குருவைத் தேடி – 43

ஒரு நாள் ஸாயம்தேவருடைய திட சித்தத்தைச் சோதிக்க எண்ணி குரு, அவரை மாத்திரம் ஸங்கமத்திற்கு அழைத்துச் சென்றார். பக்தர்களுடன் குருதேவர் சுகமாக அங்குள்ள அரசமரத்தடியில் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டார். மாலை நேரமும் ஆகிவிட்டது. திடீரென்று குரு ஒரு பெரிய காற்றை எழுப்பி இடி, மழை பெய்யும்படி செய்து விட்டார். ஒவ்வொரு மழைத்தாரையும் உலக்கையளவு பருமனில் இருந்தது. ஸாயம்தேவர் குருவை விட்டு அகலாமல் அவர் மேல் துணியைப் பிடித்த வண்ணம் நின்றிருந்தார். அச்சமயம் குளிர்ந்த காற்றும் வீசத் துவங்கியது. அதனால் எல்லோருக்கும் குளிர ஆரம்பித்தது. குருதேவர் ஸாயம்தேவரை நோக்கி, “மடத்திற்குப் போய்க் குளிர்காய சிறிது நெருப்பை எடுத்து வரும்படி கூறினார். ஸாயம்தேவர் கட்டளையை அப்படியே ஏற்று அந்த அடாத பெருமழையில் எப்படி நெருப்பை எடுத்து வருவது என்று கூட யோசிக்காமல் சரி என்று கூறி மடத்திற்குப் போனார். அப்படி அவர் புறப்படும்போது குரு அவரைக் கூப்பிட்டு மடத்திற்குப் போய்வரும் வரை உன்னுடைய பார்வையை எந்தப் பக்கத்திலும் செலுத்தாமல் நேரே பார்த்துக்கொண்டு போய் வா! என்று கட்டளையிட்டார். அவரும் குருவை வணங்கி அந்த இருட்டில் அடையாளங்களை வைத்து மடத்தை நோக்கிச் சென்றார்.

week43அடிக்கடி ஏற்பட்ட மின்னலின் ஒளியினால் வழியை அறிந்து ஊரை அடைந்தார். பிறகு மடத்தை அடைந்ததும் அக்னியை ஒரு மண் பாண்டத்தில் எடுத்துக்கொண்டு சங்கமத்திற்குத் திரும்பினார். கொஞ்ச தூரம் நடந்ததும் குரு அக்கம் பக்கம் பார்க்க வேண்டாம் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அப்படி ஏன் பார்க்கக்கூடாது என்று யோசித்தபடி கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு பெரிய நாகப்பாம்பு அவரைத் தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து இடது பக்கம் பார்க்க இடது பக்கத்திலும் ஒரு பெரிய ஐந்து தலை நாகம் வருவதைக் கண்டு நடுநடுங்கிப் பயத்துடன் ஓடத் தொடங்கினார். அந்த இரு நாகங்களும் பின்னால் தொடர அப்படி ஸாயம்தேவர் ஓட ஆரம்பித்து எப்படியோ சங்கமத்தை அடைந்துவிட்டார்.

தூரத்திலிருந்து அவர் அரச மரத்தடியைப் பார்க்க அங்கே ஆயிரம் சூரியன்கள் பிரகாசிப்பதுபோல் குரு ஜகத்ஜோதியாகக் காணப்பட்டார். பக்கத்தில் வேத கோஷமும் காதில் கேட்டது. ஸங்கமத்தை அடைந்ததும் அவருக்குக் கொஞ்சம் பயம் தெளிந்து குருவிற்கு முன்னால் அக்னியை வைத்து, அதைப் பெரிதாக எரிய வைத்தார். அப்பொழுது இரண்டு பாம்புகளும் வந்து குருவை வணங்கிச் சென்றன. ஆகாயத்தில் சந்திரனும் பிரகாசிக்கத் தொடங்கினான்.

பயந்து நடுங்கிக்கொண்டு பணிபுரிந்த ஸாயம்தேவரைப் பரிவுடன் குரு நோக்கி, “ஏன் இந்த நடுக்கம்? இருட்டில் செல்கின்ற உன்னைக் காப்பாற்றத்தானே அந்த இரு சர்ப்பங்களைத் துணையாக அனுப்பினேன். அதைப் பார்த்துப் பயப்படக் காரணம் என்ன? இப்படி பயப்படலாமா?” என்று அவரை அமைதிப்படுத்தினார்.

