குருவைத் தேடி – 38

“சோமவார விரதத்தை விரதங்களின் அரசன் என்று சொல்லலாம். அன்று பரமேஸ்வரனை ஆராதிப்பதால் சகல ஆசைகளையும், சகல ராஜ்ஜியங்களையும் வெல்லலாம். அதோடு மட்டுமின்றி நித்யானந்தத்தைப் பெற்று சம்சாரக் கடலைக் கடந்து விடலாம். இந்த மேலான விரதத்தை உபவாசமிருந்து, பிராமணர்களைக் கொண்டு முறையான பூஜை முதலிய சடங்குகளைச் செய்ய வேண்டும். இதை யார் என்றாலும் அனுசரிக்கலாம். யாருக்கும் தடையில்லை. இந்த விரதத்தைக் கடைப்பிடித்ததால் பலனடைந்த கதை ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் கதையை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார்.

முன் யுகத்தில் சித்திரவர்மா என்ற அரசன் ஆர்யவர்த்தத்தைத் தர்ம பரிபாலனம் செய்து வந்தான். நல்லவர்களைக் காப்பாற்றித் தீயவர்களைத் தண்டித்தான். பூமி முழுவதையும் ஜெயித்துத் தன் மனைவியுடன் அனேக தர்மங்களைச் செய்து மகன் வேண்டுமென்று வேண்டினான். சிறிது காலம் கழித்து சூரியனைப் போல் பிரகாசத்துடன், பார்வதியைப் போன்ற அழகுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சோதிடர்களை அழைத்து ஜாதகப்பலன் பார்த்து சுமந்தினி என்று பெயரிட்டனர். வந்தவர்கள் அந்தக் குழந்தையைப் பலவிதமாகப் புகழ்ந்து பாராட்டிப் பத்தாயிரம் வருடங்கள் தன் கணவனுடன் சிறப்;பாக அரசாள்வாள் என்று புகன்றனர். அதைக் கேட்டு அரசன் மகிழ்ந்து அவர்களுக்கு ஏராளமான பரிசுகளைக் கொடுத்தான். ஆனால் அவர்களில் ஒரு பிராமணன், இவள் பதினான்காம் வயதில் விதவையாவாள் என்று நிர்ப்பயமாகச் சொல்லிப் போனான். அதைக்கேட்ட அரசன் அதிர்ச்சியடைந்தான்.

வருடங்கள் கடந்தன. பெண்ணிற்கு ஏழு வயது ஆனது. இவளுக்கு எப்படி விவாகம் செய்வது எனப் பெற்றோர் யோசித்தனர். ஒருநாள் சீமந்தினி தன் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது விளையாட்டுப் பேச்சாக அவளுடைய பதினான்காம் வயதில் தான் விதவை ஆவாள் என்ற தகவலை அறிந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தாள். அத்தருணத்தில் அங்கு யாக்ய வல்கியர் என்னும் ரிஷியின் மனைவி அங்கு வந்தாள். அவளுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சௌபாக்கிய நிலையைத் திடமாகப் பெறுவதற்குரிய வழியைத் தனக்குக் காட்டுமாறு சீமந்தினி வேண்டினாள். சௌபாக்கியத்தை வலுவாகப் பெற உமா ரமணனாகிய பரமேஸ்வரனை ஆராதிக்க வேண்டுமென்றும், அதற்கு சோமவார விரதம் இருக்க வேண்டும் என்றும் மைத்ரேயி கூறினாள். மேலும் அவள், சோமவார விரதம் இருப்பவர், அதிகாலையில் எழுந்து மங்கள ஸ்நானம் செய்து, பட்டுத்துணிகளை அணிய வேண்டும். ஒன்றும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். மன சுத்தியுடன் கௌரி மணாளனைப் பூஜிக்க வேண்டும். அபிஷேகம் செய்வதால் பாவங்கள் தொலைகின்றன. சந்தன அட்சதை போடுவதால் சாம்ராஜ்ஜியங்கள் கிட்டும். பூக்களால் பூஜை செய்வதால் சௌபாக்கியமும், நலனும் பெறலாம். துhபம் போடுவதால் உடல் மணமும், தீபத்தினால் ஒளி உடலும், நைவேத்தியத்தினால் சகல போகமும், தாம்பூலத்தினால் லட்சுமி கடாட்சமும், நமஸ்காரத்தினால் நான்கு வித நன்மைகளும், எட்டுவித செல்வங்களும், ஹோமம், ஜபம் செய்தால் ஒன்பது வகையான நிதிகளும் கிடைக்குமென்றும், பிராமணர்களுக்கு உணவளித்தால் சகல தேவதைகளும் திருப்தி அடைகிறார்கள் என்றும் சொன்னாள். மேற்சொன்ன விதத்தில் விரதம் அனுஷ்டித்தால் எந்தவிதக் கஷ்டமும் அணுகாது என்றும் மைத்ரேயி கூறினாள். உடனே சீமந்தினி தான் அந்த விரதம் இருக்கவேண்டுமென்று தீர்மானித்தாள்.

சித்திரவர்மா, மகளுக்குரிய பருவ வயது வந்ததால் உலக வழக்கப்படி விவாகம் செய்து கொடுப்பதென்றும் பிறகு அவளுடைய தலைவிதிப்படி நடக்கட்டுமென்றும் நினைத்து, மந்திரிகளை அனுப்பி நள தயமயந்தியின் வம்சத்தில் பிறந்த இந்திரசேனன் என்ற அரசனின் மகனான சித்திராங்கதனுக்குத் தன் மகளைக் கொடுக்க ஏற்பாடுகள் செய்தான். அவர்களும் சம்மதிக்க, விவாகம் வெகுச் சிறப்பாக நடந்தேறியது. கல்யாணம் முடிந்ததும் சம்பந்தி மரியாதை எல்லாம் செய்து எல்லோருக்கும் விடை கொடுத்து, மாப்பிள்ளையை மாத்திரம் தன்னிடம் இருக்கச் சொன்னான். ராஜபுத்திரனும் மாமனார் வீட்டில் மகிழ்ச்சியாக மனைவியுடன் காலம் கழித்தான்.

அப்படி இருக்கையில் ஒரு முறை எல்லா பரிவாரங்களுடன் மனைவியையும் அழைத்துக்கொண்டு காளந்தி என்னும் யமுனா நதிக்கு ஜலக்கிரீடை செய்வதற்காகச் சென்றான். எல்லோரும் நதியில் நீந்தி விளையாடிக் களித்தனர். ராஜகுமாரனும் ஆனந்தமாக நீரில் விளையாடும்போது தற்செயலாக நடு ஆற்றில் மறைந்துவிட்டான். அனைவரும் திடுக்கிட்டனர். கூக்குரலிட்டனர்.

நீரில் விளையாடிக் களித்தவர்களெல்லாம் மன்னனிடம் ஓடிச் சென்று மாப்பிள்ளை நீரில் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்தனர். அதைக்கேட்ட அரசன் மூர்ச்சையடைந்தான். சீமந்தினி இச்செய்தியைக் கேட்டதும் தன் உயிரை மாய்த்துவிடத் துடித்தாள். ஒருவரையொருவர் தேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சீமந்தினி, “ஹே, பரமேஸ்வரா! உன்னை நம்பிப் பூஜை செய்தவர்களுக்கு இந்த கதி வரலாமா? இதை எதிர்ப்பார்த்துத்தானே நான் முன்பே விரதங்களை மேற்கொண்டேன். நான் மேற்கோண்ட விரதம் பலனின்றிப் போயிற்றே! எல்லோருக்கும் அழியாத செல்வத்தைத் தருகிறாயே! என்னை எப்படி மறந்தாய்? சரணடைந்தவரைக் காப்பாற்றாத தோஷம் உங்களை வந்து சேர்கின்றதே! என் குருவான மைத்ரேயி சொல்லித் தந்த விரதம் சௌபாக்கியத்தை அளிக்கவில்லையே!” என்று மிகவும் புலம்பினாள். தான் சிவபூஜை செய்தது தவறு என்று நினைத்து நதியில் தானும் விழுந்து உயிரை விட்டுவிடத் தீர்மானித்தவளாய் வேகமாய்ப் புறப்பட்டாள். ஆனால் அரசன் மிகுந்த துக்கத்துடன் அவளைத் தடுத்து நிறுத்தினான்.

மந்திரிகளும், சைனியமும் படகுகளின் உதவியால் யமுனா நதி முழுவதையும் வலை போட்டுத் தேடினர். ஆனால் எங்குமே ராஜகுமாரன் கிடைக்காததால் மனம் வருந்தினர். அதன்பின் ராஜகுமாரன் நதியில் மறைந்துவிட்ட செய்தியை அரசன் சித்திரவர்மன், இந்திரசேனனுக்குச் சொல்லியனுப்பினான். தகவல் அறிந்து இந்திரசேனன் மனைவி, பரிவாரங்களுடன் ஓடி வந்து, என்ன ஆயிற்று? என்று கேட்டுக் கதறி அழுதார். எல்லோரும் வருந்திப் புலம்பினர். மருமகளான சீமந்தினியைப் பார்த்து, உன் விதி இப்படி ஆயிற்றே! என்று அழுதனர்.

சீமந்தினியும் மிக அழுதுத் தான் வாழ்வதற்கு இனி ஒன்றுமில்லையென்றும், விதவையாக வாழத் தனக்கு விருப்பமில்லையென்றும், உடன்கட்டை ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யும்படியும் பூமியில் புரண்;டு அழுது வேண்டினாள். ஆனால் கணவனின் பிரேதம் இல்லாமல் தனியாக அக்கினிப் பிரவேசம் செய்ய முடியாது என்றும், பிரேதம் கிடைக்கும் வரை இப்படியே இருக்க வேண்டியதுதான் என்றும் பிராமணர்கள் கூறித் தடுத்தனர். இந்நிலையில் இந்திரசேனனின் மகன் மறைந்த செய்தியைக் கேட்டதும் அவனது தாயாதிகள், அவன் இங்கு வந்த நேரத்தில் அவனது நாட்டைத் தம் வசமாக்கிக்கொண்டு, அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகனை இழந்த சோகத்துடன் நாட்டையும் இழந்து மன்;னன் மனைவியுடன் சிறையில் வாடினான்.

இந்நிலையில் சித்திரவர்மன் தன் பெண்ணின் துக்கத்தை நன்கு அறிந்து அவளைக் கண்காணித்து ஆறுதலாக நடந்து கொண்டான். பிள்ளை வாரிசு தனக்கு வேறு இல்லாததால் அவளைத் தான் புத்திரனாகவே நினைப்பதாகவும், தனக்குப் பிறகு இந்த நாட்டை அவள் தான் அரசாள வேண்டும் என்றும், ஒரு வருடம் வரை அவளது கணவன் திரும்பி வருகிறானா என்று எதிர்பார்த்து இருந்துவிட்டுப் பிறகு அவன் வராவிட்டால், விதவையாகத்; தன்னை அவள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஆறுதலாகக் கூறினான். அவளும் அதைக் கேட்டு எப்போதும் சிவனைத் துதித்தவளாய், சோம வார விரதத்தை விடாமல் பக்தியுடன் அனுசரித்து வந்தாள்.

இது இப்படி இருக்க நதியில் மூழ்கிய ராஜகுமாரன் நீரில் அடித்துச் செல்வதை நதியில் நீராட வந்த நாகக்கன்னிகைகள் கண்டு, அவனை இழுத்து நாகலோகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அமிர்தத்தைத் தெளித்து அவனைத் தேற்றினர். தட்சகன் என்ற நாகம் வசிக்கும் அழகான இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். புற உலகை மறந்த ராஜகுமாரன் பாதாள லோகத்தின் அழகைக் கண்டு வியந்தான். தேவ பட்டினமான அமராவதியைப் போல அது காட்சியளித்தது.

எங்கு பார்த்தாலும் ரத்தின மயமான கோபுரங்களும், மின்னலைப் போன்ற துhண்களும், இந்திர நீலக் கற்களாலும், வைடூரியம், மாணிக்கம், முத்து முதலியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சந்திரகாந்தியை ஒத்த தரையும், தங்கத்தினால் செய்த பெரிய கதவுகளும் கொண்டிருந்த ஈடு இணையற்ற எழிலுடன் கூடிய ஓர் அழகிய அரண்மனைக்குள் ராஜகுமாரன் பிரவேசித்தான். அங்கு ஒரு பெரிய சபை கூடியிருந்தது. அனைவரும் சர்ப்பங்களாகவே காட்சியளித்தனர். சபையில் கணக்கற்ற பாம்புகள் கூடியிருந்தன. அந்தச் சபையின் மத்தியில் ஓர் உன்னதமான ஆசனத்தில் சூரிய காந்தியைப் போல் பிரகாசித்துக்கொண்டு, பளிச்சிடுகின்ற ஆடை ஆபரணங்களும், குண்டலங்களும் அணிந்து, அனேக முகங்களோடு தட்சகன் வீற்றிருந்தான். இப்படிப்பட்ட நிறைந்த நாகசபையைக் கண்டதும் ராஜகுமாரன் அனைவரையும் வணங்கினான்.

week37நாக கன்னியர்கர்களைத் தட்சகன் பார்த்து, மிக்க லட்சணத்துடன் கூடிய இந்த ராஜகுமாரனை எங்கிருந்து அழைத்து வந்தீர்கள்! என்று வினவினான் அதற்கு அவர்கள், அவனை யமுனைப் பிரவாகம் அடித்து வந்ததென்றும், அதிலிருந்து விடுவித்து அழைத்து வந்ததாகவும், ஆனால் அவன் பெயர், ஊர், வம்சம் முதலிய ஒன்றும் அறியோம்! என்று கூறினர். தட்சகன் அரசகுமாரனை நோக்கி, யாரென்று விசாரித்தான்.

அரசுகுமாரன் தான் பூமியின் நைடத ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவனென்றும், புண்ணிய சீலனான் நளனுடைய வம்சத்தில் வந்த இந்திரசேனனுடைய புத்திரன் சித்திராங்கதன் தனது பெயர் என்றும், தன் மாமனார் வீட்டில் நீராட யமுனா நதிக்குச் சென்றபோது, நதியில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வரும்போது நாக கன்னியரால் மீட்கப்பட்டு, அவர்கள் இங்கு தன்னை அழைத்து வந்ததாகவும், தன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தாலும் அனது அதிர்ஷ்டத்தினாலும் அவருடைய தரிசனம் பெற்றுப் புனிதமடைந்ததாகவும் பணிவுடன் புகன்றான்.

