குருவைத் தேடி – 45

“நமோ நமஸ்தே கோவிந்தா! ஸ்ரீ வத்சலா! சச்சிதானந்தா! வைகுண்ட வாசா! அச்சுதானந்தா! எம்மைக் காத்தருள்வாய், பரமானந்தா! நாங்கள் அனாதை. எங்களுக்கு யாருமில்லை. நீங்கள் தான் அளவிடமுடியாத பக்தியுடன் உங்களை வழிபடும் வழியைக் காட்டியருள வேண்டும். எங்களைத் தாங்கள் ஆட்கொள்ள வேண்டும்! என்றெல்லாம் மிகுந்த பக்தியுடன் துதிக்க, அனந்தனாகிய லட்சுமிரமணன் அவர்களை ஆசுவாசப்படுத்தித் தர்மநெறிகளையெல்லாம் உபதேசம் செய்தார். இனி ஒரு குறையும் வராது என்று அபயமளித்தார்.

அதன் பின் ரிஷி காட்டில் தாம் கண்ட அதிசயங்களைப் பற்றி எடுத்துரைத்து, அதன் விபரங்களைப்பற்றிக் கேட்டார். தாங்கள் பார்த்த அந்த மரமானது முன் ஜன்மத்தில் ஒரு பிராமணனாக இருந்தது. வேதம் சாஸ்திரம் எல்லாம் கற்றிருந்தும் கர்வத்தினால் தன் சிஷ்யர்களுக்கு ஒன்றும் கற்றுக் கொடுக்காததால் இந்த நிலையை அடைந்துவிட்டது. அந்தப் பசு முன் ஜன்மத்தில் மனிதனாக இருந்தபோது, செழிப்பற்ற கட்டாந்தரையைப் பிராமணர்களுக்குத் தானமாக கொடுத்ததால், ஒரு வாய்ப்புல்லுக்கு அலைவதாகவும், அந்த இரட்டைக் குளங்கள் முன் ஜன்மத்தில் இரு சகோதரிகளாய் இருந்து, தங்களுக்குள்ளேயே தானங்களைக் கொடுத்துக் கொண்டதால் இந்த கதியை அடைந்ததாகவும் கூறினார் பரந்தாமன். மேலும் ரிஷியின் குரோத குணம் கழுதை வடிவமாகவும், ரிஷியின் மதமானது யானை ரூபத்துடனும் ரிஷிக்குத் தெரிந்ததாகவும் சொல்லி முடித்தார்.

பிறகு “இனி உன் தோஷங்களெல்லாம் தொலைந்தன. அனேக வருஷங்கள் நாட்டை ஆண்டு சுகங்களை அனுபவித்துப் பிறகு சுவர்க்கத்தை அடைந்து நீ சந்திரமண்டலத்தில் புனர்வசு நட்சத்திரமாக விளங்குவாய்!” என்று வரமளித்தார்.

இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பெருமான் பாண்டவர்களுக்கு அனந்த விரதத்தின் சிறப்புக்களைக் கதையாக எடுத்துக் கூறினார். அவர்களும் பகவான் கிருஷ்ணரின் துணையுடன் அந்த அனந்த விரதத்தை அனுஷ்டித்துத், தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றனர் என்று ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி ஸாயம்தேவருக்கு அனந்த விரதத்தின் பெருமையை எடுத்துரைத்து, அந்த விரதத்தை மேற்கொள்ளும்படி அவரிடம் சொன்னார். ஸாயம்தேவரும் குருவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு மிகுந்த பக்தி சிரத்தையுடன் விரதத்தை மேற்கொண்டார்.

நாமதாரகன் என்ற பக்தன் தன் முன்னோரின் குருபக்தியைப் பற்றிக் கேட்க, அதற்கு சித்தர் ஸாயம்தேவர் என்னும் பரமபக்த சிரோன்மணியின் குரு பக்தியையும், குருதேவர் அவரை எத்தனை அன்புடன் தன் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார் என்ற கதையையும் அழகாக எடுத்துரைக்க, நாமதாரகன் மட்டற்ற நிறைவுடன் அனைத்தையும் கண்ணில் நீர் பெருகக் கேட்டு மகிழ்ந்தான்.