குருபக்தி செய்வதென்றால் சாதாரண காரியமல்ல. மிகவும் பக்தியுடனும், நிச்சய புத்தியுடனும் செய்தால் தான் கலி காலத்தை ஜெயிக்கலாம் என்று சொன்னார். அதற்கு ஸாயம் தேவர் குருவின் சரணங்களில் வணங்கிக் குருபக்தி எப்படிச் செய்ய வேண்டும் என்று வினவ, குரு இதே கேள்வியைப் பார்வதிதேவி பரமசிவனைக் கேட்டார்கள். அதற்கு பரமசிவன் சொன்ன பதிலை உனக்குச் சொல்கிறேன் என்று சொல்லி விபரங்களைச் சொன்னார்.

குருபக்தி செய்வது மிகவும் சுலபம். அதனால் சகல காரியங்களிலும் உடனே சித்தி பெறலாம். ஜபம், தபம் முதலிய அனுஷ்டானங்கள் செய்யப் பல கஷ்டங்களும் தடைகளும் ஏற்படும். ஆனால் ஒருவன் நிர்மல புத்தியுடனும், பக்தியுடனும், குருவைப் போற்றித் துதித்தால் யக்ஞம், தானம், தவம் முதலியவற்றைச் செய்த பலன் ஏற்படும். குருகுலவாசம் செய்யும்போது குருவைத் தெய்வமாக ஆராதிக்க வேண்டும்.

துவஷ்டா பிரம்மா என்ற பிராமணனுக்கு ஒரு மகன் இருந்தான். அந்தப் பையனுக்குத் தக்க வயது வந்ததும் அவனைக் குருகுவாசம் செய்ய அனுப்பி வைத்தான். அவனும் அவ்வாறே குருவின் அரவணைப்பில் குருகுலவாசம் செய்தான். இப்படி இருக்கும்போது மழைக்காலம் வந்தது. மிகப் பெரிய மழை பெய்து குருவின் குடிசை ஒழுக ஆரம்பித்தது. அதைக் கண்டு குரு சிறுவனை நோக்கித் தன் பர்ணசாலையை எப்போதும் ஒழுகாமலும், எந்தக் காலத்திலும் இடிந்து போகாமலும் இருக்கும்படியாக ஒரு அழகிய ஆஸ்ரமத்தை உருவாக்கித் தரும்படி ஆணையிட்டார். உடனே அவருடைய மனைவி எனக்கும் ஒன்று தேவை. தைத்த விதம், நெசவு முதலியவை கண்ணுக்குத் தெரியாமல் பலவித நிறங்களோடு கூடிய, உடம்பிற்கு மிகச் சரியான அளவுடன் கூடிய ரவிக்கை (பெண்கள் அணியக்கூடிய மேல் சட்டை) வேண்டுமெனக் கேட்டாள். அத்தருணத்தில் குருவின் புதல்வன், தன் கால்களுக்குச் சரியான அளவில் நீரின் மீதும், சேற்றின் மீதும் நடந்து போகக்கூடிய, நினைத்த இடத்திற்கு அழைத்துப் போகும் சக்தி வாய்ந்த இரண்டு செருப்புகள் தனக்கு வேண்டும் என்று கேட்டான்.

அப்போது அருகிலிருந்த குருவின் பெண், சிஷ்யனைப் பார்த்துத் தனக்கும் அம்மா கேட்டது போல் ரவிக்கையும், விளையாடுவதற்கு யானைத் தந்தத்தால் செய்த பொம்மை வீடும், சமைத்தால் கரி பிடிக்காத பாத்திரங்களும் வேண்டும் எனப் பட்டியலிட்டாள். இவற்றையெல்லாம் கேட்ட சிஷ்யனுக்குத் தலையைச் சுற்றியது. என்றாலும் குருவிற்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டியது தன்கடமை என நிச்சயித்து அனைத்தையும் கொண்டு வருவதாக வாக்களித்து அங்கிருந்து புறப்பட்டு வழி நடந்து ஒரு பெரிய காட்டை அடைந்தான். எனக்கு ஒன்றுமே தெரியாதே. குருவின் குடும்பத்தினர் கேட்ட பொருள்களோ என் அறிவிற்கு எட்டாதவையாக உள்ளனவே. எனக்கு என்ன தெரியும்? குருவின் விருப்பத்தை நிறைவேற்றித் தருவதாக நான் ஏன் ஏற்றுக்கொண்டேன்? யாரிடம் சென்று இவைகளைக் கேட்பேன்? எங்கு சென்று தேடுவேன்? இவற்றைக் கொண்டு வந்து கொடுக்காவிட்டால் குரு காணிக்கை செலுத்த முடியாதே? குரு சாபமிடுவாரே. என்ன செய்வது? என்றெல்லாம் புலம்பிக்கொண்டு நடந்தான். அவன் மனம் மிகவும் சஞ்சலத்துடன் தவித்தது. குருவின் விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டுமே. வழி தெரியவில்லையே என்று குருவையே பிரார்த்தனை செய்து கொண்டு வந்தபோது, மிகவும் களைத்துப்போய் ஓரிடத்தில் நின்றான். பிறகு மீண்டும் பிரார்த்தனையுடன் நடக்க ஆரம்பித்ததும் ஒரு அவதுhதரைச் சந்தித்தான்.

