குருவைத் தேடி – 46

குஷ்டநோயைத் தீர்த்து வைத்த கதை

நாமதாரகன் ஸித்தரை நோக்கி, “தாங்கள் குருவைப் பற்றி நன்கு அறிந்தவராகப் பல அற்புத நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கூறுவதால் எனக்குக் களைப்பு ஏற்படுவதே இல்லை. உங்களது இந்தக் கருணையினால் குருவைப் பற்றி நன்றாக அறியக்கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்று புகழ்ந்து கூறி மேலும் ஏதாவது கதை சொல்லும்படி பணிந்து கேட்டான். அதன் பேரில் ஸித்தரும் நந்தி என்ற குஷ்டரோகியின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

குரு நரஸிம்ம ஸரஸ்வதி தந்துகனை ஸ்ரீசைலத்திற்கு அழைத்துச் சென்ற மறுநாள் ஒரு பெரிய விசித்திரம் காணகாபுரத்தில் நடந்தது. நந்தி என்ற பிராமணன் தனது துர்நடத்தைகளாலும், பூர்வஜன்ம பாவங்களாலும் உடம்பு முழுவதும் குஷ்ட நோய் வந்து மிகவும் அவதிப்பட்டான். அவன் தன் நோய் எப்படியாவது தீரவேண்டுமேன்று துளஜாபூர் என்ற ஊரிலிருந்த அம்பா பவானி என்ற அம்மனை மூன்று வருடம் விரதம் உபவாசம் எல்லாம் இருந்து கோவிலில் சேவை செய்து பிரார்த்தனை செய்தான்.

ஒருநாள் அம்பா பவானி அவனது கனவில் தோன்றி தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்று கூறி, சந்தாலா பரமேஸ்வரி என்னும் தெய்வத்தை வழிபடும்படி சொல்லி மறைந்தாள். பிராமணன் மிகவும் மனம் வருந்தி அங்கிருந்து புறப்பட்டு சந்தாலா பரமேஸ்வரி கோவிலுக்கும் சென்று முன்போலவே விரதமிருந்து தன் சேவையைத் தொடர்ந்தான். ஏழு மாதங்கள் சென்றபின் ஒருநாள் “என்னால் ஆனது ஒன்றுமில்லை. காணகாபுரத்திலுள்ள மும்மூர்த்திகளின் அவதாரமான ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியை நேரில் சென்று வணங்கி அவரை ஆராதித்தால் நோய் குணமாகும்!” என்று உத்தரவு பிறப்பித்தாள்.

நந்தி மனம் உடைந்தவனாய், “அம்பா பவானியின் உத்தரவின் பேரில் நான் இங்கு வந்து உங்களை ஆராதித்து சேவை செய்தேன். ஏழு மாதம் என் சேவையை வாங்கிக்கொண்டு இப்போது ஒரு மனிதனிடம் போகச் சொல்கிறீர்களே! என்ன உமது தெய்வ சக்தி? மனிதனிடம் செல்லும்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நான் இங்கு வந்த உடனேயே இதைச் சொல்லியிருக்கலாமே!” என்றெல்லாம் கூறிக் கதறி அழுதான். பிறகு என்ன ஆனாலும் சரி, அம்மனின் சந்நிதியை விட்டுப் போவதில்லை என்று பிடிவாதமாக அங்கேயே தங்கித் தன் சேவையைத் தொடர்ந்தான்.

மறுநாள் மீண்டும் குருவிடம் செல்லும்படி கனவு வந்தது. அதோடு இல்லாமல் அந்தக் கோவிலின் குருக்களின் கனவிலும் பரமேஸ்வரி தோன்றி நந்தியை அங்கிருந்து விரட்டும்படி கூறினாள். எனவே மறுநாளே கோவில் குருக்கள் உடனே அங்கிருந்து போகும்படியும் இல்லையேல் அம்பாளின் உத்தரவின்படி அவனை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும் என்று கூறி விரட்டினார்.

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் நந்தி காணகாபுரத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கு மடத்தை அடைந்ததும் குருவைத் தேடினான். அங்கிருந்தவர்கள், குரு ஸ்நானம் செய்ய சங்கமத்திற்குச் சென்றிருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும், காத்திருக்கும்படியும் சொன்னார்கள். அவன் மனதிற்குள் அழுது புலம்பிக்கொண்டு குருவின் வருகைக்காக அவநம்பிக்கையுடன் காத்திருந்தான்.

