குருவைத் தேடி – 40

அன்னபூரணியின் அவதாரம்

நாமதாரகன் சித்தரை வணங்கி, தாகத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு அமிர்தம் எவ்வளவு குடித்தும் திருப்தி அடையாததைப் போல் குருவின் பிரதாபத்தை எவ்வளவு கேட்டும் திருப்தி அடையவில்லை என்றான். சித்தர் அதைக்கேட்டுப் புன்சிரிப்புடன் குருவைப் பற்றிய மற்றொரு அற்புத நிகழ்வைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

காணகாபுரத்தில் ஸ்ரீ குருவிற்கு அனேக பக்தர்கள் பணத்தைக் காணிக்கையாக அளிப்பதுண்டு. ஆனால் அவற்றைப் பெறாமல் அதைக்கொண்டு சத் காரியங்களைச் செய்யும்படி குரு சொல்லி விடுவார். அங்கு தினமும் ஏதாவது சமாராதனை நடக்கும். ஒரு நாளாவது வெறும் நாளாக இருக்காது. தினமும் கோலாகலம் தான். இப்படி இருக்கையில் ஒரு நாள் காஸ்யப கோத்திரத்தில் பிறந்த பாஸ்கரன் என்னும் ஓர் ஏழை பிராமணன் மடத்திற்கு வந்தான். அவன் குருவைப் பக்தியுடன் வணங்கி அவருக்குப் பிட்சை செய்து வைக்க அனுமதி கோரினான். அவன் வரும்போது ஒரு துணி மூட்டையில் கொஞ்சம் அரிசி, கோதுமை மாவு போன்ற சில பொருட்களை மூன்று பேருக்குச் சமைக்கக்கூடிய அளவில் கட்டிக்கொண்டு வந்திருந்தான். அவன் வந்த தினத்தில் வேறு சமாராதனை நடைபெற்றதால் அதில் சாப்பிட்டுவிட்டு கொண்டு வந்த மூட்டையைத் தலையில் வைத்து நித்திரை செய்தான்.

தினமும் இவ்விதமாக யாராவது பக்தர்கள் வந்து சமாராதனை செய்து வந்தார்கள். இப்படி ஒரு நாளாவது ஓய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது. அப்பாவியான பாஸ்கரனும் தினமும் நான் இன்று பிட்சை செய்கிறேனே என்று சொல்லிக்கொண்டு சமாராதனை சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். மடத்திலிருந்த குருவின் சிஷ்யர்கள், அந்தப் பிராமணரைப் பற்றி “என்ன இவன்! இப்படி இருக்கிறானே, இவன் கொண்டு வந்த சாமான்கள் ஒரு நபருக்கும் கூட காணாது. இங்கேயோ அனேக சிஷ்யர்கள் இருக்கிறோம். இந்த சொல்ப சாமான்களை வைத்துக்கொண்டு எப்படி சமாராதனை நடத்தி வைக்க முடியும்? இதைச் சொல்லிக்கொள்ள இவன் வெட்கப்படுவதுமில்லையே!” என்று அவனைப் பரிகசித்து ஏளனமாகப் பேசினர்.

இவ்விதமாக மூன்று மாதங்கள் கழிந்தன. இந்த மூன்று மாதங்களிலும் அவன் மற்றவர் செய்யும் சமாராதனையில் சாப்பிட்டு சௌக்கியமாக மூட்டைகளுடன் தூங்கி வந்தான். பாஸ்கரனை சிஷ்யர்கள் பரிகாசம் செய்வதை குரு அறிந்தார். அவனை ஒன்றும் தெரியாத அப்பாவி என்று அறிந்துகொண்டு ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, “இன்று உன்னுடைய பிட்சை நடக்கட்டும். உடனே சமையல் முதலியவற்றை தயார் செய்!” என்று கட்டளையிட்டார்.

