குருவைத் தேடி – 41

“அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், நடுப்பாகத்தில் விஷ்ணுவும், நுனியில் சூலபாணியும், இலைகளிலும், கிளைகளிலும் தேவதைகளும் வசிக்கின்றனர். சகல தெய்வங்களும் அச்வத்த மரத்தில் உறைகின்றனர். அதனால் அரச மரத்தை மரங்களுக்கெல்லாம் அரசனாகக், கற்பக விருட்சமாகக் கருத வேண்டும் என்று கூறி, அதனை வழிபடும் விதங்களை விளக்கினார்.

“நல்ல நாள் பார்த்து, உபவாசமிருந்து சுத்தமாக அரச மர சேவையை ஆரம்பிக்க வேண்டும். ஞாயிறு திங்கட்கிழமைகளில் அரச மரத்தைப் பெயர்த்து எடுக்கக் கூடாது. சுத்தமாக ஸ்நானம் செய்து சுத்தமான ஆடையை அணிந்து கங்கை, யமுனை என்று இரண்டு கலசங்களை வைத்து, சங்கல்பம் செய்து, புண்ணியாவசனம் செய்து நமது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும். பிறகு அந்த இரண்டு கலச நீரைக் கொண்டு ஏழு முறை அரச மரத்தின் மீது அபிஷேகம் செய்ய வேண்டும். மறுபடியும் நாம் ஒருமுறை ஸ்நானம் செய்து பதினாறு விதமாகப் பூஜை செய்ய வேண்டும். அரச மரத்தை சகல தெய்வங்களாகவும் தியானித்துப் புருஷசூக்தம் சொல்லிப் பூஜிக்க வேண்டும். துணியையாவது, நுhலையாவது மரத்தைச் சுற்றிக் கட்டவேண்டும். பிறகு விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லி அல்லது மௌனமாக எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்து பக்தியுடன் மரத்தைச் சுற்றி வர வேண்டும். அப்படிச் சுற்றும்போது கர்ப்பிணிப் பெண் இடுப்பில் தண்ணீர்க் குடத்தை ஏந்தி எவ்வளவு மெதுவாக நடந்து செல்வாளோ அந்த விதத்தில் அடியெடுத்து வைத்து மெதுவாக நடக்க வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்ய வேண்டும். சகல வியாதிகளும் தோஷங்களும் அரச மரத்தைச் சுற்றுவதால் தொலைந்து போகின்றன. குழந்தைப் பேறு கிடைக்கும். வேண்டும் வரம் எதுவாயினும் அது நிச்சயம் பலித்து நிறைவேறும். அரச மரத்தைப் பிடித்துக்கொண்டு மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்தால் மரணபயம் இல்லாததோடு சனீஸ்வரனும் அவர்களைப் பாதிப்பதில்லை.

அமாவாசை, வியாழக்கிழமை போன்ற நாட்களில் அரசமர நிழலில் ஸ்நானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் போய்விடும். அரச மர நிழலில் ஒரு பிராமணனுக்கு அன்னமளித்தால் கோடிப்பேருக்கு அன்னமிட்ட பலன் ஏற்படும். இந்த மரத்தடியில் ஹோமம் செய்தால் மிகுந்த புண்ணியம். அரச மரத்தை வெட்டினால் மகா தோஷம். அரச மரத்தை வேண்டிக்கொண்டு விரதம் இருந்து பிரதட்சணம் செய்யும் பத்தாவது நாளன்று பிராமணனுக்கு உணவிட வேண்டும். விரதத்தின்போது பால் சாதம் சாப்பிட்டுப் பிரம்மசரியம் காக்க வேண்டும். ஏராளமான தானங்கள் செய்தால் புண்ணியம். இவ்வாறெல்லாம் குழந்தையில்லாத அப்பெண்மணிக்கு விரதம் பற்றிய விபரங்களைக் குரு எடுத்துரைத்தார். நம்பிக்கை வைத்து விரதமிருந்து மரத்தைச் சுற்றி வந்தால் கட்டாயம் குழந்தைகள் பிறக்கும் என்று சொன்னார்.

