குருவைத் தேடி – 34

விதவைகளுக்கான விதிமுறைகள்

கணவன் இறந்தபோது பெண் கர்ப்பிணியாக இருந்தாலோ, பால் குடிக்கும் பருவத்தில் குழந்தைகள் இருந்தாலோ உடன்கட்டை ஏறக்கூடாது. அப்படிச் செய்தால் அது பாவம். கணவன் இறந்தபின் தலை முடியை நீக்கி மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும். தினமும் ஸ்நானம் செய்து ஒரு வேளை உணவருந்தி விரதமிருக்க வேண்டும். பதினைந்து நாட்களில் ஐந்து நாட்கள் முழு விரதமிருக்க வேண்டும். அல்லது சுக்ல பட்ச இரண்டாம் நாளிலிருந்து தினம் ஒரு கவளமாக அதிகரித்துக்கொண்டு போய் பௌர்ணமியன்று பதினைந்து கவளங்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று ஒரு கவளம் சாப்பிட வேண்டும். இவ்விதம் சாந்தராயணம் என்ற விரதத்தை விதவைகள் கடைப்பிடிக்க வேண்டும். உடம்பில் சக்தியில்லாவிட்டால் பால் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

விதவைகள் கட்டிலில் படுத்துத் தூங்கக்கூடாது. எண்ணெய் தேய்த்து முழுகக்கூடாது. உடம்பைப் பிடித்துவிடச் சொல்லக்கூடாது. தாம்பூலம், சந்தனம், புஷ்பங்களைத் தவிர்க்க வேண்டும். மகன் இல்லா விட்டால், எள், தர்ப்பை ஆகியவற்றைக்கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். விஷ்ணுவிடம் சொல்லிவிட்டு எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும். அவள் சுமங்கலியாய் இருக்கும்போது எந்தப் பொருள்களைப் பிரியமாகப் பயன்படுத்தினாளோ அவற்றை இப்போது பிராமணர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். எல்லா மாதங்களிலும் விரதங்கள், பூஜைகள் ஆகியவற்றை விடாமல் செய்து கோவில்களுக்குத் தவறாமல் சென்று வர வேண்டும் பிராமணர் வீடுகளில் நீர் கொண்டு கொடுத்து உதவிகள் செய்யலாம். குடை பாதுகைகள் ஆகியவற்றை தீர்த்த யாத்திரை போகிறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்து உணவளிக்க வேண்டும். அவர்களுக்குக் கால்களை அலம்பி விசிறியால் விசிறி, துணிமணிகள் அளித்துத் தாம்பூலம், சந்தனம் எல்லாம் கொடுத்து உபசரிக்க வேண்டும். பானகம், நீர்மோர், வாழைப்பழம், திராட்சை எல்லாம் கொடுத்து மகிழ வேண்டும். என்ன தானம் செய்தாலும் கணவன் பெயரால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

விரதம் இருக்க இயலாதவர்கள் மிகக் குறைந்த உணவையே சாப்பிட வேண்டும். கார்த்திகை மாதத்தில் சாதம் சாப்பிடக்கூடாது. ஜவ்வரிசி முதலியவற்றை சாப்பிட வேண்டும். தயிர், உப்பு, எண்ணெய், தேன், உளுந்து முதலியவற்றையும் வெங்கலப் பாத்திரம் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். பூவரச இலையில் சாப்பிட வேண்டும். விதவைகளுக்குப் பயன்படாத பொருள்களையெல்லாம் தானம் கொடுத்து விட வேண்டும்.

எப்பொழும் ஆசார நியமத்துடன் இருக்க வேண்டும். வெள்ளைப் புடவை கட்டி, ரவிக்கை போடாமல் அடக்கமாக இருக்க வேண்டும். மகன் கணவனின் அம்சமாதலால் மகன் சொல்லுக்கு அடங்கி நடக்க வேண்டும். இப்படி ஏராளமான விதிமுறைகளை எல்லாம் விளக்கமாகச் சொல்லி முடித்தார் யதீஸ்வரர். கடைசியில் அவர், “உனக்குத் தைரியமிருந்தால் உடன் கட்டை ஏறலாம். இல்லாவிடில் விதவையாக இருந்து அந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கலாம்! உனக்கு விருப்பமானதைச் செய்!” என்று கூறி அவள் தலைமீது கை வைத்து ஆசி கூறினார்.

