குருவைத் தேடி – 47

நரகேசரி சிஷ்யரான கதை

week47நாமதாரகன், பிறகு நந்திநாமா என்னவானார்? என்று கேட்க, நந்தியும், கவி நரசிம்மருடன் இணைந்து குருசேவையில் ஈடுபட்டார் என்று சித்தர் சொன்னார். உடனே நாமதாரகன், கவி நரசிம்மர் யார்? அவர் எப்படி சிஷ்யரானார்? என்று கேட்க, சித்தர் அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொன்னார்.

ஒருநாள் குருதேவரை ஹிபரகி என்ற கிராமத்திற்குப் பாதபூஜையை ஏற்கும்படி ஒருவர் அழைத்துச் சென்றார். அந்தக் கிராமத்தில் ஒரு சிவாலயம் உண்டு. அங்குள்ள லிங்கத்தின் பெயர் கல்லேச்வரர். அந்த லிங்கத்தை நரகேசரி என்ற பிராமணன் தினமும் பூஜித்து, அவர் மீது புதிய புதிய கவிதைகள் புனைந்து பாடுவான். அவன் கல்லேச்வரரைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் மனம், வாக்கினால் நினைப்பதில்லை. கல்லேச்வரரைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் வணங்க மாட்டேன் என்றும், அதிலும் நரஸ்துதியாக எந்த மனிதனையும் புகழ்ந்து பாட மாட்டேன் என்றும் தீர்மானமாக நடந்து வந்தான்.

அன்று அந்த ஊரே குரு வருகைக்காகக் காத்து நின்றபோது நரகேசரி மட்டும் அலட்சியமாக நினைத்துக் கல்லேச்வரரை வழிபடச் சென்றான். சிவபூஜை செய்யும்போது அவனை அறியாதபடி நித்திரை வந்து, அதில் ஒரு கனவும் கண்டான். அதாவது அக்கனவில் குருதேவர் அவன் பூஜை செய்யும் லிங்கத்தின்மீது உட்கார்ந்திருப்பதாகவும், அவன் அவர் மீது பாடல் இயற்றிப் பாடுவதாகவும், அப்போது அவர், மனிதனை மதிக்காத அவன் இப்போது எப்படி நரஸ்துதி செய்து பூஜை செய்ய வேண்டும்? என்று கேட்பதாகவும் தெரிந்தது. உடனே கண் விழித்து எழுந்து ஆச்சர்யப்பட்டான்.

தான் கண்ட கனவில் நரஸிம்ம சரஸ்வதியை பூஜித்ததால், அவர் சாதாரண மனிதராக இருக்க முடியாதென்றும், அவதார புருஷராகத் தான் இருக்க வேண்டும் என்றும் நிச்சயித்து அவரைக் காண ஓடினான். அவரைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி, “ஜகத்குருவே! மாயையினால் உம்மை யார் என்று முதலில் அறியவில்லை. நீர் தான் சாட்சாத் நான் வழிபடும் கல்லேச்வரர் என்பதை நான் இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். உம்முடைய சரணக் கமலங்களில் நான் ஒரு வண்டாக இருந்து இன்புறுவேன். பக்கத்தில் செல்வப் புதையல் இருக்க ஏன் காடெல்லாம் தேடித் தரிய வேண்டும்? முனிவர்களும,; ரிஷிகளும் கோடிக்கணக்கான வருடங்கள் தவம் செய்து அடைய முடியாத சுகத்தை மிகவும் சிரமமில்லாமல் இன்று கண்டு விட்டேன். என் தெய்வம் இன்று கண்முன் காட்சியளித்தது. என்னையும் ஆட்கொள்ள வேண்டும்!” என்று துதித்து வணங்கினான்.

குருநாதர் அவனை நோக்கி, “ என்னை அலட்சியம் செய்கின்ற நீ எப்படி இவ்வளவு பக்தி பிறந்து என்னிடம் வந்தாய்? என்று கேள்வி கேட்க, “ஸ்வாமி! நான் அஞ்ஞானமென்னும் இருளில் கிடந்தேன். உம்முடைய ஜோதி வடிவத்தால் உம்மை ஆனந்தமூர்த்தி என்று கண்டேன். நான் எனது கல்லேச்வரரைப் பூஜிக்கும்போது அவரது லிங்கத்தில் நீங்கள் காட்சியளித்தீர்கள். அங்கு நான் உங்களையே பூஜை செய்வதாகக் கனவு கண்டேன். என் கனவு நினைவு ஆயிற்று. இனி நீங்கள் தான் என் குலதெய்வம். என்னையும் உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்! தயை செய்யுங்கள்” என்று வேண்டினான்.

