குருவைத் தேடி – 42

தனக்குத் தெரிந்தவரை அந்த ராஜகுமாரன் எதையோ சொல்லிவிட்டுப் போக அதையே குரு வாக்காக ஏற்றுக்கொண்டு லிங்கத்தை அந்த வேடன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, தன் மனைவிக்குக் காண்பித்துத் தனக்குப் பரமசிவன் காட்சியளித்ததாகவும், அதனால் சிவபூஜை செய்யப் போவதாகவும் கூறித் தினமும் உரிய முறையில் பூஜை நிவேதனம் எல்லாம் செய்து அதோடு தினமும் சுடுகாட்டுச் சாம்பலைக் கொண்டு வந்து அர்ப்பணம் செய்து வந்தான். அந்தப் பெண்ணும் கணவனோடு சேர்ந்து பக்தியுடன் லிங்கத்தை வழிபட்டு வந்தாள்.

ஒரு நாள் வேடனுக்கு எங்குமே சுடுகாட்டுச் சாம்பல் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தன் மனைவியிடம் வந்து “அந்தச் சாம்பல் இல்லாமல் பூஜை செய்தால் விரத பங்கம் ஏற்பட்டு விடுமே. அதற்குப் பதிலாக என் பிராணனை விட்டு விடுவது மேல்” என்று புலம்பினான் “குருவின் ஆணையை எவன் அலட்சியம் செய்கிறானோ அவன் நரகமடைவான், எப்போதும் தரித்திரனாய் கஷ்டப்படுவான். குருவின் சொல்லைக் காப்பாற்றினால் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகிறான்; அதனால் நான் என் உயிரை விட்டு விடுகிறேன்” என்றான்.

இதைக்கேட்டதும் அவன் மனைவி, தன்னை வீட்டிலுள்ள கட்டைகளைக் கொண்டு தகனம் செய்து அதனால் கிடைக்கும் பிணச் சாம்பலை எடுத்து சிவபூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி வேண்டினாள். “உன்னை என் கையினால் எப்படித் தீ வைத்துக் கொளுத்துவேன்? உன் மாதா பிதாக்கள் சூரிய சந்திர சாட்சியாக என்னிடம் உன்னைக் காப்பாற்றும்படி ஒப்படைத்தார்களே! அப்படிப்பட்ட உன்னைக் கொல்லலாமா? சம்சாரத்தில் ஒரு விதமான சுகத்தையும் இன்னும் நீ காணவில்லையே. ஒரு குழந்தை கூட இன்னும் பிறக்கவில்லையே. உன்னை எப்படிக் கொல்வது?” என அழுதான்.

இதற்கு அந்தப் பெண், இந்த சரீரம் அநித்தியம். நீரின் குமிழி போன்றது. என் பெற்றோர் என்னை உமக்குத் தானமாகக் கொடுத்துவிட்டபடியால் என்னை எவ்விதமானாலும் நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். நான் உங்களில் பாதியல்லவா? உமக்கும் எனக்கும் வித்தியாசமுண்டோ? ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்? ஒன்றுக்கும் பயன்படாத இந்த தேகம் ஈஸ்வரபூஜைக்கு உபயோகப்படட்டுமே. பூமியில் பிறந்தால் ஒரு நாள் இறக்கத்தானே போகிறோம். இப்படிச் சாவதனால் என் ஜன்மம் கடைத்தேறட்டுமே! அதனால் குழம்பிக் கொண்டிருக்காமல் சந்தோஷமாக என்னைத் தகனம் செய்து அந்தச் சாம்பலை வைத்து பூஜையைப் பூர்த்தி செய்யுங்கள்! என்று வேண்டினாள்.

அவள் சொன்னதை ஏற்று வேடன் அவளை வீட்டில் வைத்துத் தீ கொளுத்தினான். நன்றாக எரிந்து சாம்பலானதும் அவளுடைய சாம்பலை எடுத்துப் பரமசிவனுக்குப் பூஜை செய்தான். பூஜை செய்த ஆனந்தத்தில் தான் சற்றுமுன் செய்த காரியத்தை மறந்து, கையில் நிவேதனத்தை வைத்துக்கொண்டு வழக்கம்போல் தன் மனைவியைக் கூப்பிட்டான். திரிபுராரியின் கிருபையினால் அவள் என்றைக்கும் போல் பிரசாதத்தை வாங்க சிரித்த முகமாய் வந்து நின்றாள்.

