குருவைத் தேடி – 31

‘நான் இதற்கு முன் இருபத்தைந்து ஜன்மங்கள் எடுத்து, அனேக தோஷங்களைச் செய்திருக்கிறேன். முதலில் நான் துர்ஜயன் என்ற பெயருடன் யவன தேசத்திற்கு அரசனாக இருந்தேன். அந்த நேரத்தில் நான் மிகக் கெட்டவனாகவும், கொடியவனாகவும் செயல்பட்டேன். எனக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் கொன்றும், துக்கத்தைக் கொடுத்தும் வாழ்ந்து வந்தேன். ஏராளமான பெண்களை நான் மணந்தேன். அதோடு மட்டுமில்லாமல் பார்க்கிற பெண்களையெல்லாம் என் வசப்படுத்தியிருக்கிறேன். ஒரு பெண்ணை ஒரு தரம் எனக்குரியவளாக ஆக்கினேன் என்றால் அதன் பிறகு அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். அரண்மனை அந்தப்புரத்தில் வைத்து விடுவேன். இப்படி நுhற்றுக்கணக்கான பெண்களை அங்கு அடிமையாக வைத்திருந்தேன்.

அதோடு மட்டுமின்றி அனேக ராஜ்ஜியங்களை ஜெயித்து, அந்த நாட்டிலிருந்த பெண்களையும் அடிமைகளாக்கி அந்தப்புரத்தில் கொண்டு சேர்த்தேன். அவர்களெல்லாம் என்னைச் சபித்தனர். எந்த வகைப் பெண்களையும் நான் விட்டு வைக்கவில்லை. அதனால் நாட்டில் நல்ல நிலையில் வாழ்ந்தவர்களெல்லாம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். என் அகங்காரத்தினால் நான் எதற்கும் கவலைப்படவில்லை. பெண்களிடம் இப்படிக் கேவலமாக நடந்து கொண்டதோடு, கள், மது முதலியனவற்றையும் பழக்கப்படுத்திக்கொண்டு மிக உன்மத்தனாக விளங்கினேன்.

இறுதியில் பல வகை வியாதிகளால் பீடிக்கப்பட்டு, இராஜ்ஜியத்தையும் இழந்து படாத வேதனைகளையெல்லாம் பட்டு உயிர் துறந்தேன். என்னை யம தூதர்கள் யம பட்டணத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னால் நரகத்தில் வீழ்ந்த என் பித்ருக்களுடன் சேர்ந்து, தேவர்களுக்கு உரிய கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் கோர நரக கஷ்டத்தை அனுபவித்தேன்.

பிறகு பிசாசு ஜன்மம் எடுத்து அன்ன ஆகாரம் இல்லாமல் நூறு வருஷம் கஷ்டப்பட்டேன். அதிலிருந்து விடுபட்டுப் பிறகு புலியாகவும், மலைப் பாம்பாகவும், ஓநாயாகவும், பன்றியாகவும், உடும்பாகவும், நாயாகவும், குள்ளநரியாகவும், மானாகவும், முயலாகவும், குரங்காகவும், காட்டுப் பூனையாகவும், கீரியாகவும், காக்கையாகவும், கரடியாகவும், காட்டுச் சேவலாகவும், கழுதையாகவும், பூனையாகவும், தவளையாகவும், ஆமையாகவும், மீனாகவும், எலியாகவும், ஆந்தையாகவும், யானையாகவும் பிறந்து பிறந்துக் கடைசியில் இந்த ஜன்மத்தில் பிரம்ம ராட்சதனாகப் பிறந்திருக்கிறேன். இந்த நிலையிலும் நான் கொடியவனாகப் பசி பொறுக்க முடியாத நிலையில் எல்லாப் பிறவிகளையும் பிடித்துக் கொன்று புசிப்பவனாக வாழ்ந்து வந்தேன். இன்று மகா புனிதரான தங்களைத் தொட்டுத் தழுவியதால் எனக்குப் பூர்வ ஜன்மங்களைப் பற்றிய அறிவு ஏற்பட்டது. இனி எனக்கு ஜன்மங்கள் போதும்! என்னை அனுக்கிரகம் செய்து சகல பாபங்களிலிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருள வேண்டும்.