ஸ்ரீசைலத்திற்குப் பக்தனை அழைத்துச் சென்ற கதை

மறுநாள் காலை எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தபின் ஸித்தரும் நாமதாரகனும் அடுத்த ஊருக்கு வழி நடந்தனர். அப்போது ஸித்தர், தனது குருவான நரசிம்ம ஸரஸ்வதி துணி நெய்பவனான ஒரு சேணியனை மகா சிவராத்திரியன்று ஸ்ரீசைலத்திற்கு அழைத்துச் சென்ற அற்புதத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

குருதேவருக்கு அநேக பக்தர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சேணியனும் (நெசவாளி) இருந்தான். அவன் தினமும் பயபக்தியுடன் குரு நடந்துவரும் பாதைகளைக் கற்கள், முட்கள் இல்லாமல் சுத்தமாகக் கூட்டி அவர் வரும்போது தூரத்தில் நின்றுகொண்டு வணங்குவான். இப்படி இருக்கையில் மகா சிவராத்திரி வந்தது. அதைக் கருத்தில் கொண்டு துணி நெய்பவனான தந்துகனின் பெற்றோரும் மற்ற உறவினர்களும் ஸ்ரீசைலம் என்னும் புண்ணிய சிவஸ்தலத்திற்குச் சென்று அங்கு ஸ்ரீ மல்லிகார்ச்சுனரைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணிப் பயணம் புறப்பட்டனர். தந்துகனையும் தங்களுடன் வரும்படி அழைத்தனர்.

அவன் வர மறுத்துத் தன்னுடைய மல்லிகார்ச்சுனர் இந்த ஊரிலேயே இருப்பதாகவும், குருதேவர் வசிக்குமிடம் தான் தனக்கு ஸ்ரீசைலம் என்றும் சொல்லிவிட்டான். உனக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது என்று பரிகசித்துச் சிரித்துவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.

ஊரில் பெரும்பாலோர் இப்படி அந்த யாத்திரைக்குப் போய்விட்டனர். தந்துகன் மாத்திரம் மடத்திற்கு வந்து குருவை வணங்கி நின்றான். உன் பந்துக்கள் எல்லோரும் யாத்திரைக்குச் சென்றபோது நீ ஏன் இங்கு தங்கி விட்டாய்? நீ ஸ்ரீசைலத்திற்கு முன்பே போயிருக்கிறாயா? என்று குரு அவனை வினவினார்.

தந்துகன் அவரிடம், சகல தெய்வங்களும் தங்கள் உருவில் இங்கேயே இருக்க இந்த மூர்க்க ஜனங்கள் அறியாமையால் சிலையான தெய்வத்தைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். நான் இதுவரை எங்கும் சென்றதில்லை. குருவின் சரணங்களைத் தரிசிப்பதே எனக்குப் பெரிய யாத்திரை என்று பதில் கூறினான்.

குரு அவனுடைய பக்தியைக் கண்டு, பக்கத்தில் வந்து உட்காரும்படியும், அவனுக்கு ஸ்ரீ சைலத்தைக் காண்பிப்பதாகவும் கூறிப் பக்தியுடன் அவருடைய சரணங்களைத் தியானம் செய்து கண்களை மூடிக்கொள்ளும்படி சொன்னார். அவனும் அவ்வாறே செய்ய, அடுத்த கணம், அவர்கள் ஸ்ரீ சைலத்தை அடைந்து பாதாள கங்கையின் கரையில் நின்றனர். தந்துகனுக்குக் துhங்கி எழுந்தது போலிருந்தது. தான் காண்பது கனவா, நனவா? இந்த ஊருக்கு நாங்கள் எப்படி வந்தோம்? என்று குழம்பிப் போனான்.