அதைக்கேட்டு அவள் குருவை வணங்கி “எனக்கு வயது அறுபதாகிவிட்டது. இனி எனக்குக் குழந்தைகள் பிறப்பது அபூர்வம். இருந்தாலும் உமது சொல்லின் மீது நம்பிக்கை வைத்து அச்வத்த மரத்தை ஆராதிக்கிறேன்!” என்று சொல்லி வணங்கிக் குருவிடம் விடை பெற்றுச் சென்றாள். ஒரு சுபதினத்தில் அவர் சொல்லியபடி விரதத்தை ஆரம்பித்தாள். விரதம் ஆரம்பித்த மூன்றாம் நாள் அவள் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு பிராமணன் வந்து அவளுடைய விருப்பம் நிறைவேறியது என்றும், அடுத்த நாள் காணகாபுரம் சென்று குருவை ஏழு தரம் வலம் வந்து, அவர் கொடுக்கும் பழத்தைச் சாப்பிட்டால் அவள் நினைத்தது கைகூடும் என்று சொன்னதாகக் கண்டாள். ஆழ்ந்த தூக்க நிலையில் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்து அவள் மடத்திற்கு வந்து குருவை ஏழு தரம் வலம் வந்து வணங்கி நின்றாள். குரு அவளைக் கண்டதும் சிரித்து இரண்டு பழங்களை அளித்து இதைச் சாப்பிட்டால் ஒரு கன்னியும் ஒரு புதல்வனும் பிறப்பார்கள் என்று சொல்லி மடத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கூறினார். விரதத்தைப் பூர்த்தி செய்து, தான தர்மம் செய்து, சாப்பிட்டுப் பழங்களைப் புசித்தாள். என்ன விந்தை! அன்று மாலையில் அவள் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்தாள். மூன்று நாட்கள் மௌன விரதம் இருந்து துhய ஆடை உடுத்தித் துhய உணவை உண்டு நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து கணவனுடன் குருவைத் தரிசிக்க வந்து, பக்தியுடன் பூஜை செய்தாள். குரு மகிழ்ந்து சீக்கிரமே குழந்தை பிறக்குமென்று ஆசீர்வதித்தார்.

குருவின் ஆசிப்படியே கொஞ்ச நாட்களில் கர்ப்பம் தரித்து ஒன்பது மாதம் முடிந்ததும் கங்காபாய் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். கிராமத்திலுள்ளவர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். குருதேவரைச் சரணடைந்து வரம் பெற்றால் எதுதான் நடக்காது? மும்மூர்த்திகளின் அவதாரமான ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி பக்தர்களுக்கு எதைத்தான் அருள மாட்டார், என்றெல்லாம் புகழ்ந்தனர்.

கங்காபாய் தன் கணவனுடனும் குழந்தையுடனும் அனேக தான தர்மங்களைச் செய்து குருவிடம் வந்து அவரை வணங்கித் துதிக்கலானாள். “ஜய ஜயாதி பரம புருஷா! விஷ்ணு மகேசா! உமது சொல்லால் எனக்குத் தெய்வவரம் தந்து குழந்தை பெறும் பாக்கியத்தை அருளினீர்கள். பக்தர்களை ரட்சிக்கும் பொருட்டு அவதரித்த கடவுளை என்னவென்று வர்ணிப்பது? உமது பெருமையை வர்ணி;க்க இயலாது!” என்றெல்லாம் சொல்லி அவருடைய சரண கமலங்களில் வணங்கினாள். சோமநாதன் மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தையைக் குருவின் கால்களில் கிடத்தினான். அந்தக் குழந்தை சுகமாக நீண்ட காலம் வாழ்வாள் என்று சோதிடர்கள் கூறினர். அப்போது கங்காபாய், சரஸ்வதி வந்து பெண்ணாகப் பிறந்து விட்டாள், இனி மகன் பிறக்க வேண்டும் என்று கூற, அதுவும் பிறக்கும், சந்தேகம் வேண்டியதில்லை என்று குரு பதிலளித்தார். மேலும் அவர், யோக்கியனான முப்பது வயது ஆயுளுள்ள மகன் வேண்டுமா! அல்லது நுhறு வயது ஆயுளையுடைய ஒரு மூர்க்கன் வேண்டுமா? என்று வினவினார். அதற்கு அவள், யோக்கியமான ஒரு புதல்வனே போதுமென்றும் அவனுக்கு ஐந்து பிள்ளைகள் பிறக்கவேண்டுமென்றும் வேண்டினாள். குருவும் அந்த வரத்தை அளித்துத் தம்பதிகளை விடை கொடுத்து அனுப்பினார்.

