வன்முறைகள் இல்லாதொழிய அகமாற்றம் தேவை

பூப்பூவாகப் பனி பொழிந்துகொண்டிருக்கும் அமைதியான இரவு வேளை. பால் நிலவு மேகங்களின் வழியாக நுழைந்து ஒளிந்து விளையாடிக்கொண்டிருக்கின்ற நேரம். தானே விளையாடிக்கொண்டிருந்த அந்த நிலவை நட்சத்திரங்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. தரை முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டு மரங்கள் எல்லாம் முத்துச் சரங்களால் அலங்கரித்ததைப் போலக் காட்சி அளித்தன. தெரு விளக்குகளின் ஒளியில், நிலவு வெளிச்சத்தில் ஊரே வெள்ளைப் பனியின் பிரதிபலிப்பால் தங்க நிறமாக ஒளிவீசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. நிசப்தமும் குளிரும் நிறைந்த அந்த இரவு மனதில் எல்லையில்லாத ஓர் அமைதியை ஏற்படுத்தியது. அமைதியடைந்த மனம் இறைவனை றினைத்தது.

இறைவா! இத்தனை அமைதியை இயற்கையில் புதைத்து வைத்திருக்கும் நீ சீற்றத்தையும் இதற்குள் ஏன் ஒளித்து வைத்திருக்கிறாய்? இந்த நிறைவான அமைதியைத் தானே மனித மனங்கள் பெற ஏங்குகின்றன. ஆனால் எமது இளைஞர்களோ கொதிக்கின்ற மனநிலையில் செயல்படுவதையே பெரும்பாலும் விரும்புகின்றார்களே. இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்? யார் அல்லது எது காரணம்?

மனித குலத்தின் இயற்கையான குணம் சாந்தமா? வெறித்தனமா? சாந்தம் தான் இயற்கை என்றால் கோபமும், வெறியும், அதன் காரணமாக வன்முறையும் ஏன் கிளர்ந்து எழுகின்றன? சாந்தத்தைப் படைத்த நீ வன்முறையையும் ஏன் படைத்தாய்? சுpன்னச்சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் கூட எடுத்த எடுப்பில் வன்முறையால் தீர்வு காண முற்படுகின்ற தன்மை ஏன் ஏற்பட்டது?

வாழ வேண்டிய ஒரு இளைஞனை அவன் வயதையொத்த இளைஞர்களே துரத்தியடித்துச் சாக அடித்த வன்முறை ஏன் நிகழ்ந்தது? ஓர் இளம் பெண்ணைப் பலர் மத்தியில் துண்டு துண்டாக வெட்டி எறிந்த கொடுமை ஏன் நடைபெற்றது? மனைவியைப் பழிவாங்கக் குழந்தையைப் போக்குவரத்து நெரிசலில் வீசி எறியும் வன்செயல் ஒரு கணவனுக்குள் ஏன் தோன்றியது? தனக்குப் பிடிக்காத மாணவனுக்குப் பக்கத்தில் நின்றான் என்பதற்காக ஓர் அப்பாவி மாணவனை வம்புக்கிழுத்து, அவனை அடித்து நொறுக்கி, அவன் தாடை உடைந்து பற்கள் நொறுங்கி வாயைத் திறக்கக்கூட முடியாத நிலையில் மருத்துவ மனையில் மூன்று சத்திரசிகிச்சைக்கு ஆட்பட்டுக் கிடக்கிறான் என்ற கொடுமையைக் கேட்டபோது மனம் துடிக்கிறதே! இதற்கெல்லாம் என்ன காரணம்? நாகரீகத்தின் உச்ச நிலையில் இருப்பதாகக் கூறுகின்ற நாட்டில் கூட ஏன் இந்த அவல நிலை?

சிந்தித்துப் பார்த்தால் இன்றைய வாழ்க்கை முறையே பிழையாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. நம்மைப்பற்றி நாம் அறியாத வாழ்க்கையாகவே நாம் ஒவ்வொருவரும் வாழ்கிறோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலையில் போலியான வாழ்க்கை வாழ்கின்றோம். பெரியவர்களின் இந்த அறியாமையும், போலித்தனமும் இளைய தலைமுறைக்குப் புதிராய்ப் போய்விடுகின்றது.

தன்னை இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று அறிவுரை கூறும் பெற்றோர் பிறகு தாங்களே அந்தத் தவறினைச் செய்கின்றபோது ஒரு குழந்தை திகைத்துப் போகிறது. குழந்தைகள் ஒரு நாளும் பெற்றோர் சொல்வதைக் கற்றுக்கொள்வதில்லை. பெற்றோர் செய்வதைத் தான் கற்கின்றனர்.

