குருவைத் தேடி – 32

தத்தனின் பெற்றோர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தபடியால் அநேக விதமான ஜபம், அனுஷ்டானம், மந்திரம், யாகம், பிராமண போஜனம், தான தர்மம் முதலியவற்றையெல்லாம் செய்தனர். ஊரிலுள்ள வைத்தியர்களையெல்லாம் வரவழைத்து வைத்தியம் செய்தனர். குலதேவதைகளுக்குப் பூஜைகள் செய்தனர். எதற்கும் அவன் வியாதி குணப்படவில்லை. வைத்தியர்கள், எங்களால் இனி எதுவும் செய்வதற்கில்லை. அந்த மகேசுவரன் தான் காப்பாற்ற முடியும் என்று கைவிட்டுவிட்டனர்.

இதைக்கேட்டு மாதா பிதா மிகவும் சஞ்சலப்பட்டு, ‘ஆ, ஜகந்நாதா! உம்மை ஆராதித்துத் தானே இந்தக் குழந்தையைப் பெற்றோம். ஏன் இவ்வளவு பாவ கர்மாக்களைச் சுமந்த குழந்தையை எமக்கு அளித்தாய்? இந்த ஒரு பிள்ளையாவது நீண்ட ஆயுசுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லையே. ஸத்குரு தத்தாத்ரேயரைப் பிரார்த்தனை செய்து விரதம் இருந்து பூஜித்துப் பெற்ற பிள்ளைக்குத் தத்தன் என்ற பெயர் சூட்டி அருமை பெருமையாய் வளர்த்து என்ன பிரயோஜனம்? ஏதோ கடன் வாங்கியிருந்தோம் போலிருக்கிறது. அந்தக் கடனைக் கழிக்கத்தான் இவன் இப்படிப் பிறந்தானா? என்றெல்லாம் அழுது புலம்பி மகனை அணைத்துக் கண்ணீர் வடித்தனர்.

மேலும் அவர்கள் பையனை நோக்கி, ‘குழந்தாய்! உன்னை மிகவும் செல்லமாகவும், சௌகரியமாகவும் வளர்த்தோம். வயதான காலத்தில் எங்களுக்கு உபகாரமாக இருப்பாய் என்று நம்பியிருந்தோம், இப்படியும் எம்மை ஏமாற்றலாமா?’ என்று கதறினர்.

இதைக்கேட்டு பையனும் துக்கமடைந்து தான் பிறந்தது முதல் ஒரு சுகத்தையும் இவர்களுக்குக் கொடுக்க முடியவில்லையே என்றும் இனி துக்கப்படுவதில் பயனில்லை என்றும், மனிதப் படைப்பு ஈஸ்வர விருப்பம். அதனால் எப்போது என்ன நடக்குமென்று சொல்ல முடியாது என்றும், தலைவிதி தேவர்களையும் விடுவதில்லை என்றும் ஏதேதோ கூறித் தாய் தந்தையை ஆசுவாசப்படுத்தினான்.

பிறகு அவன் தன் மனைவியை நோக்கி, ‘பிராணேஸ்வரி! இனி என் வாழ்நாட்கள் கொஞ்ச காலம் தான் இருக்கும். என்னால் நீ மிகவும் கஷ்டப்பட்டுவிட்டாய். உன் கஷ்டமெல்லாம் வீணாகிப் போய்விட்டன. போன ஜன்மத்தில் நான் உன் எதிரியாக அல்லது கடனாளியாக இருந்திருக்க வேண்டும். அந்தக் கடனைத் தான் நீ எனக்குச் செலுத்தியிருக்கிறாய். ஆனாலும் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்குப் பிறகு நீ என் பெற்றோருடனேயே இருக்கலாம். அது கஷ்டமென்று நீ நினைத்தால் உன் பிறந்த வீட்டிற்குச் செல்லலாம். உன் இளமையும் அழகும் வீணாகக் கழிந்தது. என் பாவ சம்பந்தத்தால் உனக்கு சௌபாக்கியம் இழக்கும்படி நேர்ந்து விட்டது’ என்று வருந்திப் பேசினான்.

இதைக் கேட்டவுடன் அந்தப் பதிவிரதை பதறிப்போய், “சுவாமி! ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? நீங்கள் தான் எனது பிராண நாதர். எனது சம்பத்து, சௌபாக்கியம் எல்லாம் உம்முடைய தேகம் எவ்வளவு நாட்கள் இருக்குமோ அதுவரை தான். என் வாழ்வு உம்முடனேயே முடிந்துவிடும். நீங்கள் இறந்தால் உம்முடனேயே கூட வருவேன். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்று கூறினாள்.

