பொது நலனில் அக்கறை என்ற அகமாற்றம் தேவை

மனித நிலையிலிருந்து கீழிறங்கிச் செயல்படும் ஒருவரைக் கண்டித்துக் கேட்கின்ற பொழுது “என்ன நீ இப்படி செய்து விட்டாய்! நீ மனிதனா? அல்லது மிருகமா?” என்று கேட்பதை நாம் பல இடங்களில் கவனித்திருக்கிறோம். மிருகங்களுக்கு இப்படிச் செய்யலாமா, செய்யக்கூடாதா என்று சிந்தித்துப்பார்க்கக்கூடிய அறிவு இல்லை. மனிதனுக்கு இந்த அறிவு தரப்பட்டிருக்கிறது. அதனால் தான் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுபவனை மிருகம் என்று சொல்கின்றனர். சிந்தித்துச் செயல்படுபவன் தான் மனிதன்.

மனித நாகரீகம் என்பது ஒருவன் பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் வடிவம் பெறுகிறது. ஒருவன் வெளியிடங்களில் நடந்துகொள்ளும் தன்மையைத் தொடர்ந்து கவனித்த பின்புதான் சமுதாயம் அவனுக்குரிய மதிப்பை அளிக்கிறது. அதே மனிதன் வீட்டில் எப்படி நடந்து கொள்வான் என்பது வேறு விடயம்.

நம் முன்னோர் நாம் வாழ்வதற்கு ஏற்றாற்போல் இந்த உலகத்தைப் பரிசாகத் தந்து விட்டுப் போனார்கள். நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. எல்லாவற்றையும் இங்கிருந்து எடுத்துத் தான் பயன்படுத்தி வாழ்கிறோம். போகும்போது எதையும் கொண்டு போக முடியாது. அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டுத்தான் போக வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் நாம் பயன்படுத்திய பூமிப்பந்தை நமது அடுத்த தலைமுறைக்கு ஏற்றதாக வைத்துவிட்டுத்தான் நாமும் போக வேண்டுமே தவிர இதைச் சீரழித்துச் சிதைத்துவிட்டுப் போகக்கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகப் பொறுப்புடனும் பொது நலத்துடனும் செய்யப் பழக வேண்டும் என்று குரு அடிக்கடி கூறுவார்.

ஆணோ அல்லது பெண்ணோ ஆன்மீக அறிவைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. நான் பிரம்மம்! இந்த உலகத்திலுள்ள எல்லாம் பிரம்மம்! என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் மட்டும் போதாது. அவர் தன்னைத் தானே உற்றுப்பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உற்றுப்பார்த்தல் என்பது கண்ணாடியில் கண்களைப் பதித்து அதில் தெரியும் தனது பிம்பத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருத்தல் என்பது அல்ல. தான் செயல்படும் விதத்தைத் தானே இடைவிடாமல் கவனித்தல் என்பதுதான் இதன் பொருள். இதைத்தான் விழிப்புணர்ச்சி, கவனம் என்று சொல்கிறார்கள்.

விழிப்புணர்ச்சி என்பது பள்ளம், மேடு பார்த்து நடப்பதல்ல. தான் செய்கின்ற ஒரு செயல் தன்னைப் பாதிக்காமல், தன் குடும்பத்தைப் பாதிக்காமல், இந்தச் சமுதாயத்தைப் பாதிக்காமல் செய்யப்படுகின்றதா? என்பதை இடைவிடாமல் கவனித்தலே ஆகும்.

சில பொது இடங்களில் தான்தோன்றித்தனமாகப் பிறர் நலனைப்பற்றிய அக்கறையோ கவனமோ சிறிதுமின்றி நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களைப்பற்றி அணுவளவு கூடச் சிந்திப்பது இல்லை. அவை என்னென்ன என்று நான் பட்டியலிடத் தேவையில்லை. இப்படிப்பட்டவர்களை அன்றாடம் பார்த்து இவர்களைத் திருத்தவே முடியாதா? என்று பெருமூச்சு விடுகின்றோம் அல்லவா? அல்லது நாமே அப்படித்தானே செய்கின்றோம்!

நாம் வாழ்ந்துவிட்டு வந்த நமது நாடுகளில் பொதுச்சுத்தம் என்பது மிகக் கீழ்மையான நிலையில் தான் இன்றுவரை இருந்து வருகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாகக் கனடாவிற்கு வந்த பிறகு இங்குப் பொது இடங்களில் காணப்பட்ட சுத்தமும் சுகாதாரமும் அப்பாடா! என்று மனதிற்கு இதமாக இருந்தது. ஆனால் போகப்போக இங்கும் எல்லாம் தலைகீழாக மாறிக் கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அவன், இவன் என்று பிறரைச் சொல்வதை விட நான் என்று நம்மை நினைக்க வேண்டும். சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான் இதன் பொருள் புரியும்.

