குருவைத் தேடி – 33

பதிவிரதா தர்மம்

இந்த அத்தியாயத்தில் நான் எழுத இருப்பது பெண்கள் ஒரு குடும்பத்தில் மனைவியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சாத்திரங்கள் எத்தகைய விதி முறைகளாக வகுத்து வைத்திருக்கின்றன என்ற விபரங்களையே. இதில் எழுதப்படுபவை புராண காலத்தில் வாழ்ந்த பெண்மணிகள் எப்படி வாழ்ந்தனர் என்றும், எப்படிப்பட்ட பெண்களை சமூகம் மதித்துப் போற்றியது என்பதோடு தேவர் உலகத்திலும் அவர்களுக்கு எத்தகைய மதிப்பு இருந்தது என்ற தகவல்களையும் தெரிந்துகொள்ளத்தானே தவிர ஆணாதிக்கம், பெண்ணடிமை, மூடத்தனமானவை போன்ற சர்ச்சைகளையும், வாதங்களையும், எழுப்புவதற்காக அல்ல. அந்தக் காலத்தில் பாரத தேசத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகள் தான் இந்த நுhலில் எழுதியுள்ளபடி விவரிக்கப்படுகின்றன. இதை நன்றாக மனதில் நிலை நிறுத்திக்கொண்டு, புராணத் தகவல்களாகப் படிப்பது நல்லது. ஏனெனில் நாம் அறியாத ஒரு காலத்தின் நடைமுறை இந்தக் குரு சரித்திரமாக விரிந்து கொண்டு போகிறது. அந்த விவரங்களை இப்போது நாம் அறிந்துகொள்கின்றோம். அவ்வளவுதான். இனி சித்தர் சொல்வதை நாமும் கேட்கலாம்.

இந்த வரலாறு ஸ்கந்த புராணத்தில், காசி காண்டத்தில் தேவகுருவான பிரஹஸ்பதியால் இந்திரனுக்கும், மற்ற தேவர்களுக்கும் அகத்திய முனிவரின் பத்தினியான லோபாமுத்திரையைப் பற்றிச் சொல்லப்பட்டது. இதில் சம்சாரக்கடலைத் தாண்ட பெண்கள் தம் கணவன் இருக்கும்போது எந்த எந்த தர்மங்களை அனுசரிக்க வேண்டும், கணவன் இறந்த பிறகு எந்த விதத்தில் செயல்பட வேண்டும் என்பன விவரிக்கப்படுகிறது.

அகஸ்திய முனிவர் தன் பத்தினியான லோபாமுத்திரையுடன் காசியில் வசித்து வந்தார். அகஸ்தியருக்கு விந்தியன் என்று ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் விந்தியமலை என்ற மலை ரூபமாகப் பூமியில் திகழ்ந்தான். அந்த மலை அனேக வித மரங்களால் சூழ்ந்து மிக அழகாகக் காட்சியளித்தது.

ஒரு சமயம் பிரம்ம ரிஷியான நாரதர் அந்த மலையை அடைந்தார். வந்த முனிவரை விந்தியன் வரவேற்று உபசரித்துத் துதித்தான். நாரதர் அவனிடம், “உனது சிகரங்கள் மிக்க ரமணீயமாக இருக்கின்றன. இருந்தாலும் மேரு பர்வதத்தைப் போல அவ்வளவு உயரமாக இவை இல்லை. அதனால் அதற்கு நீ தாழ்ந்தவன் என்று தான் சொல்ல வேண்டும். அதற்குரிய பெருமை உனக்கு இல்லை” என்றார்.

இதைக்கேட்டு விந்தியன் கோபமடைந்து மேரு பர்வதத்தைப்போல் பெருமை பெற வேண்டும் என்று நினைத்து வளர ஆரம்பித்தான். அவனது மலை உருவம் வளர்ந்து சூரிய மண்டலத்தையும் தாண்டி சுவர்க்கத்தையே எட்டியது. இதனால் விந்திய மலையின் தெற்கு பாகத்தில் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருளடைந்தது. சூரியனைக் காணாததால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. யாக யக்ஞங்களெல்லாம் தடைப்பட்டன. உலக நன்மையைக் கருதி ரிஷிகள் ஒன்றுசேர்ந்து தேவ பட்டணமான அமராவதியை அடைந்து தேவர்களின் தலைவரான இந்திரனிடம் முறையிட்டனர்.