week45குரு அவனைக் கொஞ்சம் தேற்றி, சீக்கிரம் சென்று ஸ்நானம், பூஜை எல்லாம் முடித்துவிட்டு வா! நான் இங்கேயே இருக்கிறேன் என்று அனுப்பினார். ஸ்நானம் செய்ய அவன் போனபோது அங்கு அவனது பெற்றோரையும் மற்றவர்களையும் பார்த்தான். இவனைக் கண்டதும் பந்துக்கள், “நீ எந்த வழியாக வந்தாய் என்றும், முதலில் வர இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டுப் பிறகு இப்படி ஏன் ஒளிந்து வர வேண்டும்?” என்றெல்லாம் விசாரிக்கத் தந்துகன், காலையில் தான் புறப்பட்டு இப்போது இங்கு வந்துவிட்டதாகச் சொன்னான். நீ சொல்வது சுத்தப் பொய். இவ்வளவு துhரத்தை எப்படி இவ்வளவு சீக்கிரம் கடந்து வர முடியும்? என்று அவனைத் துhற்றினர். சேணியன் ஒன்றும் பதில் கூறாமல் சவரம் செய்து கொண்டு ஸ்நானம் செய்து, பூஜைக்காகப் பூக்கள், பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு மல்லிகார்ச்சுனரைத் தரிசிக்க சிவன் கோவிலுக்குச் சென்றான். அங்கு லிங்கத்தில் குருதேவர் வீற்றிருப்பதை அவன் பார்த்து அதிசயித்து, குருநாதர் சாட்சாத் பரமசிவனே தான் என்று மனதில் நிச்சயித்துக்கொண்டு பிரசாதங்களுடன் குரு இருக்கும் இடத்தை அடைந்தான். அவரிடம் தந்துகன் தான் கண்ட அற்புதக்காட்சியைக் கூறிப் பரவசப்பட்டு குருவை வணங்கினான். குரு திரும்பிப் போகலாமா? என்று கேட்க இந்த ஊரின் சிறப்பு என்ன என்பதைக் குருதேவர் எனக்குச் சொல்ல வேண்டும் என்று அவன் பணிந்து வேண்டினான். குருதேவரும் ஸ்ரீசைலத்தின் மகிமையைச் சொல்லத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் கிராத தேசத்தில் விமர்ஷணன் என்ற வேட அரசன் ஒருவன் இருந்தான். அவன் எல்லா வேடர்களுக்கும் தலைனாக விளங்கினான். காட்டிற்குச் சென்று வேட்டையாடி மிருகங்களைக் கொன்று அவற்றின் மாமிசங்களை வகைவகையாகச் சமைத்து உண்பதில் அவன் மிகுந்த விருப்பமுடையவனாக இருந்தான். அப்படி இருந்தும் சிவபூஜை செய்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவனாகவும் நடந்து கொண்டான். சிவபூஜை தவறாமல் செய்து அதிலும் சிவராத்திரியன்று மேள தாளங்களுடன் மிக விசேஷமாகப் பூஜை செய்து சிவனை வழிபடுவான். இதைப் பார்த்த அவனது மனைவி குமுதவதி என்பவள், ஒரு நாள் அவனிடம், இவ்வளவு சிறந்த சிவபக்தனாகிய நீங்கள் ஏன் இப்படி அனாசாரமாக மாமிசங்களை விரும்பி விதவிதமாகச் சாப்பிடுகிறீர்கள்? எதனால் இந்த முரண்பாடு? என்று வினவினாள்.

பூர்வ ஜன்ம ஞானமுடைய அந்த அரசன் அவளிடம், ‘நான் முன் ஜன்மத்தில் ஸ்ரீசைலத்தில் ஒரு ஆட்டு இடையன் வீட்டில் நாயாக இருந்தேன். நாயாய் இருந்ததால் கண்டதையெல்லாம் தின்கின்ற ஆசை தனக்குப் போகவில்லை என்றும் கூறினான். மேலும் சிவராத்திரியன்று அங்குள்ள சிவாலயத்திற்கு அருகில் சென்றேன். அன்று முழுவதும் ஒன்றும் ஆகாரம் கிடைக்காததால், கோவில் அன்னதான எச்சில் இலைகளில் ஏதாவது மீதி இருந்தால் அதைச் சாப்பிடலாமே என்று அங்கு சென்றேன். அப்போது கோவிலில் பூஜை நடைபெற்றுக்கொண்டு இருந்ததால், சற்று நின்று பார்த்தேன். கோவிலில் நாயைக் கண்டதும் அனைவரும் விரட்டினார்கள். அதற்குப் பயந்து கோவிலைச் சுற்றிச் சுற்றி மூன்று தரம் பிரகாரத்தை வலம் வந்தேன். அப்படியும் அவர்கள் அனைவரும் அடித்ததில் அங்கேயே விழுந்து இறந்து விட்டேன். சிவராத்திரியன்று நான் இறந்த புண்ணியம் இப்போது அரசனாக இருக்கிறேன் என்றாலும் பழைய வாசனை போகவில்லை என்று சொன்னான்.

