தன்னைப்போல் பிறரையும் நினைக்கின்ற அகமாற்றம் தேவை

தன்னைப்போல் பிறரையும் நினைக்கின்ற அகமாற்றம் தேவை

நமது உட்கருவிகளான மனம், புத்தி ஆகியவற்றால் உயிர்களோடும் பொருள்களோடும் நாம் கொள்கின்ற உறவே நமது வாழ்க்கை. நம்மைச் சேர்ந்த உறவுகள் நம் உயர்விற்கு உதவும் படிக்கட்டுகளாக அமைய லேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம் உறவுகள் பெரும்பாலும் பிரச்னை தருவதாகவே இருக்கின்றன. மனதிற்குச் சஞ்சலத்தைத் தருபவை நம்மோடு வந்து சோ;கின்ற உறவுகளும், நாம் தேடிச் சேர்த்த பொருள்களும் தான். இந்தச் சஞ்சலம் நம்மை விட்டு நீங்கி நாம் அமைதியாக வாழ்க்கையை எதிர் நோக்க வேண்டும் என்று உண்மையில் விரும்பினால் நாம் நம்மைப் பற்றியும், இவற்றைப் பற்றியும் சரியான விதத்தில் புரிந்துகொள்ள வேண்டும். நமது இயல்பையும், அவற்றின் இயல்பையும் சரியாகத் தெரிந்துகொண்டால் தான் நம் அமைதி கெடாவண்ணம் அவற்றுடன் பழகிக்கொள்ள முடியும்.

வாழ்க்கை என்பது ஆராய்ந்து பார்த்தால் பொருளற்றதே. செத்தால் உடம்பைக்கூட விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். கொண்டுபோகக்கூடியதென்று எதுவுமே இல்லை. உயிராக நேசித்த உறவுகள் கூடக் கண்ணீர் விட்டுக் கதறி அழுது, வழியனுப்பி வைப்பார்களேயன்றி நானும் கூடப்போவேன் என்று சாவதில்லை. அப்படியே செத்தாலும் அதன் பிறகு என்ன ஆகும் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

உடலில் உயிர் என்ற ஒன்று ஒட்டியிருக்கின்ற வரையில் தான் பெயரும், குணமுமே தவிர உயிர் பிரிந்தபின் இந்த உடல் வெறும் கூடு. இந்த உண்மை தெள்ளத் தெளிவான ஒன்றாக இருந்தபோதிலும், இதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. மாறாக உலகியல் சம்பந்தமான விஷயங்களே ஓராயிரம் எண்ணங்களாக ஓடி மனநிம்மதியைக் குலைக்கின்றன. இவையே மரணம் பற்றிய உண்மையை மறைக்கும் புழுதித் திரையாக மாறி விடுகின்றன. இந்தப் பொய்யான எண்ணங்களை முதலில் நீக்க முற்பட வேண்டும்.

ஓர் ஆன்மீகக் குருவிடம் இருவர் சென்றனர். பாமரனாகத் தோற்றம் அளித்த படிக்காதவன், எனக்கு ஞானம் கிடைக்குமா? என்று குருவை வணங்கிக் கேட்டான். தியானம், தவம் போன்ற யோகப் பயிற்சிகளை எல்லாம் நீ முறையாகச் செய்தால், உனக்கு வெகு விரைவில் ஞானம் சித்திக்கும்! என்று குரு கூறினார்.

அவனுடன் சென்ற பண்டிதன், குருவே! எனக்கு? என்று கேட்டான். நீ இந்த ஜென்மம் முழுவதும் முயன்றால் ஒருவேளை கிடைக்கக்கூடும்! என்று பதில் உரைத்தார் அவர். பண்டிதனுக்குக் கோபம் வந்துவிட்டது. படிப்பறிவில்லாத முண்டமான அவனுக்கே வெகு விரைவில் ஞானம் சித்திக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் சகல சாத்திரங்களையும் கரைத்துக் குடித்த எனக்கு இப்படிச் சொல்கிறீர்களே! என்று படபடத்தான்.

