அர்த்தமற்ற சடங்குகள் களையப்பட வேண்டும் என்ற அக மாற்றம் தேவை

தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் ஒரு சகோதரி எழுதிய கடிதத்தைத் தற்செயலாக வாசிக்க நேரிட்டது. நமது தமிழ் சமூகத்தினர், குறிப்பாகத் தமிழ்ப் பெற்றோர் அவசியம் சிந்தித்துச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயமான கருத்து அது. ஆந்தக் கடிதத்தை முதலில் படியுங்கள்.

“புலம் பெயர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்னைகளில் சாமத்திய சடங்கும் ஒரு காரணியாக இருக்கிறது. ஒரு பெண் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்கப்படுவது அவள் பூப்பெய்தும் பருவத்தில் தான். இதுபற்றிய சரியான புரிந்துணர்வு பெற்றோரிடத்தில் இல்லை. இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சூழ்நிலையில் இச் சடங்கு அவசியந்தானா? நமது கலாச்சாரத்தில் சாமத்திய சடங்கு ஏன் இடம் பிடித்துக்கொண்டது?

இதைப்பற்றிப் பலரிடம் பேசிப்பார்த்தபோது இதற்குரிய மிகத் தெளிவான விளக்கங்களோ, கருத்துக்களோ இதுவரை எனக்குச் சரியான முறையில் கிடைக்கவில்லை. உப்புச் சப்பற்ற பொறுப்பில்லாத விடைகளாகவே எல்லாம் இருந்தன.

மிகவும் வருத்தமான விஷயம் என்னவெனில் அனேகப் பெண்களுக்கு இந்தப் பொய்யான திணிப்புகளின் போலி வடிவம் புரிவதில்லை. நாம் போலி கலாச்சாரத்தில் பொசுங்கிக்கொண்டிருப்பது பற்றிய பிரக்ஞையும் இவர்களுக்கு இல்லை.

உண்மையில் சாமத்தியச் சடங்கைக் கோலாகலமாக ஹால் (Hall) எடுத்து விழாவாகச் செய்யும் அனேக பெற்றோருக்கு இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. வீடியோ கமராவில் எடுப்பதற்கும் என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றவர் வீட்டைவிடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும், இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்ற போலி கௌரவத்திற்கும், கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்று கடன் கழிப்பதற்கும் போன்ற இன்னும் பல காரணங்களை மனதில் கொண்டுதான் பூப்படைந்த பெண்ணைக் காட்சி பொருளாக வைத்து இச்சடங்கு நடைபெறுகின்றது. இதற்குக் கலாச்சாரம், பண்பாடு என்று போலி முலாம் பூசப்படுகிறது, அவ்வளவுதான். இனியாவது தர்க்க ரீதியான காரணங்கள் எதுவுமற்ற இந்தச் சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா?” என்று இந்தக் கடிதம் முடிகின்றது.

இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒரு சமூக மாற்றம்தான் இது என்பது. நமது கலாச்சாரத்தில் பல பிழையான கருத்துக்கள் நமது அறியாமையால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.

அகமாற்றம் தேவை. விழிப்புணர்ச்சி வேண்டும் என்ற தாகம் கொண்டு இதுபோன்ற செயல்களின் காரணங்கள் யாவை? என்று தேடித்திரிபவர்கள் இத்தகைய அறிவூட்டும் கட்டுரைகளைப் படித்து மேலும் உங்களைச் சேர்ந்த நண்பர்களையும் உற்றார் உறவினர்களையும் படிக்கச் செய்து இவற்றின் கருத்துக்களைப் பற்றி விவாதித்து நமது சமூகத்தின் உயர்விற்கு உரமிட முயலுங்கள்.

இனி விஷயத்திற்கு வருகின்றேன். “சாமத்திய சடங்கு” என்றும் “பூப்பு நீராட்டு விழா” என்றும்’ “மஞ்சள் நீராட்டு விழா” என்றும் இன்னும் பல விதங்களிலும் அழைக்கப்பட்டு வரும் இந்தச் சடங்கு இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கடுகளவுகூடத் தேவையற்ற, கடுமையாகச் சொல்லப் போனால் அர்த்தமற்ற மூடத்தனமான ஒரு சடங்கு ஆகும். இது அறியாமையுடன் கூடிய ஆடம்பரச் சடங்கேயன்றி வேறு எதுவுமே இல்லை. இந்த உண்மையை ஏற்பதற்கும் ஏற்றுக் கடைப்பிடிப்பதற்கும் சரியான விழிப்புணர்வு தேவை.