இருவரும் பேசுவதைக் கேட்ட மகனின் பெற்றோர் பூமியில் விழுந்து புரண்டு அழுதனர். உடனே மருமகள் அவர்களைத் துhக்கி எடுத்து ஆறுதல் சொல்லி “நான் இப்போதே என் பதியை காணகாபுரத்தில் வசிக்கும் மகானாகிய ஸ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதியின் சந்நிதானத்திற்கு அழைத்துச் சென்று, அவருடைய கருணையால் இவரது வியாதியைக் குணப்படுத்தும் வழியை வேண்டுகிறேன். அப்படி நாங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று அனுமதி கோரினாள். மேலும் அவள் ‘அங்கே ஏராளமான நோயாளிகள் வந்து சுகமடைவதாகவும், ஸத்குருவை தரிசித்தால் பாவ வினைகள் தீர்ந்து சுகமடையக்கூடும்’ என்றும் சொல்லி அவர்களை நமஸ்கரித்தாள்.

பிறகு மாமனார், மாமியார், தாய், தந்தை ஆகியோரின் அனுமதி; பெற்றுத் தன் பதியை டோலி ஒன்றில் உட்கார வைத்துத் தூக்கிக்கொண்டு புறப்பட்டாள். போகும்போது உறவினர்களையெல்லாம் வணங்கித் தன்னைத் தீர்க்க சுமங்கலியாக வாழ ஆசிர்வதிக்கும்படியும், குலதேவதையைப்போல் தன் கணவனைக் காப்பாற்றுவதாகவும் மனம் சஞ்சலம் இல்லாமல் தங்களை வழியனுப்பும்படியும் வேண்டினாள். எல்லோரும் “உன்னுடைய மன உறுதியாலும், மாங்கல்ய பலத்தாலும், குருவின் அருளாலும் அவன் பிழைக்க வேண்டும்” என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர்.

பயணம் போகும்போது அவளது கணவனின் நோய் வழியிலேயே மிகவும் அதிகரித்துவிட்டது. எப்படியோ கஷ்டப்பட்டு அந்தப் பெண் காணகாபுரத்திற்குக் கணவனைக் கொண்டு வந்து விட்டாள். என்றாலும் அங்கு சென்றதும் அவனது தேக நிலை கவலைக்கிடமாகி விட்டது. அந்த ஊரை அடைந்ததுமே எப்படியாவது குருதேவரை சந்தித்து விட வேண்டும் என்று அந்தப் பெண் துடித்தாள். ஆனால் இவர்கள் சென்ற சமயம குருதேவர் சங்கமத்திற்குச் சென்றிருந்தார். அங்கேயே கொண்டுபோய் விடலாம் என்று அவள் கணவனைத் தூக்கினாள். ஆனால் அவனது பிராணன் ஒரு நொடியில் பிரிந்துவிட்டது.

அவள் பூமியின் மீது விழுந்து புரண்டு, வயிற்றிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு, தலைமயிரை விரித்துப்போட்டு அலற ஆரம்பித்துவிட்டாள். “ஆ!கடவுளே! நீ எப்படியும் காப்பாற்றிவிடுவாய் என்று மிக ஆசையுடன் நம்பி வந்தேனே! நீ இப்படி சோதித்துவிட்டாயே. பூஜை செய்யக் கோவிலுக்குப் போகும்போது கோபுரம் தலையில் இடிந்து விழுவது போலவும், கோடைகாலத்தில் நிழலுக்காக ஒரு மரத்தடியில் நிற்க, அந்த மரம் அவர்மீது முறிந்து விழுவது போலவும், அதிக தாகத்தால் தவித்து ஆற்றில் இறங்கி நீரைக் குடிக்கப்போகும்போது, முதலை வந்து இழுத்துக்கொண்டு போவதுபோலவும், புலிக்குப் பயந்து பசு கசாப்பு கடைக்காரனிடம் தஞ்சம் அடைந்தது போலவும் ஆகிவிட்டதே. நான் மகா பாவி. பதியின் பிராணன் என் துர்பாக்கி;யத்தாலேயே போய்விட்டது. என் பிடிவாதத்தால் அவரது பெற்றோரிடமிருந்து பிரித்துக் கூட்டி வந்து இப்படி இந்தத் துhர தேசத்தில் அவர் உயிர் பிரிய நானே காரணமாகி விட்டேன்” என்று அழுதாள்.