பொறு மகனே! உனக்குள் நீ ஏற்றி வைத்துக்கொண்டிருக்கின்ற தவறான செய்திகளையும், சத்தியத்தைப் பற்றி உனக்குள் இருக்கின்ற தவறான கருத்துக்களையும் தோண்டி எடுக்கவே ஒரு ஜென்மம் வேண்டுமே! என்று குரு அமைதியாகச் சொன்னார். அதிக அளவில் தெரிந்து வைத்திருப்பதுதான் இங்கு பிரச்னை.

நாம் படித்துப் பழகிய சாத்திர அறிவு எல்லாம் உண்மையான அறிவு அல்ல. பழமொழிகளும், சம்பிரதாய சடங்குகளும் உண்மையானவை அல்ல. எது என்றாலும் எல்லாவற்றையும் நமது சுய அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏற்கக்கூடியவற்றை மட்டும் ஏற்றுத் தள்ளக்கூடியவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும். அப்படித் தள்ள முடியாதவர்கள் சமுதாயத்தில் பின்தங்கி இருக்க நேரிடும்.

நம்மை நாம் தான் வடிவமைக்க வேண்டும். சமுதாயத்திற்காகப் பயந்துகொண்டிருந்தால் காலம் போய்விடும். எதையுமே சாதிக்க முடியாது. இப்படி நம்மை நாம் திருத்தி அமைப்பதற்கு நம் மனதை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். குடும்பச் சூழ்நிலையாலும் சமுதாயப் போக்காலும் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மனதைச் சரி செய்ய வேண்டும். நமது ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் நமது மனம் தான் இருக்கிறது. இதை ஆராய்ந்து பார்த்தால் நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது புரியும்.

மனதைச் சரியாகப் பயன்படுத்தி முறையாக வாழ்ந்திருக்கிறோமா? அல்லது பிழையாகப் பயன்படுத்தி நமது சக்தியை வீணாக்கி இருக்கிறோமா? என்ற உண்மை விளங்கும்.

வாழ்வின் உண்மைத் தத்துவம் புரியாமல், இழுத்த இழுப்பிற்குச் சூழ்நிலையில் சிக்கி அல்லல்படுவதால் பயன் இல்லை. வாழ்க்கையைச் சரியாக வாழத் தெரிய வேண்டும். இதற்கு வாழ்க்கையைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இந்த உலகில் பிறவி எடுத்திருக்கின்ற நாம், நமக்குத் தரப்பட்ட பாத்திரங்களைச் சரியாகக் கையாளுகின்றோமா என்பது தெரிய வேண்டும். மகனாக, சகோதரனாக, நண்பனாக, கணவனாக, தந்தையாக, பிற உறவு முறைகளாக நாம் நம் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், நமக்கே நாம் எதிரியாக மாறி, நம்மை நாமே குறை கூறாத நிலையில் வாழ்கின்றோமா என்று ஆராய முற்படும்போது தான் நமது குறைகளும் நிறைகளும் தெரிய வரும்.

நல்லவன் என்ற பெயர் எடுக்க நாள் செல்லும், கெட்டவன் என்று ஒரு நிமிடத்தில் பெயர் எடுத்துவிடலாம். என்று சொல்வார்கள். இப்படி நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றால் அதற்காக எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்? எவ்வளவு ஆராய்ந்து தன்னல மறுப்பு செய்து, பிறர் நலத்திற்கு முதலிடம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும்? நான் வேறு, அவர் வேறு என்ற வேறுபாடு இல்லாமல் நமக்கு ஒரு செயலை எப்படிச் செய்தால் நன்றாக இருக்குமோ அதுபோல நான் பிறருக்குச் செய்வேன் என்ற மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட எவ்வளவு உயர்ந்த உள்ளம் நமக்கு இருக்க வேண்டும்! தன்னைப்போல் பிறரை நினை! என்பதன் பொருள் இதுதான்.