சற்று நேரத்தில் குருதேவரும் வந்து சேர்ந்தார். மடத்திலிருந்தவர்கள் வெண்குஷ்டத்துடன் ஒரு பிராமணன் அவரைக் காண வந்து காத்திருப்பதாகக் கூறினர். குருவும் சந்தேகமுள்ள அந்த பிராமணனை அழைத்து வரும்படி கூறினார். நந்தி மடத்தின் முற்றத்தில் நின்றபடி குருவைத் தரிசித்தான். அவரைக் கண்டதும் பூமியில் விழுந்து நமஸ்கரித்தான். குரு அவனிடம், “தெய்வத்தைத் தொழுவதை விட்டு ஏன் ஒரு மனிதனிடம் சந்தேகத்துடன் வர வேண்டும்? சந்தேகத்துடன் வந்தால் காரியம் எப்;படி சித்தியாகும்?” என்று வினவினார்.

அதைக்கேட்டதும் நந்திக்குத் துக்கம் ஏற்பட்டுத் தன் பிழையை உணர்ந்து மீண்டும் நிலத்தில் விழுந்து, ‘ஸ்வாமி! நான் அஞ்ஞானத்தால் தம்மை அறியவில்லை. நீங்கள் சுத்தப் பிரம்மம் என்பதை எனது தமோ குணத்தால் உணரத் தவறினேன். நான் செய்த பாவங்களால் மிகவும் கஷ்டப்பட்டுக் கடைசியில் உம்மிடம் வந்தேன். இன்றைக்கு என் வாழ்வில் ஒரு பொன்னாள். எனது பூர்வ கர்மாக்களெல்லாம் உமது தரிசனத்தால் தொலைந்தன. நீங்கள் மும்மூர்த்திகளின் அவதாரம். பக்தர்களை ரட்சிப்பதற்காக மனிதஉரு எடுத்து வந்திருக்கிறீர்கள். கல்லாயிருந்த அகலியையை உயிர்ப்பித்தது போல் ரோகியான என்னையும் காத்தருள வேண்டும். எனக்குத் திருமணமான பின்புதான் இந்த நோய் என்னை வந்தடைந்தது. அதனால் என் மனைவி என்னை விட்டு அகன்றாள். என் பெற்றோரும் உறவினரும் என்னை வெறுத்து அலட்சியப்படுத்தினர். அதனால் நான் எல்லோரையும் விட்டு துள்ஜாபூரை அடைந்து உபவாசம் இருந்து நோயை நீக்கும்படி அம்பா பவானியை வேண்டினேன். அவள் என்னை சந்தாலா பரமேஸ்வரியிடம் போகும்படி சொன்னாள். அங்கு சென்று மிகக் கஷ்டத்துடன் சேவை செய்தேன். அங்குள்ள தேவி குருவிடம் போகும்படி ஆணையிட்டாள். தெய்வங்களே என்னை நிராகரித்த பிறகு மனிதனால் என்ன நடக்குமென்று நினைத்துத் தான் சந்தேகத்துடன் உங்களிடம் வந்தேன். இனி எனக்கு ஒருவித ஆசையும் கிடையாது. இந்த நோயுடன் அவதிப்படுவதை விட இறப்பதே மேல் என்று தோன்றுகிறது. ஆகையால் தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நடந்துகொள்கிறேன். குருவாகிய தாங்களும் அருள் புரியாவிடில் உயிரை விடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. தெய்வங்கள் செய்ததுபோல் என்னைக் கைவிடாமல் ரட்சித்துக் காப்பாற்றும்படி வேண்டித் தங்களைச் சரணடைகிறேன்” என்று சொல்லி அழுதான்.

வேதனை நிரம்பிய அவனது வார்த்தைகளைக் கேட்டு மனமிரங்கிக் குரு சிரித்த முகத்துடன் சோமநாதன் என்பவனை அழைத்து, “இந்த பிராமணனை உடனே சங்கம ஸ்தானத்திற்கு அழைத்துச் சென்று நீரில் ஸ்நானம் செய்வித்து அரச மரத்தை வலம் வரச் செய்து அவன் கட்டியிருக்கிற ஆடையை அவிழ்த்துத் துhர எறிந்துவிட்டுப் புதிய ஆடையைக் கொடுத்து கூடிய சீக்கிரம் இங்கு எங்களோடு உணவு உண்ண அழைத்து வாருங்கள்!” என்று ஆணையிட்டார்.