பாஸ்கரன் குருவின் வார்த்தையைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பக்தியுடன் அவரை வணங்கினான். பிறகு கடைக்குச் சென்று இரண்டு சேர் நெய்யும், இருவருக்கு ஆகும்படியான இரண்டு காய், கீரைகளையும் வாங்கி வந்தான். மடியாக ஸ்நானம் செய்து சமையல் செய்ய ஆரம்பித்தான். எல்லா பிராமணர்களும் குருவிடம் வந்து, “இவ்வளவு நாள் ஒருவிதத் தடையுமில்லாமல் விருப்பமான ருசியான அன்னத்தைப் புசித்து வந்தோம். இன்றைக்கு இந்த பிராமணனால் எங்களுக்கு வீட்டில் சாப்பிடும்படி ஆகிவிட்டது. இவனால் எப்படி இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட முடியும்? சமாராதனை செய்வதாகப் புகழ்ந்து கொள்கிறானே, கொண்டு வந்த சாமான் ஒருவருக்குக் கூட காணாதே!” என்றெல்லாம் பேசினர்.

அதற்குக் குரு அவர்கள் கவலைப்படக் காரணமில்லையென்றும், எல்லோரும் குளித்து முழுகி வழிபட்டு மடத்திற்கே சாப்பிட வரவேண்டும் என்றும் எல்லோரையும் அழைத்தார். அவர்கள், மடத்தில் சமைத்துப்போடப் போகிறார்களோ என்னவோ? சாப்பாடு கிடைத்தால் சரி! என்று நினைத்துக்கொண்டு போனார்கள். குரு பாஸ்கரனைக் கூப்பிட்டு, ஏராளமான பிராமணர்கள் சாப்பிட வரப்போவதால் சீக்கிரமாய் சமைத்து முடி. சமாராதனை முடிய இரவு ஆகிவிடும் என்றார். அவனும் எதுவும் யோசிக்காமல், ஆகட்டும் குருவே! என்று வணங்கிவிட்டு ஓடினான்.

சமையல் முடிந்ததென்று அவன் சொன்னதும் எல்லா பிராமணர்களையும் அழைத்து வா! என்று அவனை குரு அனுப்பினார். பாஸ்கரன் நதிக்கரைக்குச் சென்று, அவர்களை சீக்கிரம் வரும்படி சொல்ல, அவர்கள், அவன் செய்த சமையலைக் கொண்டு குருவிற்குப் பிட்சை செய்து வைக்கும்படியும், அவர்கள் இரவில் சாப்பிடுவதாகவும் கூறி அவனைத் திருப்பி அனுப்பிவிட்டனர். பாஸ்கரன் அதைக் குருவிடம் வந்து சொன்னதும், அவர், இன்று குருவும் பந்தியில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட இருப்பதாகச் சொல்லி அவர்களை மீண்டும் போய் அழைத்து வா! என்று சொல்லி அனுப்பி வைத்தார். பாஸ்கரன் போய் இதைச் சொல்லியும் அவர்கள் வரவில்லை. குருவோ மற்ற சீடர்கள் இல்லாமல் நான் பிட்சை ஏற்பதற்கில்லை என்று மறுத்துவிட்டார்.

இதனால் பிராமணன் பயந்து, ஸ்வாமி! நீங்கள் என்ன உத்திரவிடுகிறீர்களோ அதைச் செய்யக் காத்திருக்கிறேன். நான் என்ன கூப்பிட்டும் அவர்கள் ஏற்கவில்லை. அதோடு என்னைக் கேலி செய்கிறார்கள். நான் என்ன செய்வது? என்று குருவை வேண்டினான். உடனே குரு மற்றொரு சிஷ்யனை அனுப்பி எல்லாப் பிராமணர்களையும் அழைத்து வரும்படி கட்டளையிட்டார். சிஷ்யன் ஓடோடிச் சென்று குருவின் ஆணையைச் சொல்லி அவர்களை மடத்திற்கு அழைத்து வந்தான்.

