குருவைத் தேடி – 39

அன்று சோமவாரம் ஆனதால் சீமந்தினி ஸ்நானம் செய்யும் பொருட்டு ஆற்றங்கரைக்கு வந்திருந்தாள். அந்த நேரத்தில் அவள் ஆற்றிலிருந்து குதிரையுடன் ஒருவன் வந்ததைக் கண்டு ஆச்சர்யத்துடன் தன் தோழிகளிடம், “யாரடி இவன்? இவனுடன் நாகக் கன்னியரும் வந்தார்களே! நாகலோகத்தைச் சேர்ந்தவர்களா? ராட்சசனா? சூரியனைப் போல் பிரகாசமானவனாகவும், அற்புதமான மாலைகளை அணிந்தவனாகவும் திகழ்கிறானே. இவனை முன்பு எங்கோ பார்த்ததாகத் தோன்றுகின்றதே. என் கணவரைப் போலவும் தோன்றுகின்றதே!” என்று சொன்னாள்.

அதே வேளையில் ராஜகுமாரனும் இவளைக் கண்டு, இவள் யார்? இவள் விதவையாகக் காட்சியளிக்கிறாளே. தனதுஅருமை சீமந்தினியாக இருக்கக் கூடுமோ? என்றெல்லாம் குதிரையை விட்டு இறங்கி யோசித்தான். பிறகு அவளை அணுகி, “தாங்கள் யார்? ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? உங்களைப் பார்த்ததும் என் மனம் துக்கப்படுகிறதே!” என்று கூறினான். சீமந்தினி அவனிடம் பேச வெட்கப்பட்டவளாய் ஒதுங்க, அவளது தோழிகள் சீமந்தினியின் வரலாற்றை அப்படியே எடுத்துக் கூறினார்கள். தன் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்ட விவரத்தைக் கேட்டதும் சித்திராங்கன் பதறினான். அப்போது தோழிகள், அவனை யாரென்றும் இங்கு வந்ததன் காரணமென்னவென்றும் விசாரித்தனர். சீமந்தினி அவனது கணவனின் நினைவில் அழத் துவங்கினாள். அதைக் கண்டதும் அவனும் துக்கமடைந்து, தன் பெயர் சித்தன் என்றும், அவளுடைய கணவனைக் கண்டதாகவும், அவன் சௌக்கியமாக இருப்பதாகவும், இன்னும் மூன்று நாட்களில் அவன் அவளைச் சந்திப்பான் என்றும், தன் வார்த்தைகளில் சந்தேகம் வேண்டாம் என்றும் கூறினான.

சீமந்தினி மேலும் அழுதாள். இவன் தன் கணவன் தானோ, பார்ப்பதற்கும் அப்படித்தானே தோன்றுகிறது. ஆனால் கணவன் இறந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு எப்படி உயிர் பெற முடியும்? ஆற்றில் அவ்வளவு தேடியும் அகப்படாதவன் இப்போது எப்படித் தோன்ற முடியும்? இவன் யாராவது கந்தர்வனாகத் தான் இருக்க வேண்டும் போன்ற சந்தேகங்கள் எல்லாம் அவளுக்குள் எழுந்தது. அன்னை மைத்ரேயி சொன்னபடி தனது விரதத்தின் பயனாகப் பரமசிவன் தன் சங்கடங்களைத் தீர்த்து வைத்தானோ என்றும் யோசித்தாள். அந்நிலையில் ராஜகுமாரன் அவளிடம் விடைபெற்றுக் குதிரையில் ஏறிச் சென்றான்.

அவன் அங்கிருந்து நேராகத் தனது நாட்டிற்குச் சென்று தன்னுடன் வந்திருந்த நாககுமாரனான வாசுகியின் மகனை எதிரிகளிடம் அனுப்பிக், கௌரவமாகவும், மரியாதையாகவும் எனது நாட்டைத் திருப்பித் தருகிறீர்களா அல்லது பிராணனை இழக்கிறீர்களா? என்று கேட்டுத்தூது அனுப்பினான். நாககுமாரன் உடனே அரச சபைக்குச் சென்று, சித்திராங்கதன் நாகலோகம் சென்று உயிர் பிழைத்துத் திரும்பிய வரலாற்றை எடுத்துரைத்து அவர்கள் அபகரித்த நாட்டைத் திருப்பித் தராவிட்டால் நாகங்களின் உதவியுடன் அவர்களை ராஜகுமாரன் அழித்துவிட முடியும் என்று எச்சரித்தான்.

இனியும் தாமதித்தால் பிராணனை இழக்க நேரிடும் என்று அவனது தாயாதிகள் உடனடியாக அவனது பெற்றோரைச் சிறையிலிருந்து விடுவித்து ஆடை அணிகலன்களை அளித்துத் தங்களை மன்னிக்கும்படி வேண்டி, நாட்டைத் திருப்பித் தந்துவிட்;டனர். அவனது பெற்றோர் நடந்தது ஏதும் புரியாமல் திகைத்தனர். இறந்துபோன தமது புதல்வன் எவ்வாறு உயிர்பெற்றுத் திரும்ப முடியும? என அவர்கள் ஐயப்பட்டனர். ஆனால் மகனை எதிரில் கண்டதும் தந்தையும் தாயும் அணைத்துக்கொண்டு அழுது புலம்பினர். ராஜகுமாரனும் அவர்களை வணங்கி, நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது நான் நாகலோகத்தில் சௌக்கியமாக இருந்தேன்; உங்களுக்கு உதவாத நான் உங்கள் மகனேயல்ல. தாய் தந்தையரை எவன் துக்கப்படுத்துகிறானோ அவன் மூர்க்கன்: தாயின் தியாகத்திற்கு ஈடே இல்லை. பெற்றோருக்குக் கொடும் துன்பத்தைத் தந்தவன் ஏழேழு பிறவிகளுக்கும் தரித்திரினாகவும், பிள்ளைப் பாக்கியம் இல்லாதவனாகவும், நரகத்தில் வசிப்பவனாகவும் ஆக வேண்டும் என்று சொன்னான். அதன் பின் அனைவரும் அரண்மனையை அடைந்து மகிழ்வுடன் நடந்த கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்திரசேனன் தூதர்களை அழைத்து சித்திராங்கதன் உயிர் பிழைத்த வரலாற்றை எடுத்துக் கூறி சித்திரவர்மனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினான். பிரிந்தவர்கள் ஒன்று கூடினர். தோஷங்கள் நீங்க சீமந்தினிக்கும் சித்திராங்கதனுக்கும் மீண்டும் வெகு விமரிசையாகத் திருமணம் நடந்தது. நாகலோகத்திலிருந்து கொண்டு வந்த பரிசுகளை சீமந்தினியிடம் காட்டி அவளுக்கும் அமிர்தத்தைத் தந்து குடிக்கச் செய்து இருவரும் பத்தாயிரம் ஆண்டுகள் மிகச் சிறப்பாக வாழ்ந்தனர்.

சீமந்தினி சோமவார விரதத்தை விடாமல் கடைப்பிடித்ததால் தான் அவளுக்கு மலை போல் வந்த விதிப்பயன் பனிபோல் விலகிப் போயிற்று என்று குருதேவர் அந்தத் தம்பதிகளிடம் கூறினார். அவர்களோ, குருவை வணங்கித் தமக்குக் குருவின் பாதக்கமலங்களைத் தொழுது சேவை செய்வது தான் எல்லா விதங்களிலும் பெரிய விரதமாகப் படுகிறது என்று கூறினர். அதற்குக் குரு, சிவனை ஆராதித்தால் அது தன்னை வந்து சேரும் என்று விடையளித்தார். அதன் பின் தம்பதியர் அவரைப் போற்றித் துதித்து வணங்கி விடைபெற்று ஊர் திரும்பினர். இவர்களைக் கண்டதும் தாய் தந்தையர் மிகவும் ஆனந்தமடைந்து மிகச் சிறப்பாகக் குருபூஜை, சமாராதனை எல்லாம் செய்து மகிழ்ந்தனர்.

இந்தத் தம்பதிகளுக்கு ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள். ஒவ்வொரு வருடமும் குருவைத் தரிசித்து வந்தனர். குருவின் ஆசீர்வாதத்தால் நீண்ட ஆயுள் பெற்றனர். இவ்வாறு ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியின் மகிமை பற்றி சித்தர் நாமதாரகனிடம் சொன்னார். மேலும் அவர் அப்பேர்ப்பட்ட வரத மூர்த்தியான குருதேவர், பக்தி செய்தால் எல்லோருக்கும் பிரசன்னமாவாரென்றும், அதில் கொஞ்சமாவது சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும் சர்வ மங்களங்களையும் அளிக்கின்ற அமிர்தம், குரு சரித்திரத்தின் மூலம் ஓடையாக ஓடுகின்றதென்றும,; எல்லோரும் அதைப் பருக வேண்டும்! என்றும் கூறினார்.
<h2 align =’center’>விருந்தின் விதிமுறைகள்</h2>

மிக நீண்டதாகவும், பல்வேறு விஷயங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டதாகவும் விளங்கிய அந்தத் தம்பதியரின் கதையைக் கேட்டுக்கொண்ட நாமதாரகன், சிறிது நேர ஓய்விற்குப் பிறகு தனக்கு எதிரில் வந்து குருவின் பெருமைகளை அமுத தாரையென சொல்லிக்கொண்டிருந்த சித்தரிடம் சென்று, அவரை வணங்கி, “சுவாமி! மாயா மோகமென்ற இருளில் கிடந்த என்னைத் தாங்கள் சூரியனைப்போல் பிரகாசித்து இருளைப் போக்கி, இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க வந்திருக்கிறீர்கள். குருவின் கிருபையால் எனக்குத் தங்களின் தரிசனம் கிடைத்தது. அந்த குருவைப் பற்றி எவ்வளவு கேட்டாலும் திகட்டாததனால் தாங்கள் மேலும் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான். அவன் வேண்டுகோளை ஏற்று, அவனை ஆசீர்வதித்து சித்தரும் சொல்லத் தொடங்கினார்.

“காணகாபுரத்தில் குருதேவர் வசித்தபோது அனேக சம்பவங்கள் நடந்து அவரது மகிமை எங்கும் பரவலாயிற்று. அனைத்தையும் சொல்ல முடியாவிட்டாலும் இன்னும் சிலவற்றைச் சொல்கிறேன், கேள்! அந்த ஊரில் வேதரதன் என்ற பிராமணன் வசித்து வந்தான். கர்ம மார்க்கத்தை வழுவாமல் கடைப்பிடித்து தினமும் உஞ்சவிருத்தி எடுத்து சமைக்கப்படாத தானியங்களைப் பிட்சையாகப் பெற்று அதைச் சமைக்கச் செய்து சாப்பிட்டு மிக சீலமாக வாழ்ந்து வந்தான். தான் பிட்சை எடுத்து வந்தாலும் அதிதிகளை நன்றாக வரவேற்று அன்னமளித்து உபசரிப்பான். ஆனால் அவன் யாருடைய வீட்டிலும் எதுவும் எக்காரணத்தையும் கொண்டு சாப்பிட மாட்டான். அவனுக்;கு எதிரான கோப சுபாவத்துடன் அவனுடைய மனைவி இருந்தாள். அவளுக்குத் தன் கணவனின் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்காது.

குரு நரஸிம்ம ஸரஸ்வதி அந்த ஊரில் வசித்ததால் அந்த ஊரில் எல்லா நாட்களும் பிராமண போஜனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆயிரக் கணக்கானவர்கள் அங்கு சென்று வேண்டிய வரை சாப்பிட்டு தட்சிணையும் வாங்கிக்;கொண்டு வந்தனர். அப்படிப்போய் சாப்பிட்டு வந்த பெண்கள் தேவரதனின் மனைவியிடம் அந்தப் பண்டங்களின் ருசி, தாங்கள் ரசித்துச் சாப்பிட்டது போன்ற எல்லாவற்றையும் பெரிதாகச் சொல்லி இவளது தாபத்தைத் துhண்டிவிட்டு விடுவார்கள். அதைக்கேட்டு அவள், “என்ன நம்முடைய அதிர்ஷ்டம்! இத்தனை பேர் போய் வகைவகையாய் சாப்பிட்டு விட்டு வருகிறார்கள். கனவில் கூட நான் இவ்விதமான சாப்பாடு அனுபவித்ததில்லையே. போன ஜன்மத்தில் எந்த தெய்வத்தை ஆராதித்தேனோ, இப்படிப்பட்ட தரித்திரமான பதி எனக்கு வந்து வாய்த்தாரே, ஊரிலுள்ள எல்லோரும் தம்பதிகளாகச் சென்று பரான்னம் (அடுத்தவர் வீட்டில் சாப்பிடுவது) சாப்பிட்டு வருகிறார்கள்.அவர்கள் போன ஜன்மத்தில் செய்த புண்ணியத்தை இப்போது அனுபவிக்கிறார்கள். இவர் என்னவென்றால் பரான்னமே உண்ணுவதில்லை என்று விரதம் வைத்திருக்கிறார். இவர் போகவில்லையென்றால் நான் எப்படிப் போய்ச் சாப்பிட முடியும்? என்றெல்லாம் புலம்பி வருந்தினாள்.

அந்த ஊருக்கு ஒரு பணக்காரன் வந்தான். அவன் மிகச் சிறப்பான சமாராதனை விருந்து ஒன்றைத் தான் அளிக்க விரும்புவதாகவும், அந்த ஊரிலுள்ள பிராமணர்கள் எல்லோரும் தம்பதிகளாக வந்து உணவருந்திச் செல்லும்படியும் அழைத்தான். வேதரதன் வீட்டிற்கும் அவனுடைய ஆட்கள் வந்து அழைத்தனர். அவர்கள் சென்றதும் அவனது மனைவி கூப்பிட்ட மரியாதைக்குப் போகத்தான் வேண்டுமென்றும் அப்படிப் போனால் சுசிருசியான போஜனம் அருந்துவதோடு, ஆடைகள், தட்சிணை எல்லாம் கிடைக்கும். தனக்கு மிக ஆவலாய் இருப்பதால் அவர்களது அழைப்பை மறுக்காமல் கட்டாயம் நாம் போகத்தான் வேண்டும் என்று அடம் பிடித்தாள். ஆனால் அவனோ தனது விரதத்தைப் பற்றிக் கூறி வர மறுத்தான். அதோடு அவன், அவளுக்கு அவ்வளவு ஆசையிருந்தால் மற்ற பெண்களோடு போய் ஆசை தீர சாப்பிட்டு வரும்படி கூறினான்.

அந்தத் தனிகன் இவள் தனியாக சாப்பிட வருவதை விரும்பவில்லை. தம்பதிகள் சேர்ந்து வந்தால் தான் போஜனம் முதலியவை அளிக்கப்படும் என்று சொல்ல, அந்தப் பெண் மிகவும் துக்கமடைந்தவளாய், தன் துரதிர்ஷ்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டு குரு நரஸிம்ம சரஸ்வதியின் சன்னிதானத்தை அடைந்தாள். குருவிடம் தன் கணவனை அழைத்து சமாராதனைக்குப் போகும்படி அவர் சொல்ல வேண்டும் என வேண்டினாள். அவள் கூறியவற்றைக் கேட்டுச் சிரித்த குருதேவர் தேவரதனை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினார்.

அவன் வந்ததும், “உன் பெண்டாட்டிக்கு விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்வது உன் கடமை. குடும்பப் பெண்களின் உள்ளம் எப்போதும் துக்கமடையக்கூடாது. அவளுடன் நீயும் போய் வா!” என்றார். அவன் தனது விரதம் குறித்து வருந்தினாலும் குருவின் ஆணையை மீறினால் நரகத்திற்குப் போகும்படியாகும் என்று நினைத்துத் தன் மனைவியுடன் விருந்துண்ணச் சென்றான். அவனுடைய மனைவி மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றாள்.

உரிய சம்பிரதாய சடங்குகளுக்குப் பிறகு உணவு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அவனது மனைவியின் கண்ணுக்கு நாயும் பன்றியும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதாகத் தென்பட்டது. உடனே இலையை விட்டு எழுந்து அவள் கணவனிடம், நாய் நரிகளின் எச்சிலை சாப்பிடாதீர்கள் என்று எச்சரித்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் உனது துரதிர்ஷ்டத்;தால் உன் கண்ணுக்கு அப்படித் தெரிந்திருக்கிறது. உன் ஆசையால் என் விரதத்திற்கும் பங்கம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னான். இருவரும் குருவிடம் சென்றனர்.