அவளைக் கண்டவுடன் வேடன் சுய நினைவிற்குத் திரும்பியவனாக ஆச்சர்யமடைந்து, உன்னைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டேனே, எப்படித் திரும்பி வந்தாய்? என்று வினவ அவள், தான் வீட்டிற்குள் சென்றது தான் தெரியுமென்றும், பிறகு உடல் குளிர்ந்து போய்த்; துhங்கிவி;ட்டதாகவும், பூஜைக்குப் பிறகு அவன் கூப்பிட்ட குரலைக் கேட்டு எழுந்து வந்ததாகவும் கூறினாள். இது என்ன, அதிசயமாக இருக்கிறதே என்று வேடன் நினைக்க சூலபாணியான பரமசிவன் பிரசன்னமானார். அவரைக் கண்டு இருவரும் தண்டத்தைப் போல் விழுந்து பரமசிவனின் கால்களைப் பிடித்துக் கொண்டனர். அழுது தொழுதனர். பரமசிவன் மகிழ்ந்து ஒரு பெரிய ராச்சியத்தையும், கல்ப கோடி ஆண்டுகள் சுகமாக வாழும்படியும் வரமளித்தார்.

இவ்வாறு குரு சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்து அதை அப்படியே கடைப்பிடித்து நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் கட்டாயம் நல்ல பலனை அடைவார்கள் என்ற கதையைக் கூறி நரஹரியும் எந்த சித்தத்துடன் சேவை செய்கிறானோ அதற்கேற்ப நற்பலனை அடைவான் என்று சொன்னார்.

பிறகு வழக்கம்போல் குருதேவர் சங்கமத்திற்கு அனுஷ்டானம் செய்யும் பொருட்டுப் புறப்பட்டு போனார். அங்கே நரஹரியுடைய திட சித்தத்தையும், பக்தியையும் கண்டு தன் கமண்டலத்திலுள்ள நீரை அந்த மரத் துண்டின் மீது தெளித்தார். அடுத்த கணம் அதில் இலைகள் தளிர்த்து மரமாக விளங்கியது. நரஹரியின் தேகமும் ஸ்வர்ண தேகமாக எந்தவிதக் குறைபாடுமின்றி மாறியது. அவன் மிகவும் சந்தோஷப்பட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கிப் பலவிதமாகத் துதிக்கத் துவங்கினான். குருதேவர் மிகவும் சந்தோஷமடைந்து அவருடைய அபயகரத்தை அவனது தலைமீது வைத்ததும் ஞானவானாக மாறி விட்டான். சகல ஜனங்களும் இதைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர்.

குரு தேவர் திரும்ப மடத்திற்கு வந்ததும் அங்கும் நடந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு அனைவரும் மகிழ்ந்து குருவைப் பூஜித்து ஆரத்தி எடுத்தனர். குருதேவர் நரஹரியைக் கூப்பிட்டு அவனுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள், செல்வம், பசுக்கள் எல்லாம் ஏராளம் கிட்டும். அவன் சந்ததி மேலும் வளரும் என்று கூறி, அவனை இனி யோகீஸ்வரன் என்று அழைக்கவேண்டுமென்றும் சகல சீடர்களிலும் அவனே மேலானவன் என்றும், அவனது வம்சத்தில் எல்லோரும் வேத சாஸ்திரப் பண்டிதர்களாகத் திகழ்வார்கள் என்றும் ஆசி வழங்கினார். அதோடு மட்டுமின்றி அவனது மனைவியை அழைத்து வரச் செய்து அவனுடன் வசிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்தினார். அவர்களது பரம்பரையில் எல்லோரும் குரு சேவை செய்வார்களென்றும் சொல்லி வித்யா சரஸ்வதி என்ற மந்திரத்தையும் அவனுக்கு உபதேசம் செய்து அருளினார். காய்ந்த மரம் துளிர்த்த கதையை அவ்வூர் மக்கள் காலம் காலமாய்ப் பேசி வருகின்றனர்.

ஸாயம் தேவர் குருவைச் சரணடைந்த கதை

இத்தகைய அற்புதக் கதைகளைக் கேட்டுக்கொண்டு வந்த நாமதாரகன் சித்தரிடம் “என் மனதில் ஓர் ஆசை துளிர்க்கிறது. அதாவது எனது குல முன்னோர்கள் குருவின் சன்னிதானத்தில் இருந்து எந்தவிதமாகக் குருசேவை செய்தனர் என்றும், எப்படிப்பட்ட சிஷ்யர்களாக விளங்கினார்கள் என்றும் அறிய விழைகிறேன்” என்று வேண்டினான்.

அதைக்கேட்ட சித்தரும் அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். உன் குல முன்னோர்களில் ஸாயம்தேவர் என்பவர் குருதேவருக்கு மிக முக்கியமான சிஷ்யர். ஓஸரக் கிராமம் என்ற இடத்தில் அவர் வசித்து வந்தார். அவர் குருதேவரிடம் மிகுந்த பக்திகொண்டு அதிசிரத்தையுடன் பூஜித்து வந்ததால் குருவிற்கு ஸாயம்தேவர் மீது மிகுந்த அன்பு ஏற்பட்டது.

