தனை உதவியது என்றே கூறலாம். உண்மையான பிரார்த்தனையின் பலன் அளவிட முடியாதது. இதைத் தான் ‘மலை போல் வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்’ என்று பாடி வைத்திருக்கின்றனர். நல்லவங்க ரொம்ப கஷ்டபப்டுவாங்க, ஆனா ஆண்டவன் ஒரு நாளும் அவர்களை கைவிட மாட்டான்! என்று புகழ் பெற்ற ஒரு நடிகர் வாயால் சாதாரண மக்களுக்கு இந்த உண்மை சொல்லப்பட்டது. இப்படியெல்லாம் சொல்லி ஒருவரை நல்வழிப்படுத்துவது எதற்காக என்றால், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சியில் முன்னேறி தன்னைப் பற்றிய உண்மைகளை அறிகின்ற மனப்பக்குவம் பெறுகின்ற வரை, அவனுக்கு வாழ்க்கையின் ரகசியங்கள் விளங்காது. மறை பொருளாய் அமைகின்ற வாழ்க்கை அவனுக்குள் ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும், அவமானங்களையும், தோல்விகளையும் தருகின்ற ஒன்;றாகத்தான் காட்சியளிக்கும்.

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்! நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தான் எத்தனை எத்தனை வேதனைகள்! எதிர்பார்ப்புக்கள்! விருப்பு, வெறுப்புகள்! இன்ப துன்பங்கள்! உறவுகளால் ஏற்படுகின்ற மனபாதிப்புகள்! இவை ஏற்படுத்திய மன உளைச்சல்களும், தவறான சிந்தனைகளும் தான் எவ்வளவு? இப்படி பல உணர்ச்சிகளால் அலை பாய்கின்ற மனம், அகங்காரத்துடன் சேர்ந்துகொண்டு பிழையாகச் சிந்திக்க முற்படும்போது ஒருவனை பிழையாகச் செயல்படத் துாண்டுகிறது. அகங்காரம், அதிகாரத்துடன் செயல் பட வைக்கும். மாறாக இறைவனிடம் தஞ்சம் புகுகின்ற மனம், நல்ல குணங்களுடன் செயல்பட வைக்கும். அத்தன்மையால் மனம் சஞ்சலப்பட்டாலும், கண்கள் கண்ணீர் வடித்தாலும் எனக்கு ஏன் இந்த நிலை? என்று வருந்தினாலும் இப்படிப்பட்டவர்கள் பிழையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது அவரவர் வாழ்க்கையை அவரவரும் தங்கள் மனக்கண்முன் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்குப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், இது தான் உறவுகளின் தன்மை என்பதைப் புரிந்துகொண்டு நிலமையை ஏற்றுக்கொள்ளாதவரை அவர்களுக்கு மன உளைச்சலும், உடல் நோயும் தீராது. கணவன், மனைவியரிடையே ஏற்படும் பிணக்குகள், அதிக ஆசைகளும் , நீயா நானா என்ற போட்டி மனப்பான்மையும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலையும், முக்கியமாக அகங்காரமும் தான்; இவற்றிற்குக் காரணம். இவர் அல்லது இவள் எனது கர்மாவினால் ஏற்பட்ட உறவு. இது இப்படித்தான் இருக்கும்; குறையோ நிறையோ இந்தப் பிறவியில் இனி இதனுடன் தான் என் வாழ்க்கை என்ற எண்ணத்தை வலுவாக மனதில் ஏற்படுத்திக்கொண்டு, எப்படி இருந்தாலும் சரி என்று அந்த உறவை ஏற்றுக்கொண்டு, அதன் தன்மைக்கேற்பவோ அல்லது சரி, பிழையை அஞ்சாமல் எடுத்துச் சொல்லி, அன்பை கைவிட்டுவிடாமல் வாழவோ முற்பட்டால், அங்குப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றை எப்படியும் சமாளிக்க முடியும். காரணம் அங்கு, ஏற்கின்ற மனப்பக்குவம் இருப்பதுதான். மாறாக வறட்டு கௌரவம், அதிக ஆசை, எதிர்பார்ப்பு, போலித்தனம், வெளிவேஷம், பொய்யான மதிப்பு, தான் என்னும் அகம்பாவம், புரிந்துகொள்ளாத தன்மை போன்ற குணங்களுடன் நடந்துகொள்ள முற்படுபவர்களுக்கு உண்மை நிலை என்னவென்பதே புரியாது. உன் ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தில் ஓங்கித் திருப்பி அடி! என்ற விதத்தில் தான் நடந்துகொள்ளச் செய்யும். எதிர்த்துச் செயல்படும் மனதில் கோபமும், கொந்திப்பும் ஏற்படும். வார்த்தைகள் கடுமையாக வெளிப்படும். செயல்கள் ஆக்ரோஷத்துடன், மற்றவரைப் புண்படுத்தும் விதத்தில் இருக்கும். விளைவு பகையும, பிரிவும் தான்.

