குருவைத் தேடி – 35

விதவைகளுக்கான விதிமுறைகள்

சிலர் பிரேதத்தைத் தூக்கி வர ஓடினர். நகர மக்கள் குரு பேசியதைக் கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டனர். அந்நேரத்தில் பிராமணர்கள் ருத்ர சூக்தம் சொல்லி குருவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து, பதினாறு விதமான உபசாரங்களுடன் பூஜை செய்து கொண்டிருந்தனர். அனேக தீர்த்த கும்பங்களுக்கும் அப்போது பூஜை நடந்தது.

week35இதற்குள் போனவர்கள் பிரேதத்தைக் கொண்டு வந்து குருவின் சந்நிதானத்தில் வைத்தனர். குருதேவர் அந்தப் பிணத்திற்குக் கட்டின துணி, கயிறு எல்லாவற்றையும் அகற்றும்படி கட்டளையிட்டார். குருவினது பாதத்தில் விட்ட நீரை எடுத்து வந்து அதன் மீது தெளித்துக் கும்பத்திலிருந்த நீரால் அதனைக் குளிப்பாட்டினர். குரு அதனை ஒரு தரம் பார்த்தார். அடுத்த நொடி அந்தப் பிணத்திற்கு உயிர் வந்தது. உடனே எழுந்து உட்கார்ந்து கை கால்களை முறிக்க ஆரம்பித்தது. தான் ஆடையில்லாமலிருப்பதை உணர்ந்து வெட்கமடைந்தது. ஒரு துணியைக் கொடுக்க அதை வாங்கிக் கட்டிக்கொண்டு, தன் மனைவியைப் பார்த்து, அவளிடம், நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது எப்படி இங்கே வந்தேன்? என்னை எப்படி அழைத்து வந்தாய்? இந்த மகான் யார்? என்றெல்லாம் கேட்டான்.

அந்தப் பெண் பரவசமடைந்து விவரமாக எல்லாம் எடுத்துச் சொன்னாள். பிறகு இருவரும் குருவிடம் சென்று அவரை வணங்கித் துதித்தனர். “நாங்கள் அனேக பாபங்கள் செய்தபடியால் இவ்விதம் கஷ்டப்பட்டோம். நீர் மும்மூர்த்திகளின் வடிவம் தாங்கி இந்த மூன்று உலகங்களையும் காப்பாற்றுகிறீர். சரணம் என்று வந்தவர்களுக்கு அபயமளிக்கிறீர். ஜகத்குருவே! எம்மையும் ஆட்கொள்ளும். நீர் தான் விஸ்வமூர்த்தி. பிரம்மா, விஷ்ணு, சிவன், சச்சிதானந்த சொரூபன், கருணாநிதியான ஜகன்னாதா! எம்மைக் காத்தருள வேண்டும்.

ஜய ஜயாதி குரு மூர்த்தியே! நீங்கள் மனித தேகத்தை எடுத்து அவதாரம் செய்திருக்கிறீர்கள். பக்தர்களைப் பரிபாலிக்கும் பொருட்டு இந்த ரூபத்தை எடுத்திருக்கிறீர்கள். எல்லோரிடமும் நீர் தான் வாசம் செய்கிறீர்; மூன்று உலகத்திற்கும் காரணப் பொருள் நீர் தான் எனக்கு மறுபிறப்பு கொடுத்த உம்மை என்னவென்று வர்ணிப்பது? ஜீவன்களைக் காப்பாற்றும் கருணை வள்ளலே! தாங்கள் ஆனந்த ரூபமாக விளங்குகிறீர்கள். நினைத்ததெல்லாம் கொடுக்கும் பர தெய்வமே! சரணமடைந்தவனைக் காப்பாற்றி இகத்திலும், பரத்திலும் சுகமளித்து நான்கு விதப் புருஷார்த்தங்களையும் (அறம், பொருள், இன்பம்,வீடு) அளிக்கும் சத்குருவே!” என்று பலவிதமாகப் போற்றி துதித்தனர்.

இதைக்கேட்டு ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி மகிழ்ச்சியடைந்து அவர்களை அமைதியடையும்படிக் கூறினார். மேலும் அவர்களுக்கு எட்டு ஆண் குழந்தைகள் பிறக்குமென்றும், அவை சிரஞ்சீவியாக வாழுமென்றும், அவர்கள் முன் ஜென்மத்தில் செய்த தோஷங்கள் அகன்றன என்றும், இனி நான்கு விதப் புருஷார்த்தங்களையும் பெற்று சந்தேகமில்லாமல் சுகமாக வாழ்வார்கள் என்றும் ஆசிர்வதித்தார். ஊர் மக்கள் இந்த அதிசயங்களையெல்லாம் கண்டு ஆனந்தமடைந்து ஜயஜயகாரம் செய்து அர்ச்சனை, பஜனை என்று குருவைப் போற்றிப் பரவசமடைந்தனர்.