அந்தக் காட்டில் தனிமையாக ஒரு சிறுவனைக் கண்டதும் அவர், “குழந்தாய்! இ;ந்த அடர்ந்த காட்டில் எங்கு போகிறாய், ஏன் மிகவும் துக்கத்துடன் காணப்படுகிறாய்? உனக்கு என்ன கஷ்டம்? என்று மிக அன்புடன் விசாரித்தார். பிரம்மச்சாரியான அந்தச் சிறுவன் அவதூதரை வணங்கி, “ஸ்வாமி! என்னைக் காப்பாற்றுங்கள். அளவிடமுடியாத துயரக் கடலில் மூழ்கிக் கிடந்த எனக்கு உங்கள் தரிசனம் பெரும் பேறாகக் கிடைத்தது. கன்றுக்குட்டிக்குத் தாய்ப்பசு தென்பட்டது போலவும், சகோரம் என்னும் பறவைக்கு சந்திரன் காணப்பட்டது போலவும், உம்மைத் தரிசித்த மாத்திரத்தில் என் உள்ளம் குளிர்ந்து விட்டது. நான் முன் செய்த நல்வினைப் பயன் உங்களை இங்குக் காண நேர்ந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒருவர் வந்தால் அவர் ஈஸ்வரனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? உங்களைப் பார்த்ததுமே என் மனம் நிம்மதியடைந்து விட்டது. நான் உங்கள் அடிமை. என்னைக் காத்தருளும்.” என்று சொல்லி அவதூதரின் கால்களைப் பிடித்துக் கொண்டான். அவர் அவனைத் தூக்கி அணைத்து எடுத்து ஆசுவாசப்படுத்தி விவரங்களை வினவ, அவனும் தேம்பியபடி அனைத்தையும் எடுத்துச் சொன்னான். “கவலைப்படாதே அப்பா! உனக்கு நான் வழி சொல்கிறேன். காசி நகரத்திலுள்ள விஸ்வநாதரைத் தரிசித்தால், அவரை முறைப்படி ஆராதனை செய்தால் நீ தேடுகி;ன்றவற்றைப் பெறலாம்.

ஆனால் அவற்றை அடைய மிகக் கடுமையான விதிமுறைகளை அனுசரித்துக் காசியிலுள்ள ஆயிரக் கணக்கான லிங்கங்களை அந்தந்த தெய்வ முறைப்படி வழிபாடு செய்து ஆராதிக்க வேண்டும். அது சாதாரண காரியமல்ல என்று அவதுhதர் கூறி, இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுவதென்பது மிக மிகக் கடினம். ஆகவே நானே உன்னைக் காசிக்கு அழைத்துச் சென்று, எல்லா விதிமுறைகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி உனக்கு உதவுகின்றேன். அதன்படி நீ பின்பற்றிச் செய்வாயாக! என்று கூறி தைரியப்படுத்தினார்.

காசி நகரம் எங்கே இருக்கிறது? அது பூமியிலா, சுவர்க்கத்திலா, பாதாளத்திலா? அதை எப்படி அடைவது? யார் என்னை அழைத்துச் செல்வார்? நானோ சிறுவன், என்ன செய்வேன்? என்றெல்லாம் கண் கலங்கிய சிறுவனுக்கு அவதூதரின் வார்த்தைகள் அமுதம்போல் இனித்தன. அவர் கால்களில் மீண்டும் வணங்கித் தன் நன்றியைத் தெரிவித்தான். அவருடைய மகிமையால் இருவரும் நொடியில் காசியை அடைந்தனர். அதன்பின் ஐந்து நாட்களுக்கு அவர் முறைப்படி காசி நகரத்தில் உள்ள அனைத்துக் கோவில்கள், அனைத்துப் புண்ணிய லிங்கங்கள் எல்லாவற்றையும் ஆராதனை வழிபாடு செய்ய வைத்து, கங்கை நதியில் பல்வேறு கட்டங்களில் விதிமுறை மாறாமல் ஸ்நானம் செய்ய வைத்து, மீண்டும் பூஜைகளை நிகழ்த்தச் செய்தார். மிகக் கடினமான பட்டியலான அந்த வழிபாட்டு முறையினை அந்தச் சிறுவன் சிரத்தையாக மேற்கொண்டு குருவின் சொற்படியே எல்லாம் செய்தான்.