ஆடம்பரத்தை விரும்பும் குடும்பங்களுக்கு மேலும் தூபம் இடுவதுபோல் தமிழ்த்தொலைக்காட்சித் தொடர்களும் மாயையை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களும் மிகுந்த பொருட் செலவில் கவர்ச்சியை மயக்கப் பொடியாகத் தூவிக் காட்டும் மஞ்சள் நீராட்டு விழாக் காட்சிகள் போதையூட்டி மக்களின் அறிவை மழுங்கடிக்கின்றன.

இதில் இன்றையத் தமிழ்க் குடும்பங்களின் ஆடம்பரம் எந்த அளவிற்குப் போயிருக்கிறதென்றால் தாய் நாட்டில் வாழ வழியின்றி அல்லலும் அவதியும் பட்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் துடித்து ஓடித் தப்பித்த இந்தத் தமிழ்ச் சமூகம் எந்தவிதப் பொறுப்புணர்ச்சியும் பிறர் நலம் பேணலும் இன்றி எப்படியெல்லாம் செயல்படத் துவங்கி விட்டது என்பதற்கு ஒரு சிறு சான்று இது. ஒரு சிறு பெண்ணின் பருவமாற்ற இயற்கை நிகழ்விற்கு ஒரு பிரம்மாண்ட வடிவம் கொடுத்து மாபெரும் அரங்கைப் பெரும் செலவில் ஏற்பாடு செய்து கார் பார்க்கிங் பகுதிக்குத் தனியாகப் பணம் கட்டி வெற்றிடமாக்கி அந்தச் சிறு பெண்ணைப் பருவ மங்கையாக உருமாற்றம் செய்து அப்பொழுதே மணமகள் என்ற உருவத்தை அவள் மனதில் ஏற்றி உலங்கு வானுர்த்தியில் அவளை வானத்துத் தேவதை போல் மண்டப வாயிலில் கொண்டு வந்து இறக்கி அனைவரும் மலர்மாரி பொழிந்து…மேலும் எழுதிச் செல்ல மனம் விரும்பவில்லை. உண்மையில் இது நடந்தது.

பணம்! அனைத்திற்கும் பணம் என்ற அளவுகோல்! இந்த ஆடம்பரம் தான் வாழ்க்கையா? இதன் எல்லை இது? இது இப்படியே இருக்கட்டும். இனி மூலத்திற்குச் செல்வோம். காரணங்களை ஆராய்வோம்.

ஆதிகாலத்தில் வாழ்க்கை வேறாக இருந்தது. வேத காலத்தில் சாமத்தியச் சடங்கு என்பது இருந்ததா? என்பதற்கு ஆதாரமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இடைக்காலத்தில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்நிகழ்வு மிகமிகச் சிறிய குடும்ப விழாவாக இருந்தது. அதற்குக் காரணம் பால்ய விவாகம் அதிகம் நடைபெற்ற அக்காலத்தில் திருமணமான சிறுமி பெரியவள் ஆனதும் அவளை முறைப்படிக கணவன் வீட்டில் கொண்டு விடுவதற்காக அவளது வாழ்க்கை மாற்றத்தை உற்றார் உறவினருக்குத் தெரிவிப்பதற்காக நடைபெற்ற நிகழ்ச்சி இது.

அதன்பிறகு போக்குவரத்து அதிகமில்லாத காலத்தில் என் வீட்டில் திருமணம் செய்யத் தயாராக ஒரு பெண் இருக்கிறாள் என்ற அறிவிப்பைத் தெரிவிப்பதற்காகக் குறிப்பாக அத்தைக்கும் மாமனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு குடும்ப விழாவாக மட்டுமே இது நடைபெற்றது. இந்நிகழ்வுகளின் அடிப்படையாகத் தனது உடல் மாற்றத்தால் அந்தச் சிறுமி அதிர்ச்சி அடையக்கூடாது. விளையாட்டாக இதனை ஏற்க வேண்டும். தனது பொறுப்பை த் தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற காரணமே முக்கியமாக இருந்தது.