தேவராஜன் கோபமடைந்து பிரம்மனிடம் சென்று விந்தியமலையின் செயல் பற்றி முறையிட்டான். பிரம்மதேவன் அவனை அமைதிப்படுத்திக் ‘காசியில் வசிக்கும் அகஸ்தியரைத் தெற்கு தேசத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் அவர் விந்தியமலையைக் கடந்து செல்ல வேண்டும். தன் குருவைக் கண்ட மாத்திரத்தில் விந்தியன் பணிவுடன் குருவை வணங்குவான். அச்சமயத்தில் அகஸ்தியர் அவனிடம், இப்படியே இரு, இனி வளர வேண்டாம்! என்று சொல்லி விடுவார். அவனும் குருவின் ஆணையை மீற முடியாமல் தாழ்ந்து இருந்து விடுவான்” என்று வழி சொல்லித் தந்தார்.

week33அதைக்கேட்ட தேவேந்திரன் பிரஹஸ்பதி முதலான ரிஷிகளுடன் காசியிலுள்ள அகஸ்தியரின் ஆஸ்ரமத்தை அடைந்தான். அனைவரையும் கண்ட அகஸ்திய முனிவர் தன் மனைவி லோபாமுத்திரையை அழைத்து, வந்த எல்லோரையும் முறைப்படி வரவேற்று இருவருமாக உபசரித்தனர். விருந்து உபசாரமெல்லாம் முடிந்ததும் தேவர்களெல்லாம் விந்தியனின் அதீத வளர்ச்சி பற்றிக் கூறி அகஸ்தியர் தான் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று வேண்டினர். அகஸ்தியரும் அதற்கு இணங்கினார். அவ்வேளையில் தேவகுருவான பிரஹஸ்பதி “பதிவிரதையான பெண்களால் தான் குலதர்மமும் குடும்ப தர்மமும் காக்கப்படுகின்றது. லட்சுமி, பார்வதி, ஸரஸ்வதி போன்ற தெய்வலோக தேவியரைப் போலப் பூலோகத்தில் அருந்ததி, சாவித்திரி, அனுசூயா, சாந்திரூபா, ஹிமாசலத்தின் பத்தினியான மேனகா, துருவனின் தாயான சுநீதி, சூரியனின் மனைவியான ஸந்தியா தேவி, யக்ஞ புருஷனின் பத்தினியான ஸ்வாஹாதேவி போன்றவர்கள் சிறந்த பதிவிரதைகள். இவர்களிலும் மேலான பெண்மணி இந்த லோபாமுத்திரை” என்று சொன்னார்.

அதைக்கேட்ட தேவ கணங்களில் சிலர், பதிவிரதைகளின் இலக்கணம் யாது என வினவினர். அதற்குத் தேவகுரு விரிவாகப் பதில் கூறினார். அவர் கூறிய பதில் இங்கு பதிவிரதைகளின் தர்மமாக விரிகின்றது.

பதிவிரதைகள் புருஷர்களுக்கு முன்பு சாப்பிடக்கூடாது. கணவன் சாப்பிட்ட பிறகு மீதியைப் பிரசாதமாக எண்ணிப் புசிக்க வேண்டும். புருஷர்களைக் கண்டதும் எழுந்து நிற்க வேண்டும். அமரச் சொன்ன பிறகே அமர வேண்டும். பதிக்குத் தேவையான பணிவிடைகளை இடைவிடாமல் செய்து, வீட்டிற்கு வரும் அதிதிகளை நன்கு உபசரிக்க வேண்டும். கணவனின் அனுமதியின்றி தான தர்மங்கள் செய்யக்கூடாது. கணவனைத் தெய்வமாகப் பாவித்து அவரது கால்களைப் பிடித்து விட வேண்டும். விசிறி கொண்டு துhங்கும் வரை வீச வேண்டும். கணவன் துhங்கிய பின் துhங்கி அவர் விழித்து எழுமுன் தான் எழுந்து வீட்டுக்காரியங்களைச் செய்ய வேண்டும். வீடு வாசல் பெருக்கி, சாணம் தெளித்துக் கோலம் போட வேண்டும் பிறகு ஸ்நானம் செய்து விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருள்களை சேகரித்து வைக்க வேண்டும். கணவனை நமஸ்கரிக்க வேண்டும். கணவன்; வீட்டில் இருந்தால், தன்னை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்ள வேண்டும். அவர் ஊரில் இல்லையென்றால் அலங்காரம் செய்யக்கூடாது. கணவன் கோபித்தாலும் பெண்கள் கோபதாபமடையாமல் அவனை அனுசரித்து மன்னிப்புக் கேட்டுக் கால்களில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். பதியானவர் வெளியில் சென்றுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது மனைவி தன் கைக் காரியங்களை விட்டு, அவரை சிரித்த முகத்துடன் வரவேற்று, அவனுக்குரிய தேவைகளைக் கேட்டுச் செய்ய வேண்டும். கணவனின் விருப்பப்படி பெண்கள் நடக்க வேண்டும்.