குரு, ஊரிலுள்ள அனைவரும் குடும்பசகிதமாக இன்று சமாராதனையில் சாப்பிட வேண்டும். அதற்காக நாலாயிரம் இலையைப் போட்டு எல்லோரும் போய் அவரவர் குடும்பத்திலுள்ள அனைவரையும் இங்கு அழைத்து வாருங்கள் என்று பிராமணர்களிடம் கட்டளையிட்டார். பாஸ்கரனும் அவர்களிடம் அவ்வாறே வணங்கிக் கேட்டுக்கொண்டான். எல்லோரும் வரிசையாக வந்து அமர்ந்தனர். பாஸ்கரன் குருவைப் பக்தியுடன் பூஜித்து உபசாரம் செய்து மனப்பூர்வமாக மங்கள ஆரத்தி செய்தான். குரு சந்தோஷமடைந்தார்.

அதற்கு மேல், சமைத்த எல்லா சாமான்களையும் தன் பக்கத்தில் கொண்டு வந்து வைக்கும்படி சொன்னார். பிறகு தனது மேல் துணியைப் பாஸ்கரனிடம் கொடுத்து அதை அன்னத்தின் மீது போட்டு மூடும்படி சொல்லிக் கமண்டலத்திலிருந்த நீரால் அதன்மீது மந்திரித்துத் தெளித்தார். பிறகு அவனைக் கூப்பிட்டு அந்தத் துணியை எடுக்காமல் வேண்டியதை அவ்வப்போது எடுத்துக்கொள்ளும்படியும், சிறிய பாத்திரங்களில் எடுத்துப் பரிமாறும்படியும் கூறினார். பிறகு மற்றவர்களைக் கூப்பிட்டு அதேபோல் செய்து பரிமாறச் சொன்னார்.

என்ன ஆச்சர்யம்! எவ்வளவு பேர் சாப்பிட்டாலும் அன்னமும், நெய்யும், மற்ற பதார்த்தங்களும் எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்துகொண்டே வந்தன. எல்லோருடனும் தானும் வந்து அமர்ந்துகொண்ட குரு, என்ன வேண்டுமானாலும் தாராளமாகப் பரிமாறும்படி சொன்னார். போதும், போதும் என்று சொல்கிறவரையில் எல்லோருக்கும் பந்தி பரிமாறப்பட்டது. எல்லோரும் திருப்தியாகச் சாப்பிட்டுக் கை அலம்பியதும் தாம்பூலம் வழங்கப்பட்டது.

எல்லோரும் சாப்பிட்ட பின்னர் குரு அந்த கிராமத்தில் வசிக்கும் மற்ற ஜாதிக்காரர்கள் எல்லோரையும் தத்தம் குடும்பத்துடன் அழைத்துவரச் செய்து சாப்பாடு போடச் சொன்னார். பிறகு ஊரில் யார் சாப்பிடாதவர்கள் என்று விசாரித்து அவர்களையும் அழைத்து வரச் சொல்லி வயிறு நிறைய அன்னமிடச் சொன்னார். அதற்குப் பிறகு குரு ஊரில் தண்டோரா போட்டு யாராவது சாப்பிடாமல் இருந்தால் உடனே வந்து சாப்பிட்டுப் போகலாம். இது குருவின் ஆணை! என்று அறிவித்தார். அந்த ஊரில் ஒரு பிராணியாவது உபவாசமில்லை என்பதை அறிந்து பாஸ்கரனை சாப்பிடும்படி உத்தரவிட்டார். அவனும் அப்படியே சாப்பிட்டுவிட்டுப் பார்க்க, அவன் செய்து வைத்தது அப்படியே இருப்பதைக் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டான்.

அந்த ஆச்சர்யத்தை அவன் குருவிடம் சொல்ல மீதி உள்ள உணவை மீன்களும், நீர்வாழ் பிராணிகளும் உண்ணட்டும் என்று அன்னத்தை ஆற்றில் போடச் சொன்னார். இவ்விதம் மூன்று பேருக்குச் சமைத்த உணவை நாலாயிரம் பேர் சாப்பிட்ட அதிசயம் எங்கும் பரவலாயிற்று. குரு பாஸ்கரனை அழைத்து அவனுடைய தரித்திரம் முடிவடைந்துவிட்டதென்றும், புத்திர பௌத்திரர்களுடன் சகல செல்வங்களையும் பெற்று சுகமாய் வாழ்வாய்! என்றும் அவனை ஆசீர்வதித்தார். இதைக்கண்டு ஊர் மக்கள் பிரமித்து விட்டனர்.