குருதேவர் ஊர் மக்களை நோக்கிப் “பார்த்தீர்களா, இந்தப் பிராமணனை. என்னை ஆராதித்து மானச பூஜையாகக் கவிதையும் செய்து பாடியிருக்கிறான். ஆனால் கனவில் செய்ததாகச் சொல்கிறான்” என்று, அவன் கனவில் பாடிய பாடலைச் சொல்லி விளையாட, அவன் வியந்துபோய் அவரை மீண்டும் வணங்கினான். அவர் அவனை ஆசீர்வதித்து ஊருக்குக் கிளம்ப, அவன் தானும் உடன் வருவதாகக் கிளம்பினான். கல்லேச்வரர் தான் உன் தெய்வம். அவரைப் பூஜை செய்து இங்கேயே இரு என்று குரு சொல்ல, அதை மறுத்து தாங்கள் தான், என் கண்கண்ட தெய்வம். கல்லேச்வரராகத் தாங்களே இருக்கும்போது, இனி ஏன் அவரை வழிபட வேண்டும்? என்று சொல்லித் தன்னை ஏற்கும்படி வேண்டினான்.

குருவும் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் காணகாபுரத்திற்கு வந்தார். அது முதல் அவனது பெயர் கவி நரசிம்மர் என்றாயிற்று. நந்திகாமாவும், கவி நரசிம்மரும் குருவிற்கு இரு கவிகளாக அமைந்து ஏராளமான கவிதைகளை அவர் பெயரில் இயற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்துப் பிரசித்தி பெற்றனர்.

எட்டு ரூபங்கள் எடுத்த கதை

இப்படி தொடர்ந்து குருதேவரின் மகிமைகளை நாமதாரகன் அலுப்பு, சலிப்பு இல்லாமல் ஆர்வத்துடன் கேட்பதைக் கவனித்த சித்தர் மனம் மகிழ்ந்து, நீ சகல சுகங்களையும் பெற்று நன்றாக வாழ்வாய்! என்று ஆசி கூறித் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

காணகாபுரத்தில் குரு வசித்து வந்தபோது தீபாவளிப் பண்டிகை வந்தது. குருவிற்கு நெருங்கிய சிஷ்யர்கள் அனைவரும் குருவைத் தத்தம் கிராமத்திற்கு விருந்திற்கு அழைத்தனர். ஏழு சிஷ்யர்களும் தமது வீட்டிற்கே வரவேண்டுமென குருவை வற்புறுத்தினர். எல்லோர் வீட்டிற்கும் எப்படி ஒரே நாளில் போக முடியும்? ஆகவே நீங்களே பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள்! என்று குரு சொல்லிவிட்டார். ஆனால் அவர்கள் ஒரு முடிவிற்கும் வர முடியாமல் சச்சரவு ஏற்பட்டது.

இதைக்கண்ட குருதேவர் சண்டையிட வேண்டாமென்று கூறி ஏதாவது ஒரு கிராமத்திற்குத் தானே வருவதாக வாக்களித்தார். அந்த சீடர்கள் தனித்தனியே குருவை வணங்கித் தம்மை நிராகரித்து விட வேண்டாம் என்றும், தனது கிராமத்திற்கே வரவேண்டுமென்றும் பிரார்த்தித்தனர். குருவும் அவர்களிடம் அவரது கிராமத்திற்கே கட்டாயம் வருவேன் என்று கூறினார். இதனால் குரு நம் வீட்டிற்குத் தான் வருவார் என்று நினைத்து சந்தோஷப்பட்டு அந்த விஷயத்தை ரகசியமாக மனதில் வைத்துக்கொண்டு ஏழு பேரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். மடத்திலுள்ள சிஷ்யர்களும் ஊர் மக்களும் அவர் எங்கும் போகக்கூடாது, அங்கேயே இருந்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அதற்கும் அவர் ஒப்புக்கொண்டார்.

தீபாவளியும் வந்தது. என்ன ஆச்சர்யம்! எதையும் செய்ய வல்லவரான குருநாதர் எட்டு இடங்களிலும் தனித்தனியே காட்சியளித்து, அவரவர் விருப்பத்தை நிறைவேற்றி, அனைவரது பூஜையையும் ஏற்று அருள் பாலித்தார். அவரவரும் தமது விருப்பம் நிறைவேறியது என மகிழ்ந்தனர். பிறகு கார்த்திகைத் திருநாள் வந்தது. எல்லா சிஷ்யர்களும் மடத்தில் தீபம் ஏற்றிக் குருநாதரைக் கொண்டாடக் காணகாபுரத்திற்கு வந்தனர். இப்போது ஒவ்வொருவரும் குரு தங்கள் வீட்டிற்கு வந்த கோலாகலத்தைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர். குருவிற்குத் துணிமணி வாங்கித் தந்த கதைகளைப் பகிர்ந்து கொண்டனர், மடத்தில் உள்ளவர்கள். குருநாதர் எங்கேயும் போகவில்லையே! இங்கே எங்களுடன் மடத்தில் தானே இருந்து எங்களுடன் தீபாவளி கொண்டாடினார். ஊர் மக்களே சாட்சி! என்று கூறினர்.

