குருவைத் தேடி – 36

போகும் முன் படுக்கை அறையில் சிவலிங்கத்தை வைத்தல் ஆகாது என்று அதனை நாட்டிய மண்டபத்திலேயே ஒரு மேசையின் மீது அவள் வைத்து வணங்கிவிட்டு உள்ளே சென்று விட்டாள். நடு இரவில் திடீரென்று நாட்டிய மண்டபம் தீப்பிடித்து எரிந்துவிட்டது. அதைக்கண்டு “ஆஹா! என் அருமையான லிங்கம் தீப்பிடித்து எரிந்துவிட்டதே! என்று வைசியன் பெரிதாக ஓலமிட்டான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் ஓடி வந்து ஒரு வழியாகத் தீயை அணைத்தனர். ஆனால் அந்த மண்டபத்தில் கட்டியிருந்த குரங்கு, கோழி. லிங்கம் எல்லாம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டனர்.

என் பிராணலிங்கம் எரிந்து விட்டதே என்று சொல்லி ஒரு சிதை மூட்டி அதில் விழுந்து விட்டான் அந்த வைசியன். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேசி மிகவும் துக்கமடைந்து, தன் கணவனான வைசியன் இறந்துவிட்டபடியால் பதிவிரதையான தான் உடன் கட்டை ஏறப்போவதாகக் கூறினாள். அதோடு மட்டுமின்றி பிராமணர்களை வரவழைத்து சங்கல்பம் செய்து துணிமணிகளையும் சிறந்த பொருட்களையும் தானம் செய்தாள். சந்தனக் கட்டைகளை அடுக்கி சிதை மூட்டி, தன் பந்துக்களை வணங்கித் தன் பதியுடன் செல்ல அனுமதி கேட்டாள். அந்த உறவினர்கள், உனக்கென்ன புத்தி கெட்டுவிட்டதா? வேசிகள் வீட்டிற்கு அனேக ஆண்கள் வருவார்கள், போவார்கள். அதில் எவனைப் புருஷனாகக் கருதுவது? வேசிகள் வாழ்க்கை இதுதான் என்று எண்ணும்போது, நீ என்ன புது தர்மத்தை இப்போது கடைப்பிடிக்கிறாய்? என்றும் ஏசினர்.

week36அதற்கு அந்தப் பெண், நான் சூரிய சந்திரர்களை சாட்சியாக வைத்து இவரை மூன்று நாட்கள் என் கணவராக ஏற்றுக்கொண்டேன். அந்த வாக்கைக் கடைப்பிடித்துத் தான் பத்தினியாக இருப்பதாகவும், அதன்படி இப்போது நான் உடன்கட்டை ஏறினால், நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும், அதனால் எனது நாற்பத்திரண்டு தலைமுறைகள் சுவர்க்கத்தை அடைவார்கள் என்றும் சொன்னாள். இப்படிச் சொல்லிவிட்டு அக்கினி குண்டத்திற்கு அருகில் நின்று எல்லோரிடமும் விடை பெற்று சூரியனை வணங்கி, சர்வேஸ்வரனை நினைத்தவாறு சிதையில் இறங்கினாள்.

உடனே பரமேஸ்வரன் ஐந்து முகங்களுடன், பத்துக் கைகளுடன், சூலம், டமருகம் முதலிய ஆயுதங்களுடன் ஜடாதாரியாய் நந்தி வாகனத்தின் மீது தோன்றி, அவளை அக்னி குண்டத்திலிருந்து வெளியே எடுத்தார். பக்தவத்சலனான அவர் அவளது வார்த்தையை சோதிக்கும் பொருட்டு தானே வைசியனாக வந்ததாகவும், தனது ஆத்மலிங்கத்தையே கையில் ஏந்தி வந்ததாகவும் சொன்னார். அவளது திட சித்தத்தை சோதிக்க நாட்டிய மண்டபத்திற்குத் தீ வைத்துத் தானும் அக்னி பிவேசம் செய்ததாகச் சொன்னார். “பெண்ணே! உன் உறுதியைக் கண்டு நான் மகிழ்ந்தேன். நீ வேண்டும் வரங்களைக் கேள்! என்றார். அதற்கு அவள், எனக்கு வேறு ஒன்றுமே வேண்டாம் என்றும் ஈஸ்வரனுடைய சரண கமலங்களிலேயே நிரந்தர வாசம் செய்ய வேண்டும் என்றும், தனது பந்துக்களும், தாசிகளும் சுவர்;க்கத்தை அடைய வேண்டும். என்றும் அவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற் செய்யும்படியும் வேண்டினாள்.

அவரும் அவ்வாறே வரமளித்தார். அப்போது அந்த மண்டபத்தில் எரிந்துபோன குரங்கும், கோழியும் ருத்திராட்சம் அணிந்த மகிமையினால் இப்படி ராஜகுமாரனாகவும், மந்திரி குமாரனாகவும் பிறந்து பழைய ஞாபகத்தால் ருத்திராட்சங்களை விரும்பி அணிகின்றனர் என்று பராசர முனிவர் அரசனிடம் பூர்வஜன்மக் கதையை எடுத்துரைத்தார்.

வேசி கழுத்தில் கட்டிய ருத்திராட்சத்தால் அதே சிவபக்தியைத் தன் புதல்வனும் மந்திரிகுமாரனும் பூர்வஜன்ம புண்யத்தால் பெற்றுள்ளனர் என்ற கதையை அறிந்து காஷ்மீர மன்னன் மன நிம்மதி அடைந்தான். பிறகு அவன் முனிவரை நோக்கி, அவர் முக்காலமும் அறியக் கூடியவராதலால் அவ்விருவரின் எதிர்காலம் என்ன மாதிரி? என்று வினாவினான். முனிவரோ அதைச் சொன்னால் அரசனுக்குத் துக்கம் தான் ஏற்படும் என்றார். இதைக் கேட்ட உடனேயே மன்னன் முகம் வாடி, சுவாமி! எது என்றாலும் பரவாயில்லை, சொல்லுங்கள். அதோடு அந்தத் துக்கத்தைப் போக்குகின்ற பரிகாரத்தையும் தயவு செய்து கூறுங்கள்! என்று வேண்டினான். அதன்படி முனிவர் இராஜகுமாரர்களான இருவருக்கும் பனிரெண்டு வயது வரை தான் ஆயுள் என்றும் அதுவும் இன்னும் ஏழு நாட்கள் தான் மிஞ்சியிருப்பதாகவும், எட்டாம் நாள் யமலோகத்திற்குப் போய் விடுவார்களென்றும் கூறினார். அதைக்கேட்ட அரசன் அப்படியே மயக்கமடைந்து விட்டான். அவனை எப்படியோ ஆசுவாசப்படுத்தியும் எழுந்து அமர்ந்து ஒரேயடியாக அழ ஆரம்பித்துவிட்டான் அரசனும் அவனது ராணிகளும் முனிவரின் கால்களில் விழுந்து அழுது புரண்டு அவருடைய தபோ பலத்தால் குழந்தைகளைக் காத்தருள வேண்டும் என்று வேண்டினர்.

தயாநிதியான ரிஷியும், ‘ஜகத்குருவும், உமாகாந்தனுமாகிய சிவனைச் சரணடைந்து, மனத்திலுள்ள பயத்தையும், சந்தேகத்தையும் விட்டு, சிவத்தியானம் செய்து , சூலபாணியை ஆராதித்தால் வழி பிறக்கும் என்றார். காலனை ஜெயிக்க வேறு உபாயமே கிடையாதா? என்று அவர்கள் கேட்டனர். ஸ்வர்க்கம், மிருத்யு, பாதாளம் முதலிய மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் வியோமகேசன். அவர் நிர்மலமாகவும், சதானந்த ரூபியாகவும் விளங்குகிறார். ரஜோ குணத்துடன் கூடிய பிரம்ம தேவன் நான்கு வேதங்களையும் கொண்டு உலகத்தைப் படைத்தார். அந்த நான்கு வேதங்களில் வேதசாரமாகிய ஆத்ம தத்துவ ஸங்கரஹம் என்னும் ருத்ர அத்தியாயத்தை சர்வேஸ்வரன் பிரம்மாவிற்கு கொடுத்தார். அதன் மகிமையை வர்ணிக்க முடியாது. சிவனுடைய பஞ்ச தத்துவத்தைக் கொண்டு பிரம்மன் உலகை சிருஷ்டி செய்து வருகிறார். யஜூர் வேதத்தில் மிகப் புகழ் பெற்றது ருத்ர அத்யாயம். பிரம்மா அதனை தம் மானசீக புத்திரர்களான மரீசி, அத்ரி ஆகியவர்களுக்குச் சொல்லி வைத்தார். அந்த ரிஷிகள் அவர்களுடைய சிஷ்யர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இப்படி கர்ண பரம்பரையாக ருத்ரம் பூமிக்கு வந்தது. ஸ்ரீ ருத்திர ஜபத்தை விட உலகத்தில் வேறு பெரிய மந்திரமே கிடையாது. அதை ஜபிப்பதால் ஞானமும் நான்கு வித நன்மைகளையும் அடையலாம். ஸ்ரீ ருத்திரத்தை பக்தியுடன் ஜபிப்பதால் சகல பாபங்களும் நாசமடைகின்றன.

காமம், குரோதம், மோகமென்ற பாதகங்களை யமன் பூலோகத்திற்கு அனுப்பி, அவைகளின் குணங்களை விரிவாக்கி, அவற்றைக் கடைப்பிடிக்கும் மக்களை நரகத்திற்கு அனுப்பி வைக்க ஆணையிட்டார். அவருடைய ஆணையை ஏற்று அவை மூன்றும் பூலோகத்திற்கு வந்தன. ஆனால் பூலோகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ருத்திர ஜபங்களைக் கேட்டவுடன் அவை யமபுரத்திற்குத் திரும்பி ஓடத் தொடங்கின. அவை யமதர்ம ராஜனை நோக்கி, “ஹே ராஜனே! உம்முடைய உத்திரவின்படி நாம் பூலோகம் சென்றோம். யமனுடைய கிங்கரர்களென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்படும். ஆனால் ருத்திர ஜபத்தைக் கேட்டால் எங்களுக்கு பயமேற்படுகிறது. இந்நிலையில் நாங்கள் அங்கு எப்படி இருக்க முடியும்?

பூலோகத்தில் கோவில்களிலும் ஆற்றங்கரைகளிலும் பிராமணர்கள் ருத்திரகோஷம் செய்கின்றனர். அவ்விடம் தங்க முடியாமல் நாங்கள் ஓடி வந்து விட்டோம். ருத்திர ஜபம் செய்யும் கிராமத்தினிடம் கூட நம்மால் நெருங்க முடியவில்லை. எவனாவது பாவம் செய்து அவனிடம் நாங்கள் அணுக முயற்சித்தால், அவன் பிராமணர்களைக் கொண்டு ருத்திரம் ஜெபித்துப் புண்ணியவானாகி விடுகிறான். அவனைப் பார்த்தாலும் பயமேற்படுகின்றது. ருத்ர ஜபம் காளகூட விஷம் போலிருக்கிறது. இனி பூமிக்குச் செல்ல எமக்குத் தைரியமில்லை. எம்மைக் காத்தருளும்!”என்று ஓலமிட்டன.

இதைக் கேட்டு யம தர்ம ராஜன் மிகவும் கோபமடைந்து பிரம்மலோகம் சென்றான். அங்கு பிரம்மாவை நோக்கி, “தாமரைவாசியே! நான்முகனே! உம்முடைய ஆணையின்படி பாவிகளை நரகத்திற்கு அழைத்து வர என் யமதூதர்களைப் பூமிக்கு அனுப்பினேன். ஆனால் அந்த பூமியில் எல்லோரும் ருத்திரத்தை ஜபித்து புண்ணியாத்மாக்களாக விளங்குகின்றனர். அதனால் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்கின்றனர். என்னுடைய நரகம் பாழடைந்து விட்டது. தெய்வீகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த ருத்ர அத்தியாயம் என்னும் பொக்கிஷத்தைப் பூலாகத்திற்கு ஏன் கொடுத்தீர்கள்? அதை ஜபிப்பதால் மனிதனைப் பாபம் நெருங்குவதில்லை. இனி எனக்கு என்ன கதி? என்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள்!” என்று வேண்டினார்.

யமன் கூறியவற்றைக் கேட்ட பிரம்மதேவன், “யமராஜனே! வருந்தாதே. எவன் பக்தி சிரத்தை இல்லாமலும், அஞ்ஞானத்துடனும், படுத்துக்கொண்டும் அலட்சியமாக ருத்திரத்தை ஜபிக்கிறானோ, அவன் தனது புண்ணியத்தை இழந்து நரகத்தை அடைவான். அவர்களை நீ நன்றாகத் தண்டிப்பாய். ஆனால் பக்தியுடன ஜபிப்பவர்களிடம் உன் துhதர்களை அனுப்பாதே. முன் ஜன்மத்தில் பாபம் செய்தவர்கள் இந்த ஜன்மத்தில் அற்ப ஆயுசாகப் பிறப்பார்கள். ஆனால் அவர்களும் ருத்ர ஜபம் செய்தால் பாபங்கள் தொலைந்தால் நீண்ட ஆயுளைப் பெறுவார்கள். அதோடு மட்டுமின்றி அவர்களுக்கு தேஜஸ், பயம், உடல் நலம், மனோ தைரியம், ஞானம், செல்வம் முதலியவை உண்டாகின்றன.

யார் ஈஸ்வரனுக்கு ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்வித்து அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பானமாகப் பருகுகிறானோ அவனுக்கு யம பயம் கிடையாது. எவன் ருத்திரம் ஜபிக்கிறானோ அவனுடைய ஜீவன் எப்போதும் புண்ணிய ரூபமாக விளங்குகிறது. அதிருத்ரம் ஜபித்து அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் யமபயம் நீங்கி இந்த சம்சாரத்தையும் கடக்கின்றனர். ஈஸ்வரனுக்கு நுhறு ருத்திரங்களைச் சொல்லி அபிஷேகம் செய்வித்தால் எல்லாவித பாவங்களும் தீர்ந்து தீர்க்க ஆயுளுடன் விளங்குவார்கள். இவற்றை மனதில் வைத்து உன் துhதர்களை ருத்திர ஜபம் செய்யும் பிராமணர்களிடம் நெருங்க வேண்டாம் என்று ஆணையிட்டு விடுவாய்!” என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்டு யமராஜனும் யம பட்டணம் சென்றான். என்று பராசர முனிவர் ருத்திராத்தியாயம் என்ற நுhலின் மகிமையை ராஜனிடம் எடுத்துரைத்தார். மேலும் அவர் ராஜாவிடம், “ருத்திரம் அவ்வளவு உன்னதமானது. ஆனபடியால் உன் புத்தினுக்காகப் பத்தாயிரம் ஆவர்த்தி ருத்திரம் சொல்லி, சிவனுக்கு அபிஷேகம் செய்தால் யமபயம் நீங்கி இந்திரனைப்போல் மகிழ்ச்சியுடனும், அபார கீர்த்தியுடனும் பத்தாயிரம் வருடங்கள் அரசாள்வான். கவலை வேண்டாம்!” என்று சொல்லித் தேற்றினார்.

முனிவரின் கூற்றின்படி அரசன் நுhற்றுக்கணக்கான பிராமணர்களை வரவழைத்துக் கலசங்களை ஸ்தாபித்து விதி பூர்வமாக சிவனை அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். அந்த தீர்த்தத்தைக் கொண்டு இராஜகுமாரர்களான இருவரையும் ஸ்நானம் செய்து வைத்தனர். இவ்விதமாக ஏழு நாட்கள் கழிந்ததும், எட்டாம் நாள் பாலர்கள் மயக்கமடைந்து விழுந்தனர். உடனே பராசரர் ருத்திரம் ஜபித்த தீர்த்தத்தை அவர்கள் மீது தெளித்தார். அப்போது அந்த இடத்தில் யம தூதர்கள் வந்து நின்றிருப்பதை அங்கிருந்த அனைவரும் கண்டனர்.