இப்போது புரிகிறதா? எதிர்த்து நிற்கின்றபொழுது நிம்மதியின்மை! நிலைகுலைவு! சம நிலை இழத்தல். பகையும், விரோதமும்! ஏற்றுக்கொண்டு செயல்படும்போது, அமைதி, நிதானம், பொறுமை, அன்பின் வளர்ச்சி! ஓருவரையொருவர் புரிந்துகொள்ளும் நிலை! ஓன்றை நாம் உடனடியாக ஏற்கின்றபொழுது, அந்த இடத்தில் ஓர் இசைவுத் தன்மை ஏற்படுகின்றது. ஓன்றை நாம் எதிர்கின்றபொழுது அங்கு உடனே உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாகின்றது.

வருகின்ற எல்லாவற்றையும் ஏற்க முடியுமா? அது முடியாது. கர்மாவும, ஆசைகளும் இடையில் நின்று நம்மை இயக்கும். அவற்றிற்கு நாம் உட்படும்போது நமது செயல்கள் தாறுமாறாக போய்விடும். எனவேதான் நான் முன்பக்கத்தில் கூறிய மன உளைச்சல்களும், நிம்மதியின்மையும் நமது வாழ்க்கையை நரகமாக்கிக் காட்டுகின்றன. அடேயப்பா! அந்த சமயங்களில் இந்த மனம் படுத்தும் படும் பாடு இருக்கின்றதே! எல்லாமே தலைகீழாக மாறிக் காட்சியளிக்கும். உண்மைத் தன்மையும், தன்மீது உள்ள பிழையும் அப்போது எங்கேயோ ஓடி ஒளிந்துவிடும். ஆனால் பிறகு தன் மனமே தன்னை குறை கூறும். அதன் பின் ஏது நிம்மதி? இதற்கெல்லாம் காரணம், அறியாமை தான்.

Oh! Father! they don’t know. What they are doing! என இயேசுநாதர் கூறியதாக எங்கள் குரு எங்களிடம் அடிக்கடி இந்தச் சொற்றொடரைச் சொல்வார். ஞானம் பெறுவதற்கு முன், குருவைச் சேர்ந்து அவரிடம் ஞான உபதேசம் பெற்று, அறியாமை இருள் அகலும் வரை, வாழ்க்கையின் சூட்சமங்கள் ஒருவருக்குப் புரிவதில்லை. வாழ்க்கை என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? இந்த வாழ்க்கை எனக்கு ஏன் தரப்பட்டிருக்கிறது? எனக்கு மட்டும் இப்படிப்பட்ட உறவுகளும் குடும்பமும், மனைவி, பிள்ளைகளும் அமையக் காரணம் என்ன? என் பிறப்பின் உண்மையான நோக்கம் என்ன? போன்ற கணக்கிடமுடியாத கேள்விகளுக்குச் சரியான பதில்களை ஒருவர் உண்மையான ஒரு குருவைச் சந்தித்து, ஞான உபதேசம் பெற்ற பிறகுதான் அறிந்துகொள்ள முடியும். அதுவரை கர்மா தான நம்மை மனம், புத்தி வாயிலாக இயக்கிக்கொண்டிருக்கும். கர்மா என்றால் என்ன? என்பதே தெரியாத நிலையில் படும்பாடுகளைத் தாங்க இயலாமல், கோவில், குளம், ஜோசியம், பரிகாரம் என்று சொல்பவர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் செய்து பார்க்கின்ற நிலை ஏற்படும். இவை அத்தனையும் செய்த பின்பாவது மன அமைதி ஏற்பட்டு பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்றால் இருக்கின்ற பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கும், எதுவும் தீராது.