அங்கு நடந்த துயர சம்பவத்தைக் கண்ட கிராமவாசிகள் அவளை சமாதானம் செய்து, ‘பிராரப்தம் எப்படி இருக்கிறதோ அதன்படி நடந்தே தீரும். அவரவர் செய்த கர்மத்தின்படி காரியங்கள் நடக்கின்றன” என்று சொல்லித் தேற்றினர்.

அதைக் கேட்டு அந்தப் பெண், “பெரியோர்களே, என் கஷ்டத்தைக் கேளுங்கள். இங்கு அழைத்து வந்தால் பிழைப்பார் என்று நம்பி என் பதியை இங்கு அழைத்து வந்தேன். இங்கோ அவர் இறந்துவிட்டார். இவரை விட்டு இனி எப்படி உயிர் வாழ்வது? என்னை யார் காப்பாற்றுவார்கள்? சின்ன வயதில் கௌரியையும் சிவனையும் ஆராதித்தேன். திருமணமான பின் மங்களகௌரியைப் பூஜித்தேன். எனக்கு மஞ்சள் குங்குமம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பவானியையும், சக்தி ஸ்வரூபமான சுமங்கலிகளையும் ஆராதித்து அனேக விரதங்களையும் அனுசரித்தேன். எல்லாம் இப்படி வீணாகி விட்டதே. என் மஞ்சள் குங்குமத்தைத் திருட யாரோ வந்துவிட்டானே. நான் செய்த புண்ணியமெல்லாம் என்னவாயிற்று? கௌரி ரமணனைப் பூஜித்தது பொய்யாகிவிட்டதா? என் உயிர் போல் விளங்கிய என் கணவன் இப்போது இல்லையே!” என்று கதறிப் புலம்பினாள்.

அடுத்த கணம் கணவனின் பிரேதத்தைக் கட்டிப்பிடித்து: ‘ஏ பிராணநாதா! என்னைவிட்டுப் பிரிய எப்படி மனம் வந்தது? பனிரெண்டு வயதிலிருந்து நீங்கள் என்னை ஒரு வினாடி கூடப் பிரிந்ததில்லையே. மேலும் இவ்வளவு அற்ப ஆயுளுடன் நீங்கள் போய்விடுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லையே. தசரதன் சிரவணனைக் கொன்று அவனது தாய் தந்தையரைத் தவிக்க விட்டதைப்போல் இன்று செய்துவிட்டேனே. உங்களது பெற்றோரும் இந்தச் செய்தியை அறிந்தால் உடனே உயிர் துறந்து விடுவார்களே. எல்லாவற்றிற்கும் இந்தப் பாவிதான் காரணமென்றும், என்னை சண்டாளி என்றும் நிந்திப்பார்களே!”என்று சொல்லி அழுதாள்.

தானே தன் கணவன் உயிருக்கு எமன் என்றும், ஊரில் இருந்திருந்தால் உறவினரும், பெற்றோரும் அவன் முகத்தையாவது பார்த்து சமாதானம் அடைந்திருப்பார்களே. இப்படி தனக்கு ஒரு வழியும் சொல்லாமலே அவன் சென்றுவிட்டானே, இனி நான் எங்கு செல்வது? என்று சொல்லிக் கதறினாள்.

இப்படி அந்த இடத்தில் மக்கள் கூட்டமாய்க் கூடி நின்று பார்க்க அந்தப் பெண் துயரமிகுதியால் கதறிக்கொண்டு கிடந்தபோது, அங்கு ஒரு சித்தர் ஜடைமுடி தரித்தவராய், உடல் முழுவதும் நீறணிந்தவராய், ருத்திராட்சங்களை ஆபரணங்களாகவும், திரிசூலத்தைக் கையில் ஏந்தியும் தோன்றினார். அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, “ என்ன? இந்த இடத்தில் அட்டகாசம் செய்கிறாய்? எப்படி தலையில் எழுதியிருக்கிறதோ அதன்படி காரியங்கள் நடக்கின்றன. பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்குத் தகுந்தாற்போல் இந்த ஜென்மத்தில் எல்லாம் நிகழ்கின்றன. வீணாக அழுவதால் என்ன பயன்? எட்டு நாள் இப்படி துக்கப்பட்டாலும் போன பிராணன் திரும்பப் போவதில்லை. மூடர்கள் தான் துக்கப்படுவார்கள். சாவு என்பது எல்லோருக்கும் உண்டு என்பதை நீ அறிவாய். எவனாவது சாஸ்வதமாய் இருந்தான் என்று யாராவது சொல்ல முடியுமா?