பதிவிரதைகள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிப் போகும்படி நேர்ந்தால் போய், வெகு சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். அப்படிப் போகும்போது வழியில் மற்றவர் முகங்களை நிமிர்ந்து பார்க்கக்கூடாது. ஊரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறாமல் தனியாக செல்லக்கூடாது. கணவரின் அனுமதி பெற்றே எதையும் செய்ய வேண்டும். தீர்த்த யாத்திரை, உறவினர் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள், திருமணங்கள போன்றவற்றிற்குக் கணவன் இல்லாமல் தான் மட்டும் போகக்கூடாது. கணவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனைவி துக்கத்துடன் இருப்பதும், அவர்கள் துக்கப்படும்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதும் கூடாது.

பெண்கள் வீட்டு விலக்கு ஆனால் மௌன விரதம் மேற்கோள்ள வேண்டும். அத்தருணத்தில் வேத கோஷங்களைக் காதில் கேட்கக்கூடாது. ஆண்களுக்குத் தங்கள் முகத்தைக் காட்டக்கூடாது. ஒதுங்கி ஓர் ஓரமாக இருக்க வேண்டும். இவ்வாறு நான்கு நாட்கள் இருந்து அடுத்த நாள் ஸ்நானம் செய்துவிட்டுப் பிறகுக் கணவனைப் பார்க்க வேண்டும். கணவன் ஊரில் இல்லாவிட்டால் சூரிய தரிசனம் செய்து, அவனை மனதில் நினைத்து வணங்கி வீட்டிற்குள் நுழைய வேண்டும். புருஷனின் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்று மஞ்சள் நிறையப்பூசி குங்குமத்தை நன்றாகத் தெரியும்படி இட வேண்டும். கண்ணுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். செந்துhரம் இட்டுக்கொள்ள வேண்டும்.

கழுத்தில் கண்டசரம் என்னும் திருமாங்கல்யத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். தாம்பூலம் தரிக்க வேண்டும். சுமங்கலிகள் தலை முடியை விரித்துப் போடக்கூடாது. பின்னல் போட்டிருக்க வேண்டும். கைகளில் நிறைய வளையல்களும் கால்களில் தோடரம் என்ற ஆபரணத்தையும் அணிந்திருக்க வேண்டும். பதிவிரதைகள் அக்கம் பக்கத்திலுள்ள முரட்டுத்தனம் கொண்ட பெண்களுடனும், வண்ணாத்திகளுடனும், ஆண்களை நிந்திக்கும் பெண்களுடனும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்;படிப் பேசினால் தோஷம் ஏற்படும். மாமனார், மாமியார், நாத்தனார், மைத்துனர் முதலியவர்களை விட்டுத் தனியாகப் பிரிந்து வசித்தால் நிச்சயமாக நாயாக ஜன்மம் எடுப்பார்கள்.

பெண்கள் தலையை விரித்துப் போட்டு நிலை வாசற்படியில் அமரக்கூடாது. உரல், அம்மி ஆகியவற்றின் மீது அமரக்கூடாது. பெரியோர்களுக்கு முன்னால் ஸ்திரிகள் அமரக்கூடாது. கணவனை அலட்சியப்படுத்தாமல் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சகித்துக்கொண்டு அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். கணவனைத் தெய்வமாக மதித்துப் போற்ற வேண்டும். தனக்கு ஏதும் காரியம் ஆக வேண்டுமென்றால் நேராகக் கணவனிடம் கேட்கக்கூடாது. குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் சொல்லித் தெரிவிக்க வேண்டும். கணவன் கொண்டு வருவதை வைத்துக் குடும்பம் நடத்தத் தெரிய வேண்டும். அதிக ஆசை, பிறரை ஒப்பிட்டுப் பார்த்துப் புருஷனை ஏசுதல் போன்றவை இருக்கக்கூடாது. நிந்திப்பதும், வற்புறுத்துவதும் கூடாது. மொத்தத்தில் பதியே தெய்வம் என்று அடங்கி வாழ வேண்டும்.

மாமனார், மாமியார் முன்பு நின்றுகொண்டு அவர்களிடம் விவாதம் செய்யக்கூடாது. பலமாக சிரிப்பதும் கூடாது. அவர்களைத் தெய்வமாக மதித்து மரியாதையுடன் பணிவிடைகள் செய்து கண் போல் பாதுகாக்க வேண்டும். தாய் தந்தையர் எவ்வளவு கொடுத்து உதவி செய்தாலும், பந்துக்கள் என்ன உபகாரம் செய்தாலும் கணவனையே பெண்கள் சார்ந்திருக்க வேண்டும். குரு, தெய்வம், தீர்த்தம் எல்லாமே கணவன் என்றிருக்க வேண்டும், என்றெல்லாம் சுமங்கலிகளான பதிவிரதைகளைப் பற்றிய விவரங்களைக் கூறிய தேவகுரு, அதன்பின் கணவனை இழந்து விதவைகளான பெண்களின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விவரிக்கின்றார்.