week34
இவ்வளவும் கேட்டு அந்தப் பெண் அந்த யோகியை நமஸ்கரித்து, “ஜய ஜயாதி யோகீச்வரா! இப்போது இங்கு எனக்கு நீர்தான் என் தாய் தந்தையாகக் காணப்படுகிறீர்கள். உற்றார் யாருமற்ற நிலையில் நின்றிருக்கும் எனக்கு உங்கள் அறிவுரைகள் மிகவும் நன்மையளிப்பவையாய் இருக்கின்றன. என்னால் விதவா தர்மத்தை மேற் கொள்ள முடியாது. ஏனெனில் நான் இளம் பெண். நான் எப்படித்தான் நியம நிஷ்டையாக நடந்தாலும் என் இளமையும் அழகும் பிறர் என்னை அவதூறாகப் பேசும்படி தான் செய்யும். ஆகவே நான் என் கணவருடன் உடன் கட்டை ஏறுவதென்று தீர்மானித்துவிட்டேன். கடைத்தேற வழி வேண்டும்!” என்று சொல்லி வணங்கினாள்.

அவள் சொன்னதைக் கேட்ட யோகி, அவளிடம், நீ சொல்வது சரியே. இருப்பினும் நீ உன் கணவனைக் குரு நாதரின் அருளால் பிழைக்க வைப்பேன் என்று கூறி இங்கு வந்தாய். ஆனால் நடந்ததோ வேறு மாதிரி ஆகிவிட்டது. பிரம்ம எழுத்து எப்படி இருக்கிறதோ அப்படி நடக்கிறது. அதை வெல்ல தேவர்களாலும் முடிவதில்லை. இது வேத வசனமாகையால் நாம் துக்கப்பட்டுப் பயனில்லை. அரிச்சந்திரனைப் பார்! அவ்வளவு பெரிய அரசனாக இருந்தும், வெட்டியான் வீட்டில் வேலை செய்தான். எவராலும் ஜெயிக்க முடியாத பலிச்சக்கரவர்த்தி பாதாள லோகத்திற்கு அனுப்பப்பட்டான். ஆயிரம் கோடி வருஷங்களை ஆயுளாகப் பெற்ற இராவணனும் காலச் சக்கரத்தால் தொலைந்தான். துரியோததனுக்கு எக்கதி ஏற்பட்டது, பார்க்கவில்லையா? நினைத்த கணத்தில் உயிரை விடக்கூடிய பீஷ்மர் யுத்த களத்தில் அம்புப் படுக்கையில் விழுந்து கிடக்கவில்லையா? ஒரு பாம்பிற்கு பயந்த பரீட்சித்து மன்னனின் கதி என்னவாயிற்று? இப்படித் தேவர்கள் முதற்கொண்டு விதியால் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள்.

இதுவரை பூமியில் காலனை யாரும் ஜெயித்ததில்லை. காலன் தான் எல்லோரையும் ஜயிக்கிறான். ஸ்ரீ குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏமாறுகிறார்கள். இனி நான் சொல்கிறபடி செய். உடன்கட்டை ஏறுவதற்கு முன் சங்கமத்திற்குச் சென்று ஸ்ரீ குருவை தரிசனம் செய்து விட்டு வா. நான் இப்போது உனக்குக் கொடுக்கும் விபூதியைப் பிரேதத்திற்குப் பூசி இந்த நான்கு உத்திராட்சங்களில் ஒன்றைக் கழுத்திலும் இரண்டை இரண்டு காதுகளிலும் கட்டு. குருவைத் தரிசிக்கும்போது அவரது திருவடிகளை ருத்ர சூக்தத்தினால் அபிஷேகம் செய்த நீரை எடுத்து உன் தலையிலும், பிரேதத்தின் மீதும் தெளித்து விடு. அதன் பின் நீ உடன் கட்டை ஏறுவாய் அதற்கு முன் சுமங்கலிகளுக்கும் பிராமணர்களுக்கும் நல்ல பொருட்களை சிறப்பாகத் தானம் செய்!” என்று சொல்லி அந்த யோகி மறைந்துவிட்டார்.