சரஸ்வதி என்ற அந்தப் பெண் குழந்தை, குருதேவர் சொன்னதுபோல் ஒரு பெரிய தீட்சதருக்கு (அவருடைய பெயர் அப்பைய்ய தீட்சதர்) மனைவியாகிப் பெருமையோடு வாழ்ந்தாள் என்று மலடி பிள்ளை பெற்ற கதையை சித்தர் நாமதாரகனுக்கு எடுத்துரைத்தார்.

எவனொருவன் குருவின் சொல்லில் நம்பிக்கை வைத்து ஒரே மனதுடன் பக்தி செய்கிறானோ, அவனுக்கு சத்தியமாக அவர் அருள் புரிகிறார். அதனால் குருவை இடைவிடாமல் ஜபிக்க வேண்டுமென்றும், அப்படி பூஜித்தால் அவர்களுக்கு எவ்விதக் குறையுமே ஏற்படாதென்றும் அவர் சொன்னார்.

காய்ந்த மரத்துண்டு துளிர்த்த கதை

பிறகு அந்த சித்தர் நாமதாரகனுக்கு காணகாபுரத்தில் நிகழ்ந்த மற்றொரு அதிசயத்தைக் கதையாகச் சொல்லத் தொடங்கினார். அந்த ஊரில், நரஹரி என்ற பெயருடைய பிராமணன் பூர்வஜன்மப் பாவத்தினால் குஷ்டரோகம் என்ற கொடிய வியாதியால் பீடிக்கப்பட்டு அதன் வேதனையைத் தாங்க முடியாமல் ஸ்ரீ சத்குருவின் சன்னிதானத்திற்கு வந்து அவரை வணங்கினான்.

“ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியே! நான் இந்த ஜன்மமெடுத்து எதற்கும் பயன்படவில்லை. என்னுடைய வியாதியைக் கண்டு அனைவரும் பழிக்கின்றனர். கட்டிய மனைவியும் என்னை விட்டு விலகி விட்டாள். நான் யஜூர் வேதத்தில் சிறந்த பண்டிதனாக இருந்தும் குறையுள்ளவனாக நினைத்து என்னை யாரும் பூஜைகளில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை. என்னை எதிரில் வரக் கண்டாலும் கேவலமாகப் பேசித் திட்டுகின்றனர். எவ்வளவோ தெய்வங்களை வேண்டியும், ஏராளமான புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபட்டும் இந்த பெரிய வியாதி என்னை விட்டுப் போகக் காணோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மனதைத் திடப்படுத்திக்கொண்டு நீர் தான் கதி என்று உங்களிடம் வந்து விட்டேன். நீங்களும் கிருபை செய்யவில்லையென்றால் நிச்சயமாகப் பிராணனை விட்டுவிட நிச்சயித்துவிட்டேன் என்று சொல்லி மிகவும் பக்தியுடன் வணங்கினான.