புகை வண்டிகளிலும், பேருந்துகளிலும், பொதுக்கழிப்பிடங்களிலும் இப்போதெல்லாம் குப்பைகளும் காகிதங்களும் காலி டம்ளர்கள், பாட்டில்கள், உணவுப் பெட்டிகள் என்று எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாகப் பொதுக் கழிப்பிடங்கள் அந்தோ பரிதாபம்! என்ற நிலையில் தான் மிகக் கேவலமாகக் காட்சியளிக்கின்றன.

ஒருவர் தன் வீட்டையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா? தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையுமே சுத்தமாய் வைத்துக்கொள்ளும் மனம் இருக்க வேண்டாமா? சமுதாயப் பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒரு மு;க்கியப் பண்பு அல்லவா!

கண்களை அகல விரித்து என்னைச்சுற்றி நடப்பவற்றை நான் கவனித்தபோது தான் ஒர் உண்மை எனக்குப் புலப்பட்டது. ஒரு சில அப்பாவிகளைத் தவிரப் பெரும்பாலோர், அதிலும் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்தவர்களிடம் தான் ஒருவித அலட்சியமும் கவனமின்மையும் அதிகமாகக் காணப்படுகின்றது.

எந்த நாட்டினராக இருந்தாலும் சரி. ஆணோ, பெண்ணோ தன் சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவனமும் அக்கறையும் கொண்டவர்கள் மிகச் சரியாக எல்லாவற்றையும் செய்துகொண்டு போகின்றனர். அப்படிச் செயல்படுவதை அவர்கள் தமது கடமையாகவே எண்ணுகின்றனர். தங்கள் குடும்பத்தினரையும் குழந்தைகளையும் அப்படிப்பட்டவர்கள் கண்டித்துத் திருத்துகின்றனா;.

ஆனால் இந்தச் சிறுபான்மையினரைத் தவிர மற்ற பெரும்பான்மைச் சமூகம் பொறுப்பற்ற முறையில் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களிடம் அக்கறையும் இல்லை கடமை உணர்வும் இல்லை.

இந்த இடத்தில் நீங்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் யோசியுங்கள். பொது இடங்களில் நான் எப்படி நடந்துகொள்கிறேன்? என்னிடம் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்வும், சமூக நலனில் அக்கறையும் இருக்கின்றதா? என்னில் பிழை தெரிந்தால் இனி நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதுபற்றிச் சிந்தியுங்கள். இப்படி நீங்கள் சிந்திப்பதற்கு நான் சிறு விளக்கம் ஒன்றைத் தருகின்றேன்.

இந்தப் பிரபஞ்சமே பிரம்ம சொரூபமானது. பிரம்மத்தின் கட்டுப்பாட்டில் இது மிகச் சரியாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவன் அருளின்றி ஓர் அணுகூட அசையாது. இந்தப் பிரபஞ்ச இயக்கத்திற்கு இடைஞ்சல்களைச் செய்துகொண்டிருப்பவன் மனிதன் மட்டுமே! இவனது பிழைகளினால்தான் இயற்கையும் நெறி பிறழ்ந்து சீர்கேடுகளை விளைவிக்கின்றது.

பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட மனிதன் இயற்கை நியதிகளுக்கும் அதன் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு வாழ்கின்ற வரையில் அவனால் அதற்குப் பிரச்னை இல்லை. அதேபோல் ஒரு நாட்டில் அரசாங்கம் வகுத்துத் தந்த சட்டதிட்டங்களை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றவரை ஒரு பிரஜையால் அரசுக்குப் பிரச்னை இல்லை. இதே முறையில் அன்றாடப் பொது வாழ்வில் சக மனிதனின் நலன் கருதிச் செயல்படுகின்றவரை ஒரு தனி மனிதனால் சமுதாயத்திற்குப் பிரச்னை இல்லை. இவற்றில் முரண்படுகின்றபொழுது தான் பிரச்னை உண்டாகிறது.

அகமாற்றம் என்பது அடுத்தவனைச் சுட்டிக்காட்டிக் குற்றம் கூறித் திருத்துவதல்ல. என் பிழைகளை நான் கண்டறிந்து என்னை நானே திருத்திச் செம்மைப் படுத்துவதும், தவறுகளைக் கண்டுபிடித்து ஒவ்வொன்றாக நீக்குவதும் தான் அகமாற்றம் ஆகும்.

இந்த வகையில் இனி எங்கே பார்த்தாலும் குப்பையாகக் கிடக்கிறதே! இந்தச் சுத்தப்படுத்தும் பணியாளர்கள் எல்லாம் எங்கே தொலைந்து போனார்கள் என்று புலம்பி முகத்தைச் சுளித்துவிட்டு நானும் போடுவேன் என்று என் கையில் இருப்பதையும் வீசிவிட்டுப்போவது என் பண்பாக இருக்கக்கூடாது. குறைந்த பட்சம் பேரூந்துகளிலோ புகை வண்டிகளிலோ என் இருக்கையில் கிடக்கும் பேப்பரை அல்லது காலி டப்பாக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போய் அதற்குரிய குப்பைத் தொட்டிகளைத் தேடிப் பார்த்துப் போட்டுவிட்டுப் போவதுதான் உண்மையான அக மாற்றம்.