கணவன் உயிரோடு இருக்கும் வரை தான் ஒரு பெண்ணிற்குக் கௌரவமும், மங்கலத் தன்மையும் நிலைத்திருக்கும். கணவன் இறந்து விட்டால் பிறகு அந்தப் பெண்ணிற்கு மரியாதை இல்லை. எந்தக் காரியத்திற்காகவும், எந்த வேலையிலும் ஒரு விதவை முன்னால் நின்று செயலாற்ற முடியாது. ஒரு கிராமத்திற்குச் சென்றதும் ஒரு விதவை எதிரில் வந்தால் அபசகுனம் என்பார்கள். ஆனால் தன் மகனுக்கு முன்னால் விதவைத் தாய் வந்தால் நல்ல சகுனமாகக் கருதப்படும். குழந்தை பெறாத விதவைகளை நமஸ்கரிக்கக்கூடாது. அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றால் அமங்கலமாக முடியும். அவர்களிடம் அநாவசியமாகப் பேசவும் கூடாது. இவ்வளவு சட்ட திட்டங்கள் இருந்தபடியால் கணவன் இறந்ததும் பதிவிரதைகள் உடன்கட்டை ஏறினர். சந்திரனை விட்டு எப்படி ஒளி பிரியாதோ, மேகமில்லாமல் மின்னல் மின்னாதோ அப்படி பதி இறந்த பிறகு பெண்களுக்கு கௌரவமில்லை. கணவன் இறந்து ஒரு பெண் உடன்கட்டை ஏறச் செல்லும்போது, அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஆயிரம் அஸ்வமேதயாகம் செய்த புண்ணியத்தைக் கொடுக்கும் என்று நம்பினர்.

ஒரு புருஷன் அனேக பாவங்களைச் செய்து இறந்த பிறகு யமதூதர்கள் அவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும்போது, பதிவிரதையான அவனது மனைவி உடன்கட்டை ஏறுவாளானால், ஒரு பாம்பைப் பருந்து அடித்துச் செல்வதைப்போல் அவனை நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு தூக்கிச் சென்றிடுவாள். சூரியன் அவர்களைக் கண்டு நடுங்கி மந்தமாகப் பிரகாசிக்கிறான். அக்னி அவர்களைச் சுடுவதில்லை.

இவ்வாறு விதவைத் தன்மையின் கொடுமைகளைச் சகிக்க முடியாமல் உடன் கட்டை ஏறுகின்ற பெண்களின் உயர்வைப்பற்றி விளக்கிய சித்தர் ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் ஏற்படும் சிறப்பு பற்றியும் எடுத்துக் கூறுகிறார். ஒரு வீட்டில் பெண்கள் பிறந்தால் அநேக தலைமுறைகள் நற்கதி பெறும். கேவலமான நடத்தையுள்ள பெண்ணால் அவர்களது முன்னோர் சுவர்க்கத்தில் இருந்தாலும் இவளது நடத்தையால் நரகத்திற்குச் செல்கின்றனர். ஒரு பெண் பதிவிரதையாய்; வாழ்ந்தால் பூமாதேவி அவள் தன் மீது நடப்பதால் தான் புனிதமடைவதாகக் கருதுகிறாள். சந்திரன், வாயு, வருணன், அக்னி ஆகிய தேவர்கள் நல்ல குணவதியால் தாங்கள் புனிதமடைவதாக உணர்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களைப் பெற நுhறு ஜன்மம் புண்ணியம் செய்தவர்களால் தான் முடியும். பெண்களில்லாமல் யாக யக்ஞங்களைச் செய்ய முடியாது. ஒரு நல்ல பெண் மனைவியாக வாய்த்தால் எல்லாப் புண்ணியங்களும் அடைந்து நல்ல குழந்தைகள் பிறந்து நற்கதியை அடையலாம். குணவதியைத் தரிசித்தவர் கங்கா ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். பாவிகள் தரிசித்தால் அவர்களது பாவங்கள் அறவே நீங்கும்.

இப்படி பெண்களின் உயர்வு தாழ்வு சிறப்புகள் பற்றிக் கணவனை இழந்து புலம்பித் தவித்த பெண்ணிற்கு அவள் முன் தோன்றி ஆறுதலாகப் பல அறிவுரைகள் கூறி வந்த யோகீஸ்வரர் எடுத்துரைத்தார். இந்தப் பகுதியை எவர் கேட்கிறார்களோ அவர்கள் புண்ணிய புருஷர்களாக விளங்குவார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s