இதைக்கேட்டு அனைவரும் ஆச்சர்யத்தோடு, குரு மகிமையை என்னவென்று சொல்வது? என்று புகழ்ந்தனர். எல்லா ஜனங்களும், “ஏ! விச்வ வியாபகா! உமது சக்தியை அறியாமல் சாதாரண மனிதனென்று நினைத்தோம். நீங்கள் சத்தியமாக மும்மூர்த்திகளின் அவதாரம். குருடர்களும், செவிடர்களும் அருகில் கற்பகமரம் இருந்தாலும் அதை அறியாமல் ஊர் ஊராக அலைந்து திரிவதைப்போல் நாங்களும் இருக்கிறோம். இனியாவது குருவைப் பூஜிப்போம். வேதம், சாஸ்திரம் எல்லாமே ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியைத் தான் தெய்வமெனப் புகழ்கின்றன என்று உலகிற்குப் பறை சாற்றுவோம். அவரைப் பூஜிப்பதால் நினைப்பதெல்லாம் நிறைவேறும். அமிர்தத்தைக் கையில் வைத்திருக்கையில் எட்டிக் காய்களை யாரும் தேடுவார்களா? குருவைத் தவிர சம்சாரக் கடலைத் தாண்ட வேறு கப்பல் கிடையாது. குருவின் நாமத்தைச் சொல்லி பஜனை செய்வோம். கொடுத்து வைத்தவர்களுக்குத் தான் குரு சேவை கிட்டும். அதைச் செய்தால் அமரத்துவத்தை அடையலாம் என்பது வேத வாக்கு. ஆகவே காணகாபுரத்திலுள்ள ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியை நாடுங்கள். அவரை வணங்கித் துதித்துப் போற்றுங்கள். மனதிற்கு நிம்மதியும், நிறைவும் வேண்டுமானால் காணகாபுரத்திற்கு வாருங்கள்!” என்று அனைவரும் வாயார, மனதாரப் புகழ்ந்து பாடி குருவிற்குப் பாதபூஜை, தீபாராதனை எல்லாம் செய்தனர். குருவும் புன்னகை புரிந்தவராய் அனைத்தையும் ஏற்றார்.

வேளாளனுக்கு வரமளித்தது

காணாபுரத்தில் மேலும் ஓர் சம்பவம் நடந்தது. காணகாபுரத்து மக்கள் குருவை மிகவும் மதித்துப் போற்றிக் கொண்டாடினார்கள். அவரது புகழ் நாலா திசைகளிலும் பரவியது. குருதேவர் ஜாதி, மத பேதமில்லாமல் தன்னிடம் பக்தி செய்தவர்களையெல்லாம் காப்பாற்றி வந்தார். அப்படிப்பட்ட பக்தர்களில் ஒரு வேளாளன் இருந்தான். அவன் பக்கத்திலுள்ள வயலில் வேலை செய்து வந்தான். அவன் குருதேவர் சங்கமஸ்தானத்திற்குச் செல்லும் பாதையைத் தினமும் சீராகக் கூட்டி அவர் ஸ்நானம், அனுஷ்டானம் முதலியவை செய்ய வந்து போகும்போது ஒவ்வொரு சமயமும் வந்து பக்தியுடன் நமஸ்கரிப்பான். மதிய வேளையிலும் மடத்திற்கு ஓடி வந்து வணங்கிவிட்டுப் போவான். குருதேவர் அவனிடம் ஒன்றும் பேசாமல் நமஸ்காரத்தை மட்டும் பெற்று வந்தார். இப்படி வெகு காலம் நடந்து வந்தது.

ஒருநாள் குரு அவனிடம், “ஏன் தினமும் இப்படி என்னை நமஸ்கரித்துக் கஷ்டப்படுகிறாய்? உன்னுடைய வேண்டுதல் என்ன?” என்று விசாரிக்க, அவன் அதற்குத் தன் வயல் நன்றாய் செழித்து விருத்தியாக வேண்டும் என்று வேண்டினான். குருதேவர் அவனை நோக்கி, “வயலில் இப்போது என்ன பயிர் செய்திருக்கிறாய்?” என்று கேட்க திணையைப் பயிரிட்டிருப்பதாகச் சொன்னான். அவை அப்போது தான் கதிர்கள் விட்டுக் கொண்டிருப்பதால் அவர் வயலுக்கு வந்து அவருடைய அமிர்தப் பார்வையால் பார்த்து அருள வேண்டும்! என்று வேண்டினான்.

குருதேவர் அதற்கு இணங்கி வயலுக்கு வந்து பார்த்துவிட்டு அவனிடம், “நான் சொல்வதைப் பக்தியுடன் கேட்டு, சொல்வதில் நம்பிக்கை வைத்து, நான் சொல்கிறபடி செய்வதாயிருந்தால் சொல்கிறேன்” என்றார். அதற்கு வேளாளன் குரு வாக்கியத்தைத் தெய்வ வாக்காகக் கருதுவதாக உறுதி அளித்தான். அதன்பின் குரு, “ நான் இப்போது சங்கமத்திற்குப் போகிறேன். மதியம் திரும்பி இந்தப் பக்கமாக வருவேன். அதற்குள் நீ இந்தப் பயிர்களையெல்லாம் அறுவடை செய்து விட வேண்டும். செய்வாயா!” என்றார். விவசாயி அதை ஏற்றான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s