குருவைத் தேடி – 37

சோமவார மகிமை

குருவிடம் மனம் விட்டு உரையாடிக்கொண்டிருந்த தம்பதிகள் மன நெகிழ்வுடன், மீண்டும் மீண்டும் குருவிற்கு நன்றி கூறினர். பிறகு அந்தப் பெண் ‘மரித்து விட்ட என் மணாளனை மனமிரங்கி எனக்கு மீட்டுத் தந்த கருணைக்கடலே! இனி நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எந்த மந்திரத்தை உபதேசம் பெற்றால் மனது நிம்மதியடைந்து குருவின் சரணங்களில் லய மடையும்?” என்று பணிவுடன் வணங்கிக் கேட்டாள்.

பெண்களுக்குப் பக்தியுடன் பதிசேவை செய்வது தான் உபதேசமென்றும், மந்திர உபதேசம் பெறக்கூடாதென்றும், மந்திர உபதேசம் வாங்கினால் விக்கினமுண்டாகுமென்றும் சத்குரு அவர்களிடம் சொன்னார். மேலும் அப்படி உபதேசம் பெற்றால் முன்பு சுக்ராச்சார்யார் அடைந்த கதியை அடைய நேரிடுமென்றும் சொன்னார். அந்தக் கதையைத் தனக்கு சொல்லும்படி அந்தப் பெண் கேட்டாள். குருதேவரும் சொல்லத் தொடங்கினார்.

“முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. அதில் அசுரர்கள் இறந்தாலும் அவர்களுடைய குலகுருவான சுக்கிராச்சார்யார் சஞ்சீவினி என்னும் மந்திரத்தை உச்சரித்து அவர்களை உயிர்த்தெழச் செய்தார். எத்தனை முறை அசுரர்கள் எல்லாம் கொல்லப்பட்டாலும் மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுந்து யுத்தம் புரிந்தனர். இதைக் கண்ட இந்திரன் செய்வதறியாது திகைத்துப் பின் கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானிடம் நடந்ததை எடுத்துரைத்தான்.

பரமசிவன் கோபமடைந்து சுக்கிராச்சார்யாரைப் பிடித்து வரும்படி நந்திதேவரிடம் கூற, சுக்கிரர் தியானத்தில் இருந்த சமயத்தில் நந்தி அவரைத் துhக்கிச் சென்றார். அகஸ்தியர் கடலைக் குடித்ததுபோல் சுக்கிரரை சிவன் விழுங்கி விட்டார். கொஞ்ச நாள் சுக்கிரன் சிவனுடைய வயிற்றில் வசித்து, ஒருநாள் பரமசிவனுக்குத் தெரியாமல் வெளியில் வந்துவிட்டான். சிவனின்; வயிற்றிலிருந்து வெளிவந்ததால் அவன் பார்க்கவன் என்ற பெயரைப் பெற்றான். வெளியில் வந்ததும் மறுபடியும் சஞ்சீவினியை ஜபிக்க ஆரம்பித்துவிட்டான். அசுரர்கள் பிழைத்தனர்.

week37இந்திரன் கவலையுற்றுத் தன் குலகுருவாகிய பிரகஸ்பதியை அழைத்து, “நீர் புத்தியில் சிறந்தவர். எப்படி சுக்கிரன் அசுரர்களுக்கு உதவி செய்கிறானோ அதுபோல் தேவகுருவான தாங்கள் எங்களுக்கு உபகாரம் செய்ய வேண்டாமா? ஏதாவது செய்து தேவர்களான எங்;களைக் காப்பாற்றுங்கள்!” என்று வேண்டினான்.

சற்றே யோசித்த தேவகுரு அந்த மந்திரத்தை வலுவிழக்கச் செய்தால் பலனளிக்காது. அதற்குப் பதிலாக அந்த மந்திரத்தை மூன்று பேர் காதுகளில் விழும்படி செய்துவிட்டால் பிறகு அந்த மந்திரத்தின் பலன் குறைந்து போய்விடும் என்று சொன்னார். மேலும் அவர் தனது மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் சிஷ்யனாக அனுப்பி அந்த மந்திரத்தைக் கற்று வரும்படி செய்வதாகக் கூறினார். அவ்வாறே கசனும் சுக்ராச்சாரியாரிடம் சென்று அவருடைய வித்தையைப் புகழ்ந்து தனக்கு அவரிடம் கல்வி கற்கவே விருப்பம் என்றும் தன்னை வெறுத்து ஒதுக்காமல் சிஷ்யனாக ஏற்கவேண்டுமென்றும் மிகப் பணிவுடன் வேண்டினான்.

கசன் அவ்வாறு கேட்கும்போது சுக்கிரரின் பக்கத்தில் அவரது மகள் தேவயானி நின்றிருந்தாள். கசனைப் பார்த்த கணத்தில் அவள், மன்மதனைப்போல் காணப்படும் இவனைப் பதியாகக் கொள்ளக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! என்று மனதில் எண்ணித் தந்தையிடம், “வந்திருப்பவன் மிக சாதுவாகக் காணப்படுவதால் அவனைத் தாங்கள் சிஷ்யனாக ஏற்கத்தான் வேண்டும்” என்று வேண்டினாள். சுக்கிரரும் கசனைத் தன் சீடனாக ஏற்று வித்தைகளைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

இதைக் கண்ணுற்ற அசுரர்கள், வந்தவன் தேவகுரு பிரஹஸ்பதியின் மகனென்றும், கபட வேடம் தரித்து வந்திருப்பதாகவும், அவன் அசுர வித்தைகளைக் கற்றுக்கொண்டால் தங்களைத் துன்புறுத்துவானென்றும் எண்ணி அவனைக் கொன்று விட நினைத்தனர். அதன்படி ஒரு நாள் கசன் சமித்துக்களை சேகரிக்கக் காட்டிற்குச் சென்றபோது அசுரர்களையும் உடன் அனுப்பி வைத்தான் சுக்கிரன். அவர்களும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கசனைக் கொன்றுவிட்டு வீடு திரும்பினர்.

கசன் வீட்டிற்கு வராததால் தேவயானி சாப்பிட மறுத்தாள். தனது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்த சுக்கிரன், தன் மகளுக்காக சஞ்சீவினி மந்திரத்தை ஜபித்து கசனை உயிர்ப்பித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். மறுபடியும் ஒருநாள் கசன் காட்டிற்குச் சென்றபோது மீண்டும் அசுரர்கள் அவனைக் கொன்று பொடியாக்கி அதனை நான்கு திசைகளிலும் வாரி இறைத்துவிட்டுத் திரும்பினர். மாலை நேரம் ஆனதும் கசன் திரும்பி வராததைக் கவனித்த தேவயானி பெருங் கவலையுற்று, நம் வீட்டிற்கு வந்த கசன் எனக்குப் பிராண சினேகிதன் அவனுக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் உடனே தானும் விஷத்தை அருந்தி உயிரை விட்டுவிடுவதாகவும் கூறி அழுதாள்.

பெண்ணின் மீது வைத்த பாசத்தால் மறுபடியும் சஞ்சீவினி மந்திரத்தை ஜபித்து நாலா பக்கமும் சிதறிக் கிடந்த தேகத்தை ஒன்று சேர்த்து உயிருடன் கசனை வீட்டிற்கு வரவழைத்தார். அந்த மந்திரத்தின் மகிமையை என்னவென்று சொல்வது? கசன் வீட்டிற்கு வந்ததும் தேவயானி மிகவும் மகிழ்ந்து தந்தையை வணங்கினாள். நாம் என்ன செய்தும் குருவின் மகள் இவன் மீது கொண்ட அன்பினால் இவன் உயிர் பிழைத்துவிடுகிறானே என்று எண்ணிய அசுரர்கள், அடுத்த ஏகாதசியன்று கசனை காட்டிற்கு அழைத்துச் சென்று அவனைக் கொன்று, பொடி செய்து மது ரசத்தில் நன்றாய்க் கலந்து சுக்கிராச்சார்யாரிடம் கொடுத்துக் குடிக்க வைத்து விட்டனர். கசனைக் காணாமல் தேவயானி தவிக்க, அவனைத் தேடித் தரும்படி வழக்கம்போல் தந்தையிடம் முறையிட்டாள். சுக்கிர குரு தம் ஞான திருஷ்டியால் பார்க்க கசன் மூன்று உலகங்களிலும் தென்படவில்லை. மேலும் தீவிரமாக அகமுகமாகத் தேடக் கசன் அவருடைய வயிற்றில் காணப்பட்டான். சுக்கிரருக்குத் துhக்கி வாரிப் போட்டது. தேவயானியிடம் அவர், “கசன் என் வயிற்றிலிருக்கிறான். அசுரர்கள் சதி செய்துவிட்டனர். இப்போது அவனை உயிர்ப்பித்தால் என் உயிர் போய்விடும் உன் விருப்பம் என்ன?” என்று வினவினார்.

அதற்குத் தேவயானி, “தந்தையே! கசனை என் கணவனாக அடைந்து சுகமாக வாழலாம் என்று விரும்புகிறேன். அவர் உயிர் பெற்று வராவிட்டால் என் பிராணனை விடுவதைத் தவிர வேறு வழியில்லை!” என்று சொன்னாள். இதைக் கேட்டு சுக்கிரருக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டுவிட்டது. அதோடு அவள், “தாங்கள் எல்லோருக்கும் உயிர் கொடுக்கிறீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்குத் தெரியாதா? ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்று கூறினாள். அதற்கு சுக்கிரர், அந்த சஞ்சீவினி மந்திரம் தன்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாதென்றும், பிறருக்கு அந்த மந்திரத்தை சொல்லக்கூடாதென்றும், அப்படிச் சொல்லி மூன்று பேர் காதுகளுக்கு அந்த மந்திரம் எட்டினால் பலிக்காது என்றும் அவளிடம் விவரித்தார். தேவயானியோ, கசனில்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாதென்றும், ஆகையால் தயவு செய்து அந்த மந்திரத்தைத் தனக்கு உபதேசிக்கும்படியும், கசன் உயிர் பெற்ற பிறகு அவர் இறக்க நேர்ந்தால் அவள் உடனே அந்த மந்திரத்தை உச்சரித்து நிச்சயமாக அவரைப் பிழைக்க வைக்க முடியுமென்று வாக்களித்தாள். சுக்கிரர் மந்திரத்தைப் பெண்களிடம் சொல்லக்கூடாதென்று சாத்திரம் சொல்வதனால் அவளுக்கு மந்திரத்தைச் சொல்வது சரியல்ல என்று மறுத்தார். மேலும் அவர் பெண்களுக்குப் பதிசேவை தான் பரம மந்திரமென்றும், மற்ற மந்திரங்கள் கற்பித்தால் தோஷமேற்பட்டு, மந்திர சக்தியும் போய்விடுமென்றும் கூறினார்.