பொய் சொல்லக்கூடாது! எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்! என்று பிள்ளைக்குக் கற்றுத்தருகின்ற பெற்றோர் பிறிதொரு சமயம் தொலைபேசியில் யாரோ ஒருவர் பேசக் கூப்பிடுகின்றபோது தங்கள் பிள்ளையிடம் நான் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு! என்று வீட்டிலிருந்துகொண்டே இல்லை என்று பொய்யைச் சொல்லச் சொல்கின்றபோது அந்தக் குழந்தைக்கு மனதில் முரண்பாடு ஏற்படுகிறது.

சண்டை பிடிக்கக்கூடாது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று குழந்தைக்குப் போதனை செய்கின்றவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை குலைந்து மிகக் கீழ்த்தரமாகக் கத்திக் கூச்சலிடுகின்ற நேரத்தில் இடையில் நின்று தடுமாறும் சிறுவர்கள் மனபாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அதிலும் இன்றைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகளைத் தாங்களே ஏற்;படுத்திக்கொண்டு வாழ்கின்ற பெற்றோர் பிள்ளைகளின் நலனைப் பற்றி அக்கறை கொளவதில்லை.

அவர்களைப் பெரும்பாலும் தனிமைப்படுத்தித் தங்கள் வேலைகளிலும் பொழுதுபோக்குகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி மூழ்கிவிடுகின்றனர். அந்தத் தனிமை பெரும்பாலான சிறுவர்ளை வதைக்கிறது. பகிர்ந்துகொள்ளவும் கண்காணித்துத் திருத்தவும் யாரும் இல்லாமல் தங்களுக்குத் தோன்றிய விதத்தில் அவர்கள் செயல்பட முற்படுகின்றனர்.

விதை முளைக்கும்போது கண்காணித்துப் பயிரைப் பக்குவமாக வளர்க்கத் தெரியாத விவசாயி போல் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும்போதே அன்பையும் கண்டிப்பையும் ஒருசேரக் குழைத்து அவர்களை அரவணைத்துப் பேசி, கூட இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பதில்லை. அரசாங்கமும் சட்டம் என்ற பெயரில் பெற்றோர் பிள்ளைகளிடம் பயப்படும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுவர்களுக்குத் துணிவைக் கொடுக்கின்றது.
இந்த சட்ட அறிவு அனுபவமில்லாத இளம் பிள்ளைகளை முரட்டுத்தனமாகவும், பெற்றோருக்கு எதிர்ப்பாகவும் நடக்க வைக்கின்றது. இந்த முரட்டுத்தனமும் தைரியமும் அவர்களை வன்முறைக் கும்பலுடன் சென்று சேரச் செய்கிறது. இந்த நிலையில் அவர்களை முழுமையாகக் கெடுக்கத் தொலைக்காட்சியும், சமூகமும் தங்கள் பங்கை முழுவதுமாக செலுத்துகின்றன. இவற்றிற்கிடையில் ஆசிரியர்களும் மறுபுறம் மதபோதகர்களும் தங்களின் அரைவேக்காட்டுத்தனத்தால் இவர்களைக் கவரமுடியாமல் ஒப்புக்குக் கவனிக்கின்றனர். ஏனோதானோவென்று அக்கறையற்ற அறிவுரை கூறுகின்றனர். அவ்வளவுதான்!

கடைசியில் நடப்பது என்ன? கவனிப்பும் அன்பும் பெறமுடியாத குடும்பச் சூழ்நிலை, கட்டுப்படுத்தப்படாத சுதந்திரம், தீய விஷயங்கள் அத்தனையையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் தொலைக்காட்சியும் மற்ற ஊடகங்களும் மேலும் சுற்றிலும் மனதைச் சுத்தமாகக் கெடுத்து வைத்திருக்கும் தீய இளைஞர்களின் கூட்டம், அதனால் ஏற்படும் பாதிப்பு என்று இந்தச் சூழ்நிலையில் ஒரு நல்ல இளைஞன் கூடத் தன் மன அழுத்தத்தால,; முரண்பட்ட மனப்பதிவுகளால் குழப்பமடைந்து வன்முறையாளன் ஆகின்றான். அல்லது வன்முறைக்கு ஆட்பட்டுப் பாதி;க்கப்படுகின்றான்.