பிராமணர்கள் ருத்திரத்தை ஜபித்தவாறு மந்திர அட்சதையை இராஜ குமாரர்கள் மீது போடவும், யமதுhதர்களால் உடலை நெருங்க முடியவில்லை. தூரத்திலிருந்தவாறு பாசக்கயிற்றைப் போட முயற்சி செய்யும்போது, அவர்களை சிவதூதர்கள் துரத்தலாயினர். சிவதூதர்களைக் கண்டதும் யம தூதர்கள் ஓட்டம் பிடித்தனர். இவ்விதமாக முனிவர் அந்தப் பாலகர்களை காப்பாற்றினார். அரசன் மிகவும் மகிழ்ந்து பிராமணர்களுக்கு ஏராளமான தான தர்மங்களைச் செய்தான். பராசர முனிவரை சிம்மாசனத்தில் அமர்த்தி, மனைவிகளுடன் வணங்கி, குருவைப் பயபக்தியுடன் வழிபடுவதால், சம்சாரக்கடல் என்னும் துன்பத்தை எளிதில் கடக்க முடியும் என்று பாராட்டித் துதித்தான்.

அச்சமயத்தில் பிரம்ம புத்திரனாகிய நாரதர் அங்கு வந்தார். அரசன் அவரை வரவேற்று உபசரித்து வணங்கி, அவர் எங்கிருந்து வருகிறார்? வழியில் கண்ட விஷயங்கள் யாவை? என்று வினவினான். அதற்கு நாரதர், “நான் கைலாயத்திற்குப் போயிருந்தேன். வழியில் ஓர் அபூர்வ சம்பவத்தைக் கண்டேன். அதைச் சொல்லத்தான் இங்கு வந்தேன். யம தூதர்கள் உன் குமாரனின் பிராணனை அபகரிக்க வந்தார்களாம். அவர்களை சிவ தூதர்கள் அடித்து விரட்டிவிட்டனராம். யம தூதர்கள் யமனிடம் முறையிட அவன் கோபமடைந்து வீர பத்திரனிடம் சென்று காரணம் கேட்க, அதற்கு வீரபத்திரன், ஆயிரக் கணக்கான வருடங்களை ஆயுளாகப் பெற்ற இராஜபுத்திரர்களிடம் இவர்கள் எப்படிச் சென்றனர் என்று சீறி விழுந்தான்.

அதைக் கேட்ட யமன், உடனே சென்று சித்ரகுப்தனிடம் இவர்களது ஆயுள் கணக்கைப் பற்றி விசாரித்து வாருங்கள்! என்று தனது துhதர்களை அனுப்பினான். ஏட்டைத் திருப்பிக் கவனிக்க, பன்னிரண்டு வருடங்களுடன் மற்றோரு பன்னிரெண்டாயிரம் வருடங்களும் இதன் பக்கத்தில் எழுதியிருப்பதை சித்ரகுப்தன் கண்டு தகவல் சொல்லி அனுப்பினான். யமன் தான் செய்தது பிசகு என்று ஒப்புக்கொண்டு வீரபுத்திரனை வணங்கி யமலோகத்திற்குப் போய் விட்டான்.

ஏதோ பராசரருடைய கிருபையாலும், ருத்திர ஜபத்தின் புண்ணியத்தாலும் உன் குழந்தை யமனை ஜயித்தான்!” என்று நாரதர் அரசனையும் புதல்வர்களையும் ஆசி கூறி விடை பெற்றார். பராசரரும் அரசனிடம் விடைபெற்றுச் சென்றார். அரசன் சௌக்கியமாகப் புத்திர, பௌத்திரர்களுடன் அரசாண்டான் என்று இவ்வாறு ருத்ரம், ருத்திராட்சம், சிவபூஜை ஆகிய அனைத்து விபரங்களையும் குருவாகிய ஸ்ரீ நரஸிம்ம சரஸ்வதி கூறி, ருத்ரஜபம் செய்து சிவ பூஜை செய்தால் யமனுக்குப் பயப்பட அவசியமில்லை என்று ருத்ர ஜப மகிமையால் பிழைத்து எழுந்த கணவனுக்கும், அவனது மனைவிக்கும் எடுத்துரைத்தார். இந்தக் கதைகளையெல்லாம் நாமதாரகன் என்னும் பக்தனுக்கு எடுத்துக் கூறி வந்த சித்தர் எமது குருவிற்கும் ருத்திரம் பிரியமானது என்று சொன்னார். சித்தர் கூறி வந்த அற்புதமான கதைகளைக் கேட்டு மகிழ்ந்து நாமதாரகன் அவரை வணங்கினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s