இன்பம் என்பது வெளியில் இல்லை என்ற அகமாற்றம் தேவை

நமது பரிணாம வளர்ச்சி நிலையை நாம் அறிந்துகொள்ள நமக்குத் தரப்பட்டிருக்கும் மிக சூட்சுமமான ஓர் அரிய கருவியே, நமது மனம். அவரவர் மன அமைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் தான் அவரவரின் மன வளர்ச்சி தெரிய வரும். ஈகோவை வெளிப்படுத்திக்கொண்டு ஒரு செயலைச் செய்கின்றபோது அங்கு ஆன்மீகம் வெளிப்படாது. ஓர் ஆன்மீக சாதகன் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதில் அவனது ஆன்ம மலர்ச்சி வெளிப்பட வேண்டும். பூரண மலர்ச்சி இல்லாமல் ஆன்மீகம் இல்லை. ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

எனது ஆன்மாவே நான் என்பதை உணர்வது ஆன்மீகம். இந்த அறிவைப் பெறுவதைவிட உயர்வான வாழ்க்கை வேறில்லை. நான் ஆன்மா என்பதை உணர்ந்துவிட்டேன். அந்த உணர்விலேயே நான் வாழ்கிறேன். அதைப் பூரணமாக அடைவதே என் வாழ்வின் லட்சியம்! என்ற உணர்வில் இனி நாம் வாழ வேண்டும்.

ஒருவன் தன்னை ஆன்மீகவாதி என்று உலகத்திற்குத் தெரிவிப்பது எப்படி? வெறும் வெளி வேஷம் மட்டும் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தி விடாது. அது தன்னையே தான் ஏமாற்றிக்கொள்வது ஆகும். ஆன்மீகத்தைப் பற்றி மிக அருமையாகப் பேசுவதாலும் ஒருவரை ஆன்மீகவாதியாகக் கருதிவிட முடியாது. நம்மில் மற்றவரிடம் இல்லாத மகிழ்ச்சி இருக்க வேண்டும். நம்மில் மற்றவரிடம் இல்லாத நம்பிக்கை இருக்க வேண்டும். நிறைந்த கடல் போன்ற ஆழமான அமைதி நம்மில் நிலைத்திருக்க வேண்டும். எது வரினும் சரியே! என்ற மனச் சமநிலை நிறைந்திருக்க வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். இதுவே ஓர் உண்மையான ஆன்மீகவாதியின் லட்சணமாகும்.

இந்த வாழ்க்கை, நமது செயல்கள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். புறச் சக்திகள் நம்மை இழுத்து அலைக்கழிக்கக் கூடாது. இந்தப் பயிற்சியைத் தான் தியானத்தின் மூலம் ஒவ்வொரு ஆன்மீக சாதகனும் மேற்கொள்ள வேண்டும். ஓர் ஆன்மீக சாதகர் குருவின் மூலம் பெறுகின்ற ஞான உபதேசத்தினால் அகவிளக்கம் பெறுதல் வேண்டும். சமுதாயத்தின் மூலம் தான் பெற்றிருக்கும் தெளிவில்லாத கருத்துக்களை ஞான வெளிச்சத்தில் ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து, சரியானவற்றை அறிந்து, தன்னைச் சரியாக அமைத்துக்கொள்வதே அவனது முயற்சியாக இருக்க வேண்டும்.

இதுவரை உலகத்தைப் பார்த்த பார்வை வேறு. இப்போது ஆன்மீக தளத்தில் நின்றுகொண்டு, ஆன்மீகப் பார்வையாக நம்மையும், உலகத்தையும் நாம் பார்க்கிறோம். இப்படிப் பார்க்கின்ற பொழுது தெளிவு பிறக்கின்றது. உண்மை விளங்குகின்றது. உலக வாழ்க்கைத் தளத்தில் கலங்கி நின்ற நாம், ஆன்மீக அறிவைப் பெற்று ஆன்மீக தளத்தில் நின்று செயல்படுகின்றபோது உறுதியாகச் செயல்பட முடிகின்றது.