அவ்வாறே சோமநாதன் நந்தியை அழைத்துக்கொண்டு போய் எல்லாம் செய்து, அவனது பழைய துணியைத் தூக்கி எறியச் சொல்ல அது விழுந்த இடம் சாம்பல் மேடாயிற்று. நந்தியுடைய தேகம் உடனே சாதாரண நிலையை அடைந்து விட்டது. தங்க நிறமாக உடல் மாறிவிட்டது. சோமநாதன் நந்தியை மடத்திற்கு அழைத்து வந்ததும் குருவின் சரணங்களில் நமஸ்கரிக்க, அவனுடைய திவ்ய தேகத்தைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். குருதேவர் நந்தியை நோக்கி, “உனது மனோரதம் பூர்த்தி ஆயிற்றா? இப்போது நீ எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார். தன் தேகத்தை உற்றுப் பார்த்துப் பூரிப்படைந்த நந்தி ஆனால் தனது தொடையில் மட்டும் கொஞ்சம் குஷ்டத்தின் அடையாளம் மிஞ்சியிருப்பதைப் பார்த்து, இது எதனால்? என்று குருவிடம் வருந்திக் கேட்டான்.

அதற்குக் குருநாதர், “நீ சந்தேகத்துடன் ஒரு மானிடனால் என்ன செய்ய முடியும்? என்று நினைத்தாயல்லவா? அந்த நினைவு தான் இப்படி நிலைத்து விட்டது. ஆனால் பூரண நம்பிக்கையுடன் என்மீது நீ பாடல்கள் பாடினால் அது மறைந்து விடும்” என்றார். எழுதப் படிக்கத் தெரியாதவனைக் கவிதை பாடச் சொல்கிறீர்களே! எனக்கு என்ன தெரியும்!” என்று அவன் வருத்தப்பட்டான். உடனே குரு கருணையுடன் அவனை அருகில் அழைத்து வாயைத் திறக்கச் சொல்லி அதில் சிறிது விபூதியைப் போட்டார். உடனே அவனுக்கு ஞானம் உதித்து, அவன் குருவின் சரணங்களில் விழுந்து வணங்கித் துதிக்க ஆரம்பித்தான்.

“நான் ஒரு காட்டு மனிதனைப் போலிருந்தேன். மாயை என்கிற வலையால் சிக்கிக் குருவின் சரணங்களை மறந்திருந்தேன். சம்சாரம் என்பது ஒரு பெரிய மாய வலை. மனிதன் பல்வேறு பிறவிகளை எடுத்துப் பிறந்து பிறந்து இறக்கிறான். பிறவி என்பது அதிசயமானது. தாயின் சுரோணிதமும், தந்தையின் சுக்கிலமும் சேர்ந்து கரு உண்டாகிறது. பிறகு அது தாயின் வயிற்றில் ஒரே கலவையாகிக் கொதித்துக் கலக்கிறது. பதினைந்து நாளில் ஒரு வடிவத்தை அடைந்து முதல் மாதத்தில் பிண்ட ரூபத்தை அடைகிறது. இரண்டாவது மாதத்தில் தலையும் இரண்டு கால்களும் வருகின்றன. மூன்றாவது மாதத்தில் எல்லா உறுப்புக்களும், ஒன்பது துவாரங்களும் ஏற்படுகின்றன. பஞ்ச தத்துவங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எல்லாம் அந்த உடலில் புகுகின்றன. பிராணனும் பெறுகின்றது. ஐந்தாம் மாதத்தில் ரோமங்களும், ஆறாவதில் வடிவமும், ஏழாவது மாதத்தில் காது, கண், மூக்கு, எலும்பு, தசை எல்லாம் உண்டாகி ஒன்பதாம் மாதம் தாயின் கருவறையில் மலம், மூத்திரம் இவற்றிற்கிடையில் சிக்கிக் கஷ்ப்பட நேரிடுகிறது. அப்போது குருவின் சரணங்கள் நினைவிற்கு வராது. வயிற்றிலிருக்கும்போது தாய் சாப்பிடும் காரம், சூடு எல்லாம் குழந்தையைத் தாக்கி வருத்த முண்டாக்கும். அதைச் சகிக்க வேண்டும். ஒன்பது மாதம் முடிந்ததும் உரிய வேளையில் பூமியில் வந்து ஜனித்ததும் பிரம்மம் அதன் தலையில் ஆயுளை எழுதி விடுகிறார்.