இதே நிலையும் இத்தகைய மாற்றங்களும் ஒரு சிறுவனுக்கும் உண்டு என்றாலும் ஏனோ அவனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அந்த நிலையில் அவனுக்கும் கவனிப்பும் அறிவுரைகளும் தேவை. அந்த மாற்றங்கள் ஒரு சிறுமியைப்போல் ஒரு சிறுவனுக்கும் அதிர்ச்சியையும் பயத்தையும் தரக்கூடிய ஒன்றுதான் என்ற எண்ணமே யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழ்நிலையில் பெண்தான் ஒரு சொத்தாகவும் போகப் பொருளாகவும் அடிமையாகவும் கருதப்பட்டாள். சுய சிந்தனையும் சுய முடிவும் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை இருந்தது. அதனால் சடங்குகளும் அவளை முக்கியப்படுத்தியே அமைக்கப்பட்டன. தனது அடிமையான பெண்ணைத் தனது விருப்பத்திற்கேற்பக் கொண்டாடவும் அதில் பெருமையைத் தான் அனுபவிக்வும் ஆண் போட்ட திட்டமென்று கூடக் கூறலாம். ஆனால் இன்றைய சூழ்நிலை என்ன? ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டு அதற்கும் மேலாகப் பெண்ணின் வளர்ச்சி சென்று கொண்டிருக்கும் காலகட்டம் இது. பெண்ணின் அன்பினால் மட்டுமே ஆளமுடியும். அதிகாரத்தாலோ ஆணவத்தாலோ அல்ல என்பதை ஆண்கள் உணர்ந்து வருகின்ற காலம் இது.

ஒரு சிறுவனுக்கு ஏற்படும் உடல் மாற்றம் போலவே ஒரு சிறுமிக்கும் உடல் மாற்றம் ஏற்படுகின்றது என்ற ஒன்றைத் தவிர இந்த நிகழ்ச்சியில் வேறு எந்தவிதத் ‘திரில்’லும் இல்லை. இதைப்பற்றிக் கல்விச் சூழ்நிலையாலும் தமது சக மாணவிகளின் உதவியாலும் தாமே அறிந்து கொண்டு இயங்கக் கூடிய அறிவு வளர்ச்சி பெற்றுவிட்ட நமது செல்விகளுக்கு இனியும் இந்தப் போலித்தனமான சடங்குகள் தேவையா? என்றால் நிச்சயம் தேவையில்லை என்றுதான் அடித்துச் சொல்ல வேண்டும்.

இன்றைய சிறுமி அனைத்தையும் அறிந்தவளாக வளரும் சூழ்நிலையில் வாழ்கிறாள். அவளை ஒன்றும் தெரியாத முட்டாள்போல அடக்கி வளர்க்காமல் அவளது அறிவு வளர்ச்சிக்கு நல்ல துiணாhக இருக்கும் அன்புபு; பெற்றோராக மாறுங்கள். இத்தகைய வீண் ஆடம்பரச் செலவுகளை அறவே தவிருங்கள். பெண் வீட்டில் நான்கு சுவர்களுக்குள் உலக்கையே காவலாக சன்னலே புகலிடமாக வாழ்ந்த ஒரு காலத்தில் நடைபெற்ற ஒரு சடங்கு இது. இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு சாஸ்திரமும் சம்பிரதாயமும் சத்தியமாகக் கிடையாது. இப்படி இதற்காகச் செலவிடும் செல்வத்தை மனமுவந்து தான தர்மங்கள் செய்யப் பயன்படுத்தலாம். சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு அனாதைகளாக வாழும் சிறுமிகளுக்கும் இந்த நிகழ்வு ஏற்படுகின்றது என்பதை நினைத்துப் பார்த்து அத்தகைய சிறுமிகள் உடுக்க நல்ல உடைகளைத் தந்தோ, உணவுச் செலவை ஏற்றோ கல்விச் செலவுக்கு உதவியோ தங்களால் இயன்றதைத் தாராளமாகச் செய்ய எவ்லோரும் முன் வரலாம்.

எனவே உங்கள் வீட்டில் சிறுமி வளர்ந்து பெரியவளானால் அவளது மாற்றத்தையும் அதன் விளைவுகளையும் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். அவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டுச் சடங்கு செய்ய நாள் குறிக்க ஓடாதீர்கள். யாரும் சாமத்திய சடங்குக்கு வந்து உங்களை அழைத்தால் போகாதீh;கள். மொய் எழுதவும் வேண்டாம். நீங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அகமாற்றம் என்பது அவன் செய்கிறானா இவள் செய்கிறாளா என்று பார்ப்பதல்ல. நான் செய்கிறேனா என்று என்னை நானே உற்றுக் கவனிக்கின்ற ஒன்று. ஆகவே அன்பினால் கூறியதை ஆழமாக யோசித்து அர்த்தமற்ற சடங்குகள் களையப்பட வேண்டும் என்ற அகமாற்றம் அனைவருக்கும் தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s