நீ இவனை பிராணேஸ்வரன் என்று சொல்கிறாய். அவன் எங்கே பிறந்தான், நீ எங்கே பிறந்தாய்? கங்கை நதியில் வெள்ளம் வரும்போது அனேகக் கட்டைகள் மிதந்து வந்து ஓரிடத்தில் சேர்கின்றன. பிறகு நீர் ஓட்டத்தில் அவை பிரிந்து விடுகின்றன. பட்சிக் கூட்டங்கள் இரவில் ஒரு மரத்தில் வந்து தங்குகின்றன. பொழுது விடிந்ததும் நாலா திக்குகளிலும் பறந்து விடுகின்றன. அதுபோலத்தான் இந்த சம்சாரமும். எவனும் தன் குடுமபத்தினருடன் சாசுவதமாக இருந்ததில்லை.

இந்தத் தேகம் கங்கையில் தோன்றும் நீர்க்குமிழி போன்றது. பஞ்சபூதங்களால் இது உண்டாகி, ஒரு நிமிடத்தில் மறைந்து விடுகின்றது. அதற்குள் எவனெவன் என்னென்ன கர்மாக்களைச் செய்கிறானோ அதன்படி பலன்களை அனுபவிக்கிறான். இந்த உலகத்தில் எல்லாப் பிறவிகளுமே கர்மாவின் ஆளுகைக்கு உட்படுகின்றன. மேலும் மாயையின் பிடியில் அகப்பட்டு சத்வ, ரஜஸ், தமம் என்ற மூன்று குணதோஷங்களுடன் சேர்ந்து பிறக்கின்றனர். அவரவரின் குணத்திற்குத் தகுந்தபடி கர்மாக்களைச் செய்கின்றனர். செய்த கர்மாக்களுக்கு ஏற்றபடி சுக துக்கங்களை அனுபவிக்கின்றனர்.

தேவர்களுக்குக் கல்பகோடி வருஷம் ஆயுள் இருந்தாலும், அவர்களுக்கும் இறுதியில் காலமென்று ஒன்று இருக்கிறது. அது வந்ததும் அவர்களும் மடிய வேண்டியதுதான். அப்படி இருக்க மானிடர்களைப்பற்றி என்ன சொல்வது? கர்மத்தின் வசப்பட்டு பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்ட இந்த சரீரம் பிறந்தவுடன் சந்தோஷப்படுகிறோம். இறந்தால் துக்கமடைகிறோம். சிலர் இளம் வயதிலும் பலர் முதுமையிலும் மரணமடைகி;ன்றனர். அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்குத் துகந்த சுக துக்கங்களை அனுபவிக்கின்றனர். தேவர்களும், தேவதைகளும் கூடக் காலவரம்பிற்கு உட்பட்டவர்கள். இந்த சம்சாரமானது ஒருநீண்ட கனவு. இந்திரஜாலத்தைப் போன்றது. நீ அனேக ஜன்மங்களில் அனேகருடைய மனைவியாக வாழ்ந்திருப்பாய். இப்போது அவர்களையெல்லாம் நினைத்துத் துக்கப்பட முடியுமா?

பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல் மாமிசம், உதிரம், மஜ்ஜை, எலும்பு, மல மூத்திரங்களுடன் சேர்ந்து விளங்குவது. அதனால் இந்த சரீரத்தைக் குறித்துத் துக்கப்பட வேண்டாம். ஆகையால் நீ இந்த சம்சாரமென்ற கடலிலிருந்து தப்பி;க்கும் வழியை விசாரித்து அந்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்!” என்று அந்த மகான் அந்த அபலைக்கு ஞான மார்க்கத்தை உபதேசித்தார்.

அந்தப் பெண் அவருடைய போதனைகளைக் கேட்டு ஞானம் பெற்று சோகத்தை விட்டு அவரை வணங்கி, எந்த வழியை அனுசரித்தால் இந்த சம்சாரக் கடலைத் தாண்டலாம்? என்று வினவினாள். அதைக்கேட்டு அந்த யோகி மகிழ்ந்து பெண் தர்மத்தைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s