இந்த உலகத்தைக் காப்பாற்றும் வல்லமை பெற்ற உமது ஸ்பரிசத்தால் எனக்கு ஞானம் ஏற்பட்டுவி;ட்டது. நீர் சாதாரண மானிடரல்ல. ஒரு பெரிய யதியோ அல்லது தேவதையாகவோ இருக்க வேண்டும். இந்த மனித நடமாட்டமே இல்லாத காட்டில் தாங்கள் இந்த மகா பாவியான என்னைக் காப்பாற்ற வந்த கருணைக்கடல். தங்களைத் தொட்டதால் தானே என் நிலை புரிகின்ற ஞானம் எனக்கு ஏற்பட்டது. தங்களை நான் பரமேஸ்வரனாகவே கருதுகிறேன்” என்று ஏதேதோ சொல்லி வாமதேவரைப் பலமுறை வணங்கினான்.

அவன் கூறியவற்றைக் கேட்ட வாமதேவர் மகிழ்ந்து, ‘அப்பா! என் உடலில் பூசியிருக்கின்ற விபூதி உன் உடலில் பட்டதால் தான், அந்த பஸ்ம மகிமையால் உனக்கு இப்படிப்பட்ட ஞானம் ஏற்பட்டது. பஸ்மம் என்று சொல்லப்படுகின்ற விபூதியின் உயர்வைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது, பிரம்மாதி தேவர்களால் கூட இதை விவரிக்க முடியாது. விபூதியின் உயர்வைப் புரிந்துகொண்டதால் தான் பரமசிவன் எப்போதும் தன் மேனியில் அதைத் தரித்தவராய் இருக்கிறார். சதாசிவனான யோமகேசனே விபூதியை வணங்கும்போது அதன் மகிமையை வேறு எப்படி விவரிப்பது? எனக்குத் தெரிந்த சில சம்பவங்களைச் சொல்கிறேன், கேள்!” என்று கூறி சொல்லத் தொடங்கினார்.

திராவிட தேசத்தில் ஒரு பிராமணன் இருந்தான். ஆனால் அவன் ஆசாரம் இல்லாமல் கீழ்க் குலப் பெண்களுடன் வசித்துத் தன் குல தர்மங்களைக் கைவிட்டு விட்டான். அதனால் அவனது தாய் தந்தையும் மற்ற பிராமணர்களும் அவனை வெறுத்து ஒதுக்கினர். அந்நிலையில் அவன் ஒரு கீழ்க்குலப் பெண்ணை மணந்து, திருட்டுத் தொழிலைச் செய்து வாழ்ந்தான்.

ஒரு நாள் இவனுடன் எதற்கோ சண்டையிட்ட ஒரு கீழ்சாதிக்காரன் இவனைக் கொன்று, கிராமத்தின் எல்லையில் ஒரு மயானத்திற்கு அருகில் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டான். மயானத்தில் சாம்பல் மேட்டின் மீது படுத்துக் கிடந்த ஒரு நாய் அந்த உடலைப் பார்த்து அதன்மீது ஏறி உட்கார்ந்து, தன் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தது. அப்போது அதன் உடலில் ஒட்டியிருந்த சாம்பல் அந்த பிணத்தின் நெற்றியிலும், மார்பிலும் ஒட்டிக்கொண்டது. சில நாழிகைகளில் யம தூதர்கள் வந்து இந்த ஜீவனைப் பிடித்து எமபுரத்திற்குக் கொண்டு சென்றார்கள். அப்போது சிவ கணங்கள் அவர்களை மறித்து, இவனது நெற்றியிலும், மார்பிலும் விபூதி சின்னங்கள் இருப்பதால் இவன் கைலாயத்திற்கு உரிய சிவபக்தன் என்று சொல்லி யமதூதுர்களை மிரட்டி அவனைக் கைலாயத்திற்குக் கொண்டு சென்றனர். யமதூதுர்கள் யமனிடம் ஓடிச் சென்று, நாங்கள் எம் கடமையைச் செய்ய முடியாமல் சிவதூதர்கள் ஒரு தீயவனை எம்மிடமிருந்து பிடுங்கிக்கொண்டு போய்விட்டனர். அவர்களோடு சண்டையிட முடியவில்லை என்று முறையிட்டனர்.

இதைக்கேட்டு யமராஜன் கோபமடைந்தவனாய், உடனே சிவ தூதர்களை வழி மறித்து, ஏட்டில் அடங்காத பாபங்களைச் செய்த இந்த பாவியை நீங்கள் ஏன் கைலாயத்திற்குக் கொண்டு போகிறீர்கள்? என் தூதர்களை ஏன் மிரட்டினீர்கள்? என்று விசாரித்தான்.