அவன் கதையைக் கேட்ட குமுதவதி, தான் முன் ஜன்மத்தில் என்னவாக இருந்தேன் என்று கூறும்படி வேண்டினாள். அதற்கு அவன் முன் ஜன்மத்தில் ஒரு புறாவாக அவள் இருந்ததாகவும், ஒரு பருந்து அந்தப் புறாவைத் துரத்தவே அங்குமிங்கும் அலைந்து திரிந்து கடைசியில் ஸ்ரீசைல பர்வதத்தை அடைந்து அதை மூன்று முறை சுற்றிப் பறக்கும்போது, அந்தப் பருந்து அதைக் கௌவிப் பிடித்துக் கொன்று விட்டது. அந்தப் புறாதான் இப்போது இப்படிக் குமுதவதியாகப் பிறந்திருக்கிறாய் என்று எடுத்துரைத்தான். மேலும் அந்த வேட அரசன் அவளிடம், இனி அடுத்தடுத்து வரும் ஜன்மங்களில் மேலும் சிறந்த அரச யோகத்தைத் தாங்கள் இருவரும் அனுபவித்து அனேக தான தர்மங்களைச் செய்து, முறையாக ராஜ்ஜியத்தைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்துத் துறவு பூண்டு சொர்க்கத்தை அடைவோம் என்றும் இனி எல்லாப் பிறவிகளிலும் நீயே என் மனைவியாக வருவாய்! என்றும் உரைத்தான்.

அவர்கள் அத்தகைய உயர்ந்த ராஜபிறவிகளை அடைவதற்கு இந்த ஊரில் அவர்கள் சம்பந்தப்பட்டதும் தெரிந்தோ தெரியாமலோ இந்த சிவனை வலம் வந்து வணங்கியது தான் காரணம். மேலும் மகா சிவராத்திரியன்று மல்லிகார்ச்சுனரை முறைப்படி வழிபட்டால் இகபர சுகங்களை எளிதாக அடையலாம்! என்று குருதேவர் தந்துகனுக்கு விளக்கினார்.

இதைக்கேட்டு தந்துகன் குருவை நோக்கி, “என்னிடம் நிஜத்தை மறைக்கப் பார்க்கிறீர்கள்? இன்றைக்கு மல்லிகார்ச்சுனர் இருந்த ஸ்தானத்தில் நான் உங்களைத்தான் தரிசித்தேன். ஆகையால் எல்லாப் புனித ஸ்தலங்களிலும் காட்சியளிக்கின்ற அனைத்துத் தெய்வங்களும் குருதேவரான தாங்களே ஆவீர்கள். இதில் சந்தேகமே இல்லை” என்று கூறினான்.

குருதேவர் ஒன்றும் சொல்லாமல் சிரித்து அவனைத் தன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளும்படி சொல்லி நொடிப் பொழுதில் இருவரும் மீண்டும் காணகாபுரத்தை அடைந்து விட்டனர். இதே நேரம் காணகாபுரம் மடத்தில் குருவைக் காணாமல் அங்குமிங்கும் எல்லோருமே தேடிக்கொண்டிருந்தனர். திடீரென்று சவரம் செய்த முகத்துடன் தந்துகனைக் குருவின் அருகில் நின்றிருக்கக் கண்டதும் அனைவரும் அதிசயித்தனர்.

அவர்களிடம் தந்துகன் தான் குருவுடன் ஸ்ரீசைலத்திற்குச் சென்று வந்த விபரத்தைக் கூறிப் பிரசாதத்தையும் கொடுத்தான். சிலர் அவன் சொல்வது பொய் என்றும், சிலர் அவன் உண்மையைத்தான் சொல்கிறான் என்றும் பேசிக்கொண்டனர். குரு ஒன்றுமே சொல்லவில்லை. பதினைந்து நாட்கள் கழித்து யாத்திரை போனவர்கள் திரும்ப வந்து தந்துகனை அங்கு பார்த்தாகச் சொல்லவே தந்துகன் சொன்னது உண்மை என்பது நிரூபணமாயிற்று.

Advertisements