“அப்படியென்றால் உங்கள் மந்திரங்களை ஜபித்துக்கொண்டு சுகமாக வாழுங்கள்!” என்று கூறி தேவயானி மனமுடைந்து மயக்கமடைந்தாள். உடனே சுக்கிரர் அவளது மயக்கத்தைத் தெளிவித்து, அவளை ஆசுவாசப்படுத்தி சஞ்சீவினி; மந்திரத்தை அவளுக்குச் சொல்லித் தந்தார். அவருடைய வயிற்றிலிருந்த கசனுக்கும் அது கேட்டதால் மந்திரம் மூன்று பேரின் காதுகளிலும் கேட்டது. பிறகு சுக்கிரன் மீண்டும் மந்திரத்தை உச்சரிக்கவே அவருடைய வயிற்றைப் பிளந்துகொண்டு கசன் வெளியில் வந்தான். மரணமடைந்த தந்தையை தேவயானி மந்திரத்தை ஜபித்து உயிர்ப்பித்தாள். கசன் தான் வந்த காரியம் கைகூடி விட்டதாக சந்தோஷப்பட்டான்.

சிறிது நேரம் சென்றதும் கசன் சுக்கிரரிடம், அசுரர்கள் தன்னை அடிக்கடி துன்புறுத்துவதால் இனியும் இங்கிருப்பது தனக்குப் பாதுகாப்பு இல்லையாதலால் தன்னை விடை கொடுத்து அனுப்பும்படி வேண்டினான். சுக்கிரரும் சரியென்று கூறினார். ஆனால்; தேவயானி அவனது மேல் துணியைப் பிடித்து இழுத்துத் தன்னைத் திருமணம் செய்து உடனழைத்துச் செல்லுமாறு கெஞ்சினாள்.

அதற்குக் கசன், “பெண்ணே! குருவின் வயிற்றிலிருந்து வந்ததால், மகளைத் தங்கையாகக் கருத வேண்டும். அதோடு மட்டுமின்றி எனக்கு நீ உயிர் கொடுத்ததால் தாயும் ஆகிறாய். ஆகையால் உன்னை மணந்தால் ரிஷிகள் கேவலமாகப் பேசுவார்கள்! ஆகையால் மணக்க இயலாது!” என்று சொல்ல, தேவயானி கோபமடைந்து, அவளுடைய ஆசையை வீணாக்கியதால் அவன் கற்ற வித்தை அனைத்தும் வீணாகி மறக்கக்கடவது! என்று சாபமிட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்ட கசன், “உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாமல் வீணாகப் பிடிவாதம் பிடிக்கிறாய். அந்தண குலப் பெண்களின் பொறுமை உன்னிடமில்லை. ஆகவே வேறு குலத்தில் பிறந்த ஒருவனைத் தான் நீ மணக்க வேண்டும்!” என்று மறு சாபமிட்டான். அதோடு சுக்கிரரிடம் இனி உங்களது சஞ்சீவினி மந்திரம் பலிக்கப்போவதில்லை என்றும் கூறி ஊர் திரும்பினான். தேவர்கள் சந்தோஷமடைந்து அசுரர்களிடம் போர் தொடுத்து வெற்றி பெற்றனர்.

“ஆகவே பெண்களுக்கு மந்திரம் அவசியமில்லை. அந்த மந்திரங்களுக்கு வலிமையும் இருக்காது. பெண்கள் கணவனுக்குரிய காரியங்களை சேவையாகச் செய்தாலே போதுமானது. ஆனால் விரதம், உபவாசம் முதலியவற்றைச் கணவன் அல்லது குருவின் அனுமதியைப் பெற்றுச் செய்யலாம்” என்;று குருதேவர் அந்தத் தம்பதிகளிடம் எடுத்துரைத்தார்.

உடனே அந்தப் பெண் வினயமாக, விரதங்களில்; எந்த விரதம் மிகச் சிறந்தது? அதை எப்படிக் கடைப்பிடிப்பது? என்று குரு தேவர் விளக்கமாகக் கூறினால் அதைத் தான் கடைப்பிடிக்க இயலும் என்று வேண்டினாள். அதைக்கேட்டு குரு சிரித்து, “சூத மகரிஷி சொன்ன விசேஷமான சோமவார விரதத்தைப் பற்றிச் சொல்லத் துவங்கினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s