குருவைத் தேடி – 49

ராஜபத்தினி குழந்தையைச் சுமந்துகொண்டு காட்டிலுள்ள பாம்பு, புலி ஆகியவற்றைக் கண்டு பயந்தவளாய், கல்லிலும், முள்ளிலும் அலைந்து திரிந்தாள். பசியும், தாகமும் அவளை வாட்டின. மனம் நொந்து போய்க்கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் ஆட்டிடையன் ஒருவனைக் கண்டாள். தெய்வத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்து குடிக்கக் கொஞ்சம் நீர் எங்கேயாவது கிடைக்குமா? என்று கேட்டாள். அந்தச் சிறுவன் அவளை தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்துச் சென்றான். கிராமத்திலுள்ளவர்கள் இவளுடைய அரச தோற்றத்தைக் கண்டு ஓடி வந்து பார்க்க, அந்த அழகிய ஊருக்கு யார் அரசன்? என விசாரித்தாள்.

அந்த ஊர் அரசனின் பெயர் பத்மாகரன் என்றும், அவன் தர்ம சிந்தனை உள்ளவன் ஆதலால் அவளைக் காப்பாற்றுவான் என்றும் மக்கள் தெரிவித்தனர். அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவி, அரச சபைக்கு அவளை அழைத்துச் சென்று அவள் அங்கு வந்த கதையைத் தெரிவித்தார்கள். மன்னன் மனமிரங்கி அவளுக்கு ஓர் வீட்டைத் தானமாகத் தந்து அவளது சாப்பாட்டிற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்தார்.

இவ்விதமாக வசுமதியும் அவளது குழந்தையும் சற்று நிம்மதியாக இருக்கும்போது திடீரென்று குழந்தைக்கு ரண சுரம் ஏற்பட்டு அது அதிகமாகி உயிரிழந்து விட்டது. வசுமதி துக்கம் தாங்காமல் மயங்கி விழுந்தாள். பிறகு, “என் ராஜகுமாரா! என்னை விட்டு எங்கு சென்றாய்? என் கணவனும் இந்த அரசனும் என்னைக் கைவிட்டாலும் நீ காப்பாற்றுவாய் என்று நம்பிக்கை வைத்திருந்தேனே. என்னை இந்த அன்னிய இடத்தில் விட்டுவிட்டுச் சென்று விட்டாயே! என்று கதறி அழுதாள். இவளுடைய கஷ்டத்தைக் கண்டு ஊர் மக்கள் மனம் வருந்தினர். புத்திரசோகம் மிகக் கொடியது. அது ஒருவரை அக்னியைப் போல் எரித்துவிடும் என்று பேசிக்கொண்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் போன ஜன்மத்தில் இந்த பிராமணனும் வேசியும் உபசரித்த விருஷபயோகி அந்த ஊரை அடைந்தார். அரசன் பத்மாகரன் அவரை வரவேற்றுப் பலவித பூஜைகள் செய்து உபசரித்தான். அப்போது அழுகுரல் சத்தம் கேட்கவே முனிவர் அதைப் பற்றி விசாரிக்க, வசுமதியின் கதையை பத்மாகரன் அவரிடம் கூறி, அவளது குழந்தை இறந்து விட்டதால் அவள் இப்படி அழுகிறாள்! என்று சொன்னார். முனிவர் அதைக்கேட்டு அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்து அவளுக்குப் பலவிதமாக ஆறுதல் மொழிகள் கூறினார். “பெண்ணே! சாவைக் கண்டு நீ ஏன் இவ்வளவு துக்கப்படுகிறாய்? துக்கப்படுவதால் என்ன பிரயோசனம்? பிறப்பவர் அனைவரும் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். பிறக்கிறவன் யார்? இறப்பவன் யார்? ஜீவனுக்குப் பிறப்பு இறப்பு கிடையாது. தேகத்திற்குத்தான் இவை எல்லாம் உண்டு. இந்தத் தேகமோ நதியில் வரும் நீர்க்குமிழி போன்றது. பஞ்ச பூதங்களான பூமி, தண்ணீர், நெருப்பு, வாயு, ஆகாயம் இவை ஒன்றுகூடி இந்த உடலாகத் தோன்றுகிறது. இவை மறுபடியும் தத்தம் இடத்தை அடைந்து விட்டால் பிராணன் போயிற்று என்று நாம் கலங்குகிறோம். கால சக்கரம் எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. முக்குணங்களான சத்துவ, ரஜஸ், தமஸ் குணங்களால் எல்லோரும் இயங்குகிறார்கள். முக்குணங்கள் மாயையால் உண்டாகின்றன. இந்த அடிப்படையில் தான் மனிதர் பிறக்கின்றனர்.

சத்துவ குணமுடையவர்கள் தேவர்கள் என்றும், மனிதர்கள் ரஜோ குணமுள்ளவர்கள் என்றும் ராட்ஷசர்கள் தமோ குணமுடையவர்களென்றும் கூறப்படுகிறது. இந்த குணங்களால் அவரவர் தமது கர்ம பலனின்படி சுக துக்கங்களை அனுபவிக்கின்றனர். தேவர்கள் சொர்க்கத்தில் சுக வாழ்வு வாழ்ந்தாலும் அவர்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்று இருக்கும்போது, மானிட வாழ்க்கை எம்மாத்திரம்? இதைப் புரிந்துகொண்டதால் தான் ஞானிகள் இறப்பையும் பிறப்பையும் சமமாகப் பாவிக்கிறார்கள். எப்போது கர்ப்பத்தில் வந்தோமோ அப்போதே மரணமென்பது உண்டு என்பதை உணர வேண்டும்.

சிலர் இளம் பருவத்திலும் சிலர் முதுமையிலும் இறக்கின்றனர். பிரம்ம தேவன் எழுத்தையும் காலனையும் எவரும் வெல்ல முடியாது. ஆகையால் அழியக்கூடியதான இந்த உடலைக் குறித்து விசனப்படாதே. நாம் எடுத்த கணக்கற்ற ஜன்மங்களில் எத்தனை தாயோ? எத்தனை குழந்தைகளோ? அத்தனைக்கும் துக்கப்பட்டு முடியுமா? எனவே நீ அழுவதில் லாபமில்லை. பரமேஸ்வரனைப் பக்தி செய்து அமைதியுடன் வாழ்வாய்!” என்று எடுத்துச் சொன்னார்.

வசுமதி அழுதுகொண்டே, “முனிவரே! நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. என் கணவனையும், நாட்டையும் விட்டு இந்தக் குழந்தைமேல் நம்பிக்கை வைத்து அன்னிய தேசத்திpல் அனாதைபோல் வாழ்ந்தேன். இங்கு இப்படி நடந்து விட்து. இனி நான் மட்டும் இருந்து என்ன பயன்? நானும் பிராணனை விடத் தயாராய் இருக்கிறேன். என்னை ஆட்கொள்ள வேண்டும்!” என்று சொல்லி அவரை வணங்கினாள்.

பூர்வ ஜன்மத்தில் நடந்த உபசார உதவிகளை நினைத்து முனிவர் மனதில் மகிழ்ச்சி கொண்டவராய், விபூதியை எடுத்து அந்தக் குழந்தை மீது தெளிக்க, இறந்த குழந்தை உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்தது. அதன் ரணங்களும் ஆறிப்போய் சாதாரண உடலுடன் திகழ்ந்தது. வசுமதி குழந்தையுடன் முனிவரை நமஸ்கரித்தாள். அந்தச் சிறுவன் நீண்ட ஆயுளுடன் தன் நாட்டை ஆண்டு சிறப்பாக வாழ்வான் என்று விபூதி கொடுத்து ஆசி வழங்கி முனிவர் மறைந்து போனார். சத் புருஷருக்கு உண்மையான பக்தியுடன் சேவை செய்தால் எந்தவித ரணமும் குணமாகும் என்று அந்த யோகி அரசனுக்கு ஆறுதலாகக் கூறினார்.

இதைக்கேட்டு அரசன் யோகியை வணங்கி; அப்படிப்பட்ட சத் புருஷனை எங்கே காணலாம்? அவர் இருக்குமிடத்தைத் தெரிவித்தால், நான் அங்கு சென்று தரிசிப்பேன் என்று கூறினான். அதற்கு அந்த யோகி பீமா நதி தீரத்தில் காணகாபுரம் என்ற இடத்தில் ஒரு சத்புருஷர் இருக்கிறார். அவரைத் தரிசித்தால் உன் வியாதி குணமடையுமென்று சொல்ல, அரசனும் உடனே அங்கிருந்து புறப்பட்டுப் பலநாள் பயணம் செய்து காணகாபுரத்தை அடைந்தான். அங்குள்ள மடத்திற்குச் சென்று குருவைப் பற்றி விசாரித்தான்.

முஸ்லிம் அரசனைக் கண்ட மக்கள் குருவை அவன் என்ன செய்துவிடுவானோ என்று பயந்து, ஒருவரும் பதிலளிக்கவில்லை. இதனால் சினம் கொண்டு அவன் கொஞ்சம் கடுமையாக வினவ, குருதேவர் வழிபாடு செய்வதற்காக அமரஜா நதி சங்கமத்திற்குச் சென்றிருப்பதாகவும், மதியம் தான் திரும்புவாரென்றும் பதில் அளித்தனர். அரசன் தன் பரிவாரங்களை அங்கே நிறுத்தித் தான் மட்டும் தனியாக குருவைத் தரிசிக்கப் பல்லக்கில் சென்றான். சங்கமத்தில் அவரை துhரத்திலிருந்து கண்டதும் பல்லக்கிலிருந்து குதித்துச் சென்று குருரவை நமஸ்கரித்தான்.

அவனைக் கண்டதும் குருதேவர் அவனது முன் ஜன்மப் பெயரான ரஜகனே என்று அழைத்து, எங்கு உன்னை வெகுநாளாகக் காணோம். இப்போது எங்கிருக்கிறாய்? என்று கேட்டார். அவனுக்கு உடனே பூர்வ ஜென்ம ஞாபகம் ஏற்பட்டுக் குருவின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி புரண்டு கதறி அழுதான். “சத்குருவே! என்னை இப்படிக் கைவிடலாமா? உம்முடைய சரணங்களை மறைத்து என்னைப் பரதேசியாக்கி விட்டீர்களே. மதம் என்ற அந்தகாரத்தினால் சூழப்பட்டு உம்மை மறந்து விட்டேன். மாயையில் கிடந்து தத்தளிக்கிறேன் என்னுடைய அறியாமையைப் போக்கி என்னைக் காத்தருள வேண்டும். ராஜ வாழ்க்கை எனக்குப் போதும். உங்கள் திருவடிகளை வணங்கும் பாக்கியத்தைத் தாருங்கள்” என்று புலம்பி அழுது, “எனக்குத் துடையில் ராஜபிளவை என்னும் பெரும் புண் ஏற்பட்டு மிகவும் தொந்தரவு கொடுக்கிறது. உம்முடைய கிருபையான பார்வையால் அதைக் குணப்படுத்த வேண்டும்” என்று வேண்டினான்.

குருதேவர் பழைய பக்தனைப் பார்த்து “உனக்கு ஏது ராஜபிளவை?” என்று சிரித்துக்கொண்டே சொல்ல அந்தப் புண் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. இதைக்கண்டு அவன் ஆச்சர்யப்பட்டு குருவின் சரணங்களில் மீண்டும் வணங்கி அவரை நோக்கி, “சுவாமி! உம்முடைய அருளால் ராஜபதவியையும், சகல செல்வங்களையும், நல்ல குடும்ப விருத்தியையும் பெற்றேன். மேலும் ஓர் ஆசை இருக்கிறது. அதாவது, நீர் எனது ராஜ்ஜியத்திற்கு வந்து நான் பெற்ற பேறுகளைக் கண்டு களிக்க வேண்டும்” என்று கூறினான்.

அதற்குக் குருதேவர், நான் தபஸ்வி. உன் குலமோ பசுவைக் கொன்று மாமிசம் சாப்பிடுவது. மதுபானம் அருந்துவது உன் சாதிப் பழக்கம். அங்குள்ள செயல்பாடுகள் எனக்கு ஒத்து வராது என மறுத்தார். அரசனோ தன்னை மிலேச்சன் எனக் கருதாமல் பழைய சிஷ்யனான வண்ணான் என்று நினைத்து அவனுடைய ஆசையைப் பூர்த்தி செய்யும்படியும், தான் அனைத்தையும் துறந்து குருசேவையில் ஈடுபடுவதாகவும், மறுபடியும் நமஸ்கரித்துத் திரும்ப வேண்டினான்.

கலிகாலம் முற்றிக்கொண்டு போகிறது. இனி வெளிப்படையாக இப்படி இருக்க இயலாது. கண் காணாமல் மறைந்து விட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டு குரு நாதர், அரசனிடம், “நீ இப்போது உன் நகரத்;திற்குப் போ. நான் தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்டுப் பாபவிநாசம் வருவேன். அப்போது நீ என்னை அங்கு வந்து சந்திப்பாய்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அரசன் மிகவும் கவலைப்பட்டுத் தன் நகரத்தை அடைந்தான். இனி அவரை எங்கு சந்திப்பது என்ற கவலையுடனே காலம் கழித்தான். குரு அவனைப் பாபவிநாசத்திற்கு வரச் சொன்னது ஒருநாள் நினைவிற்கு வந்தது. உடனே ஒரு குதிரையில் ஏறிப் பல நுhறு மைல்கள் பயணம் செய்து பாபவிநாசத்தை அடைந்தான. அங்கு குரு வீற்றிருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வணங்கித் தன் நகரத்திற்கு வரும்படி கெஞ்சினான். இறுதியில் குருதேவர் இணங்க, நகரை மிக அழகாக அலங்கரிக்கச் செய்து, குருவை ஒரு பல்லக்கில் அமர்த்தித் தான் நடந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான்.

ஊரிலுள்ள இந்துக்கள் இந்தக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து குருவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முஸ்லிம் மக்களோ இப்படி ஒருபிராமண சந்நியாசியை நமது அரசன் இப்படிக் கொண்டாடி அழைத்து வருகிறானே! என்று இழித்துப் பேசினர். சிலர் இவர் யாரோ மகானாக இருக்க வேண்டும் என்று கருதி வணங்கினர். சிலர் அரசன் முகமதியனாக இருந்தாலும் மத வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்கிறானே! என்று பாராட்டினர்.

அரசன் குருவை மேள தாளத்துடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று சிம்மாசனத்தில் அமர்த்தி ராஜகுலப் பெண்களைக் கொண்டு ஆரத்தி எடுக்கச் செய்தான். குருதேவரின் நான்கு சிஷ்யர்களைத் தவிர மற்றவர்களை உள்ளே அனுமதிக்காமல் அரசன் தனது மனைவி, மற்ற அந்தப்புரப் பெண்களுக்கும், புத்திர, பௌத்திரர்களுக்கும், சகோதரர்களுக்கும் தரிசனம் செய்து வைக்க அனைவரும் குருவை வணங்கினர்.

அரசன் குருவை நோக்கி, “பு+ர்வ புண்ணிய வசத்தால் தங்களின் பாத தரிசனம் கிடைத்தது. அது மறக்காமல் இருக்க வேண்டும்” என்று வேண்டினான். மேலும் எனக்கு இனி ராஜ்ய பாரம் போதுமென்றும், சரண சேவை செய்ய அனுமதிக்கும்படியும் வேண்டிக் கொண்டான். குருவும், அப்படியெனில் அரசாட்சியைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு ஸ்ரீசைல பர்வதத்திற்கு வரும்படி அவனிடம் சொன்னார். அதன் பின் அனைவரையும் ஆசீர்வதித்து விரைவாக அரண்மனையிலிருந்து வெளியேறி கௌதமி தீர்த்தத்தை அடைந்தார். அங்கு நீராடி வழிபாடுகளை நடத்திக் காணகாபுரத்திற்குத் திரும்பினார்.

இனி ஓரிடத்திலேயே தங்கியிருந்தால் மக்கள் மிக அதிகமாக வரத் தொடங்கி ஏதேதோ வரங்களைக் கேட்க முற்படுவார்களென்று கருதி குரு தன் நெருங்கிய சிஷ்யர்களுடன் காணகாபுரத்தை விட்டு ஸ்ரீ சைல பர்வதத்திற்கு ரகசியமாகப் புறப்பட்டுப் போய் விட்டார். ஊர் மக்கள் குருவைக் காணாமல் வருந்திப் பிறகு அவர் தங்களுடனேயே இருப்பதாக நினைத்து அவருடைய பாதுகைகளுக்குப் பூஜை வழிபாடுகளைச் செய்து மானசீக பக்தியுடன் அவரை வணங்கி வரலாயினர். குருவும் தன் சக்தியால் அங்குள்ள மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் பாலித்து வந்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s