குரு அவளை நோக்கி, என்ன! பரான்னத்தின் சுகத்தை அனுபவித்தாயா? என்று வினவ, அவள் வெட்கமடைந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். தனது அல்ப புத்தியால் கணவனின் விரதத்தையும் பங்கம் செய்ததாக ஒப்புக்கொண்டு தன்னை மன்னிக்கும்படி திரும்பவும் கேட்டாள். பிராமணன் குருவிடம் தனது எதிரி தான் மனைவியாகத் தனக்கு வாய்த்திருப்பதாகவும், தனது விரதத்திற்கு பங்கம் ஏற்பட்டதையும் சொல்லி வருத்தப்பட்டான். உன் குடும்பத் தலைவியின் விருப்பத்தை நீ பூர்த்தி செய்தாய். உன்னை ஒரு தோஷமும் அணுகாது என்று சமாதானம் சொன்னார். மேலும் அவர் அவனை நோக்கித் தேவ காரியம், பிதுர் காரியம் முதலிய காரியங்களுக்குப் பிராமணர்கள் அகப்படாமல் உன்னை சாப்பிடக் கூப்பிட்டால் அதைப் பிரான்னம் என்று கருதாமல் அங்கு செல்ல வேண்டும். சாப்பிட வேண்டும் என்று கூறினார். அதைக்கேட்டு பிராமணன் எங்கெங்கு அன்னம் சாப்பிடலாமென்றும், எங்கெங்கு சாப்பிடக்கூடாது என்று சொல்லும்படிக் கேட்டான். குருதேவர் கீழ்க்கண்டவாறு சொல்லத் தொடங்கினார்.

குருவின் வீட்டிலும், சிஷ்யனுடைய வீட்டிலும் சாப்பிடலாம். வைதீகர், வித்வான்கள், தாய்மாமன், மாமனார், சகோதரர்கள், சாதுக்கள் இவர்களுடைய வீட்டிலும் சாப்பிடலாம். திவசம், திதி செய்யப் பிராமணனாக அழைத்தால் அங்குக் கட்டாயம் போக வேண்டு;ம். சாப்பிட்ட பிறகு காயத்ரி ஜபம் செய்தால் தோஷம் நீங்கும் என்று கூறியவர், தாய் தந்தையரை வேலை வாங்கிக் கஷ்டப்படுத்தி அவர்களைக் காப்பாற்றுபவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தி வெளியில் தர்மம் செய்பவர்களின் வீட்டிலும், கஞ்சன்கள், கடமைகளைச் சரியாகச் செய்யாதவர்களின் வீட்டிலும், சித்திரம் எழுதுவோர், ஆயுதமேந்துபவர்கள், மல்யுத்தம் செய்யும் பிராமணர், வீணையைக் கற்பி;ப்பவர்களின் வீட்டிலும், பணத்தால் கர்வமடைந்தவர் வீட்டிலும், கணவனை விட்டுத் தனியாய் வாழும் பெண்களின் வீட்டிலும் சாப்பிடக்கூடாது. தெய்வபக்தி இல்லாதவர்கள் வீட்டிலும், பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டிலும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணிற்குக் குழந்தை பிறந்துவிட்டால் பிறகு சாப்பிடலாம். கள் குடிப்பவர், பிச்சை எடுத்து வாழ்பவர் என்று இந்தப் பட்டியல் ஏகத்திற்கு வளர்ந்துகொண்டே போகிறது. இப்படி இந்தக் காலத்திற்கு ஒத்து வராத பழைய சம்பிரதாயங்களைக் குரு பட்டியலிட்டுக் கூறவே, மேலும் பல சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்று தேவரதன் மனைவியுடன் குருவை வணங்கி ஆசி பெற்றுத் தன் வீடு சென்றான்.

இது தவிர, அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் நம் முன்னோர் வகுத்துள்ள நெறிமுறைகள் 35 பக்கங்களுக்கு ஒரு சிறு துரும்பும் ஒன்றுவிடாமல் சொல்லப்பட்டிருக்கிறது. அவை எல்லாமே பிராமண சம்பிரதாய வாழ்க்கை நெறிகள். மிகக் கடுமையான நியமங்கள். அத்தனையும் கடைப்பிடித்து வாழ்ந்ததால் தான் அந்தக் காலத்தில் பிராமண வாக்கு வேதவாக்காக மதிக்கப்பட்டது போலும். அவர்கள் அத்தனை ஆசார அனுஷ்டானங்களுடன் வாழ்க்கையையே வேத சமர்ப்பணம் செய்து இயற்கையோடு ஒன்றிய விதத்தில் வாழ்ந்ததால் தான் சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் மிக அதிகமாக இருந்திருக்கிறது. அதோடு மற்ற வர்ணத்தாரும் பிராமண சமூகத்தினரின் அரவணைப்பில் அவரவர் குல தர்மம் கெடாமல் சங்கிலித்தொடர் போன்ற ஓர் அமைப்பில் அவரவரின் எல்லையைப் புரிந்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது. இந்த விளக்கத்துடன் மேற்கொண்டு கதை செல்லும் விதத்தைப் பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s