இப்படிப் பல நாட்கள் கழிந்தன.ஒருநாள் அவதூதர் உனது பிரார்த்தனை எல்லாம் சிறப்பாக நடந்து விட்டது. உனது குருபக்தியால் தான் இவை அனைத்தையும் உன்னால் செய்ய முடிந்தது என்று சொல்லி சிறுவனை ஆசீர்வதித்து மறைந்துவிட்டார். அவர் மறைந்ததும், ஸ்ரீ பரமேஸ்வரன் அவன் எதிரில் தோன்றினார். உடனே சிறுவன் குரு குடும்பம் கேட்ட பொருள்களைத் தந்தருளும்படி வேண்டினான். சிவனார் மன மகிழ்ந்து, “துவஷ்டா மைந்தனே! குரு சேவையை நீ சிறப்பாகச் செய்தாய். நீ விரும்பியவை அனைத்தும் உனக்குக் கிடைக்கும். குருவிற்குச் செய்யும் சேவையை நான் அடைகிறேன். உன் சேவையால் நான் மகிழ்ந்தேன். இனி நீ எதையும் உருவாக்கும் திறமை பெற்றவன் ஆகி விட்டாய். குரு கேட்டவற்றை நீயே செய்துகொள் என்று கூறி ஆசி வழங்கி மறைந்து விட்டார்.

சிறுவனும் மனம் நிம்மதியடைந்து காசி நகரத்தில் ஒரு லிங்கத்தைத் தன் பெயரால் ஸ்தாபித்து, குரு கேட்ட பொருள்களைத் தானே உருவாக்கிப் புறப்பட்டு ஊரை அடைந்தான். குருவை அடைந்து அவரின் பாதக் கமலங்களில் பொருட்களைச் சேர்ப்பித்தான். அதோடு அவர் விரும்பியபடியே ஓர் ஆசிரமத்தையும் உருவாக்கித் தந்தான். பரமசிவன் தந்த வரத்தால் அவனுக்கு எல்லாம் சாத்தியமாயிற்று.

தன் சிஷ்யனின் சாமர்த்தியத்தையும் குரு பக்தியையும் உணர்ந்த குரு மகிழ்ந்து அவனுக்குச் சகல வித்தைகளும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்படி ஆசீர்வதித்து, நல்ல தெய்வீகமான குழந்தைகள் உன் வம்சத்தில் பிறந்து சிரஞ்சீவிகளாக வாழ்வார்கள் என்று மேலும் பல வரங்களையும் அளித்தார் என்று பரமசிவன் இந்த வரலாற்றைப் பார்வதிக்கு சொன்னார்.

வேதங்களே குருவின் மகிமையைப் பற்றிப் புகழும்போது வேறு என்ன சொல்ல இருக்கிறது? அத்தகைய குரு பக்தியால் அனைத்தையும் வெல்ல முடியும்! என்று நரஸிம்ம ஸரஸ்வதி குரு, ஸாயம்தேவருக்குக் காசி யாத்திரையின் சிறப்பையும், குரு பக்தியின் உயர்வையும் பற்றி எடுத்துச் சொன்னார்.

அந்த நேரத்தில் இரவும் கழிந்து தினகரன் கிழக்கில் உதயமானான். ஸாயம்தேவர் குருவை நமஸ்கரித்து எனக்குள் இருந்த அந்தகாரம் என்ற இருட்டு, குருகிருபை என்னும் ஜோதியால் அகன்றுவிட்டது என்று அகமகிழ்ந்து கூறி, மிக நீண்ட குரு ஸ்துதிப் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார். பாடி முடிந்ததும் அழுது தொழுது குருவின் பாதங்களில் விழுந்து விழுந்து தண்டனிட்டார். “கிருபாநிதியாகிய நீர் மும்மூர்த்திகளின் அவதாரம்; நீர்தான் காசி விஸ்வநாதர். என்மீது கொண்ட கருணையால் அன்பைப் பொழிகிறீர்கள். இதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ!” என்றெல்லாம் துதித்தார்.

இதைக்கேட்டு குரு தேவர் மிகவும் சந்தோஷமடைந்து, “உனக்கு ஒரு குறையுமில்லை; காசி மகிமையை நீ கேட்டதன் பலன் உன்னுடைய இருபத்தாறு தலைமுறையைக் காக்கும் என்று கூறி, நீ உன் ஊருக்குச் சென்று உனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கு வந்து என்னுடனேயே தங்கிவிடு!” என்று கூறி ஆசீர்வதித்தார். பிறகு அனைவரும் மடத்திற்குத் திரும்பினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s