பொதுக் கழிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்தி முன்பு அந்த இடம் இருந்ததைப் போலவே தூய்மையாக வைத்துவிட்டு வரப்பழக வேண்டும். நாம் அங்கு செயல்படும் விதத்தைக் கவனித்துப் பிறர் முகம் சுளிக்கும் வகையில் நாம் ஒருபொழுதும் தவறாக நடந்துகொள்ளக் கூடாது. நீரையும் டிஷ்யு பேப்பா;ளையும் சிதற விடக்கூடாது. நன்றாகத் துடைத்து வைத்துவிட்டுக் கைகளை அங்கேயே இருக்கும் சோப் வாட்டரைப் பயன்படுத்திச் சுத்தமாகக் கழுவி அங்கேயே நன்றாகக் கைகளைக் காயவைத்துக்கொண்டு வெளியில் வரலாம்.

அதேபோல் பொது இடங்களில் உணவுப் பண்டங்களைச் சிந்தாமல் கவனத்துடன் சாப்பிட வேண்டும். உணவை எடுக்கச் செல்வதில் பரபரப்பு இருக்கக்கூடாது. தன்முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். அசைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவு வகைகளை மட்டுமே எடுக்க வேண்டும். சைவப்பிரிவிற்கும் சென்று அவர்களின் உணவு வகைகளையும் தமது தட்டுக்களில் நிரப்பிக் கொண்டு சுவைத்தால் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்குப் பற்றாக்குறை உணவாகப் போய் விடுகிறது என்ற விஷயம் பெரும்பாலோருக்குத் தெரிவதேயில்லை. அலுவலக உணவு உபசார விருந்துகளில் இது ஒரு பெரிய குறையாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் உணவைக் கையிலெடுத்தவுடன் வாயில் திணித்துக்கொள்ளக்கூடாது. எங்கு சாப்பிட்டாலும் எப்பொழுது சாப்பிட்டாலும் இந்த உணவை எனக்கு அளித்த இறைவனுக்கு ‘நன்றி! என்றோ ‘அன்ன தாதா சுகினோ பவந்து’ அதாவது இந்த உணவை எனக்குத் தந்தவர்கள் நலம் பெறுக! என்றோ ஒருகணம் மனதார எண்ணி இறைவனுக்கு அந்த உணவை சமர்ப்பித்து விட்டுப் பிறகு அதனை சாப்பிட முற்பட வேண்டும். அப்படி உண்ணப்படும் அந்த சாதாரண உணவு நம் பிரார்த்தனையால் பிரசாதமாக மாறி விடுகின்றது. நம் மனம் அந்த உணவைப் பக்தியுடன் ஏற்கும்போது அது உடல் நலனுக்குரிய உணவாகிறது. இது தான் நமது உண்மையான கலாச்சாரம். உற்றுக் கவனித்தால் எல்லா மதத்திலும் பண்பட்டவர்கள் இவ்வாறு வழிபட்டு உண்பது நமக்குத் தெரியவரும். அடுத்து தான் சாப்பிட்ட பிறகு தன் இடம் சுத்தமாக இருக்கிறதா அல்லது ஏதும் சிந்தி விட்டோமா என்று நன்றாகக் கவனித்து அவற்றை எடுத்துச் சுத்தப்படுத்தி விட்டுத்தான் அங்கிருந்து நகர வேண்டும். குப்பைப் பையில் தட்டுக்களையும் டம்ளர்களையும் கை துடைத்த பேப்பர்களையும் வீசி எறியக் கூடாது. பொறுமையாக நன்றாக உள்ளே போட வேண்டும்.

முதலில் இவ்வாறு பொறுப்புடன் செயல்பட மனம் ஒப்பாது. போலி கௌரவம் தடுக்கும். கூச்சமாக இருக்கும். ஆனால் பிறர் பார்வைக்காக ஓர் ஆன்மீகவாதி தயங்கக்கூடாது. பிறருக்கு முன் உதாரணமாகத் தான் செயல்படும் துணிவு வரவேண்டும். தான் செய்வதோடு உரிய நேரத்தில் மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலும் ஏற்பட வேண்டும். இப்படி என்னை நான் மாற்றிக்கொண்டதுபோல் இக்கட்டுரையைப் படிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் மாற்றம் பெற்று அடுத்தவரையும் வழி நடக்க முற்பட வேண்டும். “பொது நலனில் அக்கறை” என்ற அகமாற்றம் உங்களில் ஏற்பட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s