ஒருவன் குரு அன்னபூரணியின் அவதாரமென்றான். மற்றொருவன் மகா பாரதத்தில் துர்வாசர் மற்ற ரிஷிகளுடன் பாண்டவர்களை அவமானப்படுத்தச் சென்றபோது, கிருஷ்ணன் அங்கு சென்று, ஒரு சிறு கீரையினால் எல்லோரையும் திருப்தி செய்வித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதை இன்று கண்ணால் கண்டோம்! என்றனர். மற்றொருவன் இவர் வெறும் தண்டதாரியல்ல. மூம்மூர்த்தியின் அவதாரமாதலால் அவருடைய மகிமையை நம்மால் வர்ணிக்க முடியாது!” என்று பேசிக்கொண்டு சென்றனர்.

ஒருவன், “இவர் ஈஸ்வரனில்லாவிட்டால் எப்படி ஒரு படி அரிசியைக் கொண்டு செய்த அன்னத்தை நாலாயிரம் பேர் சாப்பிட முடிந்தது?” என்றான். இதென்ன பெரிய காரியம்? உயிர் இழந்தவனுக்கு இவர் பிராணனைக் கொடுத்து எழுப்பவில்லையா? பட்டுப்போன மரத்துண்டை மரமாகத் துளிர்க்கச் செய்யவில்லையா? கும்சி கிராமத்தில் திரிவிக்கிரம பாரதிக்கு விஸ்வரூப தரிசனமளிக்கவில்லையா? ஒரு கீழ் சாதிக்காரன் வாயிலிருந்து வேதங்களைச் சொல்லும்படி செய்யவில்லையா? குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு ஆரோக்கியத்தை அளிக்கவில்லையா? ஒரு சேணியனுக்கு ஸ்ரீசைல யாத்திரை செய்வித்து ஒரு நொடியில் காசி நகரத்திற்கு அழைத்துச் செல்லவில்லையா? இவர் பரமேஸ்வரனாக இல்லாவிட்டால் இந்தவிதமான இயலாத காரியங்களை எப்படி சாதித்திருக்க முடியும்? உலகத்தில் அனேக இடங்களில் அனேக தேவதைகள் இருக்கின்றன. ஆனால் நமது குருநாதரை ஒரு தரம் தரிசித்தாலும் போதுமானது. அதனால் எல்லாவித நன்மைகளும் அடையலாம்” என்று பலவாறு புகழ்ந்தனர்.

இந்தக் கதையைக் கேட்டு பக்தர்கள் நாலா திசைகளிலிருந்தும் புறப்பட்டு வந்து குருநாதரைத் தரிசித்துத் தங்கள் வேதனைகளைச் சொல்லி அவற்றைத் தீர்த்துக்கொண்டனர். யார் அந்தக்கரண சுத்தியோடு ஒன்றுபட்டுக் குருவைப் பூஜிக்கிறார்களோ அவர்களுக்குக் குரு நிச்சயம் அருள் பாலிப்பார்! என்று சித்தர் கூறி முடித்தார். நாமதாரகன் கண்களில் நீர் வழியப் பரவசமாக அப்படியே அமர்ந்திருந்தான்.

