குருவைத் தேடி – 44

குருவின் ஆணையை ஏற்று ஸாயம்தேவர் ஊருக்குச் சென்று மிலேச்ச அரசனுடைய வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு, மனைவி குழந்தைகளுடன் காணகாபுரத்திற்கே திரும்ப வந்துவிட்டார். தன் குடும்பத்தினருடன் குருவை அணுகிய அவர், குருவைக் கண்டதும் “ஓம் நமோ சந்திரமௌலீ! நீர் மும்மூர்த்திகளின் அவதாரம். ஆனால் அறியாமையுடன் கூடிய எமது கண்களுக்கு சாதாரண மனிதனாகவும், சந்நியாசியாகவும் தோன்றுகிறீர்கள். நீரே ஆதி புருஷன். கருணையின் கடல். எப்படி சகோர பட்சிக்கு சந்திரன் தரிசனமானது போலவும், இரும்பிற்கு சிந்தாமணி ரத்தினம் பட்டாற் போலவும், காகம் மானஸரோவத்தை அடைந்ததைப் போலவும், உம்முடைய தரிசனத்தால் நான் புனிதன் ஆனேன்! என்று புகழ்ந்து மீண்டும் பல பாடல்களைப் பாடி விழுந்து நமஸ்கரித்தார். அவர் தம் நான்கு புதல்வர்களையும் குருவின் பாதங்களில் போட்டார். குருதேவர் மூத்த குமாரனாகிய நாகநாதனை மிகுந்த அன்புடன் பார்த்து ஆசி கூறி, இவன் என்னுடைய சிறந்த பக்தனாக விளங்குவான். இவனுடைய வம்சம் என் மீது மட்டற்ற பக்தியுடையவர்களாகத் திகழ்வார்கள் என்று கூறி மீண்டும் அவனை ஆசீர்வதித்தார்.

இப்படிப்பட்ட அதி பக்தரான ஸாயம்தேவரின் மகன் நாகநாதன், அவருடைய மகன் தேவராயர் என்பவர். அவருடைய மகன் கங்காதரர். அவருடைய மகன் நாமதாரகன். இந்த நாமதாரகன் என்பவர் தான் இந்த நூலை எழுதியவரும், இந்தக் கதையை சித்தரிடம் கேட்டதாகக் கதையைக் கொண்டு செல்பவருமான நூலாசிரியர் என்பது யூகித்து அறியக்கூடியதாக இருக்கிறது.

இனி கதைக்குத் திரும்புவோம். ஸாயம்தேவரைக் குடும்பத்துடன் கண்ட குருதேவர் மகிழ்ந்து, இனி அவர் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டாம் என்றும், அங்கேயே தங்கிக் குருசேவை செய்யும்படியும், இப்போது நதிக்கு சென்று ஸ்நானம் செய்து திரும்பும்படியும் அனந்தவிரத நாளாக அன்று இருப்பதால் விரைந்து வந்து அனந்த விரத பூஜையில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். ஸாயம்தேவரும் அவ்வாறே ஸ்நானம் செய்து அரச மரத்தைப் பூஜை செய்துவிட்டு மடத்திற்குத் திரும்பினார். மடத்தில் பூஜையெல்லாம் சிறப்பாக நடந்து முடிந்த பின் இந்த அனந்த விரதம் என்னும் விரதத்தின் சிறப்பைப் பற்றி சொல்லும்படி குருவிடம் ஸாயம்தேவர் வினவினார். அதன்படி ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியும் அனந்த விரதம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

அனந்த விரத மகிமை

ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி ஸாயம்தேவரை நோக்கி, மிகுந்த week44பெருமையுடையதான இந்த அனந்த விரதத்தைக் காலம் காலமாக அனுசரித்து வருபவர்கள் இருக்கின்றனர். அவர்களுள் பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் அனந்த விரதத்தைக் கடைப்பிடித்து இழந்த சாம்ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றார் என்று சொன்னார். அந்தக் கதையைச் சொல்லும்படி ஸாயம்தேவர் கேட்க குரு சொல்லத் தொடங்கினார்.

“பாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடி ராஜ்ஜியத்தை இழந்தனர். அதனால் பனிரெண்டு வருடங்கள் கிருஷ்ணனைத் தியானித்துக்கொண்டு காட்டில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அந்நிலையிலும் கௌரவர்கள் அவர்களுக்கு அனேக விதத் துன்பங்களையும், இடையூறுகளையும் செய்தனர். ஒரு சமயம் துர்வாசரை அனுப்பி அவர்களுக்கு சாபமிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினர். ஆனால் தக்க தருணத்தில் கிருஷ்ணர் வந்து அவர்களைக் காப்பாற்றினார். காட்டில் அவர்கள் அனேக இடங்களுக்குச் சென்று அனேக விரதங்களை அனுஷ்டித்தனர். அவ்வேளையில் ஸ்ரீ கிருஷண பரமாத்மா அவர்களைக் காணச் சென்றார்.

அவர் வருவதைக் கண்ட பாண்டவர்கள் பக்தி சிரத்தையுடனும் அன்புடனும் வரவேற்று உபசரித்தனர். பிறகு கிருஷ்ணா! எங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் வந்தது? எங்களை உனது விருப்பத்திற்குரியவர்கள் என்று சொல்கின்ற நீ ஏன் எங்களை இவ்வளவு சிரமப்படுத்துகின்றாய்? உன்னைத் தவிர யாரிடம் நாங்கள் எங்கள் துக்கத்தைச் சொல்லிக்கொள்ள முடியும்? உன்னால் ஏன் எங்களுக்கு உதவ முடியவில்லை? இழந்த ராஜ்ஜியத்தை நாங்கள் திரும்பப் பெற முடியுமா? என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கேள்வி கேட்டனர்.

அவர்கள் புலம்பியதையெல்லாம் கேட்ட பகவான் மனமிரங்கிக் கருணையுடன் பாண்டவர்களை நோக்கிப் பாண்டு குமாரர்களே! உங்களது கஷ்டங்கள் நீங்கி ராஜ்ஜியத்தை அடைய வேண்டுமானால் விரதங்களில் உத்தமமான அனந்த விரதத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பார்க்குமிடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பதால் பரமாத்மாவான என்னை அனந்தன் என்றும் அழைக்கின்றனர். சத்தியமாக நான் தான் அனந்தன், சூரியன், சந்திரன், பதினான்கு லோகங்கள், அஷ்டவசுக்கள், பன்னிரண்டு ராசிகள், ஏகாதச ருத்திரர்கள், ஏழு சமுத்திரங்கள், சப்த ரிஷிகள், மலைகள், மரங்கள், ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள், பத்து திசைகள், பூமி பாதாளம், அணு, பிரும்மாண்டம் என எல்லாவற்றிலும் நானே வியாபித்திருக்கிறேன். எனவே என்னையே அனந்தன் என்று நம்பி முறைப்படி பூஜை செய்யவும்” என்று உரைத்தார்.

யுதிஷ்டிரர் கிருஷ்ணனை வணங்கி, ‘ஸ்வாமி! இந்த விரதத்தைப்பற்றி எதுவுமே எங்களுக்குத் தெரியாது. நீங்கள் எல்லாம் விபரமாகச் சொல்லுங்கள்!” என்று வேண்டினார். “சுக்லபட்ச சதுர்த்தசியன்று இந்த அனந்த விரதத்தை நோற்றல் சிறப்பு. முன்னொரு காலத்தில் சுமந்து என்ற பிராமணன் ப்ருகு முனிவரின் மகளைத் திருமணம் செய்து இவர்களுக்கு சுசிலா என்ற பெண் குழந்தை பிறந்தது. சுசிலா சிறு வயதிலேயே சிறந்த பக்தையாக விளங்கினாள். ஸ்வஸ்திக், சங்கம், பத்மம், சுக்கரம் முதலிய வர்ணக் கோலங்களிட்டு வீட்டை அலங்கரித்து பகவானைப் பக்தியுடன் பூஜித்து வந்;தாள்.