அந்தப் பதிவிரதை மேலே நடக்க வேண்டியவற்றை மிக்க பயபக்தியுடன் கவனிக்கலானாள். அங்கிருந்த சிறந்த பிராமணர்களைக் கூப்பிட்டுப் பதினாறு விதமான கர்மாக்களை ஆரம்பிக்கும்படி சொன்னாள். பிரேதத்திற்குரிய ஔபாசனம், பிராயச்சித்தம் முதலிய சடங்குகளைச் செய்ய வைத்தாள். அவர்களும் அவ்வாறே எல்லாம் செய்து பிரேதத்தைக் கட்டிக் கங்கைக் கரைக்குத் தூக்கிச் சென்றனர். அந்தப் பெண்ணும் ஸ்நானம் செய்து, நல்ல ஆடைகளை அணிந்து, மஞ்சள் குங்குமத்தை இட்டுக்கொண்டு உள்ளங்கையில் அக்னியை ஏந்தி, மிகவும் சிரித்த முகத்துடன் பிரேதத்தின் முன் நடந்து சென்றாள்.

பதினாறு வயது இளம்பெண் இப்படி அலங்கரித்துக் கொண்டு செல்வதைக் கண்டு நகர மக்கள் , அவள் லட்சுமியைப் போல் காணப்படுவதாகச் சொன்னார்கள் சிலர், இந்தச் சிறு வயதில் இந்தப் பாக்கியத்தைப் பெற இவள் என்ன தவம் செய்தாளோ! என்றனர் சிலர், இந்த வயதில் ஏன் இவள் சாக முற்பட வேண்டும்? தாயின் வீட்டிற்குச் சென்று சௌக்கியமாக இருக்கக் கூடாதோ? என்றனர். சிலர், இவள் தான் பதிவிரதை. இவளுக்குரிய ஞானமும் பக்தியும் மற்ற பெண்களுக்கு ஏற்படட்டும் என்று நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினர். அவளுடைய பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள்! என்று சிலர் புகழ்ந்தனர்.

இப்படிப் பலரும் பலவிதமாகப் பேச அவர்கள் நதிக்கரையை அடைந்தனர். ஒரு பெரிய சிதை மூட்டி, பிரேதத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி, வளையல், கண்ணுக்கு இடும் மை, கால்களில் அணியும் மெட்டி, மஞ்சள் கயிறு எல்லாவற்றையும் ஒரு முறத்தில் வைத்துத் தானமாகக் கொடுத்தாள். மலர்களால் அவர்களைப் பூஜித்தாள். பிராமணர்களுக்கு ஏராளமான தானங்கள் செய்தாள்.

பிறகு எல்லோரையும் வணங்கித் தான் கணவன் வீட்டிற்குச் செல்வதாகவும், தனது தந்தை சூலபாணி, தாய் கௌரி என்றும், தீபாவளியை முன்னிட்டுக் கணவனை அங்கு அழைத்துச் செல்வதாகவும், தனக்கு எல்லோரும் விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் வேண்டினாள். தன்னுடன் வந்தவர்களிடம் தனது மாமனார் மாமியாhpடமும், பெற்றோரிடமும் தாங்கள் சுகமாக இருப்பதாகச் சொல்லச் சொன்னாள். இவள் இப்படி பேசுவதைக் கேட்ட ஊரார் துக்கப்பட்டனர். ஆனால் அவள் சந்தோஷமாக சிதையிடம் சென்றாள்.

அப்போது யோகீச்வரர் உபதேசித்தது நினைவிற்கு வந்தது. உடனே அவர் தந்த ருத்திராட்சங்களைக் கணவனின் கழுத்திலும், காதுகளிலும் கட்டினாள். பிறகு பிராமணர்களைப் பார்த்து, நான் இங்கு வரும்போது குருவைத் தரிசிக்க வேண்டுமென்ற உறுதியுடன் வந்தேன். இப்போது நான் சிதை ஏறுமுன் அவரைக் கண்ணாலாவது ஒரு தரம் தரிசித்துவிட்டு வந்து விட விரும்புகிறேன்.! என உத்தரவை வேண்டினாள். பொழுது போய்க்கொண்டிருக்கிறது. இருட்டுவதற்கு முன் தகனம் செய்ய வேண்டும். இருந்தாலும் சீக்கிரம் போய் வா! என்று சொன்னார்கள். குரு ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி இருக்குமிடமான சங்கமத்திற்கு ஊர் மக்கள் சூழ்ந்து வரப் புறப்பட்டாள். போகும்போது பிரார்த்தனை செய்துகொண்டே போனாள். “ஹே நரகேசரியே! நான் என்ன பாவம் செய்தேனோ, என்னைக் கைவிட்டுவிட்டீர். சரணம் என வந்தவர்க்கு அபயமளித்துக் காப்பாற்றுபவர் என்ற பெருமையை வைத்துக்கொண்டு என்ன பயன்? எனக்கு அதனால் ஒன்றும் பிரயோசனமில்லையே!