குரு காணகாபுரத்தில் வசித்தபோது ஸாயம்தேவர் அவரைத் தரிசிக்க ஓஸரக் கிராமத்திலிருந்து புறப்பட்டார். காணகாபுரம் கண்ணில் பட்டவுடனேயே அவர் கீழே விழுந்து விழுந்து நமஸ்கரித்துக்கொண்டே வந்து மடத்தை அடைந்தார். குருவைக் கண்டதும் மெய்சிலிர்த்து அழுது தொழுது திருவடிகளில் விழுந்து வணங்கினார். கைகளைக் கூப்பிக்கொண்டு பக்தியுடன் துதிக்க ஆரம்பித்து விட்டார்.

“ஸ்ரீ குருமூர்த்தியே! உம்மைத் தரிசித்த மாத்திரத்தில் கோடி ஜன்மப் பாபங்கள் தொலைந்தன. என்னுடைய பித்ருக்கள் புண்ணியமடைந்தார்கள். நீரே பரமாத்மா. விஸ்வபதி. ஆனாலும் ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி என்ற நாமத்துடன் விளங்குகிறீர்கள். உமது சரண மகிமை பற்றி வேதங்களே வர்ணிக்கத் திணறும்போது, கேவலம் பாமரனாகிய நான் எப்படி வர்ணிக்க முடியும்? நீங்கள் எனக்கு சாட்சாத் மும்மூர்த்தியாகவே காட்சியளிக்கின்றீர்கள். நீர் படைப்புக் கடவுளான பிரம்மதேவன். உமது சரண தீர்த்தத்தால் ஒரு பிணம் உயிர் பெற்றது. பக்தர்களுடைய குறைகளைப் போக்கி, அவர்களைக் காப்பாற்றுகிறீர். நீங்கள் ருத்திராட்சம், மாலை, விபூதி, புலித்தோல் எல்லாம் கொண்டிருப்பதால் நான் உங்களைப் பரமசிவனாகவே பார்க்கிறேன். நீங்கள் பீதாம்பரத்தை அணிந்திருப்பதால் மகா விஷ்ணுவாகவும் காண்கிறீர்கள். நீரே நரஸிம்மமூர்த்தி. நீரே ஜகத்திற்கெல்லாம் குரு. தாங்கள் பக்தர்களைக் காப்பாற்றும் பொருட்டு அனேக அதிசயங்களைச் செய்கின்றீர்கள். ஸ்ரீ விஷ்ணுவாக நீர் இல்லாவிட்டால், மலடிக்குப் பிள்ளை பிறக்குமா? மலட்டு எருமை பால் கறக்குமா? திரி விக்கிரம பாரதிக்கு எல்லா மனிதர்களும் தாமே எனக் காட்சியளித்தீர்களே! ஒரு சண்டாளன் வேதம் சொல்லும்படி செய்தீர்களே! இதையெல்லாம் பார்க்கின்றபோது நீரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சொல்வதற்கு என்ன தடை? பக்தர்களைக் காப்பாற்றவே நீங்கள் மானுட உருவம் எடுத்திருக்கிறீர்கள்!” என்றெல்லாம் பலவிதமாகத் துதித்தான். பிறகு வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் வணங்கிக் கண்ணில் நீர் வழியப் பக்தியுடன் தொழுது நின்றான்.

குருதேவர் அவன் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்து, மனம் குளிர்ந்து மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார். விரைந்து போய் சங்க ஸ்தான நதியில் நீராடி விட்டுச் சாப்பிட வரும்படி அழைத்தார். ஸாயம்தேவரின் மீது மிகுந்த அன்புகொண்டவராய் அவரை உபசரித்துக் கொண்டாடினார். மேலும் அவரது குடும்பநலம் பற்றி விபரமாக விசாரித்தார். அதற்கு ஸாயம்தேவர் அவது குடும்பம் சௌக்கியமாக இருப்பதாகவும், உத்திரகாஞ்சியில் வசிப்பதாகவும், சம்சார பந்தத்தை விட்டு விலகி சந்நியாசம் பூண விரும்பி அரசரிடம் வந்ததாகவும் இனி மீதிக் காலத்தைக் குருசேவை செய்யவே நினைத்திருப்பதாகவும் கூறினார்.

அதற்குக் குரு சிரித்து, அவருக்கு சேவை செய்வது என்பது மிகக் கடினமென்றும், ஒரு நாள் காட்டிலும், மறு நாள் மடத்திலும் இப்படிப் பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அது அவருக்குச் சரி வராது, சிரமப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.

ஆனால் ஸாயம்தேவர் குருவிற்கு சேவை செய்வதால் ஒருவிதக் கஷ்டமும் இல்லை என்றும், இறுதியில் குருநாதர் நல்ல கதி அளிப்பாரென்றும், தனது சேவையைக் கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் வேண்டினார். மிகுந்த திட சித்தத்துடன் சேவை செய்வதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதாகக் குரு கூறினார். ஸாயம்தேவரும் அதனை ஏற்று வாக்களித்தபடி மிகவும் பக்தியுடனும் சிரத்தையாகவும் சேவை செய்து வந்தார். இவ்விதம் மூன்று மாதங்கள் கழிந்தன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s