இந்நிலையில் சுசிலாவின் தாய் திடீரென்று இறந்து விட்டாள். மனைவி இல்லாமல் கர்ம அனுஷ்டானங்கள் செய்ய முடியாது என்ற காரணத்தால் சுமந்து மறுமணம் செய்து கொண்டார். வந்தவள் எந்த நேரமும் தன் கணவனி;டமும் சுசிலாவுடனும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். ஓர் ஒற்றுமை இல்லை, அனுசரணை கிடையாது. இதற்குள் சுசிலா வளர்ந்துவிட்டபடியால் சுமந்து அவளைக் கௌண்டில்யர் என்பவருக்கு அவளைக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆவதற்குள் சிற்றன்னை மிக அதிகக் கொடுமைகள் செய்தபடியால் கௌண்டில்யர் மாமனார் வீட்டை விட்டு வேறு இடம் செல்ல அனுமதி கோரினார். தன் மகளைப் பிரிய மனம் வராத சுமந்துவிடம் அவர், வீட்டிலுள்ள பத்தினி சுமுகமாய் இல்லாவிட்டால் அவனுக்குக் காடு என்று ஒன்று தனியாக வேண்டாம். அந்த வீடே காடாகும். மேலும் இரண்டு தபஸ்விகள் ஒரே வீட்டில் இருப்பது தர்மமல்ல என்ற காரணத்தால் நாங்கள் வேறிடம் போகிறோம் என்று கூறி இருவரும் புறப்பட்டு விட்டனர்.

அவர்கள் புறப்படுவதைக் கண்ட சுமந்துவின் மனைவி அறைக்கதவைத் தாளிட்டுக்கொண்டு விட்டாள். எனவே ஒன்றும் எடுத்துக்கொள்ள வழியின்றி நெல் பதரும், கோதுமை நொய்யும் கட்டிக் கொடுத்தார் சுமந்து. அதைப் பெற்று இருவருமாகப் புறப்பட்டனர். வழியில் ஒரு நதிக்கரையில் பல பெண்கள் பட்டாடை உடுத்தித் தனித் தனியாகப் பூஜை செய்து கொண்டிருந்தனர். அந்த சுமங்கலிகளிடம் சுசிலா சென்று, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வினவினாள். அவர்கள் அனந்த விரதம் அனுஷ்டிப்பதாகவும், அதைச் செய்தால் நினைத்தது நடக்கும் என்றும் தெரிவித்தனர். சுசிலா அதனைத் தனக்கும் உபதேசிக்கும்படியும் தானும் அதனைச் செய்ய விரும்புவதாகவும் கூற அவர்களும் அதைப்பற்றி எடுத்துரைத்தனர்.

ஒரு சுக்லபட்ச சதுர்த்தசியன்று இதை அனுஷ்டிக்க வேண்டும். சிவப்பு பட்டு நுhலில் அனந்தம் என்ற சூத்திரம் செய்ய வேண்டும். பிறகு நதியில் ஸ்நானம் செய்து, பட்டுடுத்தி, மஞ்சள் குங்குமம் இட்டுக்கொண்டு இரண்டு சொம்புகளில் கங்கை, யமுனை என்று நினைத்து நீரை நிரப்பி வைக்க வேண்டும். பிறகு முறைப்படி கோலங்கள் போட்டு அதில் கலசங்களை வைத்து அதன்மேல் தர்ப்பையினால் பாம்புபோல் செய்து வைக்க வேண்டும். அந்தத் தர்ப்பையின் மீது மகா விஷ்ணு சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தரித்தவராய் வீற்றிருப்பதாகத் தியானித்து அதனை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். சில மந்திரங்களைச் சொல்லி அனந்தம் என்ற பட்டு நுhலை வலது புஜத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். பூஜை செய்யும்போது அதனைக் கலசத்தின் மீது வைத்துப் பூஜிக்க வேண்டும். பிறகு நெய்யுடன் கூடிய கோதுமைப் பண்டம், பழ வகைகள், தாம்பூலம், தட்சணை இவற்றைக்கொண்டு நைவேத்யம் செய்து மற்றொருவருக்கு அவற்றை வாயனமாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு 14 வருடங்கள் பூஜை செய்தால் சகல நன்மைகளையும் அடையலாம் என்று சொல்லி அவர்கள் சுசிலாவையும் ஸ்நானம் செய்யச் சொல்லி சகல பொருட்களையும் கொடுத்து முறைப்படி பூஜை செய்ய வைத்து, அனந்த சூத்திரத்தைக் கட்டிக்கொள்ளச் செய்தனர். சுசிலா தான் கொண்டு வந்த கோதுமை நொய்யை அவர்களுக்குத் தானமாக அளித்து விரதத்தைப் பூர்த்தி செய்தாள்.