சிவ தூதர்கள் யமனை நோக்கி, ‘பிரபோ! அந்தப் பிரேதத்தின் நெற்றியிலும், மார்பிலும் பஸ்ம சின்னங்கள் இருக்கும்போது உமது தூதர்கள் எப்படி அதைத் தொட முடியும்? எமக்கு ஈஸ்வரனின் ஆணை என்னவென்றால், எவன் ஒருவன் பஸ்மம் பூசியிருக்கிறானோ அவனுக்கு எப்போதும் கைலாயத்தில் இடமுண்டு என்று சொல்லியிருக்கிறார். அந்த முறையில் இனி பஸ்மம் அணிந்தவர்களை உமது கணங்கள் நரகத்திற்குக் கொண்டு செல்ல முயற்சித்தால் அவர்களை சும்மா விட மாட்டோம். விபூதி அணிந்தவர்களை ஒரு பாபமும் சேர்வதில்லை. அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல அருகதையுள்ளவர்கள். ஆகையால் உமது தூதர்களுக்குப் புத்தி புகட்டி வையுங்கள்!” என்று எச்சரித்தனர்.

இதைக்கேட்டு யமன் தன் தூதர்களிடம், ‘இனி பூமியில் பஸ்மம் தரித்தவர்களையும், ருத்திராட்சங்களை அணிந்தவர்களையும், அவர்கள் எவ்வளவு தோஷம் உடையவர்கள் என்றாலும் அணுக வேண்டாம். இது பரமசிவனின் ஆணையாக இருக்கிறது!” என்று எச்சரித்துவிட்டான்.

வாமதேவர் இந்தக் கதையை ராட்சதனிடம் சொல்லி, ஈஸ்வரனால் தரிக்கப்பட்டும், புகழப்பட்டும் சிறந்த மகிமை கொண்டுள்ள விபூதியைத் தானும் மதித்துப் போற்றி உடலிலும், நெற்றியிலும் பூசிக்கொள்வதாகக் கூறினார். அதைக் கேட்ட ராட்சதன் முனிவரை வணங்கி, ‘இந்தக் கோலத்தில் நான் உங்களை அந்த சதாசிவனாகவே கருதுகிறேன். உம்மைத் தரிசித்ததால் தான் ஞானம் பெற்றேன். முன்பு நான் அரசனாக இருந்தபோது மூன்று கிணறுகளை வெட்டினேன். தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்தேன். அந்தப் புண்ணியத்தால் தான் தங்களுடைய தரிசனம் இன்று எனக்குக் கிடைத்தது. அந்தப் பிறவியில் நான் கொடிய வியாதியால் துன்பப்பட்டுப் பரிதாபமாக இறந்த பின் என்னை யமபுரத்திற்கு அழைத்துச்சென்று சித்திரகுப்தன் என் பாவ, புண்ணியங்களைப் பற்றி தர்மதேவதையிடம் சொல்ல, ‘இவன் தன் பாவ பலன்களையெல்லாம் நன்றாக அனுபவித்துப் பிறகு தனது இருபத்தைந்தாவது பிறவியில் அந்தப் புண்ணியங்களுக்கு உரிய பலனை அனுபவிப்பான்!” என்று எமதர்மராஜன் சொன்னது இப்போது நினைவிற்கு வருகிறது. அதன் பலனாகத்தான் தங்களைத் தரிசிக்க நேர்ந்தது. ஆகவே, சுவாமி! இத்தனை பெருமை வாய்ந்தஇந்த விபூதியை எவ்வாறு முறையாகப் பூசிக்கொள்வது? அத்தருணத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் யாவை?” என்று பக்தியுடன் வினவினான்.

வாமதேவரும் புன்னகையுடன,; விபூதியை எவ்வாறு தயாரிக்க வேண்டும், அதனை எப்படி எடுத்து, எந்த விரல்களால், எந்த விதத்தில் பூசிக்கொள்ள வேண்டும்? போன்ற பல விவரங்களைச் சொல்லி, இவையெல்லாம் சிவன் சனத்குமாரர் என்ற முனிவருக்கு எடுத்துச் சொன்னவை என்றும் கூறினார்.

பூசும் முறையைச் சரியாக அறிந்து அதன்படி திருநீற்றை அணிந்தால் மகேஸ்வரன் மகிழ்கிறார். எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோருமே இதை அணியலாம். இப்படித் திருநீறை அணிவதால் சகல பாபங்களும் நீங்குகின்றன. பிணிகள் அகல்கின்றன. நான்கு வித நன்மைகளும் வாய்ப்பதோடு முக்தியும் பெறலாம்! என்று வாமதேவர் மகிமை வாய்ந்த திருநீற்றின் பெருமைகளை எடுத்துரைத்தார். பிறகு தன்னிடமிருந்த விபூதியை எடுத்து மந்திரித்து அவனுக்குக் கொடுத்தார். அவன் அதை வாங்கி பக்தியுடன் பூசிக்கொண்டதும், ராட்சத உருவம் நீங்கி ஒளி பொருந்திய உடலுடன் முனிவரை வணங்கினான்.