அந்த வேளையில் ஒரு குதர்க்கப் பிராமணனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவன் குருவை நோக்கி, ஸ்வாமி! வேதம், சாஸ்திரம் போன்றவை காலங்களைக் கடந்தவை. அவைகளில் பிரம்மா எழுதிய தலைவிதி சத்தியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவனுக்கு விதியின் பயனாய் இளம் வயதில் மரணம் ஏற்பட்டது. எப்படி மறுபடியும் இவன் உயிர் பெற்றுப் பிழைத்தான்? அப்படியெனில் பிரம்மா எழுதிய தலைவிதி சத்தியமா, அசத்தியமா? என்று வினவினான்.

அதற்கு சத்குரு அந்த மூர்க்கப் பிராமணனை நோக்கி, “இவனுக்கு இனி வர இருக்கின்ற ஜன்மத்திலிருந்து, பிரம்மதேவனிடம் சொல்லி, பக்தர்களைக் காப்பாற்றும் பொருட்டு முப்பது வருடங்களைக் கடனாக வாங்கி உயிர் வழங்கியிருக்கிறேன். இவ்வித அற்புதங்களை ஒரு குருவினால் தான் செய்ய முடியும்” என்று பதிலுரைத்தார்.

இதைக்கேட்டு சகல ஜனங்களும் ஸ்தம்பித்து நின்றனர். பிறகு குருவை வணங்கி அனைவரும் அவரவர் வீடுகளுக்குக் குருவின் மகிமைகளை வியந்து பேசியபடி திரும்பிச் சென்றனர். இப்படி அபூர்வமாக நடந்த சரித்திரத்தை சித்தர் நாமதாரகனுக்குச் சொல்லி மேலும் இதைக் கேட்பவர்களின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று கூறினார்.

ருத்திராட்ச மகிமை

இப்படி மற்றவர்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதும் எதிர்பாராத விதத்தில் குருவருளால் கணவனைத் திரும்பப்பெற்ற குணவதி ஊருக்குச் செய்தியைச் சொல்லியனுப்பிவிட்டுத் தன் கணவனை அழைத்துச்சென்று சங்கம ஸ்தானத்தில் இருவரும் நீராடிப் பலவித பூஜைகள் செய்து, தானங்கள் அளித்து, பொழுது சாய்ந்ததும் குருவின் மடத்திற்கு வந்தார்கள். இருவரும் மீண்டும் குருவின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்து பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்தனர். பிறகு தம்பதிகள் இருவரும் குருவை வணங்கி சந்நிதானத்தில் அமர்ந்தனர்.

அந்தப் பதிவிரதை குருவை நோக்கி, “நேற்று நான் சோகத்தில் கதறிக்கொண்டிருந்தபோது ஒரு யதீஸ்வரர் என்னிடம் நான்கு ருத்திராட்சங்களைக் கொடுத்துக் காதிலும், கழுத்திலும் கட்டித் தகனம் செய்யும்படி சொன்ன காரணத்தையும், ருத்ர சூக்தம் சொல்லி அபிஷேகம் செய்த தீர்த்தத்தை மேலே தெளிக்கும்படி சொன்ன காரணத்தையும் கேட்டாள்.

ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி சிரித்த முகத்துடன் அவளது பக்தியை மெச்சி, அந்த ருத்திராட்சங்களை யோகி வடிவத்தில் வந்து தானே கொடுத்ததாகவும், பக்தியுடனோ அல்லது ஒன்றும் தெரியாமலோ ருத்திராட்சங்களை அணிந்தால் பாவங்கள் நெருங்குவதில்லை என்றும் சொன்னார். எந்த ஜாதியை சேர்ந்தவர்களும் அதை அணியலாம். அவற்றை அணிவதால் ஏற்படும் புண்ணியத்தைச் சொல்லி முடியாது. தேவதைகளுக்கு இந்த ருத்திராட்சத்தைத் தவிர வேறு பிரியமான வஸ்து கிடையாது. வேதங்களால் ஏற்கப்பட்ட ஆபரணம் இது. ஆயிரம் ருத்திராட்சங்களை மாலையாகக் கழுத்தில் அணிபவன் ருத்திர வடிவம் பெற்றுத் தேவர்களாலும் வணங்கப்படுகிறான். ருத்திராட்சத்தை முத்து, பவளம், ஸ்படிகம், வைடூரியம், வௌ;ளி, தங்கம் முதலியவற்றுடன் மாலையாகத் தரித்தால் மிகவும் சிறப்பு. எவன் கழுத்;தில் ருத்திராட்ச மாலை இருக்கிறதோ, அவனிடம் எந்த வித தோஷங்களும் அணுகுவதில்லை. அவன் நல்ல கதியும் பெற்று ருத்திரலோகத்தில் அகண்டமாக வாசம் செய்வான்.