பிறகு அவர்களையெல்லாம் நமஸ்கரித்தாள். அவர்களிடம் விடைபெற்று இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். நெடுந்துhரம் சென்றதும் ஓர் அற்புதமான நகரத்தை அடைந்தனர். அங்கிருந்த மக்கள் இவர்கள் வருகைக்காகக் காத்திருந்ததைப்போல் வரவேற்று தலைவனில்லாத நிலையிலிருந்த அந்தப் பட்டணத்திற்கு அவரை அதிபதியாக்கினர். அனந்த விரதத்தால் கிடைத்த பாக்கியம் இது என்று கௌண்டில்யரும் சுசிலாவும் மகிழ்ந்தனர்.

இப்படி இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒரு நாள் மனைவியின் கையில் கட்டியிருந்த அனந்த சூத்திரத்தைக் கண்டு ரிஷி மனம் தடுமாறி, தன்னை வசியம் செய்வதற்காகவே அதைக்கட்டியிருப்பதாக அவளைக் கடிந்து பேசினார். சுசிலா உண்மையை எடுத்துக்கூறியும் அதை நம்பாமல் அந்த நுhலைப் பிடுங்கி, அன்ந்தனாவது, ராஜ்ஜியத்தைக் கொடுப்பதாவது? ராஜபதவி என்னுடைய தபோ பலத்தினால் அல்லவா கிடைத்தது என்று கோபத்துடன் கூறி, அந்த சூத்திரத்தை அக்னியில் துhக்கி எறிந்து விட்டார். ஹர!ஹர! என்று சுசிலா கதறி அக்னியில் விழுந்த சூத்திரத்தை எடுத்துப் பாலில் நனைத்து சாந்தி செய்து, அனந்தனை அக்னியில் போட்டதால் இனி தங்களது சுகத்திற்குக் கேடு ஏற்படுமே என்று அழுதாள். அவள் சொன்னபடியே சத்ருக்கள் ஊரை முற்றுகையிட்டுக் கொள்ளையடித்து அரண்மனையையும் எரிய விட்டு விட்டனர். இடுப்பில் இருந்த துணியைத் தவிர அனைத்தையும் இழந்து நாட்டை விட்டு வெளியேறினர். அனந்தனை அவமதித்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டது என்று உணர்ந்து, இனி அவனைத் தரிசிக்காமல் அன்ன ஆகாரம் புசிப்பதில்லை என்று சங்கல்பித்து நடந்தனர். கௌண்டில்யர் அனந்தா! அனந்தா! என்று புலம்பிக்கொண்டு காட்டில் கண்ட மரம், செடி, கொடி, பூக்கள், பழங்கள், பறவைகள் அனைத்திடமும் என் அனந்தனைக் கண்டீர்களா? என்று விசாரித்துக்கொண்டு காட்டில் அலைந்து திரிந்தனர்.

வழியில், ஒரு பெரிய மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்திருந்தும் அவற்றை எந்தப் பறவையும் நாடிச் செல்லவில்லை என்பதைக் கண்டனர். கன்றுடன் கூடிய ஒரு பசு புல்லை மேய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு குளங்களில் நீர் இரண்டும் கூடி ஒன்றினுள் ஒன்று பாய்ந்து, அந்த நீரை எந்தப் பிராணியும் குடிக்கவில்லை. இந்த அதிசயங்களையெல்லாம் பார்த்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதுபோலவே ஒரு காளை மாடு, யானை ஆகியவையும் தாங்கள் அனந்தனைக் காணவில்லையென்றும் அவர்கள் கண்டால் தங்களைப்பற்றி அவரிடம் கூறி விமோசனம் பெற்றுத்தருமாறும் வேண்டின. இப்படி அலைந்து திரிந்து வழி தெரியாமல் இனிப் பிராணனை விட்டுவிடுவது என்று எண்ணி மண்ணில் கௌண்டில்யர் சாய்ந்தார். ரிஷியின் திட சித்தத்தைக் கண்டு, பகவான் ஒரு கிழப் பிராமணனைப்போல் வேடம் தரித்து கௌண்டில்யரை அணுகி அவரை மயக்கம் தெளிவித்து எழுப்பி அனந்தனைக் காண்பிப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரையும் நேராகப் பழைய ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் சென்று சி;ம்மாசனத்தில் பழைய அரச போகத்துடன் அமர்த்தித் தன் நிஜரூபத்தைக் காண்பித்தார். இருவரும் பகவானின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s