விபூதியே மகிமை வாய்ந்தது. அதிலும் குருவாகிய முனிவரின் கரத்தால் பெறப்பட்டதால் அதன் பெருமையை விவரிக்க முடியாது. அதன் விளைவாக ஒரு திவ்ய விமானம் அங்கு வந்து அந்தப் புனிதம் பெற்ற மனிதனை அழைத்துக்கொண்டு சொர்க்கம் சென்றது.

இவ்வாறு நரசிம்ம சரஸ்வதி சத்குரு, திருவிக்கிரம பாரதிக்குச் சொன்ன வரலாற்றை சித்தர் நாமதாரகனுக்கு எடுத்துரைத்தார்.

கணவனை இழந்த காரிகையின் கண்ணீர்

விபூதியின் பெருமையை செவிமடுத்த நாமதாரகன் உள்ளம் நெகிழ்ந்து சித்தருடைய பாதங்களில் வணங்கி, ‘தேவரீர் எனக்குப் பரமனை அடைவதற்குரிய வழியைக் காண்பித்து விட்டீர்கள். நீரே என் குருதேவர். குரு சரித்திரத்தை எவ்வளவு கேட்டாலும் ஆவல் அடங்கவில்லை. தாங்கள் அருள் கூர்ந்து மேலும் குருவைப்பற்றிய வரலாறுகளை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பணிவுடன் வேண்டினான்.

அவனது இதமான சொற்களைக் கேட்டு மகிழ்ந்த சித்தர் அவனை ஆரத் தழுவி, ‘நீ கொடுத்து வைத்தவன். யாருக்குக் குரு பாதுகைகளில் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறதோ அவர்கள் இந்த சம்சாரக் கடலை எளிதில் தாண்டிவிடுகிறார்கள்!” என்று பாராட்டி விட்டு அடுத்த வரலாறை சொல்லத் துவங்கினார்.

உத்திரதேசத்தில் மாஹுர் என்ற இடத்தில் கோபிநாதன் என்ற வியாபாரி ஒருவன் இருந்தான். அவனுக்குக் குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்துகொண்டிருந்தன. மனம் வருந்திய தம்பதிகள், ஸ்ரீதத்தாத்திரேயரை வேண்டிக் கொண்டதில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு தத்தன் என்று பெயர் வைத்து அன்பாகப் பாதுகாத்து வளர்த்தனர். ஐந்து வயதானவுடன் உபநயனமும், பனிரெண்டாவது வயதில் திருமணமும் செய்து மகிழ்ந்தனர். அந்தப் பெண்ணும் இவர்களை அனுசரித்து வாழ்ந்து வந்தாள். அந்தப் பையனுக்குப் பதினாறு வயது ஆனது. அந்த சமயத்தில் அவனுக்கு ஒருவித வியாதி ஏற்பட்டு என்ன மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. ஒரு வாய் அன்னம் கூட அவனால் சாப்பிட முடியவில்லை. அதனால் நாள் கணக்கில் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று.

அவனது துன்ப நிலையைக் கண்டு துடித்த அவனது மனைவி கணவனுடன் பட்டினி கிடந்து அவன் என்ன சாப்பிடுகிறானோ அவற்றையே அவளும் உண்டு பதிசேவை செய்து வந்தாள். மூன்று ஆண்டுகள் ஆகியும் அவன் கஷ்டப்பட்டு, இறுதியில் அவனுக்கு சயரோகமும் பீடித்துவிட்டது. ஷயரோகத்தால் மிகவும் இளைத்துத் துரும்பாகப் போய்விட்டான். அவனது உடலில் துர்நாற்றமும் ஏற்பட்டுவிட்டது. வைத்தியர்களும் அவனிடம் நெருங்க யோசித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ ஒரு கணமும் அவனை விட்டுப் பிரியாமல் கண்ணும் கருத்துமாகப் பேணி உரிய தேவைகளைச் செய்து கொடுத்து உறுதுணையாய் இருந்தாள்.

இவர்களின் இந்த கொடிய வேதனை பெற்றோர்களைப் பெரிதும் பாதித்தது. அவர்களின் வேதனைக்கு அளவே இல்லை. தமது மகனால் இந்தப் பெண் படும் கஷ்டங்களைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் கதறினர். ஆந்தப் பெண்ணோ தனது சுகங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஆபரணங்களைத் துறந்து தனது பதி எப்படியாவது பிழைத்தால் போதும் என்று பலவிதத்திலும் பாடுபட்டாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s