எல்லோரும் நானே என்ற உணர்வு நமக்குள் இருக்க வேண்டும். எல்லோருமே நான் தான் என்று நினைத்துவிட்டால் பிறகு மாற்றமாக, வேற்றுமையாகச் செய்பட மனம் ஒப்புமா? இந்த மனநிலை ஏற்பட வேண்டுமானால் முதலில் நம்மை நாமே நேசிக்கக் கற்க வேண்டும். நம்மை நாம் விரும்பினால் தான் நம்மால் பிறர் மீது அன்பு செலுத்த முடியும். இதற்கு உலக அறிவு மட்டும் உதவாது. ஆன்மீக அறிவு ஏற்பட வேண்டும்.

ஏனெனில் உலக அறிவில் பழகிய மனம், உறவுகளின் அல்லது பொருள்களின் புற வடிவங்களை மட்டுமே பற்றி நிற்கும். உள்ளுணர்வு பாதிப்புக்களைப் பற்றி அந்த மனம் பொருட்படுத்தாது. சுயலாபத்தை மட்டுமே பார்த்துச் செயல்படும், உடலோடு கூடிய சிந்தனை மட்டுமே அங்கு இருக்கும்.

ஆன்மீக மனம் என்பது ஆத்மா சம்பந்தப்பட்ட விதத்திலேயே சகல விஷயங்களையும் பார்க்கும். அந்த நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அடுத்தவர்களுக்கு நன்மை பயக்குமா? அவர்களின் நலத்தில் பாதிப்பு ஏற்படுமா? என்று யோசித்து யோசித்துச் செய்யப்படுபவையாக அமையும். இப்படி நாம் நம்மைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை தருபவற்றையே தொடர்ந்து செய்து வருகின்றபோது நமது இந்த மனநிலை அவர்களால் நன்கு கவனிக்கப்படும். நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகளை நிச்சயம் அவா;கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். இதன் எதிரொலி என்னவாகும்? அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் நல்லவர்களாகவே நடந்துகொள்வார்கள்.

நமது நடத்தை அவர்களிடம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். நமது நல்ல பண்பு அவர்களிடம் இருக்கின்ற நல்ல பண்பைத் துhண்டும். அப்போது இந்த இருவரிடையே நல்லுணர்வு மலர்கின்றது. இதையே ஒவ்வொரு உறவிற்கும், ஓரோர் நட்பிற்கும் பயன்படுத்துகின்றபோது அங்கு நல்ல எண்ணம் வளர்கின்றது.

இப்படி மெதுமெதுவாக நமது நல்ல பண்புகளால் நம்மைச் சேர்ந்தவர்களும் தங்களது நல்ல பண்புகளை மீட்டெடுக்க நாம் உதவுகின்றோம். அப்பொழுது நல்லவன் என்ற பெயர் தானாக நம்மை வந்து அடைகின்றது. இதைத்தான் நல்லவன் என்ற பெயரெடுக்க நாள் செல்லும்! என்று கூறினர்.

இந்த உயர்ந்த மன நிலையில் நாம் தொடர்ந்து வாழ முற்படுகின்றபோது நமது உறவுகளும், நம்மைச் சார்ந்த உடமைகளும் மன உளைச்சலைத் தருவதில்லை, மனச்சஞ்சலத்தைத் தருவதில்லை. மாறாக நமது உறவுகள் நம்மிடம் அன்போடு நடந்துகொண்டு நம் உயர்விற்கு உதவும் படிக்கட்டுகளாகத் திகழ்கின்றனர். நம்மைச் சார்ந்த பொருள்கள் நம் பேராசையைத் துhண்டாத விதத்தில் நமக்குப் பக்க பலமாக மட்டுமே இருந்து நம்மை சௌகரியப்படுத்துகின்றன. நமது செயல்களைச் சரியாகவும் விரைவாகவும் செய்து முடிக்க உதவும் கருவிகளாக மட்டுமே அவை இருக்கின்றன.

இந்த நிலை உருவாக நம்மிடம் தன்னைப்போல பிறரையும் நினைக்கின்ற அகமாற்றம் மட்டுமே தேவை!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s