ருத்திராட்சத்தைக் கையில் ஏந்தி ஜபம், தபம் முதலியவை செய்தால் விசேஷ பலன் கிடைக்கும். நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்திராட்சமும் தரிக்காத பிறவி வீண் பிறவி என்று கருத வேண்டும். ருத்திராட்சத்தைத் தலையிலோ காதிலோ கட்டிக்கொண்டு ஸ்நானம் செய்தால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். ருத்திராட்சங்களில் அனேக விதங்களிருக்கின்றன. அவை ஒரு முகம், ஐந்து முகம், பதினோரு முகங்கள், பதினான்கு முகங்கள் உள்ளவையும் உண்டு. எந்தவித ருத்திராட்சம் அணிந்தாலும் எல்லா நன்மைகளையும் அடையலாம். இதற்கு உதாரணமாகக் கீழ்காணும் கதை சொல்லப்படுகிறது.

காஷ்மீர தேசத்தில் பத்ரசேனன் என்ற அரசனொருவன் இருந்தான். அவனுக்கு சுதர்மன் என்ற மகன் இருந்தான். மந்திரிக்கும் ஒரு குமரன் உண்டு. இருவரும் ஒரே வயதினர் ஆனபடியால் நண்பர்களாக ஒன்றாக வளர்ந்தனர். ஒரே இடத்தில் கல்வி கற்று ஞானிகளாகத் திகழ்ந்தனர். விளையாடும் போதும், சாப்பிடும் போதும் ஒன்றாகவே இருந்ததோடு மட்டுமின்றி இருவருமே சரியான சிவ பக்தர்களாக விளங்கினர்.

எப்பொழுதும் ருத்திராட்சம் அணிந்து முறையாக திருநீறு பூசி சிவ நாமத்தை ஜபித்தனர். இவற்றைத் தவிரப் பிற ரத்தின, வைர நகைகளைப் பெரிதாக அவர்கள் மதிக்கவில்லை. அவற்றை அணிவதை மறுத்தனர். இவர்கள் இப்படி வாழ்ந்தபோது பராசரர் என்ற ரிஷி அரசனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அந்தத் திரிகால ஞானியை அரசன் வரவேற்று சிங்காசனத்தில் அமர்த்தி நன்றாக உபசரித்தான். பிறகு கைகளைக் கூப்பி வணங்கி, “சுவாமி! தாங்கள் திரிகால ஞானி. எல்லாம் அறிந்தவர். என் புதல்வனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவன் ரத்தினாபரணங்களை அணியாமல், ஆடை அலங்காரத்தில் விருப்பம் இல்லாமல் எப்போதும் உடம்பில் விபூதியைப் பூசிக்கொண்டும், ருத்திராட்சங்களை அள்ளி அணிந்துகொண்டும் திரிகிறான். நான் என்ன சொல்லியும் அவன் கேட்பதில்லை, அவைகளை விடுவதில்லை. நீராவது அவனுக்கு போதனை செய்தால் ஒரு வேளை கேட்கக்கூடும். மேலும் நீங்கள் திரிகாலஞானியாதலால் அவன் போன ஜென்ம வாசனையால் தான் இப்படி இருக்கிறானா என்பதையும் தாங்கள் எனக்குத் தெரிவியுங்கள் என்று வேண்டினான். முனிவரும் அவ்வாறே அவ்விருவரைப்பற்றிய முன் ஜன்ம அபூர்வ வரலாற்றைச் சொல்லலானார்.

“முன்னொரு காலத்தில் நந்தி என்ற நகரத்தில் லாவண்யமும் மிக்க அழகும் வாய்ந்த ஒரு வேசி (விலை மகள்) இருந்தாள். பௌர்ணமி சந்திரனைப்போல வதனமும், தங்கத்தைப் போன்ற மேனியும் கொண்டிருந்தாள் அவள். பொன்மயமான வீட்டில், ரத்னமயமான கட்டில்களுடன், விலையுயர்ந்த ஆடையாபரணங்களுடனும், தங்கச் செருப்புகளுடனும், பசுக்;கள், பணிப் பெண்கள் என்று சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தாள். அற்புதமான ஆடை அணிகலன்களுடன் பார்ப்பவருக்கு அவள் ரதியைப் போல் காணப்பட்டாள். அவள் வீட்டில் தன, தான்ய சம்பத்து ஏராளமாயிருந்தது.

