“ஆன்மீகம் வேண்டும்” என்ற அகமாற்றம் தேவை – 15

“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்று சுசீலாவின் இனிய குரலில் ஒரு பாடல் மிக அருமையாக வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்த எனக்குள் அந்த வரிகளின் ஆழமான பொருள் சிந்தனையைத் துாண்டியது.

இந்த மனம்தான் எவ்வளவு விசித்திரமானது!. எவ்வளவு அற்புதமானது! எவ்வளவு முரண்பாடுகளைக் கொண்டது! ஒரு கணமாவது இந்த மனம் எதையுமே நினைக்காமல் சும்மா இருந்திருக்கிறதா?

போன கதைகளைப் பற்றி நினைத்து வருந்தாமல் வரப்போகின்ற நிகழ்வுகளைப்பற்றிக் கனவு காணாமல் இப்போது செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றியும் நான் செய்வது சரியா அல்லது பிழையா? என்று குழம்பிக் கொண்டிருக்காமல் இந்த மனம் சும்மா இருந்திருக்கிறதா?

துாங்கும் போதும் எதையாவது ஒன்றைச் செய்யும் போதும் எதுவுமே செய்யாமல் சும்மா இருக்கும்போது கூட ஓயாமல் எதையாவது ஒன்றைப்பற்றி மனதில் ஏதோ ஒரு எண்ணம் அல்லது பல எண்ணங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றதே தவிர இந்த மனம் எப்போதாவது சும்மா இருந்திருக்கிறதா?

இந்த மனம் ஏன் இப்படி சதா அலைகடல்போல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது? “பொன்னியின் செல்வன்” என்ற புகழ் பெற்ற சரித்திர நாவலில் “பூங்குழலி” என்ற படகோட்டிப் பெண் பாடுகின்ற ஒரு பாடல் அடிக்கடி என் நினைவில் ஒலிக்கும்.

“அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?”

ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கிறேன். இந்த அகக்கடல் என்றாவது ஓய்ந்திருக்கிறதா? ஊஹூம்! “இல்லை” என்ற பதில்தான் வருகிறது. எப்போதிலிருந்து இந்த மனம் இப்படி ஓயாமல் சிந்திக்கத் துவங்குகிறது என்று யோசித்தால் எப்பொழுது ஆசை என்ற உணர்வு ஒருவனது எண்ணத்துள் எழத் துவங்குகின்றதோ அப்பொழுது முதல் இந்த மனமும் அலைபாயத் துவங்கிவிடுகின்றது என்ற உண்மை புலப்படுகிறது.

நாம் சிந்திக்கத் துவங்காத வரையில் இந்த வாழ்க்கை ஒரு விதத்தில் அது போகிற போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. திடீரென்று ஒரு நேரத்தில் ஏன் இப்படி நடக்கிறது? அப்படி ஏன் நடக்கவில்லை? என்று ஒரு யோசனை தோன்றும்போது திடுக்கிடுகிறது. அந்த கணத்தில் தான் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டதுபோல் அறிவு சிந்திக்கத் துவங்குகிறது. அப்பொழுதுதான் அதுவரை வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையின் அவலங்கள் புலப்படுகின்றன. எவ்வளவு அறியாமையில் சிக்கி ஒன்றும் புரியாமலேயே எதைப்பற்றியும் யோசிக்காமலேயே செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்ற உண்மை பளிச்சிட்டுச் சுடுகிறது.

அந்த உண்மை புலப்படும் பொழுது தான் நான் அறிவின் வழி சென்று வாழவில்லை, ஆசையின் வசப்பட்டு வாழ்ந்திருக்கின்றேன்! இந்த ஆசைகளின் விளைவாகத்தான் இந்த மனம் அமைதி இழந்து அலை பாய்ந்து தவித்திருக்கிறது என்பதும் புரிகிறது.

இந்த ஆசை என்பது என்ன? என்று இப்போது ஆராய வேண்டும். முற்பிறவிகளில் நான் விரும்பிய எனது விருப்பங்கள் நிறைவேறாத நினைவின் ஏக்கங்களாக என் ஆழ் மனதில் படிகின்றன. அந்தக் கர்மப் பதிவுகளே எனது இந்தப் பிறவிக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன. அந்த எனது ஆசைகளுக்கு ஏற்றபடி எனது குலம், தாய் தந்தையர், உடன் பிறந்தவர்கள், உறவுகள், சூழ்நிலைகள் எல்லாம் அமைகின்றன.

இப்படி உள்ளத்தில் உறைந்திருக்கும் ஆசைப் பதிவுகள்தான் மனதில் எண்ணங்களாக உருவாகின்றன. அந்த எண்ணங்களை நிறைவேற்ற நான் செயல்படுகின்றேன்’ ஓடியாடித் திரிகின்றேன். இப்படிச் செய்யப்படும் இந்த செயல்கள் எனக்கு நிறைவையும் நிம்மதியையும் தருகின்றனவா என்று பார்த்தால் தருவதில்லை என்ற பதில் தான் பெரும்பாலும் வருகின்றது.

இந்த நிலையில் எனது செயல்கள் எனக்கு நிறைவையும் நிம்மதியையும் தருகின்றன என்று ஒரு சிலர் மட்டும் உறுதியாகக் கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் யார்? என்று உற்று நோக்கினால் அப்பொழுது மீண்டும் ஒரு உண்மை வெளிப்படுகின்றது.

நிம்மதியிழந்து அல்லலுற்று அவதிப்பட்டு அலைபாய்ந்து துன்புறுவதாகவே சதா புலம்பிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவில,; இந்த வாழ்க்கை சுகமாக இருக்கிறது. நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது. எனக்குக் கஷ்டங்களும் பிரச்னைகளும் இருக்கின்றன என்றாலும் அவை என்னை பாதிப்பதில்லை என்று புன்னகையுடன் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் யார்? இவர்களால் மட்டும் எப்படி இவ்வாறு சொல்ல முடிகிறது? பெரும் பணக்காரர்களால் இந்தப் பதிலை சொல்ல முடிவதில்லை. பெரும் சாதனையாளர்களால் இப்படிக் கூற இயலுவதில்லை. உலகப் புகழ் பெற்ற எவராலும் இதை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. ஆனாலும் இப்படி ஒரு பதிலைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் “ஆன்மீகவாதிகள்” என்பது தெரியவரும்.

ஆன்மீகவாதி என்றவுடன் பூஜை, புனஸ்காரம், மந்திர தந்திரங்கள், அகத்தாய்வுப் பயிற்சியாளர்கள் என்றெல்லாம் அர்த்தங்களைத் தேடி ஓடக்கூடாது. பெரும்பாலும் ஆன்மீகம் என்ற சொல்லே சமுதாயத்தில் அலர்ஜி உண்டாக்கக்கூடிய ஒரு சொல்லாக அர்த்தம் கொள்ளப் படுகிறது. இது பிழை. இதனைப் பிழை என்பதை விவரிக்கப் போனால் நம்மை அது வேறு எங்கோ இழுத்துக் கொண்டு போய்க் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே இதை விடுவோம்.

உண்மையில் ஆன்மீகம் என்பது ஆன்மாவாகிய தன்னை அறிந்து அந்த அறிவால் தெளிந்து வாழ்வது. அவ்வாறு வாழ்பவர்கள் ஆன்மீகவாதிகள். அவ்வளவுதான்! இந்த ஆன்மீகவாதிகள் தான் நான் நிம்மதியாக நிறைவுடன் வாழ்கிறேன் என்று மகிழ்வுடன் கூறுகின்றனர். இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது எப்படி?

ஆதிகாலத்திலிருந்தே மனிதனுக்குப் போராட்டங்கள் துவங்கி விட்டன. அவற்றை வென்றுதான் மனிதன் வாழ்ந்தான். அப்படி வாழக்கூடிய முறையை நம் முன்னோர் அறிந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கை தர்ம வாழ்க்கையாகவே அமைந்திருந்தது. ஆனால் எப்பொழுது ஆசை என்ற உணர்வு உள்ளத்தில் தலை துhக்கியதோ அப்பொழுதே அதன் துணைக் குணங்கள் எல்லாமும் உள்ளத்தில் குடிபுகத் துவங்கிவிட்டன. அதனால் துன்பம் என்பது தொடர் கதையாயிற்று. இந்த நிலையில் ஆன்மாவை அறிந்து வாழ்ந்த தர்ம வாழ்க்கை மெல்ல மெல்ல மறைந்து போயிற்று. ஆன்மீக வாழ்க்கை என்பது நடைமுறையிலிருந்து விலகி வேறான ஒன்றாகத் தனியாக்கப்பட்டு விட்டது.

நாளடைவில் தான் வாழ வேண்டிய ஆன்மீக அற வாழ்க்கையை மறந்த நிலையில் எல்லாம் ஒன்று என்ற உண்மையை மறந்த நிலையில் மனிதன் அறியாமையில் வாழத் துவங்கினான் அந்த வாழ்க்கை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தன்னை அறிவதற்காகவென்று வைக்கப்பட்ட மனமென்னும் கருவி ஆசையின் நிலைக்கலனாயிற்று. அலை பாயத் தொடங்கியது. இந்த நிலை அந்த கருவிக்குத் துயரத்தைத் தந்தது. எனவே அது தன் இயல்பாகிய அமைதியையும் நிம்மதியையும் தேடி அலைய ஆரம்பித்தது. அது தான் இன்றைய மனித வாழ்க்கை!

இந்த நிலையில் ரிஷி பரம்பரை என்ற ஒரு பாரம்பரியம் காலங்காலமாகத் தொடர்ந்து இந்த சனாதன தர்ம நெறியைப் பற்றி, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை முறை பற்றி, எப்படி வாழ்ந்தால் நிம்மதியாகவும் நிறைவாகவும் ஆனந்தமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக சமுதாய நன்மைக்காக என்றும் வாழ முடியும் என்பதை மிக அருமையாக எடுத்துச் சொல்லிக்கொண்டே வருகிறது.

அந்த ரிஷி பரம்பரையில் வருபவர்கள் தன்னலமற்றவர்கள், தமது வாழ்க்கையைச் சமுதாய விழிப்புணர்ச்சிக்காக அர்ப்பணித்தவர்கள். தனி மனிதனின் ஆளுமையை மறுசீரமைப்பு செய்பவர்கள். தன்னை அறியாமல் தவித்து வாழ்ந்து கொண்டிருப்பவனைத் தடுத்து நிறுத்தி அவனை யாரென்று அவனுக்கே உணர்த்தி இனி அவன் வாழ வேண்டிய விதம் பற்றிய ஞானத்தைத் தாய்போல் எடுத்துரைத்து நன்மை சேர்ப்பவர்கள்.

தாகம் எடுத்தவன் தண்ணீரைத் தேடி அடைவதைப் போல் தன்னை அறிய விரும்புபவன் அல்லது தன் மனம் படுத்தும் பாடு தாளாமல் தவிப்பவன். இப்படிப்பட்ட ரிஷி பரம்பரையில் வந்த குருவை அணுகி அவர் கூறுகின்ற உபதேசங்களை நன்றாகக் கேட்டு அங்கு நடைபெறுகின்ற உரையாடல்களில் தனது அறியாமையை அறவே நீக்கித் தன்னை யாரென்றும், தான் வாழ வேண்டிய முறை எப்படி என்றும் தெரிந்து கொண்டால் அதன் பின் அவன் ஆன்மீகவாதியாகத் தன்னை உணர்கின்றான்.

அந்த ஆன்மீகவாதியின் மனம் உபதேசத்தால் பெற்ற ஞானத்தால் விழிப்படைந்து அமைதி பெறும். சும்மா இருக்கும் சுகத்தை அந்த மனம் அறியும். அலை பாயாது. அகக்கடல் பொங்காது. வாழ்வில் தனக்கு ஏற்படும் பிரச்னைகளை அவனால் அமைதியாக எதிர்கொள்ள முடியும். உரிய தீhவுகளைச் சரியான முறையில் எடுக்க முடியும். தான் எடுத்த முடிவு பிழையாகிப் போனால் அதையும் அமைதியாக ஏற்க அவனால் முடியும்.

இப்படி நம்மை நாம் புரிந்துகொண்டு, சமாளிக்க முடியாதவற்றைக் கூடச் சரியாகக் கையாண்டு நமக்கு வருபவற்றை ஏற்றுக்கொண்டு நிறை வாழ்க்கை வாழ்வதே ஆன்மீகம் வேண்டும் என்னும் அகமாற்றத்தால் ஏற்படும் விளைவு ஆகும்.

Advertisements

“எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்” என்ற அகமாற்றம் தேவை – 14

சாதாரண மனித சுபாவமே பிறர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுதான். நம் வீடுகளில் ஏற்படுகின்ற ஒவ்வொரு சிறு உரசல்களையும் தகராறுகளையும் சண்டை சச்சரவுகளையும் உற்று நோக்கி ஆராய்ந்தால் அதில் பின்னணியாக இருப்பது இந்த எதிர்பார்ப்புத்தான்! “நான் நினைத்தது மாதிரி நீ நடந்துகொள்ளவில்லை” என்று ஒருவர் தன் மனைவியிடம் கூறினார். “அதைத்தான் நானும் சொல்ல நினைக்கிறேன்” என்று அவள் பதிலுக்கு முணுமுணுத்தாள். ஒருவர் பிறரிடம் ஒன்றை எதிர்பார்க்கின்ற பொழுது அந்த ஒன்றை நாம் பிறருக்குத் தருகிறோமா? என்பதை யோசிக்க வேண்டும்.

“பிறர் உனக்குக் கொடுக்க வேண்டுமென்று விரும்புவதை எல்லாம் நீ அவர்களுக்குக் கொடு” என்று கூறினார் ஸ்ரீ ரமணர். ஆனால் நாமோ “பிறர் தான் நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், எல்லாம் செய்துகொண்டே இருக்க வேண்டும்” என்று விரும்புகிறோமே தவிர “நாமும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும், அப்படி அவர்களும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள்” என்ற எண்ணமே நம்முள் எழுவதில்லை.

“அந்த வீட்டுக்கு மனுஷன் போவானா? வா! என்று கூப்பிடக்கூட வழி தெரியாதவர்கள்”! என்று சிலர் உரத்த குரலில் கூறுவர். வீட்டிற்கு வருபவர்களை முகம் மலர்ந்து கைகூப்பி “வாங்க! வாங்க! என்று அன்புடன் வரவேற்க நாம் முற்பட்டால் பிறகு நாம் செல்லுமிடமெல்லாம் இதே வரவேற்பு நமக்கும் கிடைக்கும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கிறது?

“தன்கையே தனக்குதவி” என்று கூடுமானவரை நம் செயல்களை நாமே செய்துகொள்ளப் பழகினால் எதற்கெடுத்தாலும் பிறரை எதிர்பார்க்கத் தேவையில்லை. அதோடு பிறருக்கும் நாம் முன்வந்து உதவிகளைச் செய்ய வேண்டும்கேட்காமலேயே ஓடிச்சென்று உதவுபவர்கள் மிக உயர்ந்த குணமுடையவர்கள்.கேட்ட பிறகு செய்பவர்களைப் பரவாயில்லை என்று சொல்லலாம். அப்படி கேட்டப் பிறகும் உனக்குச் செய்யவா நான் இருக்கிறேன்? இப்போ என்னிடம் வந்து கேட்பதற்கு நீ எனக்கு என்ன செய்தாய்? என்றெல்லாம் பேசுபவர்களை என்ன சொல்வது? சில சமயம் உதவி செய்யக்கூடிய நிலையில் நாம் இல்லாமல் இருக்கலாம். அப்பொழுது தெளிவாக நம் நிலையை எடுத்துக் கூறினால், பூசிமெழுகாமல் கௌரவம் பார்க்காமல் வெளிப்படையாகப் பேசினால் வந்து கேட்பவர் புரிந்து கொள்வார். அந்த இடத்தில் உறவு பாதுகாக்கப்படும்.

ஒருவர் நம்மை அலட்சியப்படுத்துவதும் அல்லது அறியாமையால் பிழையாகச் செய்து விடுவதும் நிச்சயம் நமக்குப் புரியும். நம்மை அலட்சியப்படுத்துபவர்களை நாமும் அலட்சியப்படுத்தி விடலாம். அறியாமையால் பிழைபட நடந்தால் அதைப் பொறுத்துக்கொண்டு “இதோ பார்! இதை இப்படிச் செய்ய வேண்டும்! நீ இப்படிச் செய்தாய்! இது பிழை!” என்று நல்ல வார்த்தைகளால் அன்பாக எடுத்துச் சொல்லிச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். அப்பொழுது அவர்களுக்குத் தமது பிழை தெளிவாகப் புரியும். அதனால் உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி அந்தப் பிழை ஏற்படாமல் எப்பொழுதும் கவனத்துடன் நடக்க முற்படுவர். மாறாக அவர்கள் தான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் கோபமும் வெறுப்பும் கொண்டு தாறுமாறாகப் பேசினால் பிறகு அங்கு உறவில் விரிசல்தான் ஏற்படுமே தவிரப் பிழை உணரப்படமாட்டாது.

பிறருக்கு நாம் செய்வதுதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். “அவர் என்னிடம் இப்படி நடந்து என்னைப் புண்படுத்திவிட்டார் என்று மனதிற்குள் புழுங்குவதைவிட, பிறரிடம் இதைப்பற்றித் தரக்குறைவாகப் பேசிப் புலம்புவதை விட அல்லது அவரிடமே, நீ அறிவிருந்தால் இப்படிச் செய்வாயா? நீ மனுஷனா அல்லது மிருகமா? என்றெல்லாம் கடுமையாகப் பேசிச் சூழ்நிலையைச் சிக்கலாக்குவதை விட மனதை அமைதிப்படுத்திக்கொண்டு அவர் ஏன் அப்படிச் செய்தார்? அல்லது அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்?”. என்று கேட்கும் பக்குவம் நம்மிடம் இருக்க வேண்டும். அது முடியாது என்று தோன்றினால்,
“ஆற்றுந் தனையும் பொறுக்க’ பொறாக்கால்
துாற்றாதே துார விடல்”
என்றபடி, அப்படிப்பட்டவரை விட்டு அறவே விலகிச் சென்று விடுதல் நல்லது.

யாராலும் நம்மை ஒரேயடியாகக் கொண்டாடவும் முடியாது. யாராலும் நம்மை ஒரேயடியாக அவமானப்படுத்தவும் முடியாது. எல்லாமே நம் மனப்பிரமை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எப்பொழுதுமே அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தான் தரும். இதற்கு வாழ்க்கையில் எத்தனையோ நடைமுறை நிகழ்ச்சிகளை உதாரணமாகக் கூறிக்கொண்டு போகலாம். ஆனால் எதையுமே எதிர்பார்க்காமல் கிடைப்பதை ஏற்றுக்கொள்ளப் பழகினால் அல்லது தனது தேவை இது என்பதை ஆவேசமில்லாமல் உணர்த்தினால் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை அவர் மிக அருமையாகச் செய்து தருவார். அதனால் நம்மீது அன்புகொண்ட அவருக்கும் திருப்தி’ பெற்றுக்கொண்ட நமக்கும் திருப்தி.

நமது எல்லாச் செயல்களிலுமே எதிர்பார்ப்பு அடிப்படையாக இல்லாமல் அன்பு அடிப்படையாக அமைந்துவிட்டால் அது இரண்டு மடங்காக நம்மிடம் திரும்பி வரும். ஆம்! இது உண்மை!

அன்புதான் நம் படைப்பின் சாரம். நமக்குள் இருப்பது அன்பு. நாம் தேடுவதும் அன்பைத்தான். நாம் கொடுக்க விரும்புவதும் பெற விரும்புவதும் அன்பையே! இந்த அன்பு முழுமையாக வெளிப்படும்போது அது ஆவலுடன் ஏற்கப்படுகிறது. அந்த முழுமையான அன்பில் எதிர்பார்ப்பும் இல்லை, ஆகவே ஏமாற்றமும் இல்லை.

இப்படி நம்மை நாம் அன்பானவர்களாக மாற்றிக்கொண்டு அன்பின் அடிப்படையில் மற்றவர்களுடன் பழகத் தொடங்கினால், அன்பை விரும்பும் அவர்களும் கிடைக்கின்ற அன்பை ஏற்றுக்கொண்டு அதையே திருப்பி நமக்குத் தர முன்வருவார்கள். இங்கு எதிர்பார்க்கப்படுவது அன்பு. வழங்கப்படுவதும் அன்பு. எனவே இங்கு ஏமாற்றம் எழுவதில்லை.

அப்படியே நமது அன்பு அவர்களால் புரிந்துகொள்ள முடியாமற் போய் விஷமாகத் திரும்பி வந்தால் கூட, “இது என் கர்மா! அவரது கர்மாவின் காரணமாக என் அன்பைப் புரிந்துகொள்ள அவரால் இயலாமற் போகிறது. பரவாயில்லை! எல்லாம் அவன் செயல்!” என்று மேலும் பொறுமையாக நாம் நடக்க முற்படவேண்டும்.

இப்படிப் பிறரையும் நம்மைப் போலவே நினைத்துத் தன் நிலையிலேயெ பிறரையும் வைத்துப் பார்த்துப் புரிந்து பழகிச் செயல்பட்டால் நாம் எதிர்பார்ப்பது நிறைவேறும்’ ஏமாற்றமும் ஏற்படாது.

அப்படியே நாம் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போனாலும் அந்த ஏமாற்றத்தை அப்படியே அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். இதற்குத் தேவை, அகமாற்றம் மட்டுமே!

“இதுவும் கடந்து போகும்” என்ற -அகமாற்றம் தேவை – 13

இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பாடல் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். முன்பு எப்போதோ கேட்ட ஞாபகம் வருகிறதா என்று பாருங்கள்.
“நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? இல்லை
எனைக் கேட்டு என் பிள்ளை பிறந்தானா?”
நன்றாக யோசித்துப் பார்த்தால் இந்தப் பாடல் வரிகளில் எவ்வளவு பெரிய உண்மை ஒளிந்திருக்கிறது என்பது தெரிய வரும்.
“என் அப்பா அம்மா சரியில்லை!”
“என் தலை எழுத்து எனக்கு இப்படி ஒரு புருஷன்”
“தேடித்தேடி நான் பேயைப் பெண்டாட்டியாக் கட்டி இருக்கேன்”
“இப்படி ஒரு தறுதலையா எனக்குப் பிள்ளையா பிறக்கணும்?”
“இந்த வீட்டில் பிறக்காமல் வேறுஎந்த வீட்டிலாவது நான் பிறந்திருக்கக்கூடாதா?”
“நான் இந்தியாவில் ஏன் பிறக்கவில்லை? இந்த நாட்டில் பிறந்து இப்படி அவதிப்படுகிறேனே!”
இப்படி எத்தனையோ உரையாடல்களை எத்தனை எத்தனையோ விதங்களில் நாம் கேட்டிருக்கிறோம். நாமே கூட பலவாறாகச் சொல்லி இருக்கிறோம். அல்லது நினைத்தாவது பார்த்திருக்கிறோம். ஆனால் மிக ஆழமான உண்மை என்னவென்றால் நாம் கேட்டுத்தான் இந்தப் பெற்றோரும் சுற்றமும் ஊரும் சூழலும் கல்வியும் தொழிலும் செல்வச்செழிப்பும் மக்கட்செல்வமும் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதுதான்.

போன பிறவியில் நாம் எதற்கெல்லாம் ஆசைப்பட்டோமோ, எப்படி எல்லாம் நடந்துகொண்டோமோ அதற்கு ஏற்பத்தான் அந்த ஆசைகளே எண்ணங்களாகி அந்த எண்ணங்களே கர்மப்பதிவுகளாக நமது ஜீவனில் பதிந்து இந்தப் பிறவியை நமக்குத் தந்திருக்கின்றன. என்ன! நான் சொல்வதை ஒப்புக்கொள்ள உங்கள் மனம் மறுக்கிறதா? இதோ இந்த உதாரணத்தின் மூலம் இது புரிகிறதா? என்று பாருங்கள்.

ஒரு கம்யூட்டர் விஞ்ஞானி ஒரு ரோபோவை உருவாக்குகிறார். இந்த ரோபோ என்னென்ன வேலைகளை எல்லாம் செய்யும் என்று அதற்கென ஒரு திட்டம் தயார் செய்து அதை மிகச் சிறிய “சிப்” வடிவில் அதன் உள்ளே பதித்துத் தேவையான உபகரணங்களை இணைத்துப் பொருத்திக் குறிப்பிட்ட வருடங்கள்வரை செயல்படும் என்ற உத்திரவாதத்துடன் அதை இயக்கிக் காட்டுகிறார். வியக்கத்தக்க பல செயல்களை அது செய்கிறது. அச் செயல்களுக்கு மூல காரணம் அதன் உட்பகுதியில் பொருத்தப்பட்ட அந்த “சிப்”.

இதே விதத்தில் தான் இறைவன் என்று நாம் சொல்கின்ற பிரம்மன், போன பிறவியில் நாம் செயல்பட்ட தன்மைக்கேற்ப அதன் எதிர் விளைவுகளாக நிறைவேறாத ஆசைகளையும் சேர்த்துக் கர்மப்பதிவுகளை ஆதாரமான “சிப்” பாக வைத்து இந்த நமது பிறவியை வடிவமைத்து அனுப்பியிருக்கிறார்.

அதன்படி நமது கர்மாவிற்கு ஏற்ப நமது பெற்றோரும் மற்ற எல்லாமும் நமக்கு அமைந்திருக்கின்றன. நமக்குக் கை முதலாகத் தரப்பட்ட இந்த ஆதாரங்களை வைத்துத்தான் நாம் வெற்றிகரமாக நமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும்.

என் குருநாதர் அடிக்கடி சொல்லுவார். “சீட்டாட்டத்தில் ஜெயிக்கக் கூடிய கார்டுகளை வைத்து விளையாடி ஜெயிப்பதில் என்ன திரில் இருக்கிறது? மிக மோசமான ‘கார்ட்ஸ்’ வந்தாலும் அவற்றை வைத்துக்கொண்டே அற்புதமாக விளையாடி ஜெயிப்பவன் தான் கில்லாடி” என்று.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? ஐயோ! எனக்கு அது சரியில்லை. இது சரியில்லை. அவன் சரியில்லை. இவன் சரியில்லை என்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கிறோமே தவிர நான் சரியாய் இருக்கிறேனா? என்று என்னை நான் ஆராய்ச்சி செய்வதில்லை. எல்லோரும் நம்மை அனுசரித்துப் போக வேண்டும் என்று தான் விரும்புகிறோமே தவிர நாம் பிறருக்கு எவ்வளவு இடைஞ்சல்களைச் செய்து கொண்டிருக்கிறோம என்று ஒரு நொடியாவது யோசித்திருக்கிறோமா? அப்படி யோசிக்க நமக்கெல்லாம் ஏது நேரம்? அறியாமையும் அவசரமும் படபடப்பும் ஆசைகளும் தானே நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

வெளியிலேயே மனதையும் புலன்களையும் பறக்க விட்டுக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் நிறுத்தி அமைதியாக ஆற அமர நிதானமாக ஒவ்வொரு செயலையும் யோசித்து மனதிறகுச் சரியென்று பட்டதை மட்டும் செய்து கொண்டு போக முற்பட்டாலே பாதிப்பிரச்னை இல்லாமற் போகும். நமது கர்மாவால் நமது வாழ்க்கை பல்வேறு பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற நிலையில் இப்போது போய்க்கொண்டிருக்கலாம். எதுவுமே சரியில்லாமல் தலையைப் பிய்த்துக்கொள்கின்ற நிலையில் போவதாக அமைந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றை நிதானப்படுத்தப்பட்ட மனதுடன் எதிர்கொண்டால் ஓரளவிற்குச் சமாளிக்கலாம்.

அட! இந்த மனம் தானே சரியான பாதிப்பை அடைந்து என்னைத் துளைத்தெடுக்கிறது. நிம்மதி இழந்து தவிக்கிறது. இந்த நிலையில் எப்படி அமைதிப்பட்ட மனதுடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும்? என்று பதட்டமாக நீங்கள் கேட்பது புரிகிறது.

“பதறாத காரியம் சிதறாது” என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே! ஒன்று நம்மை மீற் நடந்து விட்டால் ஏன் பதற வேண்டும்? ஏன் அப்படியே துடிக்க வேண்டும்? அமைதியாய் எதிர்கொள்ள நம்மால் முடியவே முடியாதா? எனக்கு எது நடக்கிறதோ அது எல்லாமே எனது கர்மாவால் தான் நடக்கிறது என்ற உண்மையை நாம் முதலில் மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு செயலுக்குமே ஒரு எதிர்ச் செயல் உண்டு. Every action has a reaction என்று விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது.

நாம் கவனமாகப் படிக்காவிட்டால், தேர்வில் தோல்விதான் நான் மிக அக்கறையுடன் உழைக்காமல் சோம்பினால் வேலையில் கிடைப்பது தோல்விதான். அன்பு செலுத்திக் குடும்பம் நடத்தாமல் அதிகாரத்தில் கொண்டு போனால் அங்கு சம்சாரத்தில் தோல்வியே. விட்டுக் கொடுக்காத தன்மை சச்சரவில்தான் சென்று முடியும்.

அகங்காரமும் சுயநலமும் கெட்ட சிந்தனையும் குடும்பப் பிளவில் தான் முடியும். போட்டியும் பொறாமையும் பொய்யும் பேராசையும் சந்தேகமும் பயமும் கீழ் நிலைக்குத்தான் கொண்டு தள்ளும்.

இதையெல்லாம் நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? காலையில் கண் விழித்ததிலிருந்து மீண்டும் இரவு படுக்கைக்குப் போகும் வரையில் முறையாக சரியாக நாம் செயல் படுகிறோமா? மாறாக மிருகங்களைப் போலத் தோன்றியபடி எல்லாம் மனதிற்கும் புலன்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமின்றி இஷ்டத்திற்குச் செய்து கொண்டு போகிறோம். புத்தி சரியானதைச் செய்யும்படி சொல்லிக் கொண்டே இருக்கும். மனமோ உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளிக்கும். அப்படி அந்த நிலையில் மனம் சொல்வதை ஏற்றுப் புலன்கள் செயல்படும்.

வயிறு வேண்டாம், வேண்டாம் என்று கூப்பாடு போட்டாலும் மனதில் எழும் ஆசை காரணமாகக் கை, வாய் வழியாக விருப்பமான உணவு என்று உள்ளே தள்ளிக் கொண்டே தானே இருக்கிறது?

கண் துாக்கத்தில் சொக்கினாலும் பாதி இரவு வரை தொலைக்காட்சித் தொடர்களை விடாமல் பார்ப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? புத்தி சொல்வதை மனம் கேட்டு அதன்படி புலன்கள் இயங்கினால் கர்மாவை வெல்லலாம் என்பது எத்தனை பேருக்குப் புரிகிறது?

“தர்மோ ரக்ஷதி ரக்ஷது” என்று பகவத்கீதையில் கண்ணன் சொல்லியிருப்பதாக என் குருநாதர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். “தர்மத்தை நீ காப்பாற்றினால் அந்த தர்மம் உன்னைக் காப்பாற்றும்” என்பது இதன் பொருள். அப்படியென்றால் என்ன?

எது சரியோ அதைச் சரியான முறையில் நீ செய்து கொண்டே போனால் அப்படி நீ செய்கின்ற செயலே உன்னைக் காப்பாற்றும், உயர்த்தும். இதையே வேறுவிதமாகப் பார்த்தால் நீ எதைச் செய்கிறாயோ, அதைப் பெறுவாய்! அப்படியென்றால் நீ நல்லதைச் செய்தால் நல்லதைப் பெறுவாய், தீயவற்றை அல்லது பிழையானவற்றைச் செய்துகொண்டு போனால் தீமையும் தோல்வியும் தான் திரும்பக் கிடைக்கும். மனக்கஷ்டமும் பண நஷ்டமும் குற்ற உணர்ச்சியும் தான் மிஞ்சும்.

நான் நல்லதையேதான் செய்பவனாக இருக்கிறேன். சரியானதைத் தவிர வேறு எதையுமே செய்வதில்லை என்று சொல்கிறீhகளா? அதுவும் சரிதான். நீங்கள் சரியென்று நினைத்துச் செய்வது பிழையாய்ப் போய்விடுகின்றதே! நல்லதைச் செய்தாலும் மற்றவருக்கு அது கெட்டதாகத் தெரிகின்றதே என்று பார்த்தால் இங்குதான் நமது கர்மா செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில், “உப்பு விற்கப் போனேன் – மழை பெய்தது! மாவு விற்கப் போனேன் – காற்றடித்தது! என்று பாடுவார். நம்மையும் மீறி இப்படி நடந்தால் இது என் கர்மாவால் எனக்கு நேரிட்டது என்று புரிந்துகொண்டு அதை நாம் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் முற்பிறவியில் விட்ட பிழை இப்பொழுது இப்படி என்னைத் திருப்பித்தாக்குகிறது அல்லது அறியாமையால் சரியாகச் சிந்தித்துச் செயல்படாததால் ஏற்பட்ட நிலை என்று நினைத்து, எல்லாம் அவன் செயல் என்று வருவதை பிரசாதமாக ஏற்க வேண்டும். அதற்காகத் துன்பப்படுவதையும் புலம்புவதையும் பழிவாங்கப் புறப்படுவதையும் விட்டுவிட்டு அமைதியாக வருவதைத் தாங்கிக் கொண்டு அதைச் சீர் செய்ய என்ன வழி என்று சிந்தித்து மேலும் நல்ல விதமாக நடந்துகொள்ளப் பழக வேண்டும்.

இப்படிச் செய்தால் ஏற்கனவே இருக்கின்ற கர்மா அழிவதோடு மேலும் கர்மாவைக் கூட்டாத ஒரு நிலை ஏற்படும். இருந்த கர்மா கழிய மேலும் கர்மா அதிகமாகாமல் இருக்க அப்பொழுதுதான் நம்மால் பரிணாம வளர்ச்சியில் சில படிகள் முன்னோக்கிச் செல்ல முடியும்.

எனவே  வாழ்க்கையில் வருகின்ற இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை, இலாப நஷ்டங்களை (இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்) இதுவும் கடந்து போகும் என்ற மனப்பக்குவத்துடன் ஏற்றுச் சரியான விதத்தில் இவற்றிற்கு முகம் கொடுக்க முயல்கின்ற அகமாற்றம் நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை.