குருவைத் தேடி – 48

குரு சென்றதும் விவசாயி ஊருக்குள் சென்று நிலத்தின் சொந்தக்காரனிடம் பயிர்களை அறுக்க அனுமதி கோரி, “பயப்பட வேண்டாம், உங்களுக்குக் கொடுக்க வேண்டிய தானியத்தை எப்போதும் போல் அளந்து விடுவேன்” என்று உறுதி கூறினான். யஜமானன் அதற்கு இணங்காமல் இப்போது தான் பயிரில் கதிர்கள் விட்டிருக்கின்றன. இப்போதே அறுப்பதாவது? கூடாது! என்று நிராகரித்து விட்டான். விவசாயி எவ்வளவோ கெஞ்சியும் அவன் ஏற்காததால் வழக்கத்தைக் காட்டிலும் இரட்டிப்பு தானியத்தை அளந்து தருவதாகக் கூறவே, சொந்தக்காரன் அதற்கு ஒரு பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கினான்.

விவசாயியின் கிறுக்குத்தனத்தை அறிந்ததும், அவனது வீட்டிலிருந்து மனைவி முதலானோர் ஓடிவந்து, ஆஹா! நம் சோற்றில் மண் அள்ளிப்போடுகிறாரே. இந்தக் காலத்தில் யாராவது அறுவடை செய்வார்களா? உமக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா? யாரோ ஒரு சந்நியாசி ஏதோ சொன்னாரென்று இளம் பயிர்களை அறுப்பார்களா? என்று பலவிதமாகப் புலம்பினர். பண்ணை முதலாளியிடம் ஓடிப்போய் முறையிட, அவரோ தனக்கு ஒரு கவலையுமில்லை என்றும் ஒன்றுக்கு இரண்டு மடங்கு தானியத்தை அளிப்பதாகப் பத்திரம் எழுதி வாங்கி வைத்திருப்பதாகவும் சொல்லி அவர்களை அனுப்பி விட்டான். இருந்தபோதிலும் யஜமான் சிறிது யோசித்து வேலையாட்களின் மூலம் வேளாளனுக்குப் புத்தி புகட்டும்படி சொல்லியனுப்பினார், அவனோ, அவர் இதில் தலையிட வேண்டாம். அப்படி அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் தன்னுடைய கால்நடைகளையும் அடமானம் வைப்பதாகத் திருப்பி அனுப்பி விட்டான். அதோடு மட்டுமின்றி மடமடவென்று ஆட்களைக் கூப்பிட்டு குரு திரும்பி வருமுன் எல்லாவற்றையும் அறுத்து விட்டான்.

week48குருதேவர் திரும்பி வந்து பார்த்துவிட்டு, என்ன இது? நான் சொன்னபடியே செய்து விட்டாயே! ஏதோ வேடிக்கைக்காக அல்லவா சொன்னேன்! என்றார். அதற்கு வேளாளன் குருவின் வாக்கு எனக்கு தெய்வ வாக்கு! என்று சொல்லி வணங்கினான். “அப்படியானால் சரி. என் சொல்லின் மீது நம்பிக்கை இருந்தால் உனக்கு அனேக மடங்கு பயிர் விளையும்”! என்று சொல்லி அவர் மடத்திற்குச் சென்றார். வேளாளனும் வீட்டை அடைய ஊரிலுள்ளவர்கள் அவன் செய்த காரியத்தைப் பரிகசித்துப் பலவிதமாகப் பேசினர். வீட்டிலோ எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

விவசாயி அவர்களைத் தேற்றிக், “கவலைப்படாதீர்கள். குருவை நீங்கள் அறிய மாட்டீர்கள் அவருடைய வாக்கு அமிர்த வாக்கு. ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் பெருகும். குரு கிருபை கிடைத்தவனுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படுமா?” என்றெல்லாம் சொல்லி சமாதானப்படுத்தினான்.

எட்டு நாட்கள் கழிந்தன. ஒன்பதாம் நாள் ஒரு பெரிய புயற்காற்று ஏற்பட்டு, ஊரிலுள்ள எல்லாப் பயிர்களும் நாசமடைந்தன. அகால மழை பெய்தபடியால் எல்லோரது பயிர்களும் சேதமடைந்தன. ஆனால் அந்த வேளாளனின் பயிர் அதற்குப் பிறகு மறுபடியும் முளைத்து நூறு மடங்கு லாபத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு கதிரிலும் பதினோரு கதிர்கள் விட்டுச் செழித்தது.

இத்தகைய விளைச்சலைக் கண்டு ஊரிலுள்ளவர்கள் ஆச்சர்யப்பட்டனர். வேளாளனுடைய மனைவி அவன் கால்களில் விழுந்து, தான் அவனை அலட்சியம் செய்ததற்கும், சந்நியாசியை நிந்தித்தற்கும் மன்னிக்கும்படி வேண்டினாள். இருவரும் சேர்ந்து பூஜை செய்து நன்றி தெரிவித்துவிட்டுத் குருவைத் தரிசனம் செய்ய வந்தனர். குருதேவர் அவர்களைப் புன்னகையுடன் வரவேற்றார். இருவருமாகக் குருவின் பாதங்களில் விழுந்து வணங்கிப் பலவிதமாகப் போற்றித் துதித்துப் பாடினர். குருவின் கிருபைக்கு நன்றி கூறி வீடு திரும்பி தானியத்தை எல்லோருக்கும் வாரி வழங்கித் தானும் செல்வந்தனாகி விட்டான். வேளாளனைக் கேலி செய்தோமே! குரு கிருபை அவனைக் காத்தது! என்று ஊரார் குருவையும் வேளாளனையும் மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டனர்.

முஸ்லிம் அரசனின் குரு பக்தி

முன்பு ஒரு அத்தியாயத்தில் ஒரு வண்ணான் தனது அடுத்த பிறவியில் முகமதியனாகப் பிறந்து அரச போகத்தை அனுபவிக்கும், வரத்தைக் குருதேவரிடம் பெற்ற கதையை எழுதியிருந்தேன் அல்லவா? அந்த வண்ணான் தற்போது இஸ்லாமிய குலத்தில் பிறந்து அவர்களின் அரசனாக வாழ்ந்தான். அவன் பூர்வ ஜன்மத்தில் விரும்பியதைப்போல் யானை, குதிரை முதலிய பரிவாரங்களுடன் அரசாட்சி செய்து சுகங்களை அனுபவித்து வந்தான். தனது முற்பிறவி வாசனையால் அவன் பிராமணர்களிடம் விசேட பக்தி செலுத்தி அவர்களுக்கு அனேகவிதத் தான, தர்மங்களைச் செய்து வந்தான். ஊரிலுள்ள இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் சமமாக நடத்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் சமமாகச் செய்து கொடுத்தான்.

இதைக்கண்டு அரசனுடைய மதகுரு அவனுக்குப் புத்தி கூற முற்பட்டார். “அரசே! நீங்கள் முகமதியனாகப் பிறந்துவிட்டு இப்படி பிராமணர்களையும், இந்துக்களையும் கொண்டாடுகிறீர்களே. இது பாவமான செயல். மந்த புத்தியுள்ள இந்துக்கள் கல், மண், மரம், நீர், கட்டை, பசுமாடு, பூமி, நெருப்பு, சூரியன், நதி, சமுத்திரம் இப்படி எல்லாவற்றையுமே தெய்வம் என்று கொண்டாடுகின்றார்கள். இப்படிப்பட்ட மூடர்களை ஆதரித்தால் நமது மதத்தின்படி நீங்கள் நீசனாகி விடுவீர்கள்” என்றார் மதகுரு.

இதைக்கேட்டு அரசன் மதகுருவை நோக்கி, “குருவே! நீர் தானே தெய்வம் எங்கும் நிறைந்திருக்கிறது என்று சொன்னீர்? பஞ்ச பூதங்களிலிருந்து தான் அனைத்தும் உண்டாகிறது என்று சொன்னீர்களே. குயவன் ஒரே மண்ணைக் கொண்டு பலவித பாண்டங்கள் செய்வது போலவும், அனேக நிறமுள்ள பசுக்களிலிருந்து ஒரே நிறமுள்ள பாலைப் பெறுவது போலவும், ஒரே தங்கத்திலிருந்து பலவித ஆபரணங்கள் செய்வது போலவும், ஒரு விளக்கைக் கொண்டு மற்ற தீபங்களை ஏற்றியதும், எல்லா தீபங்களுமே ஒரே விதமான ஒளியைத் தருவதுபோலவும், ஒரு கயிற்றில் பலவித மணிகளைக் கோர்த்து மாலையாக்குவது போலவும், ஜாதிகள் அனேகம் இருந்தாலும், அவை எல்லாமே ஒரே கடவுளிடமிருந்து தானே தோன்றியிருக்கின்றன! அப்படி இருக்கும்போது இதில் பேதம் எப்படி ஏற்படும்? எல்லோருக்கும் கடவுள் ஒருவரே. அவர் தான் சகல உயிர்களிலும் பரந்து உறைந்திருக்கிறார் என்று நினைப்பது மிக உயர்ந்த சிந்தனையல்லவா? அல்ப புத்தியுள்ளவர்கள் தனித்தனி கடவுள்களை உருவாக்கி ஒவ்வொரு விதத்தில் பூஜை செய்கின்றனர். தெய்வம் எங்குமிருக்கிறார் என்று சொல்லிவிட்டு இந்துக்களை ஏன் நிந்திக்க வேண்டும்? எல்லோரிலும் தெய்வ சக்தி இருப்பதால் யாரையும் நிந்திப்பது சரியல்ல!” என்றெல்லாம் தனக்குத் தோன்றியதை எடுத்துரைத்தான். மதகுருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இப்படி ஜாதி, மத பேதமில்லாமல் அவன் அரசு புரிந்து வருகையில் விதி வசத்தால் அவனது துடையில் பெரிய புண் (ராஜ பிளவை) ஏற்பட்டது. அனேக வைத்தியர்கள் ஏதேதோ சிகிச்சைகள் செய்தும் அது குணமடையவில்லை. என்ன செய்தும் புண் ஆறவில்லையாதலால் அரசன் பிராமணர்களை வரவழைத்து என்ன செய்வது? என்று விசாரித்தான்.

அவர்கள் அந்த வியாதிக்குக் காரணம் பூர்வ ஜன்மப் பாவத்தின் பலனென்றும், தான தர்மங்களைச் செய்தாலோ அல்லது மகான்களைத் தரிசித்துப் பூஜை செய்தாலோ ரணம் குணமாகும் என்றனர். மகான்களின் பார்வை படுவதால் பிறவியே அற்றுப் போகும்போது இந்த வியாதி எம்மாத்திரம்? என்று கூறினர். இதைக்கேட்டு அரசன் அவர்களை வணங்கித் தன்னை வேற்று மதத்தினன் என்று நிராகரிக்காமல் ஒரு அடிமையாகப் பாவித்து எல்லாவற்றையும் பற்றி விபரமாகக் கூறும்படி வேண்;டினான். அவர்கள் சற்று யோசித்து எல்லாவற்றையும் தனிமையில் தான் சொல்ல வேண்டுமென்றும், ராஜசபையில் சொன்னால் சபையோர் தங்களைக் கேவலப்படுத்துவார்கள் என்று சொல்லி மறுத்து விட்டனர். மேலும் பாபவிநாசம் என்னும் ஊருக்குப் போனால் வியாதி குணமடையும் என்று கூறவே. அரசனும் உடனே பாபவிநாசத்திற்குப் புறப்பட்டான்.

பிராமணர்கள் சொன்னபடி அவன் பாவிநாசத்தை அடைந்து தீர்த்தத்தில் மூழ்கி ஒரு பாதையில் தனியாக நடந்து போகும்போது வழியில் ஒரு யோகியைச் சந்தித்தான். உடனே அரசன் அவரை வணங்கித் தனது துடையில் ஏற்பட்ட ரணத்தைக் காட்டி அது குணமாக என்ன வழி என்று கேட்டான். யாரேனும் சித்த புருஷருடைய பார்வை ஏற்பட்டால் வியாதி குணமடையும் என்று சொல்லி அவர் அவனுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

“அவந்தி என்ற நகரத்தில் பிராமண குலத்தில் பிறந்த ஒருவன் தனது குல ஆசாரங்களை மறந்து பெண்களின் பின்னால் சுற்றித் திரிந்தான். அந்த ஊரில் பிங்களை என்ற தாசி ஒருத்தி இருந்தாள். அவள் வீட்டில் இவன் சென்று தங்கியிருக்கையில் விருட்சபர் என்னும் முனிவர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்தார். இருவரும் அவரை வரவேற்று உபசரித்து, ஆசனமிட்டுப் பலவிதமான ஆகார வகைகளை அளித்து வயிறார உண்ணச் செய்தனர். அதன் பிறகு ஒரு கட்டிலில் அவரை அமர்த்தித் தாம்பூலம் கொடுத்து அவர் நித்திரை கொள்ளும்வரை அவருக்கு இதமான சேவை செய்தனர். சுகமாகத் தூங்கி மறுநாள் காலையில் கண் விழித்த முனிவர் அவர்களை மனத்திருப்தியுடன் வாழ்த்தி ஆசி கூறிச் சென்றார். கொஞ்சம் காலமானதும் முறை தவறிய அந்தப் பிராமணனும் தாசி பிங்களையும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

அடுத்த பிறவியில் அவன் தசார்வணவம் என்கிற தேசத்தின் அரசனான வஜ்ரபாகுவின் பட்ட மகரிஷியான வசுமதி என்பவரின் கர்ப்பத்தில் சென்று தங்கி சிசுவாக வளரத் தொடங்கினான். தன் பட்ட மகிஷி கர்ப்பம் தரித்ததை அறிந்து அரசன் மகிழ்ந்து நாடு முழுவதிலும் அன்னதானம் செய்தான். ஆனால் அரசனுடைய இரண்டாவது மனைவி இதைக் கண்டு மிக்க சினமும் பொறாமையும் கொண்டாள். கெட்ட புத்தியால் அவள் வசுமதியின் உணவில் விஷத்தைக் கலந்து குடிக்கச் செய்து விட்டாள்.

தெய்வ அனுக்கிரகத்தால் விஷம் குழந்தையைக் கொல்லாமல் சரீரத்தைப் பாதித்து விட்டது. அதனால் குழந்தை பிறக்கும் போதே உடம்பு முழுவதும் புண்ணாகிப் பிறந்தது. மனம் மிக வருந்திய மன்னர் தம்பதியர் அனேக சிகிச்சைகளை மேற்கொண்டும் ரணம் ஆறவில்லை. குழந்தை அன்ன ஆகாரமில்லாமலும் நித்திரை இல்லாமலும் வாடியது. குழந்தைக்குரிய சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டதால் வசுமதியும் உடல் மெலிந்து வாடினாள். இவர்களுடைய கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் மந்திரியை அழைத்து இருவரையும் கண் காணாத துhரத்தில் கொண்டு போய் காட்டில் விட்டுவிட்டு வரும்படி சொல்ல, மந்திரி இருவரையும் தேரில் ஏற்றி அடர்ந்த கானகத்தில் விட்டு வந்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s