ஆன்மீக அறிவு என்பது ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டிலே விடுகின்ற கதையல்ல. வாழ்வியல் விஞ்ஞானம். என்னையும் உலகத்தையும் எப்படிப் பார்ப்பது என்ற அறிவுத் தெளிவே ஆன்மீகம். நமது முந்தைய செயல்களின் பிரதிபலிப்பே நமது இன்றைய வாழ்க்கை. இந்த உண்மை புரிந்தால் தான் இன்றைய வாழ்க்கையைச் சரியாகத் திருத்தி அமைக்கும் எண்ணம் நமக்கு ஏற்படும். இப்படித் திருத்தி அமைக்க நாம் முற்படும்போது நமது தவறான போக்குகள் கவனிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. பிறகு சரியான அணுகுமுறையில் செயல்படத் துவங்குகின்றோம். இப்படிச் செயல்படத் துவங்குவதால் நமக்குள் மனச்சமநிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் ஈகோ என்னிலிருந்து நீங்கி எனக்குள் இருக்கின்ற உண்மையான நான் வெளிப்பட்டுச் செயல்படுகின்றது.

இப்படி நமது பழைய பதிவுகளான கர்மாவைச் செயல்படாமல் செய்து, ஆத்மாவைச் செயல்படுகின்ற நிலைக்குக் கொண்டு வருகின்றபோது அங்கு மனம் மலர்கின்றது. அங்கு அமைதியும் ஆனந்தமும் நிறைந்து வழிகின்றது. அது பாகுபாடற்ற, பேதமில்லாத அன்பாக வெளிப்படுகின்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் அவனால் ஆக்கப்பட்டது எல்லா உயிர்களும் எனது ஆத்மாவின் மறுபாதி என்ற உணர்வு நம்முள் எழுகின்றது. அதனால் அனைவரிடமும் அன்பு ஏற்படுகின்றது. இந்த ஆன்மீகத் தொடர்பு நம்மிலிருந்து அன்பின் வழியே வெளிப்படும்போது, நமது குடும்ப வாழ்க்கை, உலகத் தொடர்பு எல்லாம் அன்பு மயமாக அமைகின்றது. இந்நிலையில் உறவுகளும், பொருள்களும் நமக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன.

உலக வாழ்க்கையில் நாம் ஒன்றை அனுபவிப்பதும், அப்படி அனுபவிப்பதை உணர்வதும் நமது மனம் தான். புலன்கள் அனுபவிப்பதாக நாம் பிழையாக நினைக்கின்றோம். புலன்கள் வெறும் கருவிகள் மட்டுமே! ஞான உபதேசம் பெற்ற பிறகுதான் நமது புத்தி, மனதை இழுத்துக்கொண்டு போய்ப், புலன்களால் பெற்றது இன்பமல்ல’ அதை அனுபவிப்பது உனக்குள் இருக்கும் ஆன்மாவே! என்ற உண்மையை மனதிற்கு உணர்த்துகின்றது.

ஒருவரது பரிணாம வளர்ச்சிக்கேற்ப அறிவின் தன்மை வளர்ச்சி அடைகிறது. அவரவரின் தன்மைக்கேற்ப எல்லோரும் இந்த உலகத்தையும், அதன் அமைப்பையும் ஆராய்ந்து பார்க்கின்றனர். இந்தப் பிரபஞ்ச அமைப்பையும், இதன் பின்னால் இருந்து அனைத்தையும் இயக்குகின்ற மாபெரும் சக்தியையும் உணர்ந்து வெளிப்படுத்துபவர் ஞானி.

இத்தனை மில்லியன் மக்கள் இதில் வாழ்கின்றனர். இத்தனை சதவீதம பல்வேறு கனிமங்கள் இதற்குள் புதைந்திருக்கின்றன என்று உலகத்தைப் புள்ளிவிவரக் கணக்கினால் அளந்து பார்ப்பவன் பொருளாதார நிபுணன்.

இந்த இடத்தில் இயற்கை வளம் அதிகம். இந்தப் பிரதேசத்தில் கனிம வளம் அதிகம். இந்த அடுக்கில் படிமப் பாறைகள் இருக்கின்றன என்று பார்ப்பவன் புவியியலாளன். இந்த மனித இனம் இங்கு எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்பொழுது வந்தது? என்று ஆராய்பவன் வரலாற்று ஆசிரியன்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில, உள்ளது உள்ளபடி சரியாகப் பார்த்து, இவை அனைத்தையும் உருவாக்கி, இயக்கிக்கொண்டிருக்கின்ற சக்தியைப் புரிந்துகொண்டு, அந்தச் சக்தியைத் தன்னிலிருந்து வெளிப்படுத்துகின்ற ஆன்மீகவாதி தான் உண்மையான அறிவாளி.

அந்த ஆத்ம சக்தி அனைத்தையும் கடந்து உள் நிற்பது. இப்படிக் கடந்து உள்நிற்கின்ற அதுதான் நான். அது நானாக இருக்கிறது. நான் அதுவாக இருப்பவன். இதை நாம் அறியாதவரை பிரச்னைகளால் பாதிப்பு அடைகிறோம். நமது உள்கருவிகள் பதட்டப்படுகின்றன. அந்த மூல சக்தியை நாம் அறிந்து, அமைதியில் ஆழ்ந்து நமக்குள் உணர்கின்றபோது நாம் சமநிலையை அடைகின்றோம்.