அவனுடைய இரங்கத்தக்க வார்த்தைகளைக் கேட்ட குரு, அவன் முன் ஜன்மத்தில் அனேக பாவங்களைச் செய்ததால் இந்த நோய் வந்திருப்பதாகவும், அவர் சொல்கிறபடி அப்படியே செய்தால் வியாதி சரியாகிவிடுமென்றும் சொன்னார். அந்த சமயத்தில் மிகவும் காய்ந்துபோன ஓர் அத்திமரத் துண்டு வெட்டிப் பிளந்து விறகாக உபயோகிப்பதற்காகவென்று கொண்டு வந்து அங்கே போட்டார்கள். அதைப் பார்த்ததும் குரு அந்தப் பிராமணனைக் கூப்பிட்டு இந்த காய்ந்த கட்டையை சங்கமத்திற்கு எடுத்துச் சென்று பீமா நதியின் கிழக்குப் பகுதியில் நட்டு, அதற்கு நீரூற்றிப் பராமரிக்கும்படியும், அப்படிச் செய்வதற்கு முன் அந்த நதியில் ஸ்நானம் செய்து அங்குள்ள அரசமரத்தைப் பூஜித்து மறுபடியும் இரண்டாவது ஸ்நானம் செய்து, இரண்டு கலசங்களில் நீரை எடுத்து வந்து அதைப் பக்தியுடன் மூன்று தரம் அந்த மரத் துண்டின் மீது அபிஷேகம் செய்துவிட்டுப் பிறகு தான் அதை நட வேண்டும் என்று கூறினார். என்றைக்கு அந்த அத்திமரத்துண்டு இலைகளை விட்டுத் துளிர்க்கிறதோ அன்று உன்னுடைய வியாதி குணமாகுமென்றும் சொன்னார்.

குருவின் ஆணையை சிரசின்மீது கொண்டு பூரண நம்பிக்கையுடன் அவன் அந்த மரத்துண்டை தலைமீது சுமந்துகொண்டு சங்கமத்தை அடைந்தான். குருவின் உத்தரவுப்படி அந்தக் கட்டையை முறைப்படி நதிக்கரையில் நட்டுப் பக்தியுடன் அபிஷேகம் செய்தான். இவ்விதம் ஏழு நாட்கள் அன்னமில்லாமல் அடிக்கடி அந்தக் காய்ந்த மரக்கட்டைக்கு ஜலம் விட்டு வந்தான். ஊரிலுள்ளவர்கள் இதைக்கண்டு எப்போது இந்த மரம் துளிர்ப்பது, என்றைக்கு இவன் வியாதி நீங்குவது என்றும், ஆனால் கருணைக் கடலான குருமூர்த்தியின் சங்கல்பம் பலிக்குமென்றும் அவர் பக்தர்களைக் காப்பாற்றும் பொருட்டு எதையும் செய்ய வல்லவர் என்றும் பேசிக்கொண்டனர்.

சிலர் அவனை அதிகம் கஷ்டப்படவேண்டாமென்றும், அந்தக் கட்டை தளிர்ப்பது அசாத்தியமென்றும் சொன்னார்கள். ஆனால் நரஹரி அவர்களை நோக்கிக் குருவின் வாக்கு வேதவாக்கென்றும், அவர் காமதேனு என்றும், சத்திய சுந்தரரான குருவின் வாக்கு எப்பொழுதுமே பொய் ஆகாதென்றும், பிராணன் போனாலும் அவர் சொன்னதைத் தான் கடைப்பிடிப்பதாகவும், சத்தியமாக அந்த மரத்துண்டு தளிர் விடுமென்றும் கூறினான்.

சிஷ்யர்கள் குருவிடம் வந்து நரஹரி அந்த அத்தி மரத்துண்டிற்கு செய்யும் சேவையைப் பற்றியும், ஏழு நாட்களாக சாப்பிடாமலேயே அந்த மரத்தைக் கவனித்துக் கொள்வதாகவும், எவர் என்ன சொன்ன போதும் கவனிக்காமல் குருவின் வாக்கியத்தை அப்படியே நம்பி மூர்க்கத்தனமாக நடந்து வருவதாகவும் சொன்னார்கள்.