இப்படிப் பிறந்த எனக்கு என் ஜன்மத்தில் பாதி துhக்கத்தில் போய் விடுகிறது. மீதி வாழ்நாள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிறு பிராயம், வாலிபம், வயோதிகம் என்று அமைகிறது. சிறு வயதில் அனேகக் கஷ்டங்கள். குழந்தையாய் இருக்கும்போது மல மூத்திரங்களில் உழன்று கொண்டும், எனக்கு வயிற்றுவலி வந்து அழுதால், தாய் பசி என்று நினைத்துப் பாலை ஊட்டியும், அழுது கண் சிவந்தால் கண்வலி என்று மருந்துகளைப் போட்டும் தொல்லைப்படுத்துகிறாள். அப்போதும் நான் உங்களை நினைக்க நேரமில்லை.

வாலிபப் பருவத்தில் நான் மன்மதனால் பீடிக்கப்பட்டு, தாய், தந்தை, குரு ஆகியோரை மறந்து ஸ்திரீ லோலனாய் விட்டில் பூச்சி தானே சென்று விளக்கில் விழுந்து மடிவதைப் போல மாயா மோகங்களில் சிக்கிக் கொண்டபோது உங்கள் சரணங்களின் நினைவு வருவதில்லை.

பிறப்பு வயது முதிர்ந்து கிழவனாய்ப் பற்களை இழந்து, கண், காது வேலை செய்ய மறுக்கின்ற நிலையில் பல்வேறு நோய்கள் முற்றுகை இடுகின்றன. இந்த அவஸ்தைகளில் சிக்கிய என்னால் உம்முடைய திருவடிகளை நினைக்கக்கூட முடிவதில்லை. இப்படி வாழ்க்கை முழுவதையும் வீணாய்க் கழித்து விட்ட என்னை இனியாவது உம்மை மும்மூர்த்திகளின் அவதாரம் என்ற நிச்சய புத்தியுடன் நினைத்து வழிபட்டு சேவை செய்ய நல்ல புத்தியைக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறேன். நான் உனது அடிமை. என்னைக் காத்தருளும். என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்” என்று மிக நீண்ட பிரார்த்தனையுடன் குருவை துதித்து வணங்கினான்.

அவனுடைய அருமையான துதியின் அற்புதத்தைக் கண்ட மக்கள் அவனை நந்தி நாமா என அழைத்தனர். மேலும் அவன் அவர்களை நோக்கி, “பக்தர்களே! என் தேகத்தைப் பாருங்கள்! அனேக பாவங்களைச் செய்ததால் நான் குஷ்டத்துடன் கஷ்டப்பட்டேன். வைக்கோல் போரில் நெருப்புப்பொறி பட்டால் எப்படி அது எரிந்து சாம்பலாகி விடுமோ அதுபோல் குருவின் கருணைப் பார்வை என்மீது விழுந்ததும், எனது எல்லா தோஷங்களும் தொலைந்தன. குருவின் சரணங்களை விட வேறு தெய்வமே கிடையாது. பிரமன் ஒருவனது நெற்றியில் கெடுதலான பலன்களை எழுதியிருந்தாலும், குரு தன் பாதங்களால் அதைத் துடைத்து நல்ல எழுத்தாக மாற்றி விடலாம் என்பதற்கு நானே சாட்சி. என் அனுபவத்தைக் கண்டு குரு நரஸிம்ம ஸரஸ்வதியைக் காமதேனுவாகவும், நாராயணனாகவும் உணருங்கள். இகபர சுகமெல்லாம் அளிப்பவர் இவரே. சந்தேகமே வேண்டாம். என் வாக்கு சத்தியம். ஆகையால் எல்லோரும் குருவைப் பூஜியுங்கள்! பூஜியுங்கள்! என்று குதித்துக் கொண்டாடினான். அவ்வேளையில் அவன் தொடையில் இருந்த குஷ்டமும் மறைந்து விட்டது. ஊர் மக்கள் எல்லோரும் கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து குருவை முன்னிலும் அதிகமாகப் போற்றிப் புகழ்ந்து பணிந்து வணங்கிச் சென்றனர்;” என்று கதையை முடித்தார் ஸித்தர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s