இதைப் பல மதங்கள் பல்வேறு விதங்களில் கூறியிருந்தாலும், அனைத்திற்கும் மூலமாக, முதன்முதலாக இந்த உண்மைகளைத் தௌ;ளத் தெளிவாக நமது ரிஷிகள் தான் உணர்ந்து வேதங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

எல்லோருக்கும் உரிய மூலதனமாகிய உயிரை ஓர் ஆன்மீகவாதி ஆன்மா என்கிறான். உயிர் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. உயிருக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எதை இழந்தாலும் உயிரை இழக்க யாரும் விரும்புவதில்லை. இந்த உயிர் தான் நம் உடலில் சக்தியாக வெளிப்பட்டுக் கா;மாவிற்கேற்ப இயங்குகின்றது. இப்படி ஆன்மா வெளிப்பட்டுச் செயல்படுவதற்கு இந்த உடல் வெளிப்புறக் கருவியாகவும், மனம், புத்தி உட்புறக் கருவிகளாகவும் இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்கின்றன.

இந்த உடல் நான் அல்ல. இந்த உடல் என்னுடையது அல்ல. இந்த உடல் எனக்காக அல்ல. இந்த உடல் இயற்கைக்கு உரியது. இது நமது கர்மாவைக் கழிப்பதற்கும் நம்மை நாம் அடைய முயற்சிப்பதற்கும் உதவத் தரப்பட்ட ஒரு கருவி மட்டுமே.

இதையெல்லாம்பற்றி நாம் நன்கு ஆராய்ந்து தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப் புரிந்துகொள்ள சாதாரண நிலையில் வாழும் ஒருவனால் இயலாது. ஈகோவால் அடிபட்டு, மிதிபட்டு, மனம் நொந்து, வாழ்வின் உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்வி எழுகின்றபோது, அப்படிப்பட்ட பரிபக்குவமான நிலையில் தன்னிடம் வந்து சேர்ந்தவனுக்கு ஒரு குருவால் மட்டுமே இந்த உண்மையை உணர்த்த முடியும். குருவின் அருளைப் பெற திருவின் அருள் தேவை.

இந்நிலையை ஒருவன் அடையவேண்டுமெனில் வாழ்க்கையில் தனக்கு அடுத்தடுத்து ஏற்படுகின்ற துக்கங்களையும், அவமானங்களையும், மனபாதிப்புக்களையும், தோல்விகளையும் என் கர்மாவினால் இவை ஏற்பட்டவை என்ற உண்மையை உணர்ந்து நாம் ஈஸ்வரப் பிரசாதமாக அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். வருபவற்றை எதிர்ப்பதோ, சண்டை இடுவதோ, மனக்குமுறலுடன் அழுவதோ கூடாது. பக்குவப்பட்ட மனதுடன், மிகவும் முயற்சி செய்து அமைதி காக்கப் பழக வேண்டும்.

அந்த அமைதியை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய தன்மையை இறைவனிடம் வேண்டிப் பணிந்து கேட்க வேண்டும். இறைவா! என்னால் மாற்றக்கூடியவற்றை மாற்றுவதற்குரிய திறமையை எனக்குத் தா! என்னால் மாற்ற இயலாதவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவத்தை, மனவலிமையை எனக்குத் தா! என்பதே இனி நமது பிராh;த்தனையாக இருக்க வேண்டும்.

இப்படி முழுமையாக அவனைச் சார்ந்து வாழ நாம் முற்படுகின்றபோது அவனது கருணை நிச்சயம் நம்மைச் சூழ்ந்து நிலைகுலையாமல் நம்மைக் காக்கும். மேலும் மேலும் அவனருகே நம்மைக் கொண்டு சேர்க்கும். அப்பொழுது நானே அவன்! இந்த வாழ்க்கைத் துன்பம் என்பது அவனது விளையாட்டு! உண்மையில் துன்பம் என்பதே இல்லை. இருப்பது இன்பம் மட்டுமே. நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தால் அது துன்பமாக மாறித் தெரிகிறது என்பது புரியும்.

எனவே, இன்பம் என்பது வெளியில் இல்லை. அது நமக்குள்ளேயே தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு வாழ்கின்ற அகமாற்றம் நமக்குத் தேவை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s