கிழவிக்குப் பிள்ளை வரம் அளித்தல்

சிறிது நேரம் ஓய்விற்குப்பின் சித்தர் மற்றொரு அதிசயத்தைப் பற்றி நாமதாரகனுக்குச் சொல்ல ஆரம்பித்தார். காணகாபுரத்தில் சௌனக கோத்திரத்தில் பிறந்த சோமநாதன் என்ற பிராமணன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் கங்காபாய். அவள் வேத அர்த்தங்களை அறிந்தவளாய், ஒரு பதிவிரதையாய் விளங்கினாள். எல்லாம் இருந்தும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கங்காபாய்க்கு அப்போது அறுபது வயது. அவள் தினமும் குருவிற்குக் கற்பூர  ஆரத்தி எடுத்து வணங்குவது வழக்கம். பலநாட்கள் அவள் இவ்வாறு செய்து வர குரு சந்தோஷமடைந்து அவளிடம், அவளுக்கு என்ன வேண்டும்? என வினாவினார். அவள் தனக்கு ஆரத்தி எடுப்பதால் அவளுடைய விருப்பம் பூர்த்தியடையுமென்றார். உன் விருப்பத்தைச் சொன்னால் கௌரி ரமணன் உனக்கு வரமளிப்பார்! என்று குரு சொல்லவே, கங்காபாய் அவருடைய கால்களில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தனக்குக் குழந்தைகள் இல்லையென்றும், எல்லோரும் தன்னை மலடி என்று கடுஞ்சொல் பேசுகிறார்களென்றும் சொன்னாள். குழந்தைகள் பிறக்காவிட்டால் பெண்களுக்குக் கௌரவமில்லை. குழந்தை இல்லாத வீடு காட்டிற்குச் சமமாக இருக்கிறது என்று சொன்னாள்.

மேலும் அவள் குருவை நோக்கி, ஸ்வாமி! நான் தினமும் ஆற்றிற்குச் சென்று ஸ்நானம் செய்யும்போது மற்ற பெண்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து குளிப்பாட்டி சீராட்டி எல்லாம் செய்யும்போது, எனக்குத் தாபமாக இருக்கிறது. என்ன செய்வது! எனக்கு வயது அறுபதாகிவிட்டது. இனி இந்த ஜன்மம் போதும். அடுத்த ஜன்மத்திலாவது எனக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசி வழங்கிக் கிருபை செய்ய வேண்டும் என்று வேண்டினாள்.

அதற்கு குரு சிரித்த வண்ணமாய், “உன்னுடைய ஆரத்தியினால் சந்தோஷமடைந்தேன். அடுத்த ஜன்மம் என்னவென்று யாருக்குத் தெரியும்? மறு ஜன்மத்தில் இந்த ஜன்மத்தின் ஞாபகம் இருக்காது. ஆகையால் இந்தப் பிறவியிலேயே உனக்கு புத்திரர்கள் உண்டாகும். நான் சொல்வதை நிச்சயமாக நம்பலாம்.” என்று சொன்னார். இதைக் கேட்டு அந்த ஸ்திரீ “நீங்கள் சொல்வதை நம்புகிறேன். ஆனால் எனக்கு வயது அறுபது ஆகித் தீட்டும் நின்று விட்டது. நான் கடைப்பிடிக்காத விரதம் கிடையாது. இந்த ஜன்மம் முழுவதும் புத்திர பாக்கியத்திற்காக அரச மரத்தைச் சுற்றியாகி விட்டது. இன்னும் சுற்றி வருகிறேன். இந்தப் பிறப்பில் செய்வது அடுத்து ஜன்மத்திலாவது பலனைத் தரட்டும் என்ற ஆசையால் இதனைச் செய்து வருகிறேன். ஆனால் நீங்கள் இந்த ஜன்மத்திலேயே குழந்தை பிறக்குமென்று சொன்னது எனக்கு வியப்பை உண்டு பண்ணுகிறது என்றாள்.

அதற்குக் குரு அச்வத்த மரம் என்றழைக்கப்படும் அரச மரத்தை நிந்திக்க வேண்டாமென்றும் அரச மரத்தை அச்வத்த நாராயணன் என்று கூப்பிடுவார்கள் என்றும், தனது சொல்லின் மீது நம்பிக்கை வைத்து தினமும் அமரஜா நதியின் சங்கமத்திற்குச்சென்று ஸ்நானம் செய்து பிறகு தன்னையும், அரச மரத்தையும் சுற்றி வலம் வரும்படி அவளிடம் சொன்னார்.

தான் குறைபட்டதற்கு மன்னிப்புக் கேட்டு அரச மரத்தின் சிறப்புக்களை எடுத்துரைக்கும்படி குருவிடம் கங்காபாய் கேட்டாள். அதற்குக் குரு பிரம்மாண்ட புராணத்தில் பிரம்ம தேவன் நாரதருக்கு உபதேசித்த அரச மரத்தின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s