இந்த நேரத்தில் பூர்வ புண்ணிய பலனால், அல்லது நல்லவர் சேர்க்கையால், அல்லது செய்வதறியாத உள்ளம், இறைவன் என்ற சக்தியிடம் என்னைக் காப்பாற்று என்று பரிபூரணமாகச் சரண் புகுவதால் தான்; நிதானமாகச் செயல்பட்டுச் சிக்கலை விடுவிக்க முடியும். உள்ளத்தின் தேடலும், தவிப்பும் அதிகரிக்க, அதிகரிக்க இறைவனின் கருணை அங்கு வெளிப்படும். ஏனெனில் தன்னால் படைக்கபட்டது தன்னிடமே வந்து சேர வேண்டும் என்பது தான் பரம் பொருளின் விருப்பம். ஆசை வயப்பட்ட மனம் அனுபவிக்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கும் அவன், துன்பப்படும்போதும் அகங்காரத்துடன் அவன் செயல்பட்டால் உதவுவதில்லை. மகா பாரதத்தில் பாஞ்சாலி செய்ததைப்போல், பூரண சரணாகதி அடைந்து அவனது கருணையை வேண்டினால் மட்டுமே உதவுவான்.

அப்பொழுதும் மந்திரத்தால் மாயம் நிகழ்வதில்லை. கர்ம வினைப்படி நடப்பவை நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் தன்னை சரணடைந்தவரை அவன் ஒரு குருவிடம் கொண்டு சேர்ப்பான். யாரை சந்தித்தால் மனதில் ஒரு தெளிவு ஏற்படுமோ, யாரைச் சந்தித்தால் மனதின் கொந்தளிப்பு அடங்குமோ, யாரை சந்தித்தபின் பிறகு கர்மபாதிப்பு மனதை தாக்காமல் செயலிழக்குமோ, யாரை சந்தித்தால் ஒருவனது அறியாமை நீங்கி ஞானம் பெறுகின்ற நிலை ஏற்படுமோ, அவர் தான் அவனது குரு.

அப்படிப்பட்ட பிரம்மத் தொடர்பு கொண்ட, குரு பரம்பரையில் சேர்ந்து ஞானம் பெற்ற, சமுதாய மேம்பாட்டிற்காக மட்டுமே தம் வாழ்வை அர்ப்பணித்த அந்த பரம ஞானியே, ஒருவனது கர்ம பந்தத்தை அறுத்தெறிந்து, அவனை ஞானத்தின் மூலம் அமைதியும் ஆனந்தமும் பெறச் செய்ய முடியும். அநேக ஜன்மங்களில் ஏற்பட்ட கர்ம பந்தங்களால் ஏற்பட்ட துன்பங்களும், தோல்விகளும் தான் இன்றைய வாழ்க்கை. இவை எல்லாமே நான் நானாகத் தேடிக் கொண்டவையே. இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு ஞானம் பெற வேண்டும். ஞானம் பெற்றால்தான் உண்மையான உண்மை என்ன என்பது புரியும். அதன் பிறகுதான் பொய்யானவை எல்லாம் ஒருவனை விட்டு விலகும்.

அதன் பிறகு என்ன? அறியாமை என்னும் இருள், குருவின் ஞான வேள்வியால் அறவே நீங்கிவிட, அங்கு ஞானச் சூரியன் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். ஓளி தோன்றிய உடனேயே இருள் அகன்று விடும் என்பது நீங்கள் அறிந்ததுதானே! பிறகு எல்லாமே ஒளி மயம் தான். அமைதியும், நிறைவும், ஆனந்தமும் என்ற எனது இயல்பான நிலையை நான் அடைந்துவிட்ட பிறகு, வாழ்க்கை சுலபமாகிவிடும். இந்த நிலையை அடைவதற்கு முதற்படி, எது வந்தாலும் அதனை, எனது கர்மாவின் விளைவு இது: இதை நான் அருட்பிரசாதமாக ஏற்றுக்கொண்டு சரியான விதத்தில் செயல்படுவேன்! அஞ்சமாட்டேன்! எதிர்கொள்வேன்! என்ற திட சித்தத்துடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செயல்படும் அகமாற்றம் தான்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s