உம்முடைய ரஜோ குணத்தால் உலகை சிருஷ்டி செய்து, சத்வ குணத்தால் காப்பாற்றித் தமோ குணத்தால் எல்லா ஜீவராசிகளையும் பிரளயத்தில் நாசம் செய்கிறீர். இம்முக்குணங்களும் சேர்ந்த உங்களைத் திரிமூர்த்தி என்கிறார்கள். ஒருவன் மற்றொருவனைத் துன்புறுத்தினால் அவன் அரசனிடம் முறையிடுகிறான். அரசனும் குற்றம் செய்தவனைத் தண்டிக்கிறான். உடம்பிற்கு வியாதி ஏற்பட்டால் வைத்தியரிடம் சென்றுகாட்டி சுகமடைகிறோம். ஜனங்களோ உங்களை மும்மூர்த்திகளின் அவதாரம் என்று எண்ணி அவர்களின் குறைகள் நீங்க முறையிடுகிறார்கள். அதன்படி நானும் இருபது ஊர்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்தேன். என் பெற்றோரையும் உற்றாரையும் விட்டு நீரே என் தாய் தந்தை என்று கருதி என் கணவனை வியாதியிலிருந்து எப்படியும் காப்பாற்றிவிட முடியும் என்று இங்கு வந்தேன்.

என்னைப் போன்ற இளம் பெண்கள் தங்கள் புருஷன் குழந்தைகளுடன் சுகமாக வாழ்கிறார்கள். எனக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும் புருஷனாவது சௌக்கியமாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருணைக் கடலான உம்மிடம் அடைக்கலமடைந்தேன். பரவாயில்லை. இப்போது என் கணவனின் வியாதியும் தீர்ந்து நான் அனேக குழந்தைகளையும் பெற்றாகி விட்டது. என் பிரார்த்தனை பலித்துவிட்டது. இப்போது உமது பெருமையைப் பறை சாற்றிக்கொண்டு பரலோகம் செல்கிறேன். அப்படிப் போகும் முன்உம்மை தரிசித்து விடைபெற்றுப் போகலாம் என்ற எண்ணத்துடன் வருகிறேன்” என்று புலம்பிக்கொண்டு குருதேவர் இருக்கும் அமரஜா சங்கமத்தை அடைந்தாள்.

குரு ஓர் அரசமரத்தடியில் வீற்றிருப்பதைக்கண்டு துhரத்திலிருந்தபடியே கீழே விழுந்து நமஸ்கரித்தாள். அவளைக் கண்டதும் சட்டென்று அவர், தீர்க்க சுமங்கலியாய் இருக்கும்படி ஆசி கூறினார். மறுபடியும் நமஸ்கரித்தாள். அவர் உடனே எட்டு புத்திரர்கள் பிறக்கக்கடவது என்று ஆசிர்வதித்தார். இதைக்கேட்டு ஊர் மக்கள் சிரித்தனர். குருவிற்கு நடந்த விஷயங்களைக் கூறி, அவளது பதி பரலோகம் அடைந்துவிட்டதால், பிரேதத்தைக் கங்கைக் கரையில் விட்டுவிட்டுத் தான் உடன் கட்டை ஏறும் முன் உங்களை தரிசித்து விடை பெறவே வந்திருக்கிறாள்! என்று சொன்னார்கள்.

அதைக்கேட்டு குரு, “இவளுக்கு வலுவான சௌபாக்கியம் இருக்கும்போது பதி எப்படிச் சாக முடியும்? கொண்டு வாருங்கள் அந்தப் பிரேதத்தை! பிராணன் எப்படிச் சென்றது என்று கவனிக்கின்றேன். பிராமணர்களே! என் வார்த்தை மீது நம்பிக்கை வையுங்கள். இவளுக்கு மாங்கல்ய பலமிருப்பதால் அந்தப் பிணத்தைத் தகனம் செய்ய வேண்டாம். அதை இங்கு கொண்டு வாருங்கள்! என்று ஆணையிட்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s