குருவைத் தேடி – 50

குரு தேவர் அமிர்த சமாதி அடைந்த கதை

குருதேவர் அரசனை விட்டுக் காணகாபுரத்தை அடைந்த பிறகு என்ன நடந்தது? என்று நாமதாரகன் சித்தரைக் கேட்க, சித்தர், இந்தச் சரித்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்வதாலும், கேட்பதாலும் சகல தோஷங்களும் தொலைந்து போகின்றன. நினைத்த காரியம் கைகூடும் என்று சொல்லிவிட்டு, முஸ்லிம் அரசனைப் பிரிந்து காணகாபுரத்திற்கு வந்தாரல்லவா? பிறகு அவர் மனதில் இனியும் தாம் பூமியில் இருப்பதில் அர்த்தமில்லை என்ற யோசனை தோன்றிவிட்டது. முஸ்லிம் மக்களிடையேயும் தமது புகழ் பரவிவிட்டதால், தர்ம சாஸ்திரங்களுக்குப் புறம்பாக வேற்று மதத்தினரும் இனி தமது அற்ப காரிய வெற்றிகளுக்காகத் தம்மை நாடி வரக்கூடும் என்று நினைத்துத் தமது தேகத்தை மறைத்துவிட நிச்சயித்தார். அதைத் தம் நெருங்கிய சீடர்களிடம் மட்டும் தெரிவித்து விட்டு ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனரைத் தரிசிக்கப் போவதாக மக்களிடம் சொன்னார்.

இத்தகவலைக் கேள்விப்பட்டதும் ஊரிலுள்ள அத்தனை பேரும் மடத்தில் கூடி விட்டனர். அனைவரும் குருவைப் பிரார்த்திக்க ஆரம்பித்தனர். “குருவே! எங்களை விட்டு ஸ்ரீசைலத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? மேலும் அவதாரத்தை முடிவு செய்யப் போவதாகவும் அறிகிறோம். இத்தனை நாளும் பரப் பிரமம்மாகிய தாங்கள் மனித உரு எடுத்து எங்களை ரட்சித்து வந்தீர்கள். உங்களைத் தரிசித்து வாழ்ந்ததால் எங்கள் பாவங்கள் தொலைந்தன. இனி யாரை அடைவது? எங்களுக்கு என்ன கதி?

பக்தர்களுக்கு ஓர் ஓடமாக இருந்து சம்சாரத்திலிருந்து கரை சேர்த்தீர்கள். காமதேனுவைப் போல் கேட்ட வரங்களையெல்லாம் வழங்கினீர்கள். தங்களால் இந்த காணகாபுரம் தெய்வ லோகமாகக் காட்சியளித்தது. நீங்கள் இல்லாத இந்த ஊர் விளக்கில்லாத வீட்டைப் போலவும், தாயை இழந்த குழந்தை போலவும், நீரில்லாத தாமரை போலவும், சிலை இல்லாத கோவிலைப் போலவும் தோன்றுமே, என்ன செய்வது? என்று புலம்பி நமஸ்கரித்தனர்.

அப்பொழுது குருதேவர் சிரித்த முகத்துடன் ஊர் மக்களையும் பக்தர்களையும் அமைதிப்படுத்தினார். மேலும் அவர், “அன்பர்களே! துக்கப்பட வேண்டாம். இப்போது உள்ள நிலையைச் சொல்கிறேன், கேளுங்கள். நான் எங்கும் போகப் போவதில்லை. இந்த அமரஜா நதியில் ஸ்நானம் செய்து கொண்டு இந்த மடத்தில் தான் வசிக்கப் போகிறேன். ஆனால் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. இன்னும் அதிகமான பேர், பல ஜாதிக்காரர்களாகத் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக என்னைத் தேடி வரலாம். அதனால் ஊரில் உள்ளவர்களுக்கும் பலவித தொந்தரவுகள் ஏற்படும். எனவே தான் யார் கண்களுக்கும் தென்படாமல் நான் மறைய வேண்டியிருக்கிறது. நான் புற உலகுக்குத் தான் மறைகிறேனே ஒழிய, என்னை மனப்பூர்வமாக வழிபடும் பக்தர்களுக்கு நான் புலப்படுவேன். எனவே கவலைப்பட வேண்டாம்.

இந்த மடத்தில் என் பாதுகைகளை (காலணிகள்) வைத்துப் போகிறேன். எனது பாதுகைகளையும், கல்பக விருட்சமாகிய அரச மரத்தையும் என்னை நினைத்து வணங்கினால் சந்தேகமே இல்லாமல் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இங்குள்ள விநாயகரையும், எனது பாதுகைகளையும் பூஜித்து மூன்று வேளையும் ஆரத்தி எடுங்கள். எனது சக்தியாக நான் இந்த மடத்திலேயே தங்கியிருப்பேன். இது சத்தியம். என்னை நம்புங்கள்!” என்று சொல்லிவிட்டு குருதேவர் புறப்பட்டார். அனேகர் அவரின் பின்னாலேயே சென்றனர். கொஞ்ச துhரம் சென்றதும் வந்தவர்களையெல்லாம் திரும்பிப் போகச் சொல்லி சிஷ்யர்களுடன் விரைவாக நடந்து சென்றார்.

வேறு வழியின்றி மக்கள் மடத்திற்குத் திரும்பினர். அங்கே பார்த்தால் குருதேவர் உட்கார்ந்திருக்கிறார். இப்போது தானே வழியனுப்பிவிட்டு வந்தோம். அதற்குள் இங்கே எப்படி? என்று மிக ஆச்சர்யமாகக் குருவை வணங்க, அவர்களை ஆசீர்வதித்துவிட்டுக் குரு மறைந்து போனார். மக்களின் வியப்பிற்கு அளவில்லை. தான் இங்கேயே அரூபமாகத் தங்கியிருப்பதாகச் சொன்ன வார்த்தையைக் குரு நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்பதைப் பக்தர்கள் புரிந்துகொண்டு ஜய! ஜய! குரு தேவா! என்றுப் போற்றிப் புகழ்ந்து வணங்கி மகிழ்ந்தனர்.

week50இங்கு இப்படி இருக்க குருதேவர் தன் நான்கு சிஷ்யர்களுடன் ஸ்ரீசைலத்தின் அருகிலுள்ள பாதாள கங்கைக் கரையை அடைந்தார். மல்லிகார்சுனருடன் தான் ஐக்கியமாகி விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு தம்முடன் வந்த நான்கு சிஷ்யர்களிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தெப்பத்தைத் தயாரிக்கச் சொன்னார். சீடர்களும் வாழை மரங்களைக் கொண்டு தெப்பம் தயாரித்து, அதில் பலவித அழகிய மலர்களால் ஒரு மலர் ஆசனத்தை அமைத்தனர். தெப்பம் கங்கையில் மிதந்தது. குருதேவர் அதன் மீது பரமானந்தத்துடன் அமர்ந்து கொண்டார். இந்த சம்பவம் கி.பி. 458ம் ஆண்டு பகுதான்ய வருடம், சிசிர ருது, மாசி மாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதியில், குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்பராசியிலும் இருக்கும்போது நடைபெற்றது. இத்தகைய சுப தினத்தில் குரு தம்முடைய ஆனந்த வீட்டை நோக்கிப் பயணமானார்.

குருதேவர் புறப்படும் முன் தன் நான்கு சிஷ்யர்களை நோக்கி, “நான் மறைகிறேனே என்று துக்கப்படாதீர்கள். நான் முன் போலவே காணகாபுரத்தில் வசிப்பேன். திட பக்தியுடன் யார் நினைக்கிறார்களோ நான் அவர்களுக்குத் தரிசனம் கொடுப்பேன். நான் என் ஸ்தாபனத்தை அடைந்ததும், அதற்கு அடையாளமாக உங்களுக்குப் புஷ்பங்களைப் பிரசாதமாக அனுப்புகிறேன். அவற்றை நீங்கள் எடுத்துப் பொக்கிஷமாக வைத்துப் பிராணனைப்போல் பாதுகாக்க வேண்டும்.

அதோடு மட்டுமின்றி எவனொருவன் என் சரித்திரத்தைப் படிக்கிறானோ, யார் என்னைப் பற்றிய பாடல்களைப் பக்தியுடன் பாடித் துதிக்கின்றார்களோ, அவர்கள் எனக்குப் பிரியமானவர்கள். எவன் ராகங்களுடனும் பாவங்களுடனும் பக்தியுடனும் பஜனை செய்து ஆனந்த கீர்த்தனம் செய்கிறானோ, அவன் எனக்குப் பிரியமானவன். என்னுடைய கதையை வாசிப்பவர்கள் வீட்டில் நான் ஸ்ரீபதியாக வசிப்பேன். எல்லாவித நன்மைகளையும் அருளுவேன். அவனுக்கு யம பயம் ஏற்படாது. அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். குடும்பத்தில் நிம்மதியுடன் வாழ்வான். என் சொல்லின் மீது நம்பிக்கை வைத்தால் சத்தியமாக சுகம் பெறுவீர்!” என்று சொல்லித் தெப்பத்துடன் அப்படியே மறைந்து போனார்.

ஸ்ரீ குருதேவ தத்தா!

சிஷ்யர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென்று மறைந்தார். சிஷ்யர்கள் திகைத்துப்போய் பெரும் துக்கத்துடன் மரம்போல் அசையாமல் நின்று விட்டனர். சற்று நேரத்தில் எதிர்க்கரையிலிருந்து ஓர் ஓடக்காரன் வந்தான். அவன் சிஷ்யர்களிடம், ஒருவர் கையில் தடி வைத்துக்கொண்டு, காலில் ஸ்வர்ணப் பாதுகை அணிந்து, மின்னலைப் போல் ஒளி வீசிக்கொண்டு சந்நியாசியைப் போல் என்னிடம் வந்து தன் பெயர் நரஸிம்ம ஸரஸ்வதி என்று சொன்னார். அவர் மேலும் தான் மறையப் போவதாகவும், இருந்தாலும் காணகாபுரத்தில் வசிப்பேன் என்றும், கவலைப்படக் காரணமில்லை என்றும், கங்கையில் மிதந்து வரும் பூக்களை எடுத்துக்கொண்டு அமைதியாகப் போகும்படி அவர் உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்று கூறி விடை பெற்றான்.

இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் குருவின் பிரசாதமான பூக்கள் கங்கையில் மிதந்து வந்தன என்று சித்தர் சொன்னதும் நாமதாரகன், “எத்தனை புஷ்பங்கள் பிரசாதமாக வந்தன? அவற்றை யார் யார் அடைந்தார்கள்?” என்று மிக ஆவலாய் பக்தி பூர்வமாக வினவினான். அதற்கு சித்தர், நீ மிகவும் விவேகமான கேள்வி கேட்டாய். குருதேவர் காணகாபுரத்தில் இருந்தபோது அவருக்கு அனேக சிஷ்யர்கள் இருந்தனர். ஆனால் அவர் சமாதி அடையும் தருணத்தில் அவர்களில் பலர் தீர்த்த யாத்திரை போனார்கள். சந்நியாசிகளாக சிலர் போய் விட்டனர். இல்லறவாசிகளாக சிலர் இருந்தனர்.

குருதேவர் இறுதியில் ஸ்ரீசைலத்திற்குப் புறப்பட்டபோது, நாங்கள் நான்கு பேர் தான் உடன் இருந்தோம். ஸாயம் தேவர், நந்திநாமா, நரஹரி, நான் ஆகிய நால்வரும் குருசேவையைக் கடைசி வரை செய்தோம். வந்த நான்கு புஷ்பங்களை நாங்கள் நால்வரும் அடைந்தோம். அந்தக் குரு பிரசாதத்தை எங்கள் சிரசின் மீது பக்தியுடன் வைத்துக் கொண்டோம்!” என்று சொல்லி அவர் பெற்ற பிரசாதத்தைக் காண்பி;க்க, நாமதாரகன் அதை ஆவலுடன் வாங்கித் தலைமீது வைத்துக்கொண்டு ஆனந்தமடைந்தான்.

பிறகு குருதேவரைக் காணமுடியாமற் போயிற்றே என்று கலங்கினான். உடனே சித்தரை வணங்கி, இவ்வளவு மகா அற்புத லீலைகளை உங்கள் மூலம் அறியக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே, நான் என்ன பாக்கியம் செய்தேனோ என்று கண்ணீர் சொரிய அப்படியே சற்று நேரம் சமாதி நிலையில் தோய்ந்து போய் நின்றான். அவனது பக்திப் பெருக்கைப் புரிந்துகொண்ட சித்தர் அவரைத் தேற்றினார்.

“குழந்தாய்! இப்படி நீ கலங்குவதால் பயனில்லை. இனி நீ இந்த ஞானம் பெற்ற நிலையில் மேலும் குருதேவரை பக்தி செய்து, மற்றவரும் இந்த வழியில் செல்வதற்கு நீ உதவ வேண்டும். இனி நீ சித்தத்தை சுத்தமாக வைத்துக் குரு சரணங்களில் பக்தி கொண்டு, சாஸ்திரங்களில் சொன்ன விதமாய் நடந்து கொள்ள வேண்டும். மேலும் நீ என் குருநாதரின் சரித்திரத்தை மீண்டும் மீண்டும் அடங்காத ஆர்வத்துடன் கேட்டதால், எனக்கும் நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வந்து உன்னிடம் சொல்ல முடிந்தது. அதனால் மற்றவர்களுக்கும் இந்த சரித்திரத்தை அறிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. உன்னை நான்மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

சித்தர் கூறியவற்றைக் கேட்ட நாமதாரகன், தன் கண்களைத் துடைத்துக்கொண்டு கூப்பிய கைகளுடன் சித்தர் முன் நின்று “சுவாமி! கருணைக் கடல் என்றே உங்களைச் சொல்ல வேண்டும். இந்த சம்சாரக் கடலைத் தாண்டுவதற்கு மிகவும் எளிய வழி குருவைச் சரணடைந்து வாழ்வது தான் என்று சொல்லாமற் சொல்லிவிட்டீர்கள். இனி குரு ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியின் அற்புதங்களை நினைத்து நினைத்து அவருடைய கருணையை உணர்ந்து நானும் என்னைச் சேர்ந்தவர்களும் அவர் மீது பக்தி கொண்டவர்களாய் நல்ல முறையில் பக்தி செய்து வாழ்வோம்! எல்லோரையும் ஆசீர்வதிக்க வேண்டும்! என்று கேட்டுக் கொண்டான்.

அதன் பின் சித்தரும் நாமதாரகனும் காணகாபுரத்திற்குச் சென்று, அமரஜா, பீமா நதிகளில் ஸ்நானம் செய்து அரச மரத்தை வலம் வந்து வணங்கிக் குருவின் பாதுகைகளை முறைப்படி பூஜை செய்து வணங்கிக் குருவை நினைத்து வழிபாடு செய்து தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பினர்.


 

குறிப்பு: குரு நரஸிம்ம ஸரஸ்வதியின் நான்கு சிஷ்யர்களின் ஒருவரான ஸாயம் தேவர் என்பவரின் புதல்வன் நாகநாதனின் வம்சத்தின் வழி வந்தவர் தான் இந்த நுhலில் தன்னைக் கதையில் கேள்வி கேட்கும் பாத்திரமாக வைத்துக் குருவின் கதையை எழுதிய நாமதாரகன் என்பது குறிப்பால் உணரப்படுகின்றது. ஏனெனில் மூல நுhலாகிய மராட்டிய மொழி சரித்திரத்தில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. தமிழ் நூலில் மறைமுகமாகத் தெரிய வருகிறது.

 


 

குரு வாழ்க! குரு பக்தி வளர்க! குருவே சரணம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s