அவனது தெளிந்த அறிவையும், பேச்சின் தன்மையையும் கேட்டு நாகராஜன் மனம் மகிழ்ந்து அவனைப் பயப்பட வேண்டாம்! என்று அபயமளித்தான். பிறகு நீ எந்த தெய்வத்தை வழிபடுகிறாய்? என்று வினவினன். அதற்கு ராஜகுமாரன் தைரியமடைந்து எல்லா தேவதைகளுக்கும் தெய்வமான பார்வதியுடன் கூடிய பரமேஸ்வரனைப் பூஜிப்பதாக விடையளித்தான். எவனிடமிருந்து ரஜோ குணத்தால் பிரம்ம தேவனும், சத்வ குணத்தால் விஷ்ணுவும், தமோ குணத்தால் ஏகாதச ருத்த்pரர்களும் ஜனித்தவர்களோ அப்பேர்ப்பட்ட உமா ரமணனைத் தான் ஆராதிப்பதாகக் கூறினான். எவன் உற்பத்தி, ஸ்திதி, லயம் ஆகிய முத்தொழில்களுக்கும் காரணனோ, அக்னிக்குத் தேஜஸை எவன் அளிக்கிறானோ, பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து பூதங்களும் எவனிடமிருந்து ஜனித்தனவோ, எல்லோரிடமும் எவன் ஆனந்த ஸ்வரூபியாகவும், சின்மயமாகவும் வசிக்கிறானோ, எவனுடைய சொற்கள் வேதங்களாக விளங்குகின்றனவோ, எவன் தட்சகனையே குண்டலமாக அணிகிறானோ, எவன் தலையில் சந்திரன் அணிகலனாகத் திகழ்கிறதோ அப்பேர்ப்பட்ட சங்கரனையே தான் பூஜிப்பதாகக் கூறினான்.

ராஜகுமாரன் கூறிய பதிலைக் கேட்டதும் தட்சகன் மிகவும் மகிழ்ந்து, மகிழ்ந்தேன்! மகிழ்ந்தேன்! உனது சொற்கள் எனக்கு ஆனந்தத்தைத் தருகின்றன. உனக்கு வேண்டிய ராஜ்ஜியத்தைத் தருகிறேன். இந்த நாகலோகத்திலுள்ள ரத்தினங்கள், கற்பகமரம் முதலியவற்றைப் பெற்று நீ சுகமாக வாழலாம். அமிர்தத்தைக் கனவிலும் கண்டிருக்க மாட்டாய். அதையும் தருகிறேன். வியாதி, மூப்பு எதுவுமில்லாத என் நகரத்தில் நீ வசிக்கலாம்!” என்றான்.

ஆனால் ராஜகுமாரன் அவனை நோக்கி, ‘என் பிதாவிற்கு நான் ஒரே புத்திரன். சமீபத்தில் தான் மணம் முடிந்தது. என்னைக் காணாமல் அங்கு தாய் தந்தையும், என்னருமை மனைவியும் துக்கப்பட்டுக்கொண்டிருப்பார்கள். உம்முடைய சரண தரிசனம் கிடைத்தது. எனக்குப் பிராண தானமும் தந்தீர்கள். இனி அவர்களையெல்லாம் சென்று பார்க்க அனுக்கிரகம் செய்ய வேண்டும்” என்று வேண்டினான். தட்சகன் சந்தோஷமடைந்து, அனேகவித ரத்தினங்களைக் கொடுத்து, ஏராளமான அமிர்தத்தைக் குடிக்க வைத்து, கல்பக மரத்தின் பழங்களையும், அனேக வித ஆபரணங்களையும், இன்னும் பூமியில் எந்தெந்த பொருள் அபூர்வமோ அவற்றையும் கட்டிக் கொடுத்து அனுப்பினான். அதோடு மட்டுமின்றி அவன் எப்பொழுது எல்லாம் நினைக்கிறானோ அப்போதெல்லாம் தான் தோன்றி அவன் விரும்புகின்ற காரியங்களை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்களித்தான்.

அதன் பின் ராஜகுமாரனுக்கு மனோ வேகத்தில் செல்லும் ஒரு குதிரையையும் கொடுத்து விடை கொடுத்தனுப்பினான். சித்திராங்கதன் அதன் மீது ஏறி, முன்பு தான் எங்கு நீரில் மூழ்கினானோ அந்த இடத்திலிருந்து குதிரையுடன் மேலே கிளம்பினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s