இதைக்கேட்டு குரு, “எவனுடைய உள்ளம், அந்தக்கரணம் எல்லாம் எவ்வளவு சுத்தமாகவும், நிச்சய புத்தியுடனும் இருக்கிறதோ அதன்படி வெற்றியடைவான். குருவின் சொல்லை எவ்வளவுக்கெவ்வளவு நிர்வாண சித்தத்துடனும், பக்தியுடனும் கடைப்பிடிக்கிறானோ அதன்படி பலனை அடைகிறான் என்று கூறி அதற்கு ஒரு கதையை எடுத்துரைத்தார்.

குருபக்தி என்பது விசேஷமான ஒரு அம்சம். இந்த சம்சாரத்தைத் தாண்ட அதைவிட வேறு உபாயம் கிடையாது. குரு ஒருவரை யோக்கியன், அயோக்கியன் என்று கருதாமல் சந்தேகமில்லாமலும் பக்தியுடன் ஒரே மனத்துடன் எவன் பூஜிக்கிறானோ அவனுக்குக் காட்சியளிக்கிறார். குருவை ஒரு சாதரண மனிதனென்று கருதக்கூடாது. அவருடைய குண தோஷங்களை மனதில் கொள்ளாமல் சாட்சாத் ஈஸ்வரனென்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் கருதி அவருக்குப் பணிந்து சேவை செய்வானாகில் சூலபாணி கட்டாயம் காட்சியளிப்பதில் என்ன தடை? என்றார்.

எவன் மந்திரங்களாலும், கோவில் குளங்களிலும், தேவதை, குரு, மருந்து இவைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து இறை வடிவமாகவே காண்கிறானோ, அதற்குத் தகுந்த பலனை அடைகிறான். குருபக்தி என்பது எத்தனை சிறந்தது அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு இந்தக் கதை ஒரு சான்று என்று கதையைத் துவங்கினார்.

பழங்காலத்தில் பாஞ்சானம் என்ற நகரத்தில் சிம்மகேது என்ற அரசனுக்குத் தனஞ்சயன் என்ற புத்திரன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது தாகத்தால் பீடிக்கப்பட்டவனாக, அங்குமிங்கும் நீருக்காக அலைந்து திரிந்தான். அப்படிப் போகும்போது ஒரு பாழடைந்த சிவன் கோவிலை அடைந்தான். அங்கு ஒரு வேடன் அந்தக் கோவிலின் ஒரு பக்கத்தில் கீழே கிடந்த லிங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதன் அழகைக் கவனித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ராஜகுமாரன், என்ன அவ்வளவு கூர்மையாக அதைப் பார்க்கிறாய்? என்று கேட்டான். அதற்கு அந்த வேடன் அதைப் பார்த்த உடனேயே அதை எடுத்துச் சென்று பூஜை செய்ய வேண்டுமென்று மனம் விரும்புவதாகவும் ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறினான். ராஜகுமாரன் அவனிடம் சிவ பூஜையில் அவ்வளவு ஆசை இருந்தால் அந்த லிங்கத்தையே பூஜிக்கலாமே என்று சொல்ல, வேடனும் எப்படி பூஜை செய்வது என்று வினாவினான்.

ராஜகுமாரன் அவனிடம், இந்த லிங்கத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பக்தியுடன் தம்பதிகள் இருவரும் பூஜை செய்ய வேண்டும். பலவிதமான பூக்களைக் கொண்டு அர்ச்சித்து துhபம், தீபம், ஆரத்தி, நிவேதனம் செய்து மேலும் சுடுகாட்டிலுள்ள சாம்பலைத் தினமும் கொண்டு வந்து சிவனுக்கு அர்ப்பணம் செய்து, அந்த நிவேதனம் செய்ததைச் சாப்பிட வேண்டும். எப்போது என்ன சாப்பிட்டாலும் அதை லிங்கத்திற்கு நிவேதனம் செய்து புசிக்க வேண்டும் என்று சொல்லி ஊர் திரும்பினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s