வேசியாக இருந்தாலும் ஏராளமான பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் அன்ன, வஸ்திரம் தானமளித்துத் தன்னைப் பதிவிரதை என்று சொல்லிக் கொண்டாள். அவளுடைய வீட்டில் நாட்டிய மண்டபம் ஒன்றிருந்தது. அதில் அவள் தன் தோழிகளுடன் தினமும் நாட்டியம் செய்து வந்தாள். அந்த மண்டபத்தில் அவள் விளையாட ஒரு குரங்கையும் கோழியையும் கட்டி வைத்திருந்தாள். அதற்கும் நாட்டியமாடச் சொல்லிக் கொடுத்து அதன் கழுத்தில் ருத்திராட்ச மாலைகளை அணிகலன்களாகப் போட்டிருந்தாள்.

இப்படி இருக்கும்போது ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. ஒரு நாள் சிவ விரதன் என்றும் ஒரு தனிக வைசியன் ருத்திராட்சங்கள் அணிந்து விபூதி தரித்து அவள் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் கையில் ரத்தின மயமான ஒரு லிங்கத்தையும் வைத்திருந்தான். அந்த வேசி வந்தவனை வரவேற்று நாட்டிய மண்டபத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தாள். அப்போது அவன் கையிலிருந்த கோடி சூரியனைப் போல் பிரகாசிக்கும் ரத்தின மயமான லிங்கத்தைக் கண்டு தன்னுடைய தோழிகளை நோக்கி, தனக்கு அது விருப்பமாக இருப்பதால் அதனை விலைக்காவது அல்லது மூன்று நாள் தன்னோடு தங்கி சுகிப்பதற்காகவாவது கொடுக்கச் சம்மதிக்கிறானா என்று வைசியனிடம் கேட்கச் சொன்னாள்.

தோழியர் சிவவிரதனை அணுகித் தமது எஜமானி அந்த லிங்கத்தை விரும்புவதையும், பதிலுக்கு லட்சக்கணக்கான பொருளைத் தர இருப்பதையும் கூறி, அப்படி இல்லையெனில் மூன்று நாட்கள் அவனுடைய மனைவியாக அவள் இருக்க சம்மதிப்பதாகவும் எடுத்துரைத்தனர். அதற்கு அந்த வைசியன் பெண் உறவில் நாட்டம் உள்ளவனாய் மூன்று நாள் அவனுடைய பத்தினியாக அவள் வாழ்ந்தால் அந்த லிங்கத்தைத் தருவதாக வாக்களித்தான். பிறகு அந்த வைசியன் அவளிடம், அவள் விபசாரி என்றும், எப்பொழுதும் பொய் சொல்லக்கூடியவளென்றும், அனேக ஆடவர்களிடம் பழகுபவள் எப்படி பதிவிரதை என்று nhல்லிக்கொள்ளக் கூடுமென்றும், மனம் ஸ்திரமில்லாதவளின் வார்த்தைகளின் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியுமென்றும் வினவினான்.

இதைக்கேட்டு அந்த தாசி, “மூன்று நாள் சத்தியமாக உங்களுடைய குலஸ்திரீயாக விளங்குவேன். என் உயிர், உள்ளம் அனைத்தாலும் உங்களை மகிழ்விப்பேன். சந்திர சூரியர்களைச் சாட்சியாக வைத்து அந்த லிங்கத்தின் மீது ஆணையிட்டு இதைச் சொல்கிறேன்” என்று பதில் அளித்தாள். உடனே வைசியன் அவளிடம் லிங்கத்தைக் கொடுக்க அவள் மிகவும் மகிழ்வடைந்தாள்.

மேலும் வைசியன் அவளிடம், இந்த லிங்கத்தை அவளது பிராணனைப் போல் காப்பாற்ற வேண்டும்;; அப்படித் தவறினால் தனது உயிருக்கே ஆபத்தாகிவிடும், அந்த இழப்பைத் தன்னால் தாங்க இயலாது என்றும் கூறினான். அவளும் பத்திரமாகப் பாதுகாப்பதாக வாக்களித்தாள். அதன்பின் இருவரும் நாட்டிய மண்டபத்தில் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரமானதும் இருவரும் வீட்டிற்குச் சென்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s