இந்த நிலையில் இனி செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் ஒவ்வொருவருமே மாற வேண்டும். இந்தத் தனிமனித அகமாற்றம் தான் பின்பு குடும்ப அகமாற்றமாக மாறும். குடும்ப அகமாற்றம் தான் பிறகு சமுதாய அகமாற்றத்திற்கு வழிகோலும். இங்கு ஏற்படவேண்டிய மாற்றம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவருமே தன்னை அறிந்து தன்நிலை அறிந்து உண்மையான வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ முற்பட்டால், நான் யார்? என் குணங்கள் என்னென்ன? என் கடமைகள் என்னென்ன என்பதை அறிந்து பொறுப்புடன் வாழ்ந்தால், வளரும் தலைமுறை திருந்தலாம்.

ஏனெனில் அடுத்தவர்களைப்போய் நாம் திருத்த முடியாது. ஆனால் நம்மை நாமே திருத்திக்;கொள்ள முடியும். நான் சரியாகச் சிந்திப்பதன் மூலம, நான் சரியாகப் பேசுவதன் மூலம், நான் சரியாகச் செயல்படுவதன் மூலம், எனது சூழ்நிலையை நான் சரிப்படுத்திக்கொள்ள முடியும். அமைதிப் படுத்திக்கொள்ள முடியும். இந்தத் தன்மையினால் எனக்கு நெருங்கிய உறவு உடையவர்கள் அமைதிப்படுவார்கள். பிறகு சரியாக நடந்துகொள்ள முயல்வார்கள். அப்படி இருவரும் நடக்க ஆரம்பிக்கின்ற பொழுது அவ்விருவரின் நெருங்கிய உறவுகளான குழந்தைகள் அமைதிப்படுவார்கள். சரியாக செயல்படுவார்கள்

இனி சமூகம்!. சமுதாயத்தை உடனே அமைதிப்படுத்தவோ, சரியாகச் செயல்படவோ செய்யமுடியாது தான். ஆனால் குடும்பத்தில் இப்படித் திருந்தியவர்கள் தங்களுக்குச் சரியானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த நல்ல சூழ்நிலையில் மட்டுமே பழக ஆரம்பிக்கின்றபோது அந்த நல்ல சூழ்நிலை மேலும் பலராலும் ஏற்கப்பட்டு அதனால் விரிவடைய ஆரம்பிக்கும். இதைத் தேர்ந்தெடுக்கும் மனம் உடையவர்கள் கண்டிப்பாகச் சரியானதை மட்டுமே செய்யப் பழக வேண்டும். நல்லதை மட்டுமோ அல்லது தீயதை மட்டுமோ அல்ல, சரியானதை மட்டும்தான் செய்யப்பழக வேண்டும்.

இப்படி சிறிது சிறிதாக ஒவ்வொருவரும் திருந்தி நடக்க முயன்றால் ஒருநாள் இந்தச் சரியான சூழ்நிலை வளர்ந்து விரிந்து பரவும். அப்பொழுது தலை விரித்தாடும் இந்த வன்முறையும் குறையும்; பிறகு அழியும். இதற்கு சுயநலமில்லாத அன்பும், அகிம்சையும், நட்புணர்வும் தான் உதவி செய்யும்

இந்த அகமாற்றம் தேவை என்ற உணர்வு உங்களுக்குள் இந்தக் கணமே உருவானால், இதைப்பற்றி உடனே சிந்திக்கத் துவங்கினால் இன்றே என்றில்லாவிட்டாலும் எனறேனும் ஒருநாள் இளைய தலைமுறையினர் தங்களைச் சரியான விதத்தில் வெளிப்படுத்த முன்வருவார்கள். அவர்களுடைய உயிர்ச்சக்தி வன்முறையில் சிக்கிச் சீரழியாமல் ஆக்கசக்தியாக மாறிச் சமுதாயத்தை அமைதி வழியில் முன்னேற்றும்.

ஏனெனில் குழந்தைகள் வெறும் களிமண் போன்றவர்கள். அவர்களை வடிவமைப்பவர்கள் அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் தான். அதனால் பெற்றோர் இதற்குரிய முழுப் பொறுப்பை ஏற்கத் தக்கவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் சரியான நண்பர்களாகச் செயல்பட வேண்டும். சமுதாயமும் இயன்றவரை முயன்று சரியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டும். அரசாங்கம் அனைத்துத் துறைகளையும் அதற்கேற்ப இயங்குமாறு வடிவமைத்துத் தர வேண்டும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு பண்பட்ட பக்குவமான நிலையில் தனது உட்கருவிகளான மனதையும், புத்தியையும் ஒருவன் சரியாக அமைத்துக்கொள்ளவேண்டும். மேலும் எதையுமே சரியா அல்லது பிழையா என்று ஆராய்ந்து விழிப்புணர்ச்சியுடன், சமூதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சரியானவற்றை மட்டுமே செய்ய முற்படவேண்டும் என்பதுதான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s