காதல் என்பது அன்பின் வெளிப்பாடே! என்ற-அகமாற்றம் தேவை

இன்றைய உலகத்தில் மிக மிகத் தவறான விதத்தில் பொருள் கொள்ளப் பட்ட இரண்டு சொற்கள் காதலும், கடவுளும் தான்! என்று குருஜி அடிக்கடி எங்களிடம் கூறிச் சிரிப்பார். யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது சரி என்றுதான் தோன்றுகிறது. காதலின் பெயராலும், கடவுளின் பெயராலும் இன்று மனிதன் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா! சொல்லவே முடியாது!

இன்றைய பொழுதுபோக்குகள் எல்லாமே இவை இரண்டைத்தான் அடிப்படையாக வைத்துக்கொண்டு நடைபெறுகின்றன. உலகத்தில் நடைபெறுகின்ற சண்டைகளும், சச்சரவுகளும், சாவுகளும் கூட இவை இரண்டின் காரணமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காதல் என்ற சொல் காமம் என்ற பொருளில் தான் பார்க்கப்படுகின்றதே தவிரக் காதலின் உண்மையான பொருள் இப்போது மறைக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்ட விதத்தில் தான் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணின் உடல் மீது கொள்ளப்படுவதே காதல் எனப்படுகின்ற நிலை இன்று நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு காதலர் தினம் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதுமே கொண்டாடப்பட ஆரம்பித்து விட்டது.

காதல் என்பது இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இடையே மலர்ந்து மணம் வீசுகின்ற ஓர் அற்புதக் கவிதை மட்டும் தானா? காதல் என்பதன் உண்மையான பொருள் என்ன? ஒரு தாய் தன் குழந்தைகளிடம் கொள்கின்ற காதல் பாசம் எனப்படுகிறது. ஒருவன் தன்னைச் சார்ந்தவர்களை நேசிக்கின்ற காதல் உறவு எனப்படுகின்றது. பொருள்களை மிகவும் விரும்புகின்றவனின் காதல் ஆசை எனப்படுகின்றது பக்தன் கடவுளிடம் கொள்கின்ற காதல் பக்தி
எனப்படுகிறது. ஒரு பணக்காரன் ஏழைகளுக்காகக் கண் கலங்கி அவர்களின் பணிக்காகவே தன்னை அர்ப்பணிக்கும்போது அது இரக்கம் எனப்படுகின்றது.
இயற்கையின் மீது ஒருவன் கொள்கின்ற காதல் அவனைக் கவிஞனாக்குகின்றது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவனின் உள்ளத்திலிருந்து தானாக ஊற்றெடுத்துப் பெருகி வரும் பேருணர்வே காதல்.

பரப்பிரம்மம் இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்கின்றபொழுதே காதல் என்ற உணர்வையும் படைத்து விட்டது. அதன் திருவிளையாடலின் சூட்சுமம் அதில் தான் அடங்கியிருக்கிறது. தனது படைப்பு ஒவ்வொன்றையும் அதி அற்புதமான விதத்தில் படைத்த பரம்பொருள், மனித மனதில் கலந்து வைத்த ஓர் உணர்வுதான் காதல். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்! என்று பாடினார் வள்ளலார். கரும்புத் தோட்டத்தில் என் சகோதரர்கள் வாடிச் சாகின்றார்களே! என்று கண்ணீர் விட்டு அழுதார் பாரதி. இவையெல்லாம் அவர்கள் உள்ளத்தில் ஊறிய காதலின் வெளிப்பாடே.

காதலுக்காக இயற்றப்பட்ட கவிதைகள் கோடிக்கணக்கில். அவை ஒவ்வொன்றுமே காதலின் பெருமையை, அதன் உயர்வை, விதவிதமாக எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன. ஆழமாக அதன் பொருளை ஆராய்ந்து பார்த்துக்கொண்டே போனால் கடைசியில் காதல் என்பது அன்பு அல்லது கருணை என்ற உணர்வில் சென்று முடிவது தெரியவரும். காதலின் எதிர்மறையான வெளிப்பாடு சந்தேகம், கோபம், வெறுப்பு, பொறாமை, கடுஞ்சொல், பகையுணர்ச்சி, சுயநலம் என்ற எல்லாக் கெட்ட குணங்களும் ஆகும். இவை அனைத்திற்கும் அடிப்படை அன்புதான். பால் திரிந்தால் விஷம் என்பதைப்போல் அன்பு தான் திரிந்து கெட்ட குணங்களாக மாறிவிடுகின்றது. காதலி ஏமாற்றிவிட்டாள் என்பது தெரிந்து எத்தனை பேர் எத்தனை விதங்களில் பழிவாங்கத் துடிக்கிறார்கள் என்பது தெரிந்த கதை தானே! இதைக் காதலர்கள் என்று மட்டும் பார்க்காமல் உறவுகள் அனைத்திலும் இந்தக் கருத்தைப் போட்டுப் பார்த்தால் எல்லா இடங்களிலும் இந்த உணர்வுகள் பீறிட்டு எழுவதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்தக் காதலினால் வெளிப்படும் நற்பண்புகள் அனுசரித்தல், பொறுமை, நிதானம், நம்பிக்கை, கருணை, பரிவு, அரவணைத்தல், விட்டுக்கொடுத்தல், கனிவான பேச்சு, ஓடிச்சென்று உதவுதல் என்று நீண்டு கொண்டே போகும்.
இது தான் நமக்கு உள்ளே இருக்கும் அன்பு என்னும் உயிர்ச் சக்தியின் பெருக்கம். அதன் வெளிப்பாடு. உயிரின் சாரம் அன்பு. அது சுயநலம் என்ற ஞானத்தால் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடைப்பை நீக்கிவிட்டால் அன்பென்னும் இன்ப ஊற்று பீறிட்டு எழும். அது தன்னைச் சேர்ந்த அத்தனை பேரையும் அரவணைக்கத் துடிக்கும். அதற்கு இந்தக் காதல் உணர்வு முதல் திறப்புக் கருவியாக உதவுகின்றது.

இவ்வுலகில் அவதரித்த மகான்கள் எல்லாம் தங்கள் ஒரே கொள்கையாகக் கடைபிடித்தது இந்த அன்பைத்தான். இயற்கை, அன்பினால் விளைந்த கருணையால் தான் பிரதிபலனை எதிர்பார்க்காமல் தன் கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறது. இப்படி மடை திறந்த வௌ;ளம்போல் பெருகக்கூடிய அன்பினை, வெறும் காதல் என்ற ஓர் உணர்வில் மட்டும் கொண்டு அடக்கி அதை வீணடித்தல் எத்தனை பிழை என்பது விளங்குகின்றதா? ஒரு குழந்தை சிறுவனாகி அந்தச் சிறுவன் இளைஞனாகின்ற பொழுது தான் அவன் சமுதாயத்திற்குள் நுழைகின்றான். இனி வாழ்க்கை என்ற மாயையை அவன் நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டும். மனித வாழ்வின் நோக்கமான ஆத்மாவே நான் என்பதையும் அந்த ஆத்மாதான் எல்லாப் படைப்புக்களின் உள்ளேயும் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அவன் அறிய வேண்டும். அப்படி அவன் இதனை நேரடியாக அறிய விடாமல் மாற்றிவிடக்கூடிய மாய வலைகளைத் தான் இறைவன் பல்வேறு விதங்களில் விரித்து வைத்து, அவற்றில் தன் படைப்பை விழச் செய்கிறான். இது தான் அவனது திருவிளையாடல். ஓர் இளைஞன் முதன் முதலில் சந்திக்கின்ற கவர்ச்சியான மாயை, பெண். யாரைப்பற்றியும் எந்தவிதக் கருத்தையும் பெரிதாகச் சொல்லாத இந்தச் சமுதாயம், ஓர் இளைஞன், ஓர் இளம் பெண் என்ற இரு இளம் தளிர்களைப் பற்றி மட்டும் ஏராளமான விஷமத்தனமான கருத்துக்களை ஊன்றி வைத்திருக்கிறது. கட்டுப்பாடுகள், கடுமையான கண்காணிப்புகள் என்று அவர்களை இயற்கையாக இயங்கவிடாமல் செய்து வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.

எது தடுக்கப்படுகிறதோ, அது மீறப்படும். எது அடக்கப்படுகிறதோ அதன் சக்தி பெருகும் என்பது இயற்கை விதி. இந்த நிலையில் சரியான வழி நடத்துதல் இல்லாத, சரியான குடும்பச் சூழ்நிலையும் அன்பும் பெற இயலாத இளைய சமுதாயம் ஒருவரையொருவர் ஈர்க்கின்ற நிலையில் படைக்கப் பட்டிருப்பதால், மிகச் சுலபமாக சமுதாயத்தால் உரம் போட்டு வளர்க்கப்பட்ட காதல் என்ற முட்புதரில் சென்று சிக்கி விடுகின்றது. அது அவர்களைப் பாதை மாற்றி, நெறிமாற்றிப், பண்புமாற்றி எங்கெங்கோ இழுத்துச் சென்று விடுகின்றது. பிறகு அதே சமுதாயம் அவர்களைப் பழி சுமத்தித் துhற்றி இளம் பருவத்திலேயே கருகச் செய்து விடுகிறது.

இந்நிலை மாறி அவர்கள், அந்த இளம் பருவத்தினா,; செழித்து வளர்ந்து நன்னிலையில் அவர்களது வாழ்க்கையை அமைக்க வேண்டுமென்றால், அதில் பெற்றோர்தான் முழு கவனத்துடன் செயல்பட்டுத் தமது அன்பால் அவர்களை அரவணைத்து, சரியான விதத்தில் அவர்களை வழி நடத்தி, முறையாகக் கண்காணித்து உதவ வேண்டும். முறையாகவும், அன்பின் அடிப்படையிலும் வளர்க்கப்படுகின்ற இளம் தளிர்கள் ஒரு நாளும் கருகுவதில்லை. அவர்கள் காதல் என்ற உணர்வைக் கொச்சைப்படுத்துவது மில்லை. அவர்களிடமிருந்து அன்பெனும் உயிர்ச் சக்தி முறையாக வெளிப்பட்டு, அகில உலகத்தையும் அணைத்துச் செல்கின்ற விதத்தில் ஆக்கப் பூர்வமாகச் செயல்பட முற்படுகின்றது. அவர்கள் சமூகத்திற்குப் பயனுள்ள பிரஜைகளாகப் பல நல்ல பணிகளில் தங்களை ஈடுபடுத்தி உயர்கின்றனர். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் காதலின் உட்பொருள் என்ன என்பது புரிந்துவிடும்.

இதுவரை நடந்தவை பற்றி விமர்சிப்பதை விட, இனி இயங்கவேண்டிய விதம் பற்றித்தான் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். நான் செய்ய வேண்டியது என்ன? என்று பார்க்கவேண்டும். நாம் இருக்கின்ற சூழ்நிலையை அன்பு மயமாக மாற்ற வேண்டும். நாம் வாழ்கின்ற விதத்தைத் தான் சிறுவர்கள் தங்கள் வாழ்க்கைக்குரிய பாடமாக எடுத்துக்கொள்கின்றனர். எனவே முதலில் பெரியவர்களாகிய நமது அஞ்ஞான இருள் அகற்றப்பட வேண்டும். நம்மில் அக மாற்றம் ஏற்பட வேண்டும். குடும்பச்சூழல் அன்புமயமாக மாற வேண்டும். அங்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சரியான விதத்தில் இலகுவாகப் பழகக்கூடிய மனப்போக்கு ஏற்பட வேண்டும். நன்னெறிகள் கடைப்பிடிக்கப் பட வேண்டும். ஈகோவால் செயல்படுகின்ற தன்;மை கைவிடப்பட்டு, அன்பினால் செயல்படுகின்ற தன்மை வளர வேண்டும். இந்நிலையை மிக முயன்றுதான் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்கின்ற இளைய சமுதாயம் இந்தக்காதல் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படும். எனவே அதிகாரம் நீங்கிய அன்பின் அடிப்படையில் குடும்பம்! என்று செயல்படும் அக மாற்றம் தேவை. இது தான் இந்தக் காதலர் தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய அகமாற்றம்.“ஆதலினால் காதல் செய்வீர்! ஜெகத்தீரே!” என்று பாரதி பாடிய பாடலின் பொருள் இப